புதியதோர் உலகம்

விளையாட்டுப் பாடமும் பயிற்சியும் மட்டும் எடுக்கும் எங்கள் வகுப்பாசிரியர் திரு. ஆமாட் எங்களுக்கு வேறெந்தப் பாடமும் எடுக்கவில்லை என்றறிந்த முதல் நாள் அன்று எனக்குள் இனம் புரியாத ஓர் உற்சாகம். உல்லாசமாகப் பேசிப் பழகும் இயல்புடைய அவர், அன்றிலிருந்தே புது இடத்தில் மாணவர்கள் சிநேகிதர்களாகும் முன்னரே எனக்கு நண்பராகிவிட்டார். உடற்பயிற்சி செய்வது குறித்தும் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது குறித்தும் பேசுவதைத் தவிரவும் அவருக்குப் பிடித்த விளையாட்டுத்துறை குறித்தும் நிறைய அவருடன் பேச என்னால் முடிந்தது. ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் சிங்கப்பூரின் பிரதிநிதியாய்  சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டப்பந்தயத்தில் தான் ஓடியது குறித்து அவர் பேசுந்தோறும் அவர் கண்கள் மின்னும். ஒலிம்பிக்ஸ் மைதானத்தில் ஓடினாரா அல்லது முதல் தேர்வுப் போட்டிகளில் மட்டுமே விளையாடினாரா என்பது போன்ற சில கேள்விகள் என்னுள் எழுந்தாலும் தகுந்த சந்தர்ப்பத்தில் கேட்க நினைத்துப் பேசாமலிருந்தேன். விளையாட்டுத் துறை குறித்து அவரைப் பேச வைத்துக் கேட்ட மற்றவருக்குக் கிடைத்த மகிழ்ச்சியானது அவருக்குத் தன் பேச்சில் கிடைத்த மகிழ்ச்சிக்குக் குறைந்ததாக என்றுமே இருந்ததில்லை. வயது வித்தியாசமில்லாமல் பையன்களுடன் பேசக் கூடிய அவர் மாணவிகளிடம் தனிக்கரிசனம் காட்டுவதையும் நான் கவனித்தேன். ஆசிரியைகளுடன் பேசும் போதும் பளிச்சென்று தெரியக் கூடிய ஒருவித மேட்டிமைத்தனம் அவரிடமிருந்தது. சில நாட்களுக்குப் பிறகு அதைக் குறித்து அவரிடமே கேட்ட போது, “யூ மஸ்ட் ஆல்ஸோ லேர்ன் டு பீ எ ஜெண்டில் மேன் லா”, என்றார் ஒருவித பெருமிதத்துடன்.

பொதுவாக மாணவிகளில் மிகச் சிலரே விளையாட்டில் ஆர்வம் காட்டியதையும் பையன்களில் மிகச் சிலரே ஆர்வமற்றிருந்ததையும் முதலில் காண முடிந்தது. அதைக் குறித்துப் பேசிய போது அது அப்படித்தான் என்றுரைத்தார் திரு.ஆமாட். அன்றைக்கு இடைவேளைக்குப் பிறகு, மதியம் கணிதத் தேர்வு. கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதமானதும் வந்த முதல் தேர்வே அது தான். காலையிலோ விளையாட்டுப் பயிற்சிப் பாடம். ஓரளவுக்குத் தயாராக வந்திருந்த என்னைப் போன்றோருக்கும் தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் வரப் போகிறதோ என்றதொரு லேசான பதட்டம் உள்ளூர இருக்கவே செய்தது. ஸின்யீ திரு.ஆமாட்டிடம் போய் குசுகுசுவென்று ஏதோ சொன்னாள். அவள் சொன்னதைக் காதில் வாங்கியவர்கள் அவளுக்கு மாதாந்திரப் பிரச்சினை என்று பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. அவள் கிடுகிடுவென்று நடந்து ஒதுக்குப்புறமாகப் போய் அங்கே இருந்த தன் பள்ளிப்பையைத் தூக்கி பக்கத்தில் வைத்துக் கொண்டு இருக்கையிலமர்ந்து விடுவிடுவென்று கணக்குப் போட ஆரம்பித்தாள். நாங்களெல்லோரும் திடலுக்குப் போய்விட்டோம்.

