கோபன்ஹாகன் தலைமை மியூசியத்தில் நம்மை வரவேற்கும் வாசகம் – `All I want to say is that the only possible teacher except torture is fine art`.ஒரு புத்தகத்தில் பெர்னார்ட் ஷாவின் இந்த வாசகத்தை முதல் முறையாகப் படிக்கும்போது ஒரு உணர்வும் ஏற்படவில்லை. இந்த வாசகம் ஒரு கலைப் படைப்பைப் புரிந்து கொள்ள உதவுமென பெர்னார்ட் ஷா கூறியிருந்தார். ஒரு கலைப் படைப்பை அணுகும் நோக்கம் எந்தக் காலத்திலும் ஒரே மாதிரி இருந்ததில்லை. பல காலமாக கலை பற்றிய படிப்பு கட்டாயப் பாடமாக இருந்திருக்கிறது. அதில் முனைப்பை ஏற்படுத்துவது ஆசிரியரின் முக்கிய கடமையாகவும் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது ஒரு நல்ல ஓவியத்தைப் பற்றிப் படிக்க நூலகம், கலைக்கூடம் என அலைய வேண்டியிருக்கிறது. இணையம் மாயவித்தைக்காரனின் தொப்பியைப் போல் தினமும் எதையாவது புதிதாய் தந்துகொண்டிருக்கிறது. இந்த புதிய இணையம் தந்த தெய்வங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கலைகளின் வெளிப்பாடுகளும் மாறி வருகின்றன. அப்படிப்பட்ட புது வெளிப்பாடுகளே கலையின் மேலுள்ள ஈடுபாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
வதை முகாம்களின் கொடுமைகள் ஒரு நூற்றாண்டுகளாய் கற்றுக்கொடுத்த பாடங்கள் இன்னும் நமக்குப் பிடிபடாமலிருக்கும் நிலையில் பெர்னார்ட் ஷாவின் வாசகம் மிக முக்கியமானது. கலையிலிருந்து கற்றுக்கொள்வது என்றால் என்ன? பல்கலைக்கழகங்களில் விவாதிக்கப்படும் நிலப்பரப்பு(Landscapes), வெளி (Spaces) போன்ற கருத்துகள் நம் அன்றாட வாழ்வுக்குள் பிரவேசிக்கத் தொடங்கியுள்ளன. ஐரோப்பாவில் ஆதிகாலக் குறியீடுகளான பாம்பு, பூனை, சிலுவை போன்றவை புதிய பரிமாணங்களாக ஓவியம், இசைத் தொகுப்புகளுள் நுழைந்துள்ளன. இன்றைய வேகத்தில், சுருங்கச் சொல்வது தனிக்கலையாக ட்விட்டர்,ஆர்க்குட்,ஃபேஸ்புக் என இணையம் வழி மக்கள் தொடர்புக்கு வழிவகுத்துள்ளது.
கிரேக்கர்களின் ஹையரக்ளிஃபிக்ஸ்(hieroglyphics) மொழியைப் போல் இல்லாவிட்டாலும், அந்த மொழியின் கூறுகள் இணையத்தில் பெருகியுள்ளன. கிரேக்க மொழி – ஒலி, வடிவம், கருத்தாக்கம் என மூன்று தளங்களில் இயங்கும் மொழியாகும்.அம் மொழி ஒரு சிறிய படத்தால் பல உணர்வுகளுக்கு வழி கொடுக்கும் அம்சம் கொண்டது.ரோஸெட்டா(Rosetta) கற்களில் இதன் வடிவங்களை கி.மு 3000 ஆண்டுகளிலிருந்து உபயோகித்து வருகின்றனர். கிரேக்க நாகரிகத்துடன் அழிந்த இம்மொழியின் உபயோகங்கள், இணையத்தின் மொழியாய் சின்ன குறியீடுகள், மற்ற பிரதிகளை குறிக்கும் வலைபின்னல்கள், ஸ்மைலி (hypertext,@,:)) போன்ற கருத்தாக்க உபயோகங்கள் மூலம் நம் தொடர்பு மொழியின் எல்லை அதிகரித்துள்ளது. இது தற்காலக் கலை வெளிப்பாடுகளைப் புரிந்து கொள்ள முக்கியமாகிறது.
