சிவப்பு மை

ரொமேஷ் குணசேகர இலங்கைப் பின்னணி கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர். தனது படைப்புகளில் இலங்கையின் விடுதலையைத் தொடர்ந்த அரசியல், சமூக பதற்றங்களைத் தொட்டுச் செல்பவர். இவருடைய முதல் நாவலான “ரீஃப்”(Reef) 1994-ஆம் ஆண்டிற்கான புக்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. Guernica எனும் இதழில் வெளியான “Red Ink” என்ற இவரது சிறுகதையை  திரு.எஸ்.சங்கர்நாராயணன்  மொழிபெயர்ப்பில் வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

யுத்த நாள். காலையில் ஜெனரல் யூ விழித்துக் கொண்டபோது கழுத்தில் வலி. சுளுக்கிக் கொண்டிருந்தது கழுத்து. படுத்தபடி புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தவர் தானறியாமல் கண்ணயர்ந்திருந்தார். பலான புத்தகம். ‘ஷாங்காய் நகர பருத்தி வியாபாரிகளின் காம லீலைகள்’, நிறைய ஆபாசப் படங்கள். புத்தகம் நழுவி விழுந்தது தெரியாது. அப்படியே தர்ப்பூசணி கணக்காய் அங்கச் செழுமையுள்ள உல்லாசக் கணிகைகளுடன் கும்மாளக் கனவுகள். மறுநாள் கண்விழித்து மேஜை மணியைத் தட்டி, தேநீர் எடுத்துவர உரத்த குரலில் பணித்தார்.

கதவை ஒதுக்கிக் கொண்டு ஒரு வழுக்கைத்தலை வேலைக்காரன் உள்ளே வந்தான். அவனது பாடாவதி அடர்நீல உடை நூற்றாண்டு பழசான முட்டைபோல இருந்தது.

தலை திருப்ப முடியாமல் ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தார். மங்கலாய்த் தெரிந்தான். ”என்னய்யா ஆச்சி என் தேநீர்?”

”தயாரா இருக்குங்க ஐயா. மாடி வராந்தால அப்டி இருங்க. தோ கொண்டாறேன்…”

தொண்டையைச் செருமியபடி எழுந்தார். தூக்கத்தில் தளர்ந்த தொளதொள தொந்தி. இரவுக்கான உடைமேல் ஒரு பட்டுத் துணியை எடுத்துச் சுற்றிக் கொண்டார். விடுதியில் இருந்து பார்க்க மெல்ல நகரும் ஆற்றின் அகலமும், குன்றுகளின் பெரும் பாறைகளும் கண்கொள்ளாக் காட்சி. ஹான் முடியாட்சியின் பேரரசர் ஒருவரால் நிர்மாணிக்கப் பட்டது அது. தன் கடைசி காலத்தில் தினசரி மலைமுகடுகளை தரிசனம் செய்தபடி ஸ்நானம் செய்ய ஆசைப்பட்டே இந்த இடத்தை எழில் கொஞ்சம் விதமாக நிர்மாணித்திருந்தார். கழுதையையும் கவிதை புனைய வைக்கும் எழில் அது.

காலை நேரத்தின் குளிர் காற்று புத்துணர்ச்சி தர வல்லதாய் இருந்தது. மரங்களிலிருந்து சோம்பலுடன் பனி மெல்ல எழுந்தது. பச்சைப் பாம்பென வளைந்து போகும் நதிப்படுகையின் செல்லச் சோம்பல். நிசப்தம்.

ஜெனரல் யூ கழுத்தை வருடிக் கொண்டார். மூங்கில் நாற்காலி ஒன்றில் அமர்ந்து வேலைக்காரன் தேநீர் எடுத்துவரக் காத்திருந்தார்.

ஒரு மடக்கு தேநீர் அருந்தினார். ”வேக வைத்த முட்டை பண்ணிரு காலைக்கு. அத்தோட ஆ கழுத்து, மஸாஜ் பண்ண ஆளைக் கொண்டா.”

