முகப்பு » சமூகம்

பேரழிவின் பிடியில் காங்கோ

“அமெரிக்க ராணுவம் காங்கோலிய ஜனநாயகக் குடியரசில் நடைபெறும் போர்களில் மறைமுகமாகப் பங்கெடுத்து வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறை விவகாரங்களில் நிபுணரான வெய்ன் மாட்ஸென் ஒரு அமெரிக்க அரசுக்கமிட்டி முன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பல அமெரிக்க நிறுவனங்கள் தமக்கு லாபம் வேண்டும் என்பதற்காக காங்கோவில் யுத்தத்தை மேலும் கொழுந்து விட்டெரியத் தூண்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதில் ஒரு நிறுவனம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (சீனியரு)டன் தொடர்புடையது.”

– ஜான் காகாண்டே, ‘காங்கோவில் அமெரிக்க ராணுவத்தின் ரகசியப் பங்கெடுப்பு’- ஆல் ஆப்பிரிக்கா.காம், ஜூன் 17, 2001.[i]

—oo000oo—

அயன் படத்தில் சூர்யா காங்கோவில் வைரம் கடத்தும் காட்சி நினைவிருக்கிறதா. அந்த வைரங்கள் எத்தனை மக்களின் உயிர்களை வாங்கியிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

வைரங்களுக்காக, கனிமங்களுக்காக ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு ஆப்பிரிக்க நாட்டில் ஒரு யுத்தத்தை நடத்தியிருக்கின்றன(1998-2003). இதில் சுமார் 54 லட்சம் மக்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். முடமானவர்கள், அனாதையான குழந்தைகள், இடம் பெயர்ந்த அகதிகள், வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்கள் ஏராளம். இப்படிப்பட்டதொரு கொடூரமான போர் நடந்த நாடு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோலிய ஜனநாயகக் குடியரசு(Democratic Republic of Congo). ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப் பெரும் போர்களில் இது ஒன்று. காங்கோ(ஜ.கு) ஆப்பிரிக்காவின் முன்றாவது பெரிய நாடு. காங்கோ முன்பு ஸையர் (Zaire) என்ற நாமகரணத்துடன் இருந்தது. பெல்ஜியத்தின் காலனியாக இருந்த ஒரு நாடு. ஆறு கோடி மக்கள் தொகை. மத்திய ஆப்பிரிக்காவில் அங்கோலா, குடியரசு காங்கோ (இது வேறு காங்கோ), மத்திய ஆப்ரிக்கா குடியரசு, சூடான், உகண்டா, ருவாண்டா, புருண்டி, தான்சானியா, சாம்பியா இவ்வளவு நாடுகள் சூழ ஒரு பக்கம் அட்லாண்டிக் பெருங்கடலுடன் வளமான நாடக இருந்தது. காங்கோ பெருநதியின் கடல் புகுவாய் இந்த நாட்டின் அட்லாண்டிக் பெருங்கடலின் கரையோரமாக உள்ளது.

