பதிமூன்றாம் எண்ணும், உற்சாக நம்பிக்கைகளும்

இது சொல்வனத்தின் பதிமூன்றாவது இதழ். ஆசிரியர் குழுவினர் எத்தனை பதற்றத்தோடு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் எண் 13 உலகின் பல பகுதிகளிலும் பதற்றத்தோடு அணுகப்படும் ஒன்று. பெரும் துரதிர்ஷ்டம் தருவதாகவும், ஆபத்தானதாகவும் கருதப்படுவது. பல அமெரிக்கக் கட்டடங்களில் 12-ஆம் மாடியை அடுத்த தளம் 12A என்றே பெயரிடப்படும். விருந்துகளில் 13 பேர் அமர்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதப்படுகிறது. அப்படி தவறிப்போய் யாராவது வராமல் போய் 13 பேர் மட்டுமே விருந்தில் கலந்துகொள்ளும்படி நேரிட்டால், உடனடியாக ஒரு பதினான்காவது ஆளைக் கொண்டு வருவதற்காகவே இத்தாலியில் ஒரு நிறுவனம் கூட இருக்கிறது.

12 - 12A - 14

அதைப்போலவே 13-ஆம் தேதியும் துரதிர்ஷ்டமான ஒன்றாகக் கருதப்படுகிறது. 13-ஆம் தேதியன்று மேற்குலகில் திருமணங்கள் பெரும்பாலும் நடைபெறாது. (ஆம், ஆப்பிரிக்கர்களையும், ஆசியர்களையும் மூடப்பழக்கவழக்கங்கள் நிறைந்த முட்டாள்களாக மட்டுமே சித்தரிக்கும் அதே மேற்குலகினர்தான் இவர்கள்). அதிலும் வெள்ளிக்கிழமையன்று 13-ஆம் தேதியாக இருந்துவிட்டால் அதைவிட பயமுறுத்தும் காம்பினேஷன் வேறெதுவும் தேவையேயில்லை. பல தொழிலதிபர்களும் அன்றைக்கு எதிலும் முதலீடு செய்யத் தயங்குவதால் வெள்ளிக்கிழமை 13-ஆம் தேதி உலகின் பல பகுதிகளிலும் பொருளாதாரச் சரிவு ஏற்படுகிறது. ஹென்றி ஃபோர்ட் கூட வெள்ளிக்கிழமை 13-ஆம் தேதியைப் புறக்கணித்தவர்தான்.

இப்படிப் பதிமூன்று என்ற எண் மீதான பயம் எப்படி உருவானது என்பதற்கான திட்டவட்டமான காரணம் எதுவும் கிடைக்கவில்லை. பல புராணங்களும், நம்பிக்கைகளும் காரணமாகக் காட்டப்படுகின்றன. ஆனாலும் இயேசு கிறிஸ்துவின் கடைசி விருந்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை பதிமூன்று என்பதால் அது துரதிர்ஷ்டவசமாகக் கருதப்படுகிறது என்பது பிரபலமான ஒரு காரணம். அதைப்போலவே இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாள் வெள்ளிக்கிழமை என்பதால் அதன் மீதும் ஒரு பயம் இருக்கிறது. இது இரண்டும் சேர்ந்து வரும் நாள் துரதிர்ஷ்டவசமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் மீதொரு இனம் புரியாத அச்சம் இருக்கிறது. காஃபி, நிச்சயதார்த்ததுக்கு வைரம் என உலகெங்கும் மேற்கின் காலனிய நாகரிகம் விதைத்த பழக்கங்கள் போன்று இந்த அச்சமும் இன்று உலகெங்கும் பரவியிருக்கிறது.

பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளைப்போன்றே விளையாட்டிலும் இந்த ‘நம்பிக்கைகளின்’ ஆதிக்கம் மிக அதிகளவில் இருக்கின்றன. 1976-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை எந்த ஃபார்முலா-1 காருக்கும் 13-ஆம் எண் வழங்கப்படவில்லை. என்னுடைய சென்ற கட்டுரையில் கிரிக்கெட் விளையாட்டில் 111 என்ற எண் மீதான பயத்தைக் குறித்துப் பார்த்தோம். அதைப்போலவே 13-ஆம் எண் மீதும் ஒரு பெரிய பயம் வீரர்களுக்கு உண்டு. அதனாலேயே 13 ஆம் நம்பர் கொண்ட பனியனை அணிந்து கொள்ள பல வீரர்களும் மறுக்கிறார்கள். நூறிலிருந்து 13 ரன்கள் குறைந்த 87 ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு துரதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. தலையில் அடித்துக் கொள்ளாதீர்கள்! விளையாட்டுத் துறையில் நிலவும் பல நம்பிக்கைகளைப் பார்க்கையில் இதெல்லாம் எவ்வளவோ மேல் என்று சொல்லிவிடுவீர்கள்.

