விழப் போகிறது!

பவர் கட் இரவுகளில் பிரகாசமாக வந்து விழும் எரி நட்சத்திரங்கள் என்று சொல்லப்படும் எரி கற்களைப் பார்த்திருக்கலாம். பைபிள் முதல் பாம்பு பஞ்சாங்கம் வரை பல இடங்களில் இவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. 450 கோடி வருஷம் முன்னால் சூரிய மண்டலமே ஒரு குப்பைச் சுழலாக இருந்த போது பிறந்தவை எரி கற்கள். அடர்த்தியான சரக்குகள் பூமி, செவ்வாய் போன்ற உள் கிரகங்களாகத் திரள, வியாழன், சனி போன்ற வாயுத் தொல்லைக்காரர்கள் வெளி வட்டத்தில் சுழல, நடுவில் சில உதிரிப் பாறைகள் தப்பிப் பிழைத்து அஸ்ட்ராய்டு வளையம் என்று தனியே மூன்றாவது அணி ஆரம்பித்தன. இவற்றில் பல அவ்வப்போது பூமியால் கவரப்பட்டு நம் தலையை நோக்கி வந்தாலும், நல்ல வேளையாகக் காற்று மண்டலத்தில் நுழையும்போது உராய்வினால் பெரும்பாலானவை எரிந்து போகின்றன.

ஆனால் பெரிய பாறையாக இருந்தால் முழுவதும் எரியாது. கி.பி. 536-ல் ஆஸ்திரேலியாவின் வடக்கே கார்பென்டேரியா வளைகுடாவில் புட்பால் மைதானம் அளவுக்கு ஒரு விண் கல் வந்து விழுந்தது. 50,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து மோதிய மோதலில் தூசிப் படலம் கிளம்பி சூரியனை மறைத்தது. அந்த அதிர்ச்சி அலைகளும் வெப்பமும் சேர்ந்து நைட்ரஸ், நைட்ரிக் மேகங்கள் உருவாகியிருக்கும். கார் பாட்டரியைக் கவிழ்த்தது போல் அமில மழை பெய்யும். 536-37 வருடங்களில் கோடைக் காலம் சிலு சிலு என்று இருந்ததையும் பயிர்கள் பொய்த்ததையும் பற்றிய சரித்திரச் சான்றுகள் உள்ளன. சீனாவில் நல்ல சம்மரில் பனி கொட்டியது.

கி.மு 2800-ல் மடகாஸ்கரில் விழுந்த சைதாப்பேட்டை சைஸ் கல்லுடன் ஒப்பிட்டால் இதெல்லாம் கூழாங்கல். அந்தக் கல் விழுந்த அதிர்ச்சியில் இந்தியப் பெருங்கடலில் 600 அடி உயரத்துக்கு ஆழிப் பேரலை (சுனாமி) எழுந்தது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். எல்லா மதங்களின் புராதனக் கதைகளுமே பிரளயம், அழிவு, வானத்திலிருந்து நெருப்பு மழை என்று குறிப்பிடுவதற்குப் பின்னணியில் ஆதிகால மனிதனின் ஏதோ ஒரு பயங்கர அனுபவம் இருக்க வேண்டும்.

விண் கல் ஆபத்தெல்லாம் திரேதா யுகத்துடன் முடிந்து போய்விட்டது என்றுதான் விஞ்ஞானிகள் நினைத்திருந்தார்கள். சமீபத்திய சான்றுகள், கடல் அடியில் கண்டுபிடிக்கப்பட்ட பள்ளங்கள், பூமிக்கு அருகிலுள்ள கற்களிலிருந்து கிடைத்த நேரடித் தகவல்கள் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் இரண்டு விஷயம் புரிகிறது : (1) எரி கற்கள் நாம் நினைத்ததை விட மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன, விழுகின்றன. (2) அவற்றின் சுற்றுப் பாதைகள் அவ்வளவு ஸ்டெடியாக இல்லை !

2004-ல் 2004FH என்ற பெயருள்ள 100 அடி அகலப் பாறை பூமியை மயிரிழையில் தப்பிச் சென்றது. 1992-ல் கைப்பர் வளையம் என்று புளூட்டோ வீட்டுக்கு அருகே மாபெரும் கற்களின் மாநாடு ஒன்று நடப்பதைக் கண்டுபிடித்தார்கள். இவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்டவை, இங்கிருந்தே பார்க்கக்கூடிய அளவுக்குப் பெரியவை. இவற்றில் எது ஒன்று வந்து விழுந்தாலும் பூமிக்கு அத்துடன் ஜன கண மனதான்.