ஒரு காங்கோ குடும்பம்

ஒரு காங்கோ குடும்பம்

பல வகைக் கனிமங்கள் மிகுந்த நாடு. செம்பு, நியோபியம் (niobium), டாண்டலம் (tantalum), மங்கனம் (manganese) , தங்கம், வெள்ளி, துத்தநாகம் (zinc), யுரேனியம், நிலக்கரி, வெள்ளீயம் (Tin) , ஈயம் (Lead), கோபால்ட் போன்ற கனிமங்கள் கட்டங் என்னும் இடத்திலும், வைரம் கசின் என்னும் இடத்திலும் கிடைக்கிறது. இதை தவிர கச்சா எண்ணையும் (petroleum) காங்கோ ஆறும் அட்லாண்டிக் கடலும் கலக்கும் இடத்தில எராளமாகக் கிடைக்கிறது. இன்னமும் காங்கோவின் 75% நிலம் காடு. தேக்கும், கருங்காலி (Ebony) மரமும் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. நாட்டில் பயிர் நிலங்கள் 3% தான். தண்ணீர் வசதியோ ஏராளம். தொடர்ந்த பயிரிடுதல் 1% நிலத்தில் கூட இல்லை. பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு பயிர்களை வளர்க்கும் நாகரிகம் துவங்கிய வெகு சில நிலப்பகுதிகளில் ஆப்பிரிக்கா ஒரு முக்கியமான இடம். விவசாயத்தின் தொட்டில் பருவம் ஆப்பிரிக்காவில் என்று கூடச் சொல்கிறார்கள். இந்தக் கண்டத்தில் ஒரு சதவீதம் நிலப் பரப்பில் கூடப் பயிர் சாகுபடி செய்யாத நிலையில் ஒரு நாடு, 70 லட்சம் மக்கள் அதில் என்றால் வாழ்க்கை எத்தனை நிலை குலைந்திருக்கிற்து என்று நாம் யூகிக்க முடியும்

காங்கோ 1960 ஜூன் வரை 75 ஆண்டு காலம் பெல்ஜியக் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பெல்ஜியம் அம்போவென விட்டுப் போன பிறகு நடந்த தேர்தலில் பாட்ரிக் லுமும்பா பிரதமராகவும் ஜோசப் கஸாவோபூ தலைமைப் பொறுப்பும் ஏற்றார்கள். இரண்டு மாதத்தில் கஸாவோபூ தலைமையிலான படை பெல்ஜிய கூலிப் படையுடன் இணைந்து, பிரதமர் லுமும்பாவைப் போட்டுத் தள்ளியது. இதற்கு அமெரிக்காவும் உடந்தை. அன்று உலக ஏகாதிபதிகளாகத் தம் நாடு ஆக வேண்டும் என்று முயன்ற சோவியத் ரஷ்யாவும், அமெரிக்காவும் உலகில் பல நாடுகளிலும் உள்ளூர்ப் பினாமிகளை வைத்துக் கொண்டு ஆங்காங்கே உள்நாட்டுப் போர்களையும், கலகங்களையும், மறைமுகக் கொலைகளையும், அரசியல் கொலைகளையும் நடத்தி வந்திருக்கின்றன. காங்கோவில் லுமும்பா சோவியத் பினாமியானார், அடுத்து வந்தவர்கள் அமெரிக்க பினாமிகள். அல்லது மேற்கு யூரோப்பியரின் பினாமிகள். இது ஏதோ காங்கோவில் மட்டும் நடந்த கதை இல்லை. யூரோப்பியக் காலனியாதிக்க நாடுகளும், அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும் தமக்குள் உலக ஆதிக்கத்துக்காக நடந்த போரைத் தம் நாடுகளில் நடத்தினால் பெரும் பொருள்சேதம், உயிர்ச்சேதம் எல்லாம் ஆகும் என்பதாலோ என்னவோ, இந்தப் பினாமிப் போர்களை (Proxy wars) நிறைய ஆப்பிரிக்க, ஆசிய, லத்தின் அமெரிக்க நாடுகளில் -பிறர் மூலமாக பிறர் செலவில் நடத்தி-ஏராளமான நஷ்டத்தை அந்தந்தப் பிரதேச மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றன.

சில மாதங்களுக்கு பிறகு அமெரிக்காவின் ஆசியுடன் ஜோசஃப் டிஸ்யரீ மொபுட்டு (பதவிக்கு வந்த பின் ஆப்பிரிக்கவாதியாகவும், புரட்சிக்காரராகவும் தன்னைக் காட்டிக் கொள்ள மாற்றி வைத்துக் கொண்ட பெயர் மொபுட்டு ஸெஸே ஸெகோ). கலவரங்களுக்குப் பிறகு காங்கோவின் அதிபராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் காங்கோவின் பெயரை ஸையிர்(zaire) என்று மாற்றினார். முந்தைய ராணுவத்தில் சமையற்காரராக இருந்த மொபுட்டு எப்படி அதிபராகும் நிலைக்கு உயர்ந்தாரென்பதை ஆராய்ந்தாலே ஆப்பிரிக்காவின் காலனியக் காலத்து அவலங்களின் அனைத்து வக்கிர முகங்களும் புலப்படும் என நினைக்கிறேன்.

