ஆடு

தங்கம்மைக்கு நீச்சலடிக்க ஆசை. நிர்வாணமாகக் குளிக்க ஆசை. அதையெல்லாம் விடப்  பெரிய ஆசை பாட வேண்டும் என்பது. ஆனால் என்னவோ அவளை 10 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிட்டார் அப்பா. பாட்டு கற்றுக்கொள்ளவோ நீச்சல்அடிக்கவோ முடியாமல்  போயிற்று.

தங்கம்மையின் கணவனுக்கு அப்போது 30 வயது. ஏற்கெனவே இருந்த மனைவி ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் இழுத்து செல்லப்ப்பட்டு காணாமல் போனதும், அடுத்த மனைவியைத் தேட, அகப்ப்பட்டவள் தங்கம்மை. தங்கம்மையின் கணவன் வீரய்யன் வீரனல்ல. ஆனால், உடல் வீரனின் உடல். பரம்பரை பரம்பரையாக வந்த கட்டுமஸ்தான உடல். வீரய்யன் ஒரு பருப்பு அங்காடி நடத்திவந்தான். அங்காடி நகருக்குச் சற்றே வெளிப்புறத்தில் இருந்தது. கடலிலிருந்து தூரமாக இருந்தாலும், மீனவர்கள் அங்காடிக்கு வந்து பருப்புகளை வாங்கிப்போவார்கள். மீனவர்களாகவே இருந்தாலும், தினமும் மீனே சாப்பிட முடியுமா?

வீரய்யன் அமைதியானவன். அமைதி என்றால் அப்படிப்பட்ட அமைதி. ஆளைக் குலைக்கும் அமைதி. யாரேனும் கடைக்கு வந்து வாங்க வந்தால் இருக்கும் இடத்தை விட்டு எழுந்து சென்று அவர்கள் கேட்கும் பொருளை கொடுத்து, கழஞ்சு நாணயங்களை வாங்கிப் பெட்டியில் போட்டு விட்டு, மீண்டும் வந்து உட்கார்ந்துகொள்வான். அமைதி மேலும் இறுக்கமாக அந்த இடத்தில் அமுங்கும்.

தங்கம்மைக்கும் பாட்டு கற்றுக்கொள்ள விருப்பம் இன்னும் போகவில்லை. ஏன் இந்த பாட்டு கற்றுக்கொள்ளும் ஆசை வந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை. தீபாவளிக்கு ஊருக்கு போனபோது அப்பாவிடம் ஒருமுறை கேட்டாள். அவளையே கூர்ந்து பார்த்த அப்பா, ’ம்ம். தெரியலையேம்மா’, என்றார். அம்மா திரும்பிப்பார்த்து, ’நீ வயித்தில இருந்தப்போ ஊர்ல பாணருங்க ராமாயணம் பாட வந்திருந்தாங்க. மூணுமாசமும் அதைத்தான் நான் கேட்டேன்,’ என்றாள்.

ராமாயணம்… என்று தங்கம்மையின் மனதில் ஓடியது… வீரய்யன் இன்னும் அதே இடத்தில் எடுத்துப்போட்ட இரும்புத்துண்டு கிடப்பது போல உட்கார்ந்திருந்தான். அழுத்தும் அமைதியைக் கிழித்து ஒரு ஆடு ஓடக்கூடாதா என்று மனதார விரும்பினாள் தங்கம்மை.

ராமாயணப்பாடல்கள் பாடும் பாணர்கள் என்னவானார்கள் என்று தங்கம்மை தன் அத்தை ஒருத்தியிடம் கேட்டாள். படித்துறையில் கால் கழுவிக்கொண்டிருந்த கிழத்தி நாகம்மை திரும்பிப்பார்த்து, ’நெடுமாறன் துரத்திவிட்டான்,’ என்று சொன்னாள். கிழத்தி நாகம்மையின் முகம் கருத்து, தோல்கள் மடிப்பு மடிப்பாக இருந்தன. அந்த மடிப்புகளில் ஒன்றாக நொறுங்கிக்கிடந்த கண்கள் மெல்லக் கசிந்து, ’அது ஒரு காலம்,’ என்றாள்.

