போரும், புகைப்படமும்

Emilio Morenattiசமீபத்தில் என்னை ஒரு நிமிடம் சலனப்படுத்திய புகைப்படம் இது. ஆஃப்கானிஸ்தானில் நடக்கும் போரைப் புகைப்படமெடுப்பதற்காகச் சென்ற Emilio Morenatti என்ற 40 வயது புகைப்படக் கலைஞர், அங்கு நடந்த குண்டுவீச்சில் அடிபட்டுத் தன்னுடைய ஒரு காலைப் பறிகொடுத்துவிட்டார். அப்படியும் மருத்துவமனையிலிருந்து ஸ்ட்ரெட்சரில் வைத்து வெளியே கொண்டு வரும்போதே எதையோ புகைப்படமெடுத்துக் கொண்டே வெளிவருகிறார். அவர் ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர் என்பதை அவரெடுத்திருக்கும் புகைப்படங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒரு புகைப்படக் கலைஞர் இளம்வயதில் தன் காலைப் பறிகொடுப்பது மிகவும் துயரமளிக்கும் விஷயம். ஆனாலும் அவருக்குள்ளிருக்கும் அந்தப் புகைப்படக் கலைஞன் ஊனமடையவில்லை.

போர்முனை, கலவரப்பகுதிகள் இங்கெல்லாம் சென்று புகைப்படமெடுக்கும் கலைஞர்களுக்கு, போர்வீரர்களுக்கு இணையாகத் துணிச்சலும், தீவிர சாகச மனப்பான்மையும் இருக்க வேண்டும். சில சமயங்களில் முட்டாள்தனத்தின் எல்லையையே தொட்டுவிடக்கூடியதாகத் தோன்றும் சாகச மனப்பான்மையும், எழுச்சியும் மட்டுமே இந்தப் புகைப்படக்கலைஞர்களை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. அந்த எழுச்சிதான் காலிழந்த பின்னும் கையில் கேமராவோடு புகைப்படமெடுத்தபடி வெளிவர வைக்கிறது.

புகைப்படக்கலைக்குத் தீவிரமானதொரு முகத்தைத் தருபவை போர்ப்புகைப்படங்கள். போர் என்ற பெரும்வன்முறையின் பல கொடூர முகங்களை வெளியுலகுக்குக் கொண்டுவருவதில் பேருதவியாக இருப்பவை போர்முனைப் புகைப்படங்கள். வியட்நாம் போரின்போது அழுது கொண்டே நிர்வாணமாக வெளியே ஓடிவரும் சிறுமியின் புகைப்படம், ஆன் ஃப்ராங்க் இரண்டாம் உலகப்போரின்போது பதுங்கு குழியில் ஒளிந்தபடி எழுதிய நாட்குறிப்புகளுக்கிணையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற அமெரிக்க வீரர்கள் தேசியக்கொடியை நிலைநாட்டும் புகைப்படம் இன்றும் அமெரிக்காவின் பெருமிதத்துக்குரிய சந்தர்ப்பங்களில் பல இடங்களில் காணக்கிடைக்கிறது. ரஷ்ய ராணுவத்தோடு போராடும் செசன்யப் போராளிகளின் புகைப்படம், இஸ்ரேல் ராணுவத்தோடு போராடும் பாலஸ்தீனியப் போராளிகளின் புகைப்படம், ருவாண்டாவின் பேரழிவுப் பதிவுகள் போன்ற ஜேம்ஸ் நாக்ட்வேயின் புகைப்படங்கள் அவரை ஒரு வழிபாட்டு நாயகராகவே மாற்றியிருக்கின்றன.

ஆனாலும் இவற்றையெல்லாம் தாண்டிய வெகு பிரபலமான, சர்ச்சைக்குரிய போர்ப்புகைப்படம் ஒன்று இருக்கிறது. குண்டடிபட்டு ஒரு ராணுவவீரர் தரையில் சரியத் தொடங்கும் புகைப்படம்தான் அது. அந்த வீரரின் வாழ்நாளில் எஞ்சியிருந்த கடைசி நொடியைப் படம் பிடித்த பதிவு அது.