***

எனது பழைய பள்ளி பெரியதென்று தான் நினைத்திருந்தேன் இங்கு வரும் வரையில். நூற்றாண்டைத் தொடும் பழமை வாய்ந்த உயர்நிலைப்பள்ளியின் சுவர்கள் பலமுறை கண்டிருந்த சாயங்களின் எண்ணிக்கையை மறைத்து நின்றிருக்க புதுமணத்துடன் பிரம்மாண்டமாக இருந்த கல்லூரியோ கட்டி முடிந்து மூன்று ஆண்டுகள் தான் ஆகியிருந்தன. என்னைச் சுற்றி எப்போதும்கேலியும், கூத்தும், கும்மாளமுமாகப் பையன்களைப் பார்த்துப் பழகியிருந்த எனக்கு இங்கு மாணவர்களில் பெரும்பாலோர் பேசும் போதெல்லாம் பாடத்தைப் பற்றியே பேசியது தான் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதுவும் கல்லூரி ஆண்டு தொடங்கி இரண்டே வாரங்களில். இரண்டாவது வாரத்திலிருந்து இடைவேளைகளில் விளையாடக் கூப்பிட்டால் வரும் சில பையன்களும் படிக்க ஆரம்பித்திருந்தார்கள். விளையாடப் புறப்பட்ட என்னைப் பார்த்த ஒரு சிலர் மட்டும், படிப்பதா விளையாடுவதா என்று யோசித்தது போலப் பட்டது. பள்ளியில் இடைவேளை விடுவதே பந்துதைக்கத் தான் என்று பழகியிருந்த கூட்டத்திலிருந்த வந்திருந்த எனக்கு இதெல்லாம் அதிசயமாக இருந்தது. பழைய பள்ளியில், சாப்பிடுவதையெல்லாம் மறந்துவிட்டு ஒரேயொரு மைலோவை மட்டும் வாங்கி உறிஞ்சிக் கொண்டே ஓடி மைதானத்துக்குள் புகுந்து கொண்ட நாட்கள் தான் அதிகம்.

தொடக்கக் கல்லூரியில் சேர்ந்து சில நாட்களுக்குள் எனக்குள் பெரியதொரு கலாசார அதிர்வே ஏற்பட்டுவிட்டிருந்தது. ஒரே நாட்டுக்குள், அதுவும் ஒரு சிறிய நகர நாட்டுக்குள் இருக்கும் இரு பள்ளிகளுக்குள் இத்தனை கலாசார வேறுபாடுகள் நிலவக் கூடும் என்று முன்பெப்போதுமே நான் கருதியதில்லை. தேசிய சேவை முடித்து பல்கலையில் சேர்ந்திருந்த என் அண்ணன் தீபனுடன் அது குறித்துப் பேசிய போதெல்லாம், “செகண்டரி லைஃபே வேறடா. இப்ப நீ ஜூனியர் காலேஜ்ல இருக்க. மொதல்ல அத மறந்துறாத. உன்னோட பழைய ஸ்கூல் ஒரு இலீட் ஸ்கூல்னு உனக்குத் தெரியுமில்ல…”, என்றோ, “அதுவுமில்லாம அந்தப் பள்ளில பையன்கள் மட்டும் இருப்பானுக. இங்க பொண்ணுங்களும் படிக்கிறது உனக்குப் புதுசா இருக்குதோ என்னவோ”, என்றான்.

எனக்கென்னவோ இந்த வெளிப்படையான வேறுபாடுகளையெல்லாம் தாண்டி மாணவர்களின் போக்குகளே அதிகமும் வித்தியாசமாகப் பட்டது. ஆசிரியரால் திட்டப்பட்டால் உருகிக் கரைந்து காணாமல் போய்விடுவதைப் போல மாணவிகள் மிரள்வதைக் கண்டு எனக்கு மிக வேடிக்கையாக இருந்தது. சில பையன்களும் கூட ஏச்சு கிடைக்குமென்ற பயத்துடனே பரபரவென்று வேலைகளை முடிப்பவர்களாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு அக்கம்பக்கப் பள்ளிகளிலிருந்து வந்து சேர்ந்திருந்ததால் இருக்குமோ என்று பலவாறாக நினைத்துக் கொண்டேன். புதிது புதிதாக வேற்றுமைகள் கண்ணிலும் கருத்திலும் படப்பட எனக்கு நான்காண்டுகள் படித்த பழைய பள்ளியை மறப்பதும் கல்லூரியில் ஒன்றுவதும் சிரமமாகவே இருந்து வந்தது.

