புரிந்து கொள் – 2

இக்கதையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

கம்ப்யூட்டர்களின் காவல்களை உடைப்பது மிகவுமே தண்டமான வேலை. சிலர் தம் சாதுரியத்திற்கு இந்த வகை முயற்சிகள் ஒரு சவால் போலத் தோன்றுவதால் இந்த வேலையில் இறங்குவார்கள் என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் இதில் ஒருவிதமான தொழில் நேர்த்தியும் இல்லை. திருடன் எந்த வீட்டுக் கதவு சரியாகப் பூட்டவில்லை என்று ஒவ்வொரு கதவாக இழுத்துப் பார்ப்பதற்கும் இதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. எப்போதாவது உதவும் வேலை, ஆனால் சிறிதும் சுவாரசியமற்றது.

எஃப். டி. ஏ(Food and Drugs Administration) உடைய பிரத்தியேகத் தகவல்தளத்துக்குள் (data base) நுழைவது எளிதாகவே இருந்தது. ஒரு மருத்துவ மனையின் சுவரில் இருந்த டெர்மினலுடன் சிறிது விளையாடினேன், வருபவருக்குத் தகவல் தரும் செயல்திட்டத்தைச் சிறிது ஓட விட்டேன், பல வரைபடங்களையும், ஊழியர் பட்டியலையும் அது காட்டியது. அந்தச் செயல்திட்டத்தைத் தாண்டி மேலே போய் மொத்த கணினியின் அமைப்புத் தளத்துக்குள் (System) ஊடுருவினேன். அங்கே ஒரு கவனம் திருப்பும் செயல்திட்டத்தை எழுதிப் பொருத்தினேன். அது முதல் திரையில் ஊழியர் தாம் நுழையுமுன் தகவல் நிரப்பும் திட்டம் போல ஒன்றைப் போலி செய்தது. பிறகு அதை அப்படியே விட்டு வைத்தேன். பின்னால் ஒரு மருத்துவர் வந்து தன் கோப்புகளைச் சோதிக்க வந்தார். இந்தப் போலிச் செயல்திட்டம் அவருடைய கடவுச் சொல்லை முதல் முறை மறுத்தது. பின் அசல் செயல் திட்டத்தைத் திரையில் காட்டியது. மருத்துவர் மறுபடி முயன்று தன் கோப்புகளை அடைய வழி கேட்டுப் பதிவு செய்தார். இம்முறை அவரால் தன் கோப்புகளுக்குப் போக முடிந்தது. ஆனால் அவருடைய தகவலும், கடவுச் சொல்லும் என் போலிச் செயல் திட்டத்திடம் இருந்தன.

மருத்துவரின் கணக்கு வழியே எஃப் டி ஏ உடைய நோயாளிகளின் தகவல்தளத்துக்குள் நுழைந்து பார்க்க எனக்குப் பாதை திறந்தது. முதல் கட்ட சோதனைகளில், நலமுள்ளவராக இருந்தும், தானாக முன்வந்து சோதனைக்குள்ளானவர்களிடம் ஹார்மோனுக்கு எந்த விளைவும் இல்லை. இப்போது நடந்து கொண்டிருக்கும் இரண்டாம் கட்ட மருத்துவச் சோதனைகளோ வேறு விதமாக இருந்தன. எண்பத்தி இரண்டு நோயாளிகளைப் பற்றிய வாராந்தர அறிக்கைகள் இங்கு இருந்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு எண், எல்லாரும் ஹார்மோன் ’கே’ கொடுக்கப்பட்டவர்கள், அனேகரும் தண்டு வலிப்போ, ஆல்ஸைமர் நோயோ தாக்கியவர்கள், சிலர் முழுவதுமே நினைவற்றுக் கிடந்தவர்கள். சமீபத்திய அறிக்கை என் கணிப்பை உறுதி செய்தது, யாருக்கு மிக அதிகமான மூளைச் சேதம் இருந்ததோ அவர்களுக்கே அறிவுத் திறனில் அதிகமான ஏற்றம் கிட்டி இருந்தது. பிஈடி ஸ்கேன்கள் (பாஸிட்ரான் எமிஷன் டோமொக்ராஃபி- PET scan) உயர்த்தப்பட்ட மூளை இயக்க மாற்றத்தைக் காட்டின.

மிருகங்களை வைத்துச் செய்த ஆய்வுகள் இதே போன்ற எந்தத் தடயங்களையும் ஏன் காட்டவில்லை? மாறுநிலைப் பருப்பொருள் (Critical Mass) என்னும் கோட்பாடு இருக்கிறதே, ஒரு உபமானமாக அது இங்கு பொருந்தும். மிருகங்கள் மாறுநிலைக்குத் தேவையான அளவைவிடக் குறைவாகத்தான் நியுரோன் இணைப்புகளை மூளையில் கொண்டிருக்கின்றன. அவற்றின் மூளைகள் குறைவான அளவே உயர்தள அருவ சிந்தனையைக் கையாளக் கூடியவையாக இருக்கின்றன, கூடுதலான இணைப்புகள் கிட்டினாலும் அவற்றால் மிருகங்களுக்குப் பலன் கிட்டுவதில்லை. மனிதர்கள் இந்த மாறுநிலைத் தேவையை ஏற்கனவே தாண்டி இருக்கிறார்கள். அவர்களுடைய மூளைகள் முழு சுய அறிதலைக் கையாள்கின்றன-இந்தப் பதிவுகள் காட்டுவதும் இதுதான் – அவை புது இணைப்புகள் கிட்டினால் அவற்றை முழுமுற்றாகப் பயன்படுத்துகின்றன.

தானாக ஆய்வுக்குட்பட முன்வந்தவர்களில் சிலரைப் பயன்படுத்திப் புதிதாகத் துவங்கப்பட்ட ஆய்வுப் பதிவேடுகள்தாம் மிகக் கிளர்ச்சி ஊட்டுவனவாக இருந்தன. கூடுதலான தடவை ஹார்மோனை உள்செலுததும் ஊசிகள் அறிவுத் திறனைக் கூட்டவே செய்தன, ஆனால் என்ன அளவு அதிகரிப்பு என்பது முதலில் எவ்வளவு சேதம் இருந்தது என்பதைப் பொறுத்திருந்தது. சிறு வெட்டிழுப்புகளால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் மேதை அளவுக்குக் கூட உயரவில்லை. மிகக் கூடுதலான அளவு சேதமடைந்தவர்களே அதைவிட உயரங்களுக்குப் போயிருந்தார்கள்.

