புரிந்து கொள் – 3

(இக்கதையின் முந்தைய பகுதிகள்: பகுதி1 | பகுதி 2)

ஒவ்வொரு வாரத்திலும் பல வருடத்துக் கல்வியை நான் கற்கிறேன், மேன்மேலும் பெரிய ஒழுங்குகளை வடிவமைப்பாய்க் கட்டுகிறேன். மனிதகுலம் எழுதிய பெருஞ்சித்திரம், இதுநாள் வரை சேமிக்கப்பட்ட அதன் மொத்த அறிவுக் களஞ்சியம்- அது    காட்சியாய்க் கிட்டும் ஒரு திரையை, விலகி நின்று இதுவரை எந்த மனிதரும் பார்த்திருக்க முடியாத அளவு அகன்ற பார்வையில் பார்க்கிறேன். எல்லாக் கோணமும் உள்ளடக்கிய பார்வையில் இதுவரை இவையெல்லாம் காணப் படவில்லை என்று என் நினைப்பு. இந்தத் திரையுருவில் ஆங்காங்கே தெரியும் வெற்றிட இடைவெளிகளை, முந்தைய சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் எல்லாம் சிறிதும் உணராத குறைகளை என்னால் இட்டு நிரப்ப முடியும். அந்தப் பேரமைப்பில், பூரணமாகி விட்டதாகக் கருதப்பட்ட இடங்களில் கூட, என்னால் அதன் இழைப்பின்னலில் பொலிவை, செழுமையைக் கூட்ட முடியும்.

இயற்கை அறிவியல்களில் மிகத் தெளிவான உருவ ஒழுங்கு காணக் கிடைக்கிறது. இயற்பியல் (பௌதீகம்) தூல இருப்பின் எழில் கூடிய மொத்த இணைப்பை ஏற்கிறது. அடிப்படை சக்திகளின் அளவில் மட்டுமல்ல, அதன் முழு அளவிலும் சரி, அப்படி ஒரு இணைப்பு இருந்தால் என்ன விளைவு என்ற அளவிலும் கூட இணைப்பை ஏற்கிறது. ’காட்சியியல்’ (optics), ‘வெப்ப இயக்கவியல்’ (thermodynamics) போன்ற பிரிவுகள் எல்லாம் வெறும் அடைப்புகள். அவை இயற்பியலாளர்களை இயற்கையில் உள்ள ஏராளமான இடைவெட்டுகளைப் பார்க்கவிடாமல் தடுக்கும் கட்டுப்பாடுகள். எழிலியலை விடுவோம், இந்த இடைவெட்டுகள், இணைப்புகளில் இருந்து கிட்டக் கூடிய செயல்முறைகள் பல்லாயிரம். எத்தனையோ வருடங்கள் முன்னரே பொறியியலாளர்கள் கோள அளவில் முழுச் சீரமைவுள்ள புவி ஈர்ப்பு விசைப் பரப்புகளை (spherically symmetric gravity fields) செயற்கையாக உற்பத்தி செய்திருக்க முடியும்.

இதெல்லாம் புரிந்தபோதும், நான் அப்படி ஒரு கருவியைக் கட்டப்போவதில்லை. அதைச் செய்ய அதற்கெனவே தயாரான  பல உபகரணங்கள் தேவைப்படும்,  அவை எல்லாவற்றையும் நானே செய்வது கடினம், வெளியில் வாங்குவதற்கும் கால அவகாசம் அதிகம் தேவைப்படும். மேலும் அப்படி ஒரு விசையைக் கட்டுவது எனக்கு ஒரு திருப்தியையும் தராது, ஏனெனில் அது வேலை செய்யும் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும், அதைக் கட்டுவதால் எனக்கு வேறு ஏதும் புது உள்ளொழுங்கு காணக் கிட்டாது.

