இறைத்தூதுவன்

இறைத்தூதுவன்

இரண்டு மாடிக்கடையில்
விற்பனை பிரதிநிதியென்று
அறிமுகப்படுத்திக் கொண்டவன்
இந்த புதுசெல்போனில்
பிரியமானவர்களின்
மனதின் குரலோடு
ரகசியமாக பேசலாமென்றான்.
பதிலேதும் சொல்லாமல்
புன்னகையோடு பார்த்தேன்.
என் மீது நம்பிக்கை வரவில்லை போலும்.
வரிசையாக சொல்ல ஆரம்பித்தான்.
பாட்டு கேட்கலாம்.
படம் பார்க்கலாம்.
படம் பிடிக்கலாம்.
குறிப்பெழுதலாம்.
கடிகாரம் உண்டு.
காலண்டர் பார்க்கலாம்.
விளையாடலாம்.
புத்தகம் படிக்கலாம்.
ஓவியம் வரையலாம்.
கணக்குகள் செய்யலாம்.
கடவுளையும் வரவழைக்கலாம்…
கடையை விட்டு வெளியேறும்போதுதான்
கவனித்தேன்.
அவனைச் சுற்றி சின்னக் கூட்டம்.
அவன் தலைக்கு பின்னால்
சிறு ஒளி வட்டமொன்று
படர ஆரம்பித்திருந்தது.

இயற்கை

இயற்கை‌யென்ற தலைப்பில்
சிறுமியொருத்தி வரைந்த ஓவியத்துக்கு
ஆறுதல் பரிசு கூட தரவில்லையாம்.
அழுதபடியே சொன்னாள்.
வாங்கி பார்த்தேன்.
வெள்ளைத்தாளில் பெ‌‌ரிய அளவில்
இரண்டு முக்கோணங்களை
அருகருகே வரைந்திருந்தாள்.
ஒரு அரைவட்டத்தால்
முக்கோணங்களை இணைத்திருந்தாள்.
பிறைநிலவாம்.
மலைகளின் அடியில்
நெளி நெளியாக கிறுக்கியிருந்தவள்
ஆறு வரைந்தேன் என்றாள்.
ஆர்வமாக உற்றுப்பார்த்தேன்.
ஆற்றின் மேலே
ஆனந்தமாய் நீந்தும் மீன்கள்.
ஆற்றோரம் தென்னை மரங்கள் கூட.
ஓடமொன்றை காண்பித்தாள்.
மீன்களுக்கு அடிபடாமல் இருக்க
ஓடத்தின் பாதிமுனை மலை மேல் இருந்தது.
ஓடம் எப்படி மலையேறும்?
இதைச்சொல்லி நிராகரித்தார்களாம்.
சிரித்தபடியே அவளிடம் தந்தேன்.
ஓடமும் ஒருநாள் வண்டி ஏறும்போது
மலையேறினா‌‌‌ல் என்ன தப்பு?