Anil Kumble - Sachin Tendulkarகிரிக்கெட் விளையாட்டில் முக்கியமான கட்டங்களில் கேலரியில் இருக்கும் வீரர்கள் தத்தம் நிலைகளில் ஆடாமல் அசையாமல் நின்றுவிடுவார்கள். நகர்ந்தால் விக்கெட் விழுந்துவிடுமோ என்ற பயம்தான். இதுபோன்றதொரு பரபரப்பான சூழ்நிலையில் பாத்ரூமுக்குப் போயிருந்த சச்சின் வெகுநேரம் பாத்ரூம் வாசலிலேயே நின்றுகொண்டிருந்ததாக ஒருமுறை பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். கும்ப்ளே பத்து விக்கெட் எடுத்த டெஸ்ட் போட்டியில், ஒரு ஓவருக்கு முன்னால் கும்ப்ளேவின் ஸ்வெட்டரையும், தொப்பியையும் சச்சின் டெண்டுல்கர் நடுவரிடம் கொண்டுபோய்க் கொடுத்தார். அந்த ஓவரில் விக்கெட் விழுந்ததால், ஒவ்வொரு ஓவர் ஆரம்பிப்பதற்கு முன்னும் சச்சின் டெண்டுல்கரே கும்ப்ளேவின் ஸ்வெட்டரையும், தொப்பியையும் வாங்கிக் கொண்டு போய் நடுவரிடம் தந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட கிறுக்குத்தனமான நம்பிக்கைகள் ஒவ்வொரு விளையாட்டிலும் உண்டு. பேஸ்பால் விளையாட்டில் பேட்டைப் பிடிப்பதற்கு முன் கையில் எச்சில் துப்பிக் கொண்டால் வலுவாக அடிக்க முடியும் என்றொரு நம்பிக்கை உண்டு. குதிரையேற்றத்தில் ஓட்டுபவரிடம் ‘குட்லக்’ என்று சொல்வது துரதிர்ஷ்டம். டென்னிஸ் விளையாட்டில் சர்வ் (serve) செய்யும்போது கையில் இரண்டு பந்துகள் வைத்துக் கொள்வது துரதிர்ஷ்டமான ஒன்று. மஞ்சள் நிற ஆடை கூடவே கூடாது! இவையெல்லாம் ஆட்டத்துக்கான பொதுவான நம்பிக்கைகள் என்றால் ஒவ்வொரு வீரருக்குமென்ற தனிப்பட்ட நம்பிக்கைகளும் உண்டு. இலங்கை கிரிக்கெட் வீரர் மஹிலா ஜெயவர்த்தனே ஒவ்வொரு முறை பந்தை அடித்தபின்னும் பேட்டை முத்தமிடுவார். பிரபலமான கூடைப்பந்துவீரர் மைக்கேல் ஜோர்டான் ஒவ்வொரு போட்டியின் போதும் கால்சட்டைக்குள்ளே தன்னுடைய ராசியான பழைய கால்சட்டையை அணிந்திருப்பார்.

டென்னிஸ் வீரர் ஆந்த்ரே அகாஸி பந்தை சர்வ் செய்வதற்கு முன் பந்தைப் பொறுக்கிப் போடும் சிறுவர்கள் அவரவர் நிலைகளுக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஒருவேளை அப்படி இல்லையென்றால் அவர்களைக் கூப்பிட்டுச் சொல்லி அவர்கள் நிலைகளுக்குத் திரும்பும் வரை காத்திருப்பார். இந்த நம்பிக்கை என்றில்லாமல் பொதுவாகவே ஆந்த்ரே அகாஸி சுவாரசியங்கள் நிரம்பிய வீரர். 1992-ஆம் ஆண்டு விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் ஆந்த்ரே அகாஸி ஜான் மெக்கென்ரோவை வென்ற போட்டியில் ஒரு பந்தை கடும் பிரயத்தனப்பட்டுக் கீழே விழுந்து அடித்தார். அதில் அவருடைய முதுகெல்லாம் மண்ணானது. நேராகப் பந்து பொறுக்கிப்போடும் சிறுமியிடம் சென்று தன் துண்டைக் கொடுத்து முதுகைத் துடைத்துவிடச் சொன்னார். வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே அப்பெண் துடைத்துவிட மொத்த பார்வையாளர்களும் விசிலடித்து ஆர்ப்பரித்தார்கள்.

