எழுத்தோவியம்

ஆப்பிரிக்காவின் எல்லையற்ற பாலைவனங்களின் நடுவே திடீரென்று அதிசயங்கள் தோன்றுகின்றன. உள்ளே ஓடும் நதி கசிகிறது என்பார்கள். சிலர் ஆண்டவனின் அருட்கொடை என்பார்கள். விளைவு என்னவோ, நாற்புறமும் முகத்தில் அடிக்கும் வெண்மையான வெய்யிலின் நடுவே ஒரு குளமும் அதனை சுற்றி மரங்களும் கொண்ட பாலைவனச் சோலை. குளம் பெரியதாகவோ அல்லது ஆழமானதாகவோ இருந்துவிட்டால் அதனை சுற்றி நகரம் உண்டாகிவிடுகிறது. நகரத்தில் மக்கள் நெருக்கமும் உண்டாகிவிடுகிறது. குளம் போதாமல் ஆகிவிடுகிறது. அடர்ந்த வீடுகளுக்கு நடுவே குறுகிய ஓடை போல தெரு ஓடுகிறது. இந்த பக்கத்து ஜன்னலிலிருந்து கையை நீட்டினால், எதிர்ப்புறத்திலுள்ள வீட்டை தொட்டுவிடலாம். மேலே நிழலாக துணிப்படுதா. அது போன்றதொரு தெருவில்தான் ஜன்னம் பிறந்தான்.

ஜன்னம் பிறக்கும்போது ஜன்னத்தின் அம்மா வேஜன் வேதனையில் துடித்தாள். காரணம் வலி அல்ல. தனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போகிறதே என்றுதான் துடித்தாள். மஸாஜ் மூலமாக கர்ப்பத்தை கலைக்கும் முயற்சியில் வலி தாங்கமுடியாததால், பிறந்ததும் கொன்றுவிடுகிறேன் என்றுதான் அவள் தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள்.

“நீ ஒரு மடச்சி” என்றாள் வேஜனின் அத்தை ருக்மா.

“இருந்துட்டு போறேன்.. நீ கொஞ்சம் வாயை மூடிக்கொண்டிரு” என்று கத்தினாள் வேஜன்.

வேஜனின் கைகளிலிருந்து மணல் வழிந்தது. இறுக்கப்பிடிக்கக் கொடுத்திருந்த துணி மூட்டை கிழிந்து தரையெங்கும் பரவியது. அந்த மணல் அந்த தரையில் ஓவியங்களை தீட்டியது. அவை ஜன்னம் இறக்கமாட்டான் என்று கட்டியம் கூறின.

அதே போல ஆயிற்று. கர்ப்பத்தை கலைக்கும் முயற்சியில் அவனது கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும், வேஜன் அவனை பார்த்ததுமே, அவனை தன்னால் கொல்லமுடியாது என்று அறிந்துகொண்டாள். வரைந்தது போன்ற அந்தக் கண்கள் அவளையே உற்றுப்பார்த்தன. நெஞ்சார அணைத்துகொண்டாள். ருக்மா ஒரு திருப்தியுடன் வெளியே சென்றாள்.

ஜன்னம் வளரும்போதே கைகளில் சுண்ணக்கட்டிகளோடு அலைந்தான். தவழும்போதே கிறுக்கினான். ஐந்து வயதிலேயே தன் அம்மாவின் முகத்தை அழகாகத் தரையில் வரைந்து வைத்திருந்தான். ஜன்னத்தின் அப்பா ஹுகாக் வந்தபோது ஜன்னத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்தினாள் வேஜன். அவன் வரைந்த படத்தை அழிக்காமல் வைத்திருந்தாள். இரண்டு மாதமாக. ஹூகாகின் முகம் பெருமை பூத்தது. மறுவினாடி கருத்துச் சுருங்கியது. இது தவறு என்றான்.

“ஆமாம். ஐந்து வயதில் எந்த குழந்தை இப்படி படம் வரையும். அதுவும் இவ்வளவு தத்ரூபமாக!” என்று பெருமிதப்பட்டாள் வேஜன்.

