சென்னையிலிருந்து பெங்களூர் வந்து ஐந்து வருடம் இரண்டு மாசம் ஆகிவிட்டது. வந்த புதிதில் “இது என்ன ஊரு?” என்று அலுத்துக்கொண்ட காரணத்தாலோ என்னவோ உடனே அதை பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்திவிட்டார்கள். வெல்லம் போட்ட சாம்பார் மாதிரி பல விஷயங்கள் ஐந்து வருஷத்தில் பழகிவிட்டன.
தவித்த வாய்க்கு காவிரி தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ ஹோட்டல்களில் சாம்பார், சட்னி தாராளமாக கொடுக்கிறார்கள். போன முறை சென்னை சென்ற போது ‘இன்னும் கொஞ்சம் வெங்காய சட்னி’ என்று கேட்டதற்கு வீட்டுக்கு வந்துவிட்டு போகும் விருந்தினருக்கு குங்குமம் தருவது போல சின்ன கிண்ணியில் தந்தார்கள்.
இந்த விலைவாசி ஏற்றத்திலும் எம்.ஜி.ரோடு பிருந்தாவன் ஹோட்டலில் எவ்வளவு அப்பளம் கேட்டாலும் சிரித்துக்கொண்டே போடுகிறார்கள். கோரமங்களா கிருஷ்ணா கபே சொந்தக்காரர் தென்னந்தோப்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். தயிர், மோரைத் தவிர எல்லாவற்றிலும் எப்படி அவ்வளவு தேங்காய் போட முடிகிறது? ‘நல்லவர்களிடம் உணவருந்துங்கள்’ என்ற வாசகத்துடன் அன்னபூர்ணி ஹோட்டலில் துளசி அடை செய்து கொடுக்கிறார்கள். ‘ரோட்டி மீல்ஸ்’ல் விதவிதமான ரோட்டியும் அதற்கு கருப்பாக எள்ளுப்பொடி மாதிரி ஒன்றும் அதன் நடுவில் குழி செய்து வெண்ணையுடன் தருகிறார்கள்.
ஐந்து வருடம் முன் வந்த போது பஸ் போக்குவரத்து மிகவும் மோசம் என்று எழுதியிருந்தேன். சிகப்பு கலர் வால்வோ, ஏசி சொகுசு பஸ் வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. லாப்டாப்புடன் ஏறும் கூட்டதுக்கு ஒழுங்காக டிக்கெட்டும் பாக்கி சில்லரையை டிக்கெட் பின்னாடி எழுதித் தராமல் கையில் தருகிறார்கள். தலையைச் சொறிவதற்கு கையைத் தூக்கினால் கூட பஸ்ஸை நிறுத்தி ஏற்றிக்கொள்கிறார்கள். இதில் ஏறிக்கொள்ளும் பெண்கள் உடனே செல்போன் எடுத்துப் பேச ஆரம்பிக்கிறார்கள்.
பெங்களூர் பெண்களை பார்க்கும் போது வைரமுத்து வரிகள் காதோரம் ரீங்காரம் செய்தாலும், அதை பற்றி மேல் விவரம் எழுதினால் என்னை வாலிவதம் செய்துவிடுவார்கள் என்பதால் எழுதாமல் தவிர்க்கிறேன். எழுத்தாளர் ‘சாவி’ சொன்னது போல பெங்களூருக்குப் பொருத்தமான பெயர் பெண்களூர்தான்!
எம்.ஜி.ரோட்டில் மற்றும் பல இடங்களில் மெட்ரோ ரயிலுக்காக தோண்டிக்கொண்டு இருக்கிறார்கள். வேலை நடப்பதைப் பார்த்தால் சீக்கிரம் முடித்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. சுரங்கம் தோண்டும் பிஸினஸில் பலர் இருப்பதால் இது சுலபமாக இருக்கிறதோ என்னவோ. அந்த காலத்தில் சாலைகளுக்கு நடுவே ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக டிராம் ஓடிக்கொண்டு இருந்ததைப் பழைய படங்களில் பார்க்கலாம். தற்போது மெட்ரோ ரயில் அமைக்கும் வேலையைப் பார்த்தால் அதை எல்லாம் அப்படியே விட்டு வைத்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.
கடந்த சில மாதங்களாக கிராஃபிட்டி(Graffiti) என்ற சுவர் கிறுக்கல்கள், போஸ்டர் ஒட்டுவது எல்லாம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. சுற்றுலா தலங்கள், மிருகங்கள், இயற்கைக் காட்சிகள் என்று பல விதமான படங்களைப் பல இடங்களில் கார்ப்பரேஷன்காரர்கள் வரையத் தொடங்கியுள்ளார்கள். சென்னையிலும் நந்தனம் சிக்னலிலும் இதே போல இருக்க்கிறது என்று சொல்லுகிறார்கள். கே.ஆர்.புரம் ரயில்வே ஸ்டேஷன், பேலஸ் கிரவுண்ட் பக்கமும் இது மாதிரி சித்திரங்களைப் பார்த்தேன்.