மொபுட்டுவின் ஆட்சியில் பொருளாதாரம் அதலபாதாளம் போனது. லஞ்சம் தலை விரித்து ஆடியது. நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன. கனிமங்களை வந்த விலைக்குச் சல்லிசாக விற்றான் மொபுட்டு. இவையனைத்தும் அமெரிக்காவின் துணை கொண்டு. காரணம் ஆப்ரிக்காவில் சோவியத் யூனியனை எதிர் கொள்ள காங்கோ ஒரு சிறந்த களம். மேலும் ஏற்கனவே சொன்னது போல் காங்கோவின் இயற்கை வளம் கூடுதல் லாபம்.

கபிலா

கபிலா

மே 1997 இல் லாஹொன் டிஸ்யரீ கபிலாவின் (Laurent-Desire Kabila) கொரில்லா படை ருவாண்டா, உகண்டா, அங்கோலா மற்றும் எரிட்ரியா உதவியுடன் மொபுடுவின் ஆட்சிக்கு சமாதி கட்டியது. மொபுட்டு காங்கோவிற்கு விட்டு சென்றது 12 பில்லியன் அமெரிக்க டாலர் கடன். இந்த கபிலா 1960களில் இருந்து ஆட்சியைப் பிடிக்கப் போராடியவர். சே குவராவுடன் சேர்ந்து போர் நடத்த முயன்றவர். சே குவரா வின் முயற்சிகள் தோற்று அவரும் க்யூப ராணுவ வீரர்களும் ஆப்பிரிக்காவை விட்டுத் திரும்பிப் போனதற்கு ஒரு காரணம் கபிலா குடித்துப் புரண்டு, பெண்களோடு சல்லாபித்து மீதி நேரத்தில்தான் போர் புரிய வருவாராம். மக்கள் தலைவராக வரத் திறமை இருந்தும் புரட்சி முனைப்பு இல்லாதவர் என்று சே குவரா இவரைப் பற்றிச் சொன்னதாக விக்கிபீடியா சொல்கிறது. இவர் பிற்பாடு மாவோ காலத்துச் சீனாவோடு ஒப்பந்தம் வைத்து ஒரு புரட்சி மார்க்சிய குறுநில ஆட்சியாளராக இருந்து மக்களைச் சுரண்டியும், அன்னிய உதவியை ஏப்பம் விட்டும், ஏராளமான செல்வத்தை ஈட்டி அதை ஆப்பிரிக்காவில் வேறு நாடுகளில் வீடுகளாகவும் முதலீடாகவும் வைத்திருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

மாவோ 1972-இலிருந்து காங்கோவை ஆண்ட மொபுட்டுவுடனும் நல்லுறவு வைத்து, அவருக்கு 100 மிலியன் டாலர் கடனுதவி அளித்து ராணுவ தளவாடங்கள், ராணுவப் பயிற்சி என்று பலவகை உதவிகளைச் செய்தாரென்பதையும் நாம் அறியவேண்டும். சே குவராவின் க்யூபப் போர்வீரர்களைத் தோற்கடிக்க மாவொ மொபுட்டுவின் ராணுவத்துக்கு உதவினார் என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டியது. புரட்சிகர மார்க்சியம் என்பது அந்தந்த நாட்டுடைய உலக ஏகாதிபத்திய ஆசைக்கு முன் தோற்கும் என்பதற்கும், பல நாடுகளுக்கும் மார்க்சிய லெனினியம் என்ற போர்வையில் தம் நாட்டின் ஏகாதிபத்தியத்தை உலகில் நிலைநாட்டவே பெருவிருப்பு என்பதையும் இந்தச் சம்பவங்கள் நமக்குக் காட்டும். உலகெங்கும் ‘புரட்சி’ அரசியல் அடையாள அரசியலுக்கு முன் தோற்கும் என்பதற்கு இவை மீண்டும் மீண்டும் கிட்டும் சான்றுகள். பாவம் பகடைக் காயான எளிய மக்கள்! படிததவன் சூது கொடியது என்பார்கள் நம் ஊரில்.

