வடுவூர் துரைசாமி ஐயங்காரின் ’வித்யா சாகரம்’

இக்கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க : வடுவூர் துரைசாமி ஐயங்கார்

vidyasagaramவடூவூராரின் திகம்பரச் சாமியார் வரிசை நாவல்கள் எல்லாம் துப்பறியும் நவீனங்கள். துரைசாமி ஐயங்கார் துப்பறியும் மர்மக் கதைகளை மட்டுமே எழுதியவர் அல்லர், பிற எழுத்து வகைகளையும் அவ்வப்பொழுது சோதித்திருக்கிறார். அவற்றில் ஒன்று ”வித்யா சாகரம்” என்ற நாவல்.

அந்நாளில், ஏன் இந்நாளிலும் கூட தமிழ் மசாலாப் படங்களுக்கென உருவாகியிருக்கும் ஃபார்முலாவின் படியே இந்த நாவலை அமைத்திருக்கிறார். மரபுப் பாடல்கள் நிறைந்த விரிவான வர்ணனைகள், எதிர்பாராத திருப்பங்கள், சந்தேகங்களினால் ஏற்படும் மனக் கிலேசங்கள், அவை தீரும் பொழுது ஏற்படும் மன நிம்மதி, கெட்ட எண்ணம் உள்ளவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை, நல்லவர்கள் சுபமாக வாழ்வது இவை போக  ஆன்மீகத் தத்துவம் என்று அனைத்துச் சுவைகளிலும் உரிய விகிதங்களில் கலந்து கட்டி, வழக்கமான தமிழ் சினிமாவுக்குத் தோதாக இந்த கதையைச் சொல்லியிருக்கிறார். இதை சினிமாவாக எடுத்திருந்தால் ஆடல், பாடல்கள், நகைச்சுவைச் சம்பவங்கள், உருக்கமான தருணங்கள், பட படக்க வைக்கும் சம்பவங்கள், திடுக்கிடும் திருப்பங்கள் என்று ஒரு பொழுது போக்குப் படம் கிட்டும். வடூவூராரின் நாவல்கள் சில சினிமாவாக எடுக்கப் பட்டமையால், சினிமாவாக மாற்றப் படுவதற்கு வசதியாகவே கதையை அவர் தீர்மானித்திருப்பார் என்று தோன்றுகிறது.

இந்த நாவலைத் துப்பறியும் கதையாக எழுதாவிட்டாலும் கூட விறுவிறுப்பான சம்பவங்களைக் கோர்த்து துப்பறியும் நாவல்கள் படிக்கும் அதே உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். வடூவூராரின் பிற நாவல்கள் போலவே யதார்த்தம், அனுபவம், தேடல்கள், உரையாடல்கள் எதுவும் அதிகம் இன்றி எழுதப் பட்டிருக்கிறது. உரையாடல்கள், அகத் தேடல்கள். இலட்சியவாதங்கள் போன்றவற்றிற்கு எல்லாம் அவசியம் இருப்பதாக அவர் கருதவில்லை.

கதை முழுவதுமே நாவலாசிரியரின் பார்வையிலேயே விரிகிறது. ஒரு சில இடங்களில், உரையாடல்களும், அகம் சார் எண்ணங்களும் விரிகின்றன. இருந்தாலும் தமிழில் நாவல் ஆரம்பித்த காலக் கட்டத்தில் இருந்த வடூவூராரின் படைப்புகள், மரபு இலக்கியப் பாரம்பரியத்தை முற்றிலும் தவிர்க்கவில்லை. ஏராளமான இடங்களில் கம்பனை அழைத்து வர்ணனைகளைச் செய்கிறார். வெண்பாக்கள் பரவலாக நாவல் முழுவதும் பயன் படுத்தப் படுகின்றன. ஒரேயடியாகச் சரளமான வசன நடையுள்ள படைப்புக்களுக்கு அவர் போய் விடவில்லை. பெரும்பாலும் மரபிலக்கியங்களைப் பாத்திரங்களின் வர்ணனைகளுக்கே பயன் படுத்துகிறார்.

