நடுக்கடலுக்குப் போனாலும்…

வேணுவுக்கு வர்ற ஏப்ரல் வந்தால் வயது இருபத்திரண்டு. கடந்த இருபத்திரண்டு வருடத்திலே வரவிருக்கிற ஞாயிற்றுக் கிழமை போல ஒரு நாள் அமைந்ததில்லை. நினக்கிறபோதெல்லாம் உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை மகிழ்ச்சி புரளுது, சுலபத்தில் இறக்கை கட்டி பறந்திடறான், கீழிறங்க மனசு வரமாட்டேங்குது. ஆனாலும் சந்தோஷத்தை முழுசா அனுபவிக்க முடியலை, மணலில் பரவிய நீரைப்போல, கணத்தில் அடையாளமற்றுப் போகுது. அவனது கிராமத்திலிருந்து ஆறு கல் தள்ளியுள்ள டவுனிற்கு வெள்ளித்திரை கனவு நாயகனும், தமிழ் நாட்டில் கடந்த மாதத்தில் துவக்கப்பட்ட மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவருமான சீத்தாபதி வருகிறார். போன வியாழக்கிழமை பஞ்சாயத்து யூனியன்வரை போக வேண்டியிருந்தது, அங்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் கோட்டைமேடு நாராயணனைச் சந்தித்தான். அவர்தான் தலைவர் வருகிறாரென்றச் செய்தியை அவனுக்கு உறுதி படுத்தினார். தலைவருக்குக் கொடுக்கப்படும் வரவேற்பினைக் கண்டு மற்ற கட்சிக்காரர்கள் அசந்துபோகவேண்டுமென்றார். ஒவ்வொரு கிளைக்கழகமும் ஒன்றியத்தின் சார்பில் வைக்க இருக்கிற டிஜிட்டல் பேனருக்கும் கட்டவுட்டுக்குமாகச் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கவேண்டியிருக்குமென்றார். இது தவிர கூட்டத்திற்கு ஆள்பிடிக்க, அவர்களுக்குச் சாப்பாடு பொட்டலம், கிளைக்கழக உறுப்பினர்களுக்கான கட்டிங் செலவுகளென்று இருக்கின்றன. வரவேற்பு பேனரில் இவன் போட்டோவை போடவேண்டியிருக்குமென்றும், அதற்கு மறக்காமல் நல்லதாய் ஒரு போட்டோவைக் கொண்டுவரவேண்டுமென்றும் சொன்னபோது, “அண்ணே நாளைக்கே கொண்டுவந்துடறேண்ணே, தலைவர் வரவேற்பை தூள்கிளப்பிடலாம்ண்ணே”, என்றான். ஆனால் அதை நிறைவேற்றுவது அவ்வளவு சுலபமல்ல என்பதை யோசித்ததில் புரிந்து கொண்டான். கனவு நாயகனைக் கிட்டத்தில் பார்க்க இருப்பதும், டிஜிட்டல் பேனரில் தலைவர் படத்தின் கீழ் வரிசையாய் சிரிக்க இருக்கிற முகங்களில் அவனுடையதும் ஒன்று என்ற எண்ணமும் ஒருவித கிளர்ச்சியை உண்டாக்கியிருந்தபோதிலும், ஒருவாரத்தில் முதல் கட்டமாக ஐந்தாயிரம் ரூபாயைப் புரட்டவேண்டுமென்று நினைக்கிறபோது தீ மிதிப்பதுபோல இருக்கிறது.