-o00o-

நீண்ட காவியத்தில் ஒரு காண்டத்தை எழுதி இருக்கிறேன், அதற்கடுத்த  பகுதியை எழுதிக் கொண்டிருக்கிறேன். எல்லாக் கலைகளையும் ஒருங்கிணைத்த ஓர் அணுகலை என்னால் தேர்ந்தெடுக்க முடியும். ஆறு நவீன மொழிகளையும், நான்கு பண்டை மொழிகளையும் பயன்படுத்துகிறேன். இவை மனித நாகரீகத்தின் உலகப் பார்வைகளில் பெரும்பான்மையை உள்ளடக்கியவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு அர்த்தச் சாயல்களையும், கவித்துவத் தாக்கங்களையும் கொணர்கின்றன. சில ஊடுபாவுகள் மிக அருமையாக அமைகின்றன. கவிதையின் ஒவ்வொரு வரியும் கருத்துச் செழுமையைக் கூட்டும் புதுச் சொல்லாக்கங்கள் கொண்டது. இவை வெவ்வேறு மொழிகளில் இருந்து தம் இயல்பு நிலை பிறழ்ந்ததால் சொற்கள் உயிர்ப்பிக்கும் புது ஆக்கங்கள். இந்த நீண்ட கவிதையை நான் முடித்தால் இது ‘ஃபினகனுடைய இறப்புக்கு விழிப்பு நோன்பு’ (Finnegan’s Wake) டன், எஸ்ரா பௌண்டுடைய ’காண்டங்கள்’ (cantos) பெருங்கவிதையையும் பல மடங்கு சேர்த்து உருவான ஒரு படைப்பைப் போலக் கருதப்படும்.

-o00o-

சி.ஐ.ஏ. என் வேலையில் குறுக்கிடுகிறது.. எனக்கு ஒரு பொறி வைக்கிறது. இரு மாதங்களாய் முயன்றபின், அவர்கள் என்னை வழக்கமான வழிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் தீவிரமான முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். செய்தி அமைப்புகள் ஓர் அபாயகரமான, மூளை பிறழ்ந்த கொலைகாரனின் காதலி அவன் தப்பிக்க உதவியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றன. கானி பெரிட் என்று பெயர் கொடுக்கப்படுகிறது, இவளோடு நான் சென்ற வருடம் பழகி வந்தேன். இந்த வழக்கு நீதிமன்றத்துக்குப் போனால் இப்பெண்ணுக்குத் தண்டனை வழங்கப்படும் என்பதும், நீண்ட காலச் சிறைத் தண்டனை கிட்டும் என்பதும் முன்னரே தீர்மானம் ஆகிவிட்டதாகத் தெரிகிறது. இப்படி ஒரு நிலை அப்பெண்ணுக்கு ஏற்பட நான் விடமாட்டேன் என்று சி.ஐ.ஏ. நம்புவ்தாகத் தெரிந்தது. நான் ஏதாவது முயற்சி செய்வேன், அது என்னை வெளிப்படுத்தும், என்னைப் பிடித்துவிடலாம் என்று கோட்டை கட்டுகிறார்கள்.

கானியுடைய முதல்கட்ட விசாரணை நாளை. அவளை ஒரு ஜாமீன் கொடுக்கும் நிறுவனத்தின் வழியே ஜாமீனில் வெளியேவிட ஏற்பாடு செய்வார்கள். அது அவளோடு நான் தொடர்பு கொள்ள வகை செய்யுமாம். அவளுடைய இருப்பிடத்தைச் சுற்றி எங்கும் தன் காவலரை நிரப்பி வைத்து எனக்காகக் காத்திருப்பார்கள்.

