சிறை எண் – 1

chimamand_nigerian-authorசிமமண்டா அடிச்சி புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளர். நைஜீரியாவின் எனுகு(Enugu) எனும் ஊரில் பிறந்த இவர், தனது 19-ஆம் வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு மருத்துவ படிப்பையும், ஊடக மற்றும் அரசியலியல் துறையையும் கற்றார். தற்போது யேல் பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்கா சம்பந்தமான மேற்படிப்பை மேற்கொண்டு வருகிறார். அவரது முதல் நாவலான Purple Hibiscus, காமன்வெல்த் எழுத்தாளர் விருதை பெற்றுத் தந்தது. அவரது இரண்டாம் நாவலான “Half of a Yellow Sun” புகழ்பெற்ற புனைவிற்கான ஆரஞ்சு விருதை பெற்றுத் தந்தது. இவரது சிறுகதை தொகுப்பும் மிகப் பிரபலமானது.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தன்னுடைய ‘உலகத்துக்கு எழுதிய கடிதம்’ கட்டுரையில் சிமமண்டாவைக் குறித்து எழுதும் பகுதிகள்:

ரொறொன்ரோவில் சர்வதேச எழுத்தாளர் மாநாடுகள் அடிக்கடி நடக்கும். ஒரு கூட்டத்துக்கு போனபோது சபையிலே எண்பது வீதம் பெண்களாகவே இருந்தார்கள். மேடையைப் பார்த்தால், ஒன்றிரண்டு ஆண் எழுத்தாளர்களைத் தவிர மீதி எல்லாமே பெண்கள். ஓர் அமர்வில் நோபல் பரிசு பெற்ற வோலே சோயிங்கா வாசித்தார். இன்னொன்றில் புலிட்சர் பரிசு பெற்ற எட்வர்ட் ஜோன்ஸ் ஒரு சிறுகதை படித்தார். நைஜீரியாவிலிருந்து வந்திருந்த இளம்பெண் சிமமண்டா Half of a Yellow Sun என்ற அவருடைய நாவலின் முதலாவது அத்தியாயத்தை வாசித்தார். அவருடைய தன்னம்பிக்கையும், வாசிப்பும், கதை சொன்ன பாங்கும் சபையோரை கவர்ந்தது. வாசிப்பு முடிந்ததும் புத்தகத்தை வாங்கிக்கொண்டு பலர் அவருடைய கையெழுத்துக்காக நீண்ட வரிசையில் நின்றார்கள். பெண்களுடைய எண்ணிக்கை சபையிலே எக்கச்சக்கமாக இருந்ததன் காரணம் எனக்கு அப்போது புரிந்தது.

சிமமண்டாவின் எழுத்திலே திடீர் திருப்பமோ, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய விழையும் ஆர்வமோ பெரிதாக இருக்காது. ஆனால் மிக அமைதியான நடையில் எழுதிக்கொண்டே போவார். ஒரு வரியை படித்தால் அடுத்த வரியையும் படிக்கத் தூண்டும் எழுத்து. இவருடைய சிறுகதை ஒன்றை நான் படித்திருந்தேன். அந்தச் சிறுகதையை அவர் இரண்டு வருடங்களாக எழுதியதாகச் சொன்னார். ‘இரண்டு வருடங்களா? ஒரு சிறுகதைக்கா?’ என்றேன். சிறுகதையை எழுதும்போது அதை ஒரு முடிவை நோக்கிச் செலுத்தினேன். பின்னர் படித்துப் பார்த்தபோது பலவந்தமாக ஒரு திசையில் அதை தள்ளிக்கொண்டு போனது தெரிந்தது; இயற்கையாகவே இல்லை. மீண்டும் தொடக்கத்தில் இருந்து புதிதாக எழுதவேண்டி வந்தது என்றார். ஒரு சிறுகதை கேட்டதும் பத்து தாள்களுடன் அறைக்குள் போய் பூட்டிக்கொண்டு மூன்று மணி நேரத்தில் சிறுகதையோடு வெளியே வரும் எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். நான் வியப்படைந்ததற்கு காரணம் அதுதான்.

அவரிடம் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டதும் அவர் தந்த பதில் ஆச்சரியமாக இருந்தது. ரொமேஷ் குணசேகெரா என்றார். அவர் பெயரை கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய அவரைப் படித்ததில்லை. ஓர் இலங்கை எழுத்தாளரைப்பற்றி நைஜீரியப் பெண் கனடாவில் வைத்து என்னிடம் கூறியது அபூர்வமான விடயம்தான். ஒருவருடைய எழுத்து தரமானதா என்பதைக் கண்டுபிடிக்க எழுத்தாளருடைய ஒரு வசனத்தைப் படித்தாலே போதும். வார்த்தைகளை எப்படி தெரிவு செய்கிறார், எப்படி அடுக்குகிறார், வசனங்களை செதுக்கி எப்படி உருவம் கொடுக்கிறார் என்பதைப் பார்ப்பதே முக்கியம் என்றார்.

சிமமண்டாவுக்கு 29 வயதாகிறது. இரண்டு நாவல்களும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவருடைய முதலாவது நாவலின் பெயர் Purple Hibiscus. இரண்டாவது நாவல்தான் Half of a Yellow Sun. 1960களில் நைஜீரியாவின் ஒரு பகுதியான Biafra பிரிந்து தனி நாடாக பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து உள்நாட்டு போர் மூள்கிறது. அந்தக் காலகட்டத்தின் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. ஒரு பேராசிரியர், அவருடைய காதலி ஒலானா, அவர்கள் வேலைக்காரன் உக்வு, இவர்களே பிரதான கதை மாந்தர்கள். போர் எப்படி அறிவு ஜீவிகளையும், சாதாரண ஏழை மக்களையும் ஒரே மாதிரி பாதிக்கிறது என்பதையும், அதனால் ஏற்படும் அவலங்களையும், கொடூரங்களையும் பாத்திரங்களின் சம்பாசணை ஊடாக மெள்ள மெள்ள வெளிப்படுத்துகிறது நாவல். கைனானி என்று ஒரு பெண், ஒலானாவின் இரட்டைச் சகோதரி, அவள் பேசும்போது நறுக்காகவும் கெறுக்காவும் இருக்கும். அற்புதமான அவருடைய குணாதியம் நூல்கண்டில் சுழல் சுழலாக நூல் பிரிவதுபோல வெளிப்படும். நாவலின் இடையிலே வந்து இடையிலே மறைந்துவிடும் அந்தப் பாத்திரம் மனதை விட்டு அகலுவதில்லை.