தோட்டத்தின் பக்கம் சென்ற தங்கம்மையை எதிர்பார்த்துப் பலர் காத்துக்கொண்டிருந்தனர். தங்கம்மையின் கைகளில் அந்த ஆடுகள் தங்கள் தோல்களை இழக்கும். தோல் எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதுவும் ஆட்டின் தலையில் இருக்கும் தோல்கூட அவளது கத்தியால் இலகுவாகப் பிரித்தெடுக்கப்படும். மானின் தோலையும் அப்படியே உரிப்பாள். ரத்தக்கறை சொட்டுக்கூடப் படாமல் மானின் தோலையும், ஆட்டின் தோலையும் பிரித்தெடுப்பதில் தங்கம்மை அந்த ஊரிலேயே பெயர் பெற்றவள். அந்த கூட்டத்திற்குள் புகுந்ததுமே சத்தம் கேட்டுத் திரும்பிப்பார்த்தாள்.

சமணாச்சாரியார்கள் சிலர் டப் டப்பென்ற ஒலியுடன் வந்துகொண்டிருந்தனர். நெடுமாறனின் ஆட்சியில் கொல்லாமையைப் பரப்ப சமணாச்சாரியார்கள் ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் போதனையிலும், அரசனின் உதவியிலும், ஊர் ஊராகச் சமணக்கோவில்கள் எழுந்துகொண்டிருந்தன. அதேபோல விருத்திரபுரத்திலும் சமணக்கோவில் எழுந்திருந்தது. அதன் சமணாச்சாரியார்களே வந்துகொண்டிருந்தவர்கள். வீரய்யனும் சமணனாகியிருந்தான். தங்கம்மை அந்த கோவிலுக்கு ஒருமுறைகூட போனதில்லை. அவளும் கிழத்தி நாகம்மையும் காட்டம்மை கோவிலுக்குத்தான் போவார்கள். காட்டம்மை இருக்கும் கோவில்காட்டை அழித்துத்தான் சமணக்கோவில் உருவாகியிருந்தது. காட்டம்மையின் கோபத்துக்கு அவளும் கிழத்தி நாகம்மையும் இன்னும் பலரும் அஞ்சினார்கள். ஆனால் சமணாச்சாரியார்கள் அவற்றை மூடநம்பிக்கை என்று வாதிட்டார்கள். வீரய்யன் சமணனாக ஆன பின்னால், இன்னும் மிகுந்த அமைதியை அடைந்தான். அந்த அமைதி நாகம்மையை எரிச்சலடைய வைத்தது. அவள் எதற்காகச் சிரித்தாலும் அவன் உறைந்து அவளையே உற்றுப்பார்த்தான்.

அவர்கள் அருகே வர வர, தங்கம்மையைச் சுற்றியிருந்த கூட்டம் கலைய ஆரம்பித்தது. அவர்கள் அருகே வரும்போது வரித்து கட்டியிருந்த புடவையும் கையில் தோல் எடுக்கும் குறுங்கத்தியுடனும் இருந்த தங்கம்மையும், அருகே ஒரே ஒரு ஆட்டுடன் மூவருமே நின்றிருந்தனர்.

சமணாச்சாரியார்கள் அவளைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டு, வீரய்யனின் அங்காடி நோக்கிச் சென்றார்கள். வீரய்யனிடம் சற்று நேரம் பேசியதும் அவர்கள் விலகிச் சென்றார்கள்.

வீரய்யன் மெல்ல அவர்களை நோக்கி வந்தான்.

“இனிமேல் ஆடு அறுக்க வேண்டாம். அரசாங்க உத்தரவு. இல்லையெனில் நாம் தாழ்சாதியாவோம். நீ ஆடு அறுத்துக்கொண்டு, நான் பருப்பு விற்க முடியாது,” என்று காற்றை காயப்படுத்திவிடுவோமோ என்ற அச்சத்துடன் பேசுவதுபோலக் கனிவுடன் பேசினான்.

தங்கம்மை அந்த போலிக்கனிவை என்ன செய்வது என்று, கையிலிருந்த குறுங்கத்தியினை தரையில் போட்டுவிட்டு உள்ளே சென்றாள். அருகே நின்றிருந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஆட்டைத் தூக்கி தோளில் போட்டுகொண்டு சென்றனர்.

ஓங்கி சத்தம் போட்டு பாடவேண்டும் போல இருந்தது தங்கம்மைக்கு. ஆனால் பாடவே தெரியவில்லை என்பது பெரும் சோகமாக இருந்தது. கையைக் கழுவிவிட்டு கிழத்தி நாகம்மை வீடு நோக்கிக் கிளம்பினாள்.

’எனக்கு ஒரு பாட்டு சொல்லித்தா,’ என்றாள் தங்கம்மை.

