சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள் (பகுதி 2)

padam11

(தமிழில்: எஸ்.ஆர். சந்திரன்)


12. ஜே.வி. கின்னியர் வில்சன், கி.பி. 1974இல் சிந்துவெளி எழுத்துப் பிரச்சினை குறித்த புதிய அணுகுமுறையைத் தொடங்கினார். மிகவும் பாதுகாப்பான ஒரு விடயத்திலிருந்து – எண்களைக் குறிக்கும் குறியீடுகளிலிருந்து – தமது ஆய்வினை அவர் தொடங்கினார்.

அடக்கத்துடனும் எச்சரிக்கையுடனும் தோராயமாகவும் அவர் தமது முடிவுகளை மேற்கொண்டார். பொருளாதாரம் (எடைகள், அளவைகள்) என்ற தெளிவான வரையறைக்குள் அமைந்த இவரது ஆய்வுக்கு ஹரப்பன் குறியீடுகளோடு ஒத்த (படித்தறியப்பட்ட) சுமேரிய எழுத்துகள் துணைநின்றன. முற்காலத்தில் சுமேரிய எழுத்துகளும் சிந்துவெளி எழுத்துகளும் ஒரே மூலத்திலிருந்து பிரிந்தன என்றும் அம்மூலக் கூறுகள், அவ் இருவகை எழுத்துகளிலும் காணப்படுகின்றன என்றும், எனவே, சிந்துவெளி மக்களில் ஒரு பிரிவினராவது சுமேரியக் கிளைமொழி பேசியிருக்க வேண்டும் என்றும் அவர் கருதினார்.

இக்கருத்தில் உள்ள பெரும் பிழை என்னவெனில், மொழியும் எழுத்தும் ஒரே வகையைச் சேர்ந்தவையாகத்தான் இருக்கவேண்டுமென்று அவர் கருதியதுதான். திராவிட மொழியும், ஹரப்பன் ஆய்வில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு மொழியே என அவர் கருதியுள்ளார். இருப்பினும், மொழியும் எழுத்தும் தனித்தனியே பிரித்துப் பார்க்கப்பட வேண்டிய விடயங்கள் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.

சிந்துவெளி முத்திரைகள் பெரும்பாலும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் உருவாக்கப்பட்டவை என அவர் கருதியதால், எடைகள் – அளவைகள் மட்டுமின்றி, தானியங்களும் இவ்வெழுத்துகளில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் தமது தேடுதலை மேற்கொண்டார். படம் 11இல் காணப்படும் எழுத்தினைத் தானியத்தைக் குறிக்கும் சொல்லாக அவர் அடையாளம் கண்டார். மொத்தத்தில், தன்னடக்கத்துடன் இம்முயற்சியில் ஈடுபட்டமையாலும், யதார்த்தமான அணுகு முறையினாலும், கின்னியர் வில்சனின் முயற்சி அறிஞர்களின் கவனத்தை ஈர்க்கிறது. இருப்பினும் சிந்துவெளி எழுத்துகளைப் படிப்பதற்கான வழி திறக்கப்படவில்லை.

13. இதுவரை நாம் விமரிசித்த ஆய்வு முயற்சிகள் அனைத்துமே, சிந்துவெளி மொழி, திராவிட மொழிதான் என்ற கருதுகோளை ஏற்றுக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகளே ஆகும். இது மிகவும் புதுமையான அல்லது தற்செயலாக நேர்ந்த கருதுகோளன்று. ஒருமித்து ஏற்றுக்கொண்ட ஒரு கருதுகோளே.

ஆனால் தேர்ச்சி பெற்ற தொல்லியலாளரான எஸ்.ஆர். ராவ், ஹரப்பன் மொழி தொன்மையான (வழக்கொழிந்த) ரிக் வேத மொழியையொத்த இந்தோ ஆரிய மொழியே என அடையாளம் காட்டி, அதன் அடிப்படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹரப்பன் பொறிப்புகளைத் தாம் படித்து, விளக்கி, வேறு எழுத்துகளிலும் விளக்கி எழுதிக்காட்டி, புரியும் வகையில் மொழிபெயர்த்திருப்பதாகக் கூறுகிறார்.

ராவ் அவர்களின் ஆய்வு நெறிமுறை மூன்று கருத்தோட்டங்களை அடிப்படையாகக் கொண்டது.

அ) திரு. ராவ், ஹரப்பன் பொறிப்புகளிலுள்ள சித்திர எழுத்துகள் கலப்பு வடிவங்கள் எனக்கொண்டு, ஒவ்வொரு சித்திரத்தையும் முதன்மை வடிவமாகவும், அதனுடன் கலந்த துணைக் குறியீடாகவும் கூறுபோடுகிறார்.

ஆ) ஹரப்பன் எழுத்து வடிவம், இரு நிலைகளில் பரிணாம வளர்ச்சி கண்டது என அவர் தெரிவிக்கிறார். தொடக்க நிலையைப் பக்குவமான நிலையென்றும், பிற்கால நிலையைப் பிந்நதிய நிலையென்றும் அவர் கொள்கிறார். இதன் பொருள் என்னவென்றால் ஹரப்பன் எழுத்து, சித்திர வடிவ வரைகோட்டு வடிவத்திலிருந்து வெறும் கோடுகள் – வளைவுகளான வடிவத்திற்கு வளர்ச்சியுற்றது என்பதாகும். அல்லது, ‘ஓரசைச் சொல்லாக நிலவிய, ஒரு கருத்தினைப் புலப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட சித்திர எழுத்து’ என்ற நிலையிலிருந்து ‘ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து எனத்தக்க அகர வரிசை எழுத்து’ என்ற நிலையை நோக்கி வளர்ச்சியுற்றது என்பதாகும்.

இ) தொடக்க நிலையான பக்குவ நிலையில், 62 அடிப்படை எழுத்து வடிவங்கள் இருந்தன என்றும், பிந்திய நிலையில் 20 அடிப்படை எழுத்து வடிவங்களே உள்ளன என்றும் அவர் கருதுகிறார். இப்பிந்திய நிலை எழுத்து வடிவங்களில் நான்கில் மூன்று பகுதி (அல்லது எழுபத்தைந்து சதமானம்) செமிடிக் மொழியின் அகர வரிசை எழுத்து வடிவங்களை அப்படியே ஒத்துள்ளன என்றும், பிந்திய நிலையைச் சேர்ந்த ஹரப்பன் எழுத்து வடிவங்களை செமிடிக் மக்கள் தமது மொழியை எழுதுவதற்காகக் கடன் வாங்கியதுதான் இவ்வாறான நிலைக்குக் காரணம் என்றும் ராவ் கருதுகிறார்.

எனவே, செமிடிக் எழுத்து ஒவ்வொன்றுக்கும் உரிய ஒலி வடிவத்தை அந்த எழுத்தோடு வடிவத்தில் ஒத்த ஹரப்பன் எழுத்துக்கும் வழங்கி இவ்வாறாக ஹரப்பன் எழுத்துகள் அனைத்தையும் ராவ் படித்துள்ளார். இவ்வாறு படிக்கப்பட்ட வாசகங்கள், பழமையான ஒர் இந்தோ ஆரிய மொழியில் அமைந்துள்ளன என ராவ் கூறுகிறார்.

ராவின் செயல் முறையும் முடிபுகளும் இந்தியன் ஹிஸ்டாரிகல் ரெவ்யூ – எட்டாம் தொகுதியில் (1983) ஐ. மகாதேவனால் மதிநுட்பத்துடனம் நியாயமான முறையிலும் வாதிட்டுத் தகர்க்கப்பட்டுவிட்டன.

