எடைப் புதிருக்கு விடை என்ன?

எங்கள் அத்தை பெண் ஆலுவுக்கு வளர் பிறை – தேய் பிறை என்று ஒரு செல்லப் பெயர் உண்டு. வருடத்தில் பதினொரு மாதம், எண்பத்தைந்து கிலோ எடையில் உற்சாகப் பந்தாக வளைய வருவாள். திடீரென்று ஏதோ ஒரு தன்னிரக்கமோ, கல்யாணக் கவலையோ தோன்றி ‘இன்று முதல் டயட்டில் இருக்கிறேன்’ என்று கொலைப் பட்டினி கிடக்க ஆரம்பிப்பாள். ஹாலில் தொம் தொம் என்று அவள் ஸ்கிப்பிங் ஆடும் போது பக்கெட் தண்ணீரில் வட்ட வட்டமாக அலை பரவும்.

சில நாட்களில் கழுத்து எலும்பெல்லாம் தெரிய, காணச் சகிக்காமல் ஆகிவிடுவாள். இந்த நோன்பு வாரங்களில் அவள் கிட்டேயே யாரும் நெருங்க முடியாமல் சிறுத்தை போல் சீறுவாள். ஆனால் எல்லாம் இரண்டு மூன்று வாரம்தான். பிறகு திடீரென்று ஒரு நாள் பார்த்தால், தோசைக் கல் சைஸுக்கு ஒரு பனீர் பிட்ஸாவை வைத்துக்கொண்டு ‘சாம்ப் சாம்ப்’ என்று சாப்பிட்டுக் கொண்டிருப்பாள். விரைவிலேயே பழையபடி எண்பத்தைந்து கிலோ !

ஊதிய உடலை இளைக்க வைப்பது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கே கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கிறது. இதற்கு வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால் ‘உட்கார்ந்து தீனி தின்னாதே; ஓடியாடு; உடற்பயிற்சி செய்’ என்பதாகும். ஆனால் காலம் காலமாக நிலவி வரும் இந்தப் பொன்மொழி இப்போது பொலிவிழந்து வருகிறது என்கிறார், க்ரெட்சென் ரெனால்ட்ஸ் (http://well.blogs.nytimes.com/2009/11/04/phys-ed-why-doesnt-exercise-lead-to-weight-loss/).

கையைக் காலை ஆட்டினால் காலரிகள் எரிந்து அதனால் கொழுப்பு குறையும் என்பது உண்மைதான்; சோபாவில் சரிந்து கிடந்து டி.வி பார்ப்பதை விட, எழுந்து நடக்கும்போது அதிக காலரிகள் செலவாவதும் உண்மை. ஆனால் நிமிடத்துக்கு நாலைந்து காலரிகளைத்தான் இப்படி உதிர்க்க முடியும். எண்பத்தைந்து கிலோ மக்களுக்கு இந்த ரேட் போதாது ! உடல் இளைக்க வேண்டுமென்றால், பட்டர் மசாலா கேட்கும் நாக்கைப் பல்லால் கடித்து அடக்க வேண்டும்; பசித்தால் பச்சை முட்டைக்கோஸைத் தின்று தண்ணீர் குடிக்க வேண்டும்; சுருங்கச் சொன்னால், எடையைக் குறைக்க ஒரே வழி, சற்றேறக் குறைய சாப்பாட்டை நிறுத்துவதுதான் !

கொலராடோ மருத்துவக் கல்லூரியில் செய்த ஓர் ஆராய்ச்சியில் மூன்று விதமான மக்களைப் பிடித்துக்கொண்டு வந்து பரிசோதித்தார்கள். முதல் பிரிவினர், காற்றுப் போல் லேசாகக் காணப்பட்ட பந்தய வீரர்கள். இன்னும் சிலர், உட்கார்ந்து சாப்பிட்டாலும் ஒல்லியான உடல் வாகு கொண்ட அதிர்ஷ்டசாலிகள். கடைசி பிரிவினர் கொழு கொழு குண்டர்கள். எல்லோரையும் மாபெரும் காலரி மீட்டர் அறை ஒன்றில் அடைத்து, மனித உடல் தன் கொழுப்புத் திப்பிகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறது என்று ஆராய்ந்தார்கள்.

