கார்கோகல்ட் ஹிந்துத்துவா

img1090921099_1_1அண்மையில் விஸ்வ ஹிந்து பரிஷத் எனும் ஹிந்து தேசியவாத அமைப்பு தொடங்கிய இணைய தொலைக்காட்சி தனது விளம்பரத்தில் தமிழ்நாட்டில் உள்ள சிறுகோவில் ஒன்றில்  உள்ள யந்திர சனீஸ்வரர் அமைப்பை ஒத்த அமைப்பை நாஸாவின் காஸினி விண்-ஓடம் சனி கிரகத்தில் கண்டுபிடித்துள்ளதாகவும் அந்த காட்சித்தொகுப்பை தீபாவளி அன்று தருவதாகவும் கூறியது. இந்த செய்தியின் அறிவியலின்மை விவாதிக்க ஏதும் அவசியம் இல்லாதது. இக்கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. ஹிந்து தேசியவாதம் தொடர்ந்து இப்படி நவீன அறிவியலில் புராதன உண்மைகளைக் காண்பதைத் தன் வழ்க்கமாக்கிக் கொண்டுள்ளது ஒரு மானுடவியலாளனுக்கு சுவாரசியமான நிகழ்வாக அமைகிறது.

ஒரு பழமை சார்ந்த பண்பாட்டு மீட்டுருவாக்க அமைப்பு, ஏன் அபத்தமாகவும், பொருத்தமில்லாமலும் நவீன அறிவியலைத் தனது சான்றாதாரமாகக் காட்டி வருகிறது?

சில ஆண்டுகளுக்கு முன்னால் கடோத்கஜனின் எலும்பை “நேஷனல் ஜியாக்ராபிக்” காரர்கள் கண்டுபிடித்ததாக புகைப்பட சகிதம்  மும்பையிலிருந்து வரும் “ஹிந்து வாய்ஸ்” வெளியிட்டது. பின்னர் இதற்கு நேஷனல் ஜியாக்ராபிக் மறுப்பு தெரிவித்த பின்னர் ஆதாரமற்ற தகவலை வெளியிட்ட தவறைச் செய்ததாக ஹிந்து வாய்ஸ் ஒத்துக்கொண்டது. “ஹிந்து வாய்ஸ்” ஆசிரியர் தெய்வமுத்துவை நான் அறிவேன். அவர் நேர்மையானவர். அவரிடம் இந்த செய்தியைக் கொடுத்தவருக்கோ அல்லது அவருக்கோ இந்த செய்தியின் அடிப்படை ஆதாரமின்மை குறித்து எவ்வித சங்கடமும் கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் இருவருமே மகாபாரத நிகழ்வுகளை நேரடி உண்மைகளாக நம்புகிறார்கள். என்றாவது நவீன அறிவியல் புராண இதிகாசங்களின் நேரடி உண்மையை நிரூபிக்கும் என நம்புகிறார்கள். எனவே அவர்களுக்கு இத்தகைய ஒரு செய்தி வரும் போது சந்தேகம் தோன்றாமல் போய்விடுகிறது.

கடோத்கஜனின் எலும்பு
கடோத்கஜனின் எலும்பு

இராம சேது குறித்த நாஸா புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட இணைய வதந்திகளும் இதே தன்மையை கொண்டவைதாம். நாஸா ஒரு புகைப்படத்தை வைத்து ஒரு பாலம் போன்ற இயற்கை அமைப்பின் காலத்தை எப்படி  நிர்ணயிக்க முடியும்? எப்படி அதன் வயது 17,50,000 ஆண்டுகள் என வெறும் புகைப்படத்தை வைத்துக் கூறமுடியும்? ஆனால் செய்தி நிறுவனங்கள் கூட இந்த இணைய வதந்தியை வெளியிடத் தயங்கவில்லை.

ராம சேது(?!) - நாஸா
ராம சேது(?!) - நாஸா

ஏன்  நவீன அறிவியலின் சான்றாதாரம் பழமையின் மீட்டெடுப்பாளர்களுக்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது?