ராவின் செயல்முறை முற்றிலும் அகவயச் சார்பும், பாரபட்சமும், பொருத்தமின்மையும் நிரம்பியது. “தமது முடிபுகளை நிறுவ, வேறு தொடர்புபடுத்தும் சான்றுகள் இல்லாத நிலையில், இவ்வாறெல்லாம் படித்து விளக்கமளிக்க எப்படி ராவ் அவர்களால் முடிந்தது என்பது புதிராக உள்ளது” என ஐ. மகாதேவன் கூறுவது சரியான திறனாய்வே. ராவ் பயன்படுத்தும் சில சொல்லாட்சிகள்கூடக் குழப்பளிப்பனவாகவும் அரைகுறையாகவும் உள்னன.

சிந்துவெளி எழுத்துகளுக்குரிய ஒலிகளைக் கண்டறியும் திறவுகோல் என செமிடிக் எழுத்துகளைப் பயன்படுத்துவது வியப்பளிக்கிறது மட்டுமின்றி, வரலாற்றின் கால வளர்ச்சி நெறிமுறைக்கு முற்றிலும் முரணானதாகவும் அமைகிறது. சில வேளைகளில் ராவ் தவறான திசையிலும் இடமிருந்து வலமாகவும், சில வேளைகளில் ஒரே வாசகத்தை இரண்டு புறமாகவும் – இடமிருந்து வலமாகவும், மீண்டும் வலமிருந்து இடமாகவும் – படிக்கிறார்.

முத்திரையின் நோக்கம், அது குறிக்கும் பொருள் முதலியவற்றோடு சிறிதும் தொடர்பற்ற வகையிலும் சில வாசகங்களைப் படித்து விளக்கமளிக்கிறார். ஓரசைச் செதரஙடிரகங குறிக்கும் குறியீட்டு நிலையிலிருந்து அகர வரிசை வரிவடிவ நிலைக்கு வளர்ச்சியடைந்து வரும் எழுத்தாக ஹரப்பன் எழுத்தினைக் கருதுகிறாரல்லவா? அவ்வாறு கொள்வதனால், ஒரே ஒரு குறியீடு மட்டும் கொண்ட முத்திரைகள் உள்ளன. அவற்றுக்கு எவ்வாறு பொருள் கூறுவது? முழுமையான ஒரு கருத்து ஒரே ஒரு குறியீட்டு எழுத்து மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதே சரியான விளக்கமாகும். ஓர் அசை அல்லது ஓர் ஒலியால் மட்டும், ஒரு வாசகத்துக்குரிய முழுமையான கருத்தைக் கூறிவிட முடியாது.

ராவின் முயற்சியால் இறுதியில் விளைவது என்னவெனில், இது இ, உ போன்ற உயிர் ஒலிகள் இல்லாத, நாவொலிகள் இல்லாத பால் வேறுபாடும், எண்களும் இல்லாத, சிறப்புப் பெயர்களுக்குப் பின்னர் தகுதிகள் குறிக்கப்பெறும் வழக்கமற்ற, ஓரசை மொழியான ஓர் இந்தோ ஆரிய மொழியாகும். ஐ. மகாதேவனின் கூற்றுப்படி கருத்து உருவ எழுத்துகளை நிரம்பக் கொண்ட ஹரப்பன் பொறிப்புகளில், தாம் விரும்பியவற்றைப் படிப்பதற்காக, சமஸ்கிருதத்தையே, விசித்திரத் தன்மைகள் கொண்ட ஓரசை மொழியாக ராவ் மாற்றிவிடுகிறார். ராவின் ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்வதற்கு, சாதாரண நம்பிக்கை மட்டும் போதாது; இயற்கைக்கு முரணான நிகழ்வுகளிலும் நம்பிக்கை இருக்கவேண்டும்.

14. கராச்சிக்கு வடகிழக்கே 25 மைல் தொலைவில் அமைந்துள்ள அல்லாதினோ எனப்படும் ஹரப்பன் நாகரிக ஊரில் தொடர்ந்து அகழாய்வு செய்து வந்தவர் வால்டர் ஏ. ஃபேர்செர்விஸ் ஜுனியர் என்ற அமெரிக்கத் தொல்லியலாளர் ஆவார். அவர், தமது அகழாய்வுக் கண்டுபிடிப்புகளாலும் மேலும் உற்சாகமடைந்து, ஹரப்பன் எழுத்துகளைப் படிக்கும் முயற்சியில் இறங்கினார். நிறைந்த அளவில் கிடைத்துள்ள தொல்லியல் தடயங்கள் பற்றிய குறிப்புகள் இவ்எழுத்துகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1976 ஆம் ஆண்டில் அவர் தமது ஆய்வைத் தொடங்கினார். ஹரப்பன் எழுத்துகள் இடப்புறத்திலிருந்து வலப்புறம் நோக்கி எழுதப்பட்டுள்ளன எனக் கருதி, 1976, 1977 ஆம் ஆண்டுகளில் இவ்எழுத்துகளைப் படித்து விளங்கிக் கொள்வதற்கான ஒரு முன்மாதிரியை இவர் வரைந்தார். ஆய்வறிஞர்கள் அனைவரும் ஏகமனதாகவும், ஆதாரபூர்வமாகவும் ஒருமித்து ஏற்றுக்கொண்ட கருத்துக்கு (வலப்புறத்திலிருந்து இடப்புறம் நோக்கி எழுதப்பட்டுள்ள எழுத்து முறை) என்ற கருத்துக்கு மாறாக அவர் இவ்வாறு கருதியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

1977இல், தமது கோட்பாட்டுக்கு ஆதரவாகப் பல வாதங்களை முன்வைத்து அவர் எழுதிய கருத்துகள் அனைத்துமே, 1980இல் ஐ. மகாதேவனால் திறம்படி மறுக்கப்பட்டுவிட்டன. ஐ. மகாதேவனின் இந்த ஆய்வுக் கட்டுரை, ‘புராதத்துவா’ ஒன்பதாம் இதழில் (1980) வெளியாகியுள்ளது. “ஹரப்பன் வாசகங்களை இடப்புறத்திலிருந்து வலப்புறம் நோக்கிப் படித்து விளக்கமளிக்கும் ஆய்வு எதனையும் நாம் தீவிரப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்று மகாதேவன் கூறுவதை நாம் ஏற்கிறோம். ஃபேர்செர்விஸின் தொடக்ககால முயற்சிகள், இத்தவறான தெளரிவினால் பயனற்றுப்போயின. ஆயினும், ஹரப்பன் எழுத்துகளின் நுட்பங்கள் பற்றி, ஃபேர்செர்விஸ் அளவுக்கு வேறெந்த அறிஞருமே கூர்மையான கவனத்தைச் செலுத்தவில்லை என்பதையும் நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஈடற்ற தொல்லியல் திறனும், ஹரப்பன் மக்களின் வாழ்வியலை உணர்த்தும் பொருட்கூறுகள் பற்றிய (அகழாய்வுகளின் பயனாக ஏற்பட்ட) தேர்ந்த ஞானமும் ஃபேர்செர்விஸுக்கு இருந்தது, மற்ற ஆய்வாளர்களைக் காட்டிலும் சாதகமான அம்சமாகும். எனவே, எதிர்பார்த்தது போலவே, தொல்லியல் சான்றுகளால் நிறுவத்தக்க சில செய்திகளை (உதாரணமாக, ஹரப்பன் நாகரிகம் கோதுமை – பார்லி ஆகியவற்றைப் பயிர் செய்து வாழும் வாழ்க்கையையே சார்ந்திருந்தது என்ற உண்மை) உறுதிப்படுத்தவும், ஹரப்பன் முத்திரை எழுத்துகளில் இச்செய்திகள் எவ்வாறு பொருள்தொடர்ச்சியுடன் குறிப்பிடப்படுகின்றன எனப் புலப்படுத்தவும் அவர் முயன்றார். இது ஓர் ஆரோக்கியமான, யதார்த்தமான நடைமுறை ஆகும்.

