“நாம் உடனே கிளம்ப வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்.”
“என்ன ஆயிற்று? அந்த பாலத்தில் ஏதும் பிரச்சனையா என்ன?”
”நகரின் பல இடங்களில் குண்டு வெடித்துள்ளது ஹரி”
”…”
“ஏழு இடங்களில்…”
”ம். கிளம்பு. சீக்கிரம். நாம் வெகு தூரம் பயணிக்க வேண்டும்”
“ஆம். அலுவல் எல்லாம் நாளை பார்த்துக் கொள்ளலாம். சீக்கிரம் புறப்படுங்கள்”, எங்கள் மேலாளர்.
என் அலுவலகம் இருக்கும் பாந்தராவிலிருந்து வாஷி சென்றடைய குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது தேவைப்படும். பம்பாயிலிருந்து மும்பை செல்லும் தூரம். வெகு தூரம். பொதுவாக அலுவலகம் சென்று வர நாங்கள் ரயிலில் பயணிப்பதில்லை. மனித மிக்ஸியின் கோர நசுக்கலில் சிக்கிச் சுழல யார் தான் விரும்புவார்? பேருந்து மட்டுமே. பேருந்தில் பயணிப்பதே வாழ்க்கை என்றும், உட்கார ஒரு இருக்கையை கைப்பற்றவதே வாழ்க்கையின் லட்சியம் என்று ஆகிவிட்டிருந்த காலம்.
’குண்டு வெடித்தது ரயிலில் தானே, பேருந்திற்க்கு என்ன வந்தது?’ சூழலின் தீவிரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும், நண்பர்களின் அவசரத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டு விரல் அழுத்தலில் கணிணியை பூட்டிவிட்டு, லிப்டை நோக்கி விரைந்தோம். லிப்டில் இருந்த அனைவரின் முகத்திலும் பீதி. ஒருவரும் பேசவில்லை. அலுவலகத்தை விட்டு வெளியேறி முக்கிய சாலைக்கு வந்தோம். பரபரப்பின் மொத்த வடிவமும் நகரத்தின் ஒவ்வொரு அணுவிலும் குடிபுகுந்ததை சட்டென என்னால் உணர முடிந்தது. நகரமே தலை தெறிக்க ஓடியது. தங்களை குடும்பங்களை சுமந்து சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளும், மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் பேருந்துகளும், டாக்ஸிகளுமாக நகரம் மொத்தமும் ஜுர வேகத்தில் இயங்கியது.
வாஷிக்கான பேருந்தை எதிர்நோக்கி நின்றிருந்தோம். வழக்கத்தைவிட குறைந்த இடைவெளியில் வாஷி செல்லும் பல பேருந்துகளை காண முடிந்தது. ஆனால் எதிலும் இடமில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்தது ரயிலில். மும்பை புறநகர் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பேருந்துகளையும், பிற வாகனங்கள் மூலமாகவே அந்நகரம் இயங்கியது. மொத்த நகரமும் பயத்தின் குறுகிய சந்தினுள் சிக்கி வெளியேற எத்தனித்து கொண்டிருந்தது.
-o00o-
டேன் ரீட்(Dan Reed) குறித்துப் பேச வேண்டியது அவசியம். மத அடிப்படைவாத பயங்கரவாதம் எந்த அளவிற்கு உலக நடப்புகளில் நீக்கமற படிந்துவிட்டதோ, அதே அளவு தாக்கத்தை தன் ஆவணப்படங்கள் மூலமாக நிகழ்த்தி வருபவர். இவர் இதுவரை இரண்டு ஆவணப்படங்களை தொகுத்துள்ளார். ஒன்று, “மாஸ்கோவில் பயங்கரவாதம்”(Terror in Moscow). 2003-ஆம் ஆண்டு மாஸ்கோ நகர நாடக அரங்கில் புகுந்து, செசெனிய விடுதலைக்காகப் போராடுவதாகச் சொல்லும் மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள், நாடக அரங்கில் கூடியிருந்த 800-க்கும் அதிகமான பார்வையாளர்களைப் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்ட நிகழ்வை பற்றியது. இரண்டாவது, ”மும்பையில் பயங்கரவாதம்”(Terror in Mumbai). 26/11 என்று குறிப்பிடப்படும், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு நோக்கத்தால் உந்தப்படும் மத அடிப்படைவாதம் இந்தியா மீது தொடுத்த குறும்போர் குறித்தது. சென்ற வாரத்தில் இந்த இரண்டு ஆவணப்படங்களையும் பார்க்க நேர்ந்தது.