சரிந்துவிழும் போர்வீரர் - ராபர்ட் கேபா
சரிந்துவிழும் போர்வீரர் - ராபர்ட் கேபா

இப்புகைப்படத்தை எடுத்ததன் மூலம் பிராபல்யத்தின் உச்சிக்குச் சென்றவர் ராபர்ட் கேபா (Robert Capa) என்ற புகைப்படக் கலைஞர். 1936-ஆம் ஆண்டு ஸ்பெயினில் ‘Civil War’ நடந்துகொண்டிருந்தபோது இப்புகைப்படம் எடுக்கப்பட்டது. மன்னராட்சியைக் கைப்பற்றி இடதுசாரிகள் ஆட்சி அமைத்திருந்த குடியரசு ஆட்சியை எதிர்த்து தேசியவாதிகள் நடத்திய போரே இந்த ஸ்பெயின் போராகும். 1936-இலிருந்து 1939 வரை நடைபெற்ற இப்போரில் ரஷ்யா, மெக்ஸிகோ ஆகிய இரண்டு நாடுகளும் இடதுசாரி அரசாங்கத்துக்கு ஆதரவாகவும், ஃபாசிஸ இத்தாலி, நாஸி ஜெர்மனி இரண்டும் ஸ்பெயின் தேசியவாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டன.

ஜார்ஜ் ஆர்வெல், எர்னஸ்ட் ஹெம்மிங்வே போன்ற எழுத்தாளர்கள் இப்போரை நேரடியாகக் கண்டு செய்தி அறிக்கைகள் எழுதினர். தேர்ந்த படைப்பாளிகளின் கட்டுரைகளும், புகைப்படங்களும் தெளிவான கருத்துச்சார்பை ஏற்படுத்திய இப்போரே ‘உலகின் முதல் ஊடகப்போர்’ என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவின் ஜாம்பவான்கள் தங்கள் கூட்டணியின் பலத்தைப் பரிசோதித்துக் கொள்ள உதவியாக இருந்த இப்போர், இரண்டாம் உலகப்போருக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது. அச்சமயத்தில் ராபர்ட் கேபா எடுத்த இப்புகைப்படம், ‘Vu’ என்ற ஃப்ரெஞ்சுப் பத்திரிகையில் வெளியானது. புகைப்படத்திலிருந்த குண்டடிபட்ட வீரர் அரசாங்கத்தின் ராணுவவீரர். ஸ்பெயின் அரசின் ஆதரவுப் பத்திரிகையான ‘Vu’-விலும், அதற்குப் பின் ‘Life’ பத்திரிகையிலும் உணர்ச்சிகரமான குறிப்புகளோடு அப்புகைப்படம் பிரசுரமானது.

உடனடியாக உலகின் பல செய்தியாளர்கள், புகைப்படக்கலைஞர்களின் கவனத்தைக் கவர்ந்த இப்புகைப்படம், பல பத்திரிகைகளிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டது. கலைநேர்த்தியைக் குறித்துத் தனித்துவமாகச் சிறப்பித்துக் கூறும்படி இப்புகைப்படத்தில் எதுவும் இல்லாவிட்டாலும், இப்புகைப்படம் பதிவு செய்த ‘தருணம்’ (moment) அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. போர்ப்புகைப்படங்கள் என்றாலே ராணுவ வீரர்களின் அணிவகுப்பு, பீரங்கிகளின் முன்னேற்றம், அல்லது போருக்குப் பிந்தைய குண்டுகள் துளைத்த கட்டடங்கள், பிணக்குவியல், துயரம் போன்றவைதான் காட்சிப்படுத்தப்படும். ஆனால் முதன்முறையாக ஒரு போர்வீரர் குண்டடிபட்டுக் கீழே சரியும் தெளிவான போர்க்காட்சி புகைப்படமாக்கப்பட்டிருந்தது.

ராபர்ட் கேபா
ராபர்ட் கேபா

ஏற்கனவே சில ஆண்டுகளாக செய்நேர்த்தியுடன் கூடிய சிறப்பான புகைப்படங்களை எடுத்து வந்திருந்தாலும் உலகெங்கிலும் கேபாவை வெகுபிரபலமாக்கியது ‘சரிந்துவிழும் போர்வீரன்’ (Falling Soldier) என்று இன்றும் உலகெங்கிலும் பிரபலமாக அறியப்படும் இப்புகைப்படம். தன்னுடைய காதலி Gerda Taro, இன்னொரு புகைப்படக்கார நண்பரான David Seymour ஆகியோரோடு ஸ்பெயினில் சுற்றியலைந்து 1936-ஆம் ஆண்டு முதல் 1939-வரை இப்போரைப் படம்பிடித்தார் கேபா. Gerda Taro-வுக்கும் புகைப்படக்கலையின் நுட்பங்களைப் பயிற்றுவித்து அவரையும் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞராக்கினார் கேபா. புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோது குண்டுவீச்சுக்குப் பலியாகி இதே போரில் 1937-ஆம் ஆண்டு உயிரிழந்தார் டாரோ.

