நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள் – 2

இக்கட்டுரை தொடரின் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்

மவுரிப் பழங்குடியினரிடத்தில் பண்பட்ட சமுதாய அமைப்பு, சடங்குகள், நம்பிக்கைகள் நிலவின. கேப்டன் குக் மவுரிகளிடம் திட்டவட்டமான சமூக நிர்வாக அமைப்பு இருந்ததாகக் கூறுகின்றார். குடும்பங்கள், குடிகள், குலங்கள் எனப் பிரிவுகள் இருந்தன. குலத்தலைவன்(Tribal Head) ‘அரிகி’(Ariki) எனப்பட்டான். அரிகியிலும் பலநிலைகளுண்டு. நீண்ட பாரம்பரியம் உள்ளவன் ‘அரிகி ரங்கி’ (Arikirangki) என்று அழைக்கப்பட்டான். ’ரங்கி’ என்றல் வானம் என்று பொருள். ‘அரிகி’-க்கு அடுத்த நிலையில் இருப்பவன் ‘தன’ (tana) எனப்படுவான்.

மவுரிகளில் உயர்குடியினர் ‘ரங்கதிர’ (Rangkatira) என்றழைக்கப்பட்டனர். அவர்களில் பலதார மணம் உண்டு. பொதுவாக முதல் மனைவி ஒத்தகுடியில் பிறந்தவளாக இருப்பாள். கணவன் வீட்டில் எல்லாப் பாத்தியதைகளுக்கும் உரிமைகளுக்கும் பெருமைகளுக்கும் அவளே உரிமை உடையவள். பின்னால் கணவனால் சேர்த்துக் கொள்ளப்பட்ட மனைவியர் முதன்-மனைவிக்கு அடங்கியவராகவே இருப்பர். சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுமாறு, ‘தொன்முறை மனைவி’ , ‘பின்முறைவதுவை’ என்னும் முறைபோலத் திருமணமுறை அமைப்பு காணப்படுகின்றது.

‘தோவுங்கா’(Tohunga) என்பது மவுரிப் புரோகிதனின் பெயர். ‘தோவுங்கா’ என்பது குலகுரு போன்றதொரு பதவி. மவுரி சமூகக் கூட்டமைப்பிலும் நிர்வாகத்திலும் தோவுங்காவுக்கு முக்கிய பங்கு உண்டு. இவனே மவுரிகளின் நன்றுதீது அறிந்த அறிவன்; எதிர்காலம் அறிந்த கணியன்; பிணி தீர்க்கும் மருத்துவன்; மெய்ப்பொருள் அறிந்தஞானி; வரலாற்றறிஞன்; புலவன். இன்னும் என்னென்னவோ..! இவனே மவுரித்தலைவனின் மக்களுக்குக் குடிவழி வரலாறு (Geneology), குலப்பெருமை, குலச்சடங்குகள், பாட்டுக்கள், சமூகநெறிமுறைகள், அறங்கள் முதலியவற்றைப் போதிக்கும் ஆசிரியன். நல்ல நினைவாற்றலும் பாட்டு இட்டுக் கட்டும் ஆற்றலும் உடையவனே நல்ல ‘தோவுங்கா’ ஆக முடியும்.

‘நங்கதங்க ரங்கதிரா’(Nangtanga Rangatira) என்று அழைக்கப்படுபவர்கள் மவுரியின் உயர்குடி மக்கள். நம் உழுவித்து உண்ணும் வேளாளர்களைப் போல. இவர்கள் ‘அரிகி’க்குத் துணை நிற்பவர்கள்.

‘நங்கதுதுவா’ (Nga Tutua) என்பவர்கள் நடுத்தர மக்கள்.;போர்வீரர்கள். ‘நங்கவரே’(Nga Ware) என்பவர்கள் தாழ்குடிகள். இவர்கள் அனைவருமே சுதந்திரமும் சமூக உரிமைகளும் உடையவர்கள்.

‘நங்க தவ்ரிக’ (Nga Taurekareka) போரில் தோற்றுச் சிறைபிடிக்கப்பட்டு அடிமையானவர்கள். உயர்குடிமக்களுக்கும் பிறருக்கும் ஊழியம் செய்யக் கடமைப்பட்டவர்கள். இவர்களுக்குச் சமூகத்தில் எந்தவித உரிமையும் கிடையாது.

இன்று மவுரிகளிடம் தோவுங்கா, நங்கவரே, தவ்ரிகரிகா முதலிய பிரிவுகள் இல்லை. சமூக மாற்றத்தில் அவையெல்லாம் ஒழிந்து போயின.

