ஆட்டோவில் போன அசோகமித்திரன்

சுஜாதாவின் புத்தகங்களை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில் என் கல்லூரி நண்பன் மார்டின், “‘ராஜாஜி சினிமாவுக்குப் போனார்’ என்ற அசோகமித்திரன் கட்டுரையை படிச்சு பாருங்க தேசிகன், நகைச்சுவையா இருக்கும்,” என்றார்.

‘எந்தப் புத்தகத்தில் அந்தக் கட்டுரை இருக்கிறது என்ற கேள்விக்கு மார்டினால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. “கலைஞன் பதிப்பகத்தில் எதோ ஒரு கட்டுரை தொகுப்பு,” என்று மட்டும் க்ளூ கொடுத்தார்.

அந்தக் கட்டுரையை எப்படியாவது தேடிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு சென்னை வந்த சமயம் அந்தக் கட்டுரையைத் தேட ஆரம்பித்தேன். (அந்தக் காலத்தில் கூகிள் கிடையாது.) கலைஞன் பதிப்பகத்தில் அந்தப் புத்தகத்தைத் தேடி அலைந்து, கடைசியில் கண்ணதாசன் பதிப்பகத்தின் வாசலில் கண்ணதாசன் குடும்பத்தார் செய்யும் செட்டியார் ஸ்பெஷல் உணவு வகைகளைச் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.

சில வருடங்களுக்கு முன்பு கிழக்கு பதிப்பகம் ‘அசோகமித்திரன் கட்டுரைகள்‘ முழுத் தொகுதியை கொண்டுவந்த போது அந்தக் கட்டுரைக்காகவே புத்தகத்தை வாங்கி முதலில் அந்தக் கட்டுரையைத் தேடிப் படித்தேன். படிக்காதவர்கள் இனியாவது அந்த கட்டுரையைப் படிக்க சிபாரிசு செய்கிறேன்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும்முன்பே அசோகமித்திரனை உயிர்மை ஒர் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் அவரை முதன்முதலாகப் பார்த்தேன். கணையாழி ஆரம்பித்த காலத்தில் நிகழ்ந்த அனுபவங்களை நகைச்சுவையாக அன்று பேசியது இன்றும் நினைவு இருக்கிறது. உடம்புதான் லாரல் போல, ஆனால் அவர் பேச்சில் நகைச்சுவை, ஹார்டி அளவு இருக்கும். அன்று நகைச்சுவையாகப் பேசும்போது ஒர் இடத்தில் கூட அவர் சிரிக்கவில்லை. மனதில் பட்டதை பாசாங்கு இல்லாமல் சொல்லிவிடுவார்.

நல்ல கட்டுரை ஒரு நல்ல சிறுகதையைப் படித்த அனுபவத்தைத் தரவேண்டும். அசோகமித்திரன் கட்டுரைகள் இந்த அனுபவத்தைத் தரும். அவரின் பல கட்டுரைகளில் உள்ள குறிப்புகள் கதை, நாவல் எழுதுபவர்களுக்கு நிச்சயம் உதவும்.

ஒரு பார்வையில் சென்னை நகரம்” ( கவிதா வெளியீடு ) என்ற புத்தகத்தை இதுவரை நீங்கள் படிக்கவில்லை என்றால் அடுத்த 24 மணிநேரத்துக்குள் அதை வாங்கிப் படியுங்கள். 1948ல் ரங்கநாதன் தெரு எப்படி இருந்தது, தாமோதர ரெட்டி தெருவில் நரி உலாவும், போன்ற தகவல்கள் சுவாரசியம். இந்தக் கட்டுரைகள் எல்லாம் அசோகமித்திரன் கட்டுரைகள் முழு தொகுதியில் இல்லை என்பது எனக்கு வருத்தம்தான். ஆனால் அவை அந்தக் கட்டுரை தொகுதியில் இருந்தால்– இப்பொழுதே அந்தப் பெரிய புத்தகங்களின் பக்கங்களைத் திருப்பியபின், கை கட்டைவிரல் முட்டிக்கு அயோடக்ஸ் தேவைப்படுகிறது; இந்தக் கட்டுரைகளையும் சேர்ந்த்திருந்தால், புத்தூர் கட்டுதான் போட்டிருக்க வேண்டும். அந்த விதத்தில் மகிழ்ச்சியே.