***

அதிக எடைகூடிய மாணவர்களை மதிய உணவு வேளைகளில் கண்காணிக்க திரு. ஆமாட் உணவக வளாகத்தில் திரிந்தபடியிருந்தார். பருத்த உடலைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அம்மாணவர்கள் எந்தக் கடைக்குச் சென்று என்ன உணவு வாங்குகிறார்கள் என்பதைக் காண்காணிப்பதைப் பார்க்கும் போது அவர் காவலராக மாறிவிட்டதாகத் தோன்றும். எதை வாங்கப் போனாலும் அதில் எண்ணை இருக்கிறது, இதில் கொழுப்பிருக்கிறது என்று அவர் தடுப்பதைப் பார்க்கும் போது அவர்களையெல்லாம் பட்டினி கிடக்கச் சொல்கிறாரோ என்று தான் தோன்றும். எடை கூடுதலாக இருக்கிறதென்று உடலுக்குத் தெரிந்து வயிறும் பசிக்காதிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிப்பவர்களைப் போல முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருக்கும் அம்மாணவர்களைப் பார்க்க மிகப் பாவமாக இருக்கும்.

சொல்லி வைத்துக் கொண்டது போல மாணவிகள் எல்லோரும் கல்லூரி திறந்த அன்றைக்கே படிப்பதென்றால் கண்டிப்பாகப் பாடங்கள் கற்பிக்கப்படும் முன்னரே படிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம் என்று நான் பலமுறை நினைத்துக் கொண்டேன். அதையெல்லாம் யோசிக்கும் போது எனக்கு லேசான பயமேற்பட்டது.  உணவுக் கூடத்தில் ஒரு கையில் மைலோவுடன் இன்னொரு கையால் எழுதிக் கொண்டோ படித்துக் கொண்டோ இருந்தார்கள். இந்தோனீசியச் சீன மாணவி ஒருத்தி ஒவ்வொரு மதிய இடைவேளையின் போதும் மூலையில் உட்கார்ந்து ஆங்கில அகராதியை மனனம் பண்ணும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள். பலர் உண்பதேயில்லை. பார்க்கப் பார்க்க நான் எப்படி இந்தக் கூட்டத்தில் சேரப் போகிறேன் என்ற பயமும் மதிப்பெண் பெறுவதில் மற்றவருடன் எப்படி போட்டி போடுவது என்றும் எனக்குள் லேசான கவலையே ஏற்பட்டது. கண்டிப்பாக இவர்கள் எல்லோரும் புள்ளிகளை அள்ளத் தான் போகிறார்கள் என்று நினைத்த மாத்திரத்திலேயே எனக்குள் ஒருவித அழுத்தமும் உளைச்சலும் கிளம்புவதை உணர்ந்தேன். ஒரே மாதிரி எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருந்ததைப் பார்த்தால், படிப்பென்று வந்துவிட்டால் பெண்ணினமே அப்படித் தான் இருப்பார்களோ என்று எனக்குள் சிறு சந்தேகம் தட்டியது.

