புத்திசாலியான முட்டாள்-I

மார்ட்டின் கார்டனர்
மார்ட்டின் கார்டனர்

புத்திசாலியான ஒரு மனிதன் முட்டாள்தனமான முடிவுகளுக்கு வரமுடியுமா?முடியும் என்கிறார் மார்ட்டின் கார்டனர்.  பாபி ஃபிஷர், ஐசக் நியூட்டன், கோனன் டாயில் ஆகியவர்களின் முட்டாள்தனமான சில நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவரெழுதிய  கட்டுரை ஸ்கெப்டிக்கல் இன்கொயரர் (Skeptical Inquirer) என்கிற பத்திரிகையில் வெளியானது . எல்லா அற்புத அதிசயங்களையும் சந்தேகிக்கிற பத்திரிகை அது. இக்கட்டுரையை அறிமுகப்படுத்திய நண்பர் சமூகவியலாளர்.

இதற்கு நண்பர்கள் மத்தியில் எழுந்த எதிர்வினைகள் சுவாரசியமாக இருந்தன. இரண்டு நண்பர்கள் ஒரே நேரத்தில் இந்த மார்ட்டின் கார்டனர் ஸ்ரீநிவாஸ ராமானுஜத்தையும் இப்படித்தான் வகைப்படுத்துவாரா? என்று கேட்டிருந்தார்கள். ராமானுஜத்தின் கணித உள்ளுணர்வுகளில் நாமகிரித்தாயார்-அகக்காட்சிகளின் பங்கு முக்கியமானது. ஒரு நண்பர் படுதடாலடியாக ஒரு பொதுப்படுத்தலை முன்வைத்தார்:

எல்லாவற்றையும் எப்படியாவது rational-ஆகப் பார்ப்பவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற நிலைப்பாடு ஒரு சிறு வட்டத்துக்கு உண்டு. அதேபோல எல்லா சிறு சிறு விஷயங்களுக்குப் பின்னாலும் ஏதோ மிஸ்டிக்காக இருக்கிறது என்று நினைக்கும் வட்டமும் உண்டு. என்னைப் பொருத்தவரை இரண்டுமே முட்டாள்கள் கூட்டம்தான். கார்ட்னர் முதல் கூட்டத்தைச் சேர்ந்தவர்.

எனக்கென்னவோ அப்படி தோன்றவில்லை. விஷயம் இப்படிப்பட்ட தடாலடிப் பொதுமைப்படுத்துதலைக் காட்டிலும் ஆழமானது என நினைக்கிறேன். முதலில் கார்டனர் முன் வைக்கும்  எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.

ஐசக் நியூட்டன் விவிலிய அடிப்படைவாத சிருஷ்டியை உண்மையென நம்பி அதனைக் குறித்து சில நுணுக்கமான கணித ஆராய்ச்சிகளைச் செய்தார்.  உலகம் எந்த வருடம் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை பைபிள் கூற்றுகள் வழியாகக் கண்டறிய முயற்சி செய்தார்.

எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கிய சர்.ஆர்தர் கோனன் டாயில் சில பதின்ம சிறுமிகள் எடுத்த புகைப்பட தேவதைகளை உண்மையென நம்பி அது குறித்து ஒரு நூலையே எழுதினார்.

மூன்றாவதாக  பாபி ஃபிஷர் என்ற செஸ் மேதையின் தீவிர யூத வெறுப்பு. இவை மூன்றையும் முன்வைத்துப் பேசும் கார்ட்னர் மனித இனம் சந்தித்த மிகச்சிறந்த மூளைகள் இப்படி வெகு எளிதாகச் சறுக்கியது எப்படி என்று வியக்கிறார். ஒவ்வொரு அதிபுத்திசாலிக்குள்ளும் ஒரு முட்டாள், ஏமாளி ஒளிந்திருக்கலாம் என்ற ரீதியில் அவர் கட்டுரையில் எழுதுகிறார்.

newton-doyle-fischer

இந்த மூன்றுக்கும் பொதுத்தன்மைகள் இருக்கின்றன. அவை ஐரோப்பிய பொதுப்புலத்தில் உலவும் அறிவியல் எதிர்ப்பு, அடிப்படைவாத அல்லது வெறுப்புவாதக் கருத்தியல்கள்.