‘மானம்’ என்னும் உயரிய பண்பு பற்றித் தமிழிலக்கியங்கள் பேசுவதை அறிவோம். தன்னிலைமையில் தாழாமையும் தாழ்ந்தால் உயிர் வாழாமையும் மானத்தின் இலக்கணமாகக் கூறப்படும். தமிழில் நாம் ‘மானம்’ என்ற சொல்லை எப்பொருளில் வழங்குகின்றோமோ , ஏறக்குறைய அதே பொருளில் மவுரிகளின் மொழியிலும் ‘மனா’(Mana) என்ற சொல் வழங்குகிறது.

‘மனா’ என்னும் மவுரிச் சொல்லுக்கு ஆங்கிலத்தில் honour, influence, personality, power ,prestiege எனப் பல பொருள் கூறுவர். இவையெல்லாம் அந்தச் சொல் குறிக்கும் விரிந்த பொருள்களின் சில கூறுகள் தாம்.

மவுரித் தலைவர்கள் தங்கள் குடிப்பண்பினாலும் பாரம்பரியத்தாலும் மனாவைப் பெற்றுள்ளனர். பாரம்பரியம் எவ்வளவு பழமையும் தொன்மையும் வாய்ந்ததோ அந்த அளவுக்கு ‘மனா’வும் உயர்ந்ததாக இருக்கும்.

‘தோவுங்க’(புரோகிதன்) , அவன் பிறந்த குடியினாலும், அறிவாலும், இயற்கையைக் கட்டுப்படுத்தும் புலனுக்கு எட்டாச் சக்தியாலும் (Mystic Power) ‘மனா’-வைப் பெறுகிறான். நம் பார்ப்பனப் புரோகிதனைப் போல.

Courtesy : virtualoceania.net
Courtesy : virtualoceania.net

வீரத்தாலும் வெற்றியாலும் ‘மனா’ விரிவடையும். ‘மனா’ குறித்து மவுரிகளின் மனப்பான்மையும் பெருமையும் அவர்கள் தங்களுக்குள் போரிட்டு ஒருவரையொருவர் கொன்றழித்துக் கொள்ளப் போதுமானதாக இருந்தது. பழிக்குப்பழி வாங்கவும், மானத்தைக் காத்துக் கொள்ளவும், இழந்த மானத்தை மீட்டுக் கொள்ளவும் அவர்கள் போரிட்டனர். மானத்தை முன்னிட்டுத் தங்களுக்குள் இரக்கமின்றிக் கொடுமையாக நடந்து கொண்ட மவுரிகள், ஆங்கிலேயக் குடியேறிகளுடன் போரிட்டபோது, ‘இன்று போய் நாளை வா’ என மிகுந்த பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதை ஆங்கிலேயர்களே பாராட்டி எழுதி வைத்துள்ளனர்.

துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் அறிமுகம் ஆகுமுன் மவுரி நீண்ட தடிகளையும் குறுந்தடிகளையும்(Clubs) போராயுதங்களாகப் பயன்படுத்தினான். மரத்தாலும் பச்சைக் கற்களாலும் (Jade) ஆன இந்த ஆயுதங்கள் ஆபத்தில்லாதவை போலத் தோன்றினாலும், மவுரியின் கைகளில் பயங்கரமாகச் செயல்பட்டன. வில், அம்பு மவுரி அறியாதவை. வில்லம்புகளுக்கு உரிய மூலப்பொருள்க்ள் இங்குக் கிடைப்பனவாக இருந்தும் இந்தப் போர்க்கருவியைப் பற்றி மவுரி அறியாது இருந்தது கவனிக்கத் தக்கது. மவுரி கற்கால நாகரிகத்திலிருந்து திடீரென தற்கால நாகரிகத்திற்கு வந்து விட்டான்.

மவுரியைத் ‘தபு’(Tapu) என்னும் ஒருவகை நம்பிக்கை அலைக்கழித்தது. ‘தபு’ என்பது, இந்துக்களிடம் நிலவும் புனிதம், தீட்டு நம்பிக்கைகளைப் போன்றது. மக்கள், விலங்கு, மரம், வீடு, தோணி, மரப்பொம்மை, உயிருடைப் பொருள்கள், உயிரிலாப் பொருள்கள் போன்ற எதிலும் ‘தபு’ இருந்து தன்னைப் பாதிக்கும் என மவுரி நம்பினான். ‘தபு’-வைப் போற்றுதலும் உண்டு; அஞ்சுதலும் உண்டு. ‘தபு’வைப் போற்றுதலால் வரும் நன்மையைவிட, அதனால் விளையக் கூடிய தீங்கை நினைந்து அஞ்சுவதே மிகுதி.

