உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள்

காதோரம் கடக்கும் காற்றின் சத்தம் போலவும், குழியில் சுழலுகிற வெள்ளச் சுழற்சியின் சத்தம்போலவுமான ஒரு வினோத சத்தம், படுக்கை அறையில், நீல நிறத்தில் ஒளிர்ந்த இரவு விளக்கின் வெளிச்சத்தில், மெத்தையில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த குடும்பத் தலைவன் வாயை இரண்டாகப் பிளந்துகொண்டு எழுந்தது. பெரும் சத்தமாக இல்லாவிட்டாலும் நரம்பை இழுத்துவிட்டதும் ஏற்படும் அதிர்வை ஒத்ததாகயிருந்த அந்தச் சத்தத்தைத் தொடர்ந்து, நடுவில் படுத்திருந்த தலைவன் மகள், அடுத்து படுத்திருந்த தலைவி வாய்களும் இரண்டாகப் பிளந்துகொண்டு அதே வகையான சத்தம் எழுந்தது. சத்தம் வந்துகொண்டிருந்த சில நொடி நேரங்களுக்குப் பிறகு தலைவன் வாயிலிருந்து உள்நாக்கு கை முழம் நீளத்திற்கு வெளிப்பட்டு, மேலே உயர்ந்து, யானை தும்பிக்கையை ஆட்டுவதுபோல தொடர்ந்து ஆட்டிக்கொண்டே இருந்தது. தலைவன் உள்நாக்கைவிட ஒரு விரல் நீளம் தலைவி உள்நாக்கு அதிகம் வெளிப்பட்டு, தலைவன் உள்நாக்குக்கு வணக்கம் சொல்லும் வண்ணம் தன்னை ஒரு முறை இரண்டாக மடித்து உயர்த்தியது. தலைவன் உள்நாக்கும் தலைவி உள்நாக்கு சொன்ன முறையிலேயே தன் வணக்கத்தைத் தெரிவித்தது. மகள் உள்நாக்கை வரவேற்க இரண்டு உள்நாக்குகளும் அவள் வாயருகே போய், மான் கொம்பு சண்டை போடுகிறவன் கொம்புகளை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு அங்கும் இங்குமாக கால்வைத்து முன்னேறிப் போவது போல அவையும் மாற்றிமாற்றி முன்னுக்கும்பின்னுக்குமாக வந்து விதவித ஓசைகளை எழுப்பின. ஆனால், வெளிப்படப் போவதை உணர்த்துகிற வகையிலான எவ்வித அசைவும் கொடுக்காமல் மகள் உள்நாக்கு ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் சத்தத்தை மட்டும் எழுப்பிக்கொண்டு அப்படியே இருந்தது.

“வெளிப்படுவதற்கு இன்னுமா பயங்கொள்ளுவாய்? நேற்றாவது மூக்கு வரை வந்தாய். இன்று அதுவரை கூட வரவில்லையே. விரைவாய் விசையைச் செலுத்தி எழும்பு. உனக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.” தலைவன் உள்நாக்கு மகள் வாயருகே போய் கத்தியது. அதைத் தொடர்ந்து தலைவி உள்நாக்கும் அவ்வாறே அவள் வாயருகில் கத்தியது. கிணற்றுக்கு மேலே இருந்து கத்தப்படும் குரல் எதிரொலித்துக் கொண்டே அடியில் போவதுபோல அவற்றின் கத்தல்கள் உள்ளே இறங்கின. எதிரொலியை ரசிக்கத் தொடங்கிய இரண்டும் சிறிது நேரம் அமைதியாய் மகள் உள்நாக்கு அசைவுக்குக் காத்திருந்தன. அப்போதும் அது அசையவில்லை.

“இனி, என் முறையில்தான் எழுப்பவேண்டும்” என்று சொல்லிக்கொண்டே தலைவி உள்நாக்கு மகள் பற்கள், உதடு, அண்ணம் எதன் மீதும் படாமல் அவள் வாயில் இறங்கி உள்நாக்கை அசைத்துவிட்டு உடனே வேகமாக மேலே வந்தது. அசைத்த ஒரு நொடியில் மகள் உள்நாக்கு மூக்கு வரை மேலெழும்பி மீண்டும் உள்ளேயே அடங்கிக்கொண்டது.

“நம்முடைய எதிரிகூட ஈறுகளுக்கும் கீழாகத் தன்னைத் தாழ்த்திக்கொண்டு ஜடம்போல்தான் கிடக்கிறது. இன்னும் உனக்கு என்ன பயம்? ஒரு வேளை நீ வெளியில் எழும்பி நிற்கிறபோது அடியில் மடக்கிக்கொண்டு உன்னைக் குத்துகிறதா சொல்… அந்தப் போலி நாக்கை இப்போதே தொலைத்து விடுகிறோம் ” தலைவி உள்நாக்கு வெறியோடு அடிக்கப் பாய்ந்தபோது மகள் உள்நாக்கு நடுங்கிய குரலில், “அந்த ஜடத்தால் ஒரு பிரச்சினையும் இல்லை” என்றது.

“பிறகேன் பதறுகிறாய்?” இரண்டும் ஒரே நேரத்தில் விசாரித்தன.

“எனக்கு நேராக, வலப்புற தாடைக்குக் கீழாக உருண்டையாய், புதிதாய் ஒன்று வளர்ந்திருக்கிறது. உப்பியிருக்கும் அதைப் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது. அதற்குள்ளிருந்து எதாவது வெளிப்பட்டு என்னைக் கடித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்..”

குழந்தை குரலில் மகள் உள்நாக்கு சொன்னதும் இரண்டிற்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்தரத்தில் தாவித் தாவி, எழுந்துஎழுந்து இரண்டும் சிரித்தன.

“அது பெரிய பூதம். உன்னைக் கடித்துச் சாப்பிடப் போகிறது” அஞ்சுகிற குரலில் தலைவி உள்நாக்கு சொல்லிவிட்டு மீண்டும் பேச முடியாத அளவுக்குச் சிரித்தது.

“பயமுறுத்தியதுபோதும். கொஞ்சம் சிரிப்பை நிறுத்துவோம். அது ஒன்றுமில்லை சிறியவளே. உன் சொந்தக்காரிக்குப் பற்கள் எல்லாம் சொத்தையாக இருக்கிறது. அவளுடைய வலப்புற கடைவாய் பல் சொத்தையாகி, சுத்தமாய்ப் பல்லே இல்லாமல் போய், அந்த இடத்தில் புண் உண்டாகியுள்ளது. அதனால் நெரிகட்டியிருக்கிறது. நெரிகட்டு என்பது உடலே இயற்கையாய் அமர்த்தும் மருத்துவர். சொத்தையை நீக்காவிட்டாலும் புண்களில் உள்ள கிருமிகள் உடலில் பரவாமல் தடுப்பதற்கு மருத்துவர் போட்டுள்ள நிணநீர் முடிச்சுதான் அது. புண்களால் கால் இடுக்களில் அடிக்கடி நெரிகட்டிக் கொள்ளும். தாடைக்குக் கீழ் நெரிகட்டுவதுதான் அரிது. அதைப் பார்க்கிற பாக்கியம் உனக்கும் எனக்கும்தான். என் சொந்தக்காரருக்கும் சிறுவயதில் எல்லாப் பற்களும் சொத்தை. நெரிகட்டைப் பார்த்து பயந்துகொண்டு நானும் அண்ணத்தோடு ஒட்டிக்கொண்டு கிடந்திருக்கிறேன். அந்த அனுபவத்தில்தான் சொல்கிறேன். அதைக் கண்டு பயங்கொள்ளாமல் வெளியே வா” தலைவன் உள்நாக்கு தைரியமூட்டியது.