நாவலை விமர்சகர்கள் புகழ்கிறார்கள். பல விருதுகளும், பரிசுகளும் சிமமண்டாவைத் தேடி வருகின்றன. அடுத்த சினுவ ஆச்சிபி என்று இவரை சிலர் சொல்கிறார்கள். எனக்கு என்னவோ இவரை புக்கர் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர் பென் ஒக்ரியுடன் ஒப்பிடவே தோன்றுகிறது. இவரால் ஒரு மோசமான வசனம்கூட எழுதமுடியாது. இவருடைய வசனத்துக்கு ஒரேயொரு உதாரணம். ‘அவள் குருவி கொத்துவதுபோல நிறுத்தி நிறுத்தி பேசினாள்.’ என்ன காட்சி வடிவமான, நுட்பமான வசனம். அவருடைய புத்தகத்துக்கு கொடுத்த காசு அந்த ஒரு வசனத்துக்கே சரியாய் போய்விட்டது.

எதற்காக எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு அவருடைய பதில்:

‘நான் எழுதுகிறேன். நான் எழுத வேண்டும். எழுதாமல் இருக்க என்னால் முடியாது. சிலவேளைகளில் எழுத்து என்னிலும் பெரிதாக இருக்கிறது.’

முதல் முறை எங்கள் வீட்டில் களவு போனபோது , எங்கள் பக்கத்துவீட்டுப் பையன்  ஒசிடா சமையலறை ஜன்னல் வழியாக உள்ளே குதித்து தொலைகாட்சிப் பெட்டி, வி.சி.ஆர். மற்றும் அப்பா அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த பர்புள் ரெயின் மற்றும்  த்ரில்லர்  வீடியோ சுருள்களைக் களவாண்டான்.

இரண்டாவது முறை எங்கள் வீட்டைக் களவாண்டது என் தம்பி நனமாபியா.  அவன், வீடு களவு போனது போல் ஒரு சூழலை உருவாக்கி, அம்மாவின் நகைகளைத் திருடிவிட்டான். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. எனது பெற்றோர்கள் எங்கள் சொந்த ஊர் மபைசுக்கு பயணப்பட்டிருந்தர்கள். நானும், நனமபியாவும் தனியாகத் தேவாலயம் சென்றோம். அவன் என் அம்மாவின் பச்சை நிற, பூஜோ 504 காரை ஓட்டிவந்தான். நாங்கள் இருவரும் எப்போதும் போல் ஒன்றாக சர்ச்சில் உட்கார்ந்திருந்தோம், ஆனால் வழக்கம்போல் மற்றவர்களைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரிக்கவில்லை, ஏனென்றால் நனமாபியா பத்து நிமிடம் கழித்து எழுந்து போய் விட்டான்.

அவன் திரும்பி வரும்பொழுது பாதிரியார் “இந்த பிரார்த்தனைக் கூட்டம்  முடிந்தது. அமைதியுடன் கலையுங்கள்” என்று கூறிக்கொண்டிருந்தர். அவன் புகைபிடித்து விட்டு வந்திருக்கலாம் அல்லது பெண்ணுடன் ஊர் சுற்றியிருக்கலாம் என்று நினைத்து எரிச்சலடைந்தேன். அவன் போவதற்கு முன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். நாங்கள் வீட்டிற்குத் திரும்பி வரும்வரை மௌனமாக வந்தோம். அவன் காரை நிறுத்தி வீட்டைத் திறந்தான்.  அதுவரை வெளியில் இருந்த பூக்களைப் பறித்துகொண்டிருந்தேன். நான் உள்ளே சென்று பார்த்தபோது அவன் கூடத்தின் நடுவே நின்று கொண்டிருந்தான்.

” நாம் களவாடப்பட்டோம்” என்றான் ஆங்கிலத்தில். எனக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரிய சில தருணங்கள் தேவை பட்டது. வீட்டில் உள்ள சாமான்கள் சிதறியிருந்ததில், மேஜை  டிராயர்கள் திறந்திருந்ததில் ஒரு செயற்கைத்தனம் இருந்தது. எனக்கு  என் சகோதரனைப் பற்றி நன்றாகத் தெரியும்.

பிறகு, எனது பெற்றோர்கள் வீட்டிற்கு வந்தார்கள். நான் எனது மாடியறையில் தனியாக உட்கார்ந்து இருந்தபோது வயிறு பிசைந்தது. நனமாபியாதான் இதை செய்திருக்கிறான், எனக்குத் தெரியும். என் அப்பாவிற்கும் தெரியும்.

அப்பா ஜன்னல் கதவு உள்ளிருந்துதான் திறந்திருக்க முடியும் என்பதை அவனிடம் சுட்டிக்காட்டினார். நனமாபியா திருட்டைச்  சரியாகச் செய்யுமளவுக்கு புத்திசாலியில்லை, மேலும் அவன் பிரார்த்தனை கூட்டம் முடிவதற்குள் வந்து சேரவேண்டும் என்ற பதட்டத்தில் இருந்திருக்கிறான். திருடர்களுக்கு கூடத்தின் இடது மூலையில் உள்ள பெட்டியில்தான் எனது அம்மாவின் நகைகள் உள்ளன என்பது எப்படி சரியாகத் தெரியும்?

nigeria_1நனமாபியா எனது தந்தையைப் பார்த்த பார்வையில் ஒரு தோற்றுப்போன தன்மை தெரிந்தது. “நான் உங்களுக்கு மிகுந்த வலியைத் தந்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் உங்கள் நம்பிக்கையை மீறி நடக்கமாட்டேன்.”  என்று ஆங்கிலத்தில் பேசினான், தேவையில்லாமல் வலி, நம்பிக்கை போன்ற வார்த்தைகளை உபயோகித்தான். அவன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்போதெல்லாம் இம்மாதிரி வார்த்தைகளைதான் உபயோகிப்பான்.  பிறகு அவன் வீட்டின் பின்புறமாக வெளியே சென்றுவிட்டான். அன்றிரவு அவன் வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் இரவும், அதற்கு அடுத்த நாள் இரவும் வரவில்லை.