ஆழ்ந்த நினைவிலி நிலையில் முதலில் இருந்தவர்களில், நான் ஒருவன்தான் மூன்றாவது ஊசியைப் பெற்றிருந்தேன். முன்பு ஆய்வுக்குட்பட்ட எவரையும் விட எனக்குத்தான் புது தொடரிணைப்புகள் வளர்ந்திருந்தன. இன்னும் எத்தனை தூரம் என் அறிவுத் திறன் வளரும் என்பது ஏதும் முடிவு சொல்ல முடியாத கேள்வியாகவே இருந்தது. அதைப் பற்றி நினைக்கையிலேயே என் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டதை உணர்ந்தேன்.

–o00o–

வாரங்கள் கடக்கையில், மருத்துவர்களை விளையாட்டாகச் சீண்டி ஆழம் பார்ப்பதுகூட மிகவும் சலிப்பாகியிருந்தது. ஏதோ நான் ஏறுமாறாக நினைவு சக்தி மட்டும் நிறைய இருந்தாலும், மட்டிப் பயல்தான் என்று பார்க்கிறார்கள். அவ்வப்போது உயர் அறிவுத் திறனைக் காட்டுகிறேனாம், இருந்தாலென்ன மூளைக் கோளாறு நோயாளிதானே என்று அவர்கள் நினைப்பு. நரம்பு மருத்துவர்களைப் பொறுத்த வரை அவ்வப்போது பிஈடி ஸ்கேன் படங்களையும், மூளைத் தண்டில் இருந்து எடுக்கப் படும் திரவக் குப்பி ஒன்றையும் கொடுக்கிற ஒரு நபர், அவ்வளவே. உள மருத்துவர்களுக்குதான் பேட்டிகள் மூலம் என் அறிவு எப்படி மாறுகிறது என்று கணிக்க வாய்ப்பு இருந்தது. அவர்களுக்குமே நான் ஏதோ ஆகாயத்திலிருந்து மடியில் விழுந்த பொக்கிஷம் ஒன்றுக்குச் சொந்தக்காரனாகி இருந்தாலும், தன் இயல்பான நிலையை மீறிய ஆழ்ங்களில் தத்தளிக்கிற நபர் என்றுதான் நினைப்பு.

உண்மை என்னவென்றால் இந்த மருத்துவர்கள் யாருக்கும் என்ன நடக்கிறதென்பதே புலப்படவில்லை. நிஜ வாழ்க்கையில் செயல்திறன் என்பது மருந்துகளால் உயர்த்தப்பட முடியாது என்றும், என் அறிவுத் திறன் உயர்ந்ததெல்லாம் ஏதோ இந்த அறிதிறன் சோதனைகளில் மட்டுமே தெரியக் கூடியது, மற்றபடி உப்புக்குப் பயனில்லாதது என்றும் நினைக்கிறார்கள். அதனால் அறிதிறன் பரீட்சைகளில் (I.Q tests) நேரத்தை வீணடிக்கிறார்கள். அளவுகோல் என்ற வகையில் செயற்கையானவை என்பது மட்டுமல்ல, அவை மிகவும் போதாத அளவுகோல்களும் கூட. தொடர்ச்சியாக முழுநிறைவைக் காட்டும் என் மதிப்பெண்களால் அவர்களுக்கு எதுவும் புலப்படவில்லை. என்னோடு ஒப்பிட அவர்களுக்கு ஏதும் மாற்றுத் தகவலே இல்லை- எவரையும் விட அதிக உயரத்தை நான் அடைந்திருந்தேன்.

இந்த சோதனை மதிப்பெண்கள் என்னிடம் ஏற்படுகிற நிஜமான மாறுதல்களின் ஒரு நிழலைத்தான் காட்டின. என் தலைக்குள் என்னவெல்லாம் நடக்கிறதென்று டாக்டர்களால் உணர முடிந்தால் எப்படி இருக்கும்? எப்படி முன்பு எனக்குப் புரியாததை எல்லாம் நான் இப்போது அறிகிறேன், இந்தத் தகவல்ளை எத்தனை விதங்களில் எல்லாம் பயன்படுத்துவது என்றும் எனக்குத் தெரிகிறது, இதெல்லாம். வெறும் சோதனைக் கூடத்து வியப்பாக நான் இருக்கவில்லை. என் அறிவுத் திறன் நிஜ வாழ்க்கைக்கு உபயோகமானதாக, அதிலும் மிகத் திறம்படப் பயன்படக் கூடியதாக இருந்தது.. எதையும் விட்டு விடாது முழுமையாக நினைவில் வைக்க எனக்கு முடிந்தது. பல தகவலகளை ஒன்று சேரப் பார்த்து இணைப்புகள், ஒத்திசைவுகளைப் பார்க்க முடிந்தது. அதனால் நிலைமைகளை உடனடியாக எடை போட்டு எது இலக்கை அடையச் சிறந்த வழி என்று தேர்ந்தெடுக்க முடிந்தது. முடிவெடுக்க நான் குழம்புவதே இல்லை. நடைமுறையோடே சம்பந்தமில்லாது, முழுதும் கருத்துகளாகவே இருந்தவைதான் எனக்கு ஏதாவது சவாலாக இருக்கின்றன.

–o00o–

எதைப் படித்தாலும் எனக்கு அவற்றில் இருந்த ஒழுங்கு புலப்பட்டது. கணிதம், அறிவியல், ஓவியம், இசை, உளவியல், சமூகவியல் எதாக இருக்கட்டுமே: கூறுகளிலேயே அவற்றில் ஒளிந்த முழு உரு புலப்பட்டது, சில சுரங்களிலேயே ராக அமைதி உடனே துல்லியமாயிற்று, பிரதிகளைப் படிக்கும் போது, அவற்றை எழுதியவர்கள் ஒரு கருத்துப் புள்ளியில் இருந்து இன்னொரு கருத்துப் புள்ளிக்குச் செல்ல சொத்துச்சொத்தென்று தள்ளாடி நக்ர்ந்தவராகத் தெரிந்தார்கள். அவர்களால் உடனே பார்க்க முடியாத தொடர்புகளைத் தேடி இருட்டில் துழாவியவராகத் தெரிந்தனர். இசைக் குறிப்புகளைப் படிக்க்த் தெரியாதவர்கள், பாஹ் (Bach) சொனாடா இசையின் ஒலிக் குறிப்புத் தாளை உற்று நோக்கி, எப்படி ஒரு ஒலியிலிருந்து இசை இன்னொரு ஒலிக்குத் தாவியது என்று விளக்க முயல்வதைப் போல, பார்வையற்ற ஒரு கூட்டமாகத் தெரிந்தனர்..