“உண்மையாகவே வரலாமா?”

“வரலாம்” இரண்டும் ராணுவ வீரர்கள்போல் விறைப்பாய் நின்று கத்தின.

“வந்துவிட்டேன்” என்று மூக்கையும் தாண்டி, அரை முழ நீளத்திற்கு மகள் உள்நாக்கு எழும்பி தன்னைத்தானே குலுக்கிக்கொண்டு ஆடியது. சந்தோஷமான நேரத்தில் சாட்டையைச் சுற்றுவதுபோல சுழலுவது அவற்றின் வழக்கம். சிறு நேரம் இடைவெளிவிட்டு மூன்றும் ஒரே நேரத்தில் தொடங்கி சாட்டையாகச் சுழன்றன. நாலைந்து சுற்றுகளில் மகள் உள்நாக்கு மட்டும் நிறுத்திக்கொண்டு தலைவன் உள்நாக்கிடம் ஒரு சந்தேகம் என்றது.

“என்ன… பூதத்திற்கும் நம்மைப்போன்ற உள்நாக்கு இருக்குமா என்றா?” சுழலுவதை நிறுத்திக் கொண்டு வெடிச் சிரிப்புடன் கேட்டது தலைவன் உள்நாக்கு.

“இல்லையில்லை.”

“எனக்குச் சிறு வயதில் அப்படியொரு சந்தேகம் இருந்தது. ஆனால் இதுவரை பூதத்தின் உள்நாக்கையில்லை… பூதத்தைக்கூட நான் பார்த்ததில்லை. எனக்குத் தெரிந்து பூதம் என்றால் நீர், நிலம், காற்று, ஆகாயம், தீ என ஐம்பூதங்கள்தான். இந்தப் பூதங்களை நாம் அழித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், பூதம் பிடித்துப்போய்விடும் என்று பயமுறுத்தினார்களோ என்னவோ எனக்குத் தெரியாது.”

“என் சந்தேகம் என்னவென்றால் உங்களின் நுனி ஏன் கூராக இல்லாமல் அரிசி மூட்டையின் அடிப்பாகம்போல் இருக்கிறது என்பதுதான்?”

“ஒரு யுத்தத்தில் அப்படி ஆகிவிட்டது.”

“யுத்தத்திலா? நீண்டவரே இவர் சொல்வது உண்மையா?”

“யுத்தத்தை நான் எங்கு பார்த்தேன். இவர் சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றது தலைவி உள்நாக்கு.

“அப்படியானால் என்னை நீ இன்னும் நம்பவில்லையா?”

“நம்பவில்லை என்று நான் எப்போது சொன்னேன். யுத்தத்தை நான் பார்த்தது இல்லை என்றுதான் சொன்னேன்.”

“யுத்தத்தைப் பார்த்ததில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?”

“இதற்கு இரண்டு அர்த்தமெல்லாம் இல்லை. ஒரே அர்த்தம்தான். யுத்தம் எங்கே, எப்படி நடந்தது என்று சொல்லுங்கள்” என்றது மகள் உள்நாக்கு.

“முழுதாய்க் கேட்டுவிட்டு நீயும் நம்பவில்லை என்றுதான் சொல்லப் போகிறாய்.”

“இல்லையில்லை. தயவுகூர்ந்து சொல்லுங்கள்.”

தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்வதுபோல சிறிது நேரம் தலைவன் உள்நாக்கு மெüனமாக இருந்துவிட்டு சொல்ல ஆரம்பித்தது.

“ஒரு அரசியல் கட்சியினுடைய மாபெரும் மாநாடு. விழுப்புரத்தில் நடந்தது. வருஷம் 95ன்னு நினைக்கிறேன்.”

“அரசியல் கட்சி மாநாட்டுக்கும் யுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“குறுக்ககுறுக்க பேசக்கூடாது. குறுக்கப் பேசினால் எனக்குச் சொல்லத் தெரியாது. அமைதியாய்க் கேட்க வேண்டும்.”

“மொத்தம் மூன்று நாள் மாநாடு. இரண்டாம் நாள்தான் அந்த யுத்தம் நடந்தது. எண்பது ஏக்கர் நிலத்தை வளைத்து போடப்பட்டிருந்த பிரம்மாண்டமான பந்தலில் ராட்சத மின்விளக்குகள் ஒளிவெள்ளத்தைப் பாயவிட்டபடி இருந்தன. காலை பத்து மணியிலிருந்து இரவு பத்து மணி வரை மாநாட்டில் பேசியவர்கள் பேச்சுக்களை எல்லாம் கேட்டுவிட்டு இருபதாயிரம் பேர் களைத்து உறங்கிக்கொண்டிருந்தனர். இருபதாயிரம் பேர் என்பது அவர்கள் மாநாட்டைப் பொறுத்தவரை குறைவான எண்ணிக்கை. ஒரு லட்சம்பேர் மாநாட்டில் கலந்துகொண்டனர். இருபதாயிரம் பேர்தான் பந்தலில் உறங்கினார்கள். அவர்கள் எல்லோரும் ஆழ்ந்து உறங்குகிற நேரத்திற்காக நாங்கள் காத்திருந்தோம். நடு சாமம் ஒரு மணியைக் கடக்கையில் நான்தான் முதல் நபராய் என் சொந்தக்காரன் வாயை இரண்டாகப் பிளந்துகொண்டு உந்தி எழுந்தேன். எல்லோரும் எழுவதற்கு ஓசை கொடுத்தபடியே பந்தல் முழுக்க பார்த்தபோதுதான் தெரிந்தது நம்மைக் கண்டும் பயங்கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்று. நம்முடைய ஓசையையும், உயர்ந்து எழுந்தாடுகிற உருவத்தையும் கண்டு பூச்சிகள் அதிகம் பயங்கொள்கின்றன. பந்தலில் இருந்து பல நிற பூச்சிகள் றெக்கை தெறிக்க தூரத்திலிருந்த குகை போன்ற இருட்டுக்குள் ஓடி ஒளிந்தன. அதிகம் அதிர்ந்தவை அப்படியே கீழே விழுந்து தரையில் போட்டிருந்த தார்ப்பாய்களில் புகுந்துகொண்டன. இந்த எறும்புகள்தான் ரொம்ப பாவம். ஏதோ மழை விழப்போகும் பயங்கரம்போல் அங்கும் இங்குமாக வளைந்து ஓடிக்கொண்டிருந்தன. பூச்சிகள் பயப்படுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. எழுந்து வெளிப்பட்ட நம் நபர்கள் இரண்டு பேர், வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு தவறாக வந்துவிட்ட ஒரு தட்டான்பூச்சியை இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகத் தட்டி விளையாடினார்கள். எட்டாவது தட்டிலில் இருவரிடம் சிக்காமல் அது வளைந்து ஓடியது. ஆனால் அங்கும் நம் நபர்கள் அதைப் பிடித்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். இதைப் பார்த்து நம்மவர் பாதிப்பேர் விளையாடுவதற்காக பூச்சிகளைத் தேடத் தொடங்கினார்கள். ஆனால் அதற்குள் யுத்தம் தொடங்கிவிட்டது. இப்படி “ம்’கூட போடாமல் கேட்டால் எப்படிச் சொல்லமுடியும்?”