நவீன ஓவியங்கள் கூறும் விஷயத்தைப் புரிந்து கொள்வதே தனிக்கலை. ஓவியத்தின் மொழி நாம் பேசும் மொழியைவிட பழமையானது. கணக்கில்லா மாற்றங்களை தன்னுள் அடக்கிய ஆழமான ஆற்றின் குறியீடாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் நவீன ஓவியங்களை அனுபவிக்க நம் அழகியல் நோக்கில் பல மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம். ஒரு ஓவியத்தின் வண்ணம், வடிவம், அலங்காரம் என நமக்குத் தெரிந்த பலவகையான விவரங்களை நம்மால் ரசிக்க முடியும். நமக்குத் தெரிந்த வடிவங்களில் இருக்கும் ஓவியங்கள் நம்மை உடனடியாக ஈர்க்கின்றன. நவீன ஓவியத்தில் பார்வையாளனாக மட்டும் நாம் இருக்க முடியாது. அந்த ஓவியங்களை நம் வாழ்வுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு ஏற்படுத்தினால் மட்டுமே அதை ரசிக்க இயலும். ஓவியங்கள், ஒரு வரலாற்றுப் பார்வையின் கேலிச்சித்திரமாக இருக்கலாம், முற்றிலும் சம்பந்தமேயில்லாத இரு தளங்களின் நிகழ்வுகளை இணைக்க முற்படலாம், அல்லது சில கறாரான வடிவ நேர்த்திகளைப் புகுத்தலாம். பொதுவாக நாம் பார்த்திராத வடிவங்களும், வண்ணக் கலவைகளும் சங்கமிக்கும் தளமாக நவீன ஓவியத்தைப் பார்க்கலாம்.இதன் மூலம் பார்வையாளர் ஒவ்வொருவரும் தங்களின் அனுபவத்திற்கேற்ப ஓவியங்களை புரிந்து கொள்கிறார்கள்.
டென்மார்க் ஓவியங்கள்
டேனிஷ் மாஸ்டர்கள் என அழைக்கப்படும் எசையஸ் வான் டெ வெல்ட (Esaias van de Velde), ரெம்ப்ராண்ட் வான் ரின் (Rembrandt van Rijn), ஜேகப் வான் ரய்ஸ்டியல்(Jacob Isaackszoon van Ruisdael) போன்ற நிலப்பரப்பு ஓவியர்கள் பல நூற்றாண்டுகளாய் டென்மார்க் நகரின் ஓவிய நிலைப்பாட்டை ஆக்ரமித்துக்கொண்டிருந்தார்கள்.இந்த போக்கை மாற்றியது அம்ப்ரோஸியஸ் (Ambrosius Brosschaert) வரைந்த அன்றாட வீட்டுப் பொருட்களின் ஓவியங்களே. காரவாஜியோவின்(Michelangelo Merisi da Caravaggio) ஆக்ரோஷமான வெளிப்பாடுகளால் சோர்ந்து போயிருந்த டென்மார்க்கில், தினப்படி பொருட்களின் இயல்புகளை ஓவியத்தில் வெளிக்கொணர்ந்த யான் ஃப்வெர்மீர் (Jan Vermeer) , அம்ப்ரோஸியஸ் போன்ற கலைஞர்கள் மக்களின் ரசனையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.