வடூவூராரின் எழுத்துக்களில் ஒரு வித அநாயாசமான அங்கத உணர்வும் பீறிடுகிறது. கிண்டல், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் குசும்புத்தனமான, நுட்பமான நக்கல் எல்லாம் தூக்கலாக இந்த நாவலில் விரவி அவரது அபாரமான நகையுணர்வை வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்த நகைச்சுவை எழுத்துக்களை அந்தக் கால வாசகர்கள் ரசித்த அதே உணர்வுடன் நாம் இப்பொழுது ரசிக்க முடியாது.

பிற்காலத்தில் பிரபலமான வெகுஜன எழுத்தாளர்களான கல்கி, எஸ் வி வி, தேவன், சாண்டில்யன் ஆகியோரின் எழுத்துக்களில் வடூவூராரின் பல உத்திகளின் சாயல்கள் இருக்கின்றன. அவர்களின் நகைச்சுவை எல்லாம் இந்த நாவலில் வரும் அங்கதச் சுவையின் நீட்சியாகவே தெரிகின்றன. வடூவூராரின் நகைச்சுவை என்பது அந்தக் காலத்துப் பாணியில்,. பெரும்பாலும் மேல்நாட்டு எழுத்தாளர்களின் அங்கத வகை எழுத்தாகவே இருக்கிறது. அதுவே பின்னால் வந்த எழுத்தாளர்களாலும் வெகு காலம் பின்பற்றப்பட்ட நகைச்சுவை எழுத்துப் பாணி. நம் வாழ்க்கை துரிதமானது  போலவே உரைநடையும், நகைச்சுவை உணர்வும் மிக துரிதமாகி இருக்கின்ற்ன.  இதன் பொருட்டே ஒரு 80-90 வருடங்கள் பின்னே பயணம் செய்ய நம்மை இழுத்துப் போகிறது இப்புத்த்கம்.

சேலத்தில் ஒரு பணக்கார எஞ்சினியரின் அசட்டுப் பிள்ளையாக வளர்கிறான் வித்யாசாகர முதலியார். வெளி உலகம் தெரியாமல் வளரும் அந்த இளைஞனின் முட்டாள்தனமான நடவடிக்கைகள் அவனை எதிர்பாராத ஆபத்துக்களிலும் சம்பவங்களிலும் கொண்டு தள்ளுகின்றன, ஒரு ஏமாற்றுக் கும்பல் ”அழகிய பிராமணப் பெண் கல்யாணத்திற்கு மாப்பிள்ளை வேண்டும்” என்று மோசடி விளம்பரம் கொடுத்து, ஏமாந்து பெண் பார்க்க வரும் பணக்காரனான வித்யாசாகரனை மயக்கப் படுத்தி அவனைக் கொள்ளையடித்து உடை வரை உருவிக் கொண்டு சென்று விடுகிறது. கோவணத்துடன் மயங்கிக் கிடக்கும் வித்யாசாகரனை மற்றொரு கேடி பயன்படுத்திக் கொண்டு அவனை ஒரு சாமியார் என்று கதை கட்டி விட்டு காசு பார்க்க ஆரம்பித்து விடுகிறான். வித்யாசாகரனை ஒரு சாமியார் என்று எண்ணி சித்த சுவாதீனமில்லாமல் இருக்கும் தன் பெண்ணைக் குணப்படுத்த ஒரு ஜமீந்தார் அழைத்து வருகிறார். ஜமீந்தாரின் அரண்மனையில் அவரது மனைவிக்கும், தாசிக்கும், மந்திரிக்கும் இடையில் நடக்கும் அரசியலால் விளையும் ஆபத்தான சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் வித்யாசாகர சாமியார் சிறை செல்ல வேண்டி வருகிறது. அந்தச் சிக்கல்கள் எல்லாம் விடுபட்டு, ஜமீன்தார் குமாரிக்குப் பித்தம் தெளிந்து வித்யாசாகரனைக் கைப்பிடிக்க சுபமாக முடிவதே கதை.

