புரிந்து கொள்

tedchiangஅறிவியல் நவீன உலகின் முக்கியமான பரிசாகக் கருதப்படும் நெபுலா பரிசை 1990 ஆம் வருடம், தனது முதல் பிரசுரமான கதைக்கு வென்றவர் டெட் சியாங்.  அடுத்த 19 வருடங்களில் 11 கதைகளைத்தான் எழுதினார். கிட்டத் தட்ட இவரது ஒவ்வொரு கதையும், குறுநாவலும் பெருமை மிக்க அறிவியல் நவீனப்பரிசுகளை வென்றிருக்கின்றன.  ஒரு பரிசை இவர் மறுக்கவும் செய்தார், தான் விரும்பிய அள்வுக்கு அக்கதையில் நேர்த்தி கிட்டவில்லை என்று காரணம் காட்டினாராம். அமெரிக்காவில் சியாட்டில் நகருக்கு அருகில் வசிக்கும் டெட் சியாங் கணினி அறிவியலாளர்.   மென்பொருள் தொழில் துறையில் பணி புரிகிறார். இவரைக் குறித்த கூடுதலான தகவல்கள் அடுத்த இதழில் வெளிவரும்.

‘உன் வாழ்வின் கதைகள்’ (Stories of Your Life) என்ற கதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘புரிந்து கொள்’ (Understand) என்ற குறுநாவல் இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் 2002 ஆம் வருடம் வெளிவந்தது. இந்த கதைத் தொகுப்பு அறிவியல் பொருள்மைய வாதம் என்ற வகை அணுகலைக் கொண்டது. stories-of-your-life இதில் டெட், மனித வாழ்வில் ஏதும் பொருள்/அர்த்தம் காண முடியுமென்றால் அது இவ்வுலகிலேயே கிட்டும், அடுத்ததில் அல்ல என்று காட்ட விழைவதாக ஜெரமி ஸ்மித் என்னும் விமர்சகர் சொல்கிறார்.

மதங்களைக் கடந்த இலக்கியமே அறிவியல் நவீனம் என்று  சொல்லும் விமர்சகர் ஜெரமி ஸ்மித், அறிவியல் நவீனம் தன் உலகில் அனைத்தும் அறியப்படக் கூடியது என்று கருதுகிறது என்கிறார்.  நம்பிக்கை கரைந்து எல்லாம் அளக்கப்படக் கூடியதாக, எடை போடக் கூடியதாக, மறுபார்வையில் வாழ்வின் மர்மங்களில் இருந்து வெளிச்சத்துக்கு வந்த கருத்தாக ஆவது அறிவியல் நவீனத்தில் என்பது அவர் கருத்து.  ஆனாலும் ஒவ்வொரு கட்டத்து மானுட அறிவுக்கும் முன்னால் அறியப்படாதது என்று ஏதோ இருந்து கொண்டே இருக்கும்.  அது குறித்து வணக்க உணர்வு இல்லாது ஆழ்ந்த அதிசய உணர்வும், அதை அறிவதற்கான முயற்சிகளை எப்படி எல்லாம் மேற்கொள்வது என்ற புதிர் விடுவிக்கும் அறிவார்ந்த இயக்கமும் மனிதரிடம் இருப்பதை அறிவியல் நவீனம் எடுத்து நம் முன் வைக்கிறது.  இந்த வகை உடனடி அறிவைக் கடந்த அறியப்படாததை டெட் சியாங் எபபோதும் தன் கதைகளில் கையாள்கிறார்.  அறிய மாட்டாததை நோக்கித் தாண்ட வேண்டிய கட்டத்தில் டெட் சியாங்கின் இலக்கிய மாந்தர் அந்த கடைசி எட்டு எடுக்காமல், மறுபடி அறியப்படக் கூடிய உலகின் பெரும் மர்மங்களை விடுவிப்பதற்கே திரும்புகிறார் என்பது இந்த விமர்சகரின் நுட்பமான சீர்தூக்கல்.

ஐஸ் தளம், முகத்தில் சொற சொறப்பாகப் படுகிறது, ஆனால் குளிர்ச்சியாக இல்லை. என்னிடம் அதைப் பற்றிக் கொள்ள ஏதும் இல்லை, என் கையுறை தொடத் தொட அதிலிருந்து வழுக்குகிறது. மேலே யார் யாரோ ஜனங்களை நான் பார்க்கிறேன், இங்குமங்கும் ஓடுகிறார்கள், ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நானோ என் முஷ்டியால் பனிக்கட்டியைக் குத்தி உடைக்க முயல்கிறேன், என் கைகள் மிக மெதுவாக அசைகின்றன, என் நுரையீரல் வெடித்திருக்க வேண்டும், தலைக்குள் ஒரே மசமசப்பாகிக் கொண்டிருக்கிறது, நான் கரைந்து கொண்டே போகிறேன்….

அலறி விழித்துக் கொண்டேன். இதயம் சுத்தியலாய் அடிக்கிறது. அடச்சே, போர்வைகளை இழுத்து எறிந்து, படுக்கையின் விளிம்பில் உட்கார்கிறேன்.