லாஹொன் கபிலா ஆட்சிக்கு வந்தவுடன் ஸயீர் என்னும் பெயர் மீண்டும் காங்கோலிய ஜனநாயகக் குடியரசு (DRC) என்று மாறியது. லாஹொன் கபிலாவின் சர்வாதிகார ஆட்சியும் நாட்டின் சீர்கேட்டைத் திருத்தி அமைக்க முயற்சி ஏதும் எடுக்க வில்லை. இதையே காரணம் காட்டி, 1998 ஆகஸ்ட் மாதம், காங்கோ புரட்சிப்படை என்ற ஒரு எதிர்ப்புப் படை, ருவாண்டா, உகாண்டா மற்றும் புருண்டி நாட்டுப் படைகளுடன் இணைந்து காங்கோவின் பெரும் பகுதியை ஆக்ரமித்தது. இந்த ஆக்ரமிப்பை லா. கபிலாவின் அரசுப்படை, அங்கோலா, நமிபியா மற்றும் ஜிம்பாப்வே படைகளுடன் சேர்ந்து எதிர்த்தது. இந்த யுத்தம் தான் ஆப்பிரிக்காவின் பெரும் யுத்தம்.

1997 இல் லுசாகாவில் ஆறு நாடுகள் கையொப்பமிட்ட ஒப்பந்தம் யுத்தத்தை நிறுத்த முடியவில்லை. 2001 இல் லாஹொன் கபிலா கொல்லப்பட்டு, ஆட்சி அவர் மகன் ஜோசஃப் கபிலாவிடம் மாறி வந்தது. ஜோசஃப் கபிலாவின் அரசு ஏப்ரல் 2002 இல் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உகாண்டா மற்றும் ருவாண்டாவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. அதற்குள் இருபத்தி ஐந்து லட்சம் மக்கள் மடிந்திருந்தனர். மீண்டும் ருவாண்டா காங்கோலியப் போராளிகளுக்கு உதவி செய்தது. இதில் சாவு எண்ணிக்கை 38 லட்சமாக உயர்ந்தது. (இந்தப் போரைக் குறித்த மேல்விவரங்களை இன்னொரு கட்டுரையில் விரிவாகக் காண்போம்).

போரில் அனாதையாக்கப்பட்ட சில காங்கோ குழந்தைகள்

போரில் அனாதையாக்கப்பட்ட சில காங்கோ குழந்தைகள்

இரண்டாம் உலகப்போருக்குப் பின் மிக அதிகபட்சமான உயிர்களைப் பலி வாங்கிய சிக்கலான உள்நாட்டு/பன்னாட்டுப் போர் இந்த காங்கோ-ருவாண்டா போர். இதில் ஏழு நாடுகள் நேரடியாகவே பங்கு கொண்டன. ஆனால் இந்தப் போரைக் குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