தொடக்கத்திலேயே ஹரப்பன் முத்திரை எழுத்துகள் சித்திர வடிவ எழுத்துகள் என்றும், அவற்றில் கூறப்படும் செய்தி, மனிதர்களின் சமூகத்தகுதி (பதவி போன்ற படிமுறைத் தகுதி) பட்டம் ஆகியவற்றைக் குறிக்கும் தொன்மையான ஒரு வகையின் வளர்ச்சியுற்ற வடிவமே என்றும் அவர் முடிவு செய்தார்.

பல தடவை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தும், சக ஆய்வாளர்களின் கருத்துகளை அசைபோட்டும், இறுதியில் (1980 இல்) ஹரப்பன் மொழி என்பது திராவிட மொழியின் ஒரு வடிவமே என்றும், அம்மொழியின் வேர்ச்சொற்கள் தமிழ் மற்றும் கன்னட வேர்ச்சொற்களோடு நெருங்கிய ஒற்றுமையுடையன என்றும், ஹரப்பன் எழுத்து என்பது கருத்து எழுத்து என்றும், சற்றொப்ப 400 எழுத்துகள் உள்ளன என்றும், பொதுவாக இவ்எழுத்துகளை வலப்புறமிருந்து இடப்புறம் நோக்கியே வாசிக்க வேண்டுமென்றும் அவர் தீர்மானித்தார்.

1982 மார்ச் மாதத்தில், தமது வாசிப்பினைப் பற்றி அவர் கூறும்போது, “இது ஒரு முன்மாதிரி வடிவமே தவிர ஹரப்பன் எழுத்துகளைப் படித்து விளக்கமளித்து விட்டதாக நான் கூறிக் கொள்ளவில்லை” என அடக்கத்தோடு ஒத்துக்கொள்கிறார்.

மேலும், “ஹரப்பன் நாகரிகத் தடயங்களாக, அகழ்வாய்வின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிற ஏராளமான செய்திகள் மற்றும் விவரங்களுடன் தொடர்புபடுத்தி, ஹரப்பன் எழுத்துகளைப் படிக்க முயற்சி செய்வதுதான் சரியான அணுகுமுறை” என்று அவர் வலியுறுத்துவது ஏற்றுக்கொள்ளத் தக்கதே.

ஹரப்பன் மொழிச் சொற்களை இன்றளவும் தம்முள் பாதுகாத்துவரும் மொழிகளாகப் பழந்தமிழையும் பழங்கன்னடத்தையும் அவர் குறிப்பதன் காரணம் என்னவெனில், வடதிராவிட மொழிகள், ஹரப்பன் மொழியைவிடப் பழமையானவை என்றும், (அதாவது ஹரப்பன் நாகரிகக் காலகட்டத்திற்கு முன்னரே வடதிராவிட மொழிகள் திராவிட மொழியிலிருந்து தனியாகப் பிரிந்து விட்டனவென்றும்) ஹரப்பன் நாகரிகம் காட்டும் நகர வாழ்க்கை, ஊரகப் பண்ணை விவசாயம் போன்ற பண்பாட்டு நிலைகளை வடதிராவிட மொழிச் சொற்களில் காண இயலவில்லை என்பதால் வடதிராவிட மொழிகளைப் பேசிய மக்கள் வேறு பண்பாட்டுத் தளத்தில் வாழ்ந்ததாகக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கருதுவதுதான். இக்கருத்தும் சிந்தித்துப் பார்க்கத்தக்க நல்ல கருத்தேயாகும்.

ஹரப்பன் நாகரிகத்துக்கேயுரிய சில பொருள்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, இத்தகைய பெயர்ச்சொற்கள் உட்பட, தொல்லியலாளர்கட்குப் பரிச்சயமான கலைப்பொருள்கள் மற்றும் கருவிகளுக்கு உரிய பெயர்களை மீட்டமைக்கும் பணியைத் திராவிடவியல் நிபுணர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஃபேர்செர்விஸ் விரும்புகிறார்.

ஹரப்பன் மொழி திராவிட மொழியே என்ற தமது கருதுகோளுக்கு ஆதரவாக, மடை திறந்த வெள்ளம்போல் தொல்லியல் – மானிடவியல் சான்றுகளை அவர் குவிக்கிறார். அவைபற்றி நான் இங்கு விவாதிக்கப்போவதில்லை. ஆயினும் ஃபேர்செர்விஸின் விருப்பம், ஆய்வாளர்கள் கவனித்தற்குரியது. அவர், ஹரப்பன் எழுத்துகளைப் படிக்கும் முயற்சியைப் பின்வரும் நான்கு கண்ணோட்டங்களின் அடிப்படையில் மேற்கொண்டுள்ளார்.

1. முத்திரைகள், அம்முத்திரைகளுக்குரிய தனிப்பட்ட மனிதர் பற்றிய விவரங்களையும் அடையாளங்களையும் கொண்டிருப்பது இயல்பு. வேறு விதத்தில் இதனைச் சொல்வதானால், ஆட்பெயர்கள், அவர்களுடைய தகுதிகள், பட்டங்கள், பதவிகள், அவர்கள் வசிக்கும் இடங்கள் போன்றவற்றை இம்முத்திரைப் பொறிப்புகளில் நாம் தேட வேண்டும்.

2. ஹரப்பன் எழுத்து தற்கால சீன ஜப்பானிய எழுத்துகள் போன்ற கருத்து உருவ எழுத்தேயாகும்.

3. குறிப்பிட்ட ஓர் ஒலியைக் குறிக்கும் சித்திரம், கருத்தளவில் தனக்குத் தொடர்பில்லாத – ஆனால் அதே ஒலியால் குறிப்பிடப்படும் வேறொரு பொருளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. (இது ரீபஸ் கோட்பாடு எனக் குறிப்பிடப்படும்.)

4. திராவிட மொழி – குறிப்பாகக் கன்னடமும் தமிழும் ஹரப்பன் மொழியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு கருதுதற்கு ஏதுவாக இருப்பனவற்றுள் ஒன்று, எட்டு என்ற எண் ஹரப்பன் நாகரிகத்தில் அடிப்படை எண்ணாக இருப்பதும் ‘எண்’ என்ற தமிழ் – கன்னடச் சொல், எட்டு எட்டாக எண்ணும் முறையே தொடக்கத்தில் நிலவிய முறை என்பதை உணர்த்துவதும் ஆகும். மற்றொன்று தானியங்களுள் ஒரு வகையின் பெயரும், திங்களைக் (சந்திரனையும், மாதத்தையும்) குறிக்கும் பெயரும் (நெல், நிலா என்பன) தொடர்புடைய பெயர்களாக இருப்பது.

ஃபேர்செர்விஸ் திராவிட மொழியியல் நிபுணரல்லர் என்பது தெளிவாகத் தெரியும் ஒரு குறைபாடாகும். வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய அவருடைய அருமையான நூலைக் கவனமாகப் படித்துப் பார்த்தபின்னர், அவர் ஒரு தலைசிறந்த தொல்லியலாளர் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் ஏற்படவில்லை.

மேலும் அவரிடம் நுண்ணறிவு, விடா முயற்சி, நேர்மை, சுயசிந்தனை ஆகிய அருங்குணங்களும் உள்ளன. ஆயினும் திராவிட மொழியியல் பற்றி அவருக்குத் தெரிந்திருந்த விடயங்களில் பெரும் பிழைகள் இருந்தன. மேலும் அவருடைய மொழியியல் அறிவே அரை குறையானதுதான். ‘சயின்டிபிக் அமெரிக்கன்’ மார்ச் 1983 இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இக்குறைபாடு தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிறது.