சர் ஆர்தர் கோனன் டாயில் உருவாக்கிய பேக்கர் தெருவாசி ஹோம்ஸ் ஐரோப்பியப் பகுத்தறிவின் ஒரு உச்சம் எனலாம்.  உள்ளுணர்வால் பெறப்பட்ட உண்மைகளை போல, ஒரு ஜோசியக்காரனைப் போல ஷெர்லாக் ஹோம்ஸ் சொல்லும் தகவல்களுக்கு பின்னால் அந்த தகவல்களை அவர் அடைந்த விதம் முழுக்க முழுக்க பகுத்தாய்வும் குறுகியலும் சார்ந்ததாக அமையும். ஷெர்லாக் ஹோம்ஸின் உலகில் பௌதீகத் தரவுகளுக்கும் தர்க்கத்துக்குமே இடம் உண்டே தவிர அற்புதங்களுக்கும் ஆவியுலக அதிசயங்களுக்கும் இடமில்லை. இத்தகைய ஐரோப்பிய புத்தெழுச்சியுடன் இணைந்த அறிவியல் பார்வையையே தன் ஆளுமையாகக் கொண்ட ஒரு பாத்திரத்தைப் பொதுஜன தளத்தில் வெற்றிகரமாக உருவாக்கி உலவவிட்டவர் கோனன் டாயில். இன்றைக்கும் 221 B பேக்கர் தெருவுக்குத் தொலைந்து போன தங்கள் பொருட்களைத் தேடித்தரக் கடிதம் எழுதும் பள்ளிக்குழந்தைகள் இருக்கிறார்கள்.

எல்ஸி ரைட் உருவாக்கிய தேவதைகள் புகைப்படம்
எல்ஸி ரைட் உருவாக்கிய தேவதைகள் புகைப்படம்

1917 இல் காட்டிங்லி என்ற ஊரில் எல்ஸி ரைட் எனும் ஒரு 15 வயதுப் பெண் தான் வரைந்த அழகான தேவதைப் படங்களை கொண்டைஊசியால் நிற்க வைத்து தன் உறவுக்கார பெண்ணான பிரான்ஸெஸ் க்ரிஃபித்தை அதில் நடுவில் வைத்து படமெடுத்தாள். விளையாட்டாக எடுக்கப்பட்ட இந்தப்படங்கள் பெற்றோர்கள் கைகளுக்குச் சென்றன. அவர்களில் ஒரு பெண்ணின் தாயார் பிரம்ம ஞான சபாக்காரர் (Theosophist). அங்கே இந்த புகைப்படங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இறுதியாக அவை கோனன் டாயிலை அடைந்தன.

1920 இல் இந்த விஷயத்தை ஸ்றாண்ட்(Strand) எனும் பத்திரிகையின் கிறிஸ்துமஸ் இதழில் எழுதினார் கோனன் டாயில்.  1922 இல் இப்புகைப்படங்களை மையமாக வைத்து “The Coming of Fairies”[1] என்கிற நூலை எழுதினார்.  இதில் சுவாரசியமான விஷயமென்னவென்றால் கோனன் டாயில் சிருஷ்டித்த ஷெர்லாக் ஹோம்ஸ் மட்டும் அந்த புகைப்படங்களைப் பார்த்திருந்தால் அவை வெறும்   சிறுபிள்ளை விளையாட்டுகள் என்பதை எளிதாகச் சொல்லியிருப்பார். கோனன் டாயில் கொஞ்சம் ஹோம்ஸ் கண்ணுடன் பார்த்திருந்தாலும் இந்த புகைப்பட தேவதைகள் 1914 இல் வெளிவந்த Princess Mary’s Gift Book எனும் நூலில் காணப்பட்ட தேவதைகளைப் போலவே இருப்பதைக் கண்டிருப்பார். தொடர்ந்து 1923 இல் கோனன் டாயில் தன் மனைவியின் “தானாக எழுதுதல்” (automatic writing)  முறை மூலம் ஆவியுலகுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்தார்.குறிப்பாக ஒரு அராபிய ஆவியான ஃபினீயஸ் (Phineas) அவருக்கு மறுமை ராஜ்ஜியத்தின் சிறப்புகளையெல்லாம் காட்ட ஆரம்பித்தது.