‘சரிந்துவிழும் போர்வீரன்’ புகைப்படத்தின் பிராபல்யம் ராபர்ட் கேபாவுக்கு அடுத்தடுத்து சிறந்த வாய்ப்புகளையும், தொடர்புகளையும் ஏற்படுத்தித் தந்தது. இரண்டாம் உலகப்போர், வியட்நாம் போர் ஆகியவற்றையும் புகைப்படங்களில் பதிவு செய்தார். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜான் ஸ்டெய்ன்பெக்கின் நெருங்கிய நண்பரானார் கேபா. இருவரும் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டு ‘A Russian Journal’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்கள். உலகின் சிறந்த புகைப்படக்கலைஞரான Henri Cartier-Bresson உடன் இணைந்து ‘Magnum Photos’ என்ற புகைப்பட நிறுவனத்தை 1947-இல் அமைத்தார் கேபா. இன்றும் மிகவும் பிரபலமாக விளங்கும் இந்நிறுவனம் பல இளம் புகைப்படக்கலைஞர்களின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருகிறது.

பொதுவாகவே வண்ணமயமான வாழ்வியல்பைக் கொண்டிருந்த கேபா, பெரும் குடிகாரராகவும், வாழ்க்கையைத் தன்போக்கில் அனுபவிப்பராகவும், காலக்கெடு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது போன்றவற்றில் அக்கறையற்றவராகவும் இருந்தார். பல நண்பிகளும் கிடைத்தார்கள். 1940-களின் கனவுக்கன்னியான ‘Ingrid Bergman’ கூட கேபாவின் நண்பியாக இருந்தார்.

தொடர்ந்து யுத்தகளத்தில் நின்றுகொண்டிருந்த கேபாவின் முடிவு வேறெப்படியும் இருந்திருக்க முடியாது என்னும் வகையில் வியட்நாம் போரைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது கன்னிவெடியில் கால்வைத்து உடல்சிதறி இறந்து போனார். சாவிலும் கையில் கேமரா இருந்தது.

உண்மையில் இந்த இடத்தில் உயர் அட்ரினலின் வாழ்க்கை வாழ்ந்த கேபா என்ற புகைப்படக் கலைஞனைக் குறித்த பதிவுகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் கேபா இறந்து 25 வருடங்களுக்குப் பின் திடீரென்று ஒரு சர்ச்சை கிளம்பியது. கேபாவின் உலகப்புகழ்பெற்ற ‘சரிந்துவிழும் போர்வீரர்’ புகைப்படம் உண்மையில் போர்க்களத்தில் எடுக்கப்பட்டது அல்ல, அது வெறும் நாடகம் என்று 1975-ஆம் ஆண்டு ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அப்போது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. அதைக்குறித்துப் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. எவ்வளவு தீவிரமாக அப்புகைப்படம் பொய்யென்று சொல்லப்படுகிறதோ, அவ்வளவு தீவிரமாக அது உண்மையென்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு மறுப்புப் புத்தகத்துக்கும், இன்னொரு மறுப்புப் புத்தகம் எழுதப்பட்டு வருகிறது.

அப்புகைப்படத்தில் இருப்பவர் ‘Federico Borrell García‘ என்ற ஸ்பெயின் நாட்டு வீரர் என்று கண்டறியப்பட்டது. உண்மையில் இந்த வீரர் சாகவேயில்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளின்படி அவர் போர்க்களத்தில் இறந்தார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி வெகு தீவிரமான இன்னொரு குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.