உலகில் தீவிரவாதம் அல்லது போர் நீடிப்பது சில நாடுகளுக்கு நல்லது. வளர்ந்த நாடுகள் எனப்படும் பல நாடுகள், ஒரு புற்ம் சமாதானத்தை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே மறுபுறம் ஆயுதத் தயாரிப்பில், ஏற்றுமதியில் ஏராளமாக லாபம் திரட்டுகின்றன. இந்தப் போரில் மக்களையும், எதிர்கால வாழ்வின் நலன்களையும், நம்பிக்கையையும், மனிதத்தையுமே இழந்தவர்கள் ஆப்பிரிக்க மக்களில் ஒரு சில நாட்டினர். பெரும் லாபங்களையும், கனிமங்களைத் தோண்டும் உரிமைகளையும், ஏற்றுமதி இறக்குமதி வியாபார வளத்தையும் பெற்றவர்கள் பெருமளவு யூரோப்பிய நாடுகள்.[ii] போரைத் தூண்டி விட்டு, தமக்குச் சேதமில்லாது லாபம் திரட்டியது யூரோப்பியர், போரில் இறங்கி அனைத்து நஷ்டங்களையும் அனுபவித்தவர்கள் ஆப்பிரிக்கர்கள். இத்தனைக்கும், போரிட்ட பல நாடுகளில் கிருஸ்தவம் ஒரு பெரும்பான்மை மதம். அதிலும் 1500 ஆண்டில் இருந்தே ரோம கத்தோலிக்க மதத்தில் இணைந்த ஜனத்தொகையும், அரசுகளும் ஆண்ட நிலப்பகுதிகள் இவை. கிருஸ்தவம் உலகை இணைக்கும், உலகில் அமைதி கொணரும், அன்பை வளர்க்கும் என்று பிரசாரம் செய்யும் ஏராளமான மதபோதகர்களுக்கு உலக வரலாற்றறிவு சிறிதும் கிடையாதா என்று நம்மைக் கேட்க வைக்கும் இந்தப் போர்.

ஆயுதத் தயாரிப்பிலும், ஏற்றுமதியிலும் லாபம் ஈட்டும் உலக நாடுகள் பற்றிய தகவலகளைக் கீழே கொடுக்கப் பட்ட சில சுட்டிகளின் வழியே காணலாம்.[iii]

இருண்ட கண்டம் என்று ‘பரிவோ’டு மேலை நாடுகள் அழைக்கும் ஆப்பிரிக்காவில் நடந்த ஏராளமான கொடூர நிகழ்வுகள் ஊடகங்களால் நம் பார்வையிலிருந்து இருட்டடிக்கப் பட்டிருக்கின்றன. ஊடகங்கள் மெதுவாக இயங்கிய காலத்திலேயே கூட அவை ஆப்பிரிக்கா பற்றிய உண்மைகளை வெளியிடாததற்கு ஒரு காரணம் கருப்பர்கள் மனிதர் என்று அழைக்கப்படுமளவு பண்படாதவர் என்ற ஒரு சுய-இனமையப் பெருமை, மாற்றினம் மீதான இழி நோக்கு எனபது, எதையும் ஆழமாக அலசி நோக்க நேரமில்லாத துரித ஊடகங்கள் வெளியை ஆக்கிரமிக்கும் இந்தக் காலத்தில் கூட எல்லாருக்கும் புலனாகி இருக்கிறது. அது ஒரு அதிசயம்தான். புலனானதால் அதை எல்லாரும் ஒத்துக்கொண்டு ஆப்பிரிக்கரைப் பற்றி இனியேனும் நியாயமாக எழுதுவாரா என்றால் அந்த அளவு உலக ஊடகங்களின் தரம் இன்னும் உயர்ந்து விடவில்லை. ஊடக்ங்களில் எழுதுவோரும், படிப்போரும் இன்னும் சுய-மையப் பார்வையைத் தம்மளவில் விட்டு விடவில்லை. பிறரெல்லாம் மட்டும் சுய-மையப் பார்வையை விட வேண்டும் என்று மட்டும் ‘தாராள’மாக எதிர்பார்ப்பார்கள்.

இருட்டோடு சம்பந்தப்பட்ட அந்தப் பெயர், உலகிலேயே பிரகாசமான சூரிய ஒளியை வருடம் பூராவும் பெறும் சில பகுதிகளில் ஒன்றான ஆப்பிரிக்காவுக்குச் சூட்டப்பட்டதற்கு அங்கு வாழும் மனிதரின் தோல் நிறம் ஒரு காரணம் என்று நமக்குத் தோன்றலாம். அது அனேகமாக உண்மையாகவும் இருக்கலாம்.