கிழத்தி நாகம்மை  என்ன சொல்வது என்று தெரியாமல் “தெரியலையேடி.. எனக்கு கேக்கத்தான் தெரியும். கேட்டிருக்கேன் நிறைய. இப்படி திடீர்னு கேட்டியன்னா நா என்ன சொல்றது?” என்றாள்.

”தெரிஞ்ச பாட்டை சொல்லு. ஒனக்கு ஒரு பாட்டு கூடவா ஞாபகம் இல்லை?”

“மணியக்கார பொம்பளைதான் பாட்டு சொல்லிதந்துகிட்டிருந்தா. பாட்டெல்லாம் தப்பு. மனசை அந்த இழவுக்கு இழுக்கும்னு சொல்லித் தடை செய்திட்டாங்களே,” என்றாள் கிழத்தி நாகம்மை.  இழவு என்றால் நாகம்மையின் மொழியில் காமம்.

’மணியக்கார பொம்பளை பைத்தியமில்லையோ?’, என்று கேட்டாள் தங்கம்மை.

’ஆமாம். அவ முன்னாடி நல்லாத்தான் இருந்தா. பாட்டு பாடினா காலை வெட்டிடுவேன்னு மணியக்காரன் சொன்னதால பைத்தியம் புடிச்சி போச்சு. திடீர் திடீர்னு ராத்திரி நடுஜாமத்தில பாடுவா. மணியக்காரன் அடிப்பான்.’

’அப்படியா.. எனக்கு தெரியாதே’, என்றாள் நாகம்மை.

’ஆமா ஆமா.. நீ என்ன ஊருக் கோடியில இருக்க. படித்துறையில பாத்தாத்தான் உண்டும்.’ என்றாள் கிழத்தி நாகம்மை.

’நீயும் கூட வாயேன்.. அப்படியே மணியக்காரன் வீட்டுப் பக்கம் போவோம்,’ என்றாள் தங்கம்மை.

’ஏண்டி என்னைப்போய் இழுத்தடிக்கிறாய்,’ என்று கிழத்தி நாகம்மை எழுந்துஅங்கிருந்த மாமரத்திலிருந்து ஒரு சிறு கிளையை உடைத்தாள்.

பொங்கி அலையடிக்கும் வெயிலுக்கு நிழலாக அதைத தலைமேல்  வீசிக்கொண்டே, அவளது வழக்கம்போல சற்றே குனிந்து நடந்தாள் கிழத்தி நாகம்மை.

அதனை பார்த்துக்கொண்டே நின்ற தங்கம்மையை திரும்பிப்பார்த்து, ’ஏட்டி.. வாயேன்னு சொல்லிட்டு அப்படியே நிக்கிற?’ என்றாள் கிழத்தி.

ஓடி வந்து கிழத்தியோடு சேர்ந்துகொண்டாள் தங்கம்மை.

மணியக்காரனின் வீட்டின் முன்னால் ஆடுகள் கட்டிப்போடப்பட்டிருந்தன. இந்த ஆடுகளை யார் அறுத்துத்தருவார்? எல்லோரும் மரசெருப்பே போட முடியுமா? யாருக்கும் தோல் செருப்பு வேண்டாமா? தோல் எடுத்து தந்தால் கீழ் சாதியா? மாமிசம் சாப்பிடுபவனெல்லாம் கீழ் சாதியா என்று அவள் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது.

திடீரென்று திரும்பி ’நெடுமாறன் என்ன சாப்பிடுறான். வெறும் பருப்புச்சோறு சாப்பிட்டிட்டு சண்டை போடப்போவானா,’ என்று கிழத்தி நாகம்மையைக் கேட்டாள்.

மணியக்காரனின் வீட்டுக்குள்ளிருந்து பாடல் கேட்டது . அவள் இதுவரை கேட்டிராத பாடல். கிழத்தி நாகம்மை அங்கேயே நின்றாள். மணியக்காரனின் மனைவியின் குரல் உருமி மேளம் போன்ற தம் தம்மென்ற ஒலியுடன் காட்டம்மையை பாடும் பாடல். இருநூறுபேர்கள் நெருப்பை சுற்றி நடனமாடுவதும், பளீர் பளீரென்று நெருப்பு வெடிப்பதும், கூடும் ஒலியுடன் மேள இசையும் ஆதிக்காட்சியாக அவள் மனத்தில் விரிந்து அவள் உடலை அதிர்த்தது.