மவுரி, தான் இருக்கும் கிராமத்திலிருந்து தொலைவில் உள்ள தன் உருளைக்கிழங்குத் தோட்டத்தில் ‘தபு’ செய்துவிட்டானேயானால் ஒரு கிழங்கும் கூடத் திருட்டுப் போகாது. ஆடுகளுக்குக் கூடத் ‘தபு’ செய்துவிடுவார்கள். ‘தபு’ செய்யப்பட்டுள்ள பொருளைத் தீண்டுவதால் விளையக்கூடிய தீங்குக்கு அஞ்சி யாரும் அதைத் தொடமாட்டார்கள். இவ்வாறு ‘தபு’-வின் உதவியினால் மவுரி தன் உடைமைகளைப் பாதுகாத்துக் கொண்டான். ‘தபு’ செய்யப்பட்டதற்கு அடையாளம் ஒன்றை வீடு, தோணி, தோட்டம், ஆட்டுமந்தை என எங்கு வைத்தாலும் அது துப்பாக்கி ஏந்திய காவலாளியைக் காட்டிலும் பலமடங்கு பாதுகாப்பினை அளித்தது. ‘தபு’ செய்யப்பட்ட தோட்டம் என அறியாது மவுரி எவனாவது காலை வைத்து விட்டுப் பின்னர் அது, ‘தபு’ செய்யப்பட்டது என அறிய வந்தால், பயத்திலேயே அவன் உயிரை விட்டுவிடுவான்.

சிந்தித்துப் பார்த்தால், நம் நாட்டிலும் ‘பகுத்தறிவு’, நாத்திகவாதம் பரவுவதற்கு முன் பாவபுண்ணியம்,தெய்வக்குற்றம், தெய்வதண்டனை பற்றிய அச்சம் குற்றங்கள் பரவாமல் தடுத்தன என்னும் உண்மை தெரிய வரும்.

மவுரித் தலைவனின் தலைமுடி ‘தபு’(புனிதம்) உடையதாகக் கருதப்படது. முடிவெட்டிக் ‘கிராப்’ வைத்துக்கொள்ளும் நாகரிகம் வந்துவிட்ட பின்னரும் கூட மவுரித் தலைவனின் முடித்துகள்களைத் திரட்டிப் புதைத்து விடுவார்களாம். ஏனெனில், பகைவர்களின் கையில் ஒருமுடி அகப்பட்டாலும், அதன் மூலம் சூனியம் செய்து தீங்கு விளைத்து விடக் கூடுமாம்.

மவுரி கண்ட இடத்தில் எச்சில் துப்பமாட்டான். அது நாகரிகமும் தூய்மையுமான பழக்கம் என்பதைவிட வேறு முக்கியமான காரணம் உண்டு. தன்னுடைய எச்சிலின் மூலம் எதிரி பில்லி சூனியம் வைத்துத் தனக்குத் தீங்கு விளைவித்துவிடக் கூடும் என்ற பயமே அந்த நல்ல பழக்கத்துக்குக் காரணம்.

மவுரி உணவை மிச்சம் வைக்காமல் முழுதையும் உண்டுவிடுவானாம். மிச்சமானால், அதைக் கையோடு எடுத்துச் சென்றுவிடுவானாம். அவன் தொட்டுச் சாப்பிட்ட மிச்சம் வைத்த உணவின் வழியே விரோதி அவனுக்குக் கேடு விளைவித்துவிடக் கூடுமாம். தபு செய்யப்பட்ட இடத்தைத் தீண்ட விரோதி அஞ்சுவான் என்பதால் எச்சிலான உணவு, தலைமுடி, வெட்டிய நகம் போன்றவற்றை மவுரி ‘தபு’ உள்ள இடத்தில் புதைத்துவிடுவானாம்.

நம் நாட்டிலும் ஜோசியர், சாமியார்கள் யாராவது இது போன்றதொரு அச்சத்தைத் தீவிரமாகக் கிளப்பிவிட்டால் பேருந்து நிலையம், சாலைகள் மற்றும் பொது இடங்களின் தூய்மை காக்கப்படுமல்லவா!