இதெல்லாம் இதற்கு முன் எனக்கு நினைவு வந்ததில்லை. முன்பெல்லாம் நான் ஐஸ் தளத்தை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்தது வரைதான் ஞாபகம் வந்தது, டாக்டர் மீதியை நான் அமுக்கி நசுக்கி வைத்திருக்கிறேன் என்றார். இப்போது நினைவு திரும்பியதே, இது நான் கண்டதிலேயே மிகப் பயங்கரமான கனவு. இறகுகளடைத்த போர்வையை என் முட்டியால் இறுக்கிப் பிடிக்கிறேன், என் உடம்பு நடுங்குவது எனக்குத் தெரிகிறது. பதட்டத்தை அடக்க முயல்கிறேன், மெதுவாக மூச்சு விடு, மெதுவாக… ஆனால் என்னுள்ளிருந்து கேவல்கள் பிய்த்துக் கொண்டு வருகின்றன. அது அவ்வளவு நிஜம் போல இருந்தது, செத்துப் போவது இப்படித்தானிருக்கும் என்று நான் உணர்ந்ததைப் போல இருந்தது.

நான் அந்தத் தண்ணீரில் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் இருந்தேன். என்னை மேலே இழுத்துப் போட்ட போது நான் அனேகமாக வெறும் கட்டைதான். நான் முழுதும் குணமாகி விட்டேனா? அந்த மருத்துவமனை ஒரு புது மருந்தை இவ்வளவு மூளைச் சேதம் உள்ள ஒரு நபரிடம் செலுத்தியது இதுதான் முதல் தடவை. அந்த மருந்து வேலை செய்ததா?

*                        *                        *

அதே தீய கனா, மறுபடி மறுபடி. மூன்றாம் தடவைக்குப் பிறகு இனி நான் தூங்க மாட்டேன் என்று தெரிந்ததும், விடிவதற்கு இன்னும் இருந்த சில மணிகளை நான் கவலைப்படுவதில் செலவழித்தேன். இதுதான் விளைவா? என் புத்தியை இழந்து கொண்டிருக்கின்றேனா?

நாளை என் வாராந்தர மருத்துவ சோதனை. ஆஸ்பத்திரியில் பயிற்சியில் உள்ள மருத்துவரிடம். அவர் ஏதேனும் விடைகள் வைத்திருப்பாரோ என்னவோ?

*                        *                        *

பாஸ்டன் நகரின் மையத்துக்கு ஓட்டிக் கொண்டு போகிறேன். அரை மணிக்குப் பிறகு டாக்டர் ஹூப்பர் என்னைப் பார்க்கிறார். சோதனை அறையில் ஒரு மேஜையின் மீது அமர்ந்திருக்கிறேன், மஞ்சள் திரைக்குப் பின். இடுப்பு உயரத்தில் சுவற்றிலிருந்து படுக்கை வாக்கில் இருக்கும் தட்டைத் திரை மானிட்டர். மிகக் குறுகிய கோணப் பார்வைக்குப் பொருத்தியிருக்கிறார்கள், அதனால் என் புறமிருந்து வெற்றுத் திரை போலத் தெரிகிறது. டாக்டர் கீபோர்டில் தட்டி எழுதுகிறார். என் கோப்புகளைக் கேட்கிறார் போலிருக்கிறது, வந்ததும் என்னைச் சோதிக்கிறார். என் கண் பார்வையை ஒளியால் அவர் சோதிக்கும்போது என் பயங்கரக் கனா பற்றிச் சொல்கிறேன்.

’விபத்துக்கு முன்னே எப்போதாவது எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா, லியோன்?’ ரப்பர் பொருத்திய சுத்தியல் போன்ற ஒன்றை எடுத்து என் முழங்கை, முட்டிக்கால், கணுக்காலில் எல்லாம் தட்டுகிறார்.

‘இல்லையே. இதெல்லாம் அந்த மருந்துடைய பின் விளைவுதானா?’

‘பின் விளைவில்லை. ஹார்மோன் ’கே’ சிகிச்சை சேதமடைந்த நியூரான்களில் பெருமளவைப் புதிதாக வளர்த்திருக்கின்றது. அந்த மாறுதல்களுக்கு உங்கள் மூளை தன்னைச் சரியாக்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும். இந்த பயங்கரக் கனவெல்லாம் அனேகமாக அதைத் தான் சுட்டுகின்றன.”

“இது நிரந்தரமாக இருக்குமா?”

“அப்படி இராது”, அவர் சொல்கிறார். ”இந்தப் புதுப் பாதைகள் பழகி, மூளை தன்னை ஒழுங்கு செய்து கொண்டவுடன் நீங்கள் சரியாகி விடுவீர்கள். இப்ப உங்கள் ஆள்காட்டி விரலால் உங்கள் மூக்கு நுனியைத் தொட்டு விட்டு அந்த விரலால் என் கை விரல் நுனியைத் தொடுங்கள் பார்ப்போம்.”

அவர் சொன்னதைச் செய்கிறேன். அடுத்து அவர் ஒவ்வொரு விரலாலும் என் கட்டை விரலைத் தட்டச் சொல்கிறார். பிறகு நான் ஒரு நேர் கோட்டில் நடக்க வேண்டி இருந்தது, குடிகாரர்களைப் போலிஸ் சோதிக்கும் போது நடப்பது போல. அதன் பிறகு என்னைப் பல கேள்விகள் கேட்கிறார்.

“ஒரு சாதாரண ஷூ வில் என்ன பாகங்களெல்லாம் இருக்கு, சொல்லுங்க.”

