புத்திசாலியான முட்டாள்-II

(சென்ற இதழில் வெளியான இக்கட்டுரையின் முதல் பகுதி : புத்திசாலியான முட்டாள்-I)

அண்மையில் பார்த்த ஒரு படைப்புவாத (creationist)  நூலில் “விவிலியம் சொன்ன படைப்புவாதத்தை நம்பிய அறிவியலாளர்கள்” என ஒரு பெரிய பட்டியலை போட்டிருந்தார்கள். அதில் நியூட்டனையும் சேர்த்திருந்தார்கள். நியூட்டனைப் படைப்புவாதி எனச் சொல்வது கொஞ்சம் அதீதம்தான். ஏனெனில் அவரது காலம் விவிலிய தொன்மங்கள் வரலாறாகவே கருதப்பட்ட காலம். ஐரோப்பாவைச் சார்ந்த பல அறிவியலாளர்கள் அறிவியலே விவிலிய உண்மைக்குச் சான்று பகர்வதற்காகத்தான் இருக்கிறது என எண்ணிய காலகட்டம். எனவே நியூட்டனின் விவிலிய நிரூபண முயற்சிகளுக்கு ஒரு மெல்லிய தள்ளுபடி கொடுக்கலாம்தான். ஆனால் நியூட்டனின் விவிலிய நம்பிக்கையைப் பயன்படுத்தி, அவரை படைப்புவாதததுக்கு ஆதாரம் தரும் ஒரு அறிவியலாளராக,  மத அடிப்படைவாதிகள் முன்வைக்கும் போது அது மடத்தனமன்றி வேறென்ன?

யூரி கெல்லர்
யூரி கெல்லர்

1970களில் யூரி கெல்லர் ஒரு மகத்தான நிகழ்வாக அலையடித்தார். “மன சக்தியால்” அவர் கரண்டிகளை வளைத்தார். முத்திரையிடப்பட்ட உறைகளிலிருந்த சித்திரங்களை “ஞானப்பார்வையால்” கண்டறிந்து வரைந்தார். பிரிட்டனின் மிகச்சிறந்த அறிவியலாளர்கள் அவருடைய அதீத மன ஆற்றல்களுக்கு சான்று பகர்ந்தனர். குறிப்பாக ஜான் டெய்லர் என்கிற கணிதவியலாளர், J.B.ஹாஸ்டெட் (J.B.Hastead) என்கிற இயற்பியலாளர் ஆகியோர் மிகத் தீவிரமாக கெல்லரை ஆதரித்தனர். புகழ்பெற்ற நேச்சர் (Nature) எனும் அறிவியல் பத்திரிகையில் கெல்லரின் அதீத மன சக்திகள் குறித்த கட்டுரை வந்தது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சி மையம் கெல்லரின் சக்திகளை ஆராய்ச்சி செய்தது. இந்த அறிவியலாளர்களின் ஆராய்ச்சி முடிவுகளெல்லாமே கெல்லரின் அதீத மனசக்திக்கு ஆதரவாகவே அமைந்திருந்தன.

ஜேம்ஸ் ராண்டி என்கிற தொழில்முறை மாயாஜால நிபுணர் கெல்லரைப் போலவே கரண்டிகளை வளைக்கும் வரை. ஆனால் ராண்டி அந்த வித்தைக்கு அதீத மனசக்தி தேவையில்லை என்பதையும் தேர்ந்த கையசைவுகளும் பார்ப்பவர்களின் கவனத்தை சிதறடித்து அதனை செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்பதுமே அவசியம் என விளக்கிய போது அறிவியலாளர்களின் முகங்களில் ஈயாடவில்லை. உண்மையில் கெல்லரால் எப்படி அறிவியலாளர்களை ஏமாற்ற முடிந்தது என்பதல்ல அதிசயமான விஷயம். அறிவியலாளர்கள் எப்படி தங்களால் ஒரு அதீத மனநிகழ்வினை அடையாளம் கண்டு கொள்ள முடியுமெனத் தீர்மானித்தார்கள் என்பதுதான். ஏனெனில் அற்புத நிகழ்வு ஒன்றை ஒருவர் நடத்துகிறாரென்று சொல்லப்பட்டால், ஒரு அறிவியலாளன் தன்னியல்பாக, முதலில் அதனை ஏமாற்றாகத்தான் பார்க்க வேண்டும். அப்படி ஏமாற்று எனக் கருதுகிற பட்சத்தில் அதனை ஆராயத் தகுதி படைத்தவர் ஒரு அறிவியலாளர் அல்ல ஒரு தொழில்முறை மாயாஜால நிபுணர்தாம். இவ்விதத்தில் ஜான் டெய்லரை விட ஜேம்ஸ் ராண்டியே யூரி கெல்லரை ஆராய பொருத்தமானவர்.   எத்தன் கையை எத்தனே அறிவான், இல்லையா?