நவீனத்துவம் ஐரோப்பியப் பண்பாட்டின் முகத்துடன் வந்தது இதற்கான மூல காரணமாக இருக்கலாம். நவீனத்துவம் கட்டமைத்த பிரம்மாண்டமான ஸ்தாபன அறிவியல் ஐரோப்பாவின் ஸ்தாபன மதத்துடன் இணைந்து உருவாக்கிய தாக்குதல் ஏற்படுத்திய ஆழமன அச்சங்கள், அதனுடன் காலனியம் உருவாக்கிய சமூக, அரசியல் தேக்கநிலை, பொருளாதாரச் சுரண்டல்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றுக்கான எதிர்வினை எனச் சில காரணங்கள் இருக்கலாம்.

ஆனால் இது ஹிந்துத்துவ விளிம்பு இயக்கங்களுக்கு மட்டும் இருக்கும் பிரச்சினை அல்ல. ஏறக்குறைய அனைத்து நவீனத்துவ எதிர்ப்பு – பழமைவாத மீட்டெடுப்பு இயக்கங்களுக்கும் இருக்கும் பிரச்சினையே.  “புதுயுக” இயக்கங்கள் பலவற்றை நாம் பார்க்கும் போது அவை ஒரு இழந்து போன பழமையான ஞானம் மீண்டு புத்தெழுச்சி பெறும் வருங்காலத்தின் வரவை நம்புகிறார்கள்.  மேற்கில் ராம்தா, எட்கர் கயீஸ் ஆகியோர் இதனையே சொல்கிறார்கள். அதீதக் கற்பனையையும் வரலாற்று மர்மங்களையும் இணைத்து இத்தகைய உலகப்பார்வையை உருவாக்கும் போக்கை எரிக் வான் டானிக்கன் முதல் கிரஹாம் ஹான் காக் வரை காணலாம். என்றோ அடிநாளில்  விபத்து போல மறைந்த ஒரு பெரும் நாகரிகம் அடைந்த ஞானம், நம் கற்பனைக்கும் எட்டாத அளவில் முன்னேறிய தொழில்நுட்பம் ஆகியவற்றையே நாம் இன்று சிறிது சிறிதாக மீண்டும் கண்டடைகிறோம் என்பதே இந்த இயக்கங்களின் அடிநாதம்.

கடவுளர்களின் ரதம்(?!)
கடவுளர்களின் ரதம்(?!)

ப்ளாஷ் கோர்டன் காமிக்ஸ்களில் கீழை ஞானம் கொண்ட பெரும் பண்பாடொன்று அட்லாண்டிஸில் உருவாகி அது பேராசையாலும் ஒழுக்கக் கேட்டாலும் அழியும் போது அதன் ஒரு பிரிவு செவ்வாய் கிரகத்துக்கும் மற்றொரு பிரிவு பூமியில் பெருங்கடல்களுக்கு அடியிலேயும் குடி பெயரும். நவீன மானுடர் தமது தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி அதீத தன்மை அடையும் போது அந்த நாகரிகங்களை கண்டடைவார்கள். இந்த கதையாடல்கள் வெளிப்படையான கற்பனையாகவோ அல்லது ஞானக்கண்ணால் அறியப்படும் உண்மை எனத் தம்மை நிலைநிறுத்துபவையாகவோ அறியப்படுகின்றன. இவை முன்வைக்கும் இந்த பழமையான ஞானத்தின் கண்டடைவு எல்லாமே அடிப்படையில் நிறுவன எதிர்ப்பைக் கொண்டிருப்பதைக் காணலாம். சில நேரங்களில் இந்த மைய நிறுவன எதிர்ப்பு தூய பழமைவாதமாகவும் மாறும். உதாரணமாக ஜெஹோவா சாட்சிகளைக் குறிப்பிடலாம். பிரமிடின் பரிமாணங்களில் பெரும் ஞானமும் வருங்கால தீர்க்கதரிசனமும் பொதிந்திருப்பதாக எண்ணியவர் ஜெஹோவா சாட்சிகளின் ஸ்தாபகர்.  இன்றைக்கு மிகத்தூய்மையான விவிலிய அடிப்படைவாதத்தை முன்வைப்பவர்களாக ஜெஹோவா சாட்சிகள் விளங்குகிறார்கள். மேற்கத்திய உலகில் பழமையினை அறிவியல் வழியே மீள்-உறுதி செய்வதை நம்பும் சில விளிம்பு நிலைப் போக்குகள் இவை.