ஐந்தாயிரத்தை நினைத்துக்கொண்டு சைக்கிளை வேகமாக உருட்டி இடது காலை பெடலில் வைத்து வலது காலைத் தூக்கிபோட்டு சீட்டில் உட்காரபோனபோது தடுமாறி விழுந்தான், இதற்கு முன் அப்படி நேர்ந்ததில்லை. நடந்துபோன இவன் வயது இளைஞனொருவன் சைக்கிளையும் இவனையும் சேர்த்து தூக்கினான். இரண்டாவது முறை, கவனமாக பெடலில் கால் வைத்து சமாளித்து அமர்ந்தபோதிலும் ஹேண்டில் பார் தடுமாறுகிறது. கோட்டைமேடு நாராயணனைத் தவிர்த்து மற்ற கிளைக் கழக பொறுப்பாளர்களெல்லாம் இவன் ஜாதி அதாவது தரித்திர ஜாதி. நாராயணன், ஐம்பது வயதில் ஐந்து கட்சிகளில் இருந்துவிட்டு, ஆறாவதாக நடிகர் கட்சிக்கு வந்திருக்கிறார். வந்தவுடனேயே ஒன்றியத் தலைவர் பதவி கிடைத்துவிட்டது. “என்ன செய்வது அவனப்பன் கோமணம் அவுத்த வேளை அப்படி”, என இவனைப்போல ஒரு கிளைக்கழக காரியதரிசி ஒருத்தன் புலம்பினான்.

நாளைக்குப் புதன்கிழமை, பத்தாயிர ரூபாயும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் இன்னும் மூன்று நாட்களுக்குள் தயார் செய்யணும். நாராயணன் சொல்லியே மூன்று நாட்கள் ஓடிவிட்டன.

– ஏண்டா சின்னவனே, எழுந்திருக்கலை. உங்க அண்ணன் காலையிலே எழுந்து, வடக்கு வெளிக்குத் தண்ணீர் திறக்கணும்னு போயிருக்கான், மாசிலாமணி கவுண்டரை பார்த்துட்டு வரச் சொன்னான்

– என்னாலே அந்த ஆள்கிட்டே போய் நிக்க முடியாதும்மா, அவங்க தெருவுலே நிக்கவச்சிப் பேசுறாங்க. முன்னாடிண்ணா பரவாயில்லை. இப்ப நான் கிளைக்கழகத்துக்குத் தலைவரு.

– நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான், நீதான் மெச்சிக்கணும். எழுந்து வேலையைப் பாய்ப்பியா?

எரிச்சலுடன் எழுந்தான், போர்த்திய கைலியை இடுப்பில் சுற்றிக்கொண்டான். கொடியில் போட்டிருந்த சட்டையைத் தேடினான்.

– ஏம்மா இங்கெயிருந்த சட்டையைப் பார்த்தியா?

– நேத்துக் கசக்கிப் போட்டேன், வாசலில் காயுதாண்ணு பாரு. பல்லைத் துலக்கிக்கிட்டு, அந்த மனுஷனை அப்படியே பார்த்துட்டு வந்துடு.

frustrationதெரு வாசலுக்கு வந்து, வளைந்திருந்த பூவரச மரக்கிளையில் குச்சியொன்றை ஒடித்தான், இலைகளைக் கழித்து பல்லிடுக்கில் கொடுத்துத் தேய்த்தான். மற்ற கிளை உறுப்பினர்களில் ஒருத்தன் கூட இரண்டு நாளாகச் சிக்கலை. மாசிலாமணி வீட்டுப் பையன் ரத்தினவேலுகூட கூட்டுசேர்ந்துகிட்டு ஏதாவது மாய்மாலம் பண்றாங்களோ? அவன்கிட்டே கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கணும். கிளைக் கழகத் தலைவரா வரணுமென்கிற ஆசை அவனுக்கு நிறைய இருக்கு. கம்மனாட்டிப் பய எப்ப எப்பண்ணு இருக்கான். கட்சியின் ஒன்றியத் தலைவர் புதுச்சேரி ஒயின் கடையொன்றில் வைத்து ஒரு முறை வெளிப்படையாவே சொல்லியிருந்தார்: “இங்கே பாரு வேணு, எனக்கு ரெண்டு பாட்டில் வாங்கிக் கொடுக்கவே, நாலு தடவை பாக்கெட்டைத் தடவற, நீ எப்படி கட்சியிலே பொறுப்பெடுத்துக்கிட்டு குப்பை கொட்டப்போறண்ணு தெரியலை. தலைவர் பட ரிலீஸுக்கு, அஞ்சு ரூபாய்க்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்தா மட்டும் போதாது, செலவு பண்ண கையிலே அய்வேசி இருக்கணும்.”