“தப்புத்தான். ஆனால், இது அதிசயக்குழந்தை அல்லவா?” என்றான் ஹூகாக்.

”இவனை உப்பு சுரங்கங்களுக்கு அழைத்துச் செல்லலாமென்று இருக்கிறேன். தாங்குவானா?” என்று கேட்டான் ஹூகாக்.

”இவனது கையை பாருங்கள். வலிமை இல்லாத கைகள். அந்தத் தொல்லைகளை தாங்கமாட்டான்” என்றாள்.

“ம்ம் சரி பெரியவனை நான் அழைத்துக்கொள்கிறேன். இவனைப் பள்ளியில் விட்டுவிடுவோம். இவன் பெரிய அறிவாளியாக வருவான்” என்றான் ஹூகாக்.

ஜன்னம் இப்படியாக பள்ளிக்குப் போகவும், அவனது அப்பாவும் சகோதரனும் உப்புச் சுரங்கங்களுக்குப்
பயணம் வைக்கவுமாக ஆயிற்று. சஹாராவின் பொன் என்று அழைக்கப்படும் உப்புப் பாளங்கள் டிம்பக்டுவிலிருந்து வடக்கே 800 கிலோமீட்டர்களில் இருக்கும் தாடென்னியில் இருந்தன. 14 நாட்கள் கடும் பாலைவனத்தில் ஒட்டகங்களில் பிரயாணம் செய்து தாடென்னியை அடைய வேண்டும்.  தாடென்னி  எங்கே
இருக்கிறது என்பதும் உலக மகா ரகசியம். அது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அந்த குடும்பங்களில் ஒன்று ஜன்னத்தின் குடும்பம்.

ஜன்னம் பள்ளியில் சேர்ந்து கற்பதை ஆரம்பித்தான். ஆனால், அவனது உள்ளமும் கைகளும் சுண்ணக்கட்டியையே நாடின. பள்ளியில் அவன் ஆசிரியரின் முகத்தை தத்ரூபமாகத் தரையில் வரைந்திருந்தான். அது ஆசிரியரின் வலிமையான குச்சிகளுக்கு அவனது கைகளை இரையாக வைத்தது. வீங்கிய கைகளும், அழுத முகமுமாக அவன் வீட்டுக்கு வந்தான். ஹூகாக் மீண்டும் வீட்டுக்கு வரும் வரையிலும் அவனும் பள்ளிக்குப் போகவில்லை. வேஜன் அவனை பள்ளிக்குப் போக அனுமதிக்கவும் இல்லை.

ஜன்னம் வீடெங்கும் வரைந்து வரைந்து வைத்திருந்தான். அடுத்த வீட்டு சிறுமி, ருக்மா, ருக்மாவின் சிறு குழந்தை, அந்த குழந்தையின் முகத்துக் குதூகலம் அனைத்துமே அந்த வீட்டில் ஓவியங்களாக பொங்கி ததும்பியிருந்தன. உப்புச் சுரங்கங்களிலிருந்து திரும்பி வந்த ஜன்னத்தின் அப்பா ஹூகாக் அவற்றுக்காக பெருமைப்படவில்லை. அவனை அழைத்துச்சென்று பள்ளிக்குப் போனான்.

”இவனை படம் வரைய வேண்டாமென்று சொல்லியிருக்கிறேன். அதற்கு பதிலாக எழுதலாம். இவன் அழகாக எழுதுவான். இவனுக்கு எழுதச் சொல்லித்தாருங்கள்” என்று சொன்னான். ஆசிரியருக்கும் அது சரியான யோசனையாக இருந்தது.

