மரணமில்லாத மனிதன் மகிழ்ச்சியாக இருப்பானா?

எங்கள் கிராமத்தில் பெரிய பண்ணையாருக்கும் சின்னப் பண்ணையாருக்கும் நிரந்தரமாகத் தகராறு. தனக்குப் பிறகு அத்தனை பினாமி ஏக்கராக்களையும் நிர்வகிக்க வேண்டிய சின்னவர், தினம் பொழுது சாய்ந்தால் மல்மல் ஜிப்பா அணிந்து மொபெட்டில் டவுனுக்குப் போவதும் சினிமா பார்ப்பதும் லேட்டாகத் திரும்புவதும் பெரியவருக்கு சுத்தமாக ரசிக்கவில்லை. கால் கட்டு ஒன்று போட்டு வைக்கலாம் என்று பார்த்தால், வேப்பெண்ணை தடவி அழுந்தத் தலை சீவிக் காத்திருக்கும் முறைப் பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறார் சின்னவர். அவருடைய ரேஞ்சே வேறு!

நம் கிராமங்களிலும் நகரங்களிலும், தலைமுறைகளுக்கிடையே இடைவெளி மட்டுமின்றி மனவெளியும் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. வரும் காலத்தில் தலைமுறைகளுக்கு இடையே போராட்டங்கள் அதிகரிக்கப் போகின்றன என்று நினைக்கிறார் சார்லஸ் மன். இது பற்றிப் பல விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

கடந்த நூற்றாண்டில் மட்டும் அமெரிக்காவில் சராசரி ஆயுள் 47 வயதிலிருந்து 77-ஆக உயர்ந்திருக்கிறது. 2050-ம் ஆண்டில் சராசரி மனிதன் சராசரியாக 87 வயது வரை வாழ்வான். மனித ஆயுளில் பத்து வருடம் கூடப் போகிறது. சொத்துக்குக் காத்திருக்கும் மகன்கள் பாடு திண்டாட்டம்தான்.

மேலே சொன்னது சராசரி வயது. ஆனால் அதிகபட்சம் ஒருவர் எவ்வளவு வருடம் வாழலாம்? இப்போது சுமார் 120 வருடம் என்று கருதப்படுகிறது. இதுவும் அதிகரித்து வரக் கிழங்கள் உலகை வலம் வரப் போகின்றன.

anti-aging-babies_600

எப்படிச் சொல்கிறார்கள்? உள்ளே சமையலறையில் பல டெக்னாலஜிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஸ்டெம் செல் தொழில் நுட்பம் அவற்றில் ஒன்று. ஸ்டெம் செல்கள் என்பவை மற்ற செல்களைத் தயாரிக்க மூலப் பொருட்கள். இதய செல்லாகவோ, நுரையீரல் செல்லாகவோ எலும்பாகவோ கிட்னியாகவோ அவை வடிவம் எடுக்க வல்லவை. இதை மட்டும் கூர் தீட்டிவிட்டால் செத்த உறுப்புக்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். பின் பக்கம் முதுகு சொறிய மூன்றாவது கை தேவையென்றாலும் வளர்த்துக்கொள்ளலாம்.

முதுமை என்றால் என்ன என்பதை அறுதியிடுவதே சற்றுக் கடினமான செயல். நம் உடம்பின் செல்களுக்கெல்லாம் வயசானால் நமக்கும் வயசாகிவிட்டது என்று குத்து மதிப்பாகச் சொல்லலாம். நம் செல்கள் நிமிஷத்துக்கு நிமிஷம் பிரிந்து புதிதாகப் பிறந்துகொண்டே இருக்கின்றன; அவற்றின் டி.என்.ஏ பிரதி எடுக்கப்படுகிறது. டெலோமியர்கள் என்பவை க்ரோமசோம்களின் கொடுக்கு நுனியில் இருக்கும் டி.என்.ஏ சரடுகள். ஒவ்வொரு முறையும் டி.என்.ஏ தன்னைப் பிரதி எடுக்கும்போது, அதன் வால் கொஞ்சம் வெட்டுப்படுகிறது. நடு வயது மங்கையின் கூந்தல் நுனி போல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேதாரமாகிக் கடைசியில் செல் பிரிவதையே நிறுத்திவிடுகிறது; நமக்கு சீனியர் சிட்டிசன் சலுகைகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.

