மகரந்தம்

[குறிப்பு: ஒவ்வொரு பத்தியிலும் நீல நிறச் சொற்கள், அடிக்குறியிட்டவற்றில், சம்பந்தப்பட்ட மூலத் தகவல்- விடியோவோ, ஒளிப்படமோ, கட்டுரையோ –  ஒரு தொடர் மூலம் கொடுக்கப் பட்டுள்ளது.  அந்தச் சொல்லில் உங்கள் கர்ஸரை வைத்துச் சொடுக்கினால் மூலத் தளத்துக்குச் செல்லலாம்.]

நம்பிக்கையின் பூசல்கள்

hitchensநம்பிக்கைகளின் அடிப்படைகளிடையே ஒவ்வாமை நிறைய உள்ளதை  நிர்வகிக்க வழி தெரியாததால் மனிதகுலம் தன் பல சமூகங்களிடையே பெரும் பிளவுகளை அடிக்கடி சந்திக்கிறது. இந்தப் பிளவுகளின் இடைவெளியில் புதைக்கப்பட்ட பிணங்கள் கணக்கிலடங்காதவை. மதம் சார்ந்த நம்பிக்கையாளர்களிடையே எழும் பூசல்கள் ஒரு பக்கம்.  மற்றுமொரு பக்கம், கடவுள் மறுப்பாளர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையே நடைபெறும் பூசல்கள். வரலாற்றில், பல்வேறு தருணங்களில் ஒருவர் இன்னொருவரை மிகக் கொடூரமாக நசுக்க முயன்றிருக்கிறார். பல தருணங்களில், அறிவியல் மிக நுண்ணிய தளத்தில் இயங்கி, இறை நம்பிக்கையிலும் உள்ள சில துவாரங்களின் வழி பயணித்து மறுபக்கத்தை அடைந்து விட்டிருக்கிறது. அறிவியல் இன்னும்  துளைத்துப் போகாத துவாரங்கள் நிறைய உண்டு தான். எந்த அளவிற்கு நம்பிக்கைகளின் அடிப்படைகள் வெளிப்படுத்தப்படுகின்றனவோ, அதே அளவிற்கு நம்பிக்கைகள் மீண்டும் தோன்றியபடியே இருக்கும். அது மனித இயல்பு.  அதுவே பிரச்சினையில்லை. ஆனால், பாலைவனத்தை ஒத்த வறட்டு நம்பிக்கைகளால் மனித குலத்திற்கு மாபெரும் தீங்கு நேராமல் இருக்கும் வரை பொறுமை காப்பதைத் தவிர நமக்கு வழியில்லை. இங்கு பிரபல கடவுள் மறுப்பாளர் கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ், இறை நம்பிக்கையாளர்களுடனான விவாதங்களில் தான் கற்றறிந்தவை குறித்துப்  பேசுகிறார்.


Paranormal Activity – திரைப்பட விமர்சனம்

paranormal_activityஹாலிவுட் என்றாலே நம் நினைவிற்கு வரும் பிரம்மாண்டச் செலவும், அதிரடி சாகசங்களும், மயக்கும் தொழில்நுட்பமும். சமீபத்தில் உலகத்தரம் என்ற பெயரில் ஹாலிவுட் பாரம்பரியத்தைப் பின்பற்றி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மண்ணைக் கவ்வின. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களும் பார்ப்போர் இல்லாமல் தோல்வியை தழுவியிருக்கும் நிலையில், இந்த வரிசையில் சேராமல், வெறும் 11 ஆயிரம் டாலர்களில், இரண்டே வாரத்தில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் வசூலில் பெறும் சாதனை படைத்து வருகிறது.   இப்படம், ’பாராநார்மல் ஆக்டிவிடி’ (Paranormal Activity).