”உள்ளுறை, குதிகாலடி, அப்றம் கட்டுகிற லேஸ். .,, ஆ..ம்ம்ம், லேஸெல்லாம் நுழைச்சுக் கட்றத்துக்கு வசதியா இருக்க ஒதவற துளைல இருக்கற பட்டன், லேஸுக்குக் கீழே நாக்கு மாதிரி இருக்குமே அது”

“ஓகே. இந்த நம்பரைத் திரும்பச் சொல்லுங்க பாப்பம். மூணு, ஒம்பது, ஒண்ணு, ஏழு, நாலு….”

“…ஆறு, ரெண்டு.”

டாக்டர் ஹூப்பர் அதை எதிர்பார்க்கவில்லை. “என்னது?”

schizophrenia_1“மூணு, ஒம்பது, ஒண்ணு, ஏழு, நாலு, ஆறு, ரெண்டு. என்னை முதல்ல நீங்க சோதனை செஞ்சபோது இதே நம்பரைத்தான் சொல்லிக் கேட்டீங்க். அப்ப நான் ஆஸ்பத்திரில இன்-பேஷண்டா இருந்தேன். நீங்க இந்த நம்பரைச் சொல்லித்தான் நெறய நோயாளிங்கள சோதனை செய்றீங்கன்னு நெனக்கிறென்.”

“அந்த நம்பரை நீங்க மனப்பாடம் செய்யக் கூடாதுங்க. சொல்ற நம்பர உடனே திருப்பிச் சொல்ற நெனவு சக்தி இருக்கான்னு சோதனை செய்யத்தானே அந்த மாதிரி நம்பரை வச்சிருக்கோம்.”

“நான் வேணும்னு அந்த நம்பரை மனப்பாடம் செய்யலெ டாக்டர். அதுவாகவே நெனவில் இருக்கு.”

“நான் ரெண்டாம் தடவை உங்களை சோதனை செய்தேனே அப்ப சொன்ன நம்பரையும் நெனவு வச்சிருக்கீங்களா என்ன?”

ஒரு கணம் தயங்கினேன். “நாலு ஜீரோ எட்டு ஒண்ணு அஞ்சு ஒம்பது ரெண்டு.”

அவர் வியப்படைகிறார். ” ஒரே தடவை கேட்ட எண்களை அனேகமா யாரும் நினைவில் வச்சிருக்க மாட்டாங்களே. நீங்க ஏதாவது எண்களை எல்லாம் நினவு வச்சிருக்கிற உத்திகளெப் பயன்படுத்துறீங்களா?”

நான் தலையை அசைத்து மறுக்கிறேன். “இல்லை. என் ஃபோன் நம்பரை எல்லாம் தானாக டயல் செய்ற மாதிரிதான் நான் சேமிச்சு வச்சிருக்கேன்.”

அவர் கம்ப்யூட்டர் டெர்மினலுக்குப் போய் அதன் எண்பலகையைத் தட்டுகிறார். “இதை ஒரு தடவை முயற்சி பண்ணுங்க.” பதினான்கு இலக்கம் கொண்ட ஒரு எண்ணைப் படிக்கிறார். நான் அதைத் திரும்பிச் சொல்லி விடுகிறேன்.

”இதையே நான் தலைகீழ் வரிசையாகவும் சொல்வேனே, பார்க்கிறீர்களா?” அந்த எண்ணை நான் கடைசி இலக்கத்தில் இருந்து முதல் இலக்கம் வரை சொல்லுகிறேன். அவர் முகத்தைச் சுருக்குகிறார். பிறகு அந்த விசைப் பலகையைத் தட்டி என் கோப்பில் ஏதோ எழுதுகிறார்.

*                        *                        *

மனநோய் சிகிச்சைப் பிரிவின் பல சோதனை அறைகளில் ஒன்றில் ஒரு டெர்மினல் முன் அமர்ந்திருக்கிறேன். டாக்டர் ஹூப்பருக்கு அறிவுப் பரீட்சை செய்து பார்க்கத் தேவையான வசதிகள் இருந்த இடங்களில் இதுதான் கொஞ்சம் கிட்ட இருந்தது. சுவற்றில் ஒரு கண்ணாடி பதித்திருக்கிறது. அனேகமாய் இந்தக் கண்ணாடியின் பின்னால் ஒரு வீடியோ காமெரா இருக்கும். அது ஒரு வேளை ஏற்கனவே பதிவு செய்கிறதோ என்னவோ, அதனால் அதை நோக்கிச் சிரித்து விட்டு கையை ஆட்டுகிறேன். வங்கிகளின் பண எந்திரங்களில் இருக்கும் விடியோ காமிராக்களை நோக்கிக் கூட நான் வழக்கமாக இப்படிக் கையாட்டுவேன்.

டாக்டர் ஹூப்பர் என் பரீட்சை முடிவுகளோடு உள்ளே வருகிறார். “லியோன், நீங்க ..ரொம்..ப.. நல்லாச் செஞ்சிருக்கீங்க. இரண்டு பரீட்சையிலும் நீங்க 99 ஆவது சதவீதப் பிரிவில் இருக்கீங்க.”

என் வாய் பிளந்தது பிளந்ததுதான். “என்ன, விளையாடறீங்களா?”