செல் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு, டெலோமியர்கள் வாலை இழக்காமல் பத்திரமாகப் போய்ச் சேருவது அவசியம். இதை வலுப்படுத்த டெலோமெரேஸ் என்ற நொதிப் பொருட்கள் இருக்கின்றன. இந்தத் தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு செல்களை சேதப்படாமல் பிரதி எடுக்க முடியும். (அவசரப்படாதீர்கள்; இந்த டெக்னாலஜி பத்திரமாவதற்கு நாள் இருக்கிறது. இதில் ஈடுபட்ட எலிகளுக்கு கான்சர் வந்துவிட்டது!)

ஸோமாடிக் ஜீன் சிகிச்சை என்று நம் மரபீனி அளவிலேயே வெட்டி ஒட்டி, இதய நோய்கள் போன்ற பரம்பரை வியாதிகளை உதற முடியும். டீ க்ரே என்பவர், இன்னும் பத்து வருடத்தில் எலிகளை ஏறக்குறைய சிரஞ்சீவியாக வைத்திருக்க முடியப் போகிறது என்று சொல்லி அதிர வைத்தார். அதற்குப் பத்து வருடம் கழித்து, மனிதர்கள். நம் ஆயுளில் இருபது வருடம் கூட்ட ஸ்பெஷல் லேகியம் வரப் போகிறதாம்.

இதெல்லாம் அவசரக் குடுக்கை அறிவிப்பு என்று சொல்பவர்களும் நிறையப் பேர். நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை, ஆயுள் அதிகரிப்பு மெல்ல மெல்ல ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறது. காரணம், நாம் தின்னத் தெரியாமல் எண்ணைப் பண்டங்களைத் தின்று கொழுத்துக் கொண்டிருக்கிறோம். உடல் பருமன், நம் வாழ்நாளை சுருக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால் கொழுப்பைக் கரைக்கவும் ஒரு மாத்திரை கண்டுபிடிக்காமலா போவோம்? சராசரி வயது மெல்லவாவது அதிகரித்து நூற்றாண்டு இறுதிக்குள் 85 அல்லது 90-ஐத் தொட்டுவிடும் என்கிறது இல்லினாய் பல்கலைக் கழகத்தின் குறிப்பு ஒன்று. எது எப்படியோ, எதிர்காலத்தில் பெரிய தட்டுப்பாடு ஒன்று வரப் போகிறது : சாவுக்குத் தட்டுப்பாடு!

இருபதாம் நூற்றாண்டிலேயே ஸ்டெடியாக வாழ்நாள் அதிகரித்து வந்ததன் பயனைப் பார்க்கிறோம். நம் அரசியல்வாதிகள் எல்லாம் பழுத்து மூத்து, பார்லிமெண்டில் போய்த் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். சீனியர் குடிமக்களின் மருத்துவ செலவுகள், அல்சைமர் மறதிகள், மூட்டு வலி, முதியோர் இல்லம், வயாகரா என்று செய்திகளில் தினசரி அடிபடும் ஏராளமான விஷயங்களில் இந்த வாழ்நாள் நீடிப்பு ஒரு சப் டெக்ஸ்ட்டாகப் பொதிந்திருக்கிறது.

Courtesy : smallworldbeauty.com
Courtesy : smallworldbeauty.com

மனித உடலுக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்களை வளர்த்து அறுவடை செய்யப் பண்ணைகள் இருக்கும். இவை முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இயங்கும். நாமக்கல்லில் ஒரு கிட்னி பண்ணை, நாகப்பட்டினத்தில் இதயப் பண்ணை. இப்போதே மனிதக் கருக்களிலிருந்து ஸ்டெம் செல்களைத் தயாரிக்க சீனா போன்ற நாடுகளில் சந்துக்கு சந்து ஆராய்ச்சி சாலைகள் உள்ளன. அவர்களிடம் ஃப்ரிஜ்ஜில் ஆயிரக் கணக்கில் உறைய வைத்த மனிதக் கருக்கள் இருப்பதால், முதலீடு செய்ய அமெரிக்க சேட்டுகள் பண மூட்டையுடன் அலைகிறார்கள்.

பயோ டெக்னாலஜியும் சாஃப்ட்வேர் மாதிரி ஆகிக்கொண்டிருக்கிறது – ஏழை நாடுகளுக்கு அவுட் சோர்ஸிங் செய்து மலிவான ஆராய்ச்சி, இன்னும் விழித்துக்கொள்ளாத சட்டங்கள், நிறையப் பணம், பரம ரகசியம்!