இரண்டு வாரம் கழித்து நோஞ்சானாக பீர் நாற்றத்துடன் வீட்டிற்கு வந்தான்.  எனுகுவில் ஒரு ஹவுசா வியாபாரியிடம் நகைகளை அடகு வைத்து எல்லா பணமும் போய் விட்டது என்று அழுதுகொண்டே சொன்னான்

“என்னுடைய நகைகளுக்கு எவ்வளவு தந்தார்கள்?”  என்று  அம்மா கேட்டாள். அவன்  நகைகளுக்குக் கூடுதல் பணம் வாங்கியிருக்கலாம் என்று அம்மா தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். எனக்கு  அம்மாவை அடிக்க வேண்டும் போல் இருந்தது. அப்பா நனமாபியா நகைகளை எப்படி விற்றான், என்ன செலவு செய்தான் என்று எழுதித் தருமாறு கேட்டார். எனக்கு நனமாபியா உண்மையை எழுதித்தருவான் என்று தோன்றவில்லை. அப்பாவிற்கும்  இது தெரியும். ஆனால் அவருக்கு இந்த மாதிரி தகவல் அறிக்கைகள் பிடிக்கும். அவர் ஒரு பேராசிரியர் அவருக்கு எல்லாம் எழுத்துப்பூர்வமாக வேண்டும். மேலும் நனமாபியாவிற்கு வயது பதினேழு. முகத்தில் சீராக தாடி வைத்திருந்தான். அவன் பல்கலைக்கழகம் நுழைய இருந்த நேரம். அவனை வேறென்னதான் என் அப்பாவால் செய்திருக்க முடியும்? அடித்திருக்கவா முடியும்?

நனமாபியா எழுதி முடித்தவுடன் அதைத் தனது படிப்பறையில் உள்ள இரும்பு அலமாரிக்குள் எங்கள் பள்ளிக்கூட காகிதங்களுடன் பத்திரப் படுத்திக்கொண்டார்.

” இதைப் போல் ஒரு வலியை அம்மாவிற்குக் கொடுத்திருக்க வேண்டாம்” என்று மெல்லிய குரலில் சொன்னார்.

ஆனால் நனமாபியா உண்மையாகவே அவளைக் காயப்படுத்த நினைத்திருந்திருக்க  மாட்டான். வீட்டில் ஏதேனும் மதிப்பான பொருள் இருந்ததென்றால் அது அம்மாவின் நகைகள்தான். வாழ்நாள் முழுதும் கஷ்ட்டப்பட்டு சேர்த்தது. மற்ற பேராசிரியர்களின் மகன்களும் திருடுகிறார்கள். அதனால் நனமாபியாவும் திருடியிருக்கலாம். எங்கள் நஸுக்கா பல்கலைக்கழக வளாகத்தில் இது திருடும் காலம். பையன்கள்  ஸெஸமி ஸ்ட்ரீட் (Sesame Street ) பார்த்தும்,  ஈனிட் ப்ளைடன் (Enid Blyton) படித்தும் வளர்கிறார்கள். அக்கம்பக்கத்து வீடுகளில் ஜன்னல் கதவுடைத்துத் திருடுகிறார்கள். நஸுக்கா வளாகம் ஒன்றும் அவ்வளவு பெரியதல்ல, வீடுகளெல்லாம்  அடுத்தடுத்து நெருக்கமாக இருந்தன.  திருடர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் பேராசிரியர்கள் சந்தித்து கொள்ளும் போது வெளியாட்கள் வளாகத்திற்குள் வந்து திருடுவதாகப் பிரஸ்தாபிப்பார்கள்.

இங்கு திருடும் பையன்கள் மிக பிரசித்தம். சாயங்காலங்களில் பெற்றோர்களின் வண்டியை எடுத்துக்கொண்டு ஸ்டைலாக ஓட்டி வருவார்கள். ஒசிடா, பக்கத்து வீட்டு பையன், நனமாபியா சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் எங்கள் வீட்டில் திருடியவன், கொஞ்சம் அழகாகவும் இருப்பான். அவன் நடை பூனை போல் நளினமாக இருக்கும். எப்போதும் இஸ்திரி போட்ட சட்டையையே அணிவான். அவன் எங்கள் வீட்டைக் கடக்கும் போதெல்லாம் என்னை நோக்கி வருவதாகவும் என்னைக் கவர்ந்து செல்வதாகவும் கற்பனை செய்துகொள்வேன். அவன் என்னைச் சட்டையே செய்ததில்லை. அவன் திருடன் என்று எனது பெற்றோருக்கும் தெரியும் ஆனாலும் அவன் அப்பா பேராசிரியர் எபோபேவிடம் சென்று புகார் கூறியதில்லை. ஒசிடா நனமாபியாவை விட இரண்டு வயது மூத்தவன், பெரும்பாலான திருட்டுப் பயல்கள் நனமாபியாவைவிட மூத்தவர்கள். அதனால்தான் நனமாபியா மற்றவர் வீட்டில் திருடாமல் சொந்த வீட்டில் திருடினான்.

நனமாபியா எனது அம்மாவைப் போல் இருந்தான், தேன் மஞ்சளாக, பெரிய  அழகிய கண்களுடன், செதுக்கிய வாயுடன் லட்சணமாக இருந்தான். அம்மா கடைத்தெருவுக்குப் போகும் போதெல்லாம், கடைக்காரர்கள் “ஏனம்மா உன்னுடைய நிறத்தைப் பையனுக்குக் கொடுத்துவிட்டு, பெண்ணைக்  கருப்பாகப் பெற்றுவிட்டீர்கள்? இந்த அழகை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்யப் போகிறான்?” என்று கேட்கும் போது அம்மாவிற்கு பூரிப்பு தங்காது. நனமாபியாவின் அழகுக்கு அவள்தான் காரணம் என்று நெக்குருகிப் போவாள். நனமாபியா பதினோரு வயதில் பள்ளிக்கூட ஜன்னல் கண்ணாடியை உடைத்தபோது அப்பாவிற்குத் தெரியாமல் மாற்றிக் கொடுத்தாள். பள்ளி நூலகத்தில் அவன் புத்தகம் தொலைத்தபோது எங்கள் வீட்டு வேலைக்காரியின் பையன் திருடிவிட்டதாகப் பொய் சொன்னாள். அவன் பெரியவனானதும் அப்பாவின் கார் சாவியை சோப்பில் அழுத்தி அச்செடுத்ததை அப்பா பார்த்ததும் அவன் சும்மா விளையாட்டிற்குச் செய்தான் என்று சப்பைக் கட்டு கட்டினாள். கேள்வித்தாள்களை அப்பாவின் அலமாரியிலிருந்து எடுத்து அப்பாவின் மாணவர்களுக்கு விற்று அது அப்பாவிற்குத் தெரிய வந்தபோது, அவனுக்குப் பதினாறு வயது ஆகிவிட்டது கைச் செலவிற்கு கூடுதல் பணம் கொடுக்கவேண்டுமென கூச்சல் போட்டாள்.