Comet Mc Naught Over Santiagoகைப்பர் வளையத்துக்கு அப்பால் ஓர்ட் மேகம் என்று கோடிக் கணக்கான வால் நட்சத்திரங்கள் வசிப்பதாகவும் ஒரு விஞ்ஞான வதந்தி நிலவுகிறது. சூரிய மண்டலம் முழுவதுமே வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. பெரிய நட்சத்திரங்கள் அருகே வரும்போது அவற்றின் சிக்கலான ஈர்ப்பு விசைப் பின்னல்களால் வால் நட்சத்திரத்தின் பாதை சற்றே விலகினாலும் போதும்; நேராக நம்மை முட்ட வந்துவிடும். பூமியுடன் மோதும் சாத்தியம் உள்ளவை என்று நாசா கணித்திருக்கும் கற்கள் மட்டுமே இது வரை 186 இருக்கின்றன. 2036-ல் அஃபோஃபிஸ் என்ற 300 மீட்டர் கல் ஒன்று நம்மைத் தாக்குவதற்கு சாத்தியம் இருக்கிறது. தாக்கினால் ஹிரோஷிமா குண்டைப் போல் 60,000 மடங்கு சக்தி வெளிப்படும். பூமியில் தென்னிந்தியா சைஸ் ஏரியா அழிந்துவிடும் ! (2036-ல் லீவு போட்டுவிட்டு ஊருக்குப் போய்விடப் போகிறேன்).

சரி. இதற்கு நாம் என்ன செய்ய முடியும் ? ஒன்று, பழனிக்குப் பால் காவடி எடுப்பதாக வேண்டிக் கொள்ளலாம். அல்லது B612 முயற்சிக்கு உதவி செய்யலாம். B612 என்ற நிறுவனம் முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவரால் நடத்தப்படுவது. அவர்களுடைய லட்சியமே எரி கல்லை சமாளிக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க நாசாவை வலியுறுத்துவதுதான். LSST என்று தென் அமெரிக்காவில் ஒரு பெரிய டெலஸ்கோப்பை நிறுவி அதன் தகவல்களை இண்டர்நெட்டில் பரப்ப ஒரு ஐடியா இருக்கிறது. பில் கேட்ஸ் போன்றவர்கள் இதற்கு உதவி செய்கிறார்கள். நீங்களும் நானும் கூட இந்த டெலஸ்கோப் தரும் டெரா பைட்களில் தேடி விண் கற்களைக் கண்டுபிடித்துத் தொடரலாம்.

சந்தேகமாக நடமாடும் கற்களை ராக்கெட்டில் அணுகி அதன் மீது ஒரு பீக்கன் கருவியைப் பொருத்திவிடலாம். கல்லின் பாதையையும் சலனங்களையும் துல்லியமாகக் கண்காணிக்க இது உதவும். ஒரு கல் நம் மீது மோதப் போகிறது என்பது தெரிந்துவிட்டால் அடுத்து என்ன செய்ய முடியும் ? ஒரு அணுகுண்டை அதன் தலை மேல் போட்டு வெடிப்பது ஒரு வழி. ஆனால் உலக சமாதானத்துக்கு இந்த ஸ்டார் வார்ஸ் ஐடியாவெல்லாம் அவ்வளவு சிலாக்கியமானது அல்ல; தேவையும் இல்லை.

உண்மையில் கல்லை சமயம் பார்த்து மிக லேசாகத் தள்ளிவிட்டாலே போதும் ! ஒரு கல் பூமியை நோக்கி வரும்போது, விண்வெளியில் சாவித் துவாரம் key hole என்று ஒரு மிகச் சிறிய இடம் இருக்கிறது. இந்தப் புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும் கல்லின் நிறை வேகமும் ஒரே நேர்கோட்டில் இணைகின்றன. அதனால்தான் கல் பூமியை நோக்கி விழ ஆரம்பிக்கிறது.

சில பெரிய கற்களுக்கு சாவித் துவாரம் எங்கே என்று கணக்கிட்டிருக்கிறார்கள்; அகண்ட விண்வெளியில் சில நூறு மீட்டர்களே அகலமுள்ள சிறிய இடம்தான் ஒவ்வொன்றும். இந்த அளவுக்குக் கல்லைத் திசை திருப்புவதற்கு அதிகம் வன்முறை தேவையில்லை. புவியீர்ப்பு டிராக்டர் என்று பெரிய சைஸ் ராக்கெட் செய்து, அதைக் கல்லுக்குப் பக்கத்தில் சரியான சுற்றுப் பாதையில் நிறுத்திவிட்டால் போதும். ராக்கெட்டின் நிறையால் கல் மெல்ல ஈர்க்கப்பட்டு மிக மிக மெலிதாக அதன் ரூட் மாறும். சாவித் துவாரத்தின் வழியே கல் விழுந்துவிடாமல் காப்பாற்ற அது போதும் !