ஹரப்பன் எழுத்துகளைப் ‘படித்து’ அக்கட்டுரையில் அவர் விளக்கிக் கூறியிருப்பதெல்லாம், ஒரு திராவிடவியல் நிபுணரின் நோக்கில் விமரிசிக்கப் புகுந்தால், பொருளற்றவை என்றே கூற வேண்டும். 1976 ஆகஸ்டில் ஃபேர்செர்விஸ், ஹரப்பன் எழுத்துகளைப் படிப்பதற்குரிய திறவுகோலைத் தாம் கண்டறிந்ததாக உறுதிபட நம்பினார். இது அவரது நம்பிக்கையின் உச்சகட்டம் எனலாம். இதன் பின்னர் அவரது முயற்சிகளில் நிதானம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது நிலைப்பாடு என்னவெனில், நல்ல கல்வியறிவு படைத்த ஒரு நாகரிகமான ஹரப்பன் நாகரிகத்திற்குரிய மொழியினையும் எழுத்தினையும் புரிந்து கொள்வதற்கு மொழியியல் அறிவும் மொழிகள் பற்றிய அறிவும் தேவையென்பதை அவர் ஏற்கிறார்.

அதே நேரத்தில், இத்தகைய மொழியியல் மற்றும் மொழிகள் பற்றிய அறிவு நிறைந்த நிபுணர்களுக்குத் தொல்லியல் அறிவினைக் கையாளும் திறன் இல்லையென்பதே தற்போதைய நிலையென அவர் அழுத்தமாகக் கூறுகிறார். அவர் கூறுவது சரிதான். ஆயினும் அவருடைய வாதத்தின் மறுபக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். அதாவது தொல்லியல் நிபுணர்களுக்கு மொழியியல் மற்றும் மொழிகள் பற்றிய நிபுணத்துவம் இல்லையென்பதையும், இக்குறை காரணமாகத் தொல்லியல் நிபுணர்களின் முயற்சிகளே முரியடிக்கப்பட்டு விடுவதையும் நாம் உணர வேண்டும்.

ஹரப்பன் எழுத்து என்பது ஹரப்பன் வாழ்வியலின் ஒரு வெளிப்பாடேயாதலால், ஹரப்பன் மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், அவர்களுடைய நாகரிகத்தை மறைக்காது விளக்கும் ஒரு செய்தியறிக்கையாகத்தான் அதனை நாம் கருத வேண்டும். எனவே தொல்லியல் அகழாய்வுகள் மூலமாக இதுவரை நமக்குக் கிடைத்திருக்கிற, (நம்மால் மேலும் ஒப்பிட்டுச் சரி பார்க்கத்தக்க, பயனுடைய) பல விவரங்களையெல்லாம் கண்ணாடிபோலப் பிரதிபலித்துக் காட்டக்கூடிய வகையில் அமைந்தால்தான் ஹரப்பன் எழுத்துகளைப் படித்து விளங்கிக்கொள்ளும் முயற்சியும் பயனுடைய முயற்சியாக இருக்கும்.

இத்தகைய அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முயற்சி, இறுதியாக நம்மை எங்கு இட்டுச்செல்லும் எனில், தொல்லியலாளர்கள், மானிடவியலாளர்கள், மொழியியலாளர்கள், பன்மொழியறிஞர்கள் மற்றும் சங்கேத எழுத்து வல்லுநர்கள் ஆகியோர் இணைந்து, திறந்த மனத்துடனும், பரந்த அளவிலும், தீவிரமாகவும் மேற்கொள்ளும் முயற்சியின் தொடக்கத்திற்கு நம்மை இட்டுச்செல்லும். அந்நிலை வரும்போதுதான், ஹரப்பன் எழுத்துப் பிரச்சினைக்கும் ஏதாவதொரு தீர்வு ஏற்படும்.

15. சிந்துவெளி எழுத்துகளைக் கணினி உதவியுடன் பகுத்தாய்வு செய்யும் முயற்சி இந்திய நாட்டில் 1971ஆம் ஆண்டு தொடங்கிற்று. ஐராவதம் மகாதேவன், சென்னையில் சிலகாலம் தொடக்க முயற்சிகளை மேற்கொண்ட பின்னர், பம்பாயிலுள்ள தலைசிறந்த கணினி நிபுணர்களின் உதவியைப் பெற்றார். 1977ஆம் ஆண்டில் ஐ. மகாதேவன் வெளியிட்ட ஹரப்பன் சொல்லடைவு ஒரு பிரும்மாண்டமான படைப்பாகும்.

ஹண்ட்டர் 1934ஆம் ஆண்டில் 3750 எழுத்துப் பொறிப்புகளையும், சோவியத் நிபுணர் குழுவினர் 6300 எழுத்துப் பொறிப்புகளையும், பின்லாந்து நிபுணர் குழுவினர் 9147 எழுத்துப் பொறிப்புகளையும் பட்டியலிட்டுள்ளனர். ஆனால் மகாதேவனோ, மொத்தம் 11,303 எழுத்துப் பொறிப்புகளைப் பட்டியலிட்டுள்ளார்.

இவ் எழுத்துப் பொறிப்புகளில், தெளிவான, தனித்தன்மையுடைய எழுத்துக்கள் என 417 வகையான சித்திரங்களை அவர் தொகுத்துப் பட்டியலிட்டுள்ளார். மகாதேவனின் இச்சாதனையில் ஏதேனும் குறையிருப்பின் அதனைப் பின்லாந்து நிபுணர் குழுவினர் தொகுத்துள்ள அடைவு வரிசை மூலம் நாம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். அதே போலப் பின்லாந்து நிபுணர் குழுவினர் தொகுத்துள்ள அடைவு வரிசையில் தென்படும் குறைகளை மகாதேவன் தொகுத்துள்ள அடைவுடன் ஒப்பிட்டும் சரி செய்து கொள்ளலாம்.

எனவே இன்றைய நிலையில் (1983ஆம் ஆண்டில்) சிந்துவெளி எழுத்துப் பிரச்சினையில் இதுவரை சாதிக்கப்பட்டது என்னவெனக் கேட்டால், அறிஞர்களின் சிந்தையைக் கொள்ளைகொள்ளும் இவ்விரு சொல்லடைவுத் தொகுதிகள்தாம் சாதனைகள் என்று நாம் நம்பிக்கையுடன் கூறிக்கொண்டு பெருமைப்படலாம்.

மகாதேவன் ஹரப்பன் எழுத்துகளைப் படித்து விளக்கும் முயற்சிப் பயணத்தை இருவேறு முரண்பட்ட பாதைகளில் மேற்கொள்கிறார். ஒன்று, கடுமையான ஒழுங்குக்குட்பட்ட தர்க்கவியல் சார்ந்த, சட்ட திட்டமான அணுகுமுறை. மற்றொன்றோ, பல்வேறு மூலங்களிலிருந்து தமக்குக் கிடைத்த தரவுகளினாற் பெற்ற ஞானத்துடன் தமது கற்பனையாற்றலையும் உள்ளுணர்வையும் கலந்து காணும் மனக்காட்சி.

சோவியத் மற்றும் பின்லாந்து நிபுணர்கள் படைத்தளித்த அடித்தளக் கட்டுமானப் பணியிலிருந்து தமது முயற்சியை மகாதேவன் தொடங்கினாலும், வேறு தொன்மையான மொழி எழுத்து முறைகளின் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி முறைக்கு இணையான ஒரு முறைமையையே ஹரப்பன் எழுத்துகளும் பின்பற்றியிருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தமது முயற்சியைத் தொடர்கிறார்.