“இல்லைங்க. நான் அப்படிச் செய்வேனா?” ஆனால் அவருக்கே முடிவுகளில் நம்பிக்கை இல்லை என்று தெரிந்தது. “இந்த எண்ணை வைச்சு எத்தனை கேள்விங்களுக்கு நீங்க சரியான விடை கொடுத்தீங்கங்கிறதைக் கண்டு பிடிக்க முடியாதுதான். இதுக்கு என்ன அர்த்தம்னாக்க, மொத்த ஜனத்தொகையில்…”

”அதற்கு என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியும்” நான் கவனமில்லாமல் இடைமறித்தேன். ”என்னை ஹைஸ்கூலில் முன்பு சோதித்த போது நான் 70ஆவது சதவீதப் பிரிவில்தான் இருந்தேன்.” தொண்ணூத்தி ஒம்பதாவது சதவீதப் பிரிவா. எனக்குள் இதற்கு ஏதாவது தடயம் கிட்டுமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது எனக்கு எப்படி இருக்க வேண்டும்?

அவர் மேஜை மீதே உட்கார்கிறார். இன்னமும் அந்த அச்சிட்ட தாள்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

”நீங்க கல்லூரில படித்ததில்லை, இல்லியா?”

நான் அவரைக் கவனிக்கிறேன். ”நான் போனேன், ஆனால் பட்டம் வாங்கு முன் வெளியேறி விட்டேன். நான் எது கல்வின்னு நினைச்செனோ அதெல்லாம் பேராசிரியர்களின் கருத்துகளோடு ஒத்துப் போகல்லை.”

“அப்டியா.” அனேகமாக அவர் நான் தோற்றுப் போய் படிப்பை விட்டு விட்டேன் என நினைத்திருப்பார்.

”அப்ப சரி, ஒண்ணு மட்டும் தெளிவாயிடுச்சு, நீங்க பிரமாதமா முன்னேறி இருக்கீங்க. அதில கொஞ்ச மாத்தம் வேணா அன்னிக்கப்புறம் நீங்க வளர்ந்திருக்கீங்க பாருங்க, அதனால இருக்கலாம். மிச்சம் முன்னேறியதெல்லாமே இந்த ஹார்மோன் கே சிகிச்சையாலதான் இருக்கணும்.”

”அதென்னங்க இப்பிடி, பின் விளைவுன்னா இப்படி எல்லாமா?”

“ரொம்பப் புல்லரிச்சுப் போயிடாதீங்க. இந்தப் பரீட்சை மதிப்பெண்ணை வச்சுகிட்டு நிஜ உலகத்தில நீங்க என்ன சாதிக்க முடியும்னு எதுமே சொல்ல முடியாது.“ டாக்டர் ஹூப்பர் என்னைப் பார்க்காமல் பேசியபோது, நான் உதட்டைக் கேலியாகச் சுழித்தேன். ஏதோ பிரம்மாதமா நடந்து கொண்டிருக்கிறது, இவரென்னடான்னா சாதாரணமா எடுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். “இதை இன்னும் சில சோதனைகள் பண்ணிப் பார்த்துத் தெளிவாக்கிடணும். நாளைக்கு உங்களால வர முடியுமா?”

*                        *                        *

ஹோலொக்ராஃபை மறுபடி ஒழுங்கு செய்து முழுமைப்படுத்தும் வேலையில் பாதியில் இருக்கிறேன், தொலைபேசி அடிக்கிறது. அதை எடுப்பதா, கணினியைக் கவனிப்பதா, இழுபறியில் இருக்கிறேன். பிறகு விருப்பமில்லாமல் தொலைபேசியை எடுக்கிறேன். சாதாரணமாக இந்த மாதிரி தொகுப்பு வேலை செய்யும் போது பதில் சொல்லும் எந்திரத்திடம் கூப்பிடுவோரைப் பேச விட்டு விடுவேன். இப்போது நான் மறுபடி வேலைக்குத் திரும்பி விட்டேன் என்று வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்பது அவசியமாக இருக்கிறதால் தொலைபேசியை எடுத்தேன். ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் படுத்திருந்த போது நிறைய வாடிக்கைக்காரர்கள் வேறு இடங்களுக்குப் போய் விட்டிருந்தார்கள். நஷ்டம் நிறைய. நான் தொலைபேசியைத் தொட்டுச் சொல்கிறேன்,”க்ரெகொ ஹோலொக்ராபிக்ஸ். லியோன் க்ரெகோ பேசறேன்.”

“ஹேய், லியோன். நான்தான் ஜெர்ரி.”

“ஹை ஜெர்ரி. என்ன வேணும், சொல்லு.” நான் இன்னமும் திரையில் உள்ள உருவத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். திருகுசுழலாக சில பல்சக்கரங்கள், ஒன்றோடொன்று பின்னி இருக்கின்றன. செயல்படுவதில் ஒத்துழைப்பின் முக்கியத்தை முன்வைக்கவாம் இந்த உருவம், கற்பனை வறண்ட உருவகம், ஆனால் அதைத்தான் வாடிக்கையாளர் தன் விளம்பரத்துக்கு வேண்டுமென்கிறார்.

“இன்னக்கி ராத்திரி ஒரு சினிமா போக ரெடியா நீ? நான், ஸு, அப்புறம் டோரி எல்லாரும் உலோகக் கண்கள் படத்துக்குப் போக இருக்கிறோம்.”

” இன்னி ராத்திரியா? உஹூம், என்னால முடியாதப்பா. இன்னிக்கி ஹானிங் நாடக அரங்கில் அந்த ஒரே ஒரு பெண் நடிக்கிற ஷோவுடைய கடைசி காட்சி இருக்கு.” இப்போது அந்த பற்சக்கரங்களின் மேல் பரப்புகள் கொஞ்சம் கீறல் விழுந்த மாதிரியும், எண்ணெய்ப் பசையோடும் காட்சி அளித்தன. சுட்டியால் அந்த பரப்பு ஒவ்வொன்றையும் ஹைலைட் செய்துவிட்டு, அவற்றை சரி செய்ய உறுதியான அளவுகளை தட்டிக் கணினியில் எழுதினேன்.

