மகரந்தம்

கற்கால பெண்தெய்வங்களா அல்லது கற்கால போர்னோகிராபியா?

கற்காலத்தைச் சார்ந்த தொன்மையான பெண் சிலைகள்,உலகெங்கிலும் கிடைத்துள்ளன.  இன்னமும் கிடைத்து வருகின்றன. இவை மிகப்பழமையான கற்காலப் பெண் தெய்வ வடிவங்களா? இவற்றை வழிபட்டார்களா? அல்லது கற்கால ஆபாச-சிலைகளா? நவீன பார்பி (barbie) விளையாட்டுப் பொம்மைகளின் கற்கால வடிவங்களா? கற்கால பெண்-மைய சமுதாயத்தினைக் காட்டும் படிமங்களா? Sacred Places of Goddess: 108 Destinations என்ற நூலாசிரியர் காரென் டேட் (Karen Tate) இந்தப் புதிரைக் குறித்து ஜோஸப் காம்பெல் அமைப்பினைச் சார்ந்த தொன்மவியலாளர் ஸ்டீபன் ஜெரிஞ்சருடன் (Stephen Gerringer) உரையாடுகிறார். ஜோஸப் காம்பெல் குறித்தும் இந்த உரையாடல் பேசுகிறது.

டார்வின் குறித்த திரைப்படம் – க்ரியேஷன் (Creation)

இது சார்ல்ஸ் டார்வினின் இருநூறாவது ஆண்டு.  இன்றைய ஆய்வாளருடன் ஒப்பிட்டால் டார்வின் பலவிதங்களில் மிகவே வித்தியாசமான அறிவியலாளர்.  இன்றைய சூழலில் டார்வின் அவரது ஆராய்ச்சி பயணத்துக்கு நிதி கேட்டிருந்தால், அறிவியல் செயல்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் இன்றைய விதிகளின்படி அது நிராகரிக்கப்பட்டிருக்கும் என வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். டார்வினின் வாழ்க்கையில் அவர் பாசமிக்க கணவனாக, பெரும் அன்பு கொண்ட தந்தையாக, எதிலும் பொருந்தாத மாணவனாக, பெற்றோரால் வேலைக்காகாது என நினைக்கப்பட்ட மைந்தனாக இருந்தவர்.  இயற்கையை வாழ்நாள் முழுதும் உன்னிப்பாகக் கவனித்தவர்.  தாம் உள்வாங்கியவற்றைத் தொடர்ந்து ஆழமாக அலசி, பகுத்து,  பல துறை அறிவியல் முடிவுகளை உள்வாங்கி இணைத்துப் புத்துருவாக்கம் செய்யும் திறமையும் கொண்ட ஒரு மேதை.  அவரது ஆளுமை உலக வரலாற்றில், மனித சிந்தனையில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய பல சிந்தனையாளரைப் போலவே பல பரிமாணங்களைக் கொண்டது.  இப்பன்முகத் தன்மையை சாதாரண மனிதரும் அறியும் விதத்தில் கொண்டு வர முயற்சிக்கும் ஒரு திரைப்படம் க்ரியேஷன் (Creation).  இத்திரைப்படம் குறித்த ஒரு பார்வை இங்கே.