இந்த ஒழுங்கு, பாணிகளெல்லாம் கவனிக்க அருமையாக இருந்தாலும், அவை மேன்மேலும் ஒழுங்குகளை, பாணிகளைத் தேடும் ஆர்வத்தைத்தான் தூண்டி விட்டன். வேறு பாணிகள், ஒளிந்த முழுமை உருக்கள் எல்லாம் முழுதும் வேறு ஏதோ தளத்திலேயே கூட இருந்ததாக எனக்குப் பட்டது. அவை கண்டுபிடிக்கப் படுவதற்காகக் காத்திருந்த்ன. அவை இன்னும் எனக்குப் புலப்படாத குருடனாக நான் இருந்தேன், என் சொனாடாக்களெல்லாம் எனக்குமே ஏதோ தனித் தனி இசைத் துளிகள் போலத்தான் தெரிந்து கொண்டிருந்தன. எங்கிருந்து இந்த முழு உருக்கள் பற்றிய தெளிவு வரப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், நிச்சயம் வரப் போகின்றது என்று இருந்தது. அவற்றைக் கண்டு பிடிக்கவும், புரிந்து கொள்ளவும் பெருவிருப்பம் கொண்டேன். இதற்கு முன்பு நான் ஆசைப்பட்ட எதையும் விட இதைத்தான் நான் பெரிதும் விரும்பினேன்.

–o00o–

வந்த மருத்துவர் பெயர் க்ளாவ்ஸென், மற்ற டாக்டர்களைப் போல அவர் நடந்து கொள்ளவில்லை. நடத்தையைப் பார்த்தால், நோயாளிகளிடம் மிதமான பாவத்தைக் காட்டும் வழக்கம் உள்ளவர் என்று தெரிந்தாலும், இன்று ஏதோ அவரை உறுத்திக் கொண்டிருந்தது. மிக நட்புள்ளவர் போலக் காட்டிக் கொள்கிறாரே தவிர, வழக்கமாக இதர டாக்டர்கள் பேசுவது போல அத்தனை சரளமாக இல்லை.

“இந்த சோதனை எப்படி வேலை செய்கிறதென்று சொல்கிறேன், கேளுங்கள் லியோன். பலமாதிரியான சம்பவங்கள பற்றிய விவரணைகளை நீங்கள் படிப்பீர்கள், ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கும். ஒவ்வொன்றையும் படித்ததும், அவற்றை நீங்கள் எப்படித் தீர்ப்பீர்கள் என்று சொல்லுங்கள்.”

நான் தலையசைக்கிறேன். ”இந்த மாதிரி சோதனையை நான் முன்பு பார்த்திருக்கிறேன்.”
“சரி, நல்லது.” ஒரு கட்டளையைத் தட்டி அழுத்துகிறார், என் எதிரில் உள்ள திரையில் நிறைய அச்செழுத்தாய் நிரம்புகிறது. நான் அந்தக் காட்சி விவரிப்பைப் படிக்கிறேன்: நிகழ்ச்சித் தயாரிப்புப் பட்டியல், அதில் தேவைகளை வரிசைப்படுத்தும் வேலை. எதார்த்தமாகத்தான் இருக்கிறது. அதுவே கொஞ்சம் வினோதம். ஏனெனில் இந்த மாதிரி சோதனைகளை எப்படி எடை போடுவது என்பது பரீட்சை செய்பவருக்கு உடனே புலப்படாது. பதில் சொல்லுமுன் நான் வேண்டுமென்றே சிறிது தயக்கம் காட்டுகிறேன், இருந்தபோதும் என் வேகத்தைப் பார்த்து க்ளாவ்ஸென் வியப்புறுகிறார்.

”ரொம்ப நல்லது, லியோன்.’ இன்னொரு விசையைத் தட்டுகிறார். ”இதைப் பாருங்கள்.”

இன்னும் சில காட்சி விவரணைகளைப் பார்க்கிறோம். நான்காவதைப் பார்க்கையில், க்ளாவ்ஸென் தொழில்முறை கவனிப்பு மட்டுமே இருப்பது போலக் கவனமாக நடந்து கொள்வது தெரிந்தது. இந்தப் பிரச்சினையில் அவருக்குத் தனி ஈடுபாடு இருந்தது, ஆனால் எனக்கு அது தெரியக் கூடாது என்று நினைக்கிறார். இந்த காட்சி அலுவலக அரசியல், மேலும் வேலை உயர்வுக்கு நடக்கும் கடுமையான போட்டியைப் பற்றியது.

க்ளாவ்ஸென் யாரென்று எனக்குப் பிடிபட்டது: அரசாங்க உளவியலாளர், ஒருவேளை ராணுவத்தில் இருப்பவர், அனேகமாக மத்திய உளவுத் துறையில், ஆராய்ச்சியும், வளர்ச்சியும் எனும் பிரிவைச் சேர்ந்தவர் (CIA’s research and development wing). ஹார்மோன் கே போர்த் தந்திரங்களைத் திட்டமிடும் நிபுணர்களை உருவாக்க உதவுமா என்று சோதிக்கவே இந்த பரீட்சை. வழக்கமாக அவர், தன் கட்டளைப்படி செயல்படும் ராணுவவீரர்கள் அல்லது அரசு ஊழியர்களோடுதான் பழக்கம் உள்ளவர். அதனால்தான் என்னிடம் இப்படி முள்மேல் இருப்பது போல அவதிப்படுகிறார்.

