பல்ஸாக்கும் சீனத் தையற்காரிச் சிறுபெண்ணும்- தாய்-சீஜி

sijie-daiதாய்-சீஜி பிறப்பால் சீனர், வாழ்க்கையின் முற்பகுதி சீன மண்ணோடும், வெளியோடும், மூச்சோடும், வேர்களோடும் கழிந்திருக்கிறது. தாய்மொழி சீன மொழியாக இருக்க, பிரெஞ்சுமொழியில் எழுதி வருபவர். எழுதும் மொழி பிரெஞ்சாக இருந்தாலும் அவரது படைப்பிலக்கியங்களும், எழுதி இயக்கும் திரைப்படங்களும் சீனத்தை பேசுகின்றன, அந்நாட்டின் விழுமியங்களை வரவேற்கின்றன, சிவந்த கண்களை விமர்சனம் செய்கின்றன. ஜென் வாரிசென்று சொல்லிக்கொள்ளும் வகையில் பின் கழுத்துவரை இறங்கிய தலைமுடி, நவீன ஓவியன் வரைந்த பட்டாம்பூச்சியின் இறக்கைகளொத்த சில்லுகள்கொண்ட மூக்குக் கண்ணாடியென்று தொலைகாட்சி பேட்டிகளிலும், பிரெஞ்சு இலக்கிய சஞ்சிகைகளிலும் அவரை பார்க்கின்ற எவரும் முதுமையின் தலைவாசலில் கால் வைத்திருக்கிறவரென சொல்ல இயலாது.

பிறந்தது வளர்ந்தது கம்யூனிஸ சீன நாட்டில் பூர்ஷ்வா சூழலில், காம்ரேடுகள் சீனாவுக்கு அவர் எதிரி வர்க்கம். மாவோசீனா புரட்சிபோதையில் அட்டூழியம் செய்தநேரம். தோழர்களுக்கு நிலவுடைமையாளர்களும், பிற உரிமையாளர்களும் கொடுங்கோலர்கள். நடுத்தரமக்களும் மெத்த படித்தவர்களும் முதலாளியத்தின் கைக்கூலிகளென்ற மார்க்ஸிய பார்வையின்படி மூன்றாண்டுகாலம் (1971-1974)  புனர்வாழ்வுப்பணிக்காக சிச்சூவான்(Sichuan) மலைப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டவர் தாய்-சீஜி. கடந்த இருபது ஆண்டுகளாக பிரான்சில் வசித்து வரும் தாய்-சீஜி, சீனாவில் வாழ்ந்து வரும் தனது தாயைப்பார்க்கவும், தனது கதைக்கான மனிதர்களைத் தேடியும், வெளிகளைத் தேடியும் சீன நாட்டிற்குப் பயணங்கள் மேற்கொள்கிறார்.

செவ்வி ஒன்றின்போது, “சீனாவில் எனது விருப்பப்படி திரைப்படங்கள் எடுப்பதற்கான சூழ்நிலைகள் நிலவாததால், பிரான்சுக்கு வருவதற்கு முன்பாக வியட்நாம் நாட்டில் தங்கி இரண்டு படங்களை எடுக்க வேண்டியிருந்தது, எனது வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பயணத்தில் கழித்திருக்கிறேன், பாரீஸிலுள்ள எனது வீட்டில் எத்தனை காலம் தங்கியிருப்பேனோ அதற்கிணையான நாட்களைப் பீகிங்கிலும்(சீனா), சைகோனிலும்(வியட்நாம்) கழித்திருப்பேன்”, என்கிறார். 30 வயதில் (1984ம் ஆண்டு) மேற்கல்விக்காக பிரான்சு நாட்டுக்கு வந்தவர். அடிக்கடி பயணம் செய்வது அவருக்கு தவிர்க்கமுடியாத தேவையாக இருந்து வந்திருக்கிறது.