”அதென்ன காட்சிப்பா?”

“அதற்குப் பெயர் சிம்ப்லெக்டிக். கவிதையாக ஒற்றை நடிக வசனமொழி.” இப்போது உருவத்தின் மீது விழும் ஒளியைச் சீர் செய்கிறேன், பற்கள் ஒன்றோடொன்று பின்னும் இடத்தில் விழுந்த சிறிது நிழலிருட்டை அகற்ற முயல்கிறேன். “என்ன நீயும் வரியா?”

“ஏம்பா, இதென்ன ஷேக்ஸ்பியர் நாடகத்தில தனக்குத் தானே வசனம் பேசிக்கிட்டு இருப்பாங்களே அதுமாதிரியா?”

வெளிச்சம் அதிகமாகத் தெரிகிறது. வெளி விளிம்பெல்லாம் மிகவும் பளீரென்று ஆகிவிடும். உள்ளிருந்து பிரதிபலிக்கும் ஒளியின் வீச்சுக்கு ஒரு உச்ச வரம்பை நான் குறித்து விடுகிறேன். ”இல்லை, ஒரு நனவோடை வெளியீடு மாதிரி, பல தாள அசைவுகளில் மாறி மாறி வரும், இந்த இயாம்பிக் மீடர்-ங்கிறாங்களே அது பல அசைவுகள்ள ஒண்ணுதான். எல்லா விமர்சகர்களும் இதைத் திறமைக்கு ஒரு சவால் என்கிறார்கள்.”

“அட, கவிதையிலெல்லாம் உனக்கு இத்தனை ரசனை உண்டுன்னுட்டு எனக்குத் தெரியாதே?”

எல்லா கணக்குகளையும் இன்னொரு தடவை சரியா என்று பார்த்தேன். பல ஒன்றோடொன்று ஊடுருவும் மாதிரிவடிவுகளையெல்லாம் கணினியே மறுபடி கணக்கிட விட்டு விட்டேன். “வழக்கமா நான் அவ்வளவு கவனிக்க மாட்டேன். ஆனா இது நிஜமாகவே சுவாரசியமாக இருக்கும்னு தெரியுது. உனக்கு என்ன தோணுது?”

“தேங்க்ஸ்பா, நாங்க…இந்த மூவியையே பார்க்கலாம்னு எனக்குத் தோணுது.”

“ஓ.கே. போய் ஜாலியா இருங்க. அடுத்தவாரம் ஒருவேளை நாமெல்லாம் சந்திக்கலாம்.” நாங்கள் விடை பெற்றுக் கொண்டு தொலைபேசியை வைத்தோம். நான் கணினி மறு கணக்குகளை முடிக்கக் காத்திருந்தேன்.

அப்போதுதான் சட்டென்று என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரிந்தது. இதற்கு முன் தொலைபேசியில் பேசிக் கொண்டே இப்படி கணினியில் தொகுக்கும் வேலையைச் செய்ய ஒருபோதும் என்னால் முடிந்ததில்லை. இந்த தடவையோ எனக்கு இரண்டு வேலைகளையும் ஒரே நேரம் என் புத்தியைச் செலுத்துவதில் ஒரு பிரச்சினையும் இல்லை.

இப்படி ஆச்சரியங்களுக்கு ஒரு முடிவு வராதா? மோசமான கனாக்கள் வருவது நின்ற பின் நான் கொஞ்சம் ஓய்வெடுக்க முடிந்தது. முதல் மாறுதல் நான் கவனித்தது, நான் படிக்கிற வேகமும், படித்ததைப் புரிந்து கொள்கிற வேகமும் மிகவும் கூடியிருந்தன. சீக்கிரம் ஏதோ ஒரு நாளைக்குப் படிக்க வேண்டும் என்று அலமாரியில் நாட்களாய் தொடாமல் வைத்திருந்த புத்தகங்களை எல்லாம், படிக்கக் கடினமாய் மிக டெக்னிகலாக இருந்த புத்தகத்தை எல்லாம் படித்து முடித்திருந்தேன். கல்லூரியில் இருந்த போதே எனக்கு ருசியாய் இருந்ததை எல்லாம் என்னால் படிக்க முடியாது என்று தெரிந்து வைத்திருந்தேன். விரும்பியதை எல்லாம் என்னால் படிக்க முடியும் என்று இப்போது தெரிந்ததும், ஒரே குஷி கிளம்பி, அன்றொரு நாள் நூலகத்தில் இருந்து கைகொள்ளாமல் புத்தகங்களை அள்ளிக் கொணர்ந்திருந்தேன்.

இப்போதோ ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த முடியும் என்று வேறு தெரிகிறது, இது ஒரு நாள் எனக்கு முடியும் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஏதோ என் அபிமான பேஸ்பால் டீம் மூன்று ஆட்டக்காரர்களை ஒரே நேரத்தில் அவுட்டாக்கி என்னைத் திகைக்க வைத்தது போல உணர்கிறேன், மேஜை மீது ஏறி நின்று உரக்கக் கத்துகிறேன்.