800-க்கும் அதிகமான பார்வையாளர்கள் கூடியிருக்கும் மாஸ்கோவின் ஒரு நாடக அரங்கில் ”Nord-Ost” எனும் நாடகம் நடைபெற்றது. நாடகம் துவங்கிய சில நிமிடங்களில் மேடைகளில் முகத்தை மறைத்துபடி தங்கள் துப்பாக்கிகளுடன் தோன்றியவர்களையும் நாடகத்தின் கதாபாத்திரங்களாக எண்ணினர் குழுமியிருந்த பார்வையாளர்கள் அனைவரும். தங்கள் பிணைகைதிகளாக சிக்கிக் கொண்டதையும், தங்களுக்கு நேரப்போகும் பயங்கரத்தையும் அங்கு இருந்த பலரும் வெகு நேரம் கழித்தே உணர்ந்தனர். “மாஸ்கோவில் பயங்கரவாதம்”[1] எனும் ஆவணப்படத்தில் பயங்கரவாதிகள் குறித்து விவரிக்கப்படுகிறது. குறிப்பாக பயங்கரவாதக் குழுவில் இருந்த பெண்களின் நிலை குறித்து பேசப்படும் இடம் முக்கியமானது. அந்த குழுவின் ஆண்கள் எந்த நிலையிலும் தப்பி செல்லக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. ஆண்களின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்பட வேண்டும். அக்குழுத் தலைவன் ஆணைக்காக அவர்கள் உடலில் பிணைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் எந்நேரமும் வெடித்து பிற மனிதர்களையும், அவர்களோடே சேர்த்துச் சிதைக்க தயாராகக் காத்திருக்கின்றன. இரண்டு தினங்களாகத் தொடரும் இந்த பிணை நாடகம், ரஷ்ய ராணுவத்தின் திடீர் தாக்குதலால் முடிவிற்க்கு வருகிறது. ஆனால் அரங்கினுள் செலுத்தப்பட்ட ரசாயன வாயுவால் தீவிரவாதிகள் உட்பட 129 பிணையாளிகளும் இறக்கின்றனர். பிணைக் கைதியாகச் சிக்கி பின் விடுதலையான ஒரு பெண் சொல்கிறாள், “அந்த குழுவின் ஒவ்வொரு பெண்ணும் யாரோ ஒரு இறந்த செசனியனின் விதவை. அவர்கள் யாரும் தங்கள் உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்யவில்லை. அவர்கள் துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டாவும் வெளியேறவில்லை. ஆனாலும் அவர்கள் பல ரஷ்யப் பெண்களை விதவைகளாக்கிவிட்டனர். அவர்கள் எண்ணம் நிறைவேறிவிட்டது”.
“மும்பையில் பயங்கரவாதம்”[2] எனும் ஆவணப்படமும் முக்கியமானது. லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பத்து பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான மும்பை நகரத்தின் பீதியையும், சோகத்தையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது இந்த ஆவணப்படம். தாக்குதல் நடைபெற்ற இடங்களில் இருந்த சுற்று முட்டத் தொலைக்காட்சிக் காமெராக்களால் (CCTV) பதிவு செய்யப்பட்ட காட்சிகள், இந்நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்களின் செவ்வி, பயங்கரவாதிகளுக்கும் அவர்களை வழிநடத்தியவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் இவற்றின் மூலமாக இக்கொடூரத்தின் அனைத்து பரிமாணங்களையும் நம் கண்முன் விரிக்கிறது.