bay-of-plenty

மவுரி, தலையில் படும்படியாக உணவுப் பொருள்களைத் தொங்க விடமாட்டானாம். அந்த உணவைச் சாப்பிடுபவன் அவனுடைய தலையையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடுவானாம். இப்படியொரு பயம். ‘வளமை விரிகுடா’ (Bay of Plenty) என்னும் இடத்தில் ஒருமுறை வெள்ளைக்கார வணிகர்கள் வியாபார நிமித்தம் ‘கிடங்கி’ அமைத்திருந்தனராம். அப்பொழுது , பொழுது போகாத மவுரிகள் வேடிக்கை பார்க்கக் கூட்டம் கூட்டமாகக் ‘கிடங்கி’-க்குள் தம் விருப்பத்துக்கு அலைந்து திரியத் தொடங்கினராம். அந்தப் பொழுது போகாத கூட்டத்தினரால் தங்களுடைய வேலைகளுக்கு இடையூறு நேர்வதைத் தடுக்க வெள்ளையர்கள் ஒரு தந்திரம் செய்தனராம். கிடங்கியைச் சுற்றிலும் விட்டங்களிலும் குறுக்குச் சட்டங்களிலும் தலையில் படும் உயரத்தில் இறைச்சித் துண்டங்களைத் தோரணமாகத் தொங்க விட்டனராம். கம்பிவேலியும் தரமுடியாத பாதுகாப்பை இந்தத் தோரணம் தந்து மவுரிகளை அப்புறப்படுத்தியதாம்.

ஆங்கிலக்கல்வி பெற்றுக் கிறித்துவர்களாக மாறிய மவுரிகளையும் சகுனம் பில்லி சூனியம் பற்றிய அச்சமும் நம்பிக்கையும் விட்டு வைக்க வில்லை என மிஷனரிகள் தங்கள் குறிப்புக்களில் எழுதி வைத்துள்ளனர். மாதிரிக்கு ஒரு நிகழ்ச்சி.: “செல்வாக்குள்ள மவுரித் தலைவன் ஒருவன் இறந்து போனான். அவனைச் சர்ச்சில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவப்பெட்டியைக் குழியில் இறக்கும்போது, அதைச் சுமந்து வந்த வாலிபர்களில் இருவர் தரை வழுக்கிக் குழியில் விழுந்து விட்டனர். சுற்ற நின்றவர்கள் ‘ஐயோ’ என்று கூச்சலிட்டனர். அது வெறும் பச்சாதாபத்தால் எழுந்த குரல் அல்ல. வாலிபர்கள் சவப்பெட்டி மீது குழியில் விழுந்த நிகழ்ச்சி அவர்களுக்குத் தீய சகுனமாகப் பட்டது. அதன் பலன் சாவுதான் என அவர்கள் மிகவும் அஞ்சினார்கள். அது வெறும் தற்செயல் நிகழ்ச்சிதான் என்று மிஷனரிகள் எவ்வளவு வலியுறுத்தித் தேற்றியும் அவர்கள் மனந்தேறவில்லை. செத்துப்போன மவுரி தங்களுக்கு விடுத்த அழைப்பே அது என நம்பினர். அவர்கள் தங்கள் வீடு திரும்பி அச்சத்தோடு படுக்கையில் விழுந்தனர். ஊணும் உறக்கமும் இன்றிச் சில நாட்களில் உயிர் விட்டனர்.”

நம்நாட்டில் ஞானியர் பலர் தங்களுடைய பூத உடலைவிட்டு விண்ணுலகத்துக்குச் செல்லும் நாளையும் நேரத்தையும் முன்னதாகவே அறிந்து அறிவித்துள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளோம். அத்தகைய நிகழ்ச்சிகள் மவுரிகளிடமும் உண்டு. அத்தகைய நிகழ்ச்சி ஒன்றினை டான் (Donne) என்னும் ஆங்கிலேயர் தம்முடைய புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார். “ மவுரி தான் விரும்பும்போது தன்னுடலைக் கீழே போட்டுவிட்டு இறந்துவிடுவான் என்ற நம்பிக்கை நியூசிலாந்தில் பரவலாக உள்ளது. வெள்ளையரும் கூட இவ்வாறு நம்பினர். இந்த நம்பிக்கை எந்த அடிப்படையில் தோன்றியது என்று தெரியவில்லை. இந்த நம்பிக்கைக்கு வலுவூட்டும் செய்தி ஒன்றை நானறிவேன். ஒருநாள் காலை மவுரி ஒருவன் என்னிடம் வந்தான். அவ்ன் நல்ல தோற்றப் பொலிவுடன் எடுப்பாக இருந்தான். அவன், திரைப்படத்தில், ஆபிரஹாம் அல்லது மோசசின் வேடத்திற்கு ஏற்ற அழகிய வெண்தாடியுடன் இருந்தான். அவன் தன்னைப் புகைப்படம் எடுத்துக் கொடுக்கும்படி என்னிடம் கேட்டான். காலை நேரத்தில் அவன் என்னிடம் இப்படி வேண்டியது எனக்கு அசாதாரணமாகப்பட்டது. காரணம் கேட்டேன். அதற்கு அவன், ‘நான் இதுவரையில் புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை. வருகின்ற திங்கட் கிழமை புகைவண்டியில் வெலிங்டன் செல்லுகின்றேன். செவ்வாய் புதன் கிழமைகள் அங்கு என் குடும்பத்தாரோடு கூடி இருப்பேன். மறுநாள் வியாழக் கிழமையன்று இறந்துவிடுவேன்’ என்று எவ்விதச் சலனமுமின்றி வெகுசாதாரணமாகக் கூறினான். அவன் ஏதோ உளறுகின்றான் என்று அவன் கூறியதைப் பொருட்படுத்தாது விட்டேன். தேக ஆரோக்கியமும் உடல்வாகும் மனத்தெளிவும் உடைய அவன் இன்னும் ஒரு பத்து ஆண்டுகளாவது உயிரோடு இருப்பான் என அவனுக்கு உறுதி கூறினேன். புகைப்படம் எடுத்துக் கொள்ள அவனுக்கு உதவினேன். சாவு பற்றிய எண்ணமின்றி அவன் மகிழ்ச்சியடையக் ‘கிவி’-ப்பறவையின் இறகுகளால் ஆன அங்கி ஒன்றைப் பரிசளித்தேன். அவன் என்னிடம் கூறியபடி , திங்கட்கிழமை வெலிங்டன் நகருக்குச் சென்றான். வெள்ளிக் கிழமை எனக்குத் தந்தி ஒன்று வந்தது.,- வெள்ளிக்கிழமை வெலிங்டன் போய்ச் சேர்ந்த அவன் நேற்று உயிரை விட்டான் என்று.” (T.E. Donne, C.M.G. The Maoris)