முதல் வாரத்திலேயே ஒருநாள் அம்மாவிடம், “ஏம்மா நீங்களும் ஸ்கூல்ல படிக்கிறப்ப இப்டி தான் எப்பவும் புத்தகமும் கையுமா படிச்சிட்டே இருப்பீங்களா?”, என்று கேட்டேன். அம்மா இல்லையென்று சொன்னதை நம்பாதவனாக, “நிஜமாவா?”, என்றதும், “அடப் போடா, வீட்ல அஞ்சி பிள்ளைங்க. நாந்தான் மூத்தவ. அம்மா வேற எப்பயும் சீக்கு. கேக்கணுமா? அடுப்படியிலையோ இல்ல தம்பிதங்கச்சியப் பார்த்துக்குறதோன்னு,.. எப்பயும் வேலையிருக்கும். அதுக்கிடையில தான் நான் பள்ளிப்பாடத்தை எழுதவும் படிக்கவும் செஞ்சிக்கணும். வேலையெல்லாம் முடிச்சிட்டு அப்பத் தான் எழுத உக்காருவேன், சின்னத்தம்பி அழுவான். அம்மா இருந்த இடத்துலயிருந்து என்பேர் சொல்லிக் கூப்புட்டு தொட்டில ஆட்டச் சொல்லுவாங்க. பள்ளிக் கூடத்த நிறுத்தாம பத்து வரைக்கிம் என்னைய படிக்க வச்சாங்களேன்னு தான் நெனச்சிக்கணும். இதுல,..நீ என்னடான்னா இப்பிடிக் கேக்கற,..”, என்று பழைய நினைவுகளில் ஆழ்ந்தவர் போல லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

***

பெருந்திரைகள் கொண்ட பெரிய அரங்குகளில்தான் பாடங்கள் நடத்தப் பட்டன. ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு புதிர். வேதியல் ஆசிரியர் முதல் நாள் வந்ததும், பேசிய விதமும், கற்பித்த விதமும் மிகவும் மகிழ்ச்சியளித்தது. வெடவெடவென்று உயரமாகவும் மிடுக்காகவும் வந்து நின்ற திரு.வோங்கின் முகத்தில் விரிந்த புன்னகையில் ஒருவித குழந்தைத்தனம் மிளிர்ந்தது. நீண்ட விடுமுறைக்குப் பிறகு வகுப்பிற்குள் நுழைந்திருந்த மாணவர்களுக்கு பத்தாம் வகுப்புப் பாடங்களை மிகச் சாதுர்யமாக நினைவுபடுத்திவிட்டு தனது பாடத்திட்டத்துக்குள் அவர் நுழைந்த போது நாங்கள் எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தோம். நகைச்சுவையாகப் பேசி கேள்விகள் கேட்டு எங்களைப் பாடத்தில் ஒன்ற வைத்தார். ஏற்கனவே புதுப்பாடத்தைத் தானாகப் படித்துக் கொண்டு வந்திருந்த ஒரு மாணவி கேள்வி கேட்டு மடக்கும் நோக்கில் எழுந்து அவரிடம் கேட்ட கேள்விக்கு அவர் விடையளித்ததும் ஒரு மாணவன் கேட்ட மிக எளிய கேள்விக்கு அவர் விடையளித்த விதமும் ஒரே மாதிரியான ஈடுபாட்டுடன் இருந்தது. கேள்விகள் கேட்டால் தனக்குப் பிடிக்கும் என்று சொன்ன அவரை எல்லோருக்குமே மிகவும் பிடித்துவிட்டது.

இரண்டாவது வாரத்தில் திங்கட்கிழமை மதியத்தில் விளையாட்டுப் பாடத்தை முடித்த பிறகு சோர்வுடன் வந்து குளிரூட்டப் பட்ட அரங்கிற்குள் அமர்ந்ததும் தூக்கம் கண்களைச் சொக்கியது. வழக்கத்தை விட அதிக கொட்டாவிகள் ஆங்காங்கே கிளம்பின. அன்றைக்கு தான் நாங்கள் எங்களுடைய இயற்பியல் ஆசிரியரை முதன்முதலாகச் சந்தித்தோம். பாடம் நடத்தியாயிற்று. அந்த கட்டத்தில் வேதியல் ஆசிரியர் கேள்விகள் கேட்டால் பிடிக்கும் என்றாரே, இவருக்கும் பிடிக்கலாம் என்று கருதி பிறர் எழும் முன்னர் நான் எழுந்து ஒரு கேள்வியைக் கேட்டேன். ஆசிரியருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. “கேள்வி கேக்கணும்னா முன்னாடியே என்கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு, குறித்த நேரத்துல ஸ்டாஃப் ரூமுக்கு வந்து கேளு. இப்ப வாய மூடிக்கிட்டு உக்காரு”, என்று கடுமையாகச் சொல்லிவிட்டார். “சிறந்த பள்ளிக் கூடத்துலயிருந்து வந்திருக்கோம்ன்ற அலட்டல் எல்லாம் இங்க வேணாம். புரியுதா?” எல்லோரும் என்னையே பார்த்தார்கள். அன்று முதல் திருமதி.லீக்கு என்னைப் பிடிக்காது போனதென்று நினைக்கிறேன். எனக்கு விருப்பப் பாடமான இயற்பியல் தவிர கணிதத்தையும் அவர் தான் கற்பித்தார். தொண்டையில் கிளம்பிய கேள்விகளை வாய்வழி வெளியேறி விடாமல் விழுங்கிவிட நானும் பழகிக் கொண்டேன்.