வேலைக்காரன் தலையாட்டிப் போனான். ஜெனரல் யோசனையாய்க் கோப்பையைச் சுண்டினார். அடுத்த ரெண்டு மணிநேரத்தில் ராணுவத்தை எதிரியை நோக்கிக் கட்டவிழ்த்து விடத் திட்டமிட்டார். நதியின் மறுகரையில் ஒத்த ஆண், ஒத்த பெண், குஞ்சு குளுவான் யாருமே மிச்சமிருக்கக் கூடாது. பூண்டோடு கைலாசம். சுடுகாடாயிறணும் பூமி. சண்டைன்னு வந்திட்டா எதிரியை ஒட்டுமொத்தமா இல்லாம அடி. அதான் அவர் சித்தாந்தம். இரக்கமே கூடாது. ஒரு சிறைக் கைதி இல்லை. ஏன்னா உயிர் பிழைச்சவனே இல்லை… அவர் காலத்தில் அவரைப் போல ஈவிரக்கமற்ற, நினைக்கவே திகிலூட்டக் கூடிய வேறு முரடனைக் காண முடியாது. இன்னொரு மடக்கு தேநீர் பருகிவிட்டு எழுந்து கொண்டார். எதையும் சொல்கிறவர் அல்ல அவர், செயல்வீரர்.

வராந்தாவில் நடை பயின்றார். கழுத்தை அமுக்கி விட்டுக்கொண்டு வலியை விரட்டப் பார்த்தார்.

அங்கிருந்து பார்க்க விடுதி மேலாளர் வூ லி தூரிகை தீட்டும் கல்லைத் தேய்த்து மழுமழுப்பு பார்த்துக் கொண்டிருந்தை கவனித்தார். அவரைச் சுற்றிலும்நிறையக் கிண்ணங்கள், தனித் தனி கற்களை வண்ணத்துக்கு ஒன்றாக அழகாய்ப் பக்கத்தில் எடுத்துவைத்துக் கொண்டிருந்தார்.

”என்ன பண்ணிட்டிருக்கீங்க, வூ?” என்று சத்தமாய்க் கேட்டார்.

”வரையப் போறேன் ஐயா.”

”இப்பவா? இன்னிக்கு நமக்கு யுத்த நாள்…”

”ம். அத்தோட இன்னிக்கு ‘சூரிய நடுநாள்’. பகல் பாதி, ராத்திரி பாதி… சரிபாதியா ரெண்டும் இணைஞ்ச சமத்துவ நாள்.”

”ஹா! திரு வூ. இன்னிக்கு நம்ம எதிரியை வழிச்சித் துடைச்சிருவேன். இனி நம்ம ராஜ்ஜியத்துக்கு ஆபத்துன்ற பேச்சுக்கே இடமில்லை! ஆபத்துன்ற இடத்துக்கே பேச்சில்லை! நீங்க வரையறதானா நம்ம யுத்தத்தை வரையுங்க. நம்ம வெற்றியின் கொண்டாட்டமா அது இருக்கலாம்லியா? உங்க விடுதி பூரா ஓவியங்களைப் பார்த்தேன், மலைகள், ஓடைகள், பறவைகள், மலர்கள்… இதுங்களாத்தான் இருக்கு. மனுஷ அடையாளமே, மனித வாசனையே துளிக்கூட காணம். நம்ம ராஜாவின் சேனைக்கும், எதிரிப் படைக்குமான போராட்டம்… இதெல்லாம் காணல்லியே? இதெல்லாம் இல்லாம என்னத்தை வரைஞ்சு என்ன?”

”அப்படி இல்லை ஐயா…” என்றார் வூ. என் சித்திரங்கள்லியும் முரண் இருக்கு, இருட்டும் வெளிச்சமும் முட்டி மோதுகின்றன, எதற்காக? முடிவில் ஒன்றில் ஒன்று இணைகிற சமத்துவத்துக்காக….”