பண்டைய மவுரிகள் சிங்காரித்துக் கொள்வதில் மிகுந்த விருப்புடையவர்களாக இருந்தனர். மவுரி ஆணும் பெண்ணும் தங்களுடைய தலைமுடியை நீளமாக வளர்த்து உச்சியில் கொண்டையாக முடித்துக் கொண்டனர். மவுரித் தலைவனின் கொண்டை ‘ஹூயா’-ப்பறவையின் வெண்மை நுனி கொண்ட சிறகுகளாலும் வெண்கொக்கின் சிறகுகளாலும் அலங்கரித்தனர். சுறா மீனின் எலும்பிலான சீப்பினைக் கொண்டையில் அலங்காரமாகச் செருகிக் கொண்டனர். இன்றும் ‘கோட்டு சூட்டில்’ உச்சிக் கொண்டை முடிந்துள்ள மவுரிகளை வெலிங்டன் நகரில் காணலாம்.

மணமான மவுரிப் பெண்கள் தலைமுடியைக் கொண்டையாக உச்சியில் முடிந்து கொள்ள, மணமாகாத பெண்கள் கூந்தலைத் தொங்க விட்டுக் கொள்ளுதல் சமூகப் பழக்கமாக இருந்தது. திருமணம் ஆன பெண்ணையும் ஆகாத பெண்ணையும் இக்கூந்தல் முடியும் முறை வேறுபடுத்தி அடையாளம் காட்டியது.

மவுரி வாலிபர்களுக்கு ‘ஹக்கா’ என்னும் போர்க்கூத்துப் போல மவுரிப் பெண்களுக்குப் ‘போய்’(Poi) என்னும் ஒருவகைக் கூத்து உரியதாகும். ‘போய்’-க்கூத்து ஆடும் பெண்கள் உயரத்திற்குத் தக்கபடி வரிசையாக அணியணியாக நிற்பர். ஃபேக்ஸ்(Fakes) நாரினைத் திரித்துச் சுமார் 9’’ நீளமுள்ள கயிற்றில் டென்னிஸ் பந்து போன்ற பந்துகளை இருபுறமும் கோத்துக் கையில் ஏந்தியிருப்பர். அந்த பந்து ‘புல்ரஷ்’ என்னும் ஒருவகைச் செடியின் இலைகளைத் திரட்டிச் செய்யப்படுவதாகும். அந்த பந்துக்குத்தான் ‘போய்’ என்று பெயர். ‘போய்’ களிமண்ணைத் திரட்டிச் செய்யப்படுவதுமுண்டு. அணித்தலைவி வரிசையின் ஓரத்தில் நின்று கொண்டு ஆடல் அசைவுகளுக்கு உத்தரவு கொடுப்பாள். ‘போய்’ ஆட்டத்தில் பெரும்பாலும் காதல்பாட்டுக்களே பாடப்பெறும். ஒரு கையாலும் இரண்டு கரங்களாலும் ‘போய்’
பந்தினைச் சுழற்றிக் கொண்டே இவர்கள் பாடி ஆடுவது செவிக்கும் கண்ணுக்கும் விருந்தாக இருக்கும்.