மற்றொரு ஐடியா, கல்லில் ஒரு புறத்தில் ராக்கெட் மோட்டார் ஒன்றைப் பொருத்தி அதன் சீற்றத்தில் கல்லைத் திசை மாற்றுவது. வால் நட்சத்திரமாக இருந்தால் லேசர் பீரங்கியால் அதன் ஒரு பக்கத்தைக் காய்ச்சி, அதிலிருந்து பீறிக் கிளம்பும் வாயுக்களை ஜெட் இஞ்சின் மாதிரி உபயோகித்து எதிர்த் திசையில் லேசாகத் தள்ளலாம்…

எப்படியும் நம் குழந்தைகள் நாளைக்கு இவற்றைவிட புத்திசாலித்தனமான ஐடியாக்களை யோசிக்கத்தான் போகிறார்கள். ஆனால் நம் பிரச்னை வேறொன்று !

asteroid-cartoonசயன்ஸ் ஃபிக்ஷன் படங்களில் ‘எரி கல் வருகிறது’ என்று ஒரு ஸ்பீக்கர் அலறும்; மழுங்கச் சிரைத்த ஆண்களும் ஒரு பொன் கூந்தல் பெண்ணும் ஹெல்மெட்டைத் தூக்கிக்கொண்டு ராக்கெட்டை நோக்கி ஓடுவார்கள். க்ளைமாக்ஸில் கல்லைச் சுக்கு நூறாக நொறுக்கிவிட்டு முத்தமிட்டுக் கொள்வார்கள்; டைட்டில் எழுத்துக்கள் உருள ஆரம்பிக்கும்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு பாறாங்கல்லைச் சமாளிப்பதற்கு வருடக் கணக்கில் திட்டமிட்டுத் தயாரிப்புகளில் ஈடுபட வேண்டும். முதல் பிரச்னை, நிதி ஒதுக்கீடு. நாசா சந்திரனில் ஒரு நிரந்தரக் கூடாரம் அமைப்பதற்குத்தான் பில்லியன்களைச் செலவழித்துக் கொண்டிருக்கிறதே தவிர, எரி கல் பிரச்னைக்கு அதன் நிதியில் புள்ளி ஒரு சதவீதம்தான் கிள்ளித் தந்திருக்கிறது. எல்லாம் அரசியல் !

அதற்குள் அமெரிக்க விமானப்படை முன் வந்து, “எங்களுக்கு அனுமதி கொடுங்கள்; எந்தக் கல்லாக இருந்தாலும் போட்டுத் தள்ளிவிடுகிறோம்” என்கிறார்கள். நாசாவுக்கு அடுத்தபடி விண்வெளி டெக்னாலஜிக்குச் செலவழிப்பது அவர்கள்தான். ஆனால் விமானப் படையினரிடம் ஸ்டார் வார்ஸ் ப்ராஜெக்டைக் கொடுத்தால் உலகமே “ஃபவுல்” என்று கதறும். செனட்டர்கள் விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள்; காலம் கடந்துகொண்டே இருக்கிறது.

எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளுக்குமே, மனிதனை நிலவுக்கு அனுப்பி பொன்றாப் புகழ் படைத்த கென்னடி மாதிரி பெயர் வாங்க ஆசை. ஜார்ஜ் புஷ் இருந்த வரையில் ‘மனிதனை செவ்வாய்க் கிரகத்தில் கொண்டு இறக்கிவிட்டுத்தான் மறு வேலை’ என்றார். பிறகு அதற்கு ஆகும் செலவில் நாலு ஆப்கானிஸ்தான், எட்டு இராக்கை அழித்துவிடலாம் என்பது தெரிந்தவுடன், ‘நிலவில் ஒரு நிரந்தரமான தளம் அமைப்போம்’ என்று ஆரம்பித்துவிட்டார். இல்லாவிட்டால் சீனா முந்திக்கொண்டு எல்லாவற்றையும் ப்ளாட் போட்டு விற்றுவிடும் என்பது கவலை. இதனால்தான் நாசா ஒரே முனைப்பாக சந்திரனில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

அற்பப் புகழ் ஆசைதான் எப்போதுமே அரசியல்வாதிகளின் கண்ணை மறைக்கிறது. எரி கல் விழுந்து சில லட்சம் பேராவது செத்த பிறகுதான் விழித்துக்கொண்டு நல்ல காரியத்துக்கு நிதி ஒதுக்க ஆரம்பிப்பார்களோ ?