போர் நாளின்போது இருதரப்பும் மதித்ததொரு ஓய்வுப்பகுதியில் வீரர்களை கேபா புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஒரு வீரர் புகைப்படத்துக்காக துப்பாக்கியை உயர்த்திக்காட்டிப் பல்வேறு நிலைகளில் காட்சி தந்திருக்கிறார். அப்படி அவர் புகைப்பட நிலைகளில் நின்று கொண்டிருந்தபோது எதிரிகளின் துப்பாக்கி குண்டுக்குப் பலியானார். இவ்வாறு அக்குற்றச்சாட்டின்படி அந்த வீரரின் சாவுக்கே கேபாதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்போதுவரை அப்புகைப்படத்தின் உண்மைத்தன்மையைக் குறித்து எந்த ஒரு இறுதியான முடிவுக்கும் வர முடியவில்லை. இன்றுவரை அது ஒரு ‘சர்ச்சைக்குரிய’ புகைப்படமாகவே இருக்கிறது.

போர்ச்சூழலில் துன்பத்திலிருக்கும் மக்களுக்கு உதவி செய்வது முக்கியமா, அல்லது அவற்றை ஆவணப்படுத்தி உலகின் கவனத்தைக் கவர்ந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது முக்கியமா? ‘போர்ப்புகைப்படங்கள்’ போன்ற உண்மைக்கு அருகாமையில் இருப்பதாகக் கருதப்படும் புகைப்படங்களை எத்தனை சதவீதம் நம்பமுடியும்? புகைப்படக் கலைஞரின் சிருஷ்டித்தன்மைக்கு எத்தனை தூரம் இடமளிக்க முடியும்? போன்ற சில மிக முக்கியமான தார்மிகக் கேள்விகளை இந்த சர்ச்சை எழுப்புகிறது.

உதாரணமாக வியட்நாம் போரின்போது தீப்புண் காயம்பட்டு அழுதுகொண்டே நிர்வாணமாக ஓடிவந்த சிறுமிக்கு அப்புகைப்படக்காரர் ஓடிச்சென்று முதலுதவி தந்திருக்கலாம். ஆனால் உலகையே அதிரவைத்துப் போர்மீது கசப்புணர்வை ஏற்படுத்திய அந்தப் புகைப்படம் நமக்குக் கிடைத்திருக்காது. அதைப்போலவே கேபாவின் புகைப்படமும் சரியானதொரு பிரச்சாரத்தையே முன்வைத்தது. போரில் ஏற்படும் மனித இழப்பைக் குறித்ததொரு அதிர்ச்சியையும், தேசியவாதிகளின் வன்முறையைக் குறித்தொரு விழிப்புணர்வையும் தந்தது.

ஒருவேளை கேபாவின் புகைப்பட முயற்சியால்தான் அந்தப்போர்வீரர் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் அது எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்தான். போர்க்காலங்களில் ஊடக வித்வான்கள் ஒதுங்கி நின்று, நேர்மையான முறையிலும், நடுநிலையான முறையிலும் போரைப் பதிவு செய்வதே நியாயமாக இருக்க முடியும். இந்தப் ‘பதிவு’ முறையே மேலும் பல உயிரிழப்புகளுக்கும், போர் நீட்டிப்புக்கும் உதவுமானால் அதைப் போன்றதொரு முட்டாள்தனம் வேறொன்றும் இருக்கப் போவதில்லை. மும்பை தாக்குதல்களை நம் தொலைக்காட்சி ஊடகங்கள் பதிவு செய்ததற்கும், 9/11 தாக்குதல்களை அமெரிக்க ஊடகங்கள் பதிவு செய்ததற்கும் இடையேயான வேறுபாட்டை ஒப்பிட்டாலே இந்த தர்க்கத்தின் நியாயம் புரியும். மும்பை தாக்குதல்களைக் குறித்து நம் ஊடகங்கள் நேரடி கிரிக்கெட் வர்ணனையைப் போன்று, அதிரடிப்படையின் முன்னேற்றம், தாஜ் ஹோட்டலின் வரைபடம் என – தீவிரவாதிகளுக்கு உதவியாக இருக்கக் கூடியப் பல விஷயங்களைக் குறித்துத் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டேயிருந்தார்கள். அது பாகிஸ்தானிலிருந்து தொடர்ந்து கட்டளைகள் இட்டுக்கொண்டிருந்த தலைமைப் பீடத்திற்குப் பெரும் உதவியாக இருந்தது பின்னர் தெரியவந்தது.