என்னை சிஐஏ மேன்மேலும் சோதனைகள் நடத்துவதற்குப் பயன்படுத்த விரும்பலாம், மற்ற நோயாளிகளையும் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து இப்படியே பயன்படுத்த விரும்பும். அதற்குப் பிறகு வெளியாட்களில் தானாக முன்வருபவ்ர்கள் சிலரை சிஐஏ பொறுக்கி எடுத்து, அவர்கள் மூளைகளுக்குப் பிராணவாயு கிட்டாமல் அடைத்து வைத்து சேதமாக்கி, பின் மீட்டு எடுக்க ஹார்மோன் கே சிகிச்சை அளிக்கும். எனக்கு சிஐஏ உடைய சொத்துப் போலாக விருப்பமில்லை. ஆனால் ஏற்கனவே என் திறமையைக் காட்டி அநத அமைப்பின் கவனத்தை ஈர்த்து விட்டேன். இனிமேல் நான் செய்யக் கூடியதெல்லாம், என் திறமையை மட்டுப்படுத்திக் காட்ட, இந்தக் கேள்விக்குப் பதிலைத் தப்பாகச் சொல்வதுதான்.

ஒரு மோசமான வழியை என் விடையாகக் கொடுக்கிறேன். க்ளாவ்ஸென் ஏமாற்றமடைகிறார். ஆனாலும் நாங்கள் இன்னும் தொடர்கிறோம். அடுத்த பிரச்சினைகளுக்கு விடையளிக்க நான் மிக நேரம் எடுத்துக் கொள்கிறேன். தண்டமான விடைகளைக் கொடுக்கிறேன். பல சாதாரணக் கேள்விகள் ந்டுவே சில முக்கியமான கேள்விகள். எப்படி எதிராளிகள், குரோத நடவடிக்கை மூலம் ஒரு நிறுவனத்தைப் பிடுங்கிக் கொள்வதைத் தவிர்ப்பது என்று ஒன்று, இன்னொன்று நிலக்கரியை எரித்து மின்சக்தி உற்பத்தி செய்யும் நிலையத்தைக் கட்ட விடாமல் தடுக்க மக்களை எப்படிக் கூட்டிப் போராடுவது என்று. இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் நான் வீண் பதில்களைச் சொல்கிறேன்.

க்ளாவ்ஸென் அந்த்ப் பரீட்சை முடிந்தவுடன் என்னை அனுப்பி விடுகிறார்; உடனேயே மேலிடத்துக்குத் தன் பரிந்துரைகளைத் தயாரிக்க முற்படுகிறார். என் உண்மையான திறமைகளைக் காட்டி இருந்தால், சிஐஏ உடனே என்னைத் தம் அணியில் சேர்த்துக் கொண்டிருப்பார்கள். இப்போது என் ஏறுமாறான பதில்கள் அவர்களுடைய ஆர்வத்தைக் குறைத்திருக்கும், ஆனால் அவர்களுடைய மனதை மாற்றாது, ஏனெனில் ஹார்மோன் கே- யினால் அவர்களுக்குக் கிட்ட இருக்கும் நல்ல பலன்கள் மிக அதிகம் என்பது அவர்கள் நிலை.

என் நிலைதான் அதிரடியாக மாறி விட்டிருக்கிற்அது, சிஐஏ என்னைச் சோதனைக்கான பொருளாக வைத்திருக்க முடிவு செய்தால் என் விருப்பம் என்ன என்று சொல்வதற்கு இடம் இருக்கலாம். என்றாலும் நான் மாற்றுத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

–o00o–

நான்கு நாட்களாயிருந்தன, டாக்டர் ஷியாவுக்குக் கேட்டதும் ஆச்சரியம். “ இந்த ஆய்விலேர்ந்து விலகிக்கப் போறீங்களா?”

”ஆமாம், இப்பமே. எனக்கு வேலைக்குப்  போகணும்.”

“பங்கெடுக்க உங்களுக்கு ஏதும் பணம் கொடுக்க மின்னா தர்ரோமே, எங்களுக்கு அது முடியும்-..”

”பணம் அத்தனை பிரச்சினை இல்லை. எனக்கு இந்த பரீடசை எல்லாம் சலிச்சுப் போச்சு. போதும் போதும்னு ஆயிடுத்து.”

“இந்த பரீட்சைங்கல்லாம் ஒரு கட்டத்தில சலிச்சுப் போகுமின்னு எனக்குத் தெரியும். ஆனால் நாம நிறைய கத்துகிட்டு இருக்கோமில்லியா.   நீங்க இபபிடிப்  பங்கெடுக்கிறதெ நாங்க ரொம்பப் பாராட்டறோம்னு தெரியுமில்லியா லியோன்?  இது சும்மா—”

”உங்களுக்கு இதில எவ்ளோ தெரிஞ்சிருக்குங்கறது  எனக்கும் தெரியும். ஆனா அதனாலெ என் முடிவு மாறாது. எனக்குத் தொடரப் பிடிக்கலை.”

ஷியா மறுபடி பேச வாயெடுக்கிறார், நான் அவரை இடைமறிக்கிறேன். “ரகசியக் காப்பு ஒப்பந்தத்தில  நான் கையெழுத்து போட்ருக்கேன், எனக்குத் தெரியும். அது  இன்னும் என்னைக் கட்டுப் படுத்தறதுங்கறது எனக்குத் தெரியும். அதுக்கு மேல ஏதாவது ஒப்பந்தம் வேணுமின்னா வீட்டுக்கு அனுப்புங்க.” நான் எழுந்து கதவுப் பக்கம் போகிறேன். ”குட் பை, டாக்டர். ஷியா.”

–o00o–

இரண்டு நாட்கள் கழித்து டாக்டர் ஷியா தொலைபேசியில் கூப்பிடுகிறார்.

“லியோன், நீங்க இன்னொரு மருத்துவச் சோதனைக்கு வர வேண்டும். இன்னொரு ஹாஸ்பிடல்ல் ஒரு நோயாளிக்கு ஹார்மோன் கே யினால் ஏதோ மோசமாப் பின்விளைவு ஏற்பட்டிருக்குன்னு எனக்கு இப்பத்தான் சொன்னாங்க.”

அவர் பொய் சொல்கிறார், இதை அவர் தொலைபேசியில் என்னிடம் ஒருபோதும் சொல்லி இருக்க மாட்டார். “என்ன மாதிரி பின்விளைவுகள்?”

“பார்வையே போயிட்டுதாம். கண்ல நரம்பு அதிகமாக ஏதோ வளர்ந்து, பார்வை குறைஞ்சு போயிருக்கு.”

சிஐஏ-வின் ஆணையாயிருக்கும், நான் விலகிக் கொண்டேன் என்று தெரிந்து கொண்டிருப்பார்கள். மருத்துவ மனைக்குப் போனால், என்னை சித்தம் குழம்பியவன் என்று அறிவித்து விட்டு, என்னை மருத்துவ மனையிலேயே அடைத்து விடுவார்கள். பிறகு என்னை ஒரு அரசு ஆராய்ச்சி நிலையத்துக்கு மாற்றி விடுவார்கள்.