நாவல் முழுவதுமே வஞ்சப் புகழ்ச்சி அணி போன்ற கேலி நிரம்பி வழிகிறது. முதல் பத்தியே வித்யாசாகர முதலியாரது மக்குத் தனத்தை அங்கதமாகக்குகிறது. வித்யாசாகரம் பள்ளி இறுதி வகுப்பைப் பாஸ் செய்ய முடியாமல் தோல்வி அடைவதை அந்தக் கால நகைச்சுவைப் பாணி எழுத்தின் மூலமாகக் கீழ்க்கண்டவாறு நக்கல் செய்கிறார்.

“நமது முதலியார் மாத்திரம் பழைய நண்பரிடம் ஆழ்ந்த அபிமானம் வைத்தவராதலால் பழைய வகுப்பு, பழைய பெஞ்சிப் பலகை, பழைய இடம் முதலியவற்றைத் துறவாமலும், பழைய உபாத்தியாயரைக் கை விடாமலும் இருந்து வித்தைக் கடலில் வீழ்ந்து, மெட்ரிக்குலேஷன் என்னும் மடுவில் கிடந்து பரீட்சைகளாகிய சுழல்களில் அகப்பட்டு அவ்விடத்தில் இருந்து மீண்டு வரும் துறையறியாதவராய் தத்தளித்து உண்மையாகவே வித்யாசாகரத்தில் மூழ்கி மூழ்கி எழுந்து கொண்டிருந்தார்”

முதலியாரை மோசடிக் கும்பல் ஏமாற்றி திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் மயக்க நிலையில் உருட்டி விட்டுப் போய் விட, அங்கு ஒதுங்கியிருந்த ஒரு பிச்சைக்காரன் அரை குறை வெளிச்சத்தில் நல்ல சிவப்பு நிறமுடைய முதலியாரை ஒரு பெண் என்று எண்ணிக் கொண்டு அவரைக் கட்டிப் பிடித்து மோகிக்க வருகிறான். அதையும் “முன்னிரவில் மனைவியைப் பெறும் அதிர்ஷடம் தனக்கு இல்லாமல் போனதற்கு ஆறுதலாக பின்னிரவில் தமக்குப் புருஷப் பேறு பலித்ததையும், எவருக்கும் கிட்டாத ஆலிங்கன சுகத்தைத் தான் பெற்றதையும் அவர் சிறிதும் உணராமல் யோக நித்திரையிலேயே ஆழ்ந்திருந்தார்,” என எழுதுகிறார்.

கைதாகி மாட்டிக் கொள்ளும் போலிச் சாமியாரையும் அவரது சீடன் முருக நடாவியையும் ஊரார் நையப் புடைக்கிறார்கள். அந்த இடத்தைச் சொல்லும் பொழுது மிகவும் நைச்சியமாக “அவ்வூரில் பிரபலப் போக்கிரியான சுல்தான் அகமதலி என்பவன் தன் திருவாயில் தான் மிகுந்த பயபக்தியோடு சேர்த்து வைத்திருந்த தாம்பூல ரசத்தை முருக நடாவியின் முகத்தில் புரொக்ஷித்தான். இன்னும் சிலர் தங்கள் கால்களாலும் கைகளாலும் சோடசோபச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். அது வரை அவர்களுக்குத் தேங்காய் உடைத்தவர்கள் இப்பொழுது அவர்கள் தலையில் தேங்காய் உடைக்க முற்பட்டனர், சாமியாருக்கு முன் வாழைப்பழத்தை வைத்து நிவேதனம் செய்தவர்கள் அவரது பின்பக்கத்தில் நின்று நிமிண்டாம்பழ நிவேதனம் செய்தனர்.” என்று எழுதும் வடூவூராரின் நடை புராதனமான நையாண்டி நடை.