இத்தகைய ‘இணையான வடிவமைப்பு – வளர்ச்சி முறைமை’ என்பது ஹிட்டைட் மொழி எழுத்துகள் தொடர்பாக எமில்ஃபோரெரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முறையாகும். தமிழ் பிராமிக் குகைக் கல்வெட்டுகளை வெற்றிகரமாகப் படித்து விளக்கமளித்ததன் காரணமாகவே மகாதேவன் இந்த ஆய்வு முறையைப் பயன்படுத்துவதில் மேலும் ஊக்கமடைந்தார்.

[அசோகனின் பிராமிக் கல்வெட்டுகளில் எழுத்துகளுக்கு அளிக்கப்படும் ஒலி மதிப்பீடுகள் தமிழ் பிராமி எழுத்துகளுக்கும் அளிக்கப்படுதல், மெய், உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் ஆகிய வடிவங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகப் பட்டிப்புரோலு முறையையொத்த ஒரு முறை தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் பின்பற்றப்பட்டிருப்பது போன்றவை. மொ-ர்.] தமிழ் பிராமிக் குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் ஒப்புமைகளை மட்டுமின்றி, ஆரிய மொழிகளிலும் இடைக்காலத் தமிழிலும் காணப்படும் இத்தகைய இணையான வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி முறைமைகளையும் மகாதேவன் கருத்தில் கொண்டார்.

ஹரப்பன் சொல்லடைவை வெளியிட்ட பின்னர், ஹரப்பன் மொழிக்குரிய இலக்கணத்தின் சில கட்டுமானக் கூறுகளை மகாதேவன் வடிவமைத்தார். அவரே குறிப்பிடுகிறபடி, இவ்வடிவமைப்பு “கண்ணுக்குப் புலனாகும் தன்மையுடையதே தவிரக் காதுக்குப் புலனாவதன்று.” அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட மொழியின் அமைப்புடனும் ஒலியளவில் இணைத்து இனங்காட்டப்படாமல், எழுத்துகள் மற்றும் சொற்களின் இலக்கணக் கட்டுமானம் குறித்த பகுப்பாய்வாக இவரது ஆய்வு திகழ்கிறது. தற்போது, இரு மொழிகளில் காணப்படும் இணையான முறைமைகள் பற்றிய தமது கோட்பாட்டில் மகாதேவன், முதன்மையான இரு மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

அ) ஒரு சித்திர வடிவ எழுத்துடன் கருத்தளவில் தொடர்பில்லாவிடினும், அச்சித்திர வடிவ எழுத்துடன் ஒத்த ஒலியுடைய பல்வேறு சொற்களைத் தேடும் முயற்சியை மகாதேவன் விட்டுவிட்டார். அதற்கு மாறாக, பிற்காலத்திய இருவேறு இந்திய மொழிகளில் (அவை இந்தோ ஆரிய மொழிகளாயினும் சரி, திராவிட மொழிகளாயினும் சரி,) ஒரே கருத்து வெவ்வேறு வகையான சித்திர வடிவங்களின் மூலம் வெளிப்படுத்தப்படும் முறைமைக்கான சான்றுகளை அவர் தேடத் தொடங்கியுள்ளார்.

ஆ) சித்திர வடிவ எழுத்துக் குழுக்களின் இறுதியில் இடம்பெறும் சித்திர எழுத்தினை வெறும் விகுதியாகவோ உருபாகவோ கருதும் நிலையிலிருந்தும் மகாதேவன் மாறியுள்ளார். அதற்கு மாறாக, அச்சித்திர எழுத்தே, ஆட்பெயரின் பின்னர் வரும் குடிப்பெயர் அல்லது பட்டப்பெயர் போன்ற தகுதியைக் குறிக்கும் சொல்லாகும் என அவர் கருதுகிறார்.

படம் 12
படம் 12

அதாவது அச்சித்திர எழுத்தும், ஒரு சித்திர வடிவக் கருத்து எழுத்தே என அவர் கருதுகிறார். சான்றாகப் படம் 12இல் காணப்படும் சித்திர எழுத்திற்கு, ‘வேற்படை’ எனப் பொருள்கொண்டு, இச்சித்திர எழுத்து, ஒரு சித்திரவடிவ எழுத்துக் குழுவின் இறுதியில் இடம்பெறும்போது படைவீரனைக் குறிக்கும் என விளக்கம் அளிக்கிறார். காவடியைச் சுமந்து நிற்கும் மனித வடிவச் சித்திர எழுத்திற்கு, ‘பொறுப்பினைச் சுமக்கும் அலுவலாளர்’ என்றும், அச்சித்திர எழுத்துடன் இணைந்து வரும் வேற்படைச் சித்திர எழுத்திற்கு, ‘போர்த் தொழிலும் புரியும் அலுவலாளர்’ என்றும் மகாதேவன் பொருள் விளக்கமளிக்கிறார்.

இத்தகைய விளக்கங்கள் கவர்ச்சிகரமானவை. அபாரமான கற்பனைத் திறனைக் காட்டுபவை. ஆயினும் இவை உறுதியற்ற உணர்வு சார்ந்த அபிப்ராயங்களே. மகாதேவனே, ஹரப்பன் மொழி எதுவென இன்றுவரை இனங்காணப்படவில்லை என்றும், ஹரப்பன் எழுத்துகள் இன்றுவரை புரிந்துகொள்ளப்படவில்லை என்றும் ஒத்துக்கொள்ளும் நிதானத்துடன் இருப்பது போற்றத்தக்கது. இந்நிதானத்துடன், ஹரப்பன் எழுத்துகளைப் படித்துப் பொருள் விளக்கமளிக்கும் முயற்சியைக் குறைத்துக் கொண்டு, எழுத்துகளின் மற்றும் சொற்களின் வடிவமைப்பு இலக்கணத்தைப் பகுத்தாய்வு செய்யும் முயற்சியை அதிக ஆர்வத்துடன் மேற்கொண்டு, அவர் சாதனை படைத்துள்ளார் என்பதை அவரது அண்மைக்கால ஆய்வுக் கட்டுரைகள் புலப்படுத்துகின்றன.

16. இப்பிரச்சினையின் தற்போதைய நிலைதான் என்ன? இதுவரை என்ன சாதிக்கப்பட்டது, என்ன சாதிக்கப்படவில்லை என்பதனை விளக்க முயற்சி செய்கிறேன்.மேலும் ஹரப்பன் எழுத்து, ஐயத்துக்கிடமற்ற வகையில் முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு உண்டா என்பது பற்றி எனக்குக் கடுமையான ஐயப்பாடு இருக்கிறதெனினும் இப்பிரச்சினை குறித்த தீர்வுநோக்கி, மேலும் முன்னேற்றம் காண்பதற்கு என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்ய முடியுமென நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்ல விழைகிறேன்.

அ) வலப்புறத்திலிருந்து இடப்புறம் நோக்கியே எழுதப்பட்டுள்ளது என்ற முடிபுக்கு ஆதரவாக விரிவான வாதங்களை, மார்ஷல் (1931ஆம் ஆண்டு), காடு மற்றம் ஸ்மித் (1931ஆம் ஆண்டு), ஜி.ஆர். ஹண்ட்டர் (1934ஆம் ஆண்டு), ஏ.சி.எஸ். ரோஸ் (1939ஆம் ஆண்டு), ஜி.வி. அலெக்சீவ் (1965ஆம் ஆண்டு) ஆகியோருடைய ஆய்வுகளிலும், சிறப்பாக பி.பி. லால் (1966, 1968ஆம் ஆண்டுகள்) மற்றும் ஐ. மகாதேவன் (1970, 1980ஆம் ஆண்டுகள்) ஆகியோருடைய ஆய்வுகளிலும் காணலாம்.