தாய்-சீஜிக்கு இரு வடிவங்களுண்டு. அவரொரு தேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் என்பது முதலாவது, வெற்றிகரமான எழுத்தாளர் என்பது இரண்டாவது. முதலாவது துறையில் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டது ஏராளம், குறிப்பாக சீன அரசிடமிருந்து. ‘எனது மனத்துயரம் சீனா’ (Chine ma douleur) என்ற திரைப்படத்திற்காக சீன அரசாங்கம் அவரை நாடு கடத்தியது. அப்படத்தில் வரும் இளைஞன் செய்த குற்றம் அரசால் தடை செய்யப்பட்டிருந்த இசைத் தட்டொன்றை தனது வீட்டில் வைத்திருந்ததும், அதைப் போட்டுக் கேட்டதும். சீன அரசாங்கத்திற்கு எதிரானது இளைஞனின் நடவடிக்கை என்ற தீர்ப்பின் அடிப்படையில் அவன் தண்டிக்கப்படுகிறான். அதே காரணத்திற்காக தாய்-சீஜியும் விமர்சனத்திற்குள்ளானார். சொந்த நாட்டிற்குள் அவர் நுழைவதற்கு அரசாங்கம் தடை போட்டது.

திரைப்படம் அவருக்கு நெருக்கடிகளைத் தேடிக் கொடுத்ததென்றால், படைப்பிலக்கியம் அவருக்குப் பேரையும் புகழையும் அள்ளித் தந்தது.  ‘பல்ஸாக்கும் சீனத் தையற்காரிச் சிறுபெண்ணூம்’ (Balzac et la Petite tailleuse chinoise) அதற்கொரு நல்ல உதாரணம்(1) . இந்நூலின் பல்வகையான பதிப்புகளுமாகச் சேர்த்து இதுவரை          9 இலட்சம் பிரதிகள் விற்றிருப்பதாக ஒரு கணக்கு. புத்தக வடிவில் அப்படைப்புக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, நூலாசிரியர் அதற்குத் திரைவடிவமும் கொடுத்திருக்கிறார்.  புனர்வாழ்வென்ற பெயரில் தண்டனைக் கைதிகளாக மலைப் பிரதேசமொன்றிற்குச் செல்லும் பதின் வயது இளைஞர்களுக்கும், அவர்களின் பெண் தோழிக்கும் ஏற்பட்ட சுதந்திரம் குறித்த புரிதலைப் பற்றியது கதை. தண்டனைக் காலத்தில் தங்கள் இருப்புக்கான பொருளை உணரும் வாய்ப்பு அங்கே அவர்களுக்கு நேரிடுகிறது, போனவிடத்தில் சிநேகிதங்கொள்ளும் தையற்காரரின் மகளுக்குங்கூட அவளுடைய இருப்பு மற்றும் வாழ்க்கைக்கான பொருளென்ன என்பதை இலக்கியத்தினூடாக இளைஞர்கள் உணர்த்துகின்றனர். இப்புரிதலை அவர்களுக்குத் தருவது, பல்ஸாக் பற்றிய வாசிப்பு.

’ ‘தி’ க்குள்ள பிரச்சினை’ (Complexe de Di) என்ற நூலில் வரும் நாயகன் முவோ (Muo) பிரான்சு நாட்டில் உளப்பகுப்பியலைக் கற்றுத்தேர்ந்தவன். சீனாவில் வசிக்கின்ற மீனவர்களின் அவலநிலையைப் படமெடுத்தது பெரிய குற்றம், அதை பிறருக்குக் காட்டியதோ மிகப் பெரிய குற்றமெனக் கைது செய்யப்பட்டுச்  சிறையில் அடைபட்டிருக்கிற தனது வருங்கால மனைவியைத் தேடிச் சீனாவுக்கு வருகிறான், அங்கே அவனை எதிர்கொள்கிற சீனநாடு வேறு. தனது வருங்கால மனைவியின் வழக்குக்குப் பொறுப்பேற்றிருக்கிற நீதிபதி ‘தி’க்கு இவனறிந்த பிராய்டோ மற்றவர்களோ அத்தனை முக்கியமில்லை, அவருக்கு வேறு பிரச்சினைகளிருக்கின்றன. முவோ சந்திக்கிற நெருக்கடிகளையும் மனத்தளவில் அவனுக்குண்டான பாதிப்புகளையும் இந்நாவல் விவரிக்கிறது.