”ஹோட்டல் அறைகளில் உள்ள பொருள்களை தீயிட்டு கொளுத்துங்கள். மக்கள் பீதியடைவார்கள்”. ஆணை கேட்கிறது.
எரிக்கிறார்கள்.
“வெடிகுண்டுகளை உபயோகிப்பதில் என்ன சிரமம் இருந்துவிட போகிறது? அந்த கொக்கியை சாதாரணமாக இழுத்து தூர எறிந்து விடுங்கள். அவ்வளவுதான்”.
செய்கிறார்கள்.
“ஒரு யூதனைக் கொல்வது 50 யூதரல்லாதோரைக் கொல்வதற்கு சமம்”.
கொல்கிறார்கள்.
”மதத்தால் விதிக்கப்பட்ட பணி” என்றும், “எதிரிகளின் மனதில் பயத்தை விதைத்து, அளவிலா இன்பங்களை அளிக்கும் சொர்க்கத்திற்கு”ச் செல்லலாம் எனும் போதனைகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் இவர்கள், ஒரு யூதத் தம்பதியை தங்கள் தலைவனின் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்து, பின் அவர்களை சுட்டு கொல்கின்றனர். இச்செயலுக்காக அவர்களை பாராட்டும் தலைவனின் வார்த்தைகளை இறைவனுக்கு நன்றி கூறி ஏற்றுக் கொள்கின்றனர்.
இந்த இரண்டு படங்களும், காலம் மற்றும் இடம் தவிர்த்து, பல விஷயங்களில் ஒத்துப் போகின்றன. நிகழ்வின் சூழலை ரத்தமும் சதையுமாக பார்வையாளர் முன் விரிக்கின்றன. பயங்கரவாதிகளின் மனநிலையையும், அவர்களால் பாதிக்கப்படும் சாதாரணனின் மனநிலையையும் ஒரு சேரக் காட்டியவாறே இவை பயணிக்கின்றன. மனிதத்திற்க்கும் கொடூரத்திற்க்கும் இடையிலான ஏதோ ஒரு புள்ளியில் நின்று மெளனமாக வேடிக்கை பார்க்கின்றன. தான் பார்த்ததை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்கின்றன. மக்களுக்கு எந்த செய்தியையும் தனியே உருவாக்கி அளிக்கும் நோக்கம் இவற்றிற்கு இல்லை. உள்ளது உள்ளபடி. அவ்வளவே. ஆனால் இந்த பதிவுகள் பல நிதர்சனங்களை நமக்கு உணர்த்துகின்றன. வெகுஜன ஊடகங்களால் வழங்க முடியாத தகவல்களையும், அச்சூழலின் நெருக்கத்தையும் நமக்கு அளிக்கின்றன. அதன் தன்னடக்கத்தாலும், அது தெரிவிக்கும் தகவல்கள் வழி ந்மக்குக் கிட்டும் அறிதலாலும், டேன் ரீடின் இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.
-o00o-
26/11 எனக் குறிப்பிடப்படும் அந்த பயங்கரவாதப் போர் இந்தியாவின் மீது நிகழ்த்தப்பட்டு ஓராண்டு முடியும் இத்தருணத்தில் உலகளவிலும், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அந்நிகழ்வின் பாதிப்பு குறித்து பேச வேண்டியது அவசியம். இந்தத் தாக்குதல் இந்திய சமூகத்தின் தனி ஒரு மனிதனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பையும் அசைத்துப் பார்த்திருக்கிறது. நமது அரசு அமைப்புகளின் தடித்தனத்தையும், தவறுகளையும் வெளிக்காட்டியிருக்கிறது. கூடவே நம் சமூகத்து குறைபாடுகளையும்.