இப்படி நாவல் முழுவதும் நிகழும் அனைத்துச் சம்பவங்களையுமே கேலியாக எழுதியிருக்கிறார். இருந்தாலும் மனித மனங்களின் சிறுமைகளையும், சிறுமையான செய்கைகளையும் உன்னிப்பாக அவதானித்து குத்திக் காண்பிக்கிறார். ஜமீன்தாரின் அரண்மனை வேலையாட்கள் செய்யும் வேலைகள், போலீஸ்காரர்களின் முட்டாள் தனங்கள், ஜமீன்தாரரின் சின்ன புத்தி, தாசிகளின் ஏமாற்று வேலைகள், பிராமணர்கள் மற்றும் முதலியார்களின் மேட்டுக்குடி மனோபாவங்கள், திருடர்களின் சாமர்த்தியங்கள் என்று பல்வேறு சம்பவங்களையும் வாழைப்பழ ஊசியாகக் குத்திக் காட்டுகிறார். பல கதாபாத்திரங்களின் பெயர்களையும் கூட குமாஸ்தா அழுமூஞ்சி ஆனந்தராயர், இன்ஸ்பெக்டர் ஜபர்தஸ்து மரைக்காயர், தோலிருக்கச் சுளை முழுங்கியா பிள்ளை, கூழையன், குஞ்சுண்ணி நாயர், செம்புதான புரம் என்று அமைத்திருக்கிறார்.

நாவல் முழுவதும் ஏராளமான பழமொழிகள் தெளிக்கப் பட்டிருக்கின்றன. சரளமாக சம்ஸ்கிருதம் கலந்த மொழி நடையில் எழுதப் பட்டிருந்தாலும் இப்பொழுதுள்ள தமிழுக்குப் பழக்கப் பட்டுள்ள தலைமுறையினருக்கும் கூட படிப்பதில் எவ்வித சிரமும் இல்லாத இலகுவான தமிழ் நடையில் நாவல் அமைந்துள்ளது.

சாமியாரின் சிஷ்யனைக் குறிக்க “சீஷன்” என்ற வார்த்தையே நாவல் முழுவதும் பிரயோகப் படுத்தப் பட்டுள்ளது. பின்னாளில் தமிழ் தூய்மைப் படுத்தப் பட்ட பொழுது சீஷன் போன்ற வார்தைகளில் ”ஷ”கரம் டகரம் ஆகி ”சீடன்” ஆகி விட்டிருக்கின்றன. அது போல ”பைசைகிள்”, ’ப்ராசிக்யூஷன்’, ’இன்ஸ்பெக்டர்’ என்று வார்த்தைகளையெல்லாம் அப்படியே ஆங்கிலத்தில் குறிப்பிட்டு விடுகிறார்.

பின்னாளில் இந்த நாவல் திரைப்படமாக எடுக்கப் படும் பொழுது வசதியாக இருக்கும் படி பலவிதமான ஹாஸ்யக் காட்சிகள் உண்டு. முதலியார் மயக்கமாக இருக்கும் பொழுது அவரைப் பெண் என்று நினைத்து ஒரு பரதேசி மோகம் கொள்வது, செத்துப் போய் விட்டதாக போலீஸார் கோர்ட்டில் அறிவித்து விட்ட ஜமீன்ந்தாரின் மந்திரி நாராயண பாகவதர் உயிர் பிழைத்து காவல் நிலையைத்தில் இருந்து தானாகவே நடந்து ஊருக்குள் போய் விட அவரைப் பேய் என்று நினைத்து மொத்த ஊரும் பயந்து ஓடுவது, போலிச் சாமியாரை ராமன் என்றும் தன்னைச் சீதை என்றும் நினைத்துக் கொண்டு ஜமீன்தாரின் புத்திஸ்வாதீனமில்லாத பெண் செய்யும் அமர்க்களங்கள் என்று சினிமாவின் நகைச்சுவைக் காட்சிகளாகப் பல காட்சிகள்.

நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் சினிமாக்களில் டி எஸ் துரைராஜ், ஏழுமலை, டி ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் நடித்த பழைய நகைச்சுவைக் காட்சிகளையே இந்த நாவலில் வரும் காட்சிகளும் ஒத்திருக்கின்றன. அன்று இது போன்ற காட்சிகளே மக்களுக்குக் கிச்சு கிச்சு மூட்டுபவையாக இருந்தன. அந்த/இந்தக் கால சினிமாக்களில் கதைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமல் வலியச் சேர்க்கப்படும் நகைச்சுவைக் காட்சிகள் போல, கதையுடன் ஒட்டாமல் நாவலின் நகைச்சுவை கோட்டாவை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் சேர்க்கப் பட்ட சம்பவங்களும் நாவலில் இடம் பெறுகின்றன.

இந்த நாவல் 1920களில் எழுதப் பட்டிருக்கக் கூடும். பிரிட்டிஷ் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களும் சிறு மன்னர்கள், நவாப்புகள், ஜமீன்தார்கள் ஆகியோரால் நிர்வாகிக்கப் பட்டு வந்த காலம். சுதந்திரப் போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டி விட்ட காலக் கட்டம். இருந்தாலும் இந்த நாவலில் அக் காலத்து அரசியல் நிலவரங்கள் குறித்தோ, சமுதாயப் பொருளாதார நிலமைகள் குறித்தோ அதிகத் தகவல்கள் கிடைப்பதில்லை. அக் காலக் கட்டத்தில் நிலவிய அடக்குமுறைகள், வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கொடுமைகள், தலித்துகளின் நிலைமைகள், கடுமையான ஜாதிக் கட்டுமானங்கள் போன்ற எந்த சமூக அரசியல் நிலைகளையும் லேசாகவாவது சுட்டிக் காட்ட முயன்ற பாவனைகள் கூட காணக் கிடைப்பதில்லை.

நாவல் முக்கியமாக முடிச்சுக்களைக் கட்டுவதிலும் அவற்றை அவிழ்ப்பதிலுமே கவனமாகச் செல்கிறது. தான் எழுதுவது வெறும் பொழுது போக்கு வாசிப்புக்கு மட்டுமேயன்றி, தனக்கு வேறு எந்த உள்நோக்கங்களோ, கொள்கைகளோ கிடையாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். பிரிட்டிஷாரைப் பகைத்துக் கொள்ளாமலும், வேறு சமூக ஏற்றத் தாழ்வுகளை, அவலங்களைச் சுட்டிக் காட்டுவது, கொள்கைப் பிரச்சாரங்கள் செய்வது, இலட்சியவாதம் போன்ற எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளாமலும் தன் எழுத்தை வைத்துச் சம்பாதிப்பதில் மட்டுமே கவனமாக இருந்திருக்கிறார் வடூவூரார் என்பதை ஊகிக்க முடிகிறது.

இருந்தாலும், அவரது நாவலில் இருந்து அந்தக் காலத்தின் பல சமூக நிலைகளை நாம் ஊகித்து அறிய முடிகிறது. முக்கியமாக, ஜமீன்தார்கள் போன்ற பணக்காரர்களிடமும், ஆதிக்க ஜாதிகளிடமும் தாசிகளின் செல்வாக்கு, தாசிகளின் ஆதிக்கத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றன இந்த நாவலின் மூலம் தெரிய வருகின்றன.