தேவாலயம், கடவுளின் கதைகளின் சித்தரிப்புகள் என ஓவியத்தில் பார்த்து வந்த மக்களுக்குத் தாங்கள் பார்க்கும் அன்றாடப் பொருட்களையும் ஒரு கலைப் படைப்பாக்கலாம் என்பதே சிந்தனையில் நவீனத்துவத்தைக் கொண்டு வந்தது. ஒரே மாதிரி ஓவியங்களைப் பார்த்து சலித்துப் போன மக்களுக்கு இது பெரிய மாறுதலாயிருந்தது. தொடர்ந்து நிலப்பரப்பை வெளிப்படுத்தும் ஓவியங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்ததால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு தேக்கம் உருவானது. க்யூபிஸம் (Cubism), பாய்ண்டிலிஸம்(Pontilism) என புதுவகை ஓவிய அமைப்புகள் முக்கியத்துவம் அடைந்தன. இந்த நிலை இருபதாம் நூற்றாண்டிலும் முன்னணியினரால் (அவான் கார்ட் -avant garde) தொடர்ந்தது. பாப் ஆர்ட் (popart எனப்பட்ட popular art) போன்ற பாணிகள் டென்மார்க்கின் கலைஞர்களிடையே பிரபலமானாலும், மக்கள் இவற்றை ரசிக்கவில்லை.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அண்மைக்காலங்களில் நிலப்பரப்பு சார்ந்த ஓவியம் புதுவித வடிவ மாற்றங்களுடன் மீண்டும் கலைஞர்களிடம் வலம் வந்துகொண்டிருக்கிறது. பண்டைய ஹையரக்ளிஃபிக்ஸ் மொழியைப் போல் பல தளங்களில் கலையின் மொழியும் புரிதல்களும் உருவாகின்றன. நிலப்பரப்பு ஓவியங்களை அழகுக்காக மட்டுமல்லாது, சில வரலாறு மற்றும் புவியியல் சார்ந்த புரிதல்களுக்காகவும் மக்கள் ரசிக்கிறார்கள்.
இத்தகைய புரிதல்கள் டேனிஷ் மகாகலைஞன் எனப் போற்றப்படும் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் பெர் கிர்கெபி (Per Kirkeby). இந்த நூற்றாண்டின் ரெம்ப்ராண்ட் என அழைக்கப்படுகிறார்.

கடந்த இரு மாதங்களாய் லண்டனின் டேட் மாடெர்ன் (Tate Modern) கலைக்கூடத்தில் பெர் கிர்கெபியின் ஓவியங்களும், நவீன வடிவங்களும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பெர் கிர்கெபி தற்காலங்களில் பெரிதும் பேசப்படும் டேனிஷ் குரு. ரெம்ப்ராண்டுக்குப் பிறகு இந்தளவு பிரபலமான டேனிஷ் கலைஞர்கள் ஒருசிலரே. 1960களுக்குப் பின்னர் சிற்பங்களைப் போல் புதுவிதமான வடிவங்களும் நவீன கலை ஆக்கங்களாய் உருவாயின. பெர் கிர்கெபி நவீன ஓவியங்களுக்கு தொன்மக் குறியீடுகளையும், ஹையரக்ளிஃபிக்ஸ் மொழி போல் பல தளங்களிலும் புரியக்கூடிய மொழி ஒன்றையும் தன் ஓவியங்கள் மூலம் நிறுவுகிறார்.
முதல் முறை கிர்கெபியின் படைப்புகளைப் பார்பவர்களுக்கு, நவீன ஓவியத்தைப் பார்ப்பது போன்ற குழப்பங்கள் நேராது. ஆனால், ஒவ்வொரு முறை அவர் ஓவியங்களைப் பார்க்கும்போதும் ஒவ்வொரு உணர்வு உண்டாகும். இவர் வரைந்த பல ஓவியங்களுக்கு பெயரே இருக்காது. Untitled என்ற அளவிலேயே அவர் ஓவியங்கள் முதலில் வைக்கப்படும். அதனால் இந்த ஓவியங்களில் நுணுக்கமான வேலைப்பாடுகளும், பளீரென்ற வண்ணங்கள் மட்டுமே நம்மை ஈர்க்கும்.