அல்லது நமது ஊர் எடுத்துக்காட்டாக சொன்னால் அறிவியலாளர் பகவானந்தத்தை விட சாயிபாபாவின் ‘அற்புத’ செயல்களை ஆராய பி.ஸி.சர்க்காரோ அல்லது ஆபிரகாம் கோவூரோ தான் தகுதியானவர்.

ஆனால் ஒருவர் தனது அறிவியல் துறை மேதமை அல்லது சாதனையை வைத்து, தமது நம்பிக்கைக்கு முட்டுக்கட்டை கொடுப்பது ஒரு தொடர் நிகழ்வாக நவீன மானுடப் பண்பாட்டில் நிகழ்கிறது. மேலும் மானுட மனது அதன் பொதுவான இயக்கத்தில், தனக்கு மிக அத்தியாவசியமான ஆராய்ச்சியைத் தவிர்த்து, பிற இயக்கங்களின் போது நம்பிக்கை என்பதையே  தேர்வு செய்கிறது. உதாரணமாகக் கீழே இருக்கும் அட்டைகளைப் பாருங்கள்.

ஒவ்வொரு அட்டையிலும் ஒரு பக்கம் எழுத்துக்களும் மறு பக்கம் எண்களும் உள்ளன.  இந்த நான்கு அட்டைகளிலும் ஒருபக்கம் ஆங்கில உயிர் எழுத்து (vowel) உண்டு என்று சொன்னால் அதன் மறுபக்கம் இரட்டை (even) எண்ணே இருக்கும் என்று ஒரு விதி காணப்படுகிறதா எனப் பார்க்க வேண்டும் என்று வைப்போம். இப்போது அந்த அட்டைகளில் எவற்றைப் புரட்டிப் பார்ப்பதன் மூலம் இது உண்மையா எனக் கண்டுபிடிக்கலாம்? [இதில் குறைந்த பட்ச அட்டைகளைப் புரட்டிப் பார்க்க வேண்டும் என்று ஒரு நிபந்தனை இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.]

இந்தக் கேள்வி கேட்கப்படும் போது பலர் A எனும் அட்டையையும் 8 எண் கொண்ட அட்டையையும் புரட்டிப் பார்க்க வேண்டும் என்று சொல்வதை உளவியலாளர்கள் காண்கின்றனர். ஆனால் இதில் எழுத்துள்ள அட்டைகளில் A உள்ள அட்டையை பார்க்க வேண்டும் என்பதுதான் சரி. எண்களில் ஐந்து இருக்கும் அட்டையைத்தான் புரட்டி அதன் பின்னால் vowel இருக்கிறதா அல்லது consonant இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். ஆனால் ஏன் பெரும்பாலானவர்கள் எட்டு எண் கொண்ட அட்டையை புரட்டி அதன் பின்னால் vowel இருக்கிறதா என பார்க்கிறார்கள்? அது ஏன் தவறு? முதலில் நமது விதியின் படி ஒரு பக்கம் vowel இருந்தால்தான் பின்னட்டையில் இரட்டை எண் இருக்கவேண்டுமே அல்லாது இரட்டை எண் கொண்ட அட்டையின் பின்னால் vowel இருக்க வேண்டுமென சொல்லவில்லை. அறிவியல் பூர்வமாக செயல்படும் போது ஒரு விஷயத்தை பொய்ப்பிக்க முடிகிறதா எனப் பார்க்க வேண்டும் (falsification). இந்த விதி பொய் என காட்ட எளிய வழி ஐந்துக்கு பின்னால் vowel இருக்கிறதா என பார்ப்பதுதான். அப்படி இருந்தால் போதும், இந்தவிதி பொய் ஆகிவிடும். அப்படி இல்லையென்றால் இந்த விதி பொய்யில்லை எனக் கருத வாய்ப்பு உண்டு.  ஆனால் மானுட மனமோ விதியை “உண்மையா” எனப் பார்க்கவே விரும்புகிறது. எனவே பொதுவாக விதியை சோதிக்க எட்டாம் எண் கொண்ட அட்டையைத் தவறுதலாக மக்கள் தேர்வு செய்கிறார்கள் .

சிறிது சிந்தித்தால் இக்கட்டுரைத் தொடரில் வருணிக்கப் பட்ட பலரும்,  ஆர்தர் கோனன் டாயில் முதல் ஜான் டெய்லர் வரை, இதே தவறைச் செய்திருப்பது தெரிய வரும்.