நீண்ட சத்தமான கொட்டாவிகள் ராகமாய் இழுக்கப்படும் போதெல்லாம் கொல்லென்ற சிரிப்பலைகள் உறங்குபவர்களை லேசாக உலுக்கிவிடும். சில நொடிகளிலேயே மீண்டும் எல்லோரும் அவரவர் உலகில் அமிழ்ந்துவிடுவர். இதெல்லாம் நான் பார்க்காததா என்பது போன்றதொரு சுவாதீனத்துடன் அத்தனை அமர்க்களங்களுக்கிடையே ஆசிரியரும் தன் போக்கில் தன் கடமையைச் செய்தார். அரங்கில் நிலவிய குளிருக்கு இதமாக முழுக்கை அங்கியைக் கல்லூரிக்குக் கொண்டுவரப் பழகிய போது தூங்கிவிடாமலிருக்க என்னென்ன வழிகள் இருக்கின்றதென்றும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தோம். சிலர் கண்களை விழித்தபடியே சாமர்த்தியமாகத் தூங்கினர். ஓரிருவர் மிகத் தைரியமாக வெளிப்படையாகவே தலைசாய்த்து உறங்கினர். மாணவிகளில் ஒருசிலர் பாடப்புத்தகத்துக்குள் ஃபாஷன் சஞ்சிகையை வைத்துக் கொண்டு படம் பார்த்தனர். பையன்களில் பலர் புத்தகத்துக்குள் ஜப்பானிய சித்திரக் கதைப் புத்தகத்தை வைத்துக் கொண்டு ரசித்துப் படித்தனர். பலர் கைத்தொலைபேசியைக் குடைந்தவாறிருந்தார்கள். ஒழுங்காகப் பாடம் கேட்டு எழுதிக் கொள்ளும் ஒரு சிலரில் ஸின்யீயும் ஒருத்தி.

அபத்தமான கேள்வி என்று சிரிப்பார்களோ என்றெல்லாம் மாணவர்கள் தயங்கிக் கொண்டு கேள்விகள் கேட்காமல் இருந்துவிடப் போகிறார்களே என்ற நல்ல அக்கறையுடன் குறுந்தகவல் வசதி செய்திருந்தார்கள், பாடநேர முடிவில் கேள்விகள் அனுப்ப. முதல் சில நாட்களில், ‘இன்னிக்கு நீங்க சுமாரான அழகோட இருக்கீங்க…’, ‘அவனுக்கு அவளைப் பிடிக்கும்’, ‘அவளுக்கு அவன் மீது ஒரு கண்’, என்பது போன்ற குறும்புச் செய்திகள் தான் அனுப்பப்பட்டிருந்தன. நாளடைவில் உருப்படியான பாடந்தொடர்பான கேள்விகள் வந்தன. அவற்றிற்கு விடையளித்து முடித்ததும் வகுப்பு முடியும்.