அப்போட்டியில் வென்று, இறுதிப்போட்டியையும் வென்று அகாஸி முதல்முறையாக விம்பிள்டனை வென்றார். ஆனால் அவருடைய வெகு கடுமையான அப்பாவோ இறுதிப்போட்டியில் நான்காவது செட்டை இழந்ததற்காக அகாஸியைக் கடுமையாகக் கடிந்து கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான “ஓபன்” (Open) என்ற அகாஸியின் சுயசரிதையிலிருந்து கிடைக்கும் இதுபோன்ற தகவல்கள் ஒரு ராணுவ சூழ்நிலையில் வளர்ந்த அகாஸியின் இளமைப்பருவத்தைக் காட்டுகிறது. அதிலும் அவருடைய தந்தை கிட்டத்தட்ட ஒரு ஜெயில் வார்டனைப் போல அகாஸியிடம் நடந்துகொண்டிருக்கிறார். இவையெல்லாம் போக பல அதிர்ச்சியளிக்கும் ஒப்புதல்களை தன்னுடைய சுயசரிதையில் எழுதியிருக்கிறார் அகாஸி. இந்த மாத ‘பெஸ்ட் செல்லர்’ புத்தகங்களின் பட்டியலில் முதலிடம் இப்புத்தகத்துக்குதான்.

அகாஸி தொன்னூறுகளில் தன்னுடைய விதவிதமான சிகையலங்காரங்களுக்காகப் பல ரசிகைகளைப் பெற்றவர். பலருடைய கவனத்தையும் கவர்ந்தவர். ஆனால் அது ஒட்டுமுடி (wig) என்பதை வெளிப்படையாகத் தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு முறை போட்டியின் போதும் தன்னுடைய ஒட்டுமுடி பறந்து விழுந்துவிடுமோ என்ற பெரிய கவலை அவருக்கிருந்ததாகச் சொல்கிறார். அந்தக் கவலையின் காரணமாகவே ஃப்ரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டியில் தோல்வியுற்றதாகவும் அப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார் அகாஸி. தன்னுடைய இளவழுக்கையை மறைக்க வேண்டுமென்ற அவருடைய இந்த பிரயத்தனம் மறைமுகமாக இன்று விளையாட்டுகள் அடைந்திருக்கும் சீரழிவையே காட்டுகிறது. ஒரு வீரரின் தகுதியைக் காட்டிலும், அவருடைய தோற்றம் அதிகளவில் பணத்தையும், பிராபல்யத்தையும் பெற்றுத் தருகிறது. சுமாரான விளையாட்டு வீரராக இருக்கும் அழகான மனிதருக்குக் கிடைக்கும் வருமானம், தேர்ந்த வீரருக்குக் கிடைக்கும் வருமானத்தை விட அதிகம். இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் விளம்பரப் படப்பிடிப்புகளில் நேரத்தை செலவழித்து சரியான பயிற்சியில்லாமல் போட்டியில் கோட்டை விட்டதாகப் பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இதே குற்றச்சாட்டு இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா மீதும் வைக்கப்பட்டிருக்கிறது.