சரி. நாஸாவிடம் சான்றாதாரம் தேடும் ஹிந்துத்துவர்களை நாம் இந்த வரைபடத்தில் எந்தப் புள்ளியில் நிறுத்தலாம்? முதலில் ஏன் நாஸா? இவர்கள் எப்போதும் சுதேசியை முன்வைப்பவர்கள். அப்படியிருக்க ஏன் இஸ்ரோவைத் தேர்ந்தெடுக்கக் கூடாது? ஏன் நாஸாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? தங்களை ஒரு உலகளாவிய பரப்பில் வைத்துப் பார்க்க முயல்கிறார்கள். அவர்களை அறியாமலே அதற்கான சிறந்த வெளிப்பாடாக அமெரிக்க அறிவியல் நிறுவனம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் பழமையின் நிரந்தர உண்மைக்கு ஒரு சான்றாதாரம் தேடுகிறார்கள். இதில் இருக்கும் நுண்ணிய பொறி என்னவென்றால், சமயங்களிடையேயான உரையாடலில் நவீன அறிவியலே ஹிந்து பௌத்த தரிசனங்களை மேற்கத்திய மனதில் மீண்டும் மதிப்புயர வைத்தது. மேலும் சில முக்கியக் கண்டடைவுகள் (பரிணாமம், ப்ராயிடு) மேற்கத்திய இறையியலுக்கு அளித்த அதிர்ச்சியை அவை ஹிந்து மனதிற்கு அளிக்கவில்லை.

மின் விளக்கு(?!)
மின் விளக்கு(?!)*

நவீன இயற்பியலாளர்கள் ஹிந்து குறியீடுகளில் அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்குமான பொதுப்புள்ளிகளைக் கண்டடைந்தார்கள். இவை நடந்த தளம் ஒன்றாக இருக்க, மற்றொரு தளத்தில் நவீனம்-ஐரோப்பியம்-கிறிஸ்தவம் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்த ஆக்கிரமிப்பையும் ஹிந்துக்கள் எளிய தளங்களில் எதிர் கொண்டார்கள். திரைப்படங்கள் தொடங்கி திராவிட கழக கோஷங்கள் வரை ‘நவீனம் என்றால் கிறிஸ்தவம் -அது மேன்மையானது’ என்கிற பார்வை முன்வைக்கப்பட்டது. ‘வெள்ளைக்காரன் ஆவில ராக்கெட் வுட்றான். நீ இட்லி சுட்றே!’ என்ற எம்.ஆர்.ராதா விடம் தொடங்கி, இப்போது அதே உத்தியைப் பின்பற்றி வரும் விவேக் வரை இந்த மனநிலை பொதுப்புத்தியில் ஊன்றப்படுகிறது. நவீன உடை உடுத்தவன் பெயர் அய்யாசாமியாக இருக்கமுடியாது அர்னால்டாகத்தான் இருக்க முடியும் என்கிற பார்வை முதல் “பக்திமான் கண்டது விபூதி பாக்கெட் சயிண்டிஸ்ட் கண்டுபிடிச்சது ராக்கெட்” என்கிற திக கோஷம் வரை ஒரு தாழ்வு மனநிலையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் அறிவியக்க சோம்பலும் அதே நேரத்தில் இந்த ஆக்கிரமிப்புக்கான ஆத்திர எதிர்வினையும் இணைந்து உருவாக்கும் ஒரு கோணல் நடவடிக்கைதான் இந்த நாஸா +சனிக்கிரகம்+ யந்திர சனீஸ்வரர் இணைப்பு. ஒரு கேலிச்சித்திரம் போன்ற கோணலை, ஒரு நவீனத்துவ சமுதாய இயக்கமாகத் தன்னை முன்னிறுத்தும் ஒரு அமைப்பு செய்யும் போது அது அதிர்ச்சியூட்டுவதுடன்  அவர்களிடமும்,  அவர்களுடைய ஆதார சமூகத்திலுமே ஏதோ அடிப்படைக் கோளாறு இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பு :

*சார்ல்ஸ் பெர்லிட்ஸ் என்பவரால் “மின் விளக்கு” என முன்வைக்கப்பட்ட பிரமிட் சிற்பம்