***

சேர்ந்த புதிதில் எனக்கிருந்த சின்னது முதல் பெரியது வரையிலான ஆச்சரியங்கள் நாளடைவில் மறையத் துவங்கின. என்னைத் தன்னம்பிக்கையுடையவன் என்று கருதிய சிலர் நான் அங்கு வந்து சேர்ந்திருப்பதும், நன்றாகப் படிப்பதும் கல்லூரிக்குப் பெருமை என்று நினைத்த அதே சமயம் வேறு சிலரோ கர்வம் பிடித்தவன் என்று ஒரு முன்முடிவோடு தான் என்னைப் பார்த்தனர். முதலிலெல்லாம் பிரபல பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்கிறான் என்று அவர்கள் என்னைப் பார்க்கும் பார்வையிலேயே லேசான பொறாமை தெரிந்து வந்தது. சீக்கிரமே அது மறைந்து என்னையும் தம்மில் ஒருவனாக நினைக்க ஆரம்பித்த போது, ஒரு வகுப்பு முடிந்து இன்னொரு வகுப்புக்குப் போகும் போது வழியில் மாணவிகளில் சிலரும் கூட அருகில் வந்து பேச ஆரம்பித்திருந்தனர். அப்போதும் ஸின்யீ மட்டும் தூரத்திலிருந்தே என்னைக் கூர்ந்து கவனிப்பவளாகவே இருந்து வந்தாள். அவளுடைய வெறித்த பார்வைகளுக்கு என்னால் பொருள் கொள்ள முடியாமலே இருந்து வந்தது.

நுருல் என்ற மாணவியும் எப்போதுமே அவளுடன் திரிந்த வேறு மூன்று மாணவிகளும் சகஜமாகப் பேசினார்கள். “தள்ளி நட லா. நான் குள்ளமாத் தெரியிறேன்ல? ஆமா, நீ எப்டி இவ்ளோ உயரமா இருக்க? உங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப உயரமா?”, என்றெல்லாம் கேட்டனர். “இல்ல. ரெண்டு பேருமே சராசரி உயரம் தான்”, என்றால் நான் ஏதோ புளுகுகிறேன் என்று கருதினர். ஓரிரு மாணவிகள் மட்டும் தான் எதைக் குறித்தும் கவலைப் படாமல் சாப்பிட்டனர். என்னைப் பார்த்து, “நெறைய சாப்டற, ஆனாலும் எப்டி லா நீ இவ்ளோ ஒல்லியா இருக்க?”, என்று கேட்ட அவர்கள் எல்லோரும் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் அதையும் யோசித்து யோசித்து ஒரு வித குற்றவுணர்வோடு சாப்பிடுவார்களாம்.

“நா எல்லாமே சாப்டுவேன். சீஸ் ரோல், பிட்ஸா, சாக்லேட், ஐஸ்கிரீம்னு எல்லாமே. எனக்கு வெயிட்டே போடாது”, என்று சொன்ன என்னை ஒருவித பொறாமையுடன் பார்த்தார்கள். உயரம் குறைவாக இருந்ததே அவர்களைப் பருமனாகக் காட்டியதோ என்னவோ. “ஆனா,.. ..அப்டி கவனமாச் சாப்பிடற மாதிரி தெரியல்லையே உங்களையெல்லாம் பார்த்தா”, என்றதும் அடிக்கவென்று என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். “சாப்பிடாம இருந்தா அந்த நேரத்துலையும் படிக்கலாம்னு தானே பட்டினி கெடக்கறீங்க? “, என்று கேலி செய்தால், “எப்பவுமே நாங்க படிக்கிறதா நீ தான் நெனச்சிகிட்டிருக்க,.. எங்களுக்கும் விளையாடப் பிடிக்கும்”, என்று சொன்னார்கள். அதை நிரூபிக்கும் வகையிலோ என்னவோ நுருல் ஒருநாள், “இன்னிக்கி ரீஸெஸ்ல நீ ஃபுட் பால் விளையாடறப்ப எங்களையும் சேர்த்துக்குவியா?”, என்று என்னிடம் கேட்டாள். “உங்களுக்கேத்த மாதிரி விளையாட என்னால முடியாதே,..”, என்று நான் சொன்னதற்கு, “ரொம்பத் தான் அல்ட்றான் லா இவன்”, என்று அவள் மற்றவர்களிடம் சொன்னது என் காதில் விழுந்தது. “அடிபட்ரும் லா. அதான்”, என்று சொல்ல நினைத்து ஒன்றுமே சொல்லாமல் நகர்ந்து சென்றுவிட்டேன்.