nerioxmanமிருகம்/ படைப்பு: நேரி ஆக்ஸ்மேன்

பொருள் என்பதன் இயல்பே மாறிக் கொண்டிருக்கிறதாம். வடிவமைப்புத் துறையில் ஏற்பட்டு வரும் பெரும் அலைவீச்சான மாறுதல்கள், பல அறிவியல் துறைகளிடையே இருந்த எல்லைக் குறிப்புகளை உடைத்து வருகின்றன எனச் சொல்லப்படுகிறது. நெரி ஆக்ஸ்மேன் என்னும் மேற்கண்ட ஆய்வாளர் எம்.ஐ.டி பல்கலையில் மேற்கொண்டு வரும் ஆய்வுகளைப் பற்றிய ஒரு பேட்டியில் பல ஆச்சரியமான தகவல்களை நாம் பெறமுடிகிறது. முன்னாள் மருத்துவ மாணவரான நேரி, அங்கிருந்து கட்டிடக் கலையைப் படித்து, இன்று வடிவமைப்புக் கணித முறைகளில் ஆய்வு செய்கிறார். இயற்கையை மனிதர் பதிலி செய்ய உத்வும் முறைகளை மென்பொருள் மூலமும், கணிதம் மூலமும் தாமே உருவாக்கிப் பயன்படுத்தும் இவர், ஒளி, எடை, தோல் அழுத்தம், உடல் வளைவுகள், என்று பலவிதமான சூழல் இயல்புகளுக்குத் தம்மை மாற்றிக் கொள்ளத் தக்க, இயற்கையில் இது வரை இல்லை என்றாலும் இயற்கையின் பாடங்களை உள்வாங்கிக் கொண்ட வகைப் பொருளடிப்படைகளையும் (new materials), அவை கொண்டு உருவாக்கிய கலைப் படைப்புகளையும் தயார் செய்வதில் வல்லுநராய்ப் புகழ் பெற்று வருகிறார். இவருடைய பேட்டி ஒன்றை இங்கே காணலாம்.

“நாம் தகவல் யுகத்திலிருந்து பொருள்களின் யுகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தகவல்கள் பொருளிலேயே பிணைக்கப்பட்டிருக்கும். இனி நாம் அனைவரும் எப்போதும் வெண் திரையை பார்த்துக் கொண்டிருக்க போவதில்லை” – நேரி ஆக்ஸ்மேன்

bangladesh_floodமுடிச்சவிழ்ந்த வங்கதேசக் குடிநீர் புதிர்

இந்தியரின் பெரும் பிரச்சினை, வங்க தேசத்தின் பெரும் துக்கம் இரண்டுக்கும் ஒரு பொதுக் காரணம் என்ன? குடிநீர்ப் பற்றாக் குறை. இந்தியாவில் நாடு நெடுக நிலத்தடி நீரை நாம் ட்ரிலியன் காலன்(gallon) கணக்கில் குழாய்ப் பாசனம் வழியே வெளியேற்றி வருகிறோம். இன்னும் சில பத்தாண்டுகளில் இந்தியா நெடுக பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வரும் என்றும், பயிர்களுக்கோ, குடிநீருக்கோ தண்ணீரே இல்லாது பாலையாக நாடு மாறும் என்றும் நீர்வள ஆராய்ச்சியாளர்கள் பயம் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையில் கடலோர நாடான வங்க தேசத்திலும் இதே போன்ற காரணத்தால் நிலத்தடி நீர் குறைந்ததோடு, அந்நாட்டில் நெடுக நீர்த் தேக்கம் உள்ள நிலத்தில் நீர் விஷமாகிக் கொண்டுள்ளதாம்.

ஆர்செனிக் விஷம் நிறைந்த நீர் கிணறுகளைப் பயன்படுத்த முடியாமல் ஆக்கி விடுவதால், 2 மிலியன் வங்க மக்கள் ஆர்செனிக் விஷத்தால் தாக்கப் பட்டுள்ளனர். இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவு பிறந்திருக்கிறது. ஏன் நிலத்தடி நீர் விஷமாகிறது என்ற புதிரை சில அறிவியலாளர்கள் விடுவித்து விட்டனர் என்கிறது நியு சைண்டிஸ்ட் என்கிற சஞ்சிகை. கட்டுரையை இங்கே படியுங்கள்.

புத்தக மற்றும் அறிவியல் ஜீவிகளுக்காக…

100,000 பவுண்ட் பரிசு தொகை கொண்ட, ஆங்கில இலக்கியத்திற்கான உலகின் விலை உயர்ந்த விருதாகக் கருதப்படும் சர்வதேச IMPAC டப்லின் விருதுக்காக பல நாடுகளின் 123 நகரங்கள் 163 நூலகங்களிலிருந்து மொத்தம் 163 நாவல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மொத்த நாவல்கள் பட்டியலையும் இங்கே காணலாம்.
யுரேகா என்கிற புதிய அறிவியல் பத்திரிகையை டைம்ஸ் பத்திரிகை குழுமம் கொண்டு வந்துள்ளது. முழு பத்திரிகையையும் இங்கே பார்க்கலாம்.