மவுரியின் குழந்தைப் பருவத்திலேயே காது குத்தும் பழக்கம் இருந்தது. பின்னர், மரத்துண்டுகளைச் செருகித் துளையைப் பெரிதாக்கிக் கொள்ளுவர். திருநெல்வேலி ஆச்சிகள் பாம்படம் அணிந்த காதுகளைப்போல நீண்ட தொள்ளைக்காதுகளை இவர்கள் அழகெனக் கருதினர்.

தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களால் ஆன நகைகளையோ வைரம் போன்ற விலைமதிப்புள்ள கற்களையோ இவர்கள் அறியார். Jade என்னும் பச்சை நிறக் கல்லே இவர்களுக்கு விலை மதிப்பு மிகுந்தது. வலது காதில் ஜேட் பச்சைக் கல்லையும் இடது காதில் ஷார்க் மீனின் கூரிய வெண்பல்லையும் தொங்கட்டானாக அணிந்து கொள்ளுவர். பலவகை மலர்க்கொத்துக்களையும் பறவைகளின் சிறகுகளையும் சிறுபறவைகளின் தலைகளையும் கால்களையும் காதணிகளாகச் செருகிக் கொள்ளுவதும் உண்டு.

ஆண்கள் மூக்குத் தொளைகளின் இடையில் ஓட்டையிட்டு அதில் அழகிய பறவைகளின் வண்ணமிகு சிறகுகளைச் செருகிக் கொள்வது ’ஃபேஷன்’ ஆக இருந்தது.

சிலசமயங்களில், பெண்கள், தங்கள் இறந்துபோன கணவனின் கடைவாய்ப்பற்களை எடுத்துக் காதணியாக அணிந்து கொண்டனர். தலைவனின் பல் மிகப் புனிதமானதாகவும் விலைமதிப்புடையதாகவும் கருதப்பட்டது. தலைவனின் தலையிலிருந்து எடுக்கப்பட்டதாதலால் பல் உயர்ந்த ‘தபு’ உடையதாகும். ‘பெட்டொனி’ (Petoni) என்பது வெலிங்டன் நகரின் ஒரு பகுதி. வெள்ளையர்கள் முதன்முதலில் இங்குதான் குடியேறினர். 1890ல் இங்கு ‘ஈபுனி’ என்றொரு மவுரித் தலைவன் இறந்து போனான். அவனுடைய மனைவி ‘ரங்கி ஈபுனி’ (Rangi E Puni) இறந்துபோன கணவனின் கடைவாய்ப் பற்களை எடுத்துத் தங்கத்தில் பதித்துக் (வெள்ளையராட்சியில் தங்கம் நியூசிலாந்துக்கு வந்துவிட்டது) காதணியாக அணிந்து கொண்டாளாம். அவளுடைய இந்தக் காதணியைப் ‘பாகியா’ நண்பர்கள் பாராட்டினால் அவள் மிகவும் மகிழ்ந்து போவாளாம். ஆனால், அதைத் தொட்டுப் பார்க்கமட்டும் யாரையும் அனுமதிக்கமாட்டாளாம். ஏனெனில், அந்தக் காதணியாகிய ‘பல்லணி’ நிறைந்த ’தபு’ வாய்ந்ததல்லவா?

maori_tatoo

உலகத்தில் உள்ள பழங்குடியினர் அனைவரிடமும் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் உண்டு என அறிவோம். அந்தப் பழக்கம் மவுரிகளிடமும் உண்டு. ஆண்மவுரிகள் முகத்தில் பச்சை குத்திக் கொள்வர். உண்மையில் அது பச்சி குத்திக் கொள்வது அல்ல; அது பச்சை வெட்டுவது. பச்சைக்கல்லால் (jade) செய்யப்பட்ட உளி போன்ற கூரிய கருவியால் பச்சை செதுக்கப்படுகிறது. தலையிலிருந்து தாடை வரையும், ஒருகாதிலிருந்து மற்றொரு காதுவரையும் ‘டிசைன் டிசைன்’ ஆக செதுக்கப்படுவது மவுரியின் பச்சை. இது ‘மொகோ’ (Moko)எனப்படும். இடுப்பிலும் தொடையிலும் பிட்டத்திலும்பச்சை குத்திக்கொள்ளுவதும் உண்டு. இது ‘ரோகி’ (Roke) எனப்படும்

பெண்களும் பச்சை குத்திக் கொள்வதுண்டு. ஆனால், ஆண்கள்போல முகத்தில் அல்ல. பெண்கள் மேலுதடு, கீழுதடு, முகவாய் மூன்றையும் பச்சை குத்திக் கறுப்பாக்கிக் கொள்ளுவர். கறுப்பிதழ்தான் மவுரியைக் கவரும் இதழகு. ‘செந்துவர் வாய்’, ‘பவளவிதழ்’ என மவுரிப் பெண்ணின் இதழ் அழகை கவிஞர்கள் வருணிக்க முடியாது. சிவப்பு, ரோஜா நிற உதட்டுச் சாயங்கள் இங்குப் பயன்படா. பெண்கள் மார்பிலும் தோளிலும் பச்சை குத்திக் கொள்வது அழகாகக் கருதப்படுகிறது. பச்சை குத்துவது, அதாவது செதுக்குவது மவுரிப்புரோகிதனின் புனிதமான பணிகளில் ஒன்று.

