
சென்ற இதழில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் தகவல் நிரம்பியும், வாசிக்க சிறப்பாகவும் இருந்தன. நோபல் பரிசு வழங்கப்பட்ட காரணம் குறித்த கட்டுரை மிக எளிமையாகவும், ஆழமானதாகவும் இருந்தது. நமது நாட்டிலும் அறிவியல் ஆராய்ச்சிக்கான கட்டுமானங்கள் சிறப்பாக இயங்கும்பட்சத்தில் நம்மால் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளையும், அங்கீகாரங்களையும் வெல்ல முடியும் என்று தோன்றுகிறது.
ருவாண்டா குறித்த கட்டுரை நிதர்சனத்தை உணர்த்தியது. ஒரு நாடு தன்னுடைய ஆன்மாவை இழந்து வெறும் சதைப் பிண்டமாக உயிர்வாழும் ஒரு நிலத்தை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறது. எளிதாக தமிழ் ஊடகங்களில் காணக்கிடைக்காத கட்டுரைகள் இவை. சொல்வனம் தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை வெளியிட வேண்டும்.
அன்புடன்
கருப்பன்


கடந்த சில மாதங்களாக சொல்வனம் இதழை கவனித்து வருகிறேன். மூச்சு முட்ட வைக்கும் தமிழ் சிற்றிதழ் சூழலில் சொல்வனம் மெல்ல மெல்ல ஆரோக்கியமான ஒரு வெளியை ஏற்படுத்தி வருகிறது. சென்ற இதழில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் சிறப்பானவை.
குறிப்பாக பாகிஸ்தானிய இசை குறித்த கட்டுரையும், ரே பிராட்பரியின் கதையும் சென்ற இதழின் வைரங்கள். பல்வேறு சிற்றிதழ்களில் சேதுபதியின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். சொல்வனத்தில் அவர் எழுதிவரும் புகழ்பெற்ற புகைப்படங்களைக் குறித்தான கட்டுரைத் தொடரை மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். புகைப்பட தொழில்நுட்பங்களை குறித்து விவரித்தவாறே, அப்புகைப்படங்கள் எடுக்கப்பட்ட சூழலையும் நம்முன் கொண்டுவந்து விடுகிறார்.
தமிழ்ச் சிற்றிதழ் என்றாலே, புரியாத கவிதைகளையும், நாக்கை சுழற்றியடிக்கும் லத்தீன்/ஐரோப்பியப் பெயர்களையும் சுமந்து வரும் சூழலில், தங்களுடைய இதழ் தமிழ் சூழலுக்கு மிகவும் தேவையான ஒரு மாற்றம். தொடருங்கள்.
வாழ்த்துக்கள்
லாரன்ஸ்

சென்ற இதழில் வெளியான தேசிகனின் கட்டுரை சிறப்பாகவும், உருக்கமானதாகவும் இருந்தது. ஒரு சிறிய திருத்தம் : கட்டுரையில் “பிரபந்த காயத்திரி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ”பிரபன்ன காயத்ரி” என்பதே சரி.
நன்றி
பார்த்தசாரதி
ஆசிரியர் : சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. உங்கள் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.