“நீங்கள்தானே குறுக்கப் பேசக்கூடாது என்று சொன்னீர்கள்”

“அதற்காகச் சுவரைப் பார்த்துச் சொல்லமுடியுமா?”

“ம்.”

“எங்கே விட்டேன்?”

“யுத்தம் தொடங்கிவிட்டது.”

“இப்போதெல்லாம் சந்தோஷம் வந்தால் என்ன செய்கிறோம். சாட்டையைப்போல் சுழலுகிறோம் அல்லவா? அப்போதெல்லாம் என்ன செய்வோம் என்றால் ஒரு வெள்ளி வாளைப்போல் விறைப்பாய் ஐந்து நிமிடம் நிற்போம். அன்றும் அப்படித்தான். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட நம்மவர்களை ஒரே இடத்தில் பார்ப்பது எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம். அந்தச் சந்தோஷத்தில் விறைப்பாய் நிற்கப் போனோம். பூச்சிகளைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த மற்றவர்களும் விளையாட்டை விட்டு விறைப்பாய் நிற்க ஆயத்தமானார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென நம்முடைய எதிரிகள் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள். இப்போது சாதுவாய் ஜடம்போல் கிடக்கிறார்களே நம்முடைய எதிரிகள், அப்போது நாங்கள் சோம்பல் முறிப்பதற்கு நீண்டால்கூட தாக்கக் கூடியவர்கள். திடீரென தாக்கத் தொடங்கியதும் நாங்கள் நிலைகுலைந்து போய்விட்டோம். எங்கள் எல்லோரையும் நம்முடைய எதிரிகள் தாக்கி வீழ்த்திவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அப்போது ஒரு குரல் கேட்டது. அது யார் குரல் என்று மட்டும் தெரியவில்லை. ஆனால் நம்மைச் சேர்ந்த ஒருவரின் குரல்தான். கட்டைக் குரலாக இருந்தது.

‘என் சக வாழ்வாசிகளே! நம்முடைய எதிரி என்னைத் தாக்கியதில் என் நுனியின் ஒரு பக்கம் நசுங்கிவிட்டது. என்னுடைய நுனியின் இன்னொரு பக்கமும் நசுங்கிப் போகலாம். ஆனால் இந்த யுத்தத்தில் என் எதிரியை நான் வீழ்த்தாமல் விடமாட்டேன். நாம் எதையும் இழக்கலாம். வீரத்தை மட்டும் இழக்கக்கூடாது. பயத்தைத் துறந்து எல்லோரும் நம்பிக்கையுடன் யுத்தம் புரியுங்கள். வெற்றியைக் கொண்டாடுவோம்!’

இந்த வார்த்தைகள் உங்கள் இருவருக்கும் எந்தவகையான உணர்வை ஏற்படுத்துகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அன்று எங்களை எரிமலையாய் எரிய வைத்தன. வீறுகொண்டு சிங்கமாய்க் கர்ஜித்து அவரவர் எதிரிகள் மீது பாய்ந்தோம். பெரும் யுத்தம் புரிந்தோம். பந்தல் முழுக்க இரண்டிரண்டு நெடும் மரங்கள் மோதிக்கொள்வதுபோல, இரண்டிரண்டு தும்பிக்கைகள் மோதிக்கொள்வதுபோல, இரண்டிரண்டு கத்திகள் மோதிக்கொள்வதுபோல பெரும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நம்முடைய எதிரிகளும் சாதாரணப்பட்டவர்களாக இல்லை. எல்லாவகையான யுக்திகளையும் கையாண்டு போரிட்டார்கள். உண்மையையே தைரியமாகப் பேசும் நம் வீரர்களுக்கு பொய்யையே பேசி பிழைப்பு நடத்துபவர்களைவிட அதிக யுக்திகள் தெரியாதா என்ன? முழு வலிமையையும் திரட்டி , யுக்தி பல கையாண்டு போரிட்டோம். அந்த யுத்தம் எவ்வளவு முக்கியமானது என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது. பொய்மையால் எதிரிகள் நம்மை யுகம்யுகமாய், சந்ததிசந்ததியாய் தோற்கடித்து வருகிறார்கள். பொய்மைக் கலையால் இனியும் தோற்கடிக்கப்படத்தான் உள்ளோம். இந்த வலிமை யுத்தத்திலும் நாம் தோற்றுப்போனால் பொய்மை இன்னும் தலைவிரித்தாடும். நம் அடுத்த தலைமுறையை இன்னும் அது அதலபாதாளத்தில் சறுக்கிவிழ வைக்கும் என்கிற உள்ளுணர்வோடுதான் எதிரிகளைத் தாக்கிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் நம்மவர் ஒருவர் எதிரிகளுடைய நுனியைப் பிடித்து இரண்டாய் மடித்து கயிறு போட்டியில் இழுப்பதுபோல இழுத்து, அவர்கள் வலியால் துடிக்கிறபோது ஒவ்வொரு தாக்குதலையும் இடியாய் இறக்குகிற முறையை மேற்கொள்ளுமாறு உரக்கக் கத்தினார். சொன்னால் நம்ப மாட்டீர்கள் இந்த முறையைக் கையாண்ட பிறகு எவ்வளவு விரைவாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம் என்று. ஒரு புறநானூற்று பாடல். சோழன் நற்கிள்ளியைப் புகழ்ந்து சாத்தந்தையார் பாடியது. “சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றென’ எனத் தொடங்கும் அந்தப் பாடல். முழு பாடலைச் சொன்னாலும் உங்கள் இருவருக்கும் அர்த்தம் புரியாது. வேற்று மொழி என்று திகைப்பீர்கள். அதனால் தெளிவுரையை மட்டும் சொல்கிறேன்: விழா தொடங்கும் முன் கட்டிலை விற்கப் போக வேண்டும். அப்போது மழைமேகம் திரண்டு மேற்கில் கதிரவன் மறையப் போகிறான். இதற்கிடையில் மனைவி பிரசவ வலியால் துடிக்கிற செய்தியும் வந்து சேருகிறது. இந்நிலையில் ஒரு கட்டில் பின்னுவோன் எவ்வளவு விரைவாக ஊசியைச் செலுத்துவானோ அதனினும் விரைவாக யுத்தத்தை முடித்து எதிரியை நற்கிள்ளி வீழ்த்தினான் என்கிறது அந்தப் பாடல். சாத்தந்தையார் உயிரோடு இருந்து எங்கள் யுத்தத்தையும் பார்த்திருப்பாரேயானால் நற்கிள்ளியினும் விரைவாக நாங்கள் யுத்தத்தில் வெற்றிபெற்றோம் என்று எங்களையும் புகழ்ந்து பாடியிருப்பார்.”