இப்பொழுடு முகத்தில் பச்சை வெட்டுள்ள ஆண் மவுரிகள் தென்படுவதில்லை. ஆனால், ‘வைதாங்க் நாள்’ போன்று மவுரிகளுக்குச் சிறப்பான நாட்களிலும் வேறு சிறப்பான நிகழ்ச்சிகளிலும் சாயத்தினால் ‘மோகோ’ வரைந்து கொள்கின்றனர். 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர் முகத்தில் பச்சை வெட்டுள்ள ஆண்மக்களை வெலிங்டனில் காண முடிந்தது என்கிறார்கள்.

மவுரியின் நரமாமிசப் பழக்கம் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். மவுரி நர மாமிசம் தின்றது, சமயச் சடங்கே; நரமாமிசத்தின் சுவைக்காக அல்ல. இந்தப் பழக்கம் மவுரிகளிடம் தோன்றியது பற்றிப் பல கதைகள் உண்டு.

மவுரியின் போர்க்கடவுள் ‘து’(Tu) சண்டையில் பகைவர்களைச் சாப்பிட்டாராம். அந்தக் கடவுளைத் திருப்திப்படுத்த மவுரிகளிடம் இந்தப் பழக்கம் தோன்றியதாம். இது ஒரு கதை.

மவுரிகளின் மூதாதையரில் ஒருவன், அவனைக் கேலி செய்த ஒருவனைப் பழி வாங்க அவனைக் கொன்று சாப்பிட்டுவிட்டானாம். அதிலிருந்து ஒருவனை மிகவும் கேவலப்படுத்த அவனைக் கொன்று தின்றுவிடுவது வழக்கமாக வந்துவிட்டதாம். இது மற்றொருகதை.

மவுரியை ஒருவன், ‘நீ நரமாமைச பட்சிணி’ என்று திட்டினாலும் பொறுத்துக் கொள்வானாம். ஆனால், ‘உங்களப்பனை ஒருவன் தின்றுவிட்டான்’ என்று கூறினால் அந்த அவமானத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியாதாம்.

இன்னும் ஒருகதை.

சுறாமீனுக்குத் ‘தூதுனூயி’ (Tutunui) எனும் மவுரிக் கடவுளின் அம்சம் உண்டாம். அத்தகைய சுறாமீன் ஒன்று கடற்கரையில் ஒதுங்கியதாம். அது தெய்வாம்சம் உடையதென்று அறிந்திருந்தும் பண்பாடற்ற மவுரி ஒருவன் அதனைத் தின்று விட்டானாம். ‘தூதுனூயி’-யை வணங்கும் ஒருவனுக்கு அச்செயல் பொறுக்க முடியாத அவமானமாக இருந்தது. அதனால், அவன், ‘தூதுனூயி’-யைத் தின்ற அந்த பண்பாடற்ற மவுரியைக் கொன்று தின்று ‘மனா’-வைக் காப்பாற்றிக் கொண்டானாம். இந்த நிகழ்ச்சி , தின்னப்பட்ட மவுரியின் சந்ததிக்கு அவமானமானதால், இவன் தன் ‘மனா’-வைக் காப்பாற்றிக் கொள்ள அவன் சந்ததியில் ஒருவனைக் கொன்று தின்றானாம். இப்படி, ‘இன்று நீ, நாளை நான்’ என்று ஒருவரை ஒருவர் கொன்று தின்று ‘மனா’-வைக் காத்துக் கொள்ள மவுரி இனமே நரமாமிசம் தின்னும் கூட்டமாக மாற்றம் அடைந்ததாம்.

போரில் தோல்வி அடைந்தவர்களை மேலும் கேவலப்படுத்தி இழிவு செய்வது உலகெங்கும் போர்வீரர்களிடம் காணப்படும் நாகரிகம்!?. இது வீர இலக்கியங்களிலும் காணப்படுகின்றது. சங்க இலக்கியத்தின் புறத்திணைப் பாடல்களும் இதற்கு விலக்கன்று. மவுரியின் நரமாமிசம் தின்னும் பழக்கம் போரில் தோற்றவனை மேலும் அவமானப்படுத்தத் தோன்றியது. ஆதலால், இப்பழக்கம் மவுரி ஆண்மக்களிடம் மட்டும்தான் இருந்தது. பெண் மவுரியிடம் இந்தப் பழக்கம் இல்லை. நரமாமிசம் பெண்களுக்குத் ‘தபு’.