அவருடைய பல சமகால, மற்றும் இன்றைய இளம் எழுத்தாளர்கள் பலருடைய படைப்புகளில் அசோகமித்திரன் தாக்கத்தைப் பார்க்கலாம். அசோகமித்திரன் (ஆரம்பக்) கதைகளில் பெரும்பாலும் ஆங்கில எழுத்தாளர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதை பார்க்கிறேன். சில நாட்கள் முன் இவரின் ஆரம்பச் சிறுகதைகளைப் படிக்கும் போது, பல படர்க்கையில் (3rd person) இருப்பதைப் பார்க்க முடிகிறது. சுஜாதாவின் ஆரம்பச் சிறுகதைகள் எல்லாம் படர்க்கையில் இல்லாமல், அதிகமாக ‘நான்’ என்று, தன்மையில் (1st Person) இருப்பதைப் பார்க்கலாம். ஆரம்ப சிறுகதை எழுத்தாளனுக்கு படர்க்கையில் எழுதுவது ரொம்ப கஷ்டமானது என்பது என் எண்ணம்.

சில மாதங்கள் முன்பு “உரையாடல்கள் – அசோகமித்திரன்” (விருட்சம் வெளியீடு ) புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அசோகமித்திரன் நேர்காணல்களின் தொகுப்பு இந்தப் புத்தகம், இதில் பல கேள்விகள் ரிப்பீட்டாக இருந்தாலும், பல்வேறு சமயங்களில் பதில்கள் வித்தியாசப்படுவதைப் பார்க்க முடிகிறது. அந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்தது 91ஆம் பக்கத்தில் இருக்கும் “நாடகம் உருவான நாடகம்” என்ற தலைப்பில் இவர் எழுதிய நாடக அனுபவம். [ பின் இணைப்பாகக் கொடுத்திருக்கிறேன் ]

கடந்த 58 வருட காலமாக தமிழில் எழுதி வந்திருக்கிறார், அதில் 43 வருடங்கள் முழு நேர எழுத்தாளராகவே வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார். இவரை போலவே இவர் எழுத்துக்களும் எளிமையாக இருந்திருக்கிறது. தமிழகத்தில் செலிபிரிட்டியாக கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் பலர் காரோ ஸ்கூட்டரோ வாங்குவது, அவர்கள் எழுதுவதுடன், வேறு வேலை பார்த்து அங்கு ஒன்றாம் தேதி கிடைக்கும் சம்பளத்தில்தான்.! ஆகவே அசோகமித்திரன் முழு நேரம் தமிழ் எழுத்தாளராக இருந்திருப்பது ஒரு பெரிய சாதனை என்று சொல்வேன்.

amiவேறு வேலை எதுவும் தேடவில்லையா என்ற கேள்விக்கு, “யாரும் தரவில்லை. எனக்கும் கேட்கத் தெரியவில்லை என்று கூற வேண்டும். ஒரு முறை முனைந்து ஒருவரிடம் சென்றேன். எல்லாம் நம் சாவிதான். அப்போது தான் ‘தினமணி கதிர்’ பொறுப்பேற்றிருந்தார். வா வந்து சேர்,” என்றார்.

“கணையாழி என்று டில்லிக்காரர் பத்திரிகை ஒன்று இருக்கிறது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.எனக்கு அதில் வருவது மாதம் ஐம்பது, நூறு தான் என்றாலும் என்னையே நம்பியிருக்கிறார்கள். நான் அதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அது எந்த விதத்திலும் கதிரின் பாதையில் குறுக்கிடாது,” என்றேன்.

சாவியால் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. “ஆனால் சில ஆண்டுகளுக்குள் கணையாழியின் உரிமையாளரே, தினமணி நிறுவனத்தில் சேர்ந்து பணி செய்து வந்தது வாழ்க்கையின் Dramatic irony என்று தான் கூற வேண்டும்.” என்கிறார்.

