வடுவூர் துரைசாமி ஐயங்கார்

kamalambal-sarithiramபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளிலேயே தமிழ் இலக்கியத்தில் நாவல்கள் வந்து விட்டன. அவை ஜனநாயகப் படுத்தப்படாமல், பரவலாக வாசிக்கப்படாமல், கற்றோர்  மட்டுமே வாசித்த இலக்கியமாக நின்று போயின. ராஜமையர் (கமலாம்பாள் சரித்திரம்), மாதவையா (பத்மாவதி சரித்திரம்) போன்றவை எழுதப்பட்ட அந்த காலகட்டம் தமிழில் நெடுங்கதையின் துவக்கம். பின்னர் 1940-களில் நவீன இலக்கியம் என்று கருதப்பட்ட இலக்கியம் வரும் வரையில் ஒரு நீண்ட இடைவெளி விழுந்தது.

இந்த இடைவெளிக் காலத்தின் ஆரம்பமான, 1900களின் ஆரம்பத்தில் தமிழில் நெடுங்கதைகள் புனையப்படுவது வணிகமயமாகவும் முற்றிலும் பொழுது போக்கு வகை வாசிப்பாகவும் உருவெடுக்கிறது. அச்சுப் பொறிகளும், காகிதங்களும் வசதியாகக் கிடைக்கத் துவங்கிய அக்காலத்தில் நாவல் எழுதுவது ஒரு தொழில் போல,  இயந்திரத் தயாரிப்பு போல ஒரு லாபகரமான வியாபாரமாக மாறுகிறது. இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பங்களிப்பால்  தமிழில் கதைகள் வாசிக்கும் வழக்கம்  மக்கள் இயக்கமாக மாறுகிறது. வாசிப்பது என்பது, ஓரளவே படித்த பொது ஜனங்களிடமும் ஒரு பிரதான பொழுதுபோக்கு நடவடிக்கையாகிறது. 1900களின் முதல் 25 ஆண்டுகளில் இந்த மாற்றம் உருவாகி வளர்கிறது.  ஒரு வாசக சந்தை உருவாக்கப்பட்ட பின்பு, வாசிக்கும் வழக்கம் வெகு ஜன இயக்கமாக மாறிய பின்னரே,  தமிழிலக்கியம்  பரிணாம வளர்ச்சி அடைந்து 1940களில்  நவீன எழுத்துக்கான  இயக்கமாகிறது.

antiqueஇவ்வாறு, 1800களின் இறுதிப் பகுதிக்கும் நவீன இலக்கிய துவக்கக் காலமான 1940களுக்கும் இடைப்பட்ட  காலம் தமிழ் இலக்கியத்தில் இருண்ட காலமல்ல, மாறாக படிக்கும் பழக்கத்தின் வளர்ச்சிக் காலகட்டமாகவே இருந்திருக்கின்றது. இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் பெரும்பாலும் தழுவல் இலக்கியங்களாகவும், மேல்நாட்டுப் பொழுதுபோக்கு இலக்கியங்களை அடியொற்றிய துப்பறியும் நவீனங்களாக,  இலக்கிய விமர்சகர்களால் பொருட்படுத்தப்படாத எழுத்து வகைகளாக இருந்தாலும் கூட இந்த காலகட்டமும், அன்று வந்த எழுத்துகளும், எழுத்தாளர்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில்  கவனிக்கப்பட வேண்டிய இடத்தில் உள்ளார்கள்.

1900களின் ஆரம்பத்தில், ஆரணி குப்புசாமி முதலியாரின் நாவல்கள் மக்களிடம் புஸ்தகம் படிக்கும் ஆவலைத் தூண்ட, தொடர்ந்து ஜெ ஆர் ரெங்கராஜு என்பவரின் நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அச்சக உரிமையாளரான ரெங்கராஜூ தன் ஒவ்வொரு நாவலையும் பத்தாயிரம் காப்பிகள் அச்சடித்து  விற்று தமிழ் நாவல்களுக்குப் பெரும் வாசகக் கூட்டத்தை உருவாக்கினார்.  ரெங்கராஜுவின் நாவல்கள் காப்பியடிக்கப்பட்ட நாவல்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவருக்குச் சிறைத் தண்டனை  கிடைக்கும் வரை ரெங்கராஜு  பெரும் வணிக எழுத்தாளராக இருந்து வந்திருக்கிறார். முதன் முதலில் தமிழ் நாவல்களை பெரும் அளவில் அச்சடித்து, பதிப்புத்துறை என்றொரு தொழிலை இவர் உருவாக்கினார்.