கதை சேலத்தில் ஆரம்பிக்கிறது. ஆனால் அப்பொழுதைய சேலம் நகரம் குறித்த எந்தவொரு புற அடையாளங்களும் விபரங்களும் சொல்லப் படுவதில்லை. பின்னர் திருப்பத்தூர் என்றவொரு நகரத்திற்கு நகருகிறது. இங்கும் அந்த ஊரின் ரெயில் நிலையம் இருக்கிறது என்ற செய்தியைத் தவிர வேறு விபரங்கள் ஏதும் அளிக்கப் படுவதில்லை. புறச் சூழல் குறித்த சித்தரிப்புகள் அபூர்வமாகவே காணக் கிடைக்கின்றன. ஜமீந்தாரின் ஜமீன் கூட ”செம்புதான புரம்” எனப் படும் கற்பனையான ஜமீனாகவே காண்பிக்கப் படுகிறது. மறந்தும் உண்மையான யதார்த்தமான இட அடையாளங்களை அவர் தரவில்லை. ஜமீந்தாரின் அரண்மனை பற்றி மட்டும் பல்வேறு குறிப்புகள் வருகின்றன அவையும் கூட கேலிச் சித்திரங்களே. மேலும் கதை நடக்கும் இடங்களின் மக்கள் பேசும் உரையாடல்களோ அவர்கள் பயன்படுத்தும் மொழியும் கிட்டுவதில்லை. ஜமீன்தார் வசம் இருக்கும் ஊர்களில் தேவாலயங்களும் அன்னச் சந்திரங்களும் இருந்தன, தாசிகளுக்குத் தனித் தெருக்கள் இருந்தன, ஜமீன்தாரின் வீடு அரை மைல் நீளம், கால் மைல் அகலம் பரவியிருந்தது என்று மேம்போக்காகச் சொல்லி விட்டு நகர்ந்து விடுகிறார். அவை கதை நடக்கும் இடங்களைப் பற்றிய மன விரிப்பை நமக்கு அளிக்கப் போதுமானவையாக இல்லை. இடம், சமூகம், அனுபவங்கள் குறித்த சித்திரங்களை அளிப்பதை விட சம்பவங்களை பரபரப்பாகச் சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

கதாபாத்திரங்களின் மூலமாக மட்டுமே அன்றைய சமூகப் பண்பாட்டு நிலைகளை நாம் ஊகித்துக் கொள்ள வேண்டி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் ஜமீன்தார்களுக்கு சில உரிமைகள் மட்டும் அளிக்கப் படுகின்றன. ஜமீன்தார்கள் வரி வசூலித்து பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கப்பம் கட்டுவதைச் செய்து வருகிறார்கள் அல்லது அவர்கள் ராஜ்யபரிபாலன உரிமைகள் பறிக்கப் பட்டு அவர்களுக்குச் சில சலுகைகள் மட்டும் பிரிட்டிஷாரால் வழங்கப் பட்டிருகின்றன. அவர்களது உரிமைகள், வசதிகள், செலவுகள், மரியாதை, செல்வாக்கு எல்லாம் பெரும்பாலும் முடக்கப் பட்டு பெயருக்கு ஜமீன்தார் என்ற படாடோபத்தோடு, அரண்மனைக்குள் கிடைக்கும் குறைந்த சுகபோகங்களில் வாழ்ந்து வந்தார்கள் என்ற செய்தி நாவலில் சொல்லப் படும் வேடிக்கையான தகவல்கள் மூலம் அறியக் கிடைக்கின்றது.

ஜமீன்தாரானவர் விஜயதசமி போன்ற முக்கிய தினங்களில் ஜரிகை தலைப்பாய், சட்டை நிஜார் போன்ற ராஜ வேஷத்தோடு, நான்கு குதிரைகள் பூட்டப் பட்ட குதிரை வண்டியில் பவனி செல்வதும், அரண்மனைக்குள் வேளா வேளைக்கு போஜனம் செய்து கொண்டு தாசிகளுடன் சல்லாபித்துக் கொண்டு, இசை கேட்டுக் கொண்டு பொழுது போக்குவதுமாக ஒரு முழு நேர நுகர்வாளராக வாழ்கிறார். அவருக்கு கிடைத்த அற்ப சலுகைகளில் ஒன்று தினமும் சரியான நீள அகலங்களில் அவருக்குப் பல் தேய்க்கக் கருவேலம் பல்குச்சி செதுக்கிக் கொண்டு வரும் சேவகன் ஒருவன்.  சொத்து நிர்வாகம், வேலையாட்கள் நிர்வாகம் ஆகியன கூட பிரிட்டிஷ் அரசில் பயிற்சி பெற்று ஓய்வு பெற்ற ஊழிய்ர்களின் கையில், அந்த வேலை கூட் ஜமீன் தாருக்கு இல்லை.