ஆனால், அதே ஓவியங்களுக்குப் பெயர் சூட்டியப் பின்னர், உலக கலாசார பின்னணியைப் பல தளங்களில் கொண்டு அமைந்த படைப்புகளாக அவற்றைப் பார்க்க முடியும். இருவித கலாசாரங்கள் பின்னிப்பிணைந்து உருவாகும் குறியீட்டு மொழியைப் பற்றி கான்ஸ்டாண்டிநொபிள் முற்றுகை (The Siege of Constantinople -1995), எகிப்துக்குத் தப்பியோடல் (Flight Into Egypt-1996) போன்றவை பேசுகின்றன. இதில் கிர்கெபியின் புகழ் பெற்ற ஓவியம் ஈஜிப்டுக்குத் தப்பி ஓடல் (Flight Into Egypt) ஆகும். இது ஃபிலிப் ஓட்டோ ஹுஙக (Philipp Otto Runge) எனும் கலைஞரின் The Rest on the Flight Into Egypt என்ற படைப்பை (4) மூலமாகக் கொண்டு கிர்கெபி வரைந்தது. பைபிள் கதைகளும், நம் அன்றாட வாழ்வின் சிக்கல்கள் சந்திக்கும் இடமாக ஹுங்கவின் மூல ஓவியம் இருக்கும். அதே உணர்வை கிர்கெபியின் Flight Into Egypt கொடுக்கிறது. ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளாக கலாசார மோதல்களால் பலதரப்பட்ட குழப்பங்கள் எழுந்து அடங்கியிருக்கின்ற்ன. அப்படிப்பட்ட வரலாறு மற்றும் கலாசார மாறுதல்களினால் மக்களின் அன்றாட வாழ்விலும், நடத்தையிலும் காணப்பட்ட முக்கியமான மாற்றங்களை இந்த ஓவியங்கள் உணர்த்துகின்றன.

அதேபோல், The Siege Of Constantinople , பிஸண்டீன்(Byzantine) ராஜ்யத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த படையெடுப்பைச் சித்தரிக்கும் யூஜீன் டெலக்வா (Eugene Delacroix) வரைந்த ’The Crusaders’ Entry into Constantinople’ எனும் படத்தை நம் கண் முன் நிறுத்துகிறது. ஒரு காலகட்டத்தில் உருவான வடிவ மோஸ்தர்களை வேறொரு காலகட்டத்திற்குள் கொண்டு வந்து ஒருவிதமான சங்கம மொழியை கிர்கெபி உருவாக்கியுள்ளார். அதேபோல் இயற்கையிலிருந்து கையாளப்பட்ட மொழி உருபுகளை தன் கலைப் படைப்பினுள் நுழைத்திருப்பார்.
பெர் கிர்கெபி 1938 ஆம் ஆண்டு கோபன்ஹேகன் நகரில் பிறந்தவர். சிறுவயதிலேயே தன் வீட்டருகே இருந்த தேவாலயத்தின் ஓவியங்களிலும், சிற்பம் மற்றும் கட்டிட வடிவத்திலும் மிக நுணுக்கமான ஈடுபாட்டோடு இருந்திருக்கிறார். தேவாலயக் குறியீடுகள் கிர்கெபியின் பல படைப்புகளில் தெரிகின்றன. கிர்கெபி 1970களில் பிரதான வடிவ மோஸ்தர்களாயிருந்த abstract கலை வடிவத்தை முற்றிலும் ஒதுக்கியவர். எக்ஸ்பெரிமெண்டல் ஆர்ட் ஸ்கூல் (Experimental Art School) எனும் கூடத்தில் ஃப்லக்ஸஸ்(Fluxus ) எனும் ஓவிய அமைப்பின் உறுப்பினராக சேர்ந்துகொண்டு, 1977களில் பிரபலமாயிருந்த pop art எனும் வடிவ இயலுக்குள் நுழைந்தார்.
ஆனாலும், குழப்பமான இந்த சித்திரங்களில் தன் ஈடுபாட்டைக் மெள்ளக் குறைத்துக்கொண்டு, உருவ அமைப்புகள் (figurative formations) எனும் கச்சிதமான வடிவமுள்ள கலைப்படைபுகளை உருவாக்கத் தொடங்கினார். பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு , 1989 ஆம் ஆண்டு, pop art எனும் குழப்பமான வடிவத்திலிருந்து விலகி, கச்சிதமான வடிவங்களால் நவீன ஓவியப் போக்கை மாற்றினார்.