எந்த ரத்தினவேலுகிட்டே தன்னுடைய வறுமை தெரியக்கூடாதுண்ணு நினைக்கிறானோ, அவன் வீட்டுலே போயுட்டு கடனுக்கு விதைநெல் அளந்து வாவென்றால் எப்படி? அவன் தகப்பன், பிள்ளைக்கு மேலே சரியான எமகாதகன். அரிவாளைத் தொடாமலே அறுவடை பண்ணிடுவான், ஊரிலே முக்கால்வாசி வீட்டுலே அந்த ஆள் கொடுக்கிற விதை நெல்லுலதான் நாத்தங்காலுக்குச் சேடைகூட்டணும். புழக்கடைக்குச் சென்று வாயைக் கொப்பளித்துக்கொண்டு வந்தான். வாயில் புளித்துகொண்டு வந்தது. வயிறு கபகபவென்று எரிந்தது.

– ஏம்மா பழையது இருக்கா?

– இருக்கும் சோத்துப்பானையைப் பாரு, காலையிலே பெரியவன் கொஞ்சம் தூக்குலே எடுத்துப் போயிருப்பான்.

– இங்கே நானொருத்தன் வீட்டுலே குத்துக்கல்லாட்டம் இருக்கிறேன்.

– காடு காத்தவன் பலன் அடைஞ்சிதானே ஆகணும். பொழுதண்ணிக்கும் உழைக்கிற புள்ளைண்ணா கொஞ்சம் அப்படி இப்படிதான். இருக்கிறது உன் வயிற்றுக்குத் தாராளமா போதும் புழிஞ்சுபோட்டுச் சாப்பிடு, நேற்றுவச்ச மீன் குழம்பு சட்டியில் இருக்கு ஊத்திக்க. ரேஷன் கடை வரைக்கும் போயிட்டு வரேன், டெலிவிஷன் பெட்டி கொடுக்காங்களாம்.

– அம்மா.. கொஞ்சம் பணம் தேவைப்படுது.

– ஏங்கிட்டே தம்பிடி கிடையாது. நாலு நாளா, வாயிலேபோட வெத்திலை இல்லை. கம்பத்து வீட்டுக் கல்யாணத்துக்குண்ணு ஒரு மாசமா லோல்பட்டதிலே புதுப் புடவையொண்ணு கொடுத்துவிட்டாங்கா, வேற எதுவுமில்லை. ஒவ்வொருதடவையும் அந்த வீட்டுப் பின் வாசலில் நிக்கிறபோதெல்லாம், ‘பொறவு வா பாப்பம்ணு, பொறவு வா பாப்பம்ணு’, சொல்லிக்கிட்டிருக்காங்க.

அவள் போய்விட்டாள். முன் வாசற் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தான். சூரியன் கூரைக்கு மேலே வந்திருந்தான். ஏரிக்கரை புளியமரத்து வௌவ்வால்களை கலைத்திருக்கவேண்டும், ஏகககாலத்தில் மரத்தினை உதறிவிட்டுப் பறந்தவை காச் மூச்சென்று இரைச்சல் போடுகின்றன. வேணுவின் தகப்பன் திடீரென்று மண்டையைபோட்டபோது, கிராமத்து வடக்குவெளிப்பக்கம் பத்து செண்ட் நஞ்சையும், கிழக்குவெளியில் 20 செண்ட் புஞ்சையையும் இரண்டு பிள்ளைகளுக்கும் பெண்டாட்டிக்குமாகப் பொதுவில் வைத்துவிட்டுப்போனார். புரோநோட்டு பேரிலே உள்ளூரிலே வாங்கின கடன்கள்போக மகள் கல்யானத்தை முன்னிட்டு வெட்டாத கிணற்றுக்கு இந்தியன் வங்கியில் வாங்கிய வகையில் இருபதினாயிரம், கிராமக் கூட்டுறவு வங்கியில் உழவு மாடுகள் வாங்கிய வகையில் கடனென்று ஐயாயிரமென்று ஆகமொத்தம் இன்றைய தேதியில் அசலும் வட்டியுமாக ஐம்பதினாயிரம் ரூபாய் இருக்கிறது. கிழவிதான் கம்பத்து வீட்டுலே வேலைக்குபோன நேரம்போக, அக்கம்பக்கத்துலே அவசரத்துக்குக் கூப்பிடும்போது, மறுக்கறதில்லை. சுணக்கமில்லாம நடவு, களை, அறுப்புண்ணு உழைத்துக்கொண்டிருக்கிறாள்.

