மகரந்தம்

புளித்த ஏப்பக் குரங்குகள்: “மனுசன் குரங்கிலிருந்து வந்தான் அப்படீன்னா, ஏன்யா குரங்கு இன்னும் மனுசனாக மாட்டேங்குது?” என்று அசட்டுத்தனமாக கேட்டுவிட்டுப் பெரிய அறிவாளி போலப் புளித்த ஏப்பங்களை விடும் படைப்புவாதிகளை நீங்கள் பார்த்திருக்கலாம். பரிணாம மாற்றங்களை நோக்கிச் செல்லும் உயிரினங்கள் வேறுபாடுகள் அடைதலை பெரும் விலங்குகளில் காண நீங்கள் குறைந்தது ஐம்பதாயிரம் அறுபதாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டியிருக்கலாம். ஆனால் வாழ்க்கைச் சுழற்சிகள் மிகக் குறைவான கால அளவே  உள்ள விலங்குகளில் நீங்கள் எளிதாக அதைக் கண்டடையமுடியும்.  அறிவியல் கண்டடைந்த வண்ணம்தான் இருக்கிறது இத்தகைய மாற்றங்களை.  அறிவியல் வரலாற்றில் முதல் முறையாக  (சன் டிவிக்கு என்ன காப்புரிமையா  இருக்கிறது இதில்?) ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாக்களில்  மரபணு மாற்றங்கள் தோன்றி ஒரு சில தலைமுறைகளில் அவை வாழும் சூழலுக்கான தகவமைப்பாக மாறுகின்றன என்பதை பதிவு செய்திருக்கிறார்கள்.  இங்கே வந்து சொடுக்குங்கள்:
http://www.the-scientist.com/blog/display/56136/

யாரய்யா புளித்த ஏப்பக்காரர், எங்கே போனார் அவர்?

ஆப்பிரிக்காவில் தோன்றப்போகும் புதிய பெருங்கடல்: Western Afar Rift Ethiopiaஆப்பிரிக்க நாடான எத்தியோபிய பாலைவனத்தில் தோன்றியிருக்கும் 35 மைல் நீளமுள்ள ஒரு பெரும்பிளவு ஒரு புதிய பெருங்கடலைத் தோற்றுவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதனால் ஆப்பிரிக்கா இரண்டாகப்  பிளக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். பயப்படவேண்டாம்! இந்தப்பிளவு சிறிது, சிறிதாகப் பெரிதாகி பெருங்கடல் உருவாவதற்கு 30 மில்லியன் வருடங்களாவது ஆகுமாம். இப்பிளவு கொஞ்சம் கொஞ்சமாக செங்கடலையும் இரண்டாகப் பிரிக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். வெறும் சர்ச்சைக்குரிய அனுமானமாக மட்டுமே இருந்த இந்த எதிர்பார்ப்பு இப்போது அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதைக் குறித்துப் பேசும் ‘லைவ் சைன்ஸ்’ கட்டுரை இங்கே.

வாடும் குங்குமப்பூ
Saffron flower plucker - Kashmirகாஷ்மீரில் என்ன நடக்கிறதோ இல்லையோ இந்தியாவில் என்றும் மங்காத,  தேயாத,  நலிவே  இல்லாத  இரண்டு தொழில்கள்  மிக  நன்றாகவே நடக்கின்றன. ஒன்று அரசு அலுவலர்களின், அரசியல் வாதிகளின்  தடை ஏதுமற்ற, தயக்கமற்ற கை நீட்டல்- அதான், லஞ்சம். இன்னொன்று எங்கும் எப்போதும் வீடுகள் கட்டுவது. வயல்களெல்லாம் வீடு, ஏரிகளெல்லாம் வீடு, காடெல்லாம் வீடு என்று இந்தியா செங்கல் சூளையாகிக் கொண்டிருக்கிறது. ஹரப்பா வீழ்ந்தது போல இதுவும் வீழ்ச்சிக்குதான் வழி என்று யாரும் கருதுவதோ, மாற்று வழிகளைத் தேடுவதோ கிடையாது என்பது தெளிவு.  அரசியல் தலைவர்களும் சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கி விட்டு அடுத்தடுத்த தலைமுறைகளை மேற்குக்கு அனுப்பி விடுவார்கள் போலிருக்கிறது. இங்கே ஒரு கட்டுரை காஷ்மீரின் புகழ் பெற்ற குங்குமப் பூ பயிர்த் தொழில் எப்படி வாடி வதங்கிக் கருகிக் கொண்டிருக்கிறது என்று விவரிக்கிறது. உலகச் சந்தையிலும், இந்தியாவிலும் கிட்டத் தட்ட தங்கம் வெள்ளி போல உயர் விலைக்கு விற்கும் குங்குமப் பூ சாகுபடியை நடத்தியாவது காஷ்மீரி மக்கள் மேம்படட்டும் என்று காஷ்மீரி அரசியல் தலைவர்களே கூட ஏன் நினைப்பதில்லை?