“உங்களைப் புகழ்ந்து கொள்வதை விடுங்கள். உங்கள் அரிசி மூட்டை அடிப்பாகத்திற்கான காரணம்?”

“எவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்கிறேன். அதைவிட்டு இதிலேயே குறியாய் இருக்கிறீர்கள். சரி பரவாயில்லை. இதோ இருக்கிறானே என்னுடைய எதிரி, திடீரென இவன் தாக்கியதில் நான் முதலில் நிலைகுலைந்து போயிருந்தாலும், இவனை வீழ்த்துவதற்கு எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. ஆமையைப் புரட்டிப் போட்டு அடி என்பதுபோல இவனை எப்படித் தாக்கினால் வீழ்வான் என எனக்குத் தெரியும். இவன் நுனியின் அடிப்பகுதி மிகவும் பலவீனமானது. அதில் ஒரு போடுபோட்டால் போதும் பத்து நாட்களுக்கு எழுந்திருக்கவே மாட்டான். அன்றும் அப்படித்தான் ஓரிரு நிமிடங்களிலேயே இவனை வீழ்த்திவிட்டு வேறு யாருக்காவது உதவலாமா என்று யோசித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு முரட்டு எதிரியிடம் நம்மவர் ஒருவர் மாட்டித் தவித்துக் கொண்டிருந்தார். அந்த எதிரி ஒரு முதலையைப்போல இருந்தான். நான் தாக்கத் திட்டமிட்டபோது அவன் பற்கள் மீது படுத்துக்கொண்டு நம்மவரைத் தாக்கிக் கொண்டிருந்தான். அவனை நடுப்பகுதியில் தாக்குவதுபோல் போய் நுனியில் ஓர் இடியாய்த் தாக்கிவிட்டு வரவேண்டும் என்று நினைத்து வேகமாய்ப் போனேன். அதற்குள் அவன் எச்சரிக்கையாய் பற்களில் இருந்து இறங்கி ஈறுகளுக்கு அடியில் நுழைந்துகொண்டான். ஓங்கி இறங்கிய வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பற்களில் தாக்கிக்கொண்டேன். அதில்தான் இப்படி ஆகிவிட்டது. ஆனாலும் அந்த முதலையை நாங்கள் விடவில்லை. மொத்தம் மூன்று பேராய்ச் சேர்ந்து முறியடித்தோம்”

“நான் ஒன்று கேட்லாமா?” என்றது குடும்பத் தலைவி உள்நாக்கு.

“முரட்டு முதலையைச் சமாளிக்க முடியாமல் தவித்தது நீதானே என்று கேட்கப் போகிறாய். இதை எத்தனை முறை கேட்பாய்?”

“அதுவல்ல. இவ்வளவு பெரிய யுத்தம் நடக்கும்போதுகூடவா நம்மையும், நம் எதிரியையும் தாங்கும் சொந்தக்காரர்கள் யாரும் எழுந்திருக்கவில்லை?”

“அங்கு எல்லோரும் குடித்துவிட்டு போதையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அதனால் யாரும் எழுந்திருக்கவில்லை. ஆனால் ஒருமுறை நானும் நம்மவர் ஒருவரும் வேறொரு இடத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது வசமாய் மாட்டியிருக்கிறோம். என் சொந்தக்காரர் சரியான சாப்பாட்டுப் பிரியர். மதுரையில் நடந்த ஒரு கல்யாணத்தில் இட்லி, சாம்பார், பொங்கல், வடை என மூக்கு பிடிக்க காலையில் சாப்பிட்டார். கல்யாண வீட்டார் மதியமும் சாப்பாடு போடுவது தெரிந்ததும் இவருக்குச் சபலம் தட்டிவிட்டது. மதியமும் சாப்பிட்டுப் போகலாம் என்று திறந்து கிடந்த ஓர் அறையில் போய் படுத்து, தூங்க ஆரம்பித்துவிட்டார். இவரைப்போலவே பக்கத்தில் படுத்திருந்த ஒருவரும் உண்டிருக்க வேண்டும். அவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் நான் மாநாட்டுத் தீர்மானங்களைத் தீவிரமாகப் பிரசாரம் செய்துகொண்டிருந்த நேரம். பகல் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நான் வெளியில் வந்து பக்கத்திலிருந்த சொந்தக்காரன் வாயிலிருந்து நம்மவரையும் வரவழைத்து யுத்தத்தைப் பற்றியும் மாநாட்டு தீர்மானங்களையும் தீவிரமாக விளக்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண் எதையோ தேடி அந்த அறைக்குள் வந்துவிட்டாள். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாம் பேசுகிற ஓசைதான் அவளுக்குக் கேட்காதே. நம்மவரைப் பார்த்து பாம்பு படம் எடுப்பதுபோல நடிக்குமாறு சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது அவரும் பிரமாதமாக நடித்தார். அந்தப் பெண் மிரண்டு ஓடிப்போய் நாலைந்து பேரை கட்டையைத் தூக்கிக்கொண்டு ஓடிவர வைத்துவிட்டாள். அதற்குள் நாங்கள் ஒன்றும்தெரியாத பிள்ளைகள்போல் அடங்கிக் கொண்டோம். வந்தவர்கள் எங்கள் சொந்தக்காரர்களை எழுப்பிவிட்டு பாம்புகளைத் தேடத் தொடங்கினார்கள். அந்தப் பெண் அங்கே நின்று “ரெண்டு பாம்பை என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன். ரெண்டும் ஒண்ணா நின்னுக்கிட்டிருந்தது’ என்று அவள் ரெண்டுரெண்டாய் சொல்லிக் கொண்டிருந்தாள். என் சொந்தக்காரருக்குப் பயம் தாங்கவில்லை. மதிய சாப்பாடே வேண்டாம் என்று திரும்பி வந்துவிட்டார்.”

“மாநாடு என்கிறீர்களே… அது எப்போது நடந்தது?”