நான் அதிர்ச்சி அடைந்தது போலக் காட்டுகிறேன். “நான் உடனே கெளம்பி வர்றேன்.”

”ரொம்ப நல்லதுங்க.” தான் சொன்னது நம்பப் பட்டதைக் கண்டு ஷியாவுக்கு சிறிது மகிழ்ச்சி. “நீங்க வந்த ஒடனே உங்களெ சோதனை செய்திடறோம்.”

நான் தொலைபேசியை வைத்து விட்டு, என் கணினியை இயக்குகிறேன். எஃப்டிஏ உடைய தகவல்தளத்தில் சமீபத்திய தகவல் ஏதும் உண்டா எனச் சோதிக்கிறேன். கண்நரம்பை விடுவோம், எந்த கெடுதலான பின்விளைவுகள் பற்றியும் ஏதும் தகவல் இல்லை. எதிர்காலத்தில் ஏதாவது கேடு எழ வாய்ப்பு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை, ஆனால் அவற்றை நான் தானே பட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறேன்.

பாஸ்டன் நகரை விட்டுப் போக நேரம் வந்தாயிற்று. நான் கிளம்பத் தேவையானவற்றை பெட்டியில் எடுத்து வைக்கிறேன். போகிற வழியில் வங்கிக் கணக்கில் இருந்து எல்லாவற்றையும் காலி செய்து விடுவேன். என் தொழிற்கருவிகளை விற்றால் இன்னும் கையில் பணமாகக் கிட்டும், ஆனால் அதெல்லாம் பெரிய எந்திரங்கள், எடுத்துப் போவது எளிதல்ல. எடுத்துப் போகக் கூடிய சில சிறு கருவிகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். சில மணி நேரம் நான் இதற்கெல்லாம் செலவழித்தேன். தொலைபேசி மணி அடித்தது. ஷியாதான், நான் எங்கே என்று கேட்கிறார். நான் எடுக்கவில்லை, பதில் சொல்லும் எந்திரம் அவர் குரலைப் பதிக்கிறது.

“லியோன், அங்கே இருக்கிங்களா? இது டாக்டர் ஷியா. உங்களுக்கு நாங்க காத்துகிட்டிருக்கோமே,  வர்ரீங்களா. நேரமாயிடுத்தே!”

இன்னொரு முறை கூப்பிட்டுப் பார்ப்பார். அதன் பிறகு வெள்ளை சீருடுப்பு அணிந்த ஏவலர்களை அனுப்புவார், ஒருவேளை போலிஸையே கூட அனுப்பலாம்.

–o00o–

இரவு ஏழரை மணி. ஷியா இன்னும் மருத்துவ மனையில்தான் இருக்கிறார். என்னைப் பற்றி ஏதும் செய்தி கிட்டுகிறதா என்று பார்க்கக் காத்திருக்கிறார். நான் சாவியைத் திருப்பி காரைக் கிளப்பி, காரை நிறுத்தியிருந்த இடத்தில் இருந்து வெளியே எடுக்கிறேன். இது மருத்துவ மனைக்கு எதிரே கார்களை நிறுத்துவதற்காக இருந்த பெரிய கட்டிடம். இன்னும் சில நிமிடங்களில் அவருடைய அலுவலகக் கதவுக்கடியில் நான் சற்று முன்னர் நுழைத்த உறையைப் பார்ப்பார். அதைத் திறந்ததும் அது என்னிடம் இருந்து வந்தது என்பது அவருக்குப் புரிந்து விடும்.

வணக்கம் டாக்டர்.ஷியா;

என்னைத் தேடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். …….ஒரு நிமிடம் வியப்பு எழும், ஆனால் ஒரு கணத்துக்கு மேல் இராது, அவர் தன் சகஜ நிலைக்கு வந்து அவசரமாய் காவல்காரர்களை உஷார்படுத்துவார். கட்டிடத்துக்குள் நான் இருக்கிறேனா என்று உடனே தேடச் செய்வார். கட்டிடத்தை விட்டு நீங்கும் எல்லா வண்டிகளையும் சோதனை போடச் சொல்வார்கள். பின், மேலே படிப்பார்.

என் அடுக்குமாடிக் குடி வீட்டில் எனக்காகக் காத்திருக்கும் தடியர்களை நீங்கள் திரும்பி வரச் சொல்லிவிடலாம்; அவர்களுடைய பொன்னான நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்று இதைச் சொல்கிறேன். நீங்கள் இதற்குள் என்னைப் பற்றிய எல்லா விவரங்களும் அடங்கிய ஒரு அறிக்கையை போலிஸை விட்டு வெளியிடத் தீர்மானித்திருப்பீர்கள். அதனால் மோட்டார் ஊர்திகளுக்கான இலாக்காவின் கணினி அமைப்பில் ஒரு வைரஸை நான் செலுத்தி இருக்கிறேன். நான் ஓட்டுகிற காருடைய பதிவு எண்ணைக் கேட்டீர்களானால் தவறான எண்களையே கொடுக்கும்படி அது செய்து விடும். என் காருடைய விவரணையை நீங்கள் கொடுக்க முயலலாம். ஆனால் அது என்ன கார் என்று உங்களுக்குத் தெரியாதில்லையா? நீங்கள் அதைப் பார்த்ததிலையே?
லியோன்

அவர் போலிஸைக் கூப்பிட்டு, அவர்களுடைய செயல்திட்ட வரைவாளர்களை விட்டு அந்த வைரஸை அகற்றச் சொல்வார். நான் எழுதிய அந்தச் சிறு குறிப்பின் தொனியை வைத்து எனக்கு என் அறிவு உயர்ந்த நிலை பற்றிய மமதை இருக்கிறதென்று முடிவு கட்டுவார். போதாதற்கு, நான் தேவை இல்லாமல் அந்த மருத்துவ மனைக்கு நேரடியாக வந்து அந்த குறிப்பைக் கொடுத்து ஆபத்தை வரவேற்றிருக்கிறேன். அதற்கும் மேலாக அந்த வைரஸைப் பற்றி எழுதி இருக்கிறேன், இல்லாவிடில் அதை அவர்கள் கண்டு பிடித்திருக்கப் போவதில்லை. திமிர் என்று நினைப்பார்.