-o00o-

திரையில் உள்ள முதல் படத்தை நான் திருத்துகிறேன். இந்த டிஜிடல் படங்கள் ஹோலோக்ராஃபிக்ஸோடு ஒப்பிட்டால் மிக எளிமையானவை, ஆனால் கையிலிருக்கும் வேலைக்கு இவையே போதுமானவை. நேற்று எடுத்தவை இந்த ஒளிப்படங்கள். கானியுடைய ஃபிளாட் இருக்கும் கட்டிடத்தின் வெளிப்புறத்தை, முன்புறத் தெருவை, அருகிலிருக்கும் எல்லா குறுக்குத் தெருமுனைகளைக் காட்டுபவை. சுட  உதவும் சிறு இலக்குக் குறியை படங்களில் ஆங்காங்கு இட்டபடி நான் குறிப்பானை (cursor) திரையின் குறுக்கே நகர்த்துகிறேன். ஒரு ஜன்னலோ, விளக்குகளோ அறையில் இல்லை, திரை மட்டும் விலகி உள்ளது, நேர் குறுக்கே ஒரு கட்டிடத்தில். ஒரு தெருவியாபாரி இரண்டு தெருக்கள் தள்ளி, கட்டிடத்தின் பின்புறத்தில்.

ஆறு இடங்களைக் குறிக்கிறேன். கானி தன் வீட்டுக்குத் திரும்பியபின் எங்கெங்கே சி.ஐ.ஏ.வின் காவலர்கள் நேற்று இரவு காத்திருந்தனர் என்று சுட்டுகிறேன். மருத்துவமனையில் இருந்த விடியோ டேப்களில் என்னைப் பார்த்துவிட்டு, ஆண்களோ, இல்லை நிச்சயமில்லாத உருவோ யாராக இருந்தாலும், யாருக்குக் காத்திருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது – நல்ல தைரியமான, அளவான நடையை எதிர்பார்த்திருந்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பே அவர்களுக்கு எதிரியாயிற்று. நான் என் நடையில் எட்டு வைப்பதை நீட்டினேன், தலையை மேலும் கீழும் ஏற்றி இறக்கி நடந்தேன், என் கை வீச்சைக் குறைத்தேன், சற்றும் எனக்கு வழக்கமில்லாத உடைகளை அணிந்திருந்தேன். அவர்கள் என்னைக் கவனிக்கத் தவறினார்கள், அந்தப் பகுதி வழியே நான் கடந்தேன்.

ஒரு படத்தின் அடிப் பகுதியில் அந்தக் காவலர்கள் தொடர்புக்குப் பயன்படுத்திய ரேடியோ அலைவரிசையின் அளவைக் குறித்தேன். அவர்கள் தம் ரேடியோ பேச்சைப் பிறருக்குப் புரிய விடாமல் சிதறடித்துக் குழப்பப் பயன்படுத்தும் முறையை விவரிக்கும் ஒரு கணிதச் சமன்பாட்டைக் குறித்தேன். அதை எல்லாம் முடித்தபின், அந்த உருவங்களை சிஐஏ இயக்குநருக்கு வலை வழியே அனுப்பினேன். நான் சொல்ல முனைந்தது தெளிவு. அவர்கள் விலக்கப் படாவிட்டால், நான் நினைத்த போது அந்தக் காவலரை என்னால் கொல்ல முடியும்.

கானி மீது சுமத்தப்பட்ட பழியை, குற்றப் பத்திரிகையை விலக்குவதற்கும், நிரந்தரமாக சிஐஏ அவள் பக்கமே போகாமல் இருக்கச் செய்யவும் மேலும் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருந்தது. என்னை அனாவசியமாக அவர்கள் தொல்லை செய்யாமல் இருக்கச் செய்ய வேண்டி இருந்தது.