ஆனால் வறுமை, வன்முறை, மேலும் பலவிதமான இனப் போர்கள், நிலத்திற்கும் அதிகாரத்துக்குமான குருதிப் போராட்டங்கள் என்று அங்கு பல நூறாண்டுகளாக நிலவும் கடும் குழப்பமும் சோகமும் நிறைந்த வாழ்நிலையைத்தான் இந்தச் சொல் விவரிக்கிறது என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஒளியை நம்பிக்கை என்றும் வாழ்வுக்கு ஒரு குறியீடு என்றும் எடுத்துக் கொண்டால் அவை இரண்டுமே அற்றுப் போன பரப்பு என்று சுட்ட யூரோப்பியர் ஆப்பிரிக்காவை அப்படி அழைத்திருக்கலாம்.[iv]

கனரகத் தளவாடங்கள், பலவகைச் சிறு ஆயுதங்கள் எல்லாம் உலகின் பல நாடுகளில் இருந்து கடத்தப்பட்டும், இறக்குமதியாகவும் போய்ச் சேரும் சில இடங்களில் ஆப்பிரிக்காவில் உள்ளவை அனேகம். ஒரு புறம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியிலும், நோயிலும் வாடும் சில நாடுகளில், மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவுக்கும் உடைக்கும் ஏதும் நடவடிக்கை எடுக்காமல், இருக்கும் குறைவான வசதிகளை வைத்து ஏராளமான ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் ஆப்பிரிக்க அரசுகளை நாம் பார்க்க முடியும். அண்டை நாடுகளோடு போருக்குப் போய் அந்தப் போரில் பல ஆயிரக்கணக்கான மக்களைப் பலி கொடுக்கும் ’படைத் தலைவர்களை’ப் பார்க்க முடியும்.

பட்டினியையும், வன்முறை வலியுறுத்தலையும் தாங்க முடியாது congo_war_8எந்த ராணுவ, கொரில்லாப் படைகளில் சாதாரண மக்களும், இளைஞரும் சேர்கிறார்களோ, அதே படைகளே தொடர்ந்த கொடிய வன்முறைக்கும், சமூக வறுமைக்கும், நாகரிகத்தின் நசிவுக்கும் காரணம் என்று அந்த மக்களில் பலருக்கும் சமீப காலமாக நன்கு புரிய வந்து அவர்கள் இப்படிப் போர் நடத்த முயல்பவர்களை வெளிப்படையாக, தைரியமாகக் கண்டிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பன்னாட்டரங்கில் இப்போது ஆப்பிரிக்க அறிவு ஜீவிகளின் போர் எதிர்ப்புக் கண்டனம் முன்னெப்போதையும் விட மேலான தர்க்க நியாயத்துடன், இடது வலது என்ற அரசியல் கோணல்களெல்லாம் இல்லாது பிரச்சினையைத் தீர்க்கும் நேரான செயல் நோக்கோடு வெளிப்படத் துவங்கி இருக்கிறது.

தம் பிரச்சினைகளைத் தாமே தீர்த்தால்தான் உண்டு, வெளிநாட்டவர் தலையீடு உதவாது, தம்மாலும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று அவர்கள் பேசுவதோடு, செயலிலும் இறங்கி இருக்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சி தரும் மாறுதலே என்றாலும் பிரச்சினைகள் பல நூறாண்டுகளாக ஊறியவை. சுலபத்தில் தீர்க்கப்பட முடியாதவை என்பதை நாம் தொடர்ந்து நினைவில் வைக்க வேண்டும்.