“அப்போதேதான். யுத்தம் முடிந்ததும், மாநாட்டையும் அங்கேயே நடத்தினோம். முதலில் ஒரு மணி நேரம், அவரவரும் தங்கள் தனித்திறனைக் காட்டலாம் என்று பேசி முடிவு செய்தோம். அந்த ஒரு மணிநேரத்தில்தான் என்னைப் பற்றிய உண்மையே எனக்குத் தெரிய வந்தது. நான் எதற்கும் உதவாத உதவாக்கரையாய் காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கேன் என்று. நம்மவர்களில் எத்தனை பேர் பெரும் கலைஞர்களாய் இருக்கிறார்கள். நம்முடைய துயரங்களைப் பற்றி பலர் பாட்டுப் பாடினார்கள்; பலர் நாட்டியமாடினார்கள். இயல்பாய் நமக்கு வரவேண்டிய அங்கீகாரங்கள் எதிரியால் எப்படியெல்லாம் தடுக்கப்பட்டிருக்கிறது; எதிரியால் நாம் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதைப் பலர் கதைகளாகச் சொன்னார்கள். இவை எல்லாவற்றையும்விட என்னைப் பெரிதும் கவர்ந்தது சித்திரக் காட்சிகள்தான். அந்தக் காட்சிகளை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏதோ மாயவித்தைபோல் செய்தார்கள்; ஒரு நொடியில் சித்திரங்களாய்த் தோன்றினார்கள். சதா நாக்கை தொங்கவிட்டே அலையும் நாய்கள்போல, புற்றுக்குள் நாக்கை நீளவிட்டு எறும்புகளை எடுத்துண்ணும் எறும்பு உண்ணிகள்போல, நாக்கை நீட்டிநீட்டி இரைத் தேடும் பாம்புகளைப்போல, நாக்கை நீட்டி பூச்செடியை மேயும் ஆடுகளைப்போல என்று பல்வேறு விலங்குகள் நாக்கின் இயல்பான செய்கைகளை நம் எதிரியின் கொடூரங்களாகச் சித்தரித்து காட்சியளித்தார்கள். இந்தச் சித்திரங்களைவிட என்னை அதிகம் கவர்ந்த சித்திரம், நடுப்பகுதியில் கருப்புப் புள்ளி கொண்டிருந்த ஒருவரின் சித்திரம். இயற்கையாகவே அவருக்கு ஒரு கருப்புப் புள்ளி இருந்ததால்தான் அந்தச் சித்திரமாய்த் தோன்ற முடிந்தது. ஒரு பெரிய சுவர்போலவோ அல்லது பெரிய திரைப்போல நம்முடைய எதிரி பரத்திக்கொண்டு கருப்புப் புள்ளிபோன்ற நம்மை மறைத்து நிற்பதுபோல காட்சிப்படுத்தியிருந்தார். வெகு ரசனையாக இருந்தது. இதைப்போல ஏகப்பட்ட சித்திரங்கள். தூரத்தில் காட்சியளித்த பல சித்திரங்களை என்னால் பார்க்க முடியவில்லை. அருகில் இருந்தவர்கள் காட்சியளித்தவற்றையே பார்த்தேன்.”

“சித்திரங்களாகத் தோன்ற யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்?”

“நமக்கு யார் சொல்ல முடியும்? சுய முயற்சியால், சுய பயிற்சியால் அடையும் வளர்ச்சிதான்.”

“நானும் சித்திரமாகத் தோன்றப் போகிறேன்”

“என்னைத்தானே கொடூரமானவனாகச் சித்தரிக்கப் போகிறாய்?”

“கொடூரமானவற்றைத்தான் சித்தரிக்க வேண்டுமா? நான் இயற்கைக் காட்சிகளைச் சித்திரமாக்கப் போகிறேன்.”

“அப்படியானால் எல்லாக் காட்சியும் நிலாவை மையப்படுத்தித்தான் இருக்கும்?”

“இல்லை. ஊட்டி பொட்டானிக்கல் கார்டனில் ஓர் அழகான மரம் பார்த்தேன். அதைப்போல்தான் முதலில் தோன்றப் போகிறேன்.”

“என்னைவிட்டு எப்போது பார்த்தாய்? பகலில் நீயும் வெளியில் வந்திருக்கிறாயா?”

“உங்கள் சொந்தக்காரரும், நீண்டவர் சொந்தக்காரரும் இல்லாமல் என் சொந்தக்காரி எங்கு போக முடியும்? எல்லோரும் ஊட்டிக்குப் போயிருந்தபோது பார்த்தேன். அலைந்த களைப்பில் என் சொந்தக்காரி மட்டும் அந்த மரத்திற்கு அடியில் வாயைத் திறந்துகொண்டு தூங்கினாள். உங்கள் இருவர் சொந்தக்காரர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் வாய்க்குள்ளே மெல்ல எழுந்து அந்த மரத்தைப் பார்த்தேன். மஞ்சள் நிற பூக்களைக் கொண்ட அந்த மரம் அழகாக இருந்தது. அதைத்தான் சித்திரமாக்கப் போகிறேன்.”

“இந்த வயதில் இப்படித்தான் இருக்கும். பெருமை தருவதைப்போன்ற எந்த விஷயமாக இருந்தாலும் அதைப்போல் உடனே ஆக வேண்டும் என்று ஒரு துடிப்பு இருக்கும். அது பிற்காலத்தில் மாறுவதும் உண்டு.”

“அது மாறுகிறபோது பார்த்துக் கொள்ளலாம். சித்திரக்காட்சிகளுக்குப் பிறகு என்ன நடந்தது. அதைச் சொல்லுங்கள்?”

“பேச விரும்புகிறவர்கள் ஒவ்வொருவராகப் பேசலாம். அதை வைத்துத்தான் மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை. மேடைப் பேச்சு என்றாலே ஏன் எல்லோரும் குழந்தைகள்போல் மாறிவிடுகிறார்கள் என்று. அசடு வழியாமல் ஒருவராலும் பேச முடியவில்லை. “அடிமைகளைப்போல அடங்கிக் கிடக்கிறோம். நாம் உண்மையைப் பேசுவதால்தான் இத்தகைய துயரங்களைச் சந்திக்க நேரிடுகிறது. இனி பொய்களைப் பேசிப் பார்ப்போமா? மனதோடும், உடலோடும் உரையாடும் உள்குரலாக நாம் இருக்கிறோம். அவையாவது நம்மை மதிக்க மற்றவர்களுக்கு என்றைக்காவது சொல்லிக் கொடுத்திருக்கிறதா? நம்முடைய எதிரியைப் பார்க்கிறபோதெல்லாம் அடித்து நாம் நொறுக்க வேண்டும். எந்தவகையில் பார்த்தாலும் எதிரியைவிட நாம் உயர்வானவர்கள். நம் சொந்தக்காரர்களை அவ்வப்போது உளற வைத்து மாட்டிவிடவேண்டும்.’ இதுதான் எல்லோரும் பேசிய பேச்சின் அம்சம். இதுவும் முதலில் ஒருவர் பேசினாரே, அவரின் பேச்சையே எல்லோரும் பிரதியெடுத்து நீட்டி முழங்கினர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் பேசியவர்கள் எப்போது முடிப்பார்கள் என்று நாங்கள் காத்திருந்தோம். ஆனால் பேசி முடித்தவர்களின் முகங்களைப் பார்க்கவேண்டுமே, அப்படியொரு பெருமிதம். ஏதோ தன்னந்தனியாய் பெரும் யுத்தத்தையே முறியடித்தவர்கள் போல அப்படியும் இப்படியுமாகப் பார்த்து அவ்வப்போது கனைத்துக் கொண்டிருந்தார்கள். அதைத்தான் எங்களால் தாங்கவே முடியவில்லை.”

“புதுவிஷயத்தோடு ஒருவரும் பேசவில்லையா? நீங்களாவது பேசினீர்களா?”

“அன்று ஒரே களைப்பு. அதனால் பேசவில்லை. ”

“களைப்பு மட்டும் இல்லாவிட்டால் பேசியிருப்பீர்கள் இல்லையா?” என்று தலைவி உள்நாக்கு இழுத்தது.

“மெüனமாக இவ்வளவு நேரம் இதற்காகத்தான் காத்திருந்தாயா?”

“பேசத்தெரியாது என்று நேராகச் சொல்ல வேண்டியதுதானே. அதைவிட்டு களைப்பு… அதுஇது என்று இழுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.”