கேபாவின் ‘சமரசம்’ (இன்னும் நிரூபிக்கப்படாவிட்டால் கூட), இது போன்ற பேரழிவுகளுக்கு இட்டுச் செல்லவில்லை என்பதுதான் ‘சரிந்துவிழும் போர்வீரன்’ சர்ச்சை தரும் மிகப்பெரிய ஆறுதல். தனிப்பட்ட வாழ்வில் உல்லாசவாசியாக இருந்த கேபா, யுத்தங்களைத் தொடர்ந்து புகைப்படங்களில் பதிவுசெய்வது என்று வரும்போது எந்த சமரசமும் மேற்கொள்ளாமல் பல யுத்தங்களையும் பதிவு செய்து யுத்தக்களத்திலேயே மடிந்தார். தன் நெருங்கிய நண்பர்கள், காதலி Gerda Taro எனப் பலரையும் யுத்தகளத்தில் பலிகொடுத்தார்.

1939-ஆம் ஆண்டு ஸ்பானியப்போர் முடிந்து இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், நாஸிக்களின் தாக்குதலிலிருந்து தப்பித்து பாரிஸிலிருந்து அமெரிக்காவுக்குத் திடீரென்று கேபா திரும்பவேண்டியிருந்தது. (ராபர்ட் கேபா ஹங்கேரியைச் சேர்ந்த யூதர். இயற்பெயர் Endre Ernő Friedmann.) தப்பிச் செல்லும்போது ஸ்பானியப்போரில் எடுத்தப் பல ஆயிரக்கணக்கான புகைப்படங்களின் நெகட்டிவ்களைக் கொண்ட கைப்பெட்டியை பாரிஸிலிருந்த ஒரு ஸ்டுடியோவிலேயே விட்டுவிட்டார் கேபா. அது நாஸிக்கள் பாரிஸ் மீது நடத்திய தாக்குதலில் அழிந்து போனது என்று கருதப்பட்டது. ஆனால் திடீரென்று 1990-களில் மெக்ஸிகோவில் அக்கைப்பெட்டி ஒரு பெரும் பணக்காரரிடம் இருப்பதாக உலகிற்குத் தெரியவந்தது. (இப்போது அது ‘மெக்ஸிகோ கைப்பெட்டி’ என்று பிரபலமாக அறியப்படுகிறது).

2007 ஆம் ஆண்டு பல பேச்சுவார்த்தைகளுக்குப்பின் அக்கைப்பெட்டி ராபர்ட் கேபாவின் சகோதரர் கார்னெல் கேபா (Cornell Capa) நடத்திவரும் சர்வதேசப் புகைப்பட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப்பெட்டியில் ஸ்பானியப்போரின்போது ராபர்ட் கேபா, Gerda Taro, David Seymour மூவரும் எடுத்த 70 வருடங்களாக வெளியுலகையே பார்த்திராத 4300 புகைப்பட நெகட்டிவ்கள் இருந்தன. ஏற்கனவே நன்கறியப்பட்ட கேபாவின் கலைத்திறனோடு, அதிகம் அறியப்படாத Gerda Taro, David Seymour இருவரின் கலை நேர்த்தியையும் உலகுக்குக் காட்டின

ஸ்பானிய அகதிகள் - ராபர்ட் கேபா
ஸ்பானிய அகதிகள் - ராபர்ட் கேபா

இப்புகைப்படங்கள். கூடவே ஸ்பானியப்போர் அகதிகளின் அவலவாழ்வைக் குறித்த முக்கியமான வரலாற்று ஆவணமாகவும் இவை விளங்குகின்றன. இதில் ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால் இந்த 4300 புகைப்படங்களிலிருந்து கூட ‘சரிந்துவிழும் போர்வீரன்’ புகைப்பட சர்ச்சைக்குத் தீர்வு சொல்லும் எந்தப் புகைப்படமும் கிடைக்கவில்லை என்பதுதான். தீர்வு கண்டுபிடிக்கப்படாத வரலாற்றுப் புதிர்களில் ஒன்றாகவே ‘சரிந்துவிழும் போர்வீரன்’ புகைப்படமும் இருக்கப்போகிறது. இந்த சர்ச்சைகளைத் தாண்டி, தனிப்பட்ட வாழ்வின் அபஸ்வரங்களைத் தாண்டி கேபாவை ஒரு சிறந்த புகைப்படக்கலைஞராக நிலைநிறுத்தும், ஒரு தாய் தன் சிறுமகனுடன் அகதி முகாமில் இருக்குமாறு எடுக்கப்பட்ட இப்புகைப்படமும் மெக்ஸிகோ கைப்பெட்டியிலிருந்து கிடைத்ததுதான்.

One Reply to “போரும், புகைப்படமும்”

Comments are closed.