சாதாரண மக்களின் மனதில் மற்றொரு  விதமான இயக்கமும் இருக்கிறது- அது பொதுவாகவே சிந்திப்பதை முடிந்த அளவு சிக்கனப்படுத்துதல்.  உதாரணமாக ஒரு சிறு கணக்கு.

பம்பரமும் மிட்டாயும் சேர்ந்து பதினைந்து ரூபாய். இதில் பம்பரம் மிட்டாயை விட பத்துரூபாய் அதிகம். அப்போது பம்பரத்தின் விலை என்ன? மிட்டாயின் விலை என்ன? என்கிற கேள்வி கேட்கப்பட்டால் மிகப் பொதுவாக வரும் விடை பம்பரம் பத்து ரூபாய், மிட்டாய் ஐந்து ரூபாய் என்பதுதான்.

சில சமயங்களில் உயர்கணிதத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர்கள் கூட இந்த (தவறான) விடையைக் கூறக்கூடும். காரணம் இந்த சிந்தித்தலை சிக்கனப்படுத்தும் போக்குதான். எளியதாக இருப்பதால் இதில் சிறிது ஊக்கத்துடன் கவனித்து விடை தேட அனேகர் முயல்வதில்லை.  [சரியான விடைதான் என்ன?  கட்டுரை இறுதியில் உள்ளது, பாருங்கள். ]

இதன் நீட்சியாக பல விஷயங்களிலும் நாம் சிந்திக்கும் பொறுப்பைக் கைவிட்டு, அறிவியல் தெரிந்தவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு ஆமோதிப்பை அளித்துவிடுகிறோம். “எவ்ளோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் சொல்லுறாங்க அப்ப அதில உண்மை இருக்குமில்ல” – ஆனால் அத்தகையவர்களுக்கும், நம்பிக்கை  சார்ந்தே மெய்ப்பிக்கும் போக்கு-மேலே காட்டப்பட்ட சில விஷயங்களில் நடந்தது போல-இருக்கும் பட்சத்தில் நாம்  நம்மளவிலும் சிந்திக்க வேண்டிய பொறுப்பை அவர்களிடம் கொடுப்பது, நம்மை உண்மைக்கு புறம்பான பாதையில் நடத்திவிடும். இப்படித்தான் புத்திசாலிகளை நம்பி மடையர்களாகிவிடுவோம்.

புத்திசாலிகளை நம்பவே கூடாது என்பதல்ல இங்கு குறிப்பு.  ஒவ்வொருவரும் தம்மளவிலும் எவ்வளவு சிந்திக்க முடியுமோ அவ்வளவும் நமக்குத் தேவை என்பதே சுட்டப் படுகிறது.  நாம்  எவரையும் சோதிப்போம், மறுபடி மறுபடி கேள்வி கேட்டுப் புரிந்து கொள்வோம் என்பது பரவலான சமூக நிலையானால்,  பெரும் புத்திசாலிகளுக்கும் பொறுப்புணர்வு கூடும், அவர்களும் தம் முயற்சியைத் தீர்க்கமாக்குவர்.  பொதுச் சிந்தனைத் திறன் உயரும்.  எத்தர்கள் மலிவது குறையும்.   பொதுத் தளங்களில், அமைப்புகளில்,  நிறுவனங்களில் செயல் திறனும், பொறுப்புணர்வும் உயரும்.

இவ்வாறு ஏதோ காரணத்தால்  அடிப்படையே இல்லாது கொள்ளும் நம்பிக்கை, சிந்திக்கும் திறனை பெரும் பீடத்திடம் அடகு வைத்தல் என்று மக்கள் மேற்கொள்ளும் சில தேர்வுகள், ஒரு சமுதாயத்தில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திவிடலாம். காலனியம் திணித்த இனவாத வரலாற்றை தம் அனுபவ அறிவுக்கு அனேகமாகப் புறம்பானதாக இருப்பதாகத் தெரிந்த போதும்,  ஆசிய-ஆப்பிரிக்க சமுதாயங்கள் பல ஏற்றுக்கொண்டமை, அதன் அடிப்படையில் தம்மிடையே நடக்கும் அரசியல் கதையாடல்களை உருவாக்கியது, எல்லாம் பின்னர் பெரும் அழிவுகளுக்கும், தேவை அற்ற உள்நாட்டுப் போர்களுக்கும் வழிவகுத்தது ஆகிய நிகழ்ச்சிகள் இதற்கான ஒரு உதாரணம். சோவியத் நாட்டில் போலி-அறிவியலாளர்கள் நடத்திய கூத்தடிப்புகள்  மற்றொரு உதாரணம். அதுவும் பல திறம்பட்ட அறிவியலாளர்களின் சோக மரணங்களுக்கும்,  பெரும் பஞ்சம், பட்டினி, திரளான மக்களின் சாவு என்று பல பெருநாசங்களுக்கு வழி வகுத்தது. [1]

