சாத்தியத்தை மீறிய சத்தியங்கள்

உலகத்தில் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றத் தெரியாதவர்கள் இரண்டு தரப்பினர் : முதலாவது, அப்பாவிக் கணவன்மார்கள். இரண்டாவது அரசியல்வாதிகள். இந்த வரிசையில் நம் விஞ்ஞானிகளையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று கசப்புடன் கூறுகிறார் ஸ்டூவார்ட் ப்ளாக்மன்.

கடந்த ஐம்பது வருடத்தில் மட்டும் விஞ்ஞானிகள் ‘இதோ செய்யப் போகிறோம், போகிறோம், கிறோம், றோம்…’ என்று சொல்லிக்கொண்டே செய்யாமல் விட்ட பட்டியல் சற்று நீளமானது. மருத்துவ விஞ்ஞானிகள் வாக்குறுதி கொடுத்த பல மருந்துகளும் சிகிச்சைகளும் இன்னும் வரவே இல்லை. மனித மூளையின் அளவுக்கு புத்திசாலி கம்ப்யூட்டர்கள், சுற்றுச் சூழலை பலாத்காரம் செய்யாத மாற்று எரி பொருள்கள், அறை வெப்ப நிலையில் சூப்பர் கண்டக்டர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் சில, டெக்னாலஜியின் சாத்தியங்கள் முழுவதும் புரிவதற்கு முன்னமே செய்யப்பட்ட அவசரக் கோல அறிவிப்புகள். மற்றவை நேரடியான ஃப்ராடு கேஸ். தொழில் போட்டி, சட்டம், அரசியல், லஞ்சம், வஞ்சம் என்று ஒரு முழு நீள மசாலா சினிமா திரைக் கதைக்கு வேண்டிய அத்தனை அம்சங்களும் இதில் உள்ளன.

தென் கொரியாவில் கால் நடை மருத்துவராக இருந்தவர் ஹ்வாங் வூ சக். மாடு-சாணி எல்லாம் அலுத்துப் போய் விஞ்ஞான ஆராய்ச்சியில் இறங்கினார். க்ளோனிங் முறையில் பசு ஒன்றைத் தயாரித்திருப்பதாக அறிவித்து உடனே உலகப் புகழ் பெற்றார். கை தட்டல்களால் இன்னும் தைரியம் பெற்று, மனிதக் கரு முட்டைகளிலிருந்து ஸ்டெம் செல்களைத் தயாரித்துவிட்டதாக டிவி, ரேடியோவையெல்லாம் கூட்டி அறிவித்துவிட்டார்.

இது மட்டும் நடைமுறை சாத்தியமானால், விபத்தில் இழந்த அங்கங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் இருந்தவர்கள் எழுந்து நடக்கலாம். நம் டெலிவிஷன் அறிவிப்பாளினிகள்கூட ஸ்பஷ்டமாகத் தமிழ் பேச ஆரம்பித்து விடலாம்.

மரியாதைக்குரிய ‘சயன்ஸ்’ இதழில் ஹ்வாங்கின் கட்டுரைகள் 2004-2005ல் வெளி வந்தவுடன் அவருக்குப் பாராட்டு மழை பொழிந்தது. விருதுகள், விருந்துகள் நடந்தன. கொரிய அரசாங்கம் இதன் நினைவாக ஒரு தபால் தலை கூட வெளியிட்டது. அப்போதே ஒரு சில எதிர்ப்புக் குரல்கள் ஓரத்தில் சந்தேகம் கிளப்பினாலும், ‘ஒரு பச்சைக் கொரியன் இவ்வளவு பெரிய சாதனை செய்திருக்கிறான் – அதைப் பாராட்ட மனமில்லை; உங்களுக்கெல்லாம் இன மானமே கிடையாதா ?’ என்று அவர்களை எல்லோரும் சேர்ந்து நொங்கு எடுத்துவிட்டார்கள்.

ஆனால் மேலே சென்ற அதே வேகத்தில் கீழே விழுந்தார் ஹ்வாங்.

அவர் செய்த ‘ஆராய்ச்சி’ எல்லாம் கல்லூரி நாட்களில் நாங்கள் ஃபிஸிக்ஸ் பரிசோதனைக் கூடத்தில் கடைப்பிடித்த பழைய டெக்னிக்தான் : வர வேண்டிய விடைக்கு ஏற்ப எண்களைச் செருகி ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பின்னோக்கி எழுதுவது ! ஹ்வாங்கின் கதையில் வந்த பெயர்கள், சம்பவங்கள் ஸ்டெம் செல்கள் யாவும் கற்பனையே. விஷயம் வெளியே தெரிந்தவுடன் கட்டுரை, விருது, ஸ்டாம்ப்பு எல்லாம் வாபஸ் ஆயின.