***

கணிதத் தேர்வு முடிவுகள் வெளிவந்த அன்று வகுப்பில் நான் இரண்டாவது மதிப்பெண் பெற்றிருந்ததாக அறிவிக்கப்பட்ட போது என் காதுகளை என்னால் நம்பத் தான் முடியாமலிருந்தது சட்டென்று, எதேச்சையாக பக்கவாட்டில் திரும்பிப் பார்த்த போது ஸின்யீ என்னையே பார்ப்பது தெரிந்தது. இரண்டு இருக்கைகள் முன்னால் அரங்கின் மறுபறம் உட்கார்ந்திருந்த அவளது பார்வையே ‘என்னவிட ஒரு மார்க் கூட வாங்கிட்டானே பாவி’ என்ற சொற்களை உக்கிரமாக வீசியது போலிருந்தது. மறுமுறை நான் கவனித்துவிடுவேன்று சமயோசிதமாகச் சட்டென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டாள்.

அடுத்த நாள், விளையாட்டுப் பயிற்சியின் போது நெடுந்தூரம் ஓடிக் களைத்து எல்லோரும் வியர்வையில் தொப்பலாய் நனைந்திருந்தோம். மயக்கம் வருவதைப் போலிருந்ததாகச் சொல்லிக் கொண்டு ஓடுதளத்தை விட்டு வந்த ஸின்யீயின் காற்சட்டை நனைந்து மஞ்சள் தொடையில் வழிந்த உதிரத்தை அவள் தோழிகள் பார்த்து அவளிடம் சொல்லு முன்னர் நானும் சில பையன்களும் பார்த்து விட்டோம். மாணவிகள் எல்லோருமாக அவளை விலக்கிக் கூட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்ததும் மாணவர்கள் சிலர் அவர்களுக்குள் ரகசியமாகப் பேசிக் கொண்டனர். ஒரே நிமிடத்தில், திரு.ஆமாட் எல்லோரையும் கூப்பிட்டு அடுத்த பயிற்சிக்கான விவரங்களைச் சொல்லத் தொடங்கி விட்டார்.

மாலையில் வீடு திரும்பும் முன்னர், “போன வாரம் ஒரே கால் வலி, காய்ச்சல்னு நான் போய் நின்னேன். என்னைய நம்பவேயில்ல மிஸ்டர்.ஆமாட். ஆனா, இப்ப ஸின்யீ,…”, என்ற என் முகத்தைப் பார்த்த நுருல் ஒரு நொடி நின்றாள். வீடு திரும்ப அவளுக்கிருந்த அவசரம் தெளிவாகத் தெரிந்தது. லேசான சலிப்புடன் ஒன்றுமே சொல்லாமல் என்னைப் பார்த்தாள்.

“மாசத்துக்கு ஒரு தடவ தானே வரும்? அவளுக்கு மட்டும் ஒரே வாரத்துல மறுபடியுமா? தேர்வுக்குப் படிக்கறதுக்காகவே பொய் சொல்லியிருக்கா லா. மிஸ்டர்.ஆமாட்டுக்கு இதுகூட தெர்ல”, என்று புலம்பிய என்னைப் பார்த்து “என்ன நீ, அதையெல்லாம் அவரு ஞாபகம் வச்சிருக்க முடியுமா? இப்ப என்ன? படிக்கணும்னு தானே பொய் சொன்னா. விடேன் லா”, என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து மறைந்தாள். அவள் அப்படிச் சொல்வாள் என்று நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை.

________________________________________________________________________________

கதாசிரியர் பற்றி:

கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிவரும் படைப்பாளியான ஜெயந்தி சங்கரின் மொழி எளிமையானது; நடை எதார்த்தமானது. மதுரையில் பிறந்து, புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் இருபதாண்டுகளாக வசிக்கும் இவர் பிற கலாசாரங்களின் மீது, குறிப்பாக சீனக்கலாசாரத்தில் ஈடுபாடு கொண்டவர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், 1 குறுநாவல் தொகுப்பு உள்ளிட்ட சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட புனைவுகளுக்குப் பரவலாக அறியப் பெறுகிறார். இலக்கியச் சிந்தனை, அரிமா சக்தி விருது 2007, திசையெட்டும் மொழியாக்க இலக்கிய விருது 2009 உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவரது ‘பின் சீட்’ சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கிய விருது 2008க்குத் தேர்வானது.