அது அவள் அவன்

ஜெயமோகனின் வீட்டிற்கு வீட்டம்மாவுடன் சென்றேன். முதலிலேயே தகவல் சொல்லியிருந்ததால் கார் சத்தம் கேட்டவுடன் மோகன்,அருண்மொழி ஆச்சி, அஜி மூவரும் வாசலுக்கே வந்துவிட்டனர்.சைது மட்டும் வெளியே வரலாமா, வேண்டாமா . . ‘என்னத்துக்கு போட்டு. உள்ளேதானே வரப் போறாங்க’ என்று அரைகுறையாய் முடிவு செய்து லேசாக எட்டிப் பார்த்தாள். நான் காரை விட்டு இறங்கிய உடன் நேரே போய், ‘மோகன், இவன்தானே ஹீரோ. எங்கே மற்றவன்’ என்று கேட்க மோகனும் படு உற்சாகமாக மற்றவனைக் காட்ட அழைத்துச் சென்றார். ஹீரோவும், நான் கேட்ட மற்றவனும் ஜெயமோகன் வீட்டின் நாய்கள். அவர்கள் இருவரையும் பார்த்து கொஞ்சிய பின்தான் வீட்டிற்குள்ளேயே சென்றேன். ஜெயமோகனுக்கும், அருண்மொழியாச்சிக்கும், பிள்ளைகளுக்கும் எனது இந்த செய்கை மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் இது மாபெரும் குற்றமாக என் மனைவிக்கு பட்டது. திரும்பும்போது எல்லா கணவர்களிடமும் மனைவிமார்கள் தவறாமல் கேட்கும் அந்த கேள்வியை கேட்டாள். ‘ஒங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?’

ஏழாயிரம்பண்ணையிலிருந்து வெள்ளையுடம்பில் காப்பிக்கலர்ப் பூக்களுடன் கூடிய தோற்றத்தில் வந்த ஜானிதான் எங்கள் வீட்டின் முதல் நாய். பிறந்து நாற்பது நாட்களாயிருந்த ஜானி நான்கே மாதங்களில் முழு நாயானது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஒல்லியாக சிப்பிப்பாறைகளுக்கேயுரிய நெஞ்சுக்கூடு மட்டும் மேடாக தூக்கிக் கொண்டு நிற்கும் ஜானி, தூங்கும் போது கால்கள் நான்கையும் நீட்டியபடிதான் படுக்கும். வாசலில் யாராவது வருவது தெரிந்தால் படுத்திருந்தபடியே விருட்டெனப் பாயும். மணிமாமாதான் ஜானியின் தோழன். எங்கள் வீட்டு தார்சாவில் அவன் படுக்கையை விரித்துப் போட்ட மறு நொடி ஜானி போய் அதில் படுத்துக் கொள்ளும். ‘ஏ,மூதி… நீ படுக்கதுக்கு சிவஞானம்பிள்ளை மகன் படுக்கை கேக்கொ’ என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டு ஜானியை கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்துக் கொள்வான். தூங்கும் போது மணிமாமாவின் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டுதான் ஜானி தூங்கும். அப்போது பார்ப்பதற்கு இருவரும் ஒரே ஜாடையில் இருப்பார்கள்.

ஜானிக்கு பின் எங்கள் வீட்டுக்கு வந்த நாய் ஒரு கறுப்பு லாப்ரடார். (ஜெயமோகனின் வீட்டில் இருக்கும் ‘ஹீரோ’ லாப்ரடார்தான். மற்றவன் டாபர்மேன்). கறுப்பு லாப்ரடாருக்கு பெயர் சூட்டும் பொறுப்பு ஆவுடையப்ப அத்தானிடம் விடப்பட்டது. வாழ்க்கையில் முதன்முதலாக தனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக அதை எடுத்து கொண்ட அத்தான் சம்பந்தமேயில்லாமல் நாய்க்கு லியோ என்று பெயர் வைத்தான்.எந்த நேரமும் சாப்பிடுவது, தூங்குவது என்று படு பிஸியாகவே லியோ வளர்ந்து வந்தான். சுத்த சைவம். அமாவாசைதோறும் அவனுடைய அம்மைக்கும், அப்பனுக்கும் தர்ப்பணம் கொடுக்காத ஒரே காரணத்தினால் லியோப்பிள்ளை என்று அழைக்கப்படும் வாய்ப்பை இழந்தான். மற்றபடி விசேஷமானவன். மற்ற நாய்களைப் போலல்லாமல் லியோவுக்கு அநியாயத்துக்கு விருந்தினர்களை பிடிக்கும். வாசலில் யார் வருவது தெரிந்தாலும் எழுந்து சென்று ‘வாங்க வாங்க’ என்று அடுக்களை வரை சிரித்தபடியே அழைத்து வருவான். ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கவில்லையே தவிர லியோ எங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராகவே இருந்து வந்தான். சில முக்கிய குடும்ப முடிவுகள் எடுக்கப்படும் போது நடக்கும் விவாதங்களில் லியோவும் கலந்து கொள்வான் என்று நான் சொன்னால் நீங்கள் அதை நம்பித்தான் ஆக வேண்டும். நண்பர் ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருக்க அருண்மொழியாச்சிக்கு விருப்பமில்லாத நாட்களில் அவர் ஹீரோவிடம் பேசி தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுவதாக என்னிடம் சொல்லியிருக்கிறார். இந்த கலந்துரையாடல் நித்தமும் நடப்பதாகக் கேள்வி.

