கடவுளுடன் பன்னிரு நடனங்கள்

வேணுகானம் சரபசாஸ்திரி என்றொரு புல்லாங்குழல் மேதை சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்தார். பிறவியிலேயே கண்பார்வையற்றிருந்த அவர் மூன்று, நான்கு வயதுகளிலேயே வெகு அருமையாக சங்கீதத்தைக் கிரகித்துக் கொண்டார். பத்து வயதிலேயே முதல்தர புல்லாங்குழல் கச்சேரிகள் செய்யத் தொடங்கிவிட்டார். பல சங்கீத மேதைகளாலும் போற்றிக் கொண்டாடப்பட்ட அவர் வெகு சிறு வயதிலேயே தன்னுடைய முப்பது வயதுகளிலேயே இறந்துவிட்டார். இன்றைக்கு அவரைக் குறித்த விஷயங்கள் நமக்கு வெகு குறைவாகத்தான் தெரிய வருகின்றன. அதுவும் செவி வழிச்செய்திகளின் புராணத்தன்மை கொண்டவை.

ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்த ஒரு மாபெரும் பிறவி மேதையைப் பற்றிய தகவல்கள் கூட நம்மிடம் இல்லாமல் போனது எவ்வளவு வருத்தமளிக்கும் விஷயம்! இப்படிப்பட்ட வரலாற்றுப்பதிவுகளின் மீதான அக்கறையின்மையால் நம் வாழ்நிலை, சமூகம், கலைகளைக் குறித்த முறையான வரலாறு என்பது இல்லாமலே போகிறது. ஊடகப் பிரச்சாரங்கள் வெகு எளிதாக சில வருடங்களிலேயே ஒரு தவறான வரலாற்றை நம் முன் வைக்கும் அவலமும் தொடர்ந்தபடி இருக்கிறது. அடிப்படையிலேயே வரலாற்றைக் குறித்த ஒரு நேர்மையான புரிந்துணர்வு நம் சூழலில் நிலைபெறாவிடில் இதிலிருந்து மீள்வது கடினம்.

ரோலண்ட் கிர்க்
ரோலண்ட் கிர்க்

சரபசாஸ்திரிகளைப் போன்றே பார்வை இழந்த புல்லாங்குழல், சாக்ஸஃபோன் மேதை ஒருவர் மேற்கில் இருந்தார். அவர் பெயர் ரோலாண்ட் கிர்க் (Roland Kirk) [1935 – 1977]. இவர் தன்னுடைய பத்து வயதில் ஒரு தவறான மருத்துவ சிகிச்சையில் பார்வையிழந்தார். ஒரு கனவில் கிடைத்த வழிகாட்டலின் படி ரோனால்ட் என்ற தன்னுடைய பெயரை ‘ரோலாண்ட்’ என்று மாற்றிக்கொண்டார். க்ளாரினெட், டெனர் சாக்ஸஃபோன், சங்கு, விசில், இரண்டு – மூன்று புல்லாங்குழல்கள் எனப் பல கருவிகளையும் தன் உடலில் மாட்டிக் கொண்டு மேடையேறுவார் கிர்க். (கிட்டத்தட்ட இவருடைய பாதிப்பில் உருவானதுதான் ‘புதுச்சேரி கச்சேரி’ கமலஹாசன் கெட்டப்). இவற்றைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல் அனைத்தையும் வாசிக்கவும் செய்வார். சமயங்களில் பல கருவிகளை ஒரே சமயத்திலும் வாசிப்பார். மூன்று சாக்ஸஃபோன்களை வாயில் வாசித்துக் கொண்டே, புல்லாங்குழலை மூக்கில் வாசிப்பார். இவற்றில் பல இசைக்கருவிகள் இவரே வடிவமைத்தவை.

ஒருவிதமான கிறுக்கு மனிதரோ என்று எண்ணக்கூடிய அளவுக்கு இவர் பல வாத்தியங்களை இசைத்தாலும், சங்கீதத்தில் இவர் ஒரு புறந்தள்ள முடியாத மேதைதான். அடிப்படையில் மிகச்சிறந்த ஜாஸ் இசைக்கலைஞர். ஜான் கோல்ட்ரேன், ட்யூக் எலிங்டன் போன்ற சிறந்த ஜாஸ் கலைஞர்களின் இசையை இவர் வாசித்தார். ஜாஸ் மட்டுமல்லாது மேற்கத்திய செவ்வியல், நேர்த்தியான பாப் இசை இரண்டையும் ஜாஸ் இசையோடு சேர்த்து இவர் ஒரு அழகான இசைக்கோர்வையை நடு நடுவே வழங்கிவந்தார். இவருடைய தாக்கம் நிறைந்த இசைக்கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமான ஒருவர் இயான் ஆண்டர்சன் (Ian Anderson) என்ற ஸ்காட்லாந்தின் இசைக்கலைஞர்.