பணம் சம்பாதிப்பதில் வாழ்நாளைத் தொலைத்த வயசாளிகள், ரிட்டையர்மெண்டுக்குப் பிறகு மறு வாழ்க்கை பெறுவார்கள். தோலை இறுக்கி, மினுக்கிக் கொள்வார்கள். கம்ப்யூட்டரில் தங்கள் வளர்சிதை மாற்றங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள். கடையிலிருந்து நவீன ஸ்பேர் பார்ட்களை வாங்கிப் பொருத்திக்கொண்டு ஷைன் அடிப்பார்கள். அவற்றில் சில, ஸ்மார்ட் ட்ரக் என்னும் புத்திசாலி மருந்துகளை வேளா வேளைக்குத் தயாரித்து ரத்தத்தில் கலக்கும்.

வாழ்நாள் நீடிப்பு சிகிச்சைகள், வயதானவர்களின் மருத்துவ செலவுகளைக் கண்டபடி அதிகரிக்கப் போகின்றன. குண்டானவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள் எல்லோருக்கும் வாழ்நாளுக்கு காரண்டி கொடுக்கத் தயக்கம் இருக்கப் போகிறது. இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்காரர்கள் நம் பின்னாலேயே வந்து கண்காணித்து, நாம் தின்னும் ஒவ்வொரு உருளைக் கிழங்கு போண்டாவையும் குறித்து வைத்துக்கொண்டு பிரீமியத்தை ஏற்றப் போகிறார்கள்.

ஒரு சின்னக் கணக்கு: அமெரிக்காவில் மட்டும் பத்து கோடி தாத்தா பாட்டிகள். ஒவ்வொருவரும் வருடத்துக்கு பத்தாயிரம் டாலர் செலவழித்து மூப்பு சிகிச்சை எடுத்துக்கொண்டால், ஒரு ட்ரில்லியன் டாலர் ஆகிவிடுகிறது. இதனால்தான் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கு இப்போதே ஜொள்ளு சொட்டுகிறது.

மூவா மருந்துகளின் திறனும் விலையும் ஏறிக்கொண்டே போகப் போகின்றன. முதல் கட்டத்தில் பணக்கார பிசினஸ் புள்ளிகள், ஹாலிவுட் நடிகர்கள், இந்திய அரசியல்வாதிகள் போன்றவர்களுக்குத்தான் கட்டுப்படி ஆகும். அவர்கள் வீட்டு டிரைவர்களும் தோட்டக்காரர்களும் காலமாகி, அவர்களுடைய பிள்ளைகள் கிழவனார் வீட்டில் வேலைக்குச் சேருவார்கள்.

நம் தாத்தாக்களும் அவர்களுடைய தாத்தாக்களும் ஒரே சமயத்தில் உலகில் வாழ்வார்கள். ஒருவரும் லேசில் ரிட்டையர் ஆக மாட்டார்கள். எழுபது வயதான பாட்டி, தன் பிரசவத்திற்கு லீவு எடுப்பார். மற்றொரு முனையில், அரும்பு மீசை – முகப்பரு பருவம் இருபத்தைந்து முப்பது வயது வரை தொடரும். ‘எல்லோருமே 200 வயது வாழ்ந்தால், அவர்கள் முதல் நூற்றாண்டு வாழ்க்கையில் சாதித்ததெல்லாம் அற்பமாகும். வருமானம், சொத்து, ஸ்டேட்டஸ் எல்லாம் 100 வயதுக்கு மேலேதான் கிடைக்கும்’ என்கிறார் கென்னத் போல்டிங்.

இப்போதே ஜப்பானில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வேலை செய்கிறார்கள். இவர்களெல்லாம் திண்ணையில் உட்கார்ந்தால்தானே எங்களுக்கு வேலை கிடைக்கும் என்று இளைஞர்கள் பொருமுகிறார்கள். இதனால் அவர்களுடைய விடலைப் பருவமே நீடிக்கப்படுகிறது. வேலை தேடி அலைந்து, நிரந்தரக் கல்லூரி மாணவனாகவே நீண்ட வருடங்கள் கழிகின்றன. கல்யாண வயது தள்ளிப் போகிறது; செக்ஸ் இன்னும் சுதந்திரமாகிறது. குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைகிறது; நாட்டுக்கே நரைத்துக்கொண்டிருக்கிறது!