ஹாலிவுட் தயாரிப்பாளர்களிடையே இப்படம் மனமாறுதலை ஏற்படுத்துமா, யூரோப்பிய சினிமாவின் வழக்கமான சிறு பட்ஜெட்,  அந்தரங்க சினிமா ஆகியன ஹாலிவுடிலும் முன்னிலை பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இத்திரைப்படம் குறித்த ஒரு விமர்சனம் இங்கே


சஹாராவில் மின் சக்தி

sahara_sunஉலகில் பல நாடுகளிலும் அரசாங்கங்கள் தம் சமூகத்தின் எரிபொருள் தேவையைச் சமாளிக்கப் பலவகை முயற்சிகளை எடுத்துவருகின்றன. சீனா போன்ற நாடுகள் பிற நாடுகள் மேல் படை எடுக்கவும் தயங்குவதில்லை. காலனியத்தின் முன்னோடியான ஐரோப்பா மட்டும் சளைத்ததா என்ன? இந்த முறை வேறு விதமான படையெடுப்பு.  இரண்டு வாரத்தில் சூரியன் உமிழும் சக்தி, உலகம் முழுதும் ஒரு வருடத்துக்கு தேவைப்படும் சக்தியை விட அதிகம். இந்த சக்தியைத் தற்போதைய தொழில்நுட்பங்களையே கொண்டு, தமக்குத் தேவையான மின்சார சக்தியைப் பெற ஐரோப்பிய நிறுவனங்கள் முனைந்துள்ளன. ஐரோப்பிய நிறுவனங்கள் இம்முறை குறிவைத்துள்ள இடம், சஹாரா பாலைவனம். பல நிறுவனங்கள் ஒன்றிணைந்து, இந்த பணியில் ஈடு்படபோகின்றன. இது பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.


பொருளாதார வீழ்ச்சியும், கலையின் எழுச்சியும்

eric-waugh-jazz-it-up-i

பொருளாதாரமும் கலையும் தங்கள் இயங்கு சக்தியை சமூகத்திடமிருந்தே பெறுகின்றன. இவை இரண்டுமே, சமூகத்தின் நிலையை பெருமளவு பிரதிபலிக்கின்றன. 1930-களில் ஏற்பட்ட பொருளாதார ”பெரும் வீழ்ச்சி”-யையும், அதைத் தொடர்ந்த சமூக நிலையையும், அக்கால கலையை முன்வைத்த அறிய முடியும் என்கிறது இந்தக் கட்டுரை. இதன் ஆசிரியர் 1930-களின் திரைப்படம்/இசை/இலக்கியங்களை முன்வைத்து, மக்களின் வாழ்க்கை முறை மற்றும், மனோநிலை குறித்த தன்னுடைய பார்வையை அளிக்கிறார். தற்போது நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக சமூகத்திற்கேற்பட்ட பெரும் அதிர்ச்சியையும், அதன் விளைவாக ஆழ்ந்த கவலைகளால் மாறிவரும் வாழ்க்கைப் பாணிகளையும், எந்த அளவிற்கு கலை உள்வாங்கியிருக்கிறது என்பது குறித்தும் பேசுகிறார்.

புளூடூத் யுகம் முடிவை நெருங்குகிறதா?

bluetooth-wifi-directபுளூடூத்தின் வருகை மிகுந்த ஆவலுடன், வரவேற்கப்பட்டு இருந்தது. தற்போதும், மக்களால் பெருமளவில் உபயோகப்படுத்தப்படும் போதும், சில மீட்டர்களுக்குள் மட்டுமே இயங்கக்கூடிய தன்மையாலும், மிக மெதுவான தகவல் பரிமாற்றத்தாலும், மக்களின் எதிர்பார்ப்பை ஓரளவு மட்டுமே நிறைவேற்றியது. எந்த வித இணைப்புக் கம்பியும் தேவையில்லாத, அதேசமயம், மிக வேகமாகவும், அதிகளவு தூரத்தையும் அடையக்கூடிய ஒரு தொழில்நுட்பம் ஒன்று புதிதாக அறிமுகமாகியுள்ளது. எல்லோராலும் நன்கறியப்பட்ட Wi-Fi தொழில்நுட்பத்தின் புது அவதாரம் இது. இனி வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பம் புளூடூத்தின் இடத்தைப் பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேல் விவரம் அறிய இங்கே