-o00o-

மறுபடியும் அமைப்புகளின் உள்ளுருக்களை காணும் வேலைதான், ஆனால் இது மிகச் சாதாரணமான வகை அமைப்பு. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட அறிக்கைகள், சுருக்கக் குறிப்புகள், தொடர்புக் கடிதங்கள், ஒவ்வொன்றும் ஒரு புள்ளியியத்து ஓவியத்தின் பல வண்ணப் புள்ளிகள் போல இருந்தன. நான் அவற்றைத் தொகுத்து வைத்து விட்டு, கோடுகளும், விளிம்புகளும், ஒழுங்கு உருக்களும் தெரியுமாறு தூர நின்று பார்த்தேன். நான் கணினி வழியே கொணர்ந்த பல்லாயிரக் கணக்கான ‘பைட்’ களை(bytes) நான் அலசிய ஒரு கால இடைவெளியில் இருந்த தகவலில் ஒரு சிறு பங்காகத்தான் இருக்கும், இருந்தும் எனக்கு அவை போதுமானதாக இருந்தன.

நான் கண்டு பிடித்தது ஒரு உளவு நாவலின் கதைத் திட்டத்தை எல்லாம் விட மிக எளியதாகத்தான் இருந்தது. ஒரு பயங்கரக் கும்பல் வாஷிங்டன் மாநகரத்து மெட்ரோ ரயில் அமைப்பை வெடி குண்டு வைத்துத் தாக்க்த் திட்டமிட்டிருந்தது சி ஐ ஏ இயக்குநருக்குத் தெரிந்திருந்தது. இருந்தும் அவர் அந்த வெடிகுண்டுத் தாக்குதலை  நடக்க விட்டார். அதைச் சாக்காக வைத்து, மிகக் கடுமையான எதிர் நடவடிக்கைகளை அக்கும்பலின் மீது செலுத்த நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவது அவர் திட்டம். இறந்த பல பயணிகளில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் இருந்தான். சிஐஏ இயக்குநருக்கு அப்பயங்கரவாதிகளை என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதி கொடுக்கப் பட்டது. அவருடைய திட்டங்கள் என்ன என்று சிஐஏ பதிவுகளில் காணக் கிடைக்கவில்லை என்றாலும், அவை கடலாக விரிந்து கிடக்கும் குற்றமேதுமில்லாத ஆவணங்களில் மிதந்து கொண்டுதான் இருந்தன. விசாரணைக் குழு ஒன்று அவற்றை எல்லாம் படித்தாலும் சான்றுகள் சூழ இருந்த ஏராளமாகச் சத்தம் எழுப்பும் தகவல்களில் மறைந்து போகும். ஆனால் சாறு பிழிந்து கொடுத்தால் அதே பதிவுகள் இயக்குநரின் குற்றத்தை எளிதில் வெளிக்காட்டி செய்தியாளர்களை நம்ப வைத்து விடும்.

அந்தக் குறிப்பேடுகளின் பட்டியலை நான் சிஐஏ இயக்குநருக்கு அனுப்பினேன். ஒரு குறிப்பை இணைத்தேன்- ”எனக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், நானும் உங்களுக்கு தொல்லை கொடுக்க மாட்டேன்.”

இந்தச் சிறு சம்பவத்தில் நான் ஒன்று தெரிந்து கொண்டேன். உலக நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்தால் எங்கு பார்த்தாலும் கள்ளத்தனத்தை, சூதுகளை என்னால் கண்டு பிடிக்க முடியும், ஆனால் எதுவும் ஈர்ப்புள்ளதாக இராது என்பதுதான் அது. நான் என் முந்தைய படிப்பையே தொடர்வேன்.

-o00o-

என் உடல் மீது கட்டுப்பாடு எனக்கு மிகக் கூடி உள்ளது. வேண்டுமானால், இப்போது என்னால் எரியும் தணல் மீது நடக்க முடியும், ஊசிகளை என் கைகளில் குத்துவதைத் தாங்க முடியும். ஆனாலும், கீழைதேசங்களின் தியானப் பயிற்சிகளில் எனக்கு உடல் கட்டுப்பாட்டு முயற்சிகளில் மட்டும்தான் ஈடுபாடு. தியானம் வழியே மெய்மறப்பதை விரும்பவில்லை, என் அறிவால் மூலக்கூறுகளைப் பற்றிய தகவல்களில் இருந்து உள்ளுறை மெய்யுருக்களை இனம் காணுவதற்கு அது ஈடாகாது.