அசோகமித்திரன் ஏன் சினிமாவிற்குள் போக முடியவில்லை அல்லது போகவில்லை என்று கேள்விக்கு விடை இல்லை. இத்தனைக்கும் இவர் ஜெமினியில் பொதுஜனத் தொடர்புப் பிரிவில் உதவியாளராக சேர்ந்து அதிகாரியானவர். தமிழ் சினிமா இவரின் எழுத்துகளை உபயோகப்படுத்தத் தவறிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

சுஜாதா காலமான போது, அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் வந்திருந்தார். இரண்டாம் முறையாகப் பார்த்தேன். மத்தியான வேளையில் சென்னை வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தண்ணீர் அருந்திவிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “வேளச்சேரிக்கு போகணும், பஸ்டாண்ட் வரை யாராவது கொண்டு விட முடியுமா?” என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

அங்கிருந்த ஒரு பிரபல டைரக்டர், “இவர் தமிழ்நாட்டின் Hemingway. இவருக்கா இந்த நிலமை ?” என்றார்.

எதையும் வித்தியாசமாகச் செய்யும் ஒரு டைரக்டர் இவருக்கு ஒரு ஆட்டோ பிடித்து கொடுத்தார்.

எழுதிப் பிழைப்பதில் உள்ள சிரமங்கள்? என்ற கேள்விக்கு இவரின் ஒரு வரி பதில்:
“எல்லாச் சிரமங்களையும் துயரங்களையும் அனுபவித்தாயிற்று.”

[பின் இணைப்பு]

அசோகமித்திரன்

நாடகம் உருவான நாடகம்

என் படைப்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக முதலில் நிகழ்ந்தது, ஒரு வானொலி நாடகத்தின் மூலம்.

நான் சென்னை வந்த ஆண்டு அகில இந்திய வானொலி, ஒரு முழு நீள நாடகப் போட்டி நடத்தப் போவதாக அறிவித்தது. அப்போது எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. மேடை நாடகம் என சிறு சிறு நாடகங்கள் மூன்று எழுதியிருந்தாலும் எனக்கு அவை பற்றி நம்பிக்கை இல்லை. அந்த நேரத்தில் இந்த வானொலிப் போட்டி பற்றிய அறிவிப்பு.

இரண்டு மூன்று மாதங்கள் தடுமாறித் தவித்துக் ashokamitranதிண்டாடினேன். கடைசித் தேதிக்கு மூன்று நாட்கள் முன்புதான் ஒரு வடிவம் பற்றி எனக்குத் தெளிவு கிடைத்தது. சுமார் 100 பக்கங்கள் ஒரு இரவில் எழுதினேன். பொழுது விடிந்தது. கடைசித் தேதி, சனிக்கிழமை, காலையிலிருந்து பலத்த மழை.

குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவித்த சென்னை நகரம் இந்தப் பெருமழையை மிகுந்த மகிழ்ச்சியோடு அனுபவித்துக்கொண்டிருந்த போது, நான் மட்டும் கவலையில் இருந்தேன். சுமார் 150 பக்கக் கையெழுத்துப் பிரதியை எப்படி ஈரமாகாமல் வானொலி நிலையத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பது?

அந்த நாளில் பிளாஸ்டிக், பாலிதீன் முதலியன கிடையாது. கண்ணாடிக் காகிதம் என்று அழைக்கப்படும் செல்லஃபேன் தாள்தான். அது கிழிந்துவிடும். மேலும் ஒரு தடிமனான காதிதக் கட்டைச் சுற்றிக் கட்டுமளவுக்கு சட்டென்று கிடைக்காது.

எனக்கு இன்னொரு கவலையும் கூட; நூற்றைம்பது பக்க நாடகத்துக்கு என்னிடமுள்ளது ஒரே ஒரு பிரதிதான். அந்த நாளில் போட்டோ காப்பியிங் கிடையாது. கார்பன் தாள் வைத்து எழுதலாமே என்று கேட்கக் கூடும். இங்க் பேனாவில் கார்பன் பிரதி சரியாக வராது. அந்த நாளில் பால்பாயிண்ட் பேனா கிடையாது. பென்சில் கொண்டு எழுதலாம்.

ஆனால் பென்சில் எழுதப்பட்ட படைப்பு, பத்திரிகைக்கோ அல்லது பிரசுரத்துக்கோ அனுப்பினால் ஏற்கப்படாது. அதனால் என் கைவசமுள்ள நாடகப் பிரதியை நான் கொடுத்துவிட்டால் நாடகம் போனது போனதுதான். தொலைய வேண்டுமென்றில்லை பரிசு பெறாவிட்டல் கூட ஆசிரியர்களுக்குத் திருப்பி அனுப்புவதாக எந்த உத்திரவாதமும் கிடையாது.