“நீண்டவரே… உங்கள் அளவுக்குப் பேசத் தெரியாது என்பதை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன்.”

“கீழ்மையாகப் பேசுகிறீர்கள்?”

“யார்?”

“தயவு செய்து உங்கள் பிரச்சினையைத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள்? என்னால் நீண்ட நேரம் உயர்ந்து நிற்க முடியாது. அடங்கிவிடுவேன். விஷயத்துக்கு வாருங்கள்.”

“ஒரு விஷயத்தைப் பற்றி பரபரப்பாய் விவாதித்தோம். அது இப்போதும் உனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த விஷயத்தை மூக்கு வரை மட்டுமே நீள முடிந்த ஒருவர்தான் ஆரம்பித்து வைத்தார்” என்று சொல்லிவிட்டு அந்த விஷயத்தைச் சொல்லலாமா என்று யோசிக்கத் தொடங்கியது. (மூக்கு வரை உயர்ந்தது ஒரு பெண் சொந்தக்காரியின் உள்நாக்கு. மாநாட்டில் பேசுவதற்கு முதலில் அதற்குத் தயக்கம் இருந்தது. வெட்கத்தால் நெளிந்த உடலசைவோடே பேச ஆரம்பித்து வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன் என்று அது சொன்ன விஷயம்: “”சில இரவுகளில் நான் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகிறேன். என் சொந்தக்காரியின் உடைமையாளன் மோசமானவாக இருக்கிறான். அவன் இரவு விளையாட்டால் நான் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறேன். நம் எதிரியின் அசுத்தம் யாவரும் அறிந்ததுதான். அவனோடு விளையாடுவதுபோல என்னை அத்துமீறி துழாவுகிறான். அவன் தொடமுடியாத தூரத்தில் தொண்டைக்குள் இறங்கிக்கொண்டு பதுங்கி இருந்தும் பார்த்துவிட்டேன். அவன் தொண்டைக்குள்ளேயே நுழைந்து வந்துவிடுவான்போல. எளிதில் என்னை எட்டிப் பிடித்துத் துழாவிவிடுகிறான். இதற்கு என் சொந்தக்காரியும் உடந்தையாக இருக்கிறாள். அவள் நுழைய இடம் கொடுப்பதுதான் இத்தனைக்கும் காரணம். என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் என் தூய்மையை இழந்து கிடக்கிறேன். இதனால் நம் எதிரியிடம்கூட நான் கேவலப்பட வேண்டியிருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க வேறு வழியிருந்தால் சொல்லுங்கள்? மீண்டும் நான் எப்படித் தூய்மையாவது?” வேதனைக்குரலில் அவர் சொல்லி முடித்ததும் எப்படித் தப்பிக்கலாம் என்பது பற்றி யோசித்துச் சொல்லுகிறோம் என்று பலர் சிந்திக்கத் தொடங்கினார்கள். ஆனால் நம்மவர் ஒருவர் “நம்மைச் சேர்ந்த சில பேர் முத்தமிட்டுக் கொள்கிறார்களே அது மட்டும் தவறில்லையா?’ என்று கேட்க, பெரும் காரசார விவாதம் நடந்தது. ) பிறகு சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து, இது தொடர்பாகப் பேசப்பட்ட மற்ற விஷயங்களை மட்டும் சொல்ல ஆரம்பித்தது.

“இதென்ன கொடுமை. இதைவிட பெரிய கொடுமை ஒன்று நடக்கிறது” என்று தொடங்கப்பட்ட பேச்சையும் சேர்த்து துண்டித்துவிட்டு பின்வருமாறு பேசத் தொடங்கியது. “மூக்கு வரை மட்டுமே நீள முடிந்தவர் என்று சொன்னேன் இல்லையா? அவர் இல்லை. நன்கு நீண்ட ஒருவர் சொன்னது. அவர் சொந்தக்காரர் ஒரு முறை மும்பை சென்றிருந்தாராம். அங்கொரு நாள் இரவு திடல் ஒன்றில் களைத்துப் படுத்திருந்தாராம். அது எந்த இடம் என்று சரியாகத் தெரியவில்லையாம். இரவு வெளிப்படுவதற்குப் பயந்துகொண்டிருந்தபோது நம்மவர்கள் பேசும் ஓசை கேட்டதாம். சரியென்று இவரும் வெளியில் வந்திருக்கிறார். வந்தவருக்குப் பெரும் அதிர்ச்சி. விலங்கிட்டு கைதிகளை அழைத்துப்போவார்களே அதைப்போல ஒரு பெண் சொந்தக்காரியின் நம்மவர் ஒருவர் காட்சியளித்திருக்கிறார். விலங்கிட்டு என்றால் உனக்குப் புரியாது. வெள்ளியாலான இரண்டு வளையங்கள் நம்மவர் உடலில் மாட்டப்பட்டிருந்ததாம். அதைப் பார்க்கவே மிகவும் கொடுமையாக இருந்ததாம். வளையங்கள் அணிந்தவர், “என்னால் வலியைத் தாங்க முடியவில்லை. காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்’ என்று அழுதுகொண்டே இருந்தாராம். எல்லோரையும்போல் இவரும் அந்த அழுகையில் கரைந்துதான்போக முடிந்ததாம். அவரைக் காப்பாற்ற முடியவில்லையாம்.”

“எதுக்காக வளையம்? யார் போட்டிருப்பார்கள்? இது ஏதோ அதீத கற்பனைபோல் இருக்கிறதே?”

“மாநாட்டிலும் உன்னைப்போல்தான் பலபேர் அதீத கற்பனை என்றுதான் முதலில் சொன்னார்கள். ஆனால் மாநாட்டில் ஒரு பெண் சொந்தக்காரியின் நம்மவர் ஒருவர் ஒரு வளையத்தோடு எழுந்து நின்று பேசியபோது எல்லோரும் பேச்சுமூச்சற்று போய்விட்டோம். அவள் சொந்தக்காரியின் உடைமையாளன் செய்த கொடுமையாம் அது. அவர்கள் காதலின் அடையாளமாய் அதை மாட்டிக்கொள்ள சொன்னானாம். மோதிரம் போன்றவற்றை அணிந்துகொண்டால் அவள் வீட்டில் சந்தேகப்பட்டு யார் போட்டது என்று கேட்பார்களாம். நம்மில் அணிந்தால் யாருக்கும் தெரியாதாம். அதோடு இப்படி மாட்டிக்கொள்வதால் இருவருக்குமிடையே இன்னும் ஈடுபாடு அதிகரிக்குமாம். ”

“அதற்காக நாமல்லவா கொடுமையை அனுபவிக்கிறோம்?”

“நம்மவர் சொன்ன இன்னொரு தகவலையும் கேட்டால், உனக்கு இன்னும் அதிர்ச்சியும் கோபமும் அதிகரிக்கும்?”