அடிக்கும் ஒலி அழும் ஒலியாக ஆனது. கரைந்து அழிந்தது. மணியக்காரனின் மெல்லிய உறுமல் தேய்ந்து ம்றைந்தது. கிழத்தி நாகம்மையும் தங்கம்மையும் அங்கேயே நின்றிருந்தார்கள்.

புதியதாகத் தோளில் ஏற்றப்பட்ட சுமையை உணர்ந்து திரும்பி நடந்தார்கள்.

வீட்டில் இன்னும் பத்துபேர் காத்திருந்தார்கள். வீரய்யன் அவர்களிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தான்.

தங்கம்மை அங்கு சென்று நின்றாள். வீரய்யன் விலகி நின்றான்.

”தங்கம்மை, இனி ஆடு அறுக்கமாட்டியாமே?” என்றான் ஒருவன்

”அறுப்பேன் அறுப்பேன்,” என்றாள் தங்கம்மை

”சரி 30 ஆடு இருக்கு. நாளைக்கு காலையில வர்ரேன். சும்மா வந்துட்டு எதுக்கு,” என்றான்.

“தங்கம்மை இனி ஆடு அறுக்கமாட்டாள்,” என்று மெல்லிய குரலில் சொன்னான் வீரய்யன்.

இவன் சத்தம் போட்டு கத்தினால் தேவலை என்று நினைத்தாள் தங்கம்மை.

ம்ஹே ம்ஹே என்று ஆடு இறைந்தது.

’சரி… எதுக்கு வீண் வேலை. நாளைக்கு வரலை,’ என்றான் அவன்

ம்ஹே ம்ஹே என்று ஆடு இரைந்தது.

’நீ நாளைக்கு வா. காலையில வா,’ என்றாள் தங்கம்மை.

அவன் அவளைப் பார்த்துக்கொண்டே திரும்பிச்சென்றான்.

தங்கம்மை குனிந்து தரையில் கிடந்த அரிவாளை எடுத்து கூரையில் செருகினாள். உள்ளே சென்று மோரை அள்ளி மொண்டு குடித்தாள். அப்படியே குப்புற படுத்துத் தூங்கினாள்.

அதிகாலை விழிப்பு வந்துவிட்டது. அருகே அமைதியாக மல்லாந்து,  கை கால் சேர்த்து நகராமல் படுத்துக்கிடந்தான் வீரய்யன்.

எழுந்து புடவையை சுற்றிக்கொண்டு ஆற்றை நோக்கிச் சென்றாள் தங்கம்மை. இருட்டில் கருப்பு எண்ணெய் போல ஆறு ஓடிக் கொண்டிருந்தது.  உடைகளை எல்லாம் அவிழ்த்துப் போட்டு நிர்வாணமாக ஆற்றில் இறங்கினாள். ஒரு வினாடி உடலெங்கும் அணைத்துக்கொண்டு காவிரி அவளைத் தேற்றினாள். மறுவினாடி அவளது உள்ளெங்கும் நிறைந்து காவிரி வெறி கொண்டு ஆடினாள். மற்றொரு வினாடி தங்கம்மையின் உடலே கண்ணாகத் தானே கண்ணீராக வழிந்தாள்.

எழுந்து நின்று புடவையைச் சுற்றிக்கொண்டு வீட்டை நோக்கிக் கிளம்பினாள். அவளது ரத்தம் நீராக நடந்த இடத்திலெல்லாம் தேங்கியது. அவள் வீட்டை அடைந்தபோது வீரய்யன் தனது நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.

அவளையே உற்றுப்பார்த்தான். அவள் சிரித்தால் அவன் சிரிக்காமல் அவளையே உற்றுப்பார்ப்பானே அது போல.

அவள் மேலே செருகியிருந்த கத்தியை எடுத்தாள். அவனருகே சென்று நெற்றியைப் பின்னே தள்ளினாள். கொம்பைப் பிடிப்பது  போல அவன் காதை பிடித்து, ஆட்டின் கழுத்தை அறுத்தாள். கழுத்திலிருந்து ரத்தம்  பெருகியது. அந்த ஆட்டின் நெற்றியின் நடுவே குறுங்கத்தியால் கீறி தோலை லாவகமாக  பிய்த்தாள். சரசரவென்று கீறினாள். ஒரே இழுப்பு. முழு ஆட்டின் தோலும் சரேலென்று வந்துவிட்டது.
’அடுத்ததைக் கொண்டா,’ என்றாள் தங்கம்மை.
***