நிலவு தோன்றாத இரவன்று (Par une nuit ou la lune n’est pas levee) எனும் நாவலில் வரும் கதை சொல்லி மென்மையான சுபாவம் கொண்டவள், முரண்பாடுகளால் உருவாக்கப்பட்டவள். பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்பவள், அல்லது இல்லாத பிரச்சினகளைக் கற்பனை செய்துகொள்பவள். தாய்-சீஜியின் நாவல்களில் இடம்பெறும் மாந்தர்களிலேயே அதிக மனக்குழப்பத்திற்கும் சஞ்சலத்திற்கும் ஆட்படுபவளென்று இவளைக் குறிப்பிடலாம். சீனாவில் படித்து முடித்து, தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து ஆப்ரிக்காவிற்குச் செல்கிறாள். அவள் காதலனோ துறவு மேற்கொண்டு புத்த சன்யாசியாகி பர்மாவில் குடியேறுகிறான்.

’கன்பூஷியஸின் வான வேடிக்கைகள்’ (L’Acropatie aerienne de Confusius) நாவல், வாசகர்களைப் பதினாறாம் நூற்றாண்டு காலத்துச் சீன நாட்டிற்கு அழைத்துச் செல்கிறது. கதை நாயகன் ஸெங் டே வீரமும் தீரமும் கொண்டவன். அரசன் என்ற தகுதிக்கேறப, விலங்குகள் வேட்டை அவனுக்குப் பிரியமானதென்றால், பெண்கள் வேட்டையில் (அறுபதினாயிரம் மனைவிமார்களென்று சொல்லப்படவில்லை) கூடுதலாகப் பிரியம். தனது உயிரின் மீதோ அதைவிடப் பிரியம், அதன் பொருட்டு, எங்கே தன்னை கொலை செய்துவிடுவார்களோ என அஞ்சி எப்போதும் தன்னையொத்த உருவம் கொண்ட நால்வரைத் தன்னுடன் வைத்திருப்பவன். ஆக நாடாள்கிறவனுக்குவேண்டிய பிரதான பண்புகளை அவனது உயிரணுக்கள் கூடக் கொண்டிருந்தன.

இந்த நாவல் போலவே,  தன் இதர  நாவல்களிலும் தாய்-சீஜீ பொதுவாகவே மொழிக்கும் பண்பாட்டுக்குமான சந்திப்புகளை ஏற்படுத்தித் தருகிறார். இறுதிநாவலில் உருவாக்கியிருக்கிற மன்னன் ஸெங் டே வம்சாவளியினர் எழுத்தாளருக்கு ஒருவகையில் அறிமுகமானவர்கள். மன்னன் ஸெங் டே, மிங் வம்சத்தினர் வழியில் வந்தவன். பீகிங் பல்கலையில், கலை வரலாற்றைப் படிக்க நேர்ந்தபோது, மிங் வம்சத்தினரை பற்றிய பாட திட்டம் தாய்-சீஜிக்கு வாய்த்தது. மிங் வம்சத்தினர் கொடூரமானவர்கள், பிறரைத் துன்புறுத்துவதும் கொல்வதும் அவர்களுக்கு எளிதானது என்பதை அவ்ர் படித்திருந்தார். கொடுங்கோலரிடத்தில் கலையைப் போற்றும் குணமும் இருந்திருக்கிறதென்பதும் முரண்பாடான உண்மை.