நமக்கு நடமாட சக்தி தருபவை கார்போ ஹைட்ரேட், கொழுப்பு இவை இரண்டும்தான். பார்ப்பதற்கு ஓமப் பொடி போல் இருப்பவர்களுக்குக் கூட உடலில் கொழுப்பு செல்கள் ஏராளமாக உண்டு. உடலின் ஓடியாடும் தேவைகளுக்கு நேரடியாக இந்தக் கொழுப்பை எரித்துப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால் தொப்பை கரையும்; இடுப்பும் தொடையும் மெலியும்; பஸ்ஸில் பக்கத்து சீட்காரர் முறைக்க மாட்டார்.

எக்ஸர்ஸைஸ் செய்யும்போது அந்த நேரத்தில் கொஞ்சம் கொழுப்பு உபயோகிக்கப்படுவது உண்மை. ஆனால் உடற்பயிற்சியை முடித்து தினசரிக் கடமைகளுக்குத் திரும்பின பிறகும், உடல் தொடர்ந்து கொழுப்பை எடுத்துக் கொள்கிறதா என்று பார்ப்பதுதான் கொலராடோ பரிசோதனையின் நோக்கம். ஃபிட்னஸ் புத்தகங்களில் இதை ஆஃப்டர் பர்ன் என்பார்கள்.

சோதனையில் கலந்து கொண்டவர்களை முதலில் காலரி மீட்டருக்குள் 24 மணி நேரம் புத்தகம் படித்துக்கொண்டு அமைதியாக உட்காரச் சொன்னார்கள். வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் தினம் மூன்று வேளை தலப்பாக் கட்டு பிரியாணி கொடுக்கப்பட்டது. பிறகு ஒரு மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே மிதமான வேகத்தில் சைக்கிள் பெடல் போட வைத்தார்கள். உடற்பயிற்சியை மிதமாகச் செய்யும்போதுதான் கொழுப்புகளை உடல் எடுத்துக்கொள்ளும். தலை தெறிக்க ஓடினால் உடனடி சக்தி தேவைப்படுவதால், கார்போ ஹைட்ரேட்களைத்தான் சீக்கிரமாக ரத்தத்தில் அனுப்பி தசைகளுக்கு சக்தி தர முடியும். எக்ஸர்ஸைச் செய்தால் அன்றைக்கு ஆஃப்டர் பர்ன் நிகழ்கிறதா என்று பார்ப்பதே விஞ்ஞானிகளின் நோக்கம். கொழுப்பு எரிவதை அளவிடுவதற்கு காலரி மீட்டர்.

கொலராடோ பரிசோதனையில், கலந்துகொண்டவர்கள் யாருக்கும் ஆஃப்டர் பர்ன் ஏற்படுவதற்கான அறிகுறியே இல்லை ! சொல்லப் போனால், ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்த அன்றைக்கே அதிகம் கொழுப்பு செலவானதாக சந்தேகம்.

இதன் அடிப்படைச் செய்தி, காலரி சாப்பிட்டால் காலரியை எரித்தே ஆக வேண்டும். அரை மணி நேர உடற்பயிற்சியில் சராசரியாக 200-300 காலரிதான் இழக்க முடியும். டவலால் துடைத்துக்கொண்டு களைப்புத் தீர ஒரு கோக் குடித்தால் அத்தனை காலரியும் திரும்ப வந்துவிடும் !

ஆனால் உடற்பயிற்சியால் பலனே இல்லை என்பதல்ல; கார்டியோ குதிப்புகள் இதயத்துக்கு நல்லது. ஜாலியாக பஞ்சாபிப் பாட்டு ஒலிக்க பாங்க்ரா எக்ஸர்ஸைஸ் செய்தால் சில பல ஹார்மோன்கள் சுரந்து நம் மூடை உற்சாகமாக்கும். பட்டினியால் குறைத்த எடையை அங்கேயே மெயின்டென்ய்ன் செய்யவும் மிதமான உடற்பயிற்சி உதவும். இதயத் துடிப்பு 105 முதல் 134 வரை இருக்கும்படி செய்யும் எக்ஸர்ஸைஸ்தான் கொழுப்பு கரைக்கும் ரேஞ்ச். ஆனால் மிக முக்கியம், அத்தனை காலரிகளையும் உடனே சாப்பிட்டுத் திரும்ப எடுத்துக் கொண்டுவிடக் கூடாது !

அந்த மசாலா சிப்ஸ் பாக்கெட்டை அப்படியே கொண்டு போய் நாய்க்குப் போடுங்கள்.