-o00o-

ஒரு புதிய மொழியை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். மரபு மொழிகளின் எல்லைகளை நான் தாண்ட வேண்டிய நிலைக்கு வந்தாயிற்று. மேலே செல்லும் என் முயற்சிகளுக்கு அவை இப்போது முட்டுக் கட்டையாக இருக்கின்றன. எனக்குத் தேவையான கோட்பாடுகளை வெளிப்படுத்த அவற்றுக்குச் சக்தி இல்லை. அவற்றின் இயல்பான வெளியில் கூட அவை மிகவும் கூர்மையற்றும், நன்கு கையாளப்பட முடியாத வகையில் ஒழுங்கற்றும் இருக்கின்றன.

-o00o-

என் வேலையைச் சிறிது நிறுத்துகிறேன். அழகியல் குறித்து ஒரு குறியீட்டமைப்பை நான் உருவாக்குமுன், என்னால் கற்பனை செய்யப்பட முடிந்த எல்லா உணர்ச்சிகளுக்குமான சொற்களை நான் உருவாக்க வேண்டும்.

சாதாரண மனித உணர்ச்சிகளுக்கு அப்பாலுள்ள பலவகை உணர்ச்சிகளை நான் அறிந்துள்ளேன். அவர்களுடைய உணர்தலறிவு எத்தனை குறுகியது என்று எனக்குத் தெரிகிறது. முன்பொரு கட்டத்தில் நான் உணர்ந்த அன்பு, அதீதக் கவலை போன்ற உணர்வுகள் உண்மையானவை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவை சிறுபிள்ளைப் பிராயத்தில் நாம் கொள்ளும் உளைச்சல்கள், அசாதாரணப் பிணைப்புகள், மனத் தளர்ச்சிகளை ஒத்தவை, நான் இப்போது உணர்வனவற்றின் முன்னோடிகள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். என்னைப் பற்றி நான் புரிந்து கொண்டது கூடக் கூட, என் பேரார்வங்கள் பலமுகம் கொண்டவையாகின்றன. என் உணர்ச்சிகளெல்லாம் பல மடங்காகி, மட்டற்ற பெருக்காகி விட்டிருக்கின்றன. என் புனைவு நோக்கங்கள், முயற்சிகள் முடிவடைய வேண்டுமென்றால், இந்த உணர்ச்சிகளை முழுமையாக என்னால் விவரிக்க முடிய வேண்டும்.

என்னால் அடைய முடிகிற அளவுக்கு, என் உணர்ச்சிகள் இன்னும் பெருகி விடவில்லை, ஏனெனில் என்னைச் சுற்றிலும் இருப்பவர்களின் அறிவுத் திறன் என்ன அளவு உள்ளதோ அது என் எல்லைகளையும் குறுக்குகிறது, இல்லையா? இத்தனைக்கும் நானோ எவ்வளவு குறைவாக அம்மனிதரோடு பழக முடியுமோ அவ்வளவுதான் வைத்துக் கொள்கிறேன். மனிதரின் மூலக் கூறின் சாரமாக இருக்கிறதே, கன்ஃபூசியச் சொல்லான ‘ரென்’- இதையே போதாக் குறையாக மொழிபெயர்த்தால் இரக்கம் என்றாகும்- அதுதான் எனக்கு நினைவு வருகிறது- இதை நாம் மற்றவரோடு பழகினால்தானே வளர்த்துக் கொள்ள முடியும். தனிமைப்பட்டு விட்ட ஒருவனால் இதை வளர்த்துக் கொள்ள் முடியாது, வெளிப்படுத்தவும் முடியாது. அதுவும் கூட அதைப் போல எனக்குச் சாத்தியமாகும் பல குணங்களில் ஒன்றுதான். நானோ, என்னைச் சுற்றி மனிதர்கள், எல்லாப் புறமும் மனிதர்களோடு இருக்கிறேன், ஆனால் பழக ஒருவர் கூட இல்லை. இதனால் என் அறிவுத் திறன் உள்ள ஒரு மனிதன் எப்படிப்பட்டவனாக இருக்க முடியுமோ அதில் ஒரு சிறு பகுதி மனிதனாகத்தான் இருக்கிறேன்.