அப்படி அவர் முடிவு கட்டினால் டாக்டர் ஷியா தவறு செய்தவராவார். நான் இப்படி எல்லாம் செய்வதன் மூலம் சிஐஏ என்னை குறைத்து மதிப்பிடும், அதனால் வேண்டுமான அளவு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள் என்று திட்டமிட்டுச் செய்திருக்கிறேன். மோட்டார் ஊர்திப் பதிவலுவலகத்தின் கம்ப்யூட்டர்களில் இருந்து அந்த வைரஸை அகற்ற முயற்சி செய்யும் போலிஸ் செயல்திட்ட வரைவாளர்கள் என் செயல்திட்ட அமைப்புத் திறமையை எடை போடுவர். நல்ல திறமை, ஆனால் அப்படி ஒன்றும் அசாத்தியத் திறமை இல்லை என்று கருதுவார்கள். பின் என் காருடைய பதிவெண்ணைத் திரும்பப் பெறுவதற்காக, ஏற்கனவே மாற்றாக, ஆவணமாக இருப்பதைக் கம்ப்யூட்டர்களில் சேர்ப்பார்கள். இது இன்னொரு வைரஸை உயிர்ப்பித்து எழ வைக்கும், இதுவோ முந்தைய வைரஸை விடப பன்மடங்கு சிக்கலானது. இது ஆவணங்களையும் மாற்றி, புதுச் சேர்க்கைப் பதிவுகளையும் மாற்றும். போலிஸோ தமக்குச் சரியான லைசன்ஸ் தகடுடைய எண் கிட்டியது என்று மகிழ்வார்கள். பொய்யான காரைத் தேடிப் பிடிக்க நேரத்தை விரயம் செய்வார்கள்.

என் அடுத்த முயற்சி என்னவோ ஹார்மோன் கே-யின் இன்னொரு குப்பியை எப்படியாவது அடைவதுதான். அதை நான் அடைந்தால் சிஐஏ விற்கு என் திறமை குறித்த சரியான கணிப்பு ஏற்படும். அந்த குறிப்புச் சீட்டை நான் அனுப்பி இருக்கவில்லை என்றால், போலிஸ் ஹார்மோன் குப்பி தொலைந்ததைக் கண்ட பிறகுதான், அப்போது ஏற்பட்ட உஷார் நிலையில் இருக்கையில், அந்த வைரஸைக் கண்டுபிடிப்பார்கள். ஏற்கனவே பெரும் முனைப்பில் இருப்பதால் மிகத் தீவிரமான முன் தடுப்பு முயற்சிகளோடு அந்த வைரஸ் அகற்றல் முயற்சியில் இறங்கி விடுவார்கள். என்னுடைய சரியான லைசென்ஸ் எண்ணை அவர்களுடைய பதிவேடுகளில் இருந்து முழுதும் அகற்ற் என்னால் முடியாமலே போகும்.

இதற்கிடையில் ஒரு விடுதியில் அறை எடுத்திருக்கிறேன். அங்குள்ள ஒரு கணினித் தொடர்பு மூலம் தகவல்வலையில் உலவுகிறேன்.

–o00o–

எஃப்டிஏ-வின் தனியார் தகவல்தளத்துக்குள் ஊடுருவி இருக்கிறேன். ஹார்மோன் கே யாருக்கெல்லாம் கொடுக்கப் பட்டதோ அவர்கள் முகவரிகள் கிட்டின. எஃப்டிஏ-வின் உள் தொடர்புப் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். ஹார்மோன் கே சோதனைகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. என்னைப் பிடிப்பது அவசியம் என சிஐஏ வலியுறுத்தி இருக்கிறது. பிடித்து நான் என்ன மாதிரி ஆபத்தைக் கொணரக் கூடும் என்பதைக் கணித்த பிறகே மேலும் ஹார்மோன் கே சோதனைகள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்று அவர்கள் ஆணை.

எஃப்டிஏ எல்லா மருத்துவ மனைகளையும் கையிருப்பில் உள்ள ஹார்மோன் கே குப்பிகளை உடனடியாக கூரியர் மூலமாகத் திருப்பச் சொல்லி இருக்கிறது. இது நடக்குமுன் ஒரு குப்பியை நான் பெற வேண்டும். இருப்பதில் கிட்டே இருக்கும் ஒரு நோயாளி பிட்ஸ்பர்க் நகரில் இருக்கிறார். விடிகாலை பிட்ஸ்பர்க் நகருக்குப் போகும் விமானத்தில் ஒரு இருக்கையை முன்பதிவு செய்கிறேன். பிட்ஸ்பர்க் நகரின் வரைபடத்தைப் பார்த்து, நகரின் மையத்தில் உள்ள ஒரு முதலீட்டு நிறுவனத்தில் வந்து ஒரு பெட்டியை எடுத்துப் போக பென்சில்வேனியா கூரியர் நிறுவனத்திடம் ஏற்பாடு செய்கிறேன். இறுதியாகப் பல மணி நேரத்துக்கு எனக்கு ஒரு சூபர் கம்ப்யூடரில் வேலை செய்ய அவகாசத்தை முன்பதிவு செய்கிறேன்.

–o00o–

பிட்ஸ்பர்க் நகர மையத்தில், ஒரு பலமாடி அடுக்குக் கட்டிடத்திற்கு அருகில் உள்ள தெருமுனையில் காரை நிறுத்தி இருக்கிறேன். என் மேலங்கியில் பையில் ஒரு சிறு சர்க்யுட் போர்ட், இணைப்பில் ஒரு தட்டச்சுப் பலகை. கூரியர் எந்தப் பக்கத்திலிருந்து வருவாரென்று தெரியுமோ அந்தத் திக்கில் சாலையில் உற்று நோக்குகிறேன். பாதசாரிகளில் பாதிக்கு மேல் முகத்தை மறைக்கும் வெள்ளை நிறக் காற்று வடிகட்டியை முகத்தை மறைக்க அணிந்திருக்கிறார்கள். ஆனால் சாலையில் தொலை தூரம் பார்க்க முடிகிறது.