கன்பூஷியஸின் வான வேடிக்கைகள்‘ நாவலில் வரும் மன்னனும் விலங்குகள், பெண்களென வேட்டையாடியதுபோக ஒழிந்த நேரங்களில் கலைப்பொருட்களில் ஆர்வம் காட்டுகிறான், நரசிம்ம பல்லவன் ஞாபகம் வருகிறது. ஆள்கின்றவர்களை உத்தமர்கள், மகா புருஷர்கள் என்று துதிபாடும் நமது வரலாற்று நாவல்களும் தொடர்ந்து நினைவுக்கு வருகின்றன. கன்பூஷியஸின் வான வேடிக்கைகள் நாவலில் ஒருவித எள்ளல் தொனி இருக்கிறது. படிக்கிறவர்கள் உதட்டோரங்களில் ஒரு வித நமட்டு சிரிப்பினை வாசிப்பு கணத்தில் ஏற்படுத்தி தரும் நாவலில், அதிகாரத்திற்குள்ள வலிமை என்ன என்பதையும் ஆசிரியர் நமது சிந்தனைக்கு வைக்கிறார். அதிகாரத்தில் இருப்பவன் குறைகளற்றவன், எல்லாம் தெரிந்தவன், பரிபூரணன் என்ற கற்பிதத்தில் உள்ள இருட்டை, வரட்சியை, அதர்மத்தைச் சுட்டுவது எழுத்தாளனுக்குரிய கடமை என்றுணர்ந்து கட்டுடைக்கபட்ட மொழியில் தாய்-சீஜீ எழுதியிருக்கிறார். ஆசிரியர் உருவாக்கியுள்ள இந்த வரலாற்று நாடகத்தில் வெற்றி முழக்கங்களும் வேட்டை நாய்களின் குரைப்புகளும் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் உயிரிழக்கும் தறுவாய் முனகல்களும் மாத்திரம் கேட்பதில்லை, அபயக்குரல்களும், வலிகளும், கதறல்களுங்கூட இடைக்கிடை ஒலிக்கின்றன.

balzac‘மொஸாருக்குக்கூட நம்ம அதிபரைபற்றிய சிந்தனை இருந்திருக்கிறது” என்று சொல்லித்தான் ’பல்ஸாக்கும் சீனத் தையற்காரிச் சிறுபெண்ணும்’  நாவலில் வரும் இளைஞன் மேற்கத்திய இசைமேதை மொஸார் (Wolfgang Mozart) உருவாக்கிய இசைத் துண்டொன்றை வயலினில் வாசித்து சீன அதிபர் மாவோவின் அதிகாரத்தின் கீழிருந்த கிராமமொன்றின் தலைவனுக்கு அறிமுகப்படுத்துவான். நாவலின் கதைக்களம் 1971ம் ஆண்டு. சீன வரலாற்றை அறிந்தவர்களுக்கு, மேற்கண்ட வரியில் தொனிக்கும் எள்ளலும், துணிச்சலும் ஆச்சரியத்தை தரும். 1970ம் ஆண்டு, தம்முடைய பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியைச் சரிசெய்ய மாவோ வெகுசன மக்களை உபயோகித்து கலாச்சாரப் புரட்சியை நடத்திய காலம். கதைசொல்லி, அடுத்து லுவோ என்ற படித்த பையனொருவன்.  லுவோவுக்கு பதினெட்டு வயது, கதைசொல்லிக்கு பதினேழு வயது. இருவரும் புனர்வாழ்வு எனறபேரில் அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டு -புத்திசாலிகள் அரசாங்கத்தின் எதிரிகள் என்கிற விதியின்படி- மலைப்பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கே போனவர்கள் திரும்புவார்களா என்றால் ஆயிரம் பேருக்கு மூன்றுபேர் உயிருடன் திரும்பியிருக்கிறார்களென ஓர் கணக்கு இருக்கிறது. அவர்கள் செய்த குற்றம்: இளைஞர்களின் தந்தையர் மருத்துவர்கள், புகழ் பெற்றவர்கள். லுவோவின் தந்தை சீனா முழுக்க அறியப்பட்ட பல் மருத்துவர், தமது மாணவர்களிடம், அதிபர் மாவோவிற்கும் அவர்தம் துணைவியாருக்கும் தான்தான் பற்களை ஒழுங்குபடுத்தியதாகச் சொல்லிக்கொள்பவர். இளைஞர்கள் இருவரும் வெகுதூரம் மலைப் பிரதேசத்தில் நடந்து கடைசியில் தங்கள் பணி செய்யவேண்டிய இடத்திற்கு வருகிறார்கள். பிரதேசத்துத் தலைவன் இடும் கட்டளைக்குப் பணிந்து வேலைகள் செய்யவேண்டும்.; மனிதக் கழிவுகள் உட்பட பிற கழிவுகளையும் சுமக்கவேண்டும்.. மனித ஜீவன்களைப் பார்க்க வேண்டுமெனில் இரண்டு கல் நடக்கவேண்டும்.