இப்படியாக எழுத ஆரம்பித்தான் ஜன்னம். அழகழகான எழுத்துக்கள். கத்தியை பற்றிய வார்த்தையை கத்தி போன்றே எழுதும் அவன் திறமை, திராட்சைக் குலைகள் என்ற வார்த்தையை திராட்சைக் குலைகளாகவே வ்டித்தெடுக்கும் அவனது கைகள். வீட்டுக்கு வந்ததும், சுவரெங்கும் மறுபடி அவனது கைகள் முகங்களை அவற்றின் தவிப்புகளை, அழுகைகளை, மகிழ்ச்சியை, தேஜஸை வரையத் துடித்தன. அவனது ஆசிரியர் அவன் வீட்டுக்கு வருகை தரும் வரை.

வீடு நிறைந்த முகங்களைப் பார்த்த ஆசிரியர், ”இவன் பாவியாகவே படைக்கப்பட்டிருக்கிறான்.” என்று சொன்னார். வேஜன் துடித்தாள். அவனைப் பாவியாக்கியது நானே என்று அவள் உள்ளம் துடித்தது. இவன் இனி பள்ளிக்கு வரக்கூடாது என்றார் ஆசிரியர். ஹூகாக் கவலைப்படவில்லை. “என்னோடு துணைக்குச் சுரங்கங்களுக்கு வா” என்றான்.

ஜன்னம் தன் தந்தையோடும் தன் சகோதரனோடும் உப்பு வியாபாரிகளுடன் தாடென்னிக்கு கிளம்பினான். அது ஒரு ரகசிய பாதை. அந்த பாதை நேராக தாடென்னிக்குப் போவதில்லை. அவர்கள் அதற்கு நேர் எதிர் திசையில் செல்வார்கள். அங்கு இரண்டு நாள் தங்குவார்கள். அங்கிருந்து மற்றொரு நகரத்துக்கு செல்வார்கள். அங்கிருந்து பாலைவனத்துக்குள் நுழைவார்கள். பாலைவனத்துக்குள் நுழைந்ததுமே அவர்கள் நேராக தாடென்னிக்கு போய்விடுவதில்லை. வழியில் 20க்கும் மேற்பட்ட தங்குமிடங்கள் இருக்கின்றன. மறைவான தங்குமிடங்கள். ஆனால் பல நூறு மைல்கள் தொடர்ந்து தெரியக்கூடிய நீண்ட பாதைகள். யாரேனும் பின் தொடர்ந்தால் உடனே தெரிந்துவிடக்கூடிய பாதைகள். ஒவ்வொரு மறைவிடத்திலும் படங்களை வரைந்திருந்தான். திட்டுபவரோ தடை செய்பவரோ யாருமில்லை. சுரங்கங்களை கண்டறிய பலர் பின் தொடர்ந்திருக்கிறார்கள். அடையாளம் காணப்பட்டு கொல்லபடுவார்கள். சுதந்திரமான பாலைவனத்தில் அவர்களது எலும்புகள் அங்கங்கு கிடைக்கும். சுரங்கங்கள் குடும்பச் சொத்து. அவற்றைப் பாதுகாப்பதும், அவற்றின் இருப்பிடத்தைப் பாதுகாப்பதும் குடும்பச் சொத்தைப் பராமரிப்பது போன்றது.