லியோ இருக்கும் போதே சென்னையிலிருந்து அப்பாவின் நண்பரொருவர் டாபர்மேன் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆறு மாதம் மட்டுமே உயிருடன் இருந்த அவள் கறுப்பாக இருந்ததால் பிளாக்கி என்று தமிழில் பெயர் வைத்தோம். கேழ்வரகை நன்றாகக் காய்ச்சி தயாராகும் கஞ்சிதான் பிளாக்கியின் உணவு. டக் டக்கென்று குதிரை மாதிரி அவள் நடந்து வரும் அழகே தனி. டிஸ்டம்பர் என்கிற தடுப்பூசியை அதற்குரிய சரியான நேரத்திற்கு போடாததன் விளைவாக ஒரு வைகுண்ட ஏகாதசியன்று பிளாக்கி இறந்து போனாள். ‘எதுக்கு எல்லாரும் அளுதியே. எல்லாருக்கும் கெடைக்குமா. அவளுக்கு வாய்ச்சிருக்கு நல்ல சாவு’ என்றாள் சமையல் பண்ணும் மீனாட்சி அம்மாள்.

எத்தனை நாய்கள் வந்தாலும் எங்களால் மறக்க முடியாதவன் ஜாக் (Jack). பொமரேனியன். சுத்த சல்லிப்பயல். நெல்லையில் ஒரு சொலவடை உண்டு. ‘ஆளப் பாத்தா அளகு போல. வேலையைப் பாத்தா எளவு போல’ என்று. அது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, நாய்களுக்கு பொருந்தும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் பொமரேனியனும், டாஷுண்டும் என்னளவில் ஆபத்தானவை. அழகாக இருக்கிறதே என்று கொஞ்சப் போக இவை இரண்டிடமுமே கடிபட்டிருக்கிறேன். ஜாக் மெல்ல மெல்ல ஜாக்கனானான் (Jackan). அம்மாவின் சொல்லுக்கு மட்டும்தான் கட்டுப்படுவான். மற்ற யாரையுமே வந்து பார் என்பான். தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து போகும் சண்முக அண்ணனைக் கண்டாலே ஜாக்கனுக்கு ஆகாது. அவன் வருவது தெரிந்தாலே ஜாக்கனை கட்டிப் போடுவோம். ஆனாலும் கடும் கோபத்துடன் இவனை குதறியே தீருவது என்று கட்டியிருக்கும் சங்கிலி கழுத்தை அறுக்க, பாய்ந்தப் பாய்ந்து குரைப்பான்.எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் சண்முக அண்ணன் ஒரு நாள் ஜாக்கன் ஒரு நாய் என்பதையும் மறந்து, ‘ஒன் வயசென்ன என் வயசென்னலே’ என்று தன்னிலை மறந்து கோபப்பட்டான்.

அம்மாவின் கடைசி காலங்களில் அவளுடைய அறையிலேயே படுத்திருந்த ஜாக்கன், அவள் மறைந்த பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டு,கண்பார்வையிழந்து பின் அவளிடமே சென்றுவிட்டான். அதற்கு பிறகு எங்கள் வீட்டில் நான்கைந்து நாய்கள் வளர்க்கப்பட்டன. அதில் என் வாத்தியார் பாலுமகேந்திரா அவர்கள் ஆசையாக எனக்கு பரிசளித்த பிஸ்கட் கலர் லாப்ரடாரும் அடக்கம். அவனும் லியோதான். அவனுக்கு பின் ஒரு ராஜா. ஒரு ஷாலு. ஆனாலும் அம்மாவுக்கு பிரியமானவன் என்கிற வகையிலும் அவளின் நினைவாகவே இருந்து அவளிடமே சென்று விட்டவன் என்கிற முறையிலும் எனக்கு முக்கியமானவன் ஜாக்கன்தான். இன்றைக்கும் அம்மாவை நினைக்கும் போதெல்லாம் ஜாக்கனும் என் நினைவில் வந்து வாலாட்டுகிறான். இது பற்றி ஒரு நாள் அம்மையைப் பெற்ற ஆச்சியிடம் கேட்டபோது அவள் கண்கள் கலங்கின.

‘பொறவு? என்ன இருந்தாலும் அவன் ஒங்க அம்மைக்கு தத்து புத்திரன்லா?’ என்றாள்.