இந்த நெருக்கடியிலும், அவர்களைச் சந்தோஷப்படுத்தவென்று ஒரு உயிர், அவளை அம்மலைப் பிரதேசத்தில் இளவரசியெனச் சொல்லலாம், அங்கிருந்த ஒரே தையற்காரரின் ஆசைமகள். அம்மலைப்பிரதேசத்துக்கே அவர் ஒருவர்தான் தையற்காரர் என்பதால், மிகவும் செல்வாக்கான வாழ்க்கை. வேறு தையற்காரர்கள் அப்பிரதேசத்தில் இல்லை என்ற காரணத்தால் கிராமம் கிராமமாக அவர் பயணிக்கவேண்டியிருக்கிறது. அவ்வாறு பயணம் மேற்கொள்கிறபோது, தமது பெண்ணை உடன் அழைத்துச் செல்லும் வழக்கம் அவருக்கில்லை. தையற்காரர் அயற்கிராமங்களுக்கு செல்கின்ற நேரங்களில் அப்பெண்ணின் காதலைப் பெற உள்ளூர் பையன்கள் மாத்திரமல்ல அரசால் புனர் வாழ்வு தண்டனைக்கு அனுப்பப்பட்ட கதை சொல்லியும் அவனது நண்பன் லுவோ போன்ற பையன்களுங்கூட முயசிக்கின்றனர். ஒரு நாள் லுவோவின் முழுக்காற்சட்டையை சரி செய்ய அப்பெண்ணிடம் பையன்கள் செல்கின்றனர். அவள் சிரிக்கிறபோது அவள் கண்களின் இயற்கையான அழகு அவர்களை ஈர்க்கின்றது. அவள் பார்வை பட்டை தீட்டப்படாத வைரம்போலவும், ஒளியூட்டப்படாத உலோகம் போலவும் மங்கலாக ஜொலிக்கிறது, போதாதற்கு அப்பார்வையின் அழகுக்கு மெருகூட்டுவதுபோல கண் இமைகள், விழியோரங்கள். பையன்கள் இருவரும் பார்வையை விலக்கிக்கொள்ளத் தெரியாமல், ஷாங்காயிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த தையல் எந்திரத்தில் அவள் கால்கள் செயல்படும் விதத்தில் லயித்து வெகு நேரம் நிற்கின்றனர்.

இருவரும் தண்டனைக் காலத்தில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் வேலை செய்கிற போது லுவோவுக்கு மலேரியா காய்ச்சல். குட்டித் தையற்காரிதான் அவனை குணப்படுத்துகிறவள். அதைக்கொண்டாடுவதற்கு பினோகிலார் என்ற மற்றொரு பையனில் வீட்டில் கூடுகிறார்கள். பினோகிலாரின் தந்தை ஒரு எழுத்தாளன், தாய் கவிஞர். எனினும் புனர்வாழ்வு தண்டனையிலிருந்து அக்குடும்பம் தப்பித்திருந்தது. கலாச்சாரப் புரட்சியின் போது தப்பிக்கும் யோகம் வாய்த்த குடும்பங்களில் அதுவுமொன்றாக இருந்தது. பினோகிலாரின் வீட்டில் புரட்சியாளர்களின் கண்ணிற்படாது காப்பாற்றபட்ட ஒரு பெட்டி இருக்கிறது. அப்பெட்டியிலிருந்து இதுவரை இவர்கள் அறிந்திராத புதியதொரு கலாச்சாரத்தின் மணம்; பெட்டியினுள் இருப்பதனைத்தும் புத்தகங்களென்பது பையன்களுக்குப் புரிந்துவிட்டது, ” ஓரளவு இனி எங்களுக்கு வாசிக்க வரும் எனறு நாங்கள் நினைத்தபோது, வாசிக்க எங்களுக்குப் புத்தகங்களில்லை. மேற்கத்திய நூல்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. புரட்சிப் படையினரால் அபகரிக்கப்பட்டன எங்கள் வீட்டு நூலகங்கள், இரக்கமற்று பொதுவிடங்களில் வைத்து, எங்கள் கண்முன்னால் எரித்தார்கள், அவை அவ்வளவும் சாம்பலான கொடூரத்தைக் கண்டிருக்கிறோம்”, என்கிறான் கதை சொல்லி.