இயான் ஆண்டர்சன்

இவரும் கிர்க்கைப் போலவே பல இசைக்கருவிகளை வாசிக்கக்கூடியவர். முக்கியமாக இரும்புப் புல்லாங்குழல் வாத்தியத்துக்காக அறியப்படுபவர். கிர்க்கைப் போலவே இவருடைய ஆளுமையும் படு சுவாரசியமான, கலகலப்பான ஒன்று. புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே பாடவும் செய்வார். ஒருமுறை தற்செயலாக இவர் ஒற்றைக்காலில் நின்றபடி புல்லாங்குழலை வாசிக்க, அதைப் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் ‘ஒற்றைக்காலில் நின்றபடி புல்லாங்குழல் வாசிக்கும் இசைக்கலைஞர்’ என்று எழுதிவிட்டார். அந்தப் பெயரைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இவர் தொடர்ந்து ஒற்றைக்காலில் நின்றபடி புல்லாங்குழல் வாசிக்கிறார்.

இவர் கிர்க்கைப் போல ஜாஸ் இசைக்கலைஞர் இல்லை. ராக் இசைக்கலைஞர். இவர் உருவாக்கிய ‘ஜெத்ரோ டல்’ (Jethro Tull) இசைக்குழு வெகு பிரபலமான ராக் இசைக்குழு. இந்த இசைக்குழு இந்தியாவுக்கு வந்தபோது நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ராக் இசைக்குழு என்று அறியப்பட்டாலும் படு வறட்சியான காட்டுக்கத்தலாக இல்லாமல், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து நாடுகளின் நாட்டுப்புற இசை, மேற்கத்திய செவ்வியல் என அங்கங்கே சுவாரசியமான கலவையாக இருக்கிறது. பாஹ்க் எழுதிய ‘Bouree in E Minor’ என்ற இசைக்கோர்வையை ஜெத்ரோ டல்லில் புல்லாங்குழல், பாஸ்கிடார் சகிதம் வாசிக்கிறார்கள். ஜெத்ரோ டல்லின் எல்லா இசை நிகச்சிகளிலும் இடம்பெறும் மிகவும் பிரபலமான இசைக்கோர்வை இது.

ஜெத்ரோ டல் இசைக்குழுப் படைப்புகளைத் தவிர, இயான் ஆண்டர்சன் தனித்தும் சில இசைத்தொகுப்புகள் வழங்கியிருக்கிறார். அவற்றுள் மிக முக்கியமானது ‘Divinities: Twleve Dances with God’ என்ற இசைத்தொகுப்பு. உலகின் வெவ்வேறு பன்னிரண்டு பகுதிகளில் நடைபெறும் இசைக்கோர்வைகளாக இவற்றை வடிவமைத்திருக்கிறார் ஆண்டர்சன். ஸ்பெயின், அயர்லாந்து (கெல்டிக்), இந்தியா, ஆப்பிரிக்கா, சவூதி அரேபியா எனப் பல நாடுகளின், மதங்களின் இசை வடிவங்களை ஒவ்வொரு பகுதியாக இசைத்தொகுப்பின் மையப்பகுதியான மேற்கத்திய செவ்வியலுடன் கலந்து ‘உலக இசை’ என்ற முயற்சியைச் செய்திருக்கிறார் இயான் ஆண்டர்சன்.

இதைப் போன்ற உலக இசைத்தொகுப்புகள் இப்போது சந்தையில் நிறைய புழங்குகின்றன. ஏதாவது ஒரு நாட்டின் ஆதார இசையை ‘உருவி’ அதை அப்படியே ஒரு டிஜிட்டல் இசை இயந்திரத்தில் நுழைத்து உலக இசை லேபிள் ஒட்டி விற்றுவிடுகிறார்கள். ஆனால் இயான் ஆண்டர்சன் கொஞ்சம் அதிலிருந்து முன்னகர்ந்து அழகானதொரு மைய இசையை வைத்துக் கொண்டு, தேர்ந்த மேற்கத்திய கார்ட் ப்ராக்ரஷன்களை இணைத்திருக்கிறார்.