சுயப் பரிதாபமோ, அகந்தையோ கொண்டு ஏதும் சுயமயக்கத்தில் நான் இல்லை. என்னுடைய உள்ளத்து நிலையை மிகத் துல்லியமாக, புறவயப் பார்வையோடும், பிழையில்லாதும் எடை போட எனக்கு முடிகிறது. உணர்ச்சிகளில் எனக்கு எவை கிட்டும் நிலையில் உள்ள வசதிகள், எவை என்னிடம் இல்லை எனவும் எனக்குத் தெரிகிறது. அவற்றில் எவற்றுக்கு என்ன மதிப்பு கொடுத்திருக்கிறேன் என்பதும் எனக்குத் தெரியும். எனக்கேதும் மனக் குறைகள், வருத்தங்கள் இல்லை.

-o00o-

என் புதிய மொழிக்கு ஒரு வடிவு கிட்டி இருக்கிறது. அது உள்ளுறை பேருருக்களின் அடிப்படையில் அமைந்தது, சிந்திக்க மிக அற்புதமாகப் பயன்படக் கூடியது, ஆனால் எழுதுவதற்கோ, பேசவோ அத்தனை உபயோகமானது இல்லை. வரிசையாக எழுத்துகள் மூலம் அதை அச்சிடவோ எழுதவோ முடியாது. ஆனால் ஒரு பெரிய கருத்துருவாக எழுத முடியும். மொத்தமாக அதை உள்வாங்க வேண்டி இருக்கும். ஆயிரம் வார்த்தைகளில் சொல்லி விட முடியாததை, ஒரு படத்தை விடக் கூடுதலான யோசனை கொண்ட விதத்தில், அந்தக் கருத்துரு சொல்லி விடும். அதனுள் பொதிந்திருக்கும் தகவலுக்கு ஏற்ற அளவில் நுட்பங்கள் கொண்ட  ஒலிப்பற்ற பெரிய கருத்துருவாக (ideogram) அது இருக்கும். மொத்தப் பேரண்டத்தையும் விவரித்து விடக் கூடிய மாபெரும் கருத்துருவைக் கட்டும் கற்பனையில் என்னை மகிழ்வித்துக் கொள்கிறேன்.

இந்த மொழிக்கு அச்சுப்பக்கம் எல்லாம் மிகவும் அலங்கோலமானதாகவும் உயிரற்றும் இருக்கும். ஓரளவு பயனுள்ள ஊடகம் ஒரு விடியோ அல்லது கால ஓட்டத்துக்கு ஏற்ப வளர்ந்து பரிணமிக்கும் ஹோலொகராஃபிக் வடிவாக இருக்கும். இந்த மொழியைப் பேசுவது பற்றி நான் கருதவும் முடியாது, மனிதத் தொண்டையின் குறைந்த ஒலி வீச்சுக்கு அத்தனை ஒலிப்புகள் சாத்தியம் கூட இல்லை.

-o00o-

என் அறிவில் பல பண்டை மொழிகளிலிருந்தும், நவீன காலத்து மொழிகளில் இருந்தும் மோசமான கெட்ட வார்த்தைகள் புகைந்து சீறுகின்றன.  அவற்றுடைய மலினமான தன்மை மூலம் என்னை அவை சீண்டுகின்றன.  அவற்றுடைய சக்தியற்ற தன்மையே, என்னுடைய தற்போதைய சலிப்புகளை, வெறுப்புகளை மிகச் சரியாக வெளிப்படுத்தும் அளவு விஷம் கொண்ட வருணனைகளை என்னுடைய அபிமான மொழி கொண்டிருக்கும் என்பதை நினைவு படுத்துகிறது.