ஒரு நாள் கதைசொல்லியும், அவன் நண்பனும் பினோகிலார் வீட்டுக்காக அரிசிமூட்டை ஒன்றைச் சுமந்து சென்றதன்  பலனாக, அவன் இவர்களுக்கு ஒரு பழைய புத்த்கமொன்றை கொடுக்கிறான். அப்புத்தகம் பல்ஸாக் நாவலொன்றின் சீன மொழிபெயர்ப்பு. முதன் முதலாக தங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை, உணர்ச்சிப் பெருக்கை, கிளர்ச்சியை அப்புத்தகம் ஊட்டுவதாக உணருகிறார்கள். கடந்த நொடிவரை ஊமையாய்க் கிடந்த உலகம் அவர்களோடு உரையாடுகிறது. இவர்கள் கற்பனைக்கெட்டாத தூரத்திலிருந்த பிரான்சுநாடு, அண்டைவீடாக மாறியிருந்தது. இப் புதிய உலகம் மெல்ல மெல்ல லுவோ மூலமாகத் தையற்காரச் சிறுமிக்கும் அறிமுகமாகிறது, எழுதி அனுப்பத் தாள்களேதும் இல்லாத நிலையில் சிறுமிக்கு இவர்களுடைய மேலாடையில் பல்சாக் புத்தகத்தின் பக்கங்கள் ஒவ்வொரு வார்த்தையாக எடுத்தெழுதப்பட்டு அவளிடம் சேர்கிறது. “லுவோவின் மேலாடையை வாங்கியவள் அவன் உதவியின்றி வாசித்து முடிக்கிறாள். வாய்திறந்தவள் பேச்சின்றி நிற்கிறாள். அவள் இரண்டுகைகளிலும் ஏந்தியபடி லுவோவின் மேலாடை, அதை ஏதோ புனிதமானதொரு பொருளைப்போல ஏந்தியிருந்தாள். என்று லுவோ மூலம் அறிகிறான் கதை சொல்லி. அவனுக்குள்ளும் தையற்கார பெண்ணிடத்தில் காதலிருப்பதை உணருகிறான். நண்பனிடத்தில் பொறாமையும் வளர்கிறது. பல்ஸாக் வாசிப்பு பெண்ணிடத்தில் ஓர் அகமாற்றத்தை உண்டாக்குகிறது. பையன்கள்கள் இருவரும் வாசிப்பு தந்த போதையில் புத்தகப் பெட்டியையே ஒருநாள் திருடுகிறார்கள். ஒவ்வொரு நூலாக வாசிக்கிறார்கள். மேற்கத்திய உலகம் மெல்ல மெல்ல இதழ்விரித்துப் பரவசமூட்டுகிறது. ஊர்த் தலைவனுக்குநேர்ந்த பல்வலியைக் குணப்படுத்தியதில், உடல் சுகவீனமுற்று படுக்கையிலிருந்த தாயைப்பார்க்க லுவோவுக்கு அனுமதி கிடைக்க, தையற்காரர் பெண்ணிடம் காதல் கொண்டிருந்த லுவோ அவளை வேறுபையன்கள் அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நண்பனான கதைசொல்லியிடம் கேட்டுக்கொண்டு புறப்படுகிறான்.இப்போது ஒவ்வொரு நாளும் மூங்கிற்கூடையில் கிராமத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறி என்று சுமந்துசெல்கிறபோதெல்லாம், பல்ஸாக் நூலொன்றையும் மறைத்து கதைசொல்லி அப்பெண்ணுக்காக எடுத்து செல்கிறான்.