முதலில் இந்திய உளவுத்துறையிடம் தாக்குதல் குறித்த எத்தகைய தகவலும் இல்லை எனும் வாதமே தாக்குதலை தடுக்க முடியாமல் போனதன் காரணமாக கூறப்பட்டது. ஆனால், தாக்குதலைத் தொடர்ந்த மாதங்களில் இந்திய அன்னியப் பிரதேச உளவுத்துறையான ரா-வின்(RAW) முன்னாள் இயக்குநர் ஒருவர் வெளியிட்ட தகவல்கள் இந்த கூற்றை முற்றிலும் பொய்யென வெளிக்காட்டியன. இந்தியா மோசமான ஒரு தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய சாத்தியங்களை உளவுத்துறை அறிந்திருந்தது என்றும், அத்தகவல்களே இந்த பயங்கரவாத தாக்குதலை தடுக்கப் போதுமானதாக இருந்தன என்று கூறுகிறார். அவர் கூற்றின்படி, செப்டம்பர் மாத மத்தியில், பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா-வின் பல்வேறு பயங்கரவாதிகளிடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் ரா-வால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த உரையாடல்களில் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய இடங்களையும், இந்தியாவிற்க்கு நுழைய அவர்கள் வகுத்த திட்டங்களையும் அறிந்து கொள்ளப் போதுமான தகவல்கள் இருந்ததாக அவர் கூறுகிறார். மேலும், நவம்பர் 19-ஆம் தேதி உளவுத்துறையால் பதிவுசெய்யப்பட்ட ஒரு உரையாடலில், பயங்கரவாதிகள் இந்தியாவிற்க்கு இரவு 9 மணியிலிருந்து 11 மணிக்குள் நுழையத் திட்டமிட்டிருப்பதையும் அறிய முடிந்தது என்றும் கூறுகிறார். பயங்கரவாதிகள் கடல் மூலமாக நுழையும் திட்டத்தையும் அறிந்து, இந்திய கப்பல் ராணுவத்தின் ஒரு படகு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கிறார். இந்த கூற்றுகளை எல்லாம் இந்திய அரசாங்கம் மறுத்தது. தாக்குதலுக்குப் பின்தொடர்ந்த விசாரணைகளில் குற்றவாளிகள் அனைவரும் கண்டறியப் பட்டுவிட்டதாகவும் அறிவித்தது. ஆனால், அமெரிக்க பாதுகாப்பு (எஃப்.பி.ஐ) நிறுவனத்தின் விசாரணைகள் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட டேவிட் ஹெட்லி எனப்படும் தாவூத் சய்யத் கிலானி(Daood Sayed Gilani) மற்றும் தஹாவுர் ஹுசைன் ராணா(Tahawwur Hussain Rana) ஆகிய இருவரைக் குறித்த தகவலைச் சமீபத்தில் வெளியிட்டது. இந்திய அரசாங்கத்திற்க்கு மேலும் தர்மசங்கடத்தை அளிப்பவையாக இவை உள்ளன.