அதோ பார் நட்சத்திரங்களை. அவற்றை நமக்கு வழிகாட்ட இறைவன் படைத்திருக்கிறான் என்றான் ஹூகாக். ஆனால் நட்சத்திரங்களைக் கோர்த்து, முகங்களை உருவாக்கிகொண்டிருந்தான் ஜன்னம்.
நட்சத்திரங்கள் அவனைக் கண்சிமிட்டி விளித்துச் சிரித்தன. இதுவும் அதுவும் சேர்ந்து பட்டமானது. அதுவும் அதுவும் சேர்ந்து காலானது. இன்னும் சில நட்சத்திரங்கள் சேர்ந்து நெஞ்சானது. நட்சத்திரங்களில் நிமிர்ந்து நின்று சிரித்தான் ஒரு வேட்டைக்காரன். வேட்டைக்காரனின் காலிலிருந்து புழுதி கிளம்பியது. “எதிரிகள் வருகிறார்க்ள்” என்று பரபரத்தான் ஹூகாக். வியாபாரிகளின் படை தயாரானது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு ஒரு போர் மூண்டது. கிளாங் கிளாங் என்று கத்திகள் மோதின. கடுமையான வலியின் கதறும் மனிதர்களில் ஓலம் காற்றை கிழித்தது. ஜன்னத்தின் சகோதரன் அவனை இழுத்துக்கொண்டு பள்ளத்துக்குள் புகுந்தான். ஹூகாக் நேர் சென்று மோதினான். யாரோ அவர்களை
தள்ளிவிட்டார்கள். மேலே துணி விழுந்து மூடியது. அத்துடன் துணியை இழுத்து நிறுத்தியிருந்த கம்புகளும் அவர்கள் தலையில் மோதின. ஜன்னம் விழித்து பார்த்தபோது துணி அவர்களை மூடியிருந்தது. அருகே ரத்தப்பெருக்கில் ஜன்னத்தின் சகோதரன் கிடந்தான். அவனிடமிருந்து ஓடியிருந்த ரத்தம் செம்மலர் போல விரிந்து குவிந்திருந்தது. ஜன்னம் தன் சகோதரனை எழுப்பினான். அவன் எழுந்திருக்கவில்லை. எழுந்து நடந்தான்.

வெகு தூரத்தில் தனது தந்தையை கண்டான். நெஞ்சு கிழிந்து மல்லாந்து கிடந்தான் ஹூகாக். அழவோ அல்லது அதிரவோ தெரியாமல், அவன் திரும்பி நடந்தான். இவனொத்த சிறுவர்கள் பலர் இறந்து கிடந்தனர். மீண்டும் துணிகளுக்கு நுழைந்து அங்கேயே கிடந்தான். இரவு வந்தது. வேட்டைக்காரனைத் தேடினான். இன்றிரவு வேட்டைக்காரன் சற்றே நகர்ந்து நின்றிருந்தான். வேட்டைக்காரன் பட்டத்தை தேட கை நீட்டிய திசையில் நடக்க ஆரம்பித்தான். விடியும் நேரத்தில் சரியாக முந்தைய மறைவிடத்தை அடைந்திருந்தான் ஜன்னம். அங்கு குனிந்து மறைந்து படுத்தான். வேட்டைக்காரன் காட்டிய வழியே அவன் நகரத்தை அடையும்போது தளர்ந்து துவண்டிருந்தான்.

அவனது தாயை அடையும்போது ஒரு மாதமாகிவிட்டது. வழியெங்கும் எத்தனையோ தாய்கள். சகோதரிகள் அவனுக்கு உணவளித்தனர். அவர்களது கனிவையும் அன்பையுமே அவன் உண்டான். வீடு பாழடைந்திருந்தது. வீட்டின் முகப்பில் ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். அடுத்த வீட்டுப்பெண் அவனை அடையாளம் கண்டுகொண்டு அவனை தன்வீட்டுக்கு இழுத்துச் சென்றாள்.

“ருக்மாவிடம் போய்ச் சொல். ஜன்னத்து வந்துவிட்டான் என்று” என்றாள் அவள்.

அந்த பெண் குதித்து சென்றாள்.

”உன் அம்மா நீங்கள் எல்லோரும் கொல்லப்பட்டுவிட்டீர்கள் என்ற செய்தி கேட்டதுமே மார் வெடித்து இறந்து போனாள்”

இளம் பருவத்தினனான ஜன்னம் அன்றுதான்  இரண்டு மாதத்திய சோகத்தினை உடைத்து கண்ணீர் கொப்பளிக்க நெஞ்சிலறைந்து அழுதான். அவனது கண்களிலிருந்து ஓடிய கண்ணீர் தரையை நனைத்து ஆறானது. ருக்மா வந்து அவனை அழைத்துச் சென்றாள். ஒரு துணிச்சீலையை வாங்கிக்கொண்டுவந்துகொடுத்தாள் ருக்மா. அதில் தன் தாயின் முகத்தை வரைந்தான். ஒவ்வொருநாளும் அந்த சீலையில் அவனுக்கு உணவளித்த ஒவ்வொரு பெண்ணின் கனிவும் கருணையும் அதில் சேர்ந்தது.