நனமாபியா அம்மாவின் நகைகளை திருடியதற்காக வருந்தினானா என்று தெரியவில்லை, அவனது சிரித்த முகம் எதையும் வெளிக்காட்டவில்லை. நானும் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவில்லை. அம்மா வாங்கிய ஒரு காதணிக்கும்  வளையல்களுக்கும் நானும் அவனும்தான் போய் தவணை கட்டி வருவோம். அவன் கல்லூரியில் முன்றாம் ஆண்டு படிக்கும்போது பல்கலைக்கழக  காவல் நிலையத்தில் கைதாகியிருக்காவிட்டால் அவனுடைய களவாணித்தனத்தை நினைவில் வைத்திருக்கக் கூடத் தேவையிருந்திருக்காது

அமைதியாக இருந்த எங்கள் நஸுக்கா வளாகத்திற்குள் பொறுக்கிக்குழுக்கள்  நுழைந்தன. பல்கலைக் கழகங்களிலெல்லாம் கொட்டை எழுத்தில் “பொறுக்கிக் குழுக்கள் வேண்டாம் ” (Say No to CULTS).  என்று பெரிய பெரிய சுவரொட்டிகள் தென்பட்ட காலம். இந்த குழுக்களில் ’கருப்புக் கோடரி’, ’கடற் கொள்ளையர்கள்’ ஆகிய குழுக்கள் பிரசித்திபெற்றவை. சிறு நட்பு வட்டங்களாக இருந்தவை இப்போது பரிணாம வளர்ச்சி அடைந்து பொறுக்கிக் குழுக்களாக மாறிவிட்டன. துப்பாக்கிகளும், கோடலிகளும்  மற்ற குழுவைச் சேர்ந்தவனை துன்புறுத்துவதும் சகஜமாகிவிட்டது.  கத்திக்குத்தும் துப்பாக்கிச் சூடும் தினசரி வாடிக்கையாகிவிட்டது. கல்லூரி முடிந்ததும் பெண்கள் விடுதிகளை விட்டு வெளியே வருவதில்லை. கல்லுரி ஆசிரியர்கள் பூச்சி சத்ததிற்குக்கூட அதிர்ந்தார்கள். மக்கள் பயத்தில் ஆழ்ந்தர்கள்.  அதனால் போலீஸை  வளாகத்திற்குள் அழைத்தார்கள். போலிஸ்காரர்கள்  அவர்களுடைய துருப்பிடித்த துப்பாக்கியுடன் ரோந்து சுற்றினார்கள். நனமாபியா  ஒரு நாள் கல்லூரி முடிந்து சிரித்துக்கொண்டே வந்தான். அவனைப் பொருத்தவரை போலிஸ்காரர்கள் கையாலாகாதவர்கள். இனக்குழுக்களிடையே நவீனரகத் துப்பாக்கி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

என் பெற்றோர்கள் நனமாபியாவின் சிரிப்பைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அவன் ஏதாவதொரு பொறுக்கிக்குழுவுடன் சம்பந்தப்பட்டிருக்கிறானா என்ற கவலை இருந்தது. சிறுகுழுப் பயல்கள் பிரபலமானவர்கள். நனமாபியா மிகவும் பிரபலமானவன். அவனுடைய நண்பர்கள் அவனை “கெட்டவன்” என்ற பட்டப்பெயரிலேயே அழைத்தார்கள். கல்லூரி அழகிகள் அவனிடம் வழிந்தார்கள். எல்லா விருந்து கேளிக்கைகளிலும் அவன் கலந்து கொண்டான். எல்லா பொறுக்கிக்குழுப் பையன்களிடமும் நட்புடன் பழகியது போல்தான் தெரிந்தது. நான் அவனிடம் ஏதாவது குழுவுடன் சம்மந்தப் பட்டிருக்கிறானா என்று கேட்டபோது அவன் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டது போல் என்னை முறைத்துப்பார்த்து  “கண்டிப்பாக இல்லை” என்றான். நான் அவனை நம்பினேன். அவன் ஒரு  பொறுக்கிக்குழுவுடன் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது ஆகும்வரை என் அப்பாவும் அவனை நம்பினார். அவனைப்பற்றி எங்களுடய நம்பிக்கை பொய்த்தது. அவனை முதன் முறையாகக் காவல் நிலையத்தில் சிறையில் சந்தித்தபோது நான் கேட்ட அந்தக் கேள்விக்கு “கண்டிப்பாக இல்லை” என்றான்.

அது இப்படிதான் நடந்தது. ஒரு வெக்கையான திங்கள்கிழமை மதியம், நான்கு பொறுக்கிக்குழு உறுப்பினர்கள்  எங்கள் கல்லூரி வாசலில் ஒரு பேராசிரியரைத் துப்பாக்கியால் மிரட்டி, அவருடைய சிகப்பு மெர்சிடிஸ் காரை எடுத்துக்கொண்டு பொறியியல் பகுதிக்குச் சென்று, அங்கு உலாத்திகொண்டிருந்த மூன்று மாணவர்களைச் சுட்டார்கள். நான் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள வகுப்பறையில் இருந்தேன். வெடிச்சத்தம் கேட்டதும் முதலில் வெளியே ஓடியது எஙகள் விரிவுரையாளார். மாணவர்களும் ஆசிரியர்களும் மூட்டையிலிருந்து சிதறிய கோலிகுண்டுகள் போல் ஓடினர். கீழே வராண்டாவில் மூன்று உயிரற்ற சடலங்கள் கிடந்தன. கல்லூரி முதல்வர் மாலை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தார். 9 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாதென்று ஊரடங்கு சட்டம் போடப்பட்டது. எனக்கு இது பைத்தியக்காரத்தனமாய்ப் பட்டது. பட்டப்பகலில் நடந்த சம்பவம் இது. நனமாபியாவிற்கும் இது பைத்தியகாரத்தனமாய் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவன் அன்றிரவு வீட்டிற்கு வரவில்லை. அவன் நண்பன் வீட்டில் தங்கியிருப்பான் என்று நினைத்துக் கொண்டேன். பொதுவாக அவன் எல்லா நாட்களிலும் வீட்டிற்கு வருவதில்லை.