போரில் முதலில் கொல்லப்படும் பகைவீரன் போர்த்தெய்வத்தின் முதல்மீன் (the first fish of Tu) எனப்படுவான். வென்ற வீரர்கள் அவனது உடலை நெருப்பில் சுட்டுத் தின்பராம்.

மவுரிகளின் நரமாமிசம் தின்னும் இந்தக் கொடூரமான பழக்கம் பற்றிக் கேப்டன் குக் முதல் கிறித்துவ மிஷனரிகள் வரை பலரும் இரத்தம் உறைந்து போகக் கூடிய நிகழ்ச்சிகள் பலவற்றைக் குறித்து வைத்துள்ளனர்.

நகைச்சுவை இழையோடும் சோகமான சம்பவம் ஒன்றோடு மவுரியின் நரமாமிசப் புராணத்தை முடித்துக் கொள்ளலாம்.

இது நீண்ட காலத்துக்கு முன் நடந்த நிகழ்ச்சி. குக் ஜலசந்திக்கு வடக்கே ‘அழகு விரிகுடா’(Pretty Bay) என்னும் இடத்தில், ஒரு மீன்பிடி கப்பல் கரைக்கு வந்தது. அதிலிருந்து நல்ல தண்ணீருக்காகப் பலர் கரைக்கு வந்தனர். அருகிலிருந்த நீரோடையிலிருந்து பீப்பாய்களில் நல்ல நீரை நிரப்பிக் கொண்டனர். அவர்களில் ‘பார்னீ’(Barney) என்பவ்னும் ஒருவன். இளம் வயதினன். ஐரிஷ்காரன். அவன் செந்நிறமான தலைமுடியும் வெண்ணிறமான தோலும் உடையவன். அழகாக இருப்பான். வேடிக்கை பார்க்க வந்த மவுரித்தலைவனின் கண்ணில் அவன் பட்டு விட்டான். அந்த மவுரித் தலைவன் பீப்பாய்களை உருட்டிக் கப்பலில் ஏற்ற உதவி செய்தான். மிகவும் மகிழ்ந்து போன மாலுமிகள், பீப்பாய்களை ஏற்றிய பின் மவுரியிடம் கை குலுக்கி விடை பெற்றுக் கொண்டனர். இறுதியாக வந்தவன் பார்னீ. கைகுலுக்குவது போலப் போக்குக் காட்டிப் பார்னியைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டு, மறைத்து வைத்திருந்த குறுந்தடியால் ஒரு போடு போட்டான். பார்னி சுருண்டு விழுந்தான். அவனை மீட்க வந்த மாலுமிகளை நோக்கி மவுரி பயங்கரமாகக் கத்தினான். அவர்கள் பயத்தால் உறைந்து போனார்கள். அந்த பயம் அவர்கள் ஓடிச்சென்று கப்பலில் ஏறித் தப்பிக்கத் தடையாக இருக்கவில்லை.

மவுரியின் இந்த வஞ்சகமான கொலைக்கு அவன் தரப்பில் ஒரு சமாதானமும் சொல்லப்பட்டது.

முதலாவது, செம்முடி கொண்ட இதுபோன்ற செம்பரட்டைத் தலையினை மவுரி இதற்கு முன் கண்டதில்லை. செம்பரட்டைத் தலையழகு மவுரியை மயக்கிவிட்டது. ஒரே வகையான உணவினை உண்டுவந்தவனுக்கு மாறுதலான உணவின்மேல் ஆசை பிறந்துவிட்டது. பார்னீ புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவன். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவனின் மாமிசம் அருவருப்பான துர்நாற்றம் வீசும். அதனால், அது மவுரிக்குப் பிடிக்காது.

சென்ற நூற்றாண்டில், மவுரி நரமாமிசம் தின்பவனாக இருந்ததுவும் ஒருவகையில் நன்மையே. இல்லாதபோனால், குப்பையைக் கொண்டு வந்து கொட்டுவதுபோல, பிரிட்டீஷ் அரசு கிரிமினல் குற்றவாளிகளைக் கொண்டுவந்து நியூசிலாந்தை நிரப்பியிருக்கும். அத்தகைய நிலைமையில், நியூசிலாந்து இன்றிருப்பது போன்று நல்லகுடி மக்களை உடையதாக இருந்திருக்குமோ என்பது ஐயமே.

(தொடரும்…)