*                        *                        *

தலைமை நரம்பியல் மருத்துவர் டாக்டர்.ஷியா என் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார். எல்லாப் புகழும் அவருக்கே சேர வேண்டுமென்று போலிருக்கிறது. எனக்கு அவரைச் சற்றும் தெரியாது, ஆனால் அவருடைய கவனிப்பில் பல வருடமாக இருந்த நோயாளியைப் போல என்னை நடத்துகிறார்.

அவரோடு பேச என்னை அவருடைய அலுவலகத்துக்கு வரச் சொல்லி இருந்தார். முழங்கைகளை மேஜையில் வைத்துத் தன் விரல்களைக் கோர்த்துக் கொள்கிறார். “உங்கள் அறிவுத் திறன் இப்படி அதிகரித்தது உங்களுக்கு எப்படி இருக்கிறது?”

என்ன ஒரு உபயோகமில்லாத கேள்வி. “எனக்கு மிகவும் திருப்திதான்.”

”நல்லது,” டாக்டர் ஷியா சொல்கிறார். “ இதுவரை ஹார்மோன் கே சிகிச்சையில் எந்த கெட்ட விளைவுகளையும் நாங்கள் கண்டதில்லை. விபத்தினால் உங்கள் மூளையில் ஏற்பட்ட சேதத்துக்கு இனிமேல் நீங்கள் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை.” நான் சரி எனத் தலை அசைக்கிறேன். “ஆனாலும், அறிவுத் திறன் மீது இந்த ஹார்மோனுக்கு இருக்கும் விளைவைக் குறித்து நாங்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளோம். உங்களுக்கு விருப்பமானால், இன்னொரு ஊசி இதே ஹார்மோனை உங்களுக்குப் போடலாம் என நினக்கிறோம், அதற்குப் பின் விளைவுகளைக் கண்காணிக்க விரும்புகிறோம்.”

சட்டென அவர் என் கவனத்தைக் கவர்ந்தார், கடைசியாக, ஏதோ உருப்படியாகச் சொல்கிறாரே. “எனக்கு சம்மதம்தான்.”

“இது ஒரு ஆராய்ச்சிக்காகத்தான். உங்களுக்கு சிகிச்சை செய்ய அல்ல. இதை நீங்கள் நன்கு தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் இல்லையா? இதனால் உங்கள் அறிவுக் கூர்மை இன்னும் கூடலாம். ஆனால் உங்கள் தேக நலனுக்கு இது தேவை இல்லை.”

“எனக்குப் புரிகிறது. இதற்கு என் சம்மதம் தெரிவித்து ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து கையெழுத்து போட வேண்டி இருக்குமே?”

“ஆமாம். இந்த சோதனையில் பங்கெடுப்பதற்காக நாங்கள் உங்களுக்கு ஒரு தொகை ஈடாகக் கொடுக்கவிருக்கிறோம்.” அவர் ஒரு தொகையைச் சொல்கிறார், நானோ அதைக் கேட்கக் கூட இல்லை.

“அதெல்லாம் சரிதான்.” இதெல்லாம் எங்கே போய் முடியும் என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறேன், இதனால் எனக்கு என்ன கிட்டும், நினைக்கவே என்னுள் ஒரு பரபரப்பு, த்ரில்லிங் உணர்வு ஓடுகிறது.

“நீங்கள் ரகசியத்தைக் காப்பதாக ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டி இருக்கும். இந்த மருந்து பேராச்சரியமானது என்பது மிகத் தெளிவு, ஆனால் நாங்கள் அவசரக் குடுக்கையாக எதையும் அறிவிப்பு செய்ய விரும்பவில்லை.”

“நிச்சயமாக, டாக்டர் ஷியா. வேறு யாருக்கும் இது போல கூடுதலாக ஊசி போட்டிருக்கிறீர்களா?”

” ஆமாம். நீங்கள் ஒன்றும் முதல் சோதனை எலி இல்லை. இது வரை யாரிடமும் மோசமான பின் விளைவுகள் இருந்ததில்லை என்று நான் உங்களுக்கு உறுதி கொடுக்க முடியும்.”

“அவர்கள் என்ன மாதிரி விளைவுகளை அனுபவித்தார்கள்?”

“உங்கள் மனதில் எந்த முன்னெதிர்பார்ப்பையும் நாங்கள் விதைக்காமல் இருப்பது நல்லதில்லையா? இல்லாவிட்டால் நீங்கள் ஏதாவது அறிகுறிகள் நான் சொன்ன மாதிரியே உங்களுக்கும் வந்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளத் துவங்குவீர்கள்.”

டாக்டருக்குதான் எல்லாம் தெரியும் என்கிற வழக்கமான பாடத்தை ஒப்பிப்பதில் ஷியா மிகவும் வசதியாக உணர்ந்தார் என்று தெரிந்தது. நான் விடாமல் கேட்டேன். “ குறைந்தது எவ்வளவு அறிவுத் திறன் கூடியது என்றாவது சொல்வீர்களா?”

”ஒவ்வொரு நபரும் வேறு வேறு மாதிரி இல்லையா? மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வைத்து உங்கள் எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.”

என் எரிச்சலை அடக்கிக் கொண்டேன். “நல்லது டாக்டர்.”