1962-ன் சீனப்போர் துவங்கி, 1999-ன் கார்கில் வரை இந்திய உளவுத்துறையின் செயல்பாடுகள் மிகவும் கவலைக்குறியதாக இருந்து வந்திருக்கின்றன. பல சமயங்களில் இந்திய உளவுத்துறையின் முற்றிலும் முடங்கிய செயலின்மை அப்பட்டமாக வெளிபட்டிருக்கிறது. ஆனால், எந்தக் காலகட்டத்திலும், எந்த அரசாங்கத்தாலும், இந்திய உளவுத்துறையின் இக்குறைபாடுகளை நீக்கப் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை. அதற்கான விலையை தேசம் பல்லாயிரக் கணக்கான மக்களின் ரத்தத்தில் வடிக்கிறது. மதப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பல நாடுகளும் (அமெரிக்கா/ஸ்பெயின்/இந்தோநேசியா/பிரிட்டன்) தாங்கள் எதிர்கொண்ட மோசமான தாக்குதல்களைத் தொடர்ந்து, சுதந்திரமான, விரிவான ஆய்வுகளை நடத்தி, தமது பாதுகாப்பு நிறுவனங்களின் குறைபாடுகளைக் கண்டறிந்து, தம்மைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. மேற்கொண்டு எந்தவித தாக்குதலுக்கும் ஆளாகாமல் தன்னை தற்காத்து கொண்டு வருகின்றன. ஆனால் பயங்கரவாதத்தின் கோரமான முகத்தை பலமுறை தரிசித்த இந்திய அரசோ, அதன் நிறுவனங்களோ, தமக்குள்ளேயோ, பொது அரங்கிலோ, இதுவரை எந்த வெளிப்படையான சுய-விமர்சனத்திற்க்கும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, தம் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள முயலவில்லை. மகாராஷ்டர காவல் துறையின் செயல்பாடுகளை ஆராய்ந்த ராம் பிரதான் அறிக்கையும் இன்னும் மக்களை சென்றடையவில்லை.
26/11 நிகழ்வை தொடர்ந்து, இந்திய அரசாங்கமும், மகாராஷ்டர அரசாங்கமும் இணைந்து ஒரு கூட்டு விசாரணையின் மூலம் தங்கள் அமைப்பின் செயல்பாடுகளை மீள்-நோக்க முயன்றிருக்க வேண்டும். ஆனால், இக்கட்டுரை எழுதப்படும் இந்த தருணம் வரை, அத்தகைய எந்த ஒரு முயற்சியும் மேற் கொள்ளப் படவில்லை என்பது மிகவும் வருத்தத்துடன் சொல்லப் படவேண்டி இருக்கிறது.
-o00o-
26/11 நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பி தங்கள் அலைவரிசைகளின் டி.ஆர்.பி தரவரிசையை அதிகரித்துக் கொண்ட சர்தேசாய்களும், பர்கா தத்களும், அடுத்த சில தினங்களிலேயே, மும்பை பழைய நிலைமைக்கு மீண்டு விட்டதாகவும், இது மும்பைவாசிகளின் அச்சமற்ற தன்மையை காட்டுவதாகவும் பிதற்றியதை பார்த்து என்னால் சிரிக்க மட்டுமே முடிந்தது.
2006-ன் தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்த அடுத்த நாள் எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அனைத்து பேருந்திலும் மக்கள் கூட்டம். பேருந்தில் நுழைந்து தங்களுக்கான இருக்கைகளை கைப்பற்றியவுடன், அருகிலிருக்கும் பயணியிடம் வழக்கமாக நடைபெறும் சம்பிரதாய நல விசாரிப்புகள் கூட அன்று இருக்கவில்லை. அனைவரின் முகத்திலும் கவலை மட்டுமே குடிகொண்டிருந்தது. இந்த மக்கள் கூட்டம் தங்கள் அச்சத்தை துறந்து தங்கள் அன்றைய தினத்தை துவங்கவில்லை. மாறாக, வேறு வழியின்றி, இந்த கொடூரங்களையும் ஏற்றுக் கொள்ளப் பழகியிருந்தனர் என்பதே உண்மை.