சிறுவயதிலிருந்தே கலை வாழ்வை விரும்பிய கிர்கெபி விருப்பத்துக்கு எதிராக, கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் புவியியல் படிக்கத் தொடங்கினார். இதனாலேயே கிர்கெபியின் ஓவியங்களில் வரலாறு மற்றும் புது நில வெளிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். 1962-ல் க்ரீன்லாண்ட் பகுதிக்கு நில ஆராய்ச்சிக்காகச் சென்றது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அங்கிருந்த க்ரண்ட்வி (Grundtvig) தேவாலயத்தைப் புவியியல், மற்றும் ஓவியக் கலை வழியே கண்டார். அங்கிருந்த கற்கள், மரங்கள் ஆதிகால உலகம் பற்றிய பின்னோக்கியப் பார்வையை அவருக்கு உணர்த்தியது. புரியும்படியான ஓவியங்களும், சிற்பங்களும் இல்லாமல் வித்தியாசமானவையே மேலானவை என்ற பார்வை தவறு எனும் அறிவை இந்த பயணத்தில் கிர்கெபி பெற்றார்.இன்று வரை நில ஆராய்ச்சிகளுக்காக உலகின் பல மூலைகளுக்கு பயணம் செய்து வருகிறார்.

டேட் மாடர்னில் இருந்த கண்காட்சி பல அறைகளில் விரிந்திருந்தது. கிர்கெபியின் சில வடிவங்கள் முழு அறையையே அடைத்திருந்தன. உலகின் வடக்குக் கோடி வீடு (The World’s Northernmost House -1987) எனும் படைப்பு கிர்கெபி பியரி தீவுக்கு எய்கில் க்நுத் (Eigil Knuth) எனும் ஆராய்ச்சியாளருடன் சென்றபோது உருவான வடிவமாகும். முழுவதும் பனியால் உறைந்திருந்த வனாந்திரப் பகுதியும், ஒரு நகரத்தின் அவசரமான காலை நேரமும் இணைந்திருக்கும் மற்றொரு படைப்பு Fram (1983).இந்த ஓவியத்தைப் பார்க்கும் போது ஃப்வெர்மீரின் ’மேஜையிலிருக்கும் உறைந்த பொருட்கள்’ எனும் படைப்பு நினைவிற்கு வந்தது. அந்த ஓவியத்தில்
நளினமான உதவியாள் உருவிலிருக்கும் பெண், வட்டியில் பாலை நிரப்பிக்கொண்டிருப்பார். செழுமைக்கு அடையாளமாய் பாலும், பழங்களும் அந்த மேஜையில் இருக்கும். அதே போல் Fram ஓவியத்தில் உயிரோட்டமுள்ள நகரம் அதனருகே பனிமூடிய வனாந்திரமென நாம் கடந்து வந்த பாதை சட்டென நமக்குத் தோன்றும்.

அடுத்த சில அறைகளில் Forest, Siege மற்றும் Untitled என சில ஓவியங்கள் உள்ளன. இவற்றை ஒரு ஓவியனின் நிலப்பரப்பு தளத்தின் மேலுள்ள ஆர்வம் என்ற அளவில் மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை. ஓவியங்களில் அழகு எனக் கேட்டாலே நடுக்கமேற்படுகிறது எனச் சொல்லும் கிர்கெபி, இந்த ஓவியங்களின் மூலம் முக்கியமான சிக்கலை முன் வைக்கிறார். நிலப்பரப்பு நம் தேவைகளுக்காக
பல மாற்றங்களை அடைந்து வருகிறது. ஆர்டிக் பகுதிகளின் வனாந்திரங்கள் அங்கிருக்கும் உயிர்களுக்கு வாழ்வுச் சிக்கல் தருபவை. இந்த ஓவியங்கள் இந்தச் சிக்கல்களை உணர்த்துகின்றன.