பெரிய மழை இன்னும் பெரிய மழையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. நாடகப் பிரதியை, வேறு நிறைய தாள்களில் சுற்றிக் கட்டி ஒரு கான்வாஸ் பையினுள் போட்டு கொண்டு அத்தனையும் இடுப்பில் பாண்டினுள் சொருகிக் கொண்டு கிளம்பினேன். என் ஷர்ட், உள் பனியன் இரண்டும் நாடகப் பிரதியை மழையிலிருந்து காக்க வேண்டும்.

அந்த நாளில் சென்னை வானொலி, எழும்பூர் கண் மருத்துவமனைக்கு எதிரில் இருந்தது. நான் குடை பிடித்துக் கொண்டு அன்றைய சாலைப் பள்ளம், மேடு, சேறு சகதியைச் சமாளித்து என் யுத்தகால சைக்கிளில் வானொலி நிலையம் அடைந்தபோது பகல் மணி மூன்று. எங்கு யாரைக் கேட்பது என்று தெரியவில்லை. அங்கு என் கண்ணுக்குக் கிடைத்த நான்கைந்து பேருக்கு நாடகப் போட்டி பற்றி எதும் தெரியாது.

“இதெல்லாம் இங்கே கிடையாதுப்பா, இங்கே வெறும் ரிகார்டிங்கு மட்டும் தான். நீ வேணும்னா ’வானொலி’ ஆபீஸுக்கு போய்க் கேளு”

“இது தானே வானொலி ஆபீஸ் ? “

“இல்லை இல்லை, அது சாந்தோம்லே இருக்கு. அங்கே சர்ச் இருக்கில்லே. அங்கே போய்க் கேளு”

எனக்கு முதலில் சாந்தோம் எங்கிருக்கிறது என்று விசாரிக்க வேண்டியிருந்தது. அந்த நாளில் வானொலி நிகழ்ச்சிகளைத் தெரிவிக்கும் அட்டவணை போல வரும் ஒரு வெளியீட்டுக்கு ‘வானொலி’ என்று பெயர். அதன் அலுவலகத்துக்குக்தான் என்னைப் போகச் சொல்லியிருந்தார்கள்.

அந்தக் கொட்டும் மழையில் எழும்பூரிலிருந்து சாந்தோமுக்கு சைக்கிளில் செல்ல நிறைய நேரம் பிடித்தது. ஒரு மாதிரி விசாரித்துப் போய்ச் சேர்ந்து விட்டேன். மணி ஐந்து. ஆனால் நாலரைக்கே எல்லோரும் வீட்டுக்குப் போய் விட்டார்கள், மழையின் காரணமாக.

அங்கிருந்த ஒரு காவல்காரரிடம் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தேன். அடுத்த நாள் காலை அதை அவர் யாரிடம் கொடுத்தாலும் அது முந்தைய தினமே வந்து சேர்ந்தது என்று சொல்லக் கேட்டுக்கொண்டேன். ஆனால் அந்த நுணுக்கமெல்லாம் அவர் நினைவில் வைத்திருப்பார் என்று எனக்கு அப்போது நம்பிக்கை இல்லை. மழை கொட்டிக்கொண்டே இருந்தது.

போட்டி முடிவுகள் அறிவிக்க ஒராண்டு பிடித்தது. என் பெயர் பத்திரிக்கையில் வந்திருப்பதை என் மேலதிகாரி பி.பி.நம்பியார் சொன்னார். நாடகத்தின் பெயர் ‘அன்பின் பரிசு’; அதற்கு பரிசு. !

எனக்குப் பரிசு வேண்டாம், நாடகப் பிரதி ஒன்று கொடுத்தால் போதும் என்று வானொலி நிலையத்துக்கு எழுதினேன். பரிசு ரூ 300/-, பிரதி ஒன்று, இரண்டும் கிடைத்தன.

நாடகம் 1954இல் ஒலிபரப்பப்பட்டது. அது இன்னொரு கதை.

( தினமணி கதிர், 25.7.99 )