இந்தப் போர்களும், பெரும் மோதல்களும் இன்று நேற்று துவங்கியவை அல்ல. கிட்டத் தட்ட 500 வருடங்களாக ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கை மேன்மேலும் கடும் துன்பமாகிப் போக, மேற்கின் கைப்பாவையாக இருக்கச் சம்மதிக்கும் ஆப்பிரிக்கத் ‘தலைவர்களும்’ காரணம் எனப் பார்க்கலாம். ஆப்பிரிக்க மக்கள் திரும்பத் திரும்ப இந்த வகைத் தலைவர்களையும், மேற்கின் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்தும் போரிட்டிருக்கிறார்கள்.

polyt21

ட்சிம்பா விடா

ட்சிம்பா விடா என்ற ஒரு பெண் போராளி, இத்தகைய ஒரு எதிர்ப் போராட்டத்தை நடத்திச் சில குறிப்பிடத் தக்க வெற்றிகளை அடைந்தார். பின்னால் தோற்கடிக்கப்பட்டு, ரோமக் கத்தோலிக்க (யூரோப்பிய) அரசால் சூனியக்காரி என்று உயிரோடு எரிக்கப்பட்டார். இதில் அவலம் என்னவென்றால் ட்சிம்பா விடா ஒரு கதோலிக்கப் பெண் துறவி(Nun). இன்று காங்கோலிய / ஆப்பிரிக்க ஜோன் ஆஃப் ஆர்க் என்று பிரபல ஃப்ரெஞ்சு வீராங்கனையுடன் ஒப்பிடப்படுகிறார். அதில் உள்ள முரண்நகை அப்படிப் பயன்படுத்துவோருக்குப் புரியுமா என்பது கேள்விக்குரியது. ஆனால் ஒற்றுமை என்னவென்றால் ஜோன், ட்சிம்பா விடா இருவருமே சிலுவையில் கட்டி எரிக்கப்பட்டர்வகள்.

—oo000oo—

காங்கோவில் 1970 க்கு பின் 36 ஆண்டுகள் கழித்து, ஜூலை 2006 இல் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் ஜோசஃப் கபிலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு:

திரு.பாலாஜி தேவநாதன் 5 வருடங்களாக நைஜீரியாவில் வசிக்கிறார். பல முறை நைஜீரியாநாடு முழுதும் பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். ஆப்பிரிக்க அரசியல், வாழ்க்கை முறை, இலக்கியம் ஆகியவற்றில் பெரும் ஆர்வம் கொண்டவர்.

குறிப்புகள்:


(i)

“The United States military has been covertly involved in the wars in the Democratic Republic of Congo, a US parliamentary subcommittee has been told. Intelligence specialist Wayne Madsen, appearing before the US House subcommittee on International Operations and Human Rights, also said American companies, including one linked to former President George Bush Snr, the father of the current US President, are stoking the Congo conflict for monetary gains.”
-John Kakande, ‘US Army Operated Secretly in Congo’, allAfrica.com, June 17, 2001


(ii)From Table 4.1 Top exporters of small arms (authorized transfers), 2001
(most recent complete yearly data available)

[table id=1 /]

* Customs data (UN Comtrade)
** Export report
Source: NISAT (2003)

From Table 4.3 Top importers of small arms (authorized transfers) 2001

[table id=2 /]


(iii) ஆயுதத் தயாரிப்பிலும், ஏற்றுமதியிலும் லாபம் ஈட்டும் உலக நாடுகள் பற்றிய தகவல்கள்:

http://www.tni.org/detail_page.phtml?page=reports_asia_crosspoints7
http://www.globalissues.org/article/74/the-arms-trade-is-big-business#Armssalesfigures
http://www.globalissues.org/article/78/small-arms-they-cause-90-of-civilian-casualties
http://mondediplo.com/2001/01/03arms2
http://www.smallarmssurvey.org/files/sas/publications/year_b_pdf/2004/2004SASCh4_summary_en.pdf


(iv)இது குறித்த ஒரு தகராறும் அதை ஒரு உலகச் செய்தி நிறுவனம் எப்படிக் கையாண்டது என்பதையும் இங்கு காணலாம்.

http://www.npr.org/ombudsman/2008/02/should_npr_have_apologized_for.html

One Comment »