வீட்டுவாசலில் வேப்ப மரத்தில் கட்டிப்போட்டிருந்த உழவு மாடுகளிரண்டும் போட்ட சாணியில் உழன்று கொண்டிருக்க, இரண்டையும் அவிழ்த்து வேணு இடம் மாற்றிக் கட்டினான். கூட்டேரிபட்டுச் சந்தையில் தரகர் எத்துராசை அழைத்துச் சென்று வாங்கிவந்த மாடுகள், பல்லு படாதவை, விலை சகாயமென்று பேசிக்கொண்டார்கள். மறுநாள் நுகத்தடியில் பூட்டி கலப்பையை அழுத்திப் பிடிக்க இரண்டும் சடாரென்று படுத்துக் கொண்டு எழுந்திருக்கவில்லை. பிறகு பனையோலையில் தீ மூட்டம் போட்டு எழுப்ப வேண்டியிருந்தது. அன்றையிலிலிருந்து தொலைத்து தலை முழுகுவதென முடிவு செய்து ஒவ்வொரு சந்தையாகப் போய்வருகிறார்கள். விற்றபாடில்லை. வெயில் சுளீரென்று அடித்தது, காற்றில்லை. எதிர்வீட்டு முளையில் கட்டிருந்த எருமைமாட்டின் முதுகில் அதன் வாலுக்கு எட்டாத பரப்பில் அண்டங்காக்கையொன்று உண்ணியைத் தேடித் தேடி கொத்திக்கொண்டிருக்கிறது. சுவரில் இவனுடைய நடிகர் வேட்டி மண்ணில் புரள கனஜோராக நடந்துவருகிறார். தலைவர் முதுகொட்டி இவனைப் பார்த்து புன்னகைக்கும் மும்பை நடிகை. கீழே வரிசையாக உதிரி நடிகர் நடிகைகளில் தலைகள். ஆறுமாதத்துக்கு முன்பு டவுனில் இருக்கும் தியேட்டர்காரன் ஒட்டிச் சென்ற போஸ்ட்டர். அதற்குப் பிறகு பத்து படங்களுக்கு மேல் வந்துவிட்டன. ஏன், அவனது தலைவர் சீத்தாபதி படமே மூன்று வந்தது, எந்தப் போஸ்ட்டரிலும் அவர் இப்படியொரு போஸில் இல்லை. தலைவர் நல்ல போஸில் இருப்பதுபோல படம் வரும்வரை வேறு எதையும் அதன் மீது ஒட்டக்கூடாதென சொல்லிவைத்திருக்கிறான்.

நாளைக்குள் ஐந்தாயிரம் புரட்டவேண்டும், புரோ நோட்டின்பேரில் வட்டிக்குப் கிடைக்குமென்றாலும் இவனை நம்பி கொடுக்க வேண்டுமே. முன்னே பின்னே கடன் கேட்ட அனுபவமில்லை. கிளைக் கழகமென்று ஊர்த் திடற் பக்கமிருக்கிற கீற்றுக் கொட்டகையில் யாராவது கண்ணிற் படுகிறார்களா என்று தேடிப் போக நினைத்தான். அங்கே இந்த நேரத்தில் ஒருத்தனும் தேறமாட்டான். அப்படியே எவனாவது அகப்பட்டாலும் பைசாவுக்கு பிரயோசனமிருக்காது, இவன்கிட்டே, ‘டீக்கு காசிருக்கா வேணு’ என்று கையை நீட்டினாலும் நீட்டலாம்.