*                        *                        *

டாக்டர் ஷியா எனனிடம் ஹார்மோன் ’கே’ பற்றி ஏதும் சொல்லாவிட்டால் என்ன, நானாகவே அதைப் பற்றித் தெரிந்து கொள்கிறேன். என்னுடைய வீட்டுக் கணினி வழியே தகவல்நெட்டிற்குப் போய், அங்கிருந்து எஃப்டிஏ (Food and Drugs Administration) உடைய பொதுமக்களுக்கான தகவல்களத்தில் போய் தற்போதைய ஐஎன்டிக்கள் என்ன என்று தேடுகிறேன்.ஐஎன்டி(IND- Investigational New Drug applications) விண்ணப்பங்கள் மனிதருக்கு எந்த மருந்து கொடுக்கப் படுமுன்னும் மைய அரசின் இந்த அமைப்பால் ஆமோதிக்கப் பட வேண்டும்.

சொரென்சென் ஃபார்மசியூடிகல்ஸ் என்ற நிறுவனம் ஹார்மோன் ’கே’-வுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து இருந்தது. மைய நரம்பு மண்டல அமைப்பில் உள்ள நியூரான்களை புனர்ஜன்மம் எடுக்க உதவும் செயற்கை ஹார்மோன்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் இது. ஆக்ஸிஜன் இழப்பால் அவதிப்பட்ட நாய்கள், குரங்குகள் ஆகியனவற்றுக்கு இந்த ஹார்மோன் கொடுக்கப் பட்ட ஆய்வுகளின் அறிக்கைகளை வேகமாக நோட்டம் விடுகிறேன். முடிவுகளில் பார்த்தால் எல்லா மிருகங்களும் முழுதும் தேறியிருந்தன. நச்சுத் தாக்கம் மிகக் குறைவாக இருந்தது, நீண்ட நாள் கண்காணிப்பில் எந்த மோசமான விளைவுகளும் தெரிய வரவில்லை.

மூளைச் சவ்விலிருந்து எடுத்த சில மாதிரிகளின் விளைவுகள் தூண்டுவனவாக இருந்தன. மூளைச் சேதமடைந்த மிருகங்களின் மூளைகளில் நியூரான்கள் புதிதாக வளர்ந்ததோடு, நிறைய கிளைகளாகவும் நீண்டிருந்தன. ஆனால் நலமாக இருந்த மிருகங்களிடம் ஏதும் மாறுதல் இல்லை. ஹார்மோன்-கே சேதமான நியூரோன்களுக்குப் பதிலாக மட்டுமே நியுரான்களை வளர்த்திருக்கிறது. நலமாக உள்ள நியுரான்களை ஏதும் செய்யவில்லை. மூளை சேதப்பட்ட மிருகங்களில் வளர்ந்த கிளைகள ஏதும் பாதகமாகத் தெரியவில்லை. பி இ டி ஸ்கான்கள் மூளைச் செயலியக்கத்தில் ஏதும் மாறுதலைக் காட்டவும் இல்லை. அறிவுத் திறன் சோதனைகளில் அம்மிருகங்களின் செயல்பாட்டில் மாறுதல் ஏதுமில்லை.

சொரன்சென் ஆய்வாளர்கள் மனிதருக்கான மருத்துவ சோதனைகளுக்கான தங்கள் விண்ணப்பத்தில் இந்த மருந்தை சோதிக்கும் வழிமுறைகளுக்கான ஒரு திட்டவரையை அளித்திருந்தனர்- ஆரோக்கியமானவர்கள் சிலரிடம் இந்த மருந்தை முதலில் சோதித்து விட்டுப் பின் பலவிதமான நோயாளிகளிடம் சோதிக்கத் திட்டமிட்டனர்; திடீர் நொடிப்பு வந்தவர்கள், அல்ஸைமர்ஸ் வியாதியால் துன்பப் படுபவர்கள், பிறகு -என் போல-பேச்சு மூச்சின்றிக் கட்டையாய்க் கிடப்பவர்கள் என்று வரிசையாக. நோயாளிகளின் விவரம் தெரியாத அநானி நிலையில் வைத்துக் கூட சோதனைகளின் முடிவுகளைப் பார்க்க என் போன்றவருக்கு அனுமதி இல்லை. அச் சோதனைகளில் பங்கெடுத்த மருத்துவர்களுக்குத்தான் ஆவணங்களைப் பார்க்க அனுமதி இருந்தது.

மிருக ஆய்வுகள் மனித அறிவுத் திறனில் ஏற்படக் கூடிய ஏற்றத்தைக் குறித்து ஏதும் உதவவில்லை. எந்த அளவு நியுரான்கள் மறுபடி வளர்ந்தனவோ அந்த அளவுக்கு ஏற்ப அறிவுத் திறன் மீது ஏதும் விளைவு இருக்கலாம் என்று நாம் கருத இடம் இருந்தது. அது என்னவோ முதலில் என்ன அளவுக்கு சேதம் இருந்தது என்பதைப் பொறுத்ததுதானே. அப்படி என்றால், ஆழ்ந்த, நினைவேதுமற்ற நிலையில் கிடந்த நோயாளிகளிடம்தான் மிக உச்ச அளவு மேம்படுத்தல் ஏற்படும். இதை உறுதிப்படுத்திக் கொள்ள நான் இதர நோயாளிகளின் முன்னேற்றம் எப்படி இருந்தது என்று பார்த்தால்தான் முடியும். அதற்கு நான் பொறுத்திருக்க வேண்டியிருக்கும்.

அடுத்த கேள்வி என்னவென்றால், மேலும் கூடுதலான மருந்து கொடுக்கப் பட்டால் ஏதும் விளைவின்றி மாறிய நிலை சும்மா ஏற்கனவே இருந்த நிலையிலேயே தேங்கி விடுமா, அல்லது ஹார்மோனால் மேன்மேலும் உயர்வு கிட்டுமா? இதற்கு விடையை டாக்டர்களுக்கு முன்பே எனக்குத் தெரியப் போகிறது.