ரெங்கராஜுவைத் தொடர்ந்து அதே பாணியில் நிறைய எழுத்தாளர்கள் உருவாகி மக்களின் வாசிப்புப் பழக்கத்திற்குத் தீனி போட ஆரம்பித்தனர். அவர்களில் பெரும் புகழ் பெற்று பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். ரெங்கராஜு, வடுவூரார், வை.மு.கோதைநாயகி அம்மாள் ஆகியோர் பிரபலமான எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டு கதைகளை எழுதிக் குவித்து தமிழ் வாசகக் கூட்டத்தை உருவாக்கினர்.   இவர்கள் எழுதிய கதைகள் பெரும்பாலும் ஆங்கில பரபரப்பு இலக்கியக் கதைகளைத் தழுவியவையே. மேலைப் பழக்க வழக்கங்களையும் மனோபாவங்களையும் தமிழ் நாட்டில் பரப்பி தமிழ் வாசகர்களை அநாச்சாரப் படுகுழியில் தள்ளுவதாக இந்த வகை எழுத்துக்கள் அன்றே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.

”என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “நான் ஒரு எழுத்தாளர்” என்று ஒருவர் பதில் சொன்னாராம். “அது சரி, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள்?” என்று மீண்டும் கேள்வி எழுந்ததாம். அதுதான் என்றும் தமிழ் எழுத்தாளர்களின் பொருளாதார நிலை. புதுமைப்பித்தன் முதல் ஸ்டெல்லா ப்ரூஸ் வரையில் தமிழில் வறுமையில் வாடிய எழுத்தாளர்களே அதிகம். தமிழில் முழுநேர எழுத்தாளராக மட்டும் இருந்தால் இரண்டு வேளைச் சாப்பாட்டுக்குக்கூட வழி பிறக்காது என்பது நிதர்சனம். ஆக, ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு, கூடவே எழுதவும் செய்யலாம் என்பதுதான் தமிழ் எழுத்தாளர்களுக்கு விதிக்கப்பட்ட விதி. தமிழில் எழுதிப் பிழைத்த்வர்களே குறைவு; பணம் பார்த்தவர்களோ வெகு அரிது. ஆனால் அன்றே, எழுத்தை மட்டுமே முழு நேரத் தொழிலாகத் தேர்ந்தெடுத்து, தன் எழுத்து வருமானத்தை மட்டுமே வைத்து, வீடும் கட்டிச் செல்வாக்காக வாழ்ந்தவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். தமிழில் கேளிக்கை எழுத்துக்களைப் பிரபலமாக்கி, அச்சகங்களை, நூல் பதிப்பை  ஒரு தொழிலாக முன்வைத்ததில் வடுவூராருக்குப் பெரும் பங்குண்டு.

1880ல் மன்னார்குடி வட்டத்தில் உள்ள வடுவூர் கிராமத்தில் பிறந்த துரைசாமி ஐயங்கார், பி.ஏ பட்டம் படித்துவிட்டு அரசு வேலையில் சேர்ந்தவர்.  தான் பார்த்து வந்த தாசில்தார் வேலையை உதறி விட்டு, எழுத்து ஆர்வத்தில் முழுநேர எழுத்தாளராகத் துணிந்தார் வடுவூரார்.  எழுத்து அவரைக் கைவிடவில்லை.  புகழையும், செல்வத்தையும் பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் வந்த மாத நாவல்கள், பாக்கெட் நாவல்களின் முன்னோடியாகத் தனது மனோரஞ்சிதம் என்ற மாதப் பத்திரிகை வாயிலாக, மாதம் ஒரு நாவல் எழுதியுள்ளார். அவற்றைத் தனது கலைமகள் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் விற்பனை செய்து, எழுத்து, அச்சு, பதிப்பு என்று நாவல் வெளியிடுவதை ஒரு லாபகரமான தொழிலாக நிறுவினார்.