Srinivasa Ramanujanஇனி ஸ்ரீநிவாஸ ராமானுஜத்துக்கு வரலாம். இத்தகைய கனவுக்காட்சிகளுக்கு அறிவியல் வரலாற்றில் ஒரு பாரம்பரியமே இருக்கிறது. வேதியியல் துறையில் இரண்டு கனவுகள் பெரும் ஐதீகமாகவே இன்று விளங்குகின்றன. ஒன்று பென்ஸீனின் மூலக்கூறு வடிவத்தை வட்டக் கோர்வையாக கெகுலே கண்டடைந்தது ஒரு பாம்பு தனது வாலை தலையால் பிடித்தபடி சுழன்ற ஒரு கனவின் மூலமாக என்றும், வேதியியலின் ஆதாரமாக விளங்கும் மெண்டலீஃப் அட்டவணையை அதன் முழுமையான வடிவத்தில் மெண்டலீஃப் ஒரு கனவில் கண்டார் என்பதாகவும், உயர்நிலைப்பள்ளியிலும், இளங்கலை பட்டப்படிப்பிலும் ஆசிரியர்கள் மகா சுவாரசியத்துடன் விளக்குவார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே கனவுகளின் பங்கு மிகைப்படுத்தப்பட்டதாக இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், ஆனால் ஏற்கனவே உழைப்பாலும் அறிவாலும் கண்டடைந்த ஒரு புள்ளியிலிருந்து ஒரு தாவலை (அந்த தாவலின் அளவுகள் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும்) நிகழ்த்தக் கனவுகள் பயன்பட்டன என்பது உண்மை என்றே தோன்றுகிறது. ராமானுஜம் விஷயத்திலும் இதுவே உண்மையாக இருக்க வேண்டும். ராமானுஜத்தின் இயல்பான கணிதத் தேடல் அறிவு உழைப்பு இத்துடன் உள்ளுணர்வின் வெளிப்பாடு அவரது கலாச்சாரச் சூழலில் நாமகிரித்தாயார் வடிவில் தோன்றியது எனலாம். மேலும் அவரது சமுதாயச் சூழலில் இருந்த தேக்கநிலையில், மக்களிடம் பரவலாக இருந்த தாழ்வுணர்ச்சியில் அவரது ஆளுமை அழிந்து விடாமல் காப்பாற்றும் ஒரு உளவியல் உக்தியாக நாமகிரித்தாயாரை அவரது நனவிலி பயன்படுத்தியிருக்கலாம். எதுவானாலும் ராமானுஜம் தமது கணிதப் புலமையை நாமகிரித்தாயாரின் யந்திரத்தில் பிரபஞ்ச பரிமாணங்களைத் தேடும் அபத்தத்தில் செலவிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

[பம்பரம், மிட்டாய் கணக்குக்கு விடை:  பம்பரம் விலை ரூ.12.50. மிட்டாய் விலை?  அதுதான் உங்களுக்கு இப்போது தெரியுமே.  ]

பின்குறிப்பு:

[1] சொல்வனத்தின் இந்த இதழில், வேளாண்மை பற்றிய கட்டுரையில் சோவியத் கால ரஷ்யாவில் பேரறிஞரான ஒரு அறிவியலாளர் எப்படி போலி அறிவியலாளரின் சூதுக்கு இரையாகி சைபீரியச் சிறையில் பட்டினியில் மாண்டார் என்பது சொல்லப் பட்டிருக்கிறது.

________________________________________________________

உதவிய நூல்கள்

1.Catherine Wynne, The colonial Conan Doyle: British Imperialism, Irish Nationalism, and the Gothic, Greenwood Publishing Group, 2002
2. Walter Gratzer, The Undergrowth of Science: Delusion, Self-Deception, and Human Frailty, Oxford University Press, 2000
3. Walter Sinnott-Armstrong, Robert J. Fogelin, Understanding Arguments: An Introduction to Informal Logic, Cengage Learning, 2009
4. Keith E. Stanovich, Rational and Irrational Thought: The Thinking That IQ Tests Miss, Scientific American-Mind, Nov-Dec 2009.

One Reply to “புத்திசாலியான முட்டாள்-II”

Comments are closed.