ஒரு சமூகத்தின் எந்த ஒரு பெரும் வீழ்ச்சியிலும் அப்பட்டமாக பாதிக்க படக்கூடியது எந்த நிர்வாக அமைப்பும், அதன் நிர்வாகிகளும் அல்ல. ஒரு பெரு வீழ்ச்சியை தொடர்ந்து, அவ் வீழ்ச்சியின் காரணகர்த்தாக்களுக்கு தங்களின் எண்ணம் நிறைவேறும் மகிழ்ச்சியும், அடுத்த பெரு வீழ்ச்சிக்கான திட்டத்தை தயாரிக்கும் மனோவலுவும் கிட்டும். பாதிக்கப்பட்ட சமூகத்தின் நிர்வாக அமைப்பு, தன் எதிர் அமைப்புடனான சமரசத்தை எப்படியேனும் அடைந்து விடுகின்றன, அன்றியும் தம் இருப்பு மறுபடி நிலைக்கு வந்ததைக் குறித்து ஆசுவாசம் அடைந்து பழைய மெத்தனத்திற்கும், தடித்தனத்திற்கும் திரும்புகின்றன. தற்காலிகமாக மக்களைப் பொங்கி எழாமல் தடுக்கப் பொய்களை அள்ளி வீசுகின்றன. ஏதோ கடும் நடவடிக்கைகள் எடுத்து ஆபத்தை நிரந்தரமாகத் தடுக்கப் போவதாக நாட்கம் ஆடுகின்றன. ஆபத்து, பெரும் நஷ்டம் என்று எல்லாம் அலறி, அதே நேரம் நம் காவலர்களின் இருப்பிடங்களை அன்னியக் கொலைகாரர்களுக்குக் காட்டிக் கொடுக்கிறோம் என்ற அடிப்படை அறிவோ, பயமோ, பொறுப்புணர்வோ இல்லாது பரபரப்பை விற்றுக் காசு தேடிய சர்தேசாய்களும், பர்கா தத்துகளும் இந்த அரசின் கேவலமான செயல் முறைகளுக்கு ஜால்ரா வாசித்து, மேலும் இந்திய பாதுகாப்பு முயற்சிகளை முடக்கி வைக்கும் அவல நடவடிக்கைகளில் கவனமாக இறங்குகின்றனர்.
ஆனால் இச்சமூகத்தின் மக்கள் மட்டும் தோற்றபடியே இருக்கின்றனர். வரலாற்றின் பக்கங்களில் நாம் தரிசிக்கும் கொடூரமான உண்மை இது. ஒரு வருடத்து முந்தைய 26/11 எனும் இந்நிகழ்வு ஒரு தனிமனிதனிடம் மிகப்பெரும் அச்சத்தையும், தன் நிகழ்கால இருப்பு மற்றும் எதிர்காலம் குறித்த பெரும் சந்தேகத்தையும் பீதியையும் உருவாக்கியிருக்கிறது. நாடெங்கிலும் இந்திய தேசம் என்ற அடையாளத்துக்கும் சரி, அதன் குடிமக்கள் என்ற தமக்கும் பேராபத்து சூழ்ந்திருக்கிறது, இந்த ஆபத்தை ஒழிக்கவோ, விலக்கவோ வேண்டிய செயல்திறமற்ற மக்களாகவும், நாடாகவும் ஆகிப் போனோம் என்ற கிலேசம் பரவலாகித்தான் இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் மீண்டும் மும்பை சென்றிருந்தேன். மும்பையின் முக்கியமான சில இடங்களையும், அரபிக் கடலில் படகுப் பயணத்தையும் அனுபவத்துவிட்டு, “இந்தியாவின் நுழைவாயிலில்” நின்று தாஜ் மற்றும் டிரைடண்ட் கட்டிடங்களை பார்த்தவாறு நின்றிருந்தேன். அருகில் இருந்த ஒருவர் சொன்னார்,
“இப்ப நினைச்சாலும் மனசு பதறது”.
-o00o-
குறிப்புகள்
1. “Terror in Moscow” ஆவணப்படத்தை இந்த இணைப்பில் உள்ள Torrent-ஐ பயன்படுத்தி தரவிறக்கி கொள்ளலாம்
2. “Terror in Mumbai” ஆவணப்படத்தை இந்த இணைப்பில் பார்க்க முடியும். இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்ள இந்த Torrent-ஐ உபயோகிக்கலாம்.