இது போன்ற விஞ்ஞான ஏமாற்று வித்தைகள் அரிதுதான். ஆனால் விஞ்ஞானிகள் அவசரப்பட்டோ, அளவுக்கு மீறியோ ப்ராமிஸ் பண்ணிவிடுவதுதான் அதிகம். ‘இந்தக் குறிப்பிட்ட சிகிச்சை அடுத்த வருடமே வரப் போகிறது’ என்பார்கள். இருபது வருடமாக அதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஃப்யூஷன் என்ற அணுக் கரு இணைப்பை வைத்து ஊருக்கெல்லாம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றார்கள். அதுவோ அரை செகண்டு எரிந்துவிட்டு அணைந்துவிட்டது. நாமும் ஃபைல் அட்டையால் விசிறிக்கொண்டு நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

விஞ்ஞானிகள் தடாலடி அறிவிப்பு செய்வதற்கு நிறையவே ஊக்கம் இருக்கிறது. முதலில் ஆராய்ச்சிக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு. மீடியாவில் அடிபட்ட, கவர்ச்சிகரமான ப்ராஜெக்ட் என்றால் பணம் தானாக வந்து கொட்டும் ! ஆனால் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு நடந்தால் அதை உடனே டெக்னாலஜியாக மாற்றி மிக உடனே ஏதாவது தயாரித்து விற்று லாபம் பார்க்கத்தான் கம்பெனிகள் துடியாக இருக்கும். இந்தக் கண்டுபிடிப்பு இன்னும் பத்து வருடம் கழித்துத்தான் நடைமுறைக்கு வரக் கூடியது என்றால் ‘சில்லறையாக இல்லை, போய்விட்டு அப்புறம் வா’ என்று சொல்லிவிடுவார்கள்.

1995ல் மரபீனி சிகிச்சை (ஜீன் தெரபி) என்பது பொய்யா மெய்யா என்று கண்டறிய ஒரு கமிட்டி அமைத்தார்கள். அதன் தலைவர் வார்மஸ் பலமாகக் காறித் துப்பினார் :”ஜீன் தெரபி பற்றிய உண்மைகளை ஏகத்துக்கும் ஊதிப் பெரிதாக்கி வைத்துவிட்டார்கள். ஆராய்ச்சி முடிவுகளை அவர்கள் பத்திரிகைகளுக்குக் கொடுக்கும் விதத்தில், இவை அனைத்தும் ஆரம்பப் பரிசோதனைக் கட்டத்தில்தான் இருக்கிற உண்மை மழுப்பப் படுகிறது. டாக்டர்களுக்கும் பேஷண்ட்களுக்கும் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் எழுந்துவிட்டன”.

மனித ஜினோம் ப்ராஜெக்ட் ஆரம்பித்தபோது ‘இதனால் யூஜெனிக்ஸ் சாத்தியமாகும், நல்ல குடிமக்களைப் பிறப்பிக்க முடியும்’ என்றார்கள். பரம்பரை வியாதிகளைப் போக்குவதுடன், குற்றங்களைக் குறைத்து, சமுதாயத்தில் போக்கிரித்தனத்தை ஒழிக்க முடியும் என்று சொல்லப்பட்டது. 1989ல் ‘சயன்ஸ்’ பத்திரிகையின் தலையங்கத்திலேயே, ‘இனி மன நோய்கள் ஒழிந்துவிடும், ப்ளாட்பாரத்தில் படுத்துத் தூங்குபவர்கள் குறைந்துவிடுவார்கள்’ என்று சிவலிங்கத்தின் முன்னால் நின்ற மாணிக்கவாசகர் மாதிரி நெக்குருகினார்கள். நடந்ததா ?

சில விஞ்ஞானிகள் இதற்கு நேர் எதிர் ரகம். பதினெட்டாம் நூற்றாண்டில் மால்தஸ் என்ற பொருளாதார விஞ்ஞானி, பூமியில் இப்படி ஜனத்தொகை பெருகிக்கொண்டே போனால் ஒரு நாள் பட்டினி பஞ்சம் சாவு நோவு என்று பேரழிவு வந்து தன்னால் ஜனத் தொகை குறைந்துவிடும் என்றார். நல்ல வேளை குறையவில்லை. பால் எர்லிச் என்பவர் ‘பாப்புலேஷன் பாம்’ என்று ஒரு புத்தகத்தில், 1970-80களில் கோடிக் கணக்கான பேர் சாப்பாட்டுக்கில்லாமல் சாகப் போகிறோம் என்று எழுதி வைத்துவிட்டார். கொள்ளை நோய்கள், சுற்றுச் சூழல் ஆபத்துகள் என்று எத்தனை பூச்சாண்டி காட்டினார்கள்… ‘அடுத்த மாதமே உலகம் அழியப் போகிறது’ என்று அவ்வப்போது இவர்கள் சொன்னதை நம்பி அவசரமாக க்ரெடிட் கார்டில் எத்தனை செலவு செய்துவிட்டோம் ?