வெள்ளி, சனி என்று இரு நாட்களுக்கு புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். சனிக்கிழமை நான் போன சமயம் எல்லா சாமியார் ஸ்டால்களிலும் என்னை வலுக்கட்டாயமாகப் பிடித்து உள்ளே இழுத்தார்கள். சனிக்கிழமை என்னிடம் அப்படி என்ன ஸ்பெஷல் இத்தனைக்கும் அன்று ‘ஆக்ஸ்’ ஃபெர்ப்யூம் கூட உபயோகப்படுத்தவில்லை. பிறகு தான் தெரிந்தது என்னை உள்ளே இழுத்ததற்குக் காரணம் அன்று நான் அணிந்துக்கொண்ட குர்த்தா பைஜாமா. பிடித்து இழுத்த ஸ்டால்களில் எல்லாம் ஆத்மா-சரீரம் பற்றிய புத்தகங்கள் ஒழுங்காக அடிக்கியிருந்தது.
“It’s kool” என்று அமெரிக்கா சென்று திரும்பும் இந்தியர்கள் சொல்லுவது போல பெங்களூர் வருடம் முழுக்க கூலாகவே இருக்கிறது. “என்ன, இன்னிக்கு இந்த வெயில் அடிக்கிறது” என்று நினைத்துக்கொண்டால், உடனே அன்று மாலை மழை வந்துவிடும். இந்த மாதிரி குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையால் காலை ஏழு மணிக்கு எழுந்து கொள்வது என்பது பிரம்மப் பிரயத்தனம். பல கடைகள் காலை 10 மணிக்குப் பிறகுதான் திறக்கிறார்கள். இதனாலோ என்னவோ பெங்களூர் சோம்பேறித்தனமான ஊராகத் தெரிகிறது, ‘Busyபேலாபாத்தை’ தவிர!
ஏரி மீது எல்லாம் ஃபிளாட் கட்டியதாலோ என்னவோ ஃபிளாட் விலை எல்லாம் எக்கசக்கமாக ஏறிவிட்டது. முன்பு சிக்கதேவராஜ உடையார் 1687 ஆம் ஆண்டு பெங்களூரை முகலாயர்களிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய்க்கு வாங்கினார் என்று படிக்கும்போது ‘அட’ என்று சொல்ல வைக்கிறது.
பெங்களூரில் பல காடுகள் புதிதாக வளர்ந்துள்ளன. எல்லாம் கான்கிரிட் காடுகள். அடுக்கு மாடி கட்டிடங்கள் வானத்தைத் தொட்டவுடன் பால்கனியில் பனியன், ஜட்டியைக் காயப்போட ஆரம்பிக்கிறார்கள். தினமும் பேப்பரில் “இன்னுமா நீங்க வீடு வாங்கலை?” என்று பிரஷர் கொடுக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக ரிசஷன் என்பதால் கட்டிடங்களும் விலையும் ஏறாமல் அப்படியே இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன் ஒரு பெரிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று பார்த்த போது பச்சை நிறம் எப்படி அழிகிறது என்று இயற்கையாகத் தெரிந்தது.
மக்கள் நடைப்பயிற்சிக்கு இயற்கையான காற்றை சுவாசிக்க லால்பாக் நாடுகிறார்கள். சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் திடீர் என்று நடைப்பயிற்சிக்கு ஆண்டுக் கட்டணம் என்று ஒன்றைக் கொண்டு வந்து, பிறகு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் ரத்து செய்தார்கள்.
ஹைதர் அலி, தமிழ் நாட்டு தோட்டக்கலை தொழில் புரிந்தவர்களை கொண்டு ஒரு நாற்பது ஏக்கர் நிலத்தை அவர்களிடம் கொடுத்து தோட்டம் அமைக்கச் செய்தான் திப்பு சுல்தான் அதை மேலும் வளப்படுத்தி, உல்லாசமாக இருந்தான். அதுவே இன்றைய லால்பாக்! எவ்வளவோ மரங்கள் உள்ள பெங்களூரில் வேப்பமரம் பார்ப்பது அபூர்வம். லால்பாக்கில் கூட கண்ணுக்கு புலப்படாது. இன்னும் கொஞ்ச நாளில் மரங்களையே பார்ப்பது அபூர்வமாகிவிடும் அபாயம் இருக்கிறது.