மறுநாள் காலை கல்லூரியின் காவலாளி நனமாபியாவையும் மற்றும் நான்கு பேரையும்  இரவு உணவு விடுதியியிலிருந்து போலிஸ்காரர்கள் கைது செய்ததாய் சொன்னார். என் அம்மா “அப்படிச் சொல்லாதே” என்று கத்தினாள். அப்பா அமைதியாக நன்றி கூறிவிட்டு எங்களை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றார். அங்கு பேனா மூடியை மென்றுக் கொண்டு ஒரு கான்ஸ்டபிள் “நேற்றிரவு கைது செய்யப்பட்ட பசங்களைக் குறித்தா கேட்கிறீர்கள்? கேஸ் மிகவும் வலுவாக இருக்கிறது. அவர்களை நேற்றே எனுகு அனுப்பியாச்சு.”  என்றார்.

நாங்கள் காரில் வரும்போது ஒருவித புது பயம் எங்களை ஆக்ரமித்தது. நஸீக்காவில் என்றால் நிலைமையை சமாளிக்கலாம். அப்பாவிற்கு சூப்பரண்டெண்ட்டைத் தெரியும். ஆனால் எனுகு ஒரு விநோதமான இடம். ஒரு மாநிலத்தின் தலைநகரம். அங்கு போலிஸ்காரர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள் குற்றவாளிகளைக் கொல்லக் கூடத் தயங்க மாட்டார்கள்.

எனுகு காவல் நிலையத்தைச் சுற்றிக் கருங்கல் சுவர் கட்டி உள்ளே நிறைய கட்டடங்கள் இருந்தன. நுழைவாயிலின் ஓரத்தில் நிறைய துருப்பிடித்த கார்கள் தூசிபடிந்திருந்தன. அதற்கு அருகில் இருந்த கட்டடத்தில் காவல்துறை ஆணையர் என்ற பலகை இருந்தது. அப்பா வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அங்கிருந்த இரண்டு கான்ஸ்டபிள்களுக்கு லஞ்சமாக அம்மா கொஞ்சம் பணமும் தக்காளி சாதமும் கறியும் உள்ள பாக்கட்டைத் தந்தாள். அவர்கள் நனமாபியாவை வெளியே மரத்திற்குக் கீழே போடப்பட்டிருந்த பெஞ்சில்  பார்க்க அனுமதித்தார்கள். ஏன் ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தபோது அந்த இரவு வெளியே தங்கினான் என்று யாரும் அவனைக் கேட்கவில்லை. போலிஸ் செய்தது அராஜகம் என்று சொல்லவில்லை. அவன் பேசுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தோம். அவன் அம்மா கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டபடியே பேச ஆரம்பித்தான்.

“இந்த சிறையைப் போல நைஜீரியாவும் இருந்தால் ஒரு பிரச்சினையும் வராது. இங்கே எல்லாம் ரொம்ப ஒழுங்கு. எங்கள் அறையில் ஒரு தலைவர், பெயர்  ஜெனரல் அபாச்சா, அந்த அறையில் இருக்க வேண்டுமென்றால் அவனுக்குக் காசு கொடுக்க வேண்டும், இல்லையென்றால் பிரச்சினைதான்”

“உன்னிடம் பணம் இருந்ததா?” அம்மா கேட்டாள்

நனமாபியா சிரித்தான். அவன் நெற்றியில் பருவை போலிருந்த கொசுக்கடி அவன் முகத்தை இன்னும் அழகாக்கியது. போலிஸ்காரர்கள் உணவகத்தில் தன்னைக் கைது செய்தபோது அவர்கள் பணத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று தனக்கு தெரியும் என்றும், அதனால் பணத்தைச் சுருட்டி ஆசன வாயில் வைத்துக் கொண்டதாகவும் ஈபோவில் சொன்னான்.

“ஜெனரல் அபாச்சாவுக்கு நான் பணத்தை மறைத்து வைத்த சாமர்த்தியம் பிடித்திருந்தது. புது சிறைவாசிகளை அரைமணி நேரம் தோப்புகரணம் போடச் சொனான். என்னைப் பத்து நிமிடத்தில் விட்டுவிட்டான்”

அம்மா கண்களைத் துடைத்துக் கொண்டாள், அப்பா ஒன்றும் பேசவில்லை அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவன் சில 100 நயரா நோட்டுக்களை சிகரெட்டை போல் மடித்து சொருகிக்கொள்வதாக நினைத்துப் பார்த்தேன். என் உடம்பு சிலிர்த்தது.

நஸுக்காவிற்குக் காரில் திரும்பும்போது அப்பா பேசினார் “அவன் போன முறை திருடினபோதே நான் அவனை ஜெயிலுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.”  என்றார்.

“ஏன்?“ என்றேன்.

“அவன் கொஞ்சம் ஆடிப்போயிருக்கிறான். உனக்கு தெரியவில்லையா?”

எனக்குத் தெரியவில்லை. அவன் எப்போதும் போல் இருப்பதாகவே எனக்குப் பட்டது.