இரண்டு குறுக்கு வெட்டுத் தெருக்கள் தள்ளி, புதிய, இந்த வருடத்து வேன், பென்சில்வேனியா கூரியர் என்று ஒரு பக்கத்தில் எழுதி இருக்கிறது. அது ஏதும் பலத்த காவலோ பாதுகாப்போ உள்ள கூரியர் வண்டி இல்லை. எஃப்டிஏ என்னைப் பற்றி அத்தனை கவலைப் படவில்லை போல. என் காரில் இருந்து இறங்கி அடுக்குமாடிக் கட்டிடத்தை நோக்கி நடக்கிறேன். வேன் சிறிது நேரத்தில் வருகிறது, நிற்கிறது, ஓட்டுபவர் கீழே இறங்குகிறார். அவர் கட்டிடத்துக்குள் நுழைந்ததும், நான் அந்த வேனுக்குள் நுழைகிறேன்.

மருத்துவ மனையில் இருந்து அப்போதுதான் வந்திருக்கிறது. கட்டிடத்தில் 40வது மாடிக்குப் போயிருக்கிறார் ஓட்டுபவர். அங்கே ஒரு முதலீட்டு நிறுவனத்தில் இருந்து பெட்டி ஒன்றை வாங்கி வர வேண்டும் என நினைக்கிறார். திரும்பி வர எப்படியுமே குறைந்தது 4 நிமிடங்களாகும்.

வண்டியின் தரையோடு உலோக உருக்கால் இணைத்து வெல்டு செய்து அமைக்கப்பட்டிருக்கிறது அந்தப் பெட்டகம். எஃகிரும்பால் ஆன இரட்டைச் சுவர்கள், கதவு. ஒரு நன்கு மெருகேறிய தகடு கதவில் இருக்கிறது. ஓட்டுபவர் தன் உள்ளங்கையை அதில் வைத்தால்தான் கதவு திறக்கும். அந்தத் தகட்டின் பக்கவாட்டில் ஒரு எண்பலகை, செயல்திட்ட வரைவுக்காக இருக்கிறது.

சென்ற இரவு லூகஸ் பாதுகாப்பு அமைப்பு நிறுவனத்தில் பழுதுபார்க்கும் பகுதியின் தகவல்தளத்தை நான் ஊடுருவி இருந்தேன். பென்சில்வேனியா கூரியர் நிறுவனத்திற்கு இரும்புப் பெட்டகங்களை விற்பது இந்த நிறுவனம்தான். அந்தத் தளத்தில் பெட்டகத்துப் பூட்டுகளைக் கடக்க உதவும் சங்கேத எண்கள் கிட்டின.

கம்ப்யூட்டர்களில் காவலைத் தாண்டி உள்நுழைவது பொதுவாக வெறும் சள்ளை வேலைதான், என்றாலும், சில வகைகளில் அதில் சிறிது நுட்பமான சுவாரசியமான கணிதச் சவால்கள் இருக்கும். பரவலாகப் பயன்படுத்தப் படும் சில சங்கேத முறைகளை உடைக்க மிக உயர்கணினிகளுக்கும் சில வருடங்களாவது ஆகும். ஆனால் சமீபத்தில் நான் எண்கணிதக் கோட்பாடுகளில் புகுந்து உலாவியபோது மிகப் பிரம்மாண்டமான எண்களையும் அலகுகளாகப் பிரிப்பதற்கு ஒரு அழகான முறையைக் கண்டு பிடித்தேன். இந்த செய்முறையைப் பயன்படுத்தி மேற்படி பாதுகாப்புச் சங்கேத முறையை உடைத்து, வேண்டும் தகவலைப் பெற எனக்குச் சில மணிகளே ஆயின.

என் பையில் இருந்து அந்த சர்க்யூட் பலகையை எடுக்கிறேன். அதை இந்த தகவல்நுழைமுகத்தில் ஒரு குழல் மூலம் இணைக்கிறேன். பன்னிரண்டு எண்களைத் தட்டி எழுதுகிறேன். பெட்டகக் கதவு திறந்து விடுகிறது.

–o00o–

நான் பாஸ்டனுக்குத் திரும்புவதற்குள் எஃப்டிஏ என் திருட்டுக்கு எதிர் நடவடிக்கை எடுத்து விட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட எல்லா கோப்புகளையும் தகவல் வலையோடு தொடர்பு கொள்ளும் எல்லாக் கணினிகளில் இருந்தும் எடுத்து விட்டிருக்கிறது. எதிர்பார்த்ததுதான்.

இந்த மருந்துக் குப்பியுடன், என் சில உடமைகளைச் சேர்த்து எடுத்துக் கொண்டு, நியுயார்க் நகருக்குக் காரை ஓட்டுகிறேன்.

–o00o–

வினோதம்தான், ஆனால் துரிதமாகப் பணம் சம்பாதிக்க எளிய வழி, சூதாட்டம்தான். குதிரைப் பந்தயத்தில் குதிரைகளைத் தரம் பிரித்து எது எப்படி வெல்லும் என்று கணக்கிடுவது சுலபம்தான். அதிகம் கவனத்தை ஈர்க்காமல் ஓரளவு கணிசமான தொகையைக் குதிரைப் பந்தயத்தில் வென்று, அதை வைத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்து என் வழியை நான் பார்த்துக் கொள்ள முடிகிறது.

நியுயார்க் நகரில் தகவல் வலை வசதி உள்ள ஒரு மலிவான அபார்ட்மெண்டில் தங்கி இருக்கிறேன். பல பொய்ப் பெயர்களை ஏற்கனவே தயார் செய்து அவற்றில் என் முதலீடுகளைச் செய்திருக்கிறேன். அவ்வப்போது அவற்றை மாற்றுகிறேன். வால்ஸ்ட்ரீட் பணச் சந்தையில் சிறிது நேரம் செலவழிக்கிறேன். தரகர்களின் உடல் மொழியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, அதனால் மிக அதிக வருமானம் தரும் சில குறுகிய நேர முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறேன். வாரம் ஒரு தடவைக்கு மேல் அங்கு போவதில்லை. அதை விட முக்கியமான விஷயங்கள் என் கவனத்தை இழுக்கின்றன, உள்ளே ஒளியும் பூரண நிலைகள் என்னை ஈர்க்கின்றன.