தன் எழுத்து வருமானத்தில் தங்க பித்தான் கோட்டு, அங்கவஸ்திரம், தலைப்பாகை, ஷூ, கைத்தடி, பட்டுக்கரை வைத்த பஞ்ச கச்சம், டாலடிக்கும் வைரக் கடுக்கன், தங்க பஸ்பம், நண்பர்கள், இலக்கிய உரையாடல், வரலாற்று ஆராய்ச்சி என்று வாழ்க்கையை உல்லாசமாகவே கழித்திருக்கிறார். அவருக்குப் பின்னால் தன் எழுத்தால் மட்டும் செல்வாக்காக போக-வாழ்க்கை வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே இல்லை. பின்னாட்களில் கல்கி, சுஜாதா, ராஜேஷ்குமார், சாண்டில்யன், ரமணிச்சந்திரன் போன்ற ஒரு சில வணிக எழுத்தாளர்கள் எழுத்தின் மூலமாகக் கணிசமாகச் சம்பாதித்தாலும் கூட பொழுதுபோக்கு வாசிப்பு என்ற ஒரு வழக்கமே இல்லாதிருந்த கால கட்டத்தில் அப்படி ஒரு வாசிப்பை உருவாக்கி  வெற்றி பெற்றவர் என்ற வகையில் வடுவூரார் பொழுதுபோக்கு எழுத்தாளர்களின் முன்னோடியாகிறார்.

வடுவூராரின் பல கதைகளும் ஆங்கில நாவல்களின் தழுவல்கள் என்பதை அவரே ஒத்துக் கொண்டிருப்பதாக விமர்சகர் க.நா.சு சொல்கிறார்.  பெரும்பாலும் ரெயினால்ட்ஸ் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களைத் தழுவியே கதைகள் எழுதினாலும்,  தமிழ் வாசகர்களுக்காக சமகால வழக்கை ஒட்டிய  உரைநடையைப்  பயன்படுத்துகிறார் வடுவூரார். பெரும்பாலான கதைகள் துப்பறியும் கதைகளாக எழுதியிருந்தாலும் கூட ஒரு சில சமூக நாவல்களையும், ஒரு வரலாற்று நாவலையும் எழுதியுள்ளார்.  விக்டர் ஹ்யுகோவின் லே மிஸெஹப்ள (Les Miserables)  எனும் ஃப்ரெஞ்சு நாவலைத் தழுவி எழுதிய நாவல் ஒன்று குறிப்பிடத் தகுந்தது என்கிறார் க.நா.சு.

‘கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும்’, ’வசந்த கோகிலம் அல்லது பூரண சந்திரோதயம்’, ’விலாசவதி’, ’திகம்பர சாமியார்’, ’மேனகா’, ’கும்பகோண வக்கீல்’, ’மாயா விநோதப் பரதேசி’, ’மதன கல்யாணி’, ’பாலாமணி அல்லது பக்காத் திருடன்’, ’சௌந்திரா கோகிலம்’ போன்ற தலைப்புகளில்  நாவல்களை எழுதிக் குவித்து  இருக்கிறார்.  இவரது ’மேனகா’, ’திகம்பர சாமியார்’ போன்ற கதைகள் சினிமாவாகவும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற்ன. தன்  பெரும் செல்வத்தை வைத்து, சென்னையில் பைஃகிராஃப்ட்ஸ் சாலையில் ஒரு வீட்டை வாங்கி மாற்றிக் கட்டி வடுவூர் ஹவுஸ் என்று பெயரிட்டு வாழ்ந்திருக்கிறார். இவரது