நம்முடைய மீடியா கலாச்சாரமும் மிகைப்படுத்தலுக்கு ஒரு காரணம். டி.வி சானலில் விஞ்ஞானிகள் தோன்றிப் பதினைந்து செகண்டில் தங்கள் கண்டுபிடிப்பை விவரித்துவிட்டு சோப்புத் தூள் விளம்பரத்துக்கு வழி விட வேண்டியிருக்கிறது. இதில் போய் ‘நாங்கள் செய்வது ஆரம்பக் கட்ட ஆராய்ச்சிதான்; இதில் வெற்றியோ, தோல்வியோ, வெற்றியுடன் கூடிய தோல்வியோ வரலாம்’ என்ற உண்மையைப் பேசினால் சவசவ என்று வானிலை அறிவிப்பு மாதிரி இருக்கும். ஒழுங்காக வேலை செய்யும் விஞ்ஞானிகளும் ஆர்க் வெளிச்சத்தின் போதையில் அத்தாரிட்டியுடன் பேச வேண்டிய கட்டாயத்தில், மிகைப் படுத்தியும் எளிமைப் படுத்தியும் எதையாவது சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். பரபரப்பான நியூஸ் வந்தால்தானே டி.ஆர்.பி ரேட்டிங்குக்கு நல்லது !

பல்கலைக் கழகங்களிலிருந்து ஸ்பின் அவுட் கம்பெனிகள் என்று சிறுசிறு தொழில்கள் முளைப்பது சமீபத்திய போக்கு. விஞ்ஞான ஆராய்ச்சி, படிப்பு, பிசினஸ், லாபம் எல்லாம் சேர்ந்து குழம்பிக் கிடக்கும் குட்டை இது. பயோ டெக் நிறுவனங்களில் ஃபைனான்ஸ் ஆசாமிகள்தான் பெரும்பாலும் உச்சப் பதவிகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ப்ரொபசர் கண்டுபிடிப்பதை வணிக ரீதியாக விரைவில் விற்றாக வேண்டிய அவசரம் அவர்களுக்கு ! எனவே பேராசிரியரைத் தலை சீவி ரோஸ் பவுடர் அடித்து ஸ்க்ரிப்டைக் கொடுத்து டி.வி. காமிரா முன்பு நிறுத்திவிடுகிறார்கள்.

எந்தத் தொழிலிலும் இருக்கும் லாபிகள் வேறு அவ்வப்போது விஞ்ஞானக் கயிறு திரிக்கின்றன. தத்தமக்கு சாதகமாகவும், போட்டியாளர்களுக்கு பாதகமாகவும் சட்டத்தை வளைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உதாரணமாக, மரபீனி மாற்றப்பட்ட (ஜி.எம்) பயிர்களைப் பற்றி ஐரோப்பாவில் பலத்த எதிர்ப்பும் சந்தேகமும் நிலவுகின்றன. மக்கள் கருத்து, பார்லிமெண்ட் உறுப்பினர்கள் ஆதரவு இவற்றைக் கருதி மீடியாவில் பேட்டி கொடுப்பதற்கு என்றே சில விஞ்ஞானிகளை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள். அவர்களும் கொடுத்த காசுக்கு ஏற்ப மிகைப் படுத்தல்கள், அரைத் தகவல்கள் எல்லாவற்றையும் கூச்சமில்லாமல் பிரயோகிக்கிறார்கள்.

விஞ்ஞானிகள், உயரமான வாக்குறுதிகள் கொடுத்துவிட்டுப் பிறகு அசடு வழிவதைத் தடுக்க வல்லுனர்கள் சொல்லும் வழிகள் இவை :

(1) கால அவகாசங்களை ரொம்பவும் எளிமைப் படுத்திவிடாதீர்கள். ஒரு புதிய விஞ்ஞானம் மருந்தாக மார்க்கெட்டுக்கு வருவதற்குப் பத்து வருடம் ஆகுமென்று தோன்றினால், நேராக லென்ஸைப் பார்த்து ‘பத்து ‘ என்று சொல்லிவிடுங்கள்.
(2) பழைய வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். இதற்கு கோப்பர்நிக்கஸிலிருந்து ஆரம்பிக்கலாம்.
(3) ஒரு புதிய விஞ்ஞானத்தின் சாத்தியங்களைப் பேசும்போது, அதன் பிரச்னைகளையும் சேர்த்தே தெரிவித்துவிடுங்கள்.
(4) தனக்கு என்னவெல்லாம் தெரியாது என்பதையும் மனதில் வைத்துக்கொண்டே பேசுங்கள். ஒரு பயாலஜி பேராசிரியர், தன்னுடைய துறையின் கோணத்திலிருந்து பார்த்து, மக்கள் தொகை பெருகி வெடிக்கப் போகிறது என்று சொல்லிவிடலாம். ஆனால் இதில் அரசு, பொருளாதாரம், சமூகவியல் என்று பல சக்திகளும் பிரிக்க முடியாமல் பிணைந்திருக்கின்றன. அத்தனை துறைகளின் வல்லுனர்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் ஜோசியத்தில் இறங்க வேண்டும்.

அது முடியாவிட்டால், விஞ்ஞானிகள் ஆளுக்கு ஒரு பச்சைக் கிளியையாவது வளர்க்க வேண்டும்.