1799 நடந்த போரில் திப்பு சுல்த்தான் இறந்த பிறகு, பெங்களூர் இரண்டாயிற்று. மைசூரை, (மைசூர்) மகாராஜாக்களும், ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஜெனரல் வெல்லெஸ்லியும்(General Wellesley) கைப்பற்றினார்கள். வெல்லெஸ்லி பொழுது போகாமல் திப்பு சுல்தான் அடையாளங்களை ஒன்றுவிடாமல் அழித்தான். ஸ்ரீரங்கப்பட்டினத்தின் ஆறு மலேரியா கொசுக்களால் நிரம்பியிருக்க, பல மலேரியா இறப்புகளுக்குப் பிறகு, பத்து வருடம் கழித்து, பிரிட்டிஷ் படைகள் பெங்களூருக்கு மற்றப்பட்டன. பெங்களூரின் சரித்திரம் கொசுக்களால் மாற்றி எழுதப்பட்டது. அந்த கொசுக்கள் இன்னும் அப்படியே இருக்கிறது. லிப்ட் இல்லாத ஃபிளாட்டில் கூட மாடியில் வந்து கடிக்கிறது.
அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வாக்கிங் செய்யும் தாத்தாக்களையும் பாட்டிக்களையும் பார்க்கலாம்.
“இரண்டு பேரும் வேலைக்கு போறா, பையன் கப்பல் மாதிரி வீடு வாங்கியிருக்கான். ‘ஏம்பா ஊரில கஷ்டப்படறே அங்கே இருக்கும் வீட்டை வித்துட்டு இங்கேயே வந்து என் கூட இருந்துடேன்’ என்றான். சரி என்று நானும் புறப்புட்டு வந்துட்டேன்” — வாக்கிங் போகும் போது தாத்தாக்கள் பேசிக்கொள்வது.
“மாட்டுப்பெண்ணும் வேலைக்கு போறா, குழந்தையைப் பார்த்துக்க ஆள் இல்லை, அம்மா நீ இங்கே வந்துடேன் என்றான், சரின்னு வந்துட்டேன். இதுக்கு முன்னாடி கலிஃபோர்னியால இருந்தா இப்ப திரும்ப வந்துட்டா…” — இது பாட்டிகள்.
சில மாதம் கழித்து அவர்கள் “என்னவோ சார், நமக்கு பெங்களூர் அவ்வளவா சரிப்பட்டு வரலை, குழந்தை கொஞ்சம் பெரிசாயுடுத்துனா, சொந்த ஊருக்கே போயிடலாம் என்று இருக்கேன்.” என்று பேத்தியோ பேரனோ பெரிசாக வளரக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் தபாலில் ஏதாவது கல்யாணப் பத்திரிக்கை வருகிறதா என்று பார்த்துக்கொண்டு, வந்தவுடன் பக்கத்துவீட்டு இரண்டு விட்ட மாமாவாக இருந்தாலும் “இவன் எனக்கு ரொம்ப வேண்டியவன், கட்டாயம் போகணும்” என்று சொல்லிவிட்டு, ஒரு வாரம் டிபன் பாக்ஸ் கட்டுவதிலிருந்து தப்பித்து கொள்கிறார்கள்.
எம்.ஜி.ரோடு, கமர்ஷியல் ஸ்ட்ரீட் பிளாட்பாரங்களில் சன்னாவை தட்டையாக்கி, எலுமிச்சை சாறு வெங்காயம், கொத்துமல்லியுடன் கலந்து, பேப்பரை ஜோக்கர் குல்லா மாதிரி செய்து சென்னா மசாலா என்று தருகிறார்கள். சாப்பிட நன்றாக இருக்கும். சாப்பிட்டபின் நாக்கின் மேல் பகுதி சதை கொஞ்சம் உரியும் அவ்வளவு தான். வீட்டில் கிளி வளர்த்தால் இதைக் கொடுக்கலாம். சீக்கிரம் பேச்சு வரும்.
ஐந்து வருடம் முன்னால் எம்.ஜி.ரோடில் உள்ள ‘ஃபுட் வோர்ல்ட்” வாசலில் “நான் வளர்கிறேன் மம்மி” என்று காம்பிளான் விளம்பரத்தில் வரும் குழந்தை போல் ஒரு சின்ன பெண் (ஏழு அல்லது எட்டு வயசு இருக்கும்) தினமும் சாயந்திரம் ஒரு ரோஜா பூங்கொத்தை வைத்துக்கொண்டு எல்லோரிடமும் ‘ஐந்து ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று ஓயாமல் கெஞ்சிக்கொண்டு இருப்பாள். போன வாரம் சர்ச் ஸ்டீரிட் பக்கம், பப்புக்கு எதிரில் இரட்டை ஜடையுடன் டீன் ஏஜ் பெண்ணுக்கு உரிய அடையாளங்களுடன் ’பூங்கொத்து 10 ரூபாய்’ என்று விற்றுக் கொண்டிருந்தாள். நான் ஐந்து வருஷத்துக்கு முன் பார்த்த அதே பெண். ஐந்து வருஷத்தில் மாறிப்போயிருந்தாள்; பூங்கொத்து விலை மாறியிருக்கிறது. மாறாமல் இருந்தது அவள் கையில் இருந்த இந்த ரோஜா தான்!
One Reply to “பெங்களூர் to பெங்களூரு”
Comments are closed.