கணவன்-மனைவி உறவுதான் குட்டிச் சுவராகப் போகிறது : எதிர்காலத்தில் விவாக ரத்துக்கள் அதிகரிக்கும். இந்தப் பெரு வாய், பேருடம்புப் பெண்ணுடன் (அல்லது பிறந்த நாளைக்கூட நினைவு வைக்க முடியாத சோம்பேறி ஆணுடன்) இன்னும் 20, 30 வருடம் வாழ வேண்டுமா என்ற ஆயாசம்தான் இப்போது பல விவாக ரத்துக்களின் காரணம். இதுவே இன்னும் 60, 70 வருடம் இருக்கிறது என்று ஆகிவிட்டால் சகித்துக் கொள்வதற்கு சான்ஸே இல்லை!

சுமார் 25-30 வருடத்துக்கு ஒரு முறை பெற்றோரிடமிருந்து குழந்தைகள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த மாதிரி அவ்வப்போது சீராகப் பொறுப்பைக் கை மாற்றிக் கொடுப்பது நம் நாகரீகத்தின் முன்னேற்றத்துக்கு அவசியம். ரேடியோவை ஆன் செய்தால் இன்னும் தியாகராஜ பாகவதர் பாட்டே ஒலித்துக்கொண்டிருந்தால் உலகம் என்ன ஆவது?

இன்று வரை இருபது முப்பது வயதில் இருப்பவர்களுக்கு, பெரியவர் திடீரென்று மண்டையைப் போடுவதால் அல்லது போடப் போவதால், அவர் வாழ்நாளில் சேகரித்த சொத்து கைக்கு வருகிறது. இளைஞர்களுடைய மேற்படிப்பு, கல்யாணம், வீடு வாங்குதல், புதிய பிசினஸ் முயற்சிகள் என்று பல விதங்களில் வளர்ச்சியை ஃபைனான்ஸ் பண்ணுவது வயதானவர்களின் மரணம்தான்.

a-aging

இனிமேல் வயசாளிகளெல்லாம் இன்னும் அதிக வயசாகி, அந்தப் பணத்தை இறுக முடிந்துகொள்ளப் போகிறார்கள்; தங்களுடைய நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் சில அந்தரங்கமான சக்திகளையெல்லாம் மிகுந்த செலவில் பெருக்கிக் கொள்ளப் போகிறார்கள்; இளைஞர்கள் பெட்ரோல் பங்க்கிலோ, மெக்டொனால்ட்ஸிலோ பகுதி நேர வேலை செய்துகொண்டு காத்திருக்கப் போகிறார்கள்!

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தது இருபது வயதுகளில். ஐன்ஸ்டைன் e = mc2-ஐக் கண்டுபிடித்தது, போட்டோக்களில் காணப்படும் பம்பைத் தலை வயதில் அல்ல; இருபதுகளில்தான். உலகெங்கும் சுதந்திரப் போராட்டங்கள், விடுதலைப் புரட்சிகள், வேகமான மாற்றங்கள் எல்லாவற்றையும் கொண்டுவந்தவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர்களே.

எனவே பைபிளில் சொன்ன 70 வயசுக்கு மேல் யாரும் உயிர் வாழக்கூடாது என்கிறார் கஸ். ‘நல்லது கெட்டது தெரிந்து போய், ஞானம் வந்தபிறகு உயிர் வாழத் தேவையே இல்லை; இளைஞர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி விடுவதுதான் நியாயம்’ என்கிறார். (அவருக்கு என்ன வயதாகிறது?)

பயோ இஞ்சினியரிங்கில் முன்னேற்றம் அடைவது மட்டுமின்றி, அந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளப் பணமும் படைத்த மேற்கத்திய நாடுகளில் வயோதிக விஞ்ஞானத்தின் தயவில் எல்லோரும் வாக்கிங் ஸ்டிக்குடன் நடப்பார்கள். அந்த வசதி இல்லாத ஏழை நாடுகளில் எல்லோரும் சீக்கிரமே சாக, இளைஞர்களின் விகிதம் அதிகரிக்க, நாளைய உலகின் முன்னேற்றங்கள், புரட்சிகள் அனைத்தும் ஏழை நாடுகளிலிருந்துதான் புறப்படப் போகின்றன.

ஜெய் ஹிந்த்!