– என்ன வேணு, சீத்தாபதி டவுனுக்குக் கொடியேற்றவரான்பலக்கிது? தெருவில் இறங்கி நடந்தவனிடம்- ஊரில் திண்ணை தூங்கி என்று பேரெடுத்த கார்வண்ணன் எகத்தாளமா கேட்டுச் சிரிக்கிறான்.

வேணுவுக்குச் சுரீரென்று கோபம் வந்தது. பாய்ச்சலில் ஓடினான். நிலைமையைப் புரிந்துகொண்டு கார்வண்ணன் அவசரமாய் திண்ணையிலிருந்து குதித்து வாசற் கதவை நோக்கிப் பாய்ந்தான். அவனை வழிமறிப்பதுபோல திறந்திருந்த கதவுக்குக் குறுக்காக நின்ற வேணு, காலை மடித்து பலங்கொண்ட மட்டும் எட்டி உதைத்தான். நிலை தடுமாறிய கார்வண்னன் தூணில் முட்டிக்கொண்டான். அடுத்த தாக்குதலுக்கு முன்பாக சமாளித்து எழுந்து வேணுவில் முகத்தில் மணிக்கட்டை இறுக்கிப்பிடித்து ஓங்கிக் குத்த, அடுத்த நொடி தெருவில் இருவருமாகக் கட்டிப்புரண்டார்கள். சண்டையைப் பார்த்த தணிகாசலம் என்ற பெரியவர் ஓடிவந்து இருவரையும் விலக்கினார்.

– எங்க தலைவர அவன் இவண்ணு சொல்றான் மாமா.

– விடு வேணு. இதென்ன புதுசா, எல்லோருமே அப்படித்தான் சொல்றோம். நீ மத்த நடிகருங்களை அப்படி சொல்றதில்லையா?

– இப்ப அவரு ஒரு கட்சிக்கு தலைவரு.

– எந்தத் தலைவராக இருந்தாலும், அப்படித்தான் நாம ஏக வசனத்தில் அழைக்கிறோம். மரியாதை கொடுக்கிறமாதிரி அவங்க நடந்துக்கணும், இல்லைண்ணா சொல்லத்தான் செய்வாங்க.

angstச்சே அலுத்துக்கொண்டான். சட்டைக் கசங்கியிருந்தது, ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டான். திரும்பவும் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு, டிரங்கு பெட்டியில் புதன் கிழமைக்கென்று எடுத்துவைத்திருந்த வேட்டியை கட்டி, சட்டையை அணிந்தான். சூரியன் இப்போ தலைக்கு மேலிருந்தான். தெருவில் இறங்கி கார்வண்ணன் வீட்டைக் கடக்கிறபோது தலையைத் திருப்பிக்கொண்டான், நடக்க நடக்க தெரு வளர்ந்துகொண்டு போனது. வழியெங்கும் இரண்டு பக்கமும் சம்புவேய்ந்த வீடுகள். தெருக்கோடியில் பிள்ளையார் கோவில்கிட்டே இருக்கிற நான்கு கல்வீடுகளில் மாசிலாமணி வீடுமொன்று. பார்த்துப் பார்த்து அலுத்துப்போன வீடுகள், மனிதர்கள், பூவரச மரங்கள். நாள் தவறாமல் நடக்கிற தெரு. கண்ணைக் கட்டிவிட்டால்கூட தெருவில் படுத்துக்கிடக்கிற ஒன்றிரண்டு நாய்களை மிதித்திடாமல், தெருவோரங்களில் நிறுத்தியிருக்கிற கட்டை வண்டிகளில் மோதிக்கொள்ளாமல், மறு கோடிக்கு போய்விடுவான். மஞ்சள் வண்ணத்தில் காரை பூசிய வீடு மாசிலாமணி வீடு. தாழ்வாரக் குறட்டில் பெண்கள் இருவர் புளி உடைத்துக் கொண்டிருந்தார்கள். கோதுடன் புதுப்புளி விரித்திருந்த கோணியில் குவிந்துக்கிடக்க எதிர் வெயில் இரயிலோடு இறக்கியிருந்த குறட்டில் பாதியை விழுங்கியிருந்தது.

