என் சொல்லால் உனக்கொரு முத்தம்

இந்த நாள்

போரில் தோற்றுக்கொண்டிருப்பவனின்
இருதயமாய் இருக்கிறது இந்த நாள்
கவசங்களையும் மீறிப் பூத்த காயங்களில்
கரிப்பு இரத்தம் பொங்க
மேற்கில் சரிகிறது சூரியன்
வெற்றியின் அதிதேவதைக்கு படையலிட்ட
hope-eternalஉயிர்கள் ஆங்காரமிடுகின்றன
காலையில் கிளம்பும் போது
எத்தனை நன்நிமித்தங்கள்
மரத்தில் ஏறும்
ஒற்றை அணில் பிள்ளை
ஜோடி மைனா குருவிகள் என
நம்பிக்கை
ஒரு புளுகனின் சொற்கள்
ஆசையோ
கிழட்டு தேவடியாளின் சுருக்குபை
சபித்தலின் சூறை
நாறிக்கொண்டிருக்கும் சாக்கடையோர
புதர் மேட்டில் அரும்புகிறது
என் ஆசுவாசத்தின் புல்
பலவீனமான என் இதயம்
இன்னும் நம்புகிறது
மேலும் பிடிவாதமாக
மேலும் மேலும் தளராத உறுதியோடு

-o00o-

என் சொல்லால் உனக்கொரு முத்தம்

101.

நான் இங்கு வந்திருக்கவே கூடாது
உனக்காகவே வந்தேன்
ஜெனீபர் எங்குள்ளாய்?

ஒரு மொட்டைப் பனைமரத்தின்
அடியில் புதைத்துச் சென்றேன்
உன்னை

நமது குழந்தைகள்
ரோஜா பதியன்கள்
அவைகளை
இந்தக் கரத்திலிலேயே
குருதி வடிய
இரவு முழுவதும் சுமந்தலைந்தேன்
பிணம் என்பதறியாமல்

உன்னை நானிங்கு
விட்டுச் சென்றிருக்கக் கூடாது
இது சுடுகாடு
நாய்களும் நரிகளும்
பொறுக்கி உண்ணும் படுகளம்
பேய்களும் பிணந்திண்ணிகளும்
பறந்தலையும் பாழ்நிலம்
உன்னை நானிங்கு
விட்டுச் சென்றிருக்கக் கூடாது

ஓநாய்களைப் பார்த்திருக்கிறாயா
ஜெனீபர்?
அதுவே உனை தின்றது
உன் குரல்வளையை கவ்வி
இழுத்துச் சென்றது

எச்சில் ஒழுக நாக்கு தொங்கி
அலையும் அம்மிருகத்தின்
கோரைப்பற்களும் துர்நாற்றமும்
கொடூரம்

202.

நீ திரும்பி வந்து
எனை அழைத்துச் செல்வாய்
என எதிர்பார்த்தேன் ஜெனீபர்

குதிரையை கட்டிக் கொண்டு
அழுது கொண்டிருந்த
அம்மீசைக்காரன் சொன்னான்crucified_tree_form
சிலுவைகளை வீணாக்காதே என்று

உனை விட்டுச் சென்றதாலேயே
எனைக் கைவிட்டாய்

நான் என்ன செய்ய
பார் இந்த நரகம்
எப்படி எரிகிறதென
சாத்தானின் இதயம்

இதை என் கைகளால்
கொல்ல விரும்புகிறேன்
அழுத்தி
இதை கடலுக்குள் மூழ்கடிப்பேன்
பிணம் பிணம்
பிணமூறும் சாக்கடை

303.

அந்த குரங்கு
அந்த பீடை அதை இங்கிருந்து
வெளியேற்ற வேண்டும்
ஜெனீபர்
அது இன்னமும் இங்குதான்
சுற்றித் திரிகிறது போலும்
பிறகந்த யட்சி
அவளை வெட்டி
எறிய வேண்டும்
வேசை

இந்த மண் இந்த பூமி
பார்த்தீனியம்
ஷெல்களும் குண்டுகளும்
மேய்ந்தழிக்கட்டும் இதை

404.

எனை சிலுவையிலிருந்து
இறக்கி விடு
என் குருதியை
ஆணி உறிஞ்ச
எந்த நியாயமும் இல்லை

முட்டாள்கள்
எனை சிலுவையில் அறைந்திருப்பது
என் விடுதலைக்காகவாம்

வெடிகுண்டுகளும் சிலுவைகளும்
நண்பர்கள் ஜெனீபர்
இரண்டையுமே நான் வெறுக்கிறேன்

505.

நேற்று நினைவுள்ளதா
அந்த மாம்பழ வண்ண புடவை
அதைக் கட்டிக் கொண்டு
எங்கோ வேகமாய்
சென்று கொண்டிருந்தாய்

நான் தொடர்ந்து வந்து
உன் கைப்பிடித்து நிறுத்தினேன்
(அப்பாடா எங்கெல்லாம்
தேடுவது உன்னை)

சட்டென நீ திரும்பினாய்
வேறு யாரோ

“உனக்கு என்ன ஆச்சு
ஏன் இப்படி இருக்கிறாய்
ஜெனீபர்” என்றேன்

நீ கத்திக் கொண்டே
ஒடி விட்டாய்

ஜெனீபர் நான்
என்ன தவறு செய்தேன்
எனை மன்னிக்க மாட்டாயா?

606.

நான் இங்கு வந்திருக்கவே கூடாது
உனக்காகவே வந்தேன்

ஷெல்களின் அலறலும்
குழந்தைகளின் அலறலும்
ஒன்று போலவே இருக்கின்றன
பிறகிந்த மூடர்கள் இருவரும் கூட

உனை ஓநாய்கள்
தின்றன என்றல்லவா கூறினேன்

உண்மையில்
கழுதைப்புலிகளும்தான் தின்றன

கால்களை இழுத்து இழுத்து
நடக்கும் அந்த பிசாசு
எச்சில் பிணங்களை
விரும்பி உண்பவை

பிறகு
கழுகளும் நரிகளும் கூடத்தான்
உனை தின்றன

நான் தனியன்
பலவீனன்
பார்துக் கொண்டிருந்தேன்
உதடு துடிக்க
உடல் நடுங்க
வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்
ஜெனீபர் என்னை மன்னித்து விடு

உன்னை நானிங்கு
விட்டுச் சென்றிருக்கக் கூடாது
நாமிங்கு வந்திருக்கவே கூடாது