வடுவூரார் ஒரு வினோதமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார். ஃபேரோக்கள் என்ற எகிப்திய மன்னர்கள் தமிழ் நாட்டில் இருந்து எகிப்து என்ற மிசிர தேசத்திற்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்பதை ஆதாரங்களுடன் நிறுவி, தி லாங் மிஸ்ஸிங் லிங்க் என்றொரு 900 பக்க ஆராய்ச்சி நூலை எழுதி அவரே பதிப்பித்து வெளியிட்டதாகவும், அந்த நூல் விலைபோகாதபடியால் தன் சென்னை வீட்டை விற்று விட்டு கிராமத்துக்கே திரும்பி விட்டதாகவும் க. நா. சு நினைவு கூறுகிறார்.

வாழ்க்கை முழுவதையும் எழுத்துடனே செலவிட்ட இவருடைய சாவும் எழுத்துடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. இவருடைய ‘மைனர் ராஜாமணி’ என்ற நாவல் திரைப்படமானபோது ஒரு சமூகத்தாரை கீழ்த்தரமாகச் சித்தரிக்கிறது எனக் கடுமையான எதிர்ப்பு வந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல்  அதிர்ச்சியிலும் அவமானத்திலும் இறந்திருக்கிறார் வடுவூர் துரைசாமி ஐயங்கார்.

1920களில் புகழடைந்த எழுத்தாளரின் படைப்புக்கள் சிலவற்றைச் சிறு வயதில், தொட்டால் உதிர்ந்து விடக் கூடிய, பழைய வாசம் அடிக்கும், பழுப்பு நிறத் தாள்களினாலான முதலும் கடைசியும் காணமால் போன அபூர்வமான  புஸ்தகங்களில் படித்திருக்கிறேன். இப்பொழுது அல்லையன்ஸ் பதிப்பகத்தார் தயவில் அவரது நாவல்கள் எல்லாம் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு படிக்கக் கிடைக்கின்றன. அப்படிப் படிக்கக்கிடைத்த ‘வித்யாசாகரம்’ என்றொரு வடுவூராரின் நாவலை ஒரு மாதிரிக்கு எடுத்துக் கொண்டு இங்கு கொஞ்சம் விரிவாக அலசப்போகிறேன். வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்களின் நடையும், வடிவமும், பாணியும் இன்றைய பின்நவீன /அதிநவீன காலகட்டத்தில் நமக்குப் பிடிக்காமல் போகலாம். அவரது நாவல்களை இன்றைய ஃபாஸ்ட் ஃபுட், இன்டர் நெட், டிவிட்டர் யுகத்தில் படிக்க அசாத்தியமான பொறுமையும், கவனமும் தேவைப்படலாம். ஒரு சிலருக்கு இரண்டு பக்கத்துக்கு மேல் படிக்க முடியாமல் எரிச்சல் கூட ஏற்படலாம். கிட்டியது அவரது பழைய புஸ்தகப் பிரதி என்றால் தூசி கிளம்பி ஆஸ்துமா, அலர்ஜி போன்ற ஒவ்வாமை நோய்களைக் கூட ஏற்படுத்தலாம்.

இருந்தாலும் தமிழின் ஆரம்பகால எழுத்துக்கும், நவீன இலக்கியதுவக்கமான மணிக்கொடி காலகட்டத்திற்கும் நடுவில், பொழுதுபோக்கு வாசிப்பு என்றொரு  பண்பாட்டு மாறுதலை வளர்த்த, நாவல் பிரசுரத்தை ஒரு தொழிலாக  மாற்றிய   1900-1940 காலத்து எழுத்து தமிழிலக்கிய வரலாற்றில் ஆர்வமிருக்கும் எவருக்கும் கவனத்தில் இருக்கும். அக்கால சமூகப் பண்பாட்டுச் சூழல்களையும், மொழியின் போக்கையும் அறிய விரும்பும்  இலக்கிய, சமூகவியல் ஆர்வலர்கள் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் ஒன்றிரண்டு நாவல்களையாவது படித்து அறிவது மிகவும் நல்லது.

One Reply to “வடுவூர் துரைசாமி ஐயங்கார்”

Comments are closed.