divinities-coverஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் ‘In a stone circle’ என்ற இசைக்கோர்வை வெகு வெளிப்படையாகவே கெல்டிக் இசையோடு தொடங்குகிறது. அந்த நாட்டுப்புற இசையில் அயர்லாந்தின் பச்சைநிறம் பளீரென்று கண்ணில் தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுப்பின்புதான் மைய இசைக்கோர்வையான மேற்கத்திய செவ்வியல் அதைப் பின்பற்றி மேலெழுந்து செல்கிறது. அதற்கடுத்த இசைக்கோர்வையான ‘In sight of Minaret’ என்ற இஸ்லாமிய இசையை அடிப்படையாகக் கொண்ட இசைக்கோர்வை உடனடியாக புதிய இசையை உள்நுழைத்துவிடுவதில்லை. கிட்டத்தட்ட இசைக்கோர்வையின் மையப்பகுதியில் மேற்கத்திய இசை உச்சம் கொள்ளும்போது ஒரு அழகான இஸ்லாமிய நடன இசையுடன் அழகாகக் கலந்து மீண்டும் மேற்கத்திய ட்யூனை முன்னெடுத்துச் செல்கிறது. இப்படி ஒரு அச்சுப்பிரதியான ஃபார்முலாவைக் கையாளாமல் எடுத்துக் கொண்ட இசை வகைக்கேற்ப அனுசரித்துச் செல்வதற்கே அடிப்படையில் மேலான இசை ரசனையும், புரிதலும் இருக்க வேண்டும்.

இந்த இசைத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இசைக்கோர்வை ‘In the moneylender’s temple’ என்ற இசைக்கோர்வை. அழகான மேற்கத்திய செவ்வியலின் கெளண்டர்பாயிண்ட் உத்தியை பின்னணியிலிருக்கும் பாஸ் இசைக்கும், முன்னணியிலிருக்கும் புல்லாங்குழலுக்கும் இடையே நடத்தியது. என்னுடைய செல்லிடப்பேசியின் அழைப்பொலியாக பல மாதங்கள் இருந்தது இந்த இசைக்கோர்வை.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இயான் ஆண்டர்சனின் ஜெத்ரோ டல் குழுத்தோழரான ஆண்டி கிட்டிங்ஸின் கீபோர்ட் பங்களிப்பு. ஆண்டி கிட்டிங்ஸ்தான் பின்னணி கார்ட் ப்ராக்ரஷனைக் கவனித்துக் கொண்டார் என்று தெரிகிறது. இது ஒரு ஆகச்சிறந்த இசைப்படைப்பு என்று நிச்சயம் சொல்லமாட்டேன். திரும்பத்திரும்ப இசைக்கப்படும் மைய இசை ஆங்காங்கே அலுப்பூட்டி விடுகிறது. கார்ட் ப்ராக்ரஷனும் ஒரு சில அமைப்புகளுக்குள்ளேயே அடங்கி விடுகிறது. ஆனால் இது பல நாட்டு இசை வகைகளை நேர்மையாக அணுகுவதாலும், தேர்ந்த மேற்கத்திய இசைக்கோர்ப்பாலும் முக்கியமான இசைப்படைப்பாகிறது. ஒரு வட்டப்பாதையில் மீண்டும், மீண்டும் சுற்றிவரும் ட்யூனும், பின்னணி இசைக்கோர்வையும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வடிவமைப்பை வெகுவாக நினைவூட்டுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட ’Bombay Valentine’ என்ற இசைக்கோர்வை அச்சு அசலாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு போலவே இருக்கிறது. இசை கேட்டலில் ஆழ்ந்த பயிற்சியில்லாத ஆரம்பநிலை ரசிகரையும் இது சென்றடையும் என்பது இந்த இசைத்தொகுப்பின் இன்னொரு சிறப்பு.

பெருமதங்களைத் தாண்டி, கெல்டிக், ஆப்பிரிக்க நம்பிக்கை போன்ற பாகன் நம்பிக்கைகளையும் பொருட்படுத்தி முக்கியத்துவம் தந்து இசையமைத்ததற்கே இயான் ஆண்டர்சனைப் பெரிதும் பாராட்டலாம். இப்படிப் பன்னிரண்டு இசைக்கோர்வைகள் வழியாகப் பல்வேறு மதங்களை இயான் ஆண்டர்சன் தரிசித்தாலும், அடிப்படையில் அவர் இந்த பன்னிரண்டு மதங்களையும் சாராத இயற்கையை முன்னிறுத்தும் ‘Pantheism’ என்ற நம்பிக்கையைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார். இந்த இயற்கை நம்பிக்கை வழியாகவும் அவர் இன்னொரு இசைத்தொகுப்பை அளித்தால் அதுவும் இசை ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

“Divinities: Twelve dances with Gods” இசைத்தொகுப்பின் சில பகுதிகளை இந்த இணைப்பில் கேட்கலாம்.

One Reply to “கடவுளுடன் பன்னிரு நடனங்கள்”

Comments are closed.