சிறுபிள்ளைகள் விளையாட்டாகச் செய்த விஷயத்தை கோனன் டாயில் பெரும் அறிவியல்பூர்வ ஆதாரமாகப் பொதுவில் வைத்தபின், 1917 முதல் 1980கள் வரை அந்தப் பெண்கள் அமைதியாகவே இருந்தார்கள். 1985 இல் அறிவியல் நவீன ஆசிரியர் ஆர்தர் சி. க்ளார்க்கின் “விநோத சக்திகளின் உலகம்” எனும் தொலைக்காட்சித் தொடரில் அச்சிறுமிகளில் ஒருவரான எல்ஸி ரைtட் (Elsie Wright) ஒரு பேட்டியளித்தார். அப்பேட்டியில் அவர் தாங்கள் எப்படி இந்த புகைப்பட வித்தையைச் (அல்லது சிறுபிள்ளை விளையாட்டை) செய்த பின்னர் அமைதி காக்க வேண்டியதாயிற்று என கூறினார்:

நாங்கள் இரண்டு சிறு கிராமத்துப் பெண்கள்..கோனன் டாயில் போன்ற அறிவாளி மனிதர்…என்ன செய்வது நாங்கள் மௌனமாகத்தான் இருக்க வேண்டியதாயிற்று.

அறிவியல் பார்வை கொண்ட ஒரு ஆளுமையை உருவாக்கி, அழியாப்புகழ் பெற்ற கோனன் டாயில் தமது தனிவாழ்க்கையில் ஆவியுலகை நம்பினார் என்பதுதான் விசித்திரம்.

ஆனால் அது அவ்வளவு வி்சித்திரமான விஷயமும் இல்லை. ஏனென்றால் எப்போதுமே ஆர்தர் இக்னேஷியஸ் கோனன் டாயிலுக்குள் கெல்டிக் பாரம்பரியமும் (Celtic heritage)  கத்தோலிக்க பாரம்பரியமும் சண்டையிட்டுக்கொண்டுதான் இருந்தன. இது தவிர அவர் ஒரு சாம்ராஜ்யவாதியும் கூட. முதல் உலகப்போரின் பின்னால் காலனிய சாம்ராஜ்ஜியங்கள் ஆட்டம் கொடுக்க ஆரம்பித்தன . இந்த கால கட்டத்தில்தான் கோனன் டாயில் ஆவியுலக ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டார் என்பதை கவனிக்க வேண்டும். அராபிய ஆவி கானன் டாயிலுக்கு காட்டிய ஆவியுலகத்தின் அதிகார அடுக்குகள் பிரிட்டிஷ் இந்தியாவின் காலனிய அதிகார அடுக்குகளை ஒத்திருந்தது தற்செயலானதல்ல. டாயிலின் அராபிய ஆவியுலக வழிகாட்டி

இனி வரும் நாட்களில் உலக மானுடத்துக்கு பிரிட்டனே மையமாக இருக்கும். இந்த இருளில் உலகுக்கு பிரிட்டனே கலங்கரை விளக்கம். ஏசு கிறிஸ்துவே அக்கலங்கரை விளக்கத்தின் ஒளி

என்று சொன்னதெல்லாம் டாயிலுக்கு உவப்பும் நம்பிக்கையும் அளித்திருக்க வேண்டும். தேவதைகளின் படங்களில் டாயில் தேடியது தேவதைகளைக் குறித்த நம்பிக்கைகளை மட்டுமல்ல சமுதாய மாற்றங்கள் தமது ஆழ்ந்த நம்பிக்கைகளுக்கு கொடுத்த அடிகளுக்கான வலிநிவாரணிகளையும்தான்.

