
பிரபஞ்ச வெளியெங்கும்
சுகந்தம் நிறைக்கும்
அழகிய பூவொன்றை
வசந்தநாளொன்றில் எதிர்கொள்ள
தன்
பரப்பெங்கிலும் பாசம் நிரப்பி
நெடுநாளாகக் காத்திருந்ததோர்
பச்சை இல்லம்
மெதுவாக நகர்கையில்
பெருஞ்சலனத்தில்
சிதறச் செய்த கரும்பாறைகள்
மேலிருந்த சினமோர் யுகமாய்த் தொடர்ந்தும்
தன் பழஞ்சுவடுகளில் நலம் விசாரிக்கும்
எளிய நாணல்களை
மீளவும் காணவந்தது
நீர்த்தாமரை
விரிசல்கள் கண்ட மண்சுவர்
மழையின் சாரலை
தரையெங்கும் விசிறும்
ஓட்டுக் கூரை சிறிய வீடு
தொடரும்
புராதன இருளின் ஆட்சி மறைக்க
தன் கீற்றுக்களைப் பரப்பி
பரிபூரணத்தை எடுத்துவந்தது
பேரன்பின் தேவதை
மெல்லிய வண்ணத்துப் பூச்சியென
பொக்கிஷங்களைச் சுமந்து வந்த தன்
சிறகுகளைச் சிறிதேனும்
இளைப்பாறவிடாமல்
வந்தது என்றுமழியாப் புன்னகையோடு
யாவர்க்கும் மகிழ்வைத் தரும்
மந்திரங்களை உதிர்த்தது
பின்னர்
தவறவிட்ட விலைமதிக்கமுடியாதவொன்றை
தேடிச் செல்வது போல
மிகத் துரிதமாகத் தன் நிலம் நாடி
தொன்ம பயிர்நிலங்கள் தாண்டி
மீண்டும் பறந்தது
ஆத்மாக்களனைத்திற்கும்
இனி வாழப்போதுமான
சுவாசத்தை விட்டுச் சென்ற
அத் தூய காற்றினூடே
அந்தகாரத்தைப் பரப்பி
தைத்திருந்த கருங்குடையை திரும்பவும்
விரித்தது மழை இரவு