– வாங்க, ஆண்டை இல்லை. அம்மாதான் இருக்காங்க. கூப்பிடவா?. வயதானப் பெண்மணி தலையை நிமிர்த்திக் கேட்டாள்.

– வா வேணு, எங்கே இந்தப் பக்கம்- நடைவாசற் கதவைத் திறந்துகொண்டு மாசிலாமணி மனைவி, வழக்கம்போல வாயில் புடவையும், சீட்டித்துணி ரவிக்கையுமாக இருந்தாள். புளி உடைக்கும் பெண்களே பரவாயில்லையென நினைத்தான்.

– மாமாவைப் பார்க்கணும்னு வந்தேன். அண்ணன் விதை நெல் கேட்டிருந்துச்சாம். பார்த்துட்டு வரச்சொன்னாங்க.

– மாமா வீட்டில் சும்மாவா குந்திக்கிணு இருக்காரு. ஏதோ கேசு விஷயமா திண்டிவனம் வரைக்கும் போயிருக்காரு. சாந்திரம் எட்டுமணி பெரியாருக்குத்தான் இனி திரும்பணும். நாளைக்குக் காலமே வந்து பாரு.

– நாளைக்கா?

– ஏன்?

– திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வரைக்கும் போகணும்.

– கட்சி தலைவராயிட்டே, நாலு எடம் போகவேண்டியிருக்கும். உன்னால முடியலண்ணா, உங்கண்ணனை வந்துப் பார்க்கச் சொல்லேன்.

அவள் யதார்த்தமாகச் சொல்கிறாளா கேலிசெய்கிறாளா என்பதைப் புரிந்துகொள்ள சங்கடப்பட்டான்.

– சரி, அண்ணங்கிட்டே சொல்றேன். மாமா வந்தா இப்படி வந்துபோனதாகச் சொல்லிவையுங்க.

குறட்டிலிருந்து இறங்கி வாசற்படியில் கால்வைத்தவன், மனதிற்குள்ளிருந்த சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள நினைத்தான்

– ரத்தினவேல் இல்லியா?

– ஏன் கேட்கிற. உனக்கும் அவனுக்குந்தான் ஒத்துவரலைண்ணு சொல்றாங்களே. திருச்சிற்றம்பலம் கூட் ரோடுவரை போயிருக்கிறான்.

– இல்லை சும்மாதான் கேட்டேன். தெருவில் இறங்கி வேகமாக நடந்தான். மனதில் இலேசாக அச்சம் தலைகாட்டியது. ஒன்றியத் தலைவரைப் பார்க்கத்தான் ரத்தினவேலு போயிருக்கணும். என்ன நடந்திருக்கும்? அப்படி ஏதாவது நடந்தா, நேரா சென்னைக்குப் போயுட்டு, மாநிலச் செயலாளராக இருக்கிற தலைவர் பிள்ளையைப் பார்த்து விஷயத்தைச் சொல்லணும். இருந்தாலும் நாளைக்கு ஐயாயிரம் இல்லைண்ணாலும் ஓர் ஆயிரமாவது புரட்ட முடிந்தால்தான் மரியாதை.

வீட்டிற்கு நுழைந்தபோது அம்மா ரேஷன் கடையிலிருந்து கொண்டுவந்திருந்த இலவச டெலிவிஷன் பெட்டி பிரிக்கப்படாமலிருந்தது.