*                        *                        *

எனக்கு சஞ்சலமாக இல்லை, மாறாக, நான் அமைதியாக இருக்கிறேன். என் குப்பற படுத்திருக்கிறேன், மெதுவாக மூச்சு விடுகிறேன். என் முதுகு மரத்திருக்கிறது, பகுதி மயக்க மருந்தைக் கொடுத்திருக்கிறார்கள், தண்டுவடத்தூடாக ஹார்மோன் ’கே’ ஊசி மூலம் செலுத்தப் பட்டிருக்கிறது. ரத்த நாளம் வழியே மருந்தைக் கொடுத்தால் அது வேலை செய்யாது, ஏனெனில் அந்த ஹார்மோன் ரத்தத்துக்கும் மூளைக்கும் இடையே உள்ள ஒரு தடையைத் தாண்டி மூளைக்குச் செல்லாது. எனக்கு இந்த ஊசிதான் முதல் ஊசியாக நினைவு இருக்கிறது. இதற்கு முன் இரண்டு ஊசிகள் கொடுக்கப்பட்டன என்று சொல்கிறார்கள். ஒன்று நான் மூச்சுப் பேச்சிழந்து நினைவற்றுக் கிடந்த போது, இன்னொன்று எனக்கு நினைவு திரும்பியவுடன் ஆனால் எனக்கின்னமும் எதையும் அறியும் திறன் இல்லாதிருந்த போது.

*                        *                        *

schizophrenia_2இன்னும் கெட்ட கனாக்கள். அவ்வளவு பயங்கரமாக இல்லை, ஆனால் அதீதமான புத்தியைச் சிதறடிக்கும் கனவுகளாக, அறிவுக்குச் சம்பந்தமில்லாதவையாக இருக்கின்றன. அவற்றில் எதுவும் எனக்குத் தெரிந்த எதாகவும் இல்லை. அலறலோடு விழிக்கிறேன். படுக்கையில் உதறலோடு கிடக்கிறேன். ஆனால் இந்த தடவை இதெல்லாம் நின்று விடும் என்று எனக்குத் தெரிந்திருக்கிறது.

*                        *                        *

மருத்துவ மனையின் பல மனவியலாளர்கள், என்னைக் கவனித்து வருகின்றனர். என் அறிவுத் திறனை அவர்கள் எப்படிப் பிரித்து ஆய்கிறார்கள் என்பதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கிறது. ஒருவர் அதன் கூறுகள் வழியே மதிப்பிடுகிறார், அதாவது- சேகரிப்பு, பிடித்து வைத்துக் கொள்ளுதல், பயன்பாட்டு நிகழ்ச்சி, பிறகு மாற்றுதல் ஆகியவற்றைப் பார்க்கிறார். இன்னொருவர் கணித, தர்க்க யோசனை, மொழி வழியே தொடர்பு கொள்ளும் விதம், இடைவெளியை உருவகிக்கும் விதம் ஆகியவற்றைப் படிக்கிறார்.

இந்த சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள், ஒவ்வொருவரும் ஒரு அபிமானக் கோட்பாட்டை வைத்துக் கொண்டு, எதிரில் இருக்கும் சான்றுகளை அதற்குத் தக்கமாதிரி வளைக்கிறதைப் பார்க்கையில், என் கல்லூரி நாட்களின் நினைவு வருகிறது. அன்று என்னை நம்ப வைத்த அளவு கூட இன்று அத்தகைய முயற்சிகள் நம்ப வைக்கவில்லை. இன்னும் இத்தகைய முறைகளிடம் எனக்குச் சொல்லித் தர ஏதுமில்லை. அவர்கள் ப்யன்படுத்தும் வகை முறைகள் எதுவும் என் நடத்தையை, செயல்களை விளக்கக் கூடியவையாக இல்லை. ஏனெனில்- இதை மறுப்பதில் ஒரு பயனும் இல்லை- நான் எல்லாவற்றிலும் சமமாகவே நன்றாகச் செயல்பட்டேன்.

ஒரு புது வகையான சமன்பாடுகளைப் படிப்பதாகட்டும், ஒரு அன்னிய மொழியின் இலக்கணமாகட்டும், ஒரு எந்திரத்தின் இயக்கமாகட்டும், ஒவ்வொரு விஷயத்திலுமே எல்லாம் ஒன்றோடொன்று பொருந்துகின்றன , பல மூலக் கூறுகள் மிக வசீகரமாக ஒன்றுடனொன்று ஒத்துழைக்கின்றன. ஒவ்வொரு விஷயத்திலும், எனக்கு விதிகளை மனப்பாடம் செயது விட்டு, பின் அவற்றை செயல்படுத்தத் தேவை இருக்கவில்லை. ஒரு அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, அதன் மொத்த உருவும் எனக்குப் புலனாகி விடுகிறது. ஒவ்வொரு தனி அம்சமாகட்டும், பல தனித் தனி வழிமுறைகளாகட்டும் அதெல்லாம் எனக்குத் தெரிகின்றன, ஆனால் அவற்றைத் தெரிந்து கொள்ளத் தேவையான உன்னிப்பு மிகக் கொஞ்சமாக இருப்பதால் அதெல்லாம் உள்ளுணர்வு போலவே தோன்றுகின்றன.

*                        *                        *

(தொடரும்)