ஆ) ஹரப்பன் எழுத்துக் குழுக்களைப் பகுப்பாய்வு செய்யுமிடத்து, இவ்எழுத்துகள், சுருக்கெழுத்துப் போன்று ஒரு சொல்லுக்கு ஒரு சித்திரம் என்ற வகையில் எழுதப்பட்டுள்ளன என்றே கருதப்படுகிறது.

ஒரு சித்திர வடிவம் ஒரு சொல்லைக் குறிக்கும் வகையிலும், மற்றொரு குறியீடு ஓரசை ஒலியினைக் (எழுத்தொலியினைக்) குறிக்கும் வகையிலும், சில நேரங்களில் இவ்விரு சித்திர வடிவங்களும் ஒரே வடிவமாக இணைந்தும், சில நேரங்களில் தனித்தனியாகவும் எழுதப்பட்டுள்ளன எனப் பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது சரியான கருத்தாக இருக்கக்கூடுமாயினும், ஹரப்பன் சித்திர எழுத்துகளில் ஓரசை ஒலியைக் குறிக்கும் சித்திர வடிவங்கள் உள்ளன என்பதனை முற்றிலும் புறவயமான பகுப்பாய்வு முறையின் துணைகொண்டு இதுவரை எந்த ஓர் ஆய்வாளராலும் நிறுவ இயலவில்லை.

அண்மையில் அஸ்கோ பர்போலா, ஒவ்வொரு சித்திர எழுத்துக்கும் ஒரு குறிப்பிட்ட பொருள் மதிப்பீடும், ஒரு குறிப்பிட்ட ஒலிமதிப்பீடும் உண்டு என்றும், இடம் பொருள் ஏவலுக்குத் தக இவ்விரு மதிப்பீடுகளுள் ஏதாவது ஒரு மதிப்பீடு பின்பற்றப்பட்டுள்ளது என்றும், எனவே ஹரப்பன் எழுத்தினை ‘உருபன் எழுத்து’ என்றும் கொள்ள விழைகிறார். தற்போதைக்கு நான் மகாதேவனின் கருத்தையே ஏற்கிறேன்.

என்ன சாதிக்கப்பட்டுள்ளது அல்லது என்ன சாதிக்கப்படவில்லை என்பது குறித்து நடுநிலையுடன் எடை போடும்போது, சான்றுகளுக்கும் நிரூபணத்துக்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை நாம் உணர்ந்திருத்தல் அவசியம். ஹரப்பன் வாசகங்களைப் ‘படித்து’ விளங்கிக் கொள்வதற்கு அறிஞர்கள் பயன்படுத்தியுள்ள முன்மாதிரியான முறைமைகளுள் எந்தவொரு முறைமையுமே இதுவரை ஆய்வாளர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்குக் காரணம் யாதெனில், எந்த அறிஞருமே தமது ‘முடிபுகள்’ சரியானவைதாம் என்பதை நிரூபிக்க இயலவில்லை.

ஆனால் இதற்கு மாறாக, நேரிய ‘சான்றுகள்’ மூலம் நாம் எதனையும் நிருபிக்க முடியாமல் போயினும்கூட அச்சான்றுகளால், இது இவ்வாறிருக்க முடியும். இது இவ்வாறிருக்க வாய்ப்பில்லை என நாம் புரிந்து கொள்ளமுடியும்.

சரி, அப்படியாயின் இதுவரை சாதிக்கப்பட்டுள்ளது என்ன?

அ) வலப்புறத்திலிருந்து இடப்புறம் நோக்கி எழுதப்பட்டுள்ளது என்று தீர்மானிக்கப்பட்டிருப்பது.

ஆ) எந்தச் சித்திர எழுத்தையடுத்து எந்தச் சித்திர எழுத்து இடம்பெறுவது வழக்கம் என்ற வரிசை முறைமை பற்றிய பகுப்பாய்வு மற்றும் புள்ளிவிவரக் கணக்கீடு ஆகியவற்றின் மூலமாக எந்தெந்தச் சித்திர எழுத்துக் குழுக்களைச் சொற்கள் எனக் கொள்ள முடியும் என அடையாளம் கண்டறிந்து, ஹரப்பன் எழுத்து வாசகங்களை ‘எளிய சொற்கள்’ என்றும், மொழியின் அழுத்தமும் அழகுணர்ச்சியும் நிறைந்த (உவமை, உருவகம் போன்ற) ‘சொல் தொடர்கள்’ (phrases) என்றும் பரித்தறிந்திருப்பது.

இவ்விரு முடிபுகளும்தாம் ஓரளவு தெளிவான முடிபுகள் எனக் கூறமுடியும். இவ்விரண்டு முடிவுகளுள்,

அ) வலப்புறத்திலிருந்து இடப்புறம் நோக்கியே எழுதப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு ஆதரவாக விரிவான வாதங்களை, மார்ஷல் (1931ஆம் ஆண்டு), காட் மற்றும் ஸ்மித் (1931), ஜி.ஆர். ஹண்ட்டர் (1934), ஏ.எஸ்.சி. ராஸ் (1939), ஜி.வி. அலெக்சீவ் (1965) ஆகியோருடைய ஆய்வுகளிலும், சிறப்பாக பி.பி. லால் (1966, 1968) மற்றும் ஐ. மகாதேவன் (1970, 1980) ஆகியோருடைய ஆய்வுகளிலும் காணலாம்.

ஆ) ஹரப்பன் எழுத்துக் குழுக்களைப் பகுப்பாய்வு செய்யுமிடத்து, இவ்எழுத்துகள், சுருக்கெழுத்துப் போன்று ஒரு சொல்லுக்கு ஒரு சித்திரம் என்ற வகையில் எழுதப்பட்டுள்ளன என்றே கருதப்படுகிறது.

ஒரு சித்திர வடிவம் ஒரு சொல்லைக் குறிக்கும் வகையிலும், மற்றொரு குறியீடு ஓரசை ஒலியினைக் (எழுத்தொலியினைக்) குறிக்கும் வகையில், சில நேரங்களில் இவ்விரு சித்திர வடிவங்களும் ஒரே வடிவமாக இணைந்தும்,  சில நேரங்களில் தனித்தனியாகவும் எழுதப்பட்டுள்ளன எனப் பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது சரியான கருத்தாக இருக்கக்கூடுமாயினும், ஹரப்பன் சித்திர எழுத்துகளில் ஓரசை ஒலியைக் குறிக்கும் சித்திர வடிவங்கள் உள்ளன என்று முற்றிலும் புறவயமான பகுப்பாய்வு முறையின் துணைக்கொண்டு இதுவரை எந்த ஓர் ஆய்வாளராலும் நிறுவ இயலவில்லை.

அண்மையில் அஸ்கோ பர்போலா, ஒவ்வொரு சித்திர எழுத்துக்கும் ஒரு குறிப்பிட்ட பொருள் மதிப்பீடும், ஒரு குறிப்பிட்ட ஒலி மதிப்பீடும் உண்டு என்றும், இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ப இவ்விரு மதிப்பீடுகளுள் ஏதாவது ஒரு மதிப்பீடு பின்பற்றப்பட்டுள்ளது என்றும், எனவே ஹரப்பன் எழுத்தினை ‘உருபன் எழுத்து’ என்றும் கொள்ள விழைகிறார். தற்போதைக்கு நான் மகாதேவனின் கருத்தையே ஏற்கிறேன்.