—-ooOOoo—-

iyobaகருப்புக்கோடாரி ஒருவன் அழுததைப் பார்த்ததுதான் நனமாபியாவின் முதல் அதிர்ச்சி. அவன் உயரமாக வாட்டசாட்டமாக இருப்பான். நடந்த கொலைகளில் அவனும் ஈடுபட்டிருக்கலாம் என்று ஒரு பேச்சுண்டு. அவனை போலிஸ் அதிகாரி அடித்த அடியில் தேம்பித் தேம்பி அழுததாக மறுநாள் அவனைப் பார்க்கப் போனபோது ஒருவித விரக்தியோடு  நனமாபியா சொன்னான். ஓரிரு நாட்களுக்குப் பிறகு அவன் இரண்டாவது அதிர்ச்சியைச் சந்தித்தான். அவனுடைய சிறைக்குப் பக்கத்து சிறையின் எண் ஒன்று. அந்த அறையிலிருந்து இரண்டு போலிஸ்காரர்கள் ஓர் ஊதிப்போன உடலை எடுத்துக்கொண்டு போகும்போது இவர்களுக்கும் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அவன் அறையின் தலைவனுக்கே சிறை எண் – 1 என்றால் பயம். நனமாபியாவிற்கு சிறை எண்-1 கனவில் வந்தால்கூட தூக்கி வாரிப் போடுகிறது. அவனது அறையில் கூட்டம் அதிகம். சில நாட்கள் இடப்பற்றாக்குறையால் நின்று கொண்டே தூங்கியதாகச் சொல்லுவான். குளிக்க ஒரு பெரிய பெயிண்ட் வாளியில் மஞ்சள்நிறத் தண்ணீருக்கு ஏகப்பட்ட விலை கொடுத்து வாங்க வெண்டும் என்றும், அவன் இருந்த அறையில் எறும்பும், எலியும் அதிகமென்பான். நனமாபியா முகத்திலும் கைகால்களிலும் கொசுக்கடியாலும், பூச்சிக்கடியாலும் சீழ்க்கட்டிகளும் கொப்புளங்களும் வந்தன. அவன் சிறையில் படும்  வேதனையை அனுபவித்துச் சொல்ல ஆரம்பித்தான். நான் அவன் இப்படிப் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன். அவனுக்கு நாங்கள் கொண்டுவரும் சாப்பாட்டை சாப்பிட அனுமதித்தது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று அவனுக்கு தெரியவில்லை. மேலும் அவன்  எவ்வளவு முட்டாள்தனமாய் அந்த இரவு வெளியே இருந்திருக்கிறான்! அதனால் அவனது விடுதலை எவ்வளவு நிலையற்றதாய் இருக்கிறது இப்போது!

—ooOOoo—

“கஷ்டம்” என்றார் நஸூக்கா சூப்பரண்டண்ட். அதுவும் எனுகு போலிஸ் கமிஷனரிடமிருந்து, இப்போதைய சூழ்நிலையில் விடுதலை பெறுவது மிகவும் கடினம் என்றார். கமிஷனர் குழுப்போராளிகளின் கைது பற்றி டி.வியில் பரபரப்பு பேட்டி கொடுத்தது பற்றிச் சொன்னார். பொறுக்கிக்குழுப் பிரச்சனையை மிகவும் தீவிரமாக கண்காணிப்பதாகவும், அபுஜாவிலுள்ள அரசியல் பெரும்புள்ளிகள்  இதை கவனித்துக்கொண்டிருப்பதாகவும் எல்லோரும் ஏதாவது செய்வது போல் காட்டிக்கொள்வதாகவும் கூறினார்.

இரண்டாவது வாரம் இரண்டாவது நாள், நனமாபியாவைப் பார்க்கப் போக வேண்டாம் என்று சொன்னேன். இப்படி எத்தனை நாள் போவது? பெட்ரோல் செலவு வேறு ஏகத்துக்கு போய் கொண்டிருந்தது. மேலும் எனுகு போய் வர ஆறு மணி நேரமாகிறது. ஒரு நாள் போகவில்லையென்றால் அவனுக்கு ஒன்றும் ஆகிவிடாது.

என் தந்தை என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்”  நீ என்ன சொல்ல வருகிறாய்?” என்று கேட்டார். அம்மா என்னை முறைத்தாள்.  “நீ அவனைப் பார்க்க வரவில்லை என்றால் ஒரு குடியும் முழுகிவிடாது” என்று கூறிவிட்டு வாசலுக்குச் சென்றாள். நான் வாசலில் கிடந்த இரண்டு கற்களை காரின் மேல் எறிந்தேன். கல் பட்டு கார் கண்ணாடி விரிசல் விழுந்தது. அம்மா என்னை அடிக்க வந்தாள். நான் என் அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டேன். அம்மா அப்பா கோபமாக கத்தினார்கள். சிறிது நேரம் கழித்து சத்தம் அடங்கியது. கார் கிளம்பும் சத்தம் கேட்கவில்லை. அன்று யாரும் நனமாபியாவைப் பார்க்க போகவில்லை. என்னுடைய இந்த சின்ன வெற்றி என்னை ஆச்சரியப்படுத்தியது.

மறுநாள் நாங்கள் அவனைச் சென்று பார்த்தோம். கார் கண்ணாடி விரிசல் பற்றி அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. அங்கிருந்த ஒரு கருப்பான போலிஸ்காரன் நாங்கள் ஏன் நேற்று வரவில்லை என விசாரித்தான். அம்மாவின் சாப்பாட்டை இழந்த வருத்தம் அவனுக்கு. நான் நனமாபியாவும் கேட்பான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவன் சோகமாக உட்கார்ந்திருந்தான். அவனை இதுபோல் பார்த்ததில்லை. அன்று அவன் சரியாக சாப்பிடவில்லை. வாசலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எரிந்து போன கார்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சு?” என்று அம்மா கேட்டாள், இதற்காகவே  காத்துக் கொண்டிருந்தவனைப்போல் ஆரம்பித்தான். அவன் குரல் உடைந்திருந்தது.

“ஒரு கிழவரை நேற்று என் அறையில் அடைத்திருக்கிறார்கள். அவருக்கு வயது 75க்கு மேல் இருக்கும்” என்றான். அவர்  தலைமயிரெல்லாம் நரைத்திருக்கிறது, தோலில் சுருக்கம் விழுந்திருக்கிறது. அவர் ஒரு பழங்காலத்து ஆசாமி நேர்மையான அரசு ஊழியர். அவரது மகனைக் ஆயுதம் தாங்கிய கொள்ளை, மற்றும் கொலை குற்றத்திற்காகத் தேடுவதாகவும், அவன் கிடைக்கவில்லையாதலால் இவரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள்” என்று கூறினான்.

“அந்த கிழவர் ஒரு குற்றமும் அறியாதவர்” என்றான் நனமாபியா.