இவையெல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் இன்னொரு பெரிய ஒப்புதல் வாக்குமூலத்தையும் தன் சுயசரிதையில் தந்திருக்கிறார் அகாஸி. 1997-ஆம் வருடம் க்ரிஸ்டல் மெத் (Crystal Meth) என்னும் ஊக்கமருந்தைப் பயன்படுத்தியாகவும், அது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டபோது தவறுதலாகப் பயன்படுத்திவிட்டதாகப் பொய் சொல்லித் தப்பித்ததாகவும் எழுதியிருக்கிறார் அகாஸி. இது மொத்த டென்னிஸ் உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. ஆந்த்ரே அகாஸி டென்னிஸ் உலகில் தோன்றிய மாபெரும் வீரர்களில் ஒருவர்; பலரால் நாயகராக வழிபடப்படுபவர். அப்படிப்பட்ட அவர் போட்டிக்கு முன்பு ஊக்க மருந்தைப் பயன்படுத்தாகச் சொல்லியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

1992-ஆம் ஆண்டிலிருந்து தரவரிசையின் உச்சிக்குப் போன அவர், தகுதிச்சரிவு, உடற்காயம் போன்ற காரணங்களால், கொஞ்ச கொஞ்சமாகக் கீழிறங்கி 1997-ஆம் ஆண்டு தரவரிசையில் 122-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். ஏதோ ஒரு மாயம் நடந்து ஃபீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுந்து ஒரே வருடத்தில் மீண்டும் முதல் பத்து இடங்களுக்கு வந்தார் அகாஸி. இப்படி கீழிறங்கி மேலே வந்த சமயத்தில்தான் அகாஸி ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அப்படியென்றால் அவர் மீண்டெழுந்து வந்ததில் ஊக்கமருந்தின் பங்கு எத்தனை சதவீதம் இருக்கும் என்ற கேள்விதான் இப்போது பல ரசிகர்கள், வல்லுநர்கள், வீரர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. “நான் மனதளவில் மிகவும் சோர்ந்து போயிருந்த சமயத்தில்தான் ஊக்கமருந்தைப் பயன்படுத்தினேன். அது எனக்குப் பெரும் உற்சாகத்தையும், மனவலிமையையும் தந்தது. என்னிடம் கொஞ்சம் கருணை காட்டுங்கள்” என்று சொல்கிறார் அகாஸி.

”நான் சம்பாதிப்பதற்காக விளையாடினாலும், டென்னிஸ் விளையாட்டைக் கடுமையாக வெறுக்கிறேன். ஒரு ரகசியமான மன உந்துதல் சார்ந்த வெறுப்பு இந்த விளையாட்டின் மீது எப்போதுமே எனக்கு உண்டு” என்றும் சொல்கிறார் அகாஸி. பணம், புகழ், அழகழகான காதலிகள் எனத் தொடர்ந்து டென்னிஸ் மூலம் சாதித்த ஒருவர், எதற்காக அதை வெறுக்க வேண்டும்? டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து போன்று முற்றிலும் வணிகப்படுத்தப்பட்டுவிட்டப் பெருவிளையாட்டுகளை விளையாடும் ஒருவர் முற்றிலுமாகத் தன் தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலைக்கிறார். மிகச்சிறு வயதிலிருந்தே ஒரு நாளின் பல மணிநேரங்களைப் பயிற்சியில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. அப்படிக் கடும் பிரயத்தனப்படும் ஒருவருக்கே சர்வதேச அரங்கின் வெளிச்சத்தில் நுழையும் வாய்ப்புக் கிடைக்கும். அப்படி நுழையும் ஒருவர் புகழையும், பணத்தையும் ருசித்தபின் அதிலிருந்து பின்வாங்குவது கடினம். தொடர்ந்து தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அழுத்தத்தில் மொத்த மனவலுவையும் இழக்க நேரிடும். அதைத்தாண்டி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியையும், ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனிப்பதன் பிரக்ஞையும் மனதை நிரப்பியபடி இருக்கும். இப்படிக் காலம் முழுவதைம் மன அழுத்தத்தில் செலவழிக்க நேரிடும் ஒருவர் அந்த விளையாட்டை வெறுப்பதில் எந்த ஆச்சரியுமும் இல்லை. அதிலும் அகாஸியைப் போலத் தன் தந்தையால் கழுத்தைப் பிடித்து உந்தப்பட்டு விளையாட்டை வாழ்க்கையாக மேற்கொண்டவருக்கு அதில் நிச்சயம் வெறுப்பு ஏற்படும். ”உண்மையில் பல டென்னிஸ் வீரர்களும் இந்த விளையாட்டை வெறுப்பவர்கள்தான். என்ன? நான் வெளிப்படையாக ஒத்துக் கொண்டுவிட்டேன், பலரும் ஒத்துக் கொள்வதில்லை” என்கிறார் அகாஸி.