ஒரு விதத்தில் இந்த படைப்புகள் நாம் வாழும் வாழ்க்கையில் உருவாகும் சிக்கலின் சாத்தியக் கூறுகளை உணர்த்துகிறது. ஒரு பக்கம் மனிதன் படும் துன்பங்கள் உடனுக்குடன் நமக்குத் தெரியவைக்கும் இணையம் மற்றும் ஊடகங்கள் வழி சாத்தியங்கள். மறுபக்கம் நிலப்பரப்பில் உருவாகக்கூடிய பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணாத உயிரினங்கள் இருக்கும் வனாந்திரங்கள். இந்த இரண்டு பக்கங்களும் இன்றைய நிலப்பரப்பு ஓவியங்களின் புரிதல்களுக்கு முக்கியமானவை.
கிர்கெபி 2004ஆம் ஆண்டு கோபன்ஹேகன் ஜியாலஜி கூடத்தை மாற்றியமைத்தார். அதை ஒரு தேவாலயம் போல் வடிவமைத்துள்ளார். ஒரு தேவாலயம் உயிர்ப்புடன் வளர்வதைப் போன்ற தோற்றம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. கிர்கெபி உலகின் பல மூலைகளிலிருக்கும் வனாந்திரத்திலெல்லாம் பயணம் செய்து ஆச்சரியங்களை அனுபவித்திருக்கிறார்;அங்கே குரூரமான தனிமைகளை அனுபவித்திருக்கிறார்.
நாம் நம் தேவைகளுக்காக மாற்றி வரும் இந்த உலகமும், அவர் வீட்டருகே இருந்த தேவாலயமும் அவரை வியக்க வைக்கின்றன. ஒரு பேட்டியில் இந்த உலகைப் பார்த்து வியப்படைந்ததின் வெளிப்பாடே இந்த ஜியாலஜி கூடத்தின் அமைப்பு என விளக்குகிறார்.
வாழ்வுத் தேவைகளுக்காக அடர்ந்த காடுகளையும் நம் கட்டுப்பாட்டுக்குள் நமக்குக் கொண்டு வரத் தெரியும். நகரத்திலும் இதைப் போன்ற வாழ்வுப் பிரச்சினைகள் உண்டு. அதற்காக நமக்குத் தேவையில்லாத பொருட்களை இழிவு நோக்கிலேயே பார்த்து வருகிறோம்.
நாடகம் போன்றதொரு தோற்றமிருந்தாலும், கிர்கெபியின் படைப்புகளில் காணப்படும் நிலப்பரப்புகள் காலத்தின் ஆழங்களுக்குச் செல்பவை.
டேட் மாடர்ன் கலைக்கூடத்தை விட்டு வெளியே வரும்போது எனக்கு மனித வாழ்வில் இருப்பிடம் தரும் சிக்கல்கள் மறு வடிவுகளில் தோன்றின. வாழ்வுக்காகவும், வசதிக்காகவும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வாழ்ந்து வரும் நமக்கு இப்படிப்பட்ட சிக்கல்கள் புதுத் தேடல்களுக்கு வழிவகுக்கின்றன.
______________________________________________________
இந்த கட்டுரை எழுத உதவிய புத்தகங்கள்:
1.Per Kirkeby: Paintings and Drawings –
http://www.amazon.com/exec/obidos/ASIN/0938437399/refnosim/theartcyclopedia
2. http://www.tate.org.uk/modern/exhibitions/perkirkeby/
3. Per Kirkeby – http://www.artbook.com/catalog–art–monographs–kirkeby–per.html
4. எகிப்துக்குத் தப்புகையில் ஓய்வு எடுத்தல் என்ற கருப்பொருளில் யூரோப்பிய ஓவியர்கள் பலரும் பிரபலமான ஓவியங்கள் வரைந்துள்ளனர். கரவாஜியோ, ரெம்ப்ராண்ட் போன்ற பலர் இதே தலைப்பில் ஓவியம் வரைந்து இந்தக் கருப்பொருளுக்கு மட்டுமே ஒரு தனி மரபு எழுந்து இருக்கிறது.