ஜமீன்தாரின் பொழுது போக்குகளில் முக்கியமானது பல்வேறு மரங்களை பிடுங்கி, நட்டு, அறுத்து, எந்தவித நோக்கமும் இல்லாமல் பல்வேறு விதமான மரச்சாமான்களை ஆசாரிகளை வைத்துத் தொடர்ந்து அழித்து மீண்டும் செய்து மீண்டும் அழித்துச் செய்து வருவது. இவையெல்லாம் நகைச்சுவையாகவே சொல்லப் பட்டிருந்தாலும் அது நாள் வரை மதிப்பும் மரியாதையும், அதிகாரமும் கொண்டு வாழ்க்கை நடத்திய ஜமீன்தார்கள் தங்கள் அதிகாரம் போன நிலையில் ஆட்சி செய்ய, அதிகாரம் செய்ய என்று எதுவும் இல்லாமல் வெறும் மதிப்பில்லாத சுகவாசிகளாக, சோம்பேறிகளாக, மடையர்களாக மாறிப் போன ஒரு போக்கை, முக்கியமான அதிகார மாற்றம் நிகழ்ந்த வரலாற்றுக் காலக் கட்டத்தை இந்த நாவல் நகைச்சுவையாகப் பதிவு செய்கிறது.

கதை நடக்கும் இடங்களிலும், வட்டார வழக்குகளிலும், சமுதாயப் பின்புலங்களிலும் அக்கறை காட்டவில்லையென்றாலும் கூட நாவலின் போக்கில் நாம் சற்று உன்னிப்பாக கவனித்தால் நிறைய தகவல்கள் கிட்டும். ஜமீன்தார் கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியின் நேரடி கண்காணிப்பில் சுயமான ஒரு போலீஸ் அமைப்பும், ஒரு நீதி அமைப்பும், தபால், மருத்துவம் போன்ற அமைப்புகள் இயங்கியிருப்பதும், போலீசாருக்கு ஜமீன்தார் பயப்படுகிறார் என்ற தகவலும் தெரிய வருகின்றன.

இதே மாதிரியான பல் பிடுங்கப் பட்ட ஜமீன்தாரின் வாழ்வினை சற்றேறக் குறைய சமகாலத்தில் பாரதியாரின் அடுத்த கட்ட உரைநடைச் சித்திரங்களிலும் நாம் காணலாம். பாரதியாரும் ஜமீனதாரரை ஒரு கேலிச் சித்திரமாகவே படைத்திருக்கிறார். சமீபத்தில் இதே போன்ற ஒரு சித்திரத்தை நாம் இரா.முருகனின் அரசூர் வம்சம் நாவலிலும் காணலாம்.

அன்றுமே அரசு வேலைகளைக் காண்டிராக்ட் எடுத்துச் செய்யும் எஞ்சினீயர்கள் சிலர் அநியாயத்துக்கு ஊழல் செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது “நான்கு நாட்களுக்குள் இடிந்து விழக்கூடிய பாலத்தை நாற்பது வருஷ காலத்துக்கு உறுதியாக நிற்கக் கூடியது என்றும், மண்ணைச் சுண்ணாம்பு என்றும், செங்கல்லைக் கருங்கல் என்றும் அத்தாட்சி கொடுத்து காண்டிராக்டர்களிடத்தில் நூற்றுக்குப் பத்து ரூபாய் வீதம் பணம் பறித்து, செல்வம் திரட்டி வைத்து விட்டு இறந்து போன சிங்கார வேலு முதலியார்” என்ற வித்யாசாகர முதலியாரது அப்பாவைப் பற்றிய குறிப்பு தெரிவிக்கிறது. 1920களிலேயே பத்து பெர்சண்ட் கமிஷன் என்ற் ஊழல் அதிகாரிகளின் நடைமுறையில் இருந்திருப்பது தெரியவருகிறது. இன்று அரசாங்கக் காண்டிராக்ட் எடுப்பவர்கள் குறைந்தது 40 சதவிகிதம் பல்வேறு இடங்களுக்கும் லஞ்சமாகக் கொடுத்து விட்டு தரம் குறைந்த சாலைகளையும் கட்டிடங்களையும் கட்டுகிறார்களாமே, இதற்குத் துவக்கம், வேர் மூலம் அங்கு, காலனியாட்சியில் என்பது தெளிவு.