masterpieceபள்ளி ஆசிரியர் மீண்டும் வந்து அந்த துணிச்சீலையை கிழித்து போட்டுவிட்டு அவனை அழைத்து சென்று எழுத வைத்துக்கொண்டார். அதைத் தடுக்க ருக்மாவால் முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அவன் முழுப் புத்தகத்தையும் எழுதித்தர வேண்டும். தினந்தோறும். தினந்தோறும் எழுதியதையே எழுதித்தர வேண்டும். அதில் மாற்றங்களோ வேலைப்பாடுகளோ சிறிதும் இருக்கக்கூடாது. ஆனால் அவனோ தனியே இன்னொரு புத்தகம் எழுதி வந்தான். அந்த புத்தகத்திலும் எழுத்துக்களே இருந்தன. அந்த எழுத்துக்களில் ஓவியம் இருந்தது. அவன் வளைத்து எழுதிய எழுத்துக்களில் படங்கள் தோன்றியிருந்தன. அந்த படங்களில் வேஜன் வந்தாள். ருக்மா வந்தாள். அவனது அப்பா, அவனது சகோதரன் வந்தார்கள். அந்த பக்கங்களில் அவன் பள்ளிக்குச் சென்று படித்தது இருந்தது. அங்கு வரைந்த ஓவியம் இருந்தது. அந்த ஓவியங்களுக்காகத் துரத்திய ஆசிரியர் இருந்தார். அந்த ஆசிரியரிமிருந்து தப்பிய இவனே இருந்தான். பாலை வனம் வந்தது உப்பு சுரங்கங்களுக்கானபாதை வந்தது. பாதைகளில் பயணம் வந்தது. பயணத்தின் இரவுகளில் வேட்டைக்காரன் வந்தான். வேட்டைக்காரனின் கால்களில் புழுதி வந்தது. புழுதியிலிருந்து போர் வந்தது. போர்களில் சகோதரனும் அப்பாவும் மடிந்ததும் இருந்தது.

அதன் பின் கனிவான முகங்கள் வந்தன. பெண்கள் பெண்கள் பெண்கள். பெண்களின் கண்களிலிருந்து பொங்கும் கனிவையும் கண்ணீரையும் எந்த எழுத்தால் காட்டிவிட முடியும்? எழுத்துக்களின் மூலமாக அவன் வரைந்த படங்கள் காட்டின.

இறுதிப்பக்கம் வரும்போது அவன் தனியே உட்கார்ந்திருந்ததை வரைந்தான். பாலைவனத்தின் நடுவே சோலைகள் ஏதுமின்றி தன்னந்தனியே. அலையும் ஒரு காகிதமாக அவன் இருந்தான். காகிதத்தின் நடுவே படமாக அவனது முகம் இருந்தது. அதுவும் எழுத்துக்களாக.

அப்போதுதான் ஆசிரியர் உள்ளே வந்தார். முடித்தாயிற்றா என்றார். அங்கு ஒரு புத்தகம் மட்டுமே இருந்தது. அந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தில் அவன் இருந்தான். அவன் தன்னை குனிந்து பார்க்கும்போது எழுத்துக்களாகவே இருந்தான். வெறும் எழுத்துக்கள். கையை எடுத்துத் தள்ள முயற்சி செய்தான். காகிதம் அவனை எதிர்த்துத் தள்ளியது. அருகே இருந்த எழுத்துக்கள் நகர்ந்தன. ஆசிரியர் வந்து அந்த புத்தகத்தை எடுத்தார்.

அவருக்கு அந்த நுண்ணிய எழுத்துக்கள் தெரியவில்லை. இன்னும் படம்தானா என்று வீசியடித்தார் நெருப்பில் விழுந்தது அந்த புத்தகம். அதிலிருந்து ஒரு காகிதம் மட்டும் பிய்ந்து ஜன்னல் வழியே காற்றில் கலந்தது.