”யுத்தம்…, திரு வூ” என்றார் ஜெனரல். ”போராட்டமே மனித அடிப்படை அடையாளம். ரத்தம்! அதுதான் விஷயமே தவிர, தொட்டுத் தொட்டு இழுவுறீங்களே அந்த மை அல்ல!” அவர் கழுத்து நரம்பு திரும்பவும் விண் விண்ணென்று தெறித்தது. கையை மடக்கி உதறிக் கொண்டார்.

”திரு வூ? நம்ம எல்லாரும் ஹாயா உட்கார்ந்துகிட்டு அழகழகான பாறைகளையும் மேகக் கூட்டங்களையும் விதவிதமா வரைஞ்சுகிட்டு தாலாட்டிக்கிட்டு, அக்கடான்னு கெடந்தமானா, இந்த ராஜ்ஜியம் என்ன கதியாவும்?”

”ஆகா அப்போ நம்ம விடுதி பூரா நிறைய ஓவியர்கள் இருப்பாங்க!”

”நீங்க பராக்கு பார்த்தால், காட்டுப்பயல்கள் வந்து உங்களை தேயிலை பறிக்க வேலையாளாப் பிடிச்சிட்டுப் போயிருவாங்க…” ஜெனரல் கையாட்டிச் சொன்னார்.

”நாங்க இல்லாம நீங்க எப்டி, திரு வூ? உங்களுக்கு நாங்கள் தேவை! பத்து மணிக்கு என்னோட வாங்க. எங்க பராக்கிரமச் செயல்களையும் வீரதீரத்தையும் ஓவியமா வரைங்க…”

”மலைகள், பாறைகள், இந்த நதிகள்… உண்மையச் சொன்னா இவைதான் உலகம் ஜெனரல். நம்ம காலம் முடிஞ்சுரும். அதுங்க நம்ம காலம் முடிஞ்சும் ரொம்ப காலம் இருக்கும். உங்க பிரதாபங்கள் எல்லாம், மிச்சமிருக்காங்க பாருங்க, அவங்களுக்குத்தான்.”

வேலையாள் வந்தான். ஜெனரலைப் பார்த்து முட்டையே இல்லை, கோழிகள் எல்லாமே இறந்து விட்டன, என்றான். அதைவிட மோசம், அந்த மசாஜ்காரி… அவ ஆளே ஓடிப் போய்விட்டாள்.

ஜெனரல் உடை தளர்த்தி வெளி மூச்சு விட்டார். உடைவாளை உருவி அந்தரத்தில் பிடித்தார். தலையை நிமிர்த்தி ”வாங்க திரு வூ. நிறையப் பேசிட்டம். வாளெடுக்கிற வேளை வந்தாச்சி. வாள் உங்கள் ஓவியத்துக்கு மேலும் ஆழமும் செழுமையும் தரும். ரத்தத்துக்கு விடுதலை குடுங்க. என் கழுத்து வலியை சொஸ்தப் படுத்துங்க…”

வூ லி தலையுயர்த்திப் பார்த்தார். ஜெனரல் உருப்பெருகிக் கொண்டே வந்தார். அவரது கொடி பறக்கிறது. பின்புறத்தில் இருந்து உடை அப்படியே மேலெழும்பி சடசடக்கிறது. மாடித் தாழ்வாரத்தில் ராட்சஸ நிழல் ஒன்று கவிகிறது.

வூ லி தனது தாளுக்குக் குனிந்தார். நான்கு மூலைகளிலும் தாள் எழும்பாமல் கனம் வைத்தார். ஒரு கிண்ணத்து மையில் தூரிகையை நனைத்துக் கொண்டார். கவனத்தைக் குவித்தார்.

ஜெனரல் தன் பாவப்பட்ட வேலையாள் பக்கம் தடுமாறிக் குனிந்தபோது, வூ லி தனது முதல் தீற்றலை ஆரம்பித்தார். பளீரென்ற வெள்ளைத் திட்டில் ஒரு பாம்புச் சுருளல். அழுத்தமாகவும் வெளிறிய கோடாகவும் நதி தாளில் கெட்டியாய் உறைந்தது…

தூரிகையில் தொட்டது சிவப்பு மை.