என் செயற்கை மொழியை என்னால் உருவாக்கி முடிக்க இயலவில்லை.  இந்த செயல் திட்டத்தின் பேரளவு என்னிடம் உள்ள கருவிகளின் சக்தியைத் தாண்டியது.  வாரங்களாக மிகக் குவிந்த கவனத்துடன் வேலை செய்ததெல்லாம் பயனற்று நிற்கின்றன.  ஒரு அடிப்படை மொழியைக் கட்டி இருக்கிறேன்.  அதை வரையறுக்கும் போதே அடுத்தடுத்த வடிவுகளில் மேலும் மேலும் நிறைவை நோக்கிச் செல்லும்படி அதை உருவாக்கினேன்.  அந்த மொழி என் இலக்காக உள்ள மொழியை நோக்கி என்னை இட்டுச் செல்லும் என்று நினைத்தேன்.  ஆனால் ஒவ்வொரு புது வடிவும் அதனுடைய இயலாமைகளை மேலும் தெளிவாக்கியதே தவிர நிறைவைக் காட்டவில்லை.  கடைசியில் தொடர்ந்த விரிபாதையில் பயணித்து தொடுவானெல்லையில் இருந்து அனைத்தையும் சேர்த்துக் குவித்துத் துவக்கத்துக்கு பளீரெனத் திரும்பும் இயக்கத்தைக் கேட்கும் ஒரு புனிதச் சின்னமாக ஆகிவிடும் ஆபத்தில் என் அபிமான மொழியை நிறுத்தி விட்டிருக்கிறேன்.   அதற்கு மொத்தத்தையும் சூனியத்தில் இருந்தே உருவாக்கி இருக்கலாம், அதற்கு என் இந்தத் திட்டம் சற்றும் மேலானதல்ல.

-o00o-

என் நான்காவது குப்பியை என்ன செய்வது?  அதை என் கவனத்தில் இருந்து விலக்க முடியவே இல்லை:  நான் சந்திக்கும் ஒவ்வொரு முட்டுக் கட்டையும், என் தற்போதைய தேக்க நிலையும் நான் இன்னும் ஏறிவிடக் கூடிய பெரும் உயரங்களை எனக்கு நினைவு படுத்துகின்றன.

கணிசமான ஆபத்துகள் அதில் இருக்கத்தான் செய்யும்.  இந்த ஊசிதான் ஒருவேளை மூளையைச் சேதப்படுத்துமோ அல்லது புத்தி பேதலிக்கச் செய்யுமோ என்னவோ. நரகத்தின் கவர்ச்சித் தூண்டிலோ?  இருந்தாலும் கவர்ந்து இழுக்கவே செய்கிறதே? அதை எதிர்க்க எனக்கு எந்தக் காரணமும் கிட்டவில்லை.

மருத்துவமனையிலோ, அல்லது என் அபார்ட்மெண்டில் என்னைக் கவனித்துக் கொள்ள யாராவது இருக்கையிலோ இந்த ஊசியைச் செலுத்திக் கொள்வது கொஞ்சமாவது பாதுகாப்பைத் தரும்.  ஆனால் இந்த ஊசி ஒன்று வெற்றி பெறும், இல்லையேல் குணப்படுத்த முடியாத அளவு பெரும் சேதத்தைக் கொணரும். எனவே நான் முன் பாதுகாப்பைக் கைவிடுகிறேன்.