சிறுவயதிலிருந்து தொடர்ந்து அழுத்தி உந்தப்பட்டு, பிராபல்யத்தை நோக்கிப் பயணிக்கும் ஒவ்வொருவருமே சந்திக்கும் மனவலியை அகாஸி சந்தித்திருக்கிறார். இதே மனவலியை நாம் இப்போது தொலைக்காட்சிகளில் நடைபெறும் பாட்டுப்போட்டிகள், நடனப்போட்டிகள் வழியாக நம் குழந்தைகள் மீதும் சுமத்திக் கொண்டிருக்கிறோம். வெற்றிபெற்ற குழந்தைக்குக் கிடைக்கும் பிராபல்யம், பணம், விளம்பரங்கள் வழியாக ஒவ்வொரு குழந்தை மீதும் நாம் ஒரு பெரிய பாறாங்கல்லைப் போன்ற மன அழுத்தத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சியை சுவாரசியமாக்குவதற்காகப் பெற்றோர்கள், குழந்தைகள் அழுவதைக் காட்டுவது இவையெல்லாம் ஒரு முன்கூட்டிய சம்பிரதாயம் சார்ந்த மனவலியை உருவாக்கி வைக்கின்றன. பாட்டு, இசை, நடனம், விளையாட்டு இவையெல்லாம் ரசனை சார்ந்த மனமகிழ் விஷயங்கள் என்பதிலிருந்து போட்டி, வியாபாரம், போருக்கிணையான ஆவேசம் இவற்றை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

மன அழுத்தத்துக்குள்ளாகும் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளித்து அவர்கள் மனநிலையைச் சமன்செய்வதற்காகவே ‘விளையாட்டு மனோதத்துவம்’ (Sports Psychology) என்றொரு துறை இருக்கிறது. அத்துறையின் வல்லுநர்கள் நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த பழக்கங்கள் சார்ந்த ‘நம்பிக்கைகள்’ பயிற்சியாளர்களுக்கும், வீரர்களுக்கும் மனோதிடத்தைத் தருவதாகக் கூறுகிறார்கள். ஒரு விளையாட்டு வீரர் தான் பின்பற்றும் ஒரு செயல் தனக்கு அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பும்போது, அந்தச் செயலைச் செய்தபின் இயல்பாகவே தனக்கு ஒரு பெரிய பலம் வந்துவிட்டதாக நம்புகிறார். ஆகவே பழக்கங்கள் சார்ந்த நம்பிக்கைகள் முற்றாக ஒதுக்கப்பட வேண்டியவை இல்லை. அதே நேரம், நாணயத்தின் மறுபுறமான குறிப்பிட்ட செயல் செய்யப்படாவிட்டால் வீரர் இயல்பான மனோபலம் குறைந்தவராகிறார் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

—oooOOOooo—-

வெள்ளிக்கிழமை 13-ஆம் தேதியன்று பயணம், திருமணம், வியாபாரம் போன்றவற்றைக் கோடிக்கணக்கான மக்கள் தவிர்ப்பதால் தோராயமாக 800லிருந்து 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் ஏற்படுவதாக 2004-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 13-ஆம் எண் குறித்த இந்த பயத்தைப் போக்குவதற்காக உலகெங்கிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2004 ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 13, வெள்ளிக்கிழமையன்று தொடங்கப்பட்டது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘அப்போலோ 13’ என்ற நிலா முயற்சியை 13:13 மணி நேரத்தில் 39-ஆவது ஏவுதளத்திலிருந்து தொடங்கியது. (39 = 3 x 13). 13-ஐக் குறித்த பயம் மூடநம்பிக்கை என்று காட்டுவதற்காகவே பெரும்பாலும் 13 என்ற எண்ணைத் தொடர்புபடுத்தினார்கள். சுவாரசியமான உடன்நிகழ்வாக ஏப்ரல் 13-ஆம் தேதி ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து அப்போலோ-13 முயற்சி தோல்வியடைந்தது.

—oooOOOooo—-

சென்ற சொல்வனம் இதழ் வெளியான நாள் வெள்ளிக்கிழமை 13-ஆம் தேதிதான். அலெக்ஸா தரவரிசை காட்டும் நல்ல முன்னேற்றத்திலிருந்து துரதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை என்றே தெரிகிறது.