–o00o–

என் புத்தி விசாலமாக ஆக, என் உடல் மீது எனக்குள்ள கட்டுப்பாடும் அதிகரிக்கிறது. பரிணாம வளர்ச்சியின் போது மனித குலம் மூளை வளர்ச்சிக்காக உடல் திறமைகளைக் கைவிட்டது என்று நினைப்பது அறியாமையால் எழும் தவறு. என் உடல் வலு இன்னும் அதிகரித்து விடவில்லை, ஆனால் என் உடலில் இணைவியக்கத் திறன் அபாரமாகி இருக்கிறது. என் இரு கைகளையும் சமமாகப் பயன்படுத்தி வேலைகளைச் செய்யத் துவங்கி இருக்கிறேன். என் கூர்ந்த கவனத்தின் துணையால், உடலின் இயக்கம் குறித்த நுணுக்கங்களைக் கவனித்து, என் புத்தியால் உடலில் வேண்டும் மாறுதல்களைச் செய்யத் துவங்கி இருக்கிறேன். சிறிது பயிற்சிக்குப் பிறகு, என் இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கவோ, குறைக்கவோ எனக்கு முடிகிறது.

–o00o–

என் முகத்தின் படத்திற்குப் பொருத்தம் தேடி, அது எங்கெல்லாம் வெளியாகிறது என்றும் தேடும் ஒரு செயல் திட்டத்தை எழுதுகிறேன். பிறகு என் முகப்படத்தை பொது வெளியில் எங்கும் தேடக் கூடிய விதத்தில் செயல்படுமாறு தகவல் வலையில் இதைச் சேர்ப்பிக்கிறேன். சிஐஏ இதற்குள் நாட்டின் தகவல் வலையெங்கும் செய்தியில் என் படத்தை வெளியிட்டு, என்னை ஒரு ஆபத்தான மனிதனாகச் சித்திரிக்க முற்படும், ஒரு வேளை கொலைகாரனாகக் கூடக் காட்டும். இந்த வைரஸ் எல்லாப் படங்களையும் அழித்து வெறும் விடியோ ஸ்டாடிக்கை, கதிரலை வீச்சைக் காட்டும். அதே போன்ற ஒரு வைரஸை எஃப் டி ஏ, சிஐஏ ஆகிய அமைப்புகளின் கணினிகளிலும் சேர்ப்பிக்கிறேன், இது வட்டாரப் போலிஸ் என் படத்தைத் தரவிறக்க முற்பட்டால் அதை எல்லாம் வெறும் காலிப் படமாக்கி விடும். இந்த வைரஸ்கள் அந்த நிறுவனங்களின் செயல்திட்ட வரைவாளர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைகளையும் எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் வலிமை உள்ளவை.

ஷியாவும், இதர மருத்துவர்களும் சிஐஏ உடைய உளவியலாளர்களோடு இந்நேரம் கூடிப் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஊகிக்க முயல்வார்கள். என் பெற்றோர் இறந்தாயிற்று. சிஐஏ என் நண்பர்களைக் கவனிக்க முற்படும், நான் அவர்களோடு தொடர்பு கொண்டேனா எனக் கேட்கும், ’ஒரு வேளை நான் தொடர்பு கொண்டால்..?’ என்று அவர்கள் மீது கண்காணிப்பு வைத்திருக்கும். அவர்களுடைய அந்தரங்கம் பாதிக்கப்படும், ஆனால் இப்போது அதுவல்ல முக்கியப் பிரச்சினை.

சிஐஏ என்னைத் தேடுவதற்காகத் தன் உளவாளிகளில் ஒருவருக்கு ஹார்மோன் கே-யைக் கொடுக்குமா, என்றால் அதற்கு வாய்ப்பு குறைவு.  ஒரு அதிமேதாவி நபரைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் ஏற்கனவே காட்டி இருக்கிறேன். இருந்த போதும் நான் மற்ற நோயாளிகளைக் கவனிக்கிறேன், ஒரு வேளை அரசாங்கம் அவர்கள் யாரையாவது என்னைத் தேடப் பயன்படுத்தினால் என்ன செய்வது என்பதால்.

–o00o–

நாள்தோறும் நிகழும் சமூக ஒழுங்குகள் எனக்கு எந்த முயற்சியும் எடுக்காமலே தெரிகின்றன். தம் வேலைகளில் ஈடுபட்டிருக்கிற மக்களைப் பார்த்தபடி தெருவில் நடக்கிறேன், ஒரு வார்த்தை கூடப் பேச்ப்படவில்லை, ஆனால் அடிநாதம் மிகத் தெளிவாக இருக்கிறது. ஒருவரின் வழிபாடு, இன்னொருவரின் பொறுமையைச் சோதித்த வண்ணம் ஒரு இளம் ஜோடி நடக்கிறார்கள்.. ஒரு வணிக ஊழியரிடம் கவலை பொறியாய்த் தெறிக்கிறது, அன்று தான் எடுத்த ஒரு நடவடிக்கை குறித்துத் தன் மேலாளர் என்ன சொல்வாரென்ற பயம் அவரைத் துரத்த, பின் தொடர்ந்து அடிக்கும் கவலை அலையாகிறது. ஒரு பெண் மிகப் பகட்டான ஒரு பாவனையோடு போகிறாள், ஆனால் நிஜம் உரசும்போது அந்தப் பாவனை நழுவி விழுகிறது.

மேலும் முதிர்ச்சி கிட்டியபிறகுதான் ஒருவருக்குத் தாம் மேற்கொண்ட பல பாத்திரங்களின் தன்மை புலப்படுகிறது. எனக்கு இந்த மனிதர்களெல்லாம் விளையாட்டுப் பூங்காவில் இருக்கும் சிறுபிள்ளைகள் போலத் தெரிந்தார்கள். அவர்களுடைய கபடற்ற ஆர்வ நிலைகள் வேடிக்கையாக இருந்தன, நானும் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறேன் என்று நினைப்பு வந்து மிகச் சங்கடமாய் உணர்கிறேன். அவர்களுக்கு இந்த நடத்தைகள் ஏற்றவையாக இருக்கலாம், எனக்கு இவற்றில் ஈடுபடுவது சகிக்க முடியாமல் இருந்தது, நான் வளர்ந்த மனிதனாகிய பிறகு இந்த சிறுபிள்ளைத் தனத்தை எல்லாம் உதறி விட்டேன். சாதாரண மனிதர்களுடைய உலகத்தோடு நான் இனி உறவு கொள்ளப் போவது எதற்கென்றால் என்னைப் பராமரிக்கும் பொருட்டாக மட்டுமே இருக்கும்.

(தொடரும்…)

2 Replies to “புரிந்து கொள் – 2”

Comments are closed.