மருந்துப் பொருள் விற்கும் ஒரு நிறுவனத்திடம் தேவையான உபகரணங்களை அனுப்பச் சொல்கிறேன்.  எனக்கு முதுகுத் தண்டில் ஊசி போட ஒரு கருவியை நானே கட்டி அமைக்கிறேன்.  முழு விளைவுகள் தெரியச் சில நாட்கள் கூட ஆகலாம், அதனால் என் படுக்கை அறையில் என்னை அடைத்துக் கொள்கிறேன்.  ஒரு வேளை என் எதிர்வினை பயங்கரமாக இருக்கலாம், அதனால் உடையக் கூடிய பொருட்களை என் படுக்கை அறையிலிருந்து அகற்றுகிறேன்.  படுக்கையில் சில கைப்பிணைப்புக்ளை சேர்த்துக் கட்டுகிறேன். என் அணடை வீட்டார் ஒருவேளை நான் பெரும் சத்தமெழுப்பி ஓலமிட்டால்,  அதை போதை மருந்துக்கு அடிமையானவனின் ஊளையிடல் என்று கருதிக் கொள்ள இடம் இருக்கும்.

நானே ஊசியைச் செலுத்திக் கொள்கிறேன்.  காத்திருக்கிறேன்.

-o00o-

என் மூளையில் பெருங்காட்டுத் தீ எரிகிறது.  என் தண்டுவடமும் முதுகுப் புறம் பற்றி எரிகிறார்போலக் காந்துகிறது.  என் தலைக்குள் ரத்தக்குழாய்கள் வெடித்தது போல் இருக்கிறது.  நான் குருடனாக, செவிடனாக,  எல்லா உணர்ச்சியுமிழந்த கட்டையாகிறேன்.

ஏதேதோ கனவுகளில் மிதக்கிறேன்.  அப்படி ஒரு அமானுஷ்யத் துல்லியத்துடன் அதை எல்லாம் பார்க்கிறேன்.  அசாதாரண எதிர்த் தொனிகளோடு காட்சிகளை உணர்கிறேனா, அவை எல்லாம் முற்றிலும் மாயாஜாலமாகத்தானிருக்க முடியும்.  சொல்லி முடியாத அதீதப் பயங்கரங்கள் என்னைச் சுற்றிச் சுழல்கின்றன.  உடல் மீதான வன்முறை அல்ல.  ஆனால் உள்ளத்தைக் கிழித்துச் சின்னாபின்னமாக்கும்,  குரூர வன்முறை.

மனதில் கொதிக்கும் உலையாய்த்  துன்பம்,  பீறிடும் உடலின்ப உச்சம்.  தாள முடியாப் பீதி,   பேதலிப்பில் கட்டுக்கடங்காத சிரிப்புப் பிரளயம்.

ஒரு சிறு கணம் புலன்கள் தெளிகின்றன.  நான் தரையில் கிடக்கிறேன்.  கைகள் தலைமுடியை இறுகப் பிடித்துள்ளன.  பிய்க்கப்பட்ட சில கொத்து முடிகள் என்னைச் சுற்றித் தரையில் கிடக்கின்ற்ன.  என் ஆடைகள் வியர்வையில் ஊறி தெப்பலாக உள்ளன.  என் நாக்கைக் கடித்துக் கொண்டிருக்கிறேன்.  கத்திக் கதறி என் தொண்டை எல்லாம் புண்ணாகி இருக்கிறது என ஊகிக்கிறேன்.  பெரும் வலிப்புகளால் என் உடலெங்கும் மோசமாகச் சிராய்த்துப் புண்ணாகி இருக்கிறது.  என் தலையில் பின்பக்கம் உள்ள வீக்கங்களை வைத்துப் பார்த்தால் தலையை மோதி உள்ளே பலமாக அடி கூட பட்டிருக்கும் போலிருக்கிறது.  ஆனால் என்னால் எதையும் உணர முடியவில்லை,  இதென்ன சில மணிகள் கழிந்த பின்னரா, அல்லது சில நிமிடங்கள்தானாயிற்றா?

உடனே என் பார்வையில் புகை அடர்கிறது,  பேரொலி திரும்புகிறது.

-o00o-

மாறுநிலைப் பருப்பொருள் (Critical Mass)

-o00o-

(தொடரும்..)

2 Replies to “புரிந்து கொள் – 3”

Comments are closed.