ஒவ்வொரு சித்திரத்துக்கும், அகரம் ஆதியாக உள்ள அசையொலிகள் (எழுத்தொலிகள்) போன்ற ஒலி மதிப்பீடு வழங்குவதைவிட, இச்சித்திர எழுத்துகளைச் சொற்குறியீடுகளாகக் கொண்டு இக்கருதுகோளின் அடிப்படையிலேயே ஆய்வினைத் தொடரலாம் எனக் கருதுகிறேன். சொற்குறியீடுகளுள் சில, முழுமையான, தனித்த பொருளுடைய சொற்கள் எனவும், சில குறியீடுகள் (விகுதிகள், உருபுகள் போன்ற) இலக்கணக் குறியீடுகள் என்றும் கொள்ளலாம்.

இவ்வாறு கொண்டால், மூன்றாவதாக ஒரு முடிவுக்கும் நாம் வர முடியும்.

இ) சிந்துவெளி எழுத்துகள் மூன்று வகைப்பட்டன எனலாம்.

1. கருத்து எழுத்துகள் (குறிப்பிட்ட பொருள்களையும் கருத்துகளையும் உணர்த்தும் சித்திரங்கள்)

2. ஒலியன் எழுத்துகள் (பொருள் தொடர்பு இல்லாவிட்டாலும், ஒரு சித்திரத்தால் உணர்த்தப்படும் சொல்லோடு ஒத்த ஒலியுடைய வேறு சொற்களையும் அதே சித்திரம் மூலமாக உணர்த்தும் எழுத்து.)

3. தொடர்ந்து பயன்பாட்டிலிருந்த சித்திர வடிவமில்லாத சில குறியீடுகள். (எண்களைக் குறிக்காத கோடுகள்.) இம்மூன்று வகை எழுத்துகளுள், எழுதுவதற்கு எந்த மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது புரிந்தால்தான் ஒலியன் எழுத்துகளைத் தெரிந்து கொள்ள முடியும். இரு மொழிகளில் எழுதப்பட்ட பொறிப்புகள் கிடைக்காதவரை, சித்திர வடிவமில்லாத குறியீடுகளின் (உருபுகளின்) ஒலி மதிப்பீட்டையோ பொருளையோ தெரிந்து கொள்வது இயலாது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுவரை உண்மையில் சாதிக்கப்பட்டுள்ளது இவ்வளவுதான். இதற்கு மேற்பட்டுச் சாதித்துள்ளதாகச் சொல்லப்படுவனவெல்லாம் வெறும் ஊகத்தின்பாற்பட்ட ஆய்வுகளே. வேறு வகையில் சொல்வதானால், பெரும்பாலும் எதிர்மறையான முடிவுகளே இதுவரை கிடைத்துள்ளன என்பதைத்தான் நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

1) சிந்துவெளி எழுத்துகளின் மொத்த எண்ணிக்கையையும், அவை ஒன்றை அடுத்து ஒன்று எழுதப்பட்டுள்ள முறைமையையும், அதன் மூலம் உய்த்தறியத்தக்க அவற்றின் செயல்பாட்டினையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் சிந்துவெளி எழுத்து, அகரம் ஆதியாக நாமறிந்த ஒலியெழுத்தோ அசைச் சொல்லெழுத்தோ அன்று என உறுதியாகக் கூறமுடியும். என்ன வகை எழுத்து என உறுதிப்பட நிறுவ இயலவில்லை.

2) முன்னிலை எலமைட் எழுத்துகளின் தாக்கமும் சாயலும் ஹரப்பன் எழுத்துகள் சிலவற்றில் காணப்பட்டாலும்கூட, கி.மு. 3000 முதல் கி.மு 1000 வரை வழக்கிலிருந்த பல்வேறு நாகரிகங்களில் பயன்படுத்தப்பட்ட எந்தச் சித்திர வடிவ எழுத்து வகையுடனும் நெருங்கிய உறவுடைய எழுத்து வகையென்று ஹரப்பன் எழுத்து வகையைக் கூற இயலாது.

3) பிராமி, கரோஷ்டி உட்படப் பிற்கால இந்திய எழுத்து வகை எதனுடனும் ஹரப்பன் எழுத்து உறவுடையதன்று.

4) ஹரப்பன் பொறிப்பு வாசகங்களில் தொடர்ந்து வருகிற சித்திர எழுத்துகளைப் பல்வேறு வகையில் எழுத்துக் குழுக்களாகப் பகுத்துப் பார்த்தாலும், இவ் வாசகங்களை படித்துப் புரிந்து கொள்வதற்கு இவ்வகைப் பகுப்பு முறையில் ஒன்றுகூட உறுதுணையாக இல்லை.

5) ஹரப்பன் சொற்களில் முன்னொட்டு இடம்பெறுகிறது என்று கூறவோ, உட்பிணைப்பு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறவோ சான்றுகள் இல்லை. (எனவே ஹரப்பன் மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்துடன் உறவுடையதன்று.)

6) பெயர்ச்சொல் வினைச்சொல் போன்றவற்றிற்குப் பின்னர் பெயரெச்சம், வினையெச்சம், உரிச்சொல் போன்றவை இடம் பெறுவதே மேலை ஆசிய மொழிகளில் மரபாகும். இம்மரபு ஹரப்பன் வாசகங்களில் காணப்படவில்லை. எனவே ஆசிய மொழிகளுடன் ஹரப்பன் மொழிக்கு உறவு இருப்பதாகக் கூற இயலாது. (ஆயினும் எலமைட் மொழியுடன் விட்டகுறை தொட்டகுறையான உறவு இருந்திருக்கக்கூடும்.)

படம் 13
படம் 13

7) பொறிப்பு வாசகங்களில் காணப்படும் சித்திர எழுத்துக்குழுக்களில் இறுதிச் சித்திர எழுத்தாக அடிக்கடி இடம் பெறும், படம் 13-இல் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற குறியீடுகள் வேற்றுமையுருபுகள்தாம் என்றோ, தகுதி, பட்டம் ஆகியவற்றைக் குறிக்கும் சிறப்புப் பெயர் உருபன்கள்தாம் என்றோ, ஆய்வாளர்கள் தொகுத்துள்ள ஹரப்பன் சொல்லடைவு மூலமாக உறுதிப்படுத்த இயலவில்லை.

8.) இறுதியாகவும் உறுதியாகவும் கூறத்தக்க ஓர் எதிர்மறையான முடிவு என்னவெனில், சிந்துவெளி எழுத்தினைப் படித்து விளக்கம் அளித்துள்ளதாகக் கூறி வெளியிடப்பட்டுள்ள எந்த ஓர் ஆய்வுமே ஏற்கத்தக்கதாக இல்லை.

எனவே பின்வருமாறு வினவுதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. சிந்துவெளி எழுத்தினை என்றைக்குமே படித்துப் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் பதிலா? இனிமேலும் மேற்கொள்ளப்பட இருக்கிற ஆய்வு முயற்சிகள்கூட, நேரத்தையும் நிதியையும் மனித உழைப்பையும் வீணாக்கி விரயம் செய்யும் முயற்சிகளாகத்தாம் முடியப் போகின்றனவா?

ஆம்; அப்படித்தான் போலும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இருமொழி வாசகங்கள் அடங்கிய பொறிப்பு ஏதேனும் கிடைத்தாலின்றி, அலலது பிற (வாசிக்கப்பட்டுவிட்ட) தொன்மையான பொறிப்புகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கத்தக்க ‘துப்பு’களுடன்கூடிய மிக நீண்ட வாசகம் கண்டுபிடிக்கப்பட்டாலன்றி, நாம் இவ்விடயத்தில் நம்பிக்கை கொள்வதற்கில்லை. ஆனால் ஒன்று;

முயற்சியைக் கைவிடுவது என்பது மனிதனால் முடியாத செயல். எந்தச் சங்கேத மொழியாயினும் அது ஒரு நாள் மனித முயற்சியின் பலனாகப் புரிந்து கொள்ளப்பட்டே தீரும். எனவே இப்பிரச்சினையில் நாம் வகுக்க வேண்டிய வியூகம் என்ன? என்ன செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும்?