அடுத்ததாக, நாம் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற கூர்த்த மதியாளரான பாபி ஃபிஷரை பார்க்கலாம். பாபி ஃபிஷர் பின்னாளில் ஒரு யூத எதிர்ப்பு வெறியராகிப் போனாரென்று ந்மக்கு இன்று தெரிய வருகிறது.  பாபி ஃபிஷரின் இன வெறுப்பு என்றல்ல, பொதுவாக யூத வெறுப்பு அல்லது செமிட்டிய வெறுப்பு (Anti-Semitism) என்பதை எடுத்துக்கொண்டால் ஐரோப்பாவில் அது அலை வீசிய நாட்களில் உருவாக்கிய போலி ஆதாரங்களைக் குறித்து பேசியாகவேண்டும். குறிப்பாக Protocols of the Learned Elders of Zion எனும் போலி ஆவணங்களைக் குறித்துப் பேசுவது அவசியம். அன்றைய காலகட்டத்தில் இன வெறுப்பைப் பரப்பும் இந்தப் போலி ஆவணத்தை ஆதரித்துப் பலர் பேசினார்கள். இன்றைக்கும் அதனை நம்புவோர், அதனை உண்மை எனக் கருதுவோர் உள்ளனர். அது ஒரு சதித்திட்டம். உலகத்தை வயப்படுத்த ஒரு சிறுகுழுவினர் திட்டமிட்டு ஒழுக்கக் கேடுகளையும் தவறான கருத்துக்களையும் பரப்பி சமுதாயத்தை பலவீனப்படுத்துவதாக உருவகிக்கும் சதித்திட்ட ஆவணங்கள் தற்செயலாக வெளியானது போலத் தோற்றம் காட்ட உருவாக்கப் பட்ட ஒரு போலி ஆவணம். இதனை நம்பியவர்கள் நாஸிகள் மட்டுமல்ல. யூதர்களை வெறுக்கும் பல நாடுகளிலும், பல மக்கள் சமூகங்களிலும், கருத்தியல் பரப்பும் கட்சிகளிலும் இன்னமும் இந்தப் புத்தகம் ஒரு ஆதாரமாகக் காட்டப்படும் அவலம் தொடர்கிறது.

மனிதப் பண்பாட்டைச் சீர்குலைத்து அழித்து, பொறாமையும் கீழ்த்தன்மையும் கொண்ட, முன்னேற்றமற்ற, சாத்தியமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உலகளாவிய ஒரு சதி இருக்கிறது அது மெதுவாக வளர்ந்து வருகிறது …இச்சதியில் போல்ஷ்விக்குகளை உருவாக்குவதிலும் ரஷ்யப்புரட்சியை ஏற்படுத்தியதிலும் உலகளாவிய -அதிலும் குறிப்பாக இறை நம்பிக்கையற்ற- யூதர்களின் பங்கு நாம் அதீதப்படுத்தி சொல்லமுடியாத படி இருக்கிறது. (யூதர்களின்) பங்கே இதில் அதிகம். மற்றனைவரைக் காட்டிலும் அவர்களின் பங்கு அதிகமானது.

என்று ப்ரோட்டோ கால்ஸின் அடிப்படையில் இல்லஸ்ட்ரேட்டட் ஸண்டே ஹெரால்டில் பிப்ரவரி 8 1920 இல் கட்டுரை எழுதியவரின் பெயர் வின்ஸ்டன் சர்ச்சில். மீண்டும் மீண்டும் இது தவறெனவும் போலி ஆவணங்களெனவும் நிரூபிக்கப் பட்டாலும் இன்றைக்கும் இவை உண்மையென நம்புகிறவர்கள் எத்தனையோ ஆயிரம்பேர் இருக்கிறார்கள். அதைப் போலி என்று தெரிந்தாலும் தம் அதிகாரத் தேட்டைக்கு உதவும் ஒரு கருவி என்று முழுக்க கபட நோக்கோடு பயன்படுத்தும் அரசியல்வாதிகளும் நிறையவே இருக்கிறார்கள்.

(தொடரும்)

–o00o–

அடிக்குறிப்புகள்


1.  கோனன் டாயில் – தேவதைகளின் வருகை – இணையத்தில் படிக்க : http://ebooks.adelaide.edu.au/d/doyle/arthur_conan/fairies/

One Reply to “புத்திசாலியான முட்டாள்-I”

Comments are closed.