“நீயும் கூடத்தான்” என்றாள் அம்மா.

நனமாபியா தலையாட்டினான், அவளுக்குத் தான் சொல்வது புரியவில்லையென்று. பிறகு வந்த நாட்களில் மிகவும் வருத்ததிலிருந்தான். இப்போதெல்லாம் மிகவும் குறைவாகவே பேசுகிறான். அப்படியே பேசினாலும் அந்தக் கிழவரைப் பற்றிதான்.

“அவரிடம் ஒரு கோபோ கூட இல்லை, குளிக்க ஒரு வாளி தண்ணீர் கூட வாங்க முடியாத நிலையிலிருக்கிறார்” என்றும் மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி எப்படி சிறுத்திருக்கிறார் என்றும் விவரித்தான்.

“அவருடைய பையனைப் பற்றி அவருக்குத் தெரியுமா?” அம்மா கேட்டாள்

“நான்கு மாதமாச்சாம் அவர் பையனை பார்த்து” என்றான் நனமாபியா. பையனுக்கு பதில் அவனது தந்தையை அடைத்து வைப்பது சரியல்ல என்பது போல் ஏதோ சொன்னார் அப்பா.

“கண்டிப்பாக இது தப்பு” என்றாள் அம்மா. போலிஸ்காரர்கள் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லையென்றால் அவரது உறவினர்களைச் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக அங்கலாய்த்தாள்.

“அந்த மனிதருக்கு உடம்பு சரியில்லை, தூங்கும் போது கூட கை கால்கள் நடுங்குகின்றன” என்றான் நனமாபியா.

என் பெற்றோர்கள் அமைதியாக இருந்தார்கள். நனமாபியா சாப்பாட்டுத் தூக்கை மூடி அப்பாவிடம் கொடுத்தான். “இந்த சாப்பாட்டை அந்தக் கிழவருக்குக் கொடுக்க ஆசைப்படுகிறேன், ஆனால் ஜெனரல் அபாச்சா எல்லாவற்றையும் தின்றுவிடுவான்”.

அப்பா அருகிலிருந்த போலிஸ்காரனிடம் சென்றார். அந்தக் கிழவரை சில நிமிடங்கள் பார்க்க அனுமதிக்க முடியுமா என்று கேட்டார். அம்மாவிடம் கைநீட்டி காசு வாங்கும் அந்த போலிஸ்காரன் ஒரு முறை கூட நன்றி சொன்னதில்லை. அப்பாவை வேண்டா வெறுப்பாக நிமிர்ந்து பார்த்தான். “இது என்ன சத்திரம்னு நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் பையனைப் பார்க்க அனுமதித்தற்கே என் வேலை போய்விடும், இங்கே நிற்காதீர்கள் போங்கள்” என்றான் காட்டமாக. அப்பா திரும்பவும் வந்து உட்கார்ந்தார். நனமாபியா சோகமாக தலை குனிந்து கொண்டான்.

அடுத்த நாள் நாங்கள் கொண்டு சென்ற சாப்பாட்டை அவன் தொடவில்லை.

“அந்த கிழவர் மீது தண்ணீர்ப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. நேற்று அவர் போலிஸ்காரர்களிடம் ஒரு வாளி தண்ணீர் கேட்டார். அதற்கு அவரை நிர்வாணமாக்கித் துன்புறுத்தினார்கள்” அவன் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. எனக்கு அவன் மேல் விவரிக்க முடியாத பரிவு வந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் இன்னொரு முறை கலவரம் நடந்தது. கல்லூரி இசைப்பிரிவில் ஒரு பையனை கோடாலியால் வெட்டியிருக்கிறார்கள்.

“இதுவும் நல்லதுக்குதான்” என்றாள் அம்மா. அவர்கள் நஸுக்கா போலிஸ் சூப்பரண்டண்டைப் பார்க்கக் கிளம்பிக்கொண்டிருக்கும் போது.. என் பெற்றோர்கள் அன்று முழுவதும் சூப்பிரண்டண்டுடன் செலவழித்தனர். அன்று நாங்கள் எனுகு போக முடியவில்லை முடிவில் நனமாபியாவை உடனே விடுதலை செய்ய உள்ளனர் என்ற நல்ல செய்தியுடன் வந்தனர். கலவரத்தில் பிடிபட்டவன் நனமாபியா தங்கள் குழுவைச் சார்ந்தவன் இல்லை என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

மறுநாள் நாங்கள் எப்போதும் கிளம்புவதை விட கொஞ்சம் முன்னதாகவே கிளம்பினோம். அம்மா அன்று சாப்பாடு எடுத்துக் கொள்ளவில்லை. வெய்யில் சுள்ளென்று அடித்தது.

காவல் நிலையத்தினுள் நாங்கள் நுழையும் போது போலிஸ்காரர்கள் யாரையோ அடித்துக் கொண்டிருந்தார்கள். அவனை எனக்குத் தெரியும், அவன் பெயர் அபோனி. ஒவ்வொரு அடிக்கும் அவன் அலறிக்கொண்டிருந்தான். அவன் எங்கள் கல்லூரி தாதா. கருப்புக்கோடாலியின் முக்கிய உறுப்பினன். நாங்கள் அவனைக் கடந்து செல்லும்போது அவன் எங்களைப் பார்த்து விடக்கூடாதென்று கடவுளைப் பிராத்தித்துக்கொண்டேன்.

நாங்கள் காவல் நிலையத்திற்குள் சென்றோம். அங்கிருந்த போலிஸ்காரர் லஞ்சம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு “கடவுள் ஆசிர்வதிப்பார்” என்று வாழ்த்துபவர். எங்களைப் பார்த்தவுடன் வேறெங்கோ பார்த்தார். எனக்கு இதில் எங்கோ தவறு நேர்ந்திருப்பதாகப்பட்டது. என் தந்தை சூப்பரண்டண்டிடமிருந்து வாங்கி வந்த விடுதலை உத்தரவை அந்த போலிஸ்காரரிடம் தந்தார்.

”விடுதலை உத்தரவைப் பற்றி ஏற்கனவே எங்களுக்குத் தெரியும் . உங்கள் பையனை விடுதலை செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன” என்று சொன்னார்.