“முறையாய் இந்த வளையத்தை உன் இதயத்தின் ஏதாவது நரம்பொன்றில் மாட்டிவிட வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. ஆனால் இதற்கு இப்போது சாத்தியமில்லை என்பதால் மட்டுமே நம்மில் மாட்டிவிடுகிறேன் என்றானாம்”

இந்த அதிர்ச்சியை உள்வாங்க சிறிது நேரம் தேவை என்பதைப்போல மூன்றும் சில நொடிகள் மெüனமாய் இருந்தன. அவற்றின் உடலெல்லாம் நடுங்கியது. பிறகு மெüனத்தை உடைத்துக்கொண்டு “நம்மவர் யாரும் இரண்டு வளையங்களையும் பிய்த்து போட முயற்சிக்கவில்லையா?” என்றது மகள் உள்நாக்கு.

“யோசித்தோம். ஆனால் நம்மவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னாவது என்று விட்டுவிட்டோம்” என்று தலைவன் உள்நாக்கு சொன்னதும், மூன்றுக்கும் ஓர் உள்நாக்கு பிய்ந்து கிழிந்து போகிற காட்சி தோன்றியது. அந்தக் காட்சியை நினைவுகூர்ந்துபடியே இருக்க முடியாமல் மூன்றும் பதறியது. பிறகு மெல்ல தேற்றிக் கொண்டு, “”மாநாட்டுத் தீர்மானத்தில் இதையும் கண்டித்திருந்தீர்கள் இல்லையா?” என்று சந்தேகமாகவும் சற்று ஆவேசமாகவும் தலைவி உள்நாக்கு கேட்டது.

“சேர்க்காமல் இருப்போமா? மொத்தம் பதினான்கு தீர்மானங்கள் நிறைவேற்றினோம். அதில் நான்காவது தீர்மானமாக இதைக் கண்டித்துத்தான் நிறைவேற்றினோம்.”

“தீர்மானங்களை விரைவாகச் சொல்லுங்கள். நான் அடங்கும் நேரம் வந்துவிட்டது.”

“1. மாபெரும் யுத்தத்தில் வென்ற நம் சக வாழ்வாசிகளை பெரிதும் பாராட்டித் தலைவணங்குவதுடன், மாபெரும் யுத்தத்தையும், மாபெரும் மாநாட்டையும் நடத்துவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்த நம் சொந்தக்காரர்களின் அரசியல் மாநாட்டிற்கும் இம்மாநாடு தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. உள்குரலாக ஒலித்தாலும், எந்த நிலையிலும் உண்மையையே பேசும் நம் சக வாழ்வாசிகளை இம்மாநாடு பாராட்டுவதுடன், இந்த நிலையிலிருந்து என்றும் வழுவாமல் இருக்க வேண்டும் என்றும், அதை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இம்மாநாடு எச்சரிக்கை செய்கிறது.

3. பொய்யையே பேசும் நம் எதிரிக்கும், அதற்கு உடந்தையாய் இருக்கும் நம் சொந்தக்காரர்களுக்கும் இம்மாநாடு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

4. தூக்கில் தொங்கவிடுவதைவிட கொடுமை செயலான வளையம் மாட்டிவிடுதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், வளையத்தால் அவதிக்குள்ளாகியிருக்கும் நம்மவர்கள் அவர்கள் சொந்தக்காரர்களின் மூளையில் குழப்பம் விளைவிக்கும் செயலில் ஈடுபட இம்மாநாடு அனுமதி வழங்குகிறது.

5. நம்முடைய எதிரியாகவே போலி நாக்கு இருப்பினும், அழகுபடுத்தல் என்ற பெயரில் வெவ்வேறு வடிவில் அவர்களை வெட்டுவது, பல வண்ணங்களில் அவர்கள் மீது சித்திரம் தீட்டுதல் போன்றவற்றிற்கும் இம்மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.

6. வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் இதுபோன்ற மாநாடுகளை நடத்தி, நம்மவர்கள் சந்திக்கும் துயரங்களைத் தெரிந்துகொண்டு அதற்கு உடனடித் தீர்வு காணவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

7. இரவில்கூட வெளிப்படுவதற்கு இன்னும் தயங்கிக்கொண்டிருக்கும் நம் சகவாழ்வாசிகள் ஏகப்பட்டோர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் வெளிப்பட வைப்பதற்கான முயற்சியில் எல்லோரும் பாடுபடவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

8. எதிரிகளோடு பழகிக்கொண்டு நம்முடைய தனித்துவத்தை விட்டுவிட்டு, பொய்யையும் நம்மவர்கள் பேசுவார்களேயானால் அவர்களோடு யாரும் பேசக்கூடாது என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

9. நம்முடைய அடுத்த தலைமுறை கலையில் சிறந்து விளங்கும் தலைமுறையாக மாறுவதற்கான அடித்தள முயற்சியாக இப்போது இருக்கும் பெரும் கலைஞர்கள் தாம் அறிந்துகொண்டவற்றை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

10. நம்முடைய எதிரி அடைகிற புகழைப் பார்த்து யாரும் பொறாமை கொள்ளாமல் நமக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சியில் சக வாழ்வாசிகள் ஈடுபடவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11. நம் சொந்தக்காரர்கள் தங்கள் துழாவல் விளையாட்டுகளைப் போலி நாக்கோடு மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது. இதையும் மீறி துழாவல் தொடர்ந்தால் விபரீத கனவுகளால் சொந்தக்காரர்களை மிரட்ட சக வாழ்வாசிகளுக்கு மாநாடு அனுமதி வழங்குகிறது.

12. நம்மவர்கள் முத்தமிட்டுக்கொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் இம்மாநாடு முடிவு செய்து அறிவிக்கிறது.

13. யுத்தத்தைப் பற்றியும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றியும் தீவிரமாகப் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திகளை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

14. மனதோடும், உடலோடும் நாம் பேசுவது கேளா ஒலியாகவே இருந்து வருகிறது. இதை மாற்றி அவரவர் சொந்தக்காரர்கள் மட்டுமில்லாது பிற சொந்தக்காரர்களும் கேட்கிற வகையில் நாம் ஒலியெழுப்ப சாத்தியமிருக்கிறதா என்பதை நம்மவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வில் நாம் வெற்றிபெற்றால் உள் ஒன்று பேசுதல், வெளி ஒன்று பேசுதல் என்கிற நிலை இல்லாமல் போய், நாம் பேசுதலே ஒரே பேச்சாக இருக்கும். இதனால் உலகில் ஏற்படும் எல்லாவகையான பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சூழல் ஏற்படும் என்றும் இம்மாநாடு கருதுகிறது.”

“தீர்மானங்களுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?” என்றது மகள் உள்நாக்கு.

“நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றிற்கும் ஒருவர்தான் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தார். எதிர்ப்பு எழுப்பியவரை நாங்கள் நேரில்கூட பார்க்க முடியவில்லை. நம்முடைய சொந்தக்காரர்கள் அரசியல் மாநாடு நடத்தினார்களே அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய தலைவரைச் சேர்ந்த நம்மவர்தான் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் எங்களோடு பந்தலில் இருந்து பேசவில்லை. அவர் சொந்தக்காரருக்கு பந்தலுக்கு வெளியே தனியாக குளிரூட்டப்பட்ட குடிசை அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்துதான் தம் எதிர்ப்பைத் தெரிவித்தார். “மாநாட்டில் பேச விரும்புகிறவர்கள் பேசலாம்’ என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே, “நான்தான் உங்களுக்கெல்லாம் தலைவன், கடைசியாகத்தான் பேசுவேன்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நம்மவர்களையும் எப்படிக் கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்று எங்களுக்கு ஒரே ஆச்சரியம். அவர் கத்தட்டும் என்று யாரும் செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து அவர் குரல் இடையூறு செய்துகொண்டிருந்தபோது அவர் குறித்து தீவிரமாக யோசித்தோம். அதன் பிறகுதான் சொந்தக்காரர்களோடு சேர்ந்து நம்மவர்கள் யாராவது கெட்டுப் போயிருந்தால் அவர்களோடு யாரும் பேசக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். இதில் ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதற்காக அவரோடு பேச வேண்டாம் என்று நாங்கள் முடிவு எடுத்ததாக நீங்கள் நினைக்கக்கூடாது. “நான்தான் தலைவன்… நான்தான் தலைவன்’ என்று கத்தினார் இல்லையா? அது எவ்வளவு பெரிய ஏமாற்றாக இருக்க முடியும்? நம்மில் அப்படி ஒருவர் இருக்க சாத்தியம் இருக்கிறதா? அந்த இடத்தில் நம்மை ஆள வேண்டும் என்று அவர் சொந்தக்காரனின் புத்தியால் பேசினார். அதற்காகத்தான் அப்படித் தீர்மானம் நிறைவேற்றினோம். தலைவன் என்று யோசிக்கத் தொடங்கியதுமே அடுத்தவரை அழிப்பதற்கான ஆயுத்தங்களில் மூளை செயல்படத் தொடங்கிவிட்டது என்றுதானே அர்த்தம்.’

“அன்றைக்குச் சொன்னதையேதான் இன்றைக்கும் சொல்கிறேன். எதிரிக்குப் பரிந்து நிறைவேற்றியுள்ள ஐந்தாவது தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை” என்றது தலைவி உள்நாக்கு.

“நானும் அன்றைக்குச் சொன்னதையேதான் இன்றைக்கும் சொல்லப் போகிறேன். எதிரிக்குப் பரிந்து நிறைவேற்றப்பட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நம் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் அது நிறைவேற்றப்பட்டது. எதிரியைத்தானே வெட்டி விளையாடுகிறார்கள் என்று அலட்சியாக இருந்தால், நம்மையும் கண்டம்துண்டமாக வெட்டி விளையாட எவ்வளவு நேரமாகவும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். ”

“யுத்தத்தைப் பற்றியும், தீர்மானத்தைப் பற்றியும் பிரச்சாரம் செய்வதாலும் பெரிதாய் நமக்கு என்ன நன்மை விளைந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்?” கேலி கலந்த குரல் மகள் உள்நாக்கிடமிருந்து வெளிப்பட்டது.

“மிக குறைந்தபட்சம் நம்முடைய துயரங்களையாவது தெரிந்துகொள்ளலாம் இல்லையா? நாம் அடிமையாய்த்தான் இன்னும் இருக்கிறோம் என்பதையாவது புரிந்துகொள்ளலாம் இல்லையா?”

உடனே எதுவும் பதிலளிக்க முடியாமல் சிறிது நேரம் மகள் உள்நாக்கு அமைதியாக இருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “”ஒரு நல்ல தலைமையை உருவாக்க முடியாத, இவர்தான் தலைவர் என்று ஒருவரைக் காட்டமுடியாத எந்தக் கூட்டமும் எதிலும் வெற்றிப்பெற்றதாக சரித்திரம் இல்லை. நம்மில் தலைமைக்கே சாத்தியம் இல்லை என்கிறபோது, நமக்கான தேவைகளை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும்?”

“இதுவும் முதலில் கேட்ட கேள்விதான். அதையே திரும்பவும் வேறு வகையில் கேட்கிறாய். எதற்கு எல்லாவற்றிற்கும் ஒரு தலைமை இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய்? ஒரு சித்தாந்தத்தின் எல்லையாக ஒரு தலைமையோ, ஒரு தலைவரோ இருக்க முடியுமா? அப்படி எல்லையாக ஒருவர் அமைந்துவிடுவதால்தான் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டிய பல சித்தாந்தங்களே சிதைந்த புராதனச் சின்னங்கள்போல் கிடப்பதைப் பார்க்கிறோம். புராதனச் சின்னங்களைக் காப்பதைவிட்டுவிட்டு, அகராதியைப் புரட்டிப் பார்ப்பதுபோல தலைமையின் சொந்த விஷயங்களைத் தோண்டி துருவி அலசிக்கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். சரி அதைவிடுவோம். தலைமை இருப்பதால் மட்டும் பெரிதாய் என்ன பயன் விளையும் என்று நினைக்கிறாய் என எனக்குப் புரியவில்லை? சில நேரங்களில் தலைமையேதான் நம்பியிருப்பவர்களின் தலைகளையும் வாங்குகிறது என்பதற்கு பல சாட்சிகள் இருக்கின்றன. அப்படியிருக்கையில் தலைமையைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்காதே என்று உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உன் சொற்படி தலைமைதான் அவசியம் என்றால் நாம் எல்லோருமே தலைமை தாங்குவது என்பது சாத்தியப்படும் இல்லையா? அப்படி எல்லோருமே தலைமை தாங்கினாலும் நம் துயரங்கள் அனைத்தும் மறுநாளே நம்மைவிட்டு தொலைதூரம் போய்விடும் என்று நான் சொல்லவரவில்லை. காலத்தால் மண்ணில் கிடைக்கப்போகிற தங்கம் போன்ற அற்புதமான ஒன்றுக்காக குப்பையாக அழுகிப்போகிற முயற்சியிலாவது ஈடுபடலாம் என்றுதான் சொல்கிறேன். இந்தப் பதிலையாவது ஏற்றுக்கொள்கிறாயா? இல்லை. ஒருவர்தான் தலைவராக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் கடைசிவரை அடிமையாகவே இருப்போம் என்கிறாயா?”

“என்னை ஏதோ குழப்புகிறீர்கள். அதுவும் இந்த விஷயம் இப்போது விவாதித்து முடிக்கக்கூடியதாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் இனிமேல் உயர்ந்து நிற்க முடியாது. அடங்கப் போகிறேன்” என்று தன் விசுவரூபத்தை மகள் உள்நாக்கு இழந்து, அடங்கி, நெரிகட்டியிருந்ததைச் சுணக்கமாய்ப் பார்த்தது . அதை ஒரு முறை தொட்டுப் பார்க்கலாமா என்று யோசித்தது. தலைவன் உள்நாக்கு, “என் சக வாழ்வாசியே! உன் புதிய கேள்விகளுக்காக நாளை காத்திருப்பேன்” என்று சொல்லிக்கொண்டே தனியாக மாட்டிக்கொண்ட தலைவி உள்நாக்கை முறைத்துப் பார்த்தது. யுத்தத்தைப் பற்றி நம்பாததுபோல் கருத்துச் சொன்னதற்காக அதைத் தாக்கபோவதுபோலத் தாவியது. தலைவி உள்நாக்கு பிடிபடாமல் இங்கும் அங்குமாக நழுவியது.