பெரு வீழ்ச்சிப் பாதையில் அமெரிக்கா
இரண்டாம் உலகப் போருக்குப் பின் சில பத்தாண்டுகளாவது அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம், பெரும் உற்பத்தி, ஊடக வியாபகம் என்று எதிலும் எந்த நாட்டையும் விடப் பெரும் ஆகிருதியொடு மிளிர்ந்த அமெரிக்கா, இன்று கரையான் அரித்த மர வீடாகத் தெரிகிறது. கடும் உழைப்பும், விடா முயற்சியும் கொண்டு நூறாண்டுகளாகக் கண்டுபிடிப்புகளிலும், நுட்பத் தாவல்களிலும் முதலணியில் விளங்கிய அமெரிக்கா, நலியத் துவங்கியதேன்? உற்பத்தி, ஆய்வு என்று பெரும் பொருளாதாரத்துக்குத் தேவையான பல விதமான உழைப்பையும் பிறரிடம் கொடுத்து விட்டு, பிறருக்குத் தாம் தயாரித்து முன்பு விற்ற நுகர்வுப் பொருட்களை அவர்களே உற்பத்தி செய்ய, தாம் அவற்றை வாங்கித் துய்ப்பதையே தமது வாழ்முறையாக ஏற்றுக் கொள்ளத் துவங்கியதே வீழ்ச்சியின் ஆரம்பம். கிட்டத்தட்ட அனைத்து உடலுழைப்பு மற்றும் மூளை உழைப்பையும் வெளிநாட்டினரிடம் கொடுத்து, தாம் ஆதிக்கம் செலுத்துவதை மட்டும் செய்யலாம் என்று எண்ணிய அமெரிக்கருக்கு இன்று உழைப்பும் உற்பத்தியும் இல்லாத ஆதிக்கம் வெறும் சிலந்தி வலை என்று புரியத் துவங்கி இருக்கிறது. மேலும் உலக வலையில் அமெரிக்கர் செலுத்திய ஆதிக்கம் இன்று உலகளாவிய கணினி உற்பத்தி மற்றும் மென்பொருள் தயாரிப்பால் ஆபத்துக்கு உள்ளானது. மொத்த அரசாங்கத்தையும் கணிணி மூலமாகவே நடத்தும் அமெரிக்கா, கடந்த சில வருடங்களில் பல நாடுகளின் உளவு நிறுவனங்களால் ஊடுருவப்பட்டு தன் பெரும் ரகசியங்களை இழந்து விட்டது, எந்நேரமும் முழுதும் கட்டுப்பாட்டை இழந்து பரிதவிக்கப் போகிற ஆபத்தை எதிர் நோக்குகிறது. எங்கெல்லாம் உளவாளிகள் நுழைந்து என்னென்ன தகவல்களை எடுத்துப் போயிருப்பார்கள், எப்படி அமெரிக்க மக்களுக்கு இது தெரிந்து விடாமல் அமெரிக்க அரசு மூடி மறைக்கிறது என்று சொல்கிறது இந்தக் கட்டுரை.

சத்தமில்லாமல் ஒரு எழுத்துப் புரட்சி
எழுத்து ஊடகம் புதிய அவதாரங்களை எடுக்கும் கட்டங்களில், சமூகத்தின் மீதான அதன் தாக்கம் அளப்பெரியது. தொழிற்புரட்சியை தொடர்ந்த அச்சு ஊடகங்களின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் பல்வேறு சமூகங்கள் கண்ட பெரும்பாய்ச்சல், உள்ளங்கையில் வெண்ணை. கடந்த சில வருடங்களாக அசுர வேகத்தில் பரவிவரும் இணையம் சார்ந்த எழுத்துக்கள் சத்தமில்லாமல் தனி மனித சுதந்திரத்தையும், அவரவர் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் சாத்தியங்களையும் உள்ளடக்கியுள்ளது. இணையம் எழுத்தாளர்களின் எண்ணிக்கையையும், வாசகர்களையும் அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக வலைப் பூக்கள், துரித தகவல் பகிர்வு சேவைகள்(ட்விட்டர்,..) போன்றவையின் நடைமுறைத் தாக்கங்கள் முக்கியமானவை(சாதி வன்முறைகளையும், புளித்த வரலாற்று ”உண்மை”களையும்(?!) மட்டுமே முன்வைக்கும் தமிழ் இணைய சூழல் குறித்த கவலை இங்கு அவசியமில்லை). அவை என்னென்ன? எழுத்துலகில் இணையம் ஏற்படுத்திவரும் பெரும் மாற்றத்தால், இனி வரும் காலங்களில் சமூகம் எத்தகைய சூழலை கொண்டதாக இருக்கும்? இதைப் பற்றி பேசுகிறது இந்தக் கட்டுரை.