இருமொழிப் பொறிப்போ, மிக நீண்ட வாசகமோ கண்டுபிடிக்கப்பட வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே ஹரப்பன் எழுத்து சொற்கட்டுமானம் குறித்துப் பகுத்தாய்வு செய்துவரும் அறிஞர்கள், அண்மையில் (1983இல்) ஐ. மகாதேவன் காட்டியுள்ள பாதையில் மேலும் பயணம் செய்து தமது முயற்சியை மேலும் செம்மைப்படுத்த வேண்டும்.

சோவியத் மற்றும் பின்லாந்து நிபுணர்கள் கணினியைப் பயன்படுத்திச் சாதித்துள்ள சாதனைகளை அடித்தளமாகக் கொண்டு மகாதேவன் தமது பகுப்பாய்வு அணுகுமுறையை வகுத்துக்கொண்டு இதுவரை நம்பிக்கையூட்டும் முடிவுகளைக் கண்டறிந்துள்ளார். இம்முயற்சியைத் தொடர்ந்தால் இன்னமும் நிறையச் சாதிக்க முடியும். அதற்கான சாத்தியக்கூறுகள் தீர்ந்து போகவிடவில்லை. எனவே உடன்பாடான விடயங்களில் முதல் விடயம் இதுவே.

இரண்டாவதாக, ஃபேர்செர்விஸின் அணுகுமுறையையும் மேற்குறித்த பகுப்பாய்வுடன் இணைத்து மேற்கொள்ள வேண்டும். அதாவது, ஹரப்பன் மக்களின் வாழ்வியல் கூறுகள் எனவும், தினசரி வாழ்க்கை முறையென்றும் அகழாய்வில் கிடைத்த பொருள்கள் மற்றும் தடயங்களால் நமக்குத் தெரிய வந்துள்ள செய்திகள் ஹரப்பன் பொறிப்புகளில் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்று அறிய முயலுதல்.

மூன்றாவதாக, ஹரப்பன் மொழியென்பது, எந்தச் சுவடும் இன்றி அழிந்துபோன மொழிக் குடும்பமொன்றின் புரியாத கிளைமொழியாக இருக்கக்கூடும். இதுவும் சாத்தியமானதே, ஆயினும், திராவிட மொழியின் ஏதோவொரு வடிவமாக இருந்திருக்கவும் வாய்ப்புண்டு.

உயிருள்ள எந்தவொரு மொழிக் குடும்பத்தையாவது ஹரப்பன் மொழியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க நாம் நினைப்பின், திராவிட மொழிக் குடும்பத்துக்கே அத்தகுதி உண்டு. திராவிடவியல் நிபுணர்கள், ஹரப்பன் எழுத்துகளை ஆய்வு செய்ய விழையும் அறிஞர்களுடன் இவ்விடயத்தில் அனுதாபத்துடனும், அதே வேளையில் ‘செற்றமும் உவகையும் சேராது நீக்கியும்’ எச்சரிக்கையுடனும் ஒத்துழைத்தல் வேண்டும். ஹரப்பன் நாகரிகத்துக்கேயுரியவை என்று தொல்லியலாளர்களால் கண்டறியப்பட்டுள்ள பொருள்களைப் பட்டியலிட்டு, அவற்றுக்கான திராவிட மொழிப் பெயர்களை மீட்டமைக்கவும் திராவிடவியல் நிபுணர்கள் முயலவேண்டும்.

நான்காவதாக, இருமொழிப் பொறிப்புகள் கிடைக்கின்றனவா என ஹரப்பன் நாகரிக அகழ்விடங்கள் அமைந்துள்ள பிரதேசங்கள் முற்றிலும் தேடப்பட வேண்டும். அதுவுமின்றி, மெசபொடேமியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் இத்தேடுதல் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

சுமேரிய மக்களுக்கும் ஹரப்பன் நாகரிக மக்களுக்கும் நேரடித் தொடர்பு இருந்துள்ளது என்பதனை நாம் ஐயத்துக்கிடமின்றி அறிந்துள்ளோம். மேலும் சுமேரியப் பொறிப்புகள் தோன்றிய பண்பாட்டுப் பின்னணியும், ஹரப்பன் பொறிப்புகள் தோன்றிய பண்பாட்டுப் பின்னணியும் பெருமளவில் ஒத்த தன்மையுடையவை. எனவே, சுமேரியப் பொறிப்புகளில் காணப்படும் எழுத்து வடிவங்களின் அமைப்பு வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் அறியமுடிகிற இணையான போக்கு பற்றியும் நாம் சிறப்பான கவனம் செலுத்தத் கடமைப்பட்டுள்ளோம். ஈரான் நாட்டில் நடைபெற்றுள்ள அகழாய்வுகளில் கிடைத்துள்ள முன்னிலை எலமைட் காலகட்டத்தைச் சேர்ந்த தடயங்களை நாம் மேலும் துருவி ஆராய வேண்டும். இக்காலகட்டத்தைச் சேர்ந்த தடயங்கள் ஈரான் நாட்டு அகழாய்வுகள் மூலம் மேலும் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. அவற்றுள், மிக நீண்ட இருமொழி வாசகங்களடங்கிய பொறிப்பும் கிடைக்கக்கூடும்.

ஐந்தாவதாக, சாதனையார்வம் கொண்ட ஆய்வாளர்கள், தமது தாகத்தைத் தணித்துக்கொள்ளும் வகையில் (சொற்கட்டுமானப் பகுப்பாய்வு போன்றவற்றில் ஆழ்ந்த பயிற்சி பெறுவதன் முன்னரே) மேற்கொள்ளும் ‘படிப்பு’ முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டியவை. குறிப்பாக, சித்திர எழுத்துப் பொறிப்புகளுக்குத் தமது விருப்பப்படி ஒலி மதிப்பீடு வழங்கி, ‘படித்து’ விளக்கமளிக்கும் முயற்சியை யாரும் மேற்கொள்ளாதிருத்தல் நலம். சொற்கட்டுமானப் பகுப்பாய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மொழியில் ஊகங்களையும் கற்பனைகளையும்கூட நாம் ஏற்றுக் கொள்வது கடினம்.

இறுதியாக, சாட்விக் கூறிய ஒரு மணிமொழியை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்: திறந்த மனதுடன் ஒருவன் இருப்பது மிகக் கடினம்; நம்ப முடியாத அளவுக்குக் கடினம்; காரணம் என்னவெனில் நம்முடைய சிந்தனையின் மேல் நமக்குள்ள சுயகாதலால் நாம் மயங்கிப் போயிருக்கிறோம்.

ஓர் ஒட்டகத்தைக்கூட நம்மால் அப்படியே விழுங்கிவிட முடியும் என நம்பும் அளவுக்கு மயங்கிப் போயிருக்கிறோம். அதேபோல் நம்முடைய விருப்பு வெறுப்புகள் நம் கண்ணை மறைப்பதால், ஓர் ஈயைச் சமாளிப்பதற்கான திறமைகூட நம்மிடம் இல்லாமற் போய்விடுகிற அளவு நம் பார்வையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.

(நன்றி: ஆய்வு வட்டக் கட்டுரைகள் – தொகுதி 1, ஆய்வு வட்டம், சென்னை.)