பிரிட்டிஷ் ஆட்சி மிக நேர்மையாக இருந்தது, அரசாட்சியும், அன்றாட நிர்வாக்மும், சட்டம் ஒழுங்கு எல்லாமும் ஊழல் இல்லாமல், பாரபட்சம் இல்லாமல் நடந்தன என்ற ஒரு பிரச்சாரம் இந்தியாவிலும் தமிழ்கத்திலும் சுதந்திரம் பெற்ற பின் பல பத்தாண்டுகள் தொடர்ந்தன.   இன்று கூட் இத்தகைய கட்டுரைகளை நாம் தமிழ் பிரசுரங்களில் காணலாம்.  அதெல்லாம் பாமரர்களின் பிரமை என்பதை இந்த நாவல் சுட்டுகிறது.  காலனியம் இன்னும் செத்து விடவில்லை என்பது நமக்கு ஏற்கனவே தெரியும், அது நம்மவர்களின் அறிவில், சமூக அமைப்புகளில், அரசு அமைப்புகளில், சட்டத்தில் எல்லாம் இன்னும் ஆட்சி செய்கிறதே.

சட்டப்படியான மனைவியாக இல்லாமல் தாசியாக, ஆசைமனைவியாக இருப்பவர்களின் குழந்தைகளுக்கு சொத்தில் ஆறில் ஒரு பங்கு கிடைக்கும் என்ற ஒரு சட்டம் இருப்பதாக நாவலில் தாசிக்கு தகவல் கிடைக்கிறது. அதை நம்பி எதிர்காலத்தில் சொத்து கிடைக்கும் என்று கனவு காண்கிறாள். ஜமீந்தாரின் கணக்கில் தாசிகளுக்கும் 175 ரூபாய் மாதச் சம்பளம் வழங்கப் பட்டுள்ளது, பல சர்க்கார் ஊழியர்களை விட இவர்கள் நிறையவே சம்பாதிக்கிறார்கள். சர்க்கார் வைத்திய்சாலையில் மருந்து கலக்கித் தரும்  கம்பவுண்டர் (Chemist) மாதச் சம்பளம் 14 ரூபாய். இட்டலி, தோசை, காப்பியிடன் சேர்த்து காலை உணவு காலணாவுக்குக் கிடைக்கிறது. இவ்வாறாக அந்தக் காலக் கட்டத்திய பொருளாதார நிலைகள் ஓரளவுக்கு சம்பவங்களின் ஊடே வெளிப்படுகின்றன.

போலிச்சாமியார் மீது சாட்டப்பட்ட ஏமாற்று, கொலைக்குற்றம் ஆகிய குற்றங்களை விசாரிக்கும் பொழுது, சாட்சிகள் தங்கள் தொழில், வருமானம் ஆகியவற்றைச் சொன்ன பின்னரே விசாரணை ஆரம்பிக்கின்றது. தோல் வியாபாரம் செய்யும் மிட்டாதார் ஒருவர் அரசாங்கத்திற்கு 1800 ரூபாய் வருட வருமான வரி கட்டுகிறார்.

சர்க்கார் தாசில்தாராக இருந்து ஓய்வு பெற்று விட்டு ஜமீந்தாரின் திவானாக இருப்பவர், ஓய்வூதியமாக 125 ரூபாயும், ஜமீனில் மாதச் சம்பளமாக 200 ரூபாயும் பெற்றிருக்கிறார். சர்க்கார் ஊழிய அனுபவம் ஜமீன் தாருக்குத் தேவைப்படுவது ஏன் என்று நாம் யோசித்தால், அதிகார மையத்துடன் ஜமீனுக்கு உள்ள உறவுகள் எப்படிப் பேணப்படுகின்றன என்பதை நாம் ஊகிக்கலாம்.

(தொடரும்)

One Reply to “வடுவூர் துரைசாமி ஐயங்காரின் ’வித்யா சாகரம்’”

Comments are closed.