“என் பையனுக்கு என்ன ஆச்சு?” என்று அந்த போலிஸ்கரரின் சட்டையைப் பிடிக்கப் போனாள் அம்மா. அப்பா அவளை விலக்கி விட்டு “என் பையன் எங்கே, அவனுக்கு என்ன ஆச்சு?” என்று கொஞ்சம் குரலை உயர்த்தி தீர்க்கமாகக் கேட்டார்.
.
“அவனைக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள்”  என்றார் போலிஸ்காரர். அதற்குள் மேலதிகாரி உள்ளிருந்து வந்தார். எல்லோரும் அவர் என்ன சொல்லப்போகிறார் என்று காத்துக்கொண்டிருந்தோம். அவனைப் போலிஸ்காரர்கள் சுட்டு கொன்றிருப்பார்கள் என்று கூட நான் நினைத்தேன்.

“அவனை வேறு இடத்திற்கு மாற்றி விட்டோம்” என்றார் அவர்.

“வேறு இடத்திற்கு ஏன் மாற்றினீர்கள்?” என்று கேட்டார் அப்பா

“நேற்று அவன் ரொம்ப முரண்டு பிடித்தான். அதனால் அவனை சிறை எண் ஒன்றில் அடைத்தோம். பிறகு அவனை இடமாற்றம் செய்து விட்டோம்”

“முரண்டு பிடித்தானா?”

“என்னை இப்பொழுதே அவனிடம் கூட்டிச்செல்லுங்கள்.” என்று அம்மா அழ ஆரம்பித்தாள்.

“ஜீப்பில் பெட்ரோல் இல்லை. உங்கள் காரிலேயே போய் விடலாம் வாருங்கள்”

அப்பா காரை ஓட்டினார். நாங்கள் வழி நெடுகிலும் எதுவும் பேசவில்லை அந்த போலிஸ்காரர் வழிசொல்வதைத் தவிர. அப்பா எப்போதையும் விட வேகமாக வண்டியை ஓட்டினார். எனக்கு பயத்தில் இதயம் அடித்துக்கொண்டது. 15 நிமிடப் பயணத்திற்குப் பிறகு ஒரு பாழடைந்த கட்டடத்திற்குள் சென்றோம். அங்கு ஒரே குப்பையும் கூளமுமாக இருந்தது. காவல் நிலையத்திற்கான எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை. நாங்கள் வெளியே நின்றுகொண்டோம். போலிஸ்காரர் உள்ளே சென்று நனமாபியாவை அழைத்து வந்தார். அம்மா ஓடிச்சென்று அவனை கட்டிக்கொண்டாள். அவன் கை, கால்களில் சிராய்புக்கள் தெரிந்தன, முகத்தில் கண்ணுக்கு கீழ் ரத்தக் கட்டி கருத்திருந்தது. உதட்டோரத்தில் காய்ந்துபோன ரத்தம்.

”எதற்காக உன்னை அடித்தார்கள்?  என் மகனை ஏன் இப்படி அடித்து கொடுமை படுத்தியிருக்கிறீர்கள்?” அம்மா போலீஸிடம் சீறினாள்.

“நீங்கள் அவனை சரியாக வளர்க்கவில்லை, அவன் செய்த விஷயத்துக்கு அவனை உயிரோடு பார்ப்பதே பெரிய விஷயம். கூட்டிக்கொண்டு போங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

“சரி வாங்க போகலாம்” என்று அப்பா முன்னே நடந்தார். நாங்கள் நஸூக்கா வரும் வரை ஏதும் பேசவில்லை. வீட்டிற்கு வந்தவுடந்தான் நனமாபியா பேசினான்.

“நேற்று அந்தக் கிழவரிடம் குளிக்க தண்ணீர் வேண்டுமா என்று போலிஸ்காரர்கள் கேட்டார்கள். அவர் வேண்டும் என்றார். அவர் நிர்வாணமாக கூடத்தில் நடந்தால் தருவதாகச் சொன்னார்கள். சிறைவாசிகளும் போலிஸ்காரர்களுடன் சேர்ந்துக் கொண்டு சிரித்து கேலி பேசினார்கள்” நானமாபியா நிறுத்தினான். பிறகு சுவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டு ஆரம்பித்தான்.

”நான் அந்த கிழவர் அப்பாவி, ஒன்றுமறியாதவர். அவரது மகன் செய்த குற்றத்திற்காக அவரை இப்படி கொடுமை படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று கத்தினேன். நான் வாயை மூடாவிட்டால் என்னை ஒன்றாம் எண் சிறையில் அடைத்துவிடுவோம் என்றார்கள். ஆனால் நான் பயப்படவில்லை. நான் என் தரப்பு நியாயத்தை கூறிக்கொண்டிருந்தேன். என்னை அடித்து இழுத்துக் கொண்டு ஒன்றாம் எண் சிறையில் அடைத்து விட்டார்கள்”

நனமாபியா அங்கு நிறுத்தினான்.

நாங்கள் மேற்கொண்டு ஏதும் கேட்கவில்லை. அவன் போலிஸ்காரர்களிடம் “முதுகெலும்பற்ற கோழைகளே, வடிகட்டின முட்டாள்களே”  என்று கத்துவதாக நான் கற்பனை செய்து பார்த்தேன். ஒரு கல்லூரி மாணவன் கத்தியதைப் பார்த்து போலிஸ்காரர்கள் எப்படி ஆச்சரியத்தில் உறைந்திருப்பார்கள்! சிறைவாசிகள் எப்படி ஆச்சரியப்பட்டிருப்பார்கள், அந்த கிழவரும் தன்மானத்துடன் தன் துணிகளைக் கழற்ற முடியாது என்று கூறியிருப்பார் என்றெல்லாம் நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

ஒன்றாம் எண் சிறையில் என்ன நடந்தது, அவனை கூட்டிக்கொண்டு சென்ற இடத்தில் என்ன நடந்தது என்று நானமாபியா சொல்லவில்லை. போலிஸ்காரர்கள் கூட்டிச்சென்ற பாழடைந்த கட்டடத்திலிருந்து மக்கள் காணாமல் போய்விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரிந்தே இருக்கும். அவன் இந்த சம்பவத்தை ஒரு பெரிய கதையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் என் அழகிய தம்பி அப்படிச் செய்யவில்லை.