ஒரு நாள் பெண் தான் கர்ப்பமுற்றிருக்கும் தகவலை அவனிடம் சொல்கிறாள். திருமணமாகாத பெண் ஒருத்தி பிள்ளை பெற சட்டத்தில் அனுமதி இல்லை. லுவோ ஏழாண்டுகளுக்கு முன்பாக அவளை மணம் செய்துகொள்ள சட்டத்தில் அனுமதியில்லை. சட்டம் ஆண்களுக்கான திருமண வயதை 25 ஆக உயர்த்தியிருந்தது, அரசாங்கத்திற்கெதிராக எதையும் செய்யமுடியா நிலை. ஒவ்வொரு சதுர மீட்டரும் மக்கள் படையால் கண்காணிக்கப்பட்டு வந்தது. பெண்ணை இக்கட்டிலிருந்து காப்பாற்றவேண்டிய நெருக்கடியில், மருத்துவரொருவரிடம் கதைசொல்லி ஒப்பந்தம் செய்துகொள்ளுகிறான், பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யும் பட்சத்தில் தன்னால் ஒரு பல்ஸாக் நூலை கையூட்டாக கொடுக்கமுடியும் என்கிறான். மருத்துவருக்கு பேரதிர்ச்சி, அவரால் நம்ப முடியவில்லை, அப்படியொரு அதிசயம் இங்கே சாத்தியமா, நடக்ககூடியதா என்பது போல அவனைப் பார்க்கிறார். புத்தகம் கையூட்டாக கிடைக்குமெனில் கருக்கலைப்பு செய்வேனெனச் சம்மதிக்கிறார். அதன்படி கருக்கலைப்பு நன்றாக முடிகிறது. மூன்றுமாதத்திற்குப் பிறகு தையற்காரி பெரிய நகரமொன்றிற்கு வேலைவாய்ப்பு தேடிப் பிரிந்து செல்ல, பல்ஸாக் புத்தகத்தைத் தீக்கிரையாக்கிப் பைத்தியக்காரனைப்போல சிரிக்கிறான் திரும்பி வந்த லுவோ. “பெண்ணொருத்தியின் அழகென்பது புதையல்போல, அது மதிப்பிடமுடியாதது”, என்பது பிரிந்து செல்வதற்கு முன்புவதற்கு முன்பு தையற்காரியின் கடைசிப் பேச்சு; அவ்வாக்கியம் பல்ஸாக்கிற்குச் சொந்தமானது.

sijie_dai1ஒரு நூலினைப் புரிந்துகொள்வதில் கதைக்கான காலமும் வெளியும் முக்கியம். ‘பல்ஸாக்கும் சீனத் தையற்காரிச் சிறு பெண்ணும்‘ அதற்கு விதிவிலக்கல்ல. மாவோ வார்த்திருந்த சீனாவில் புத்தகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்திருந்தது. கதை சொல்லுவதே உயிருக்கு ஆபத்து என்று நினைத்த காலம். வெகுசனங்களை அறியாமையில் நிறுத்துவது, அவர்களை அடக்கி ஆள்வதை எளிதாக்கியிருந்தது. கதையில் வரும் இளைஞர்களுக்கு எதிர்பாராதவிதமாக மேற்கத்திய இலக்கியங்கள் கைக்குக் கிடைக்கின்றன. ஏகாதிபத்தியம், தடை, என்பது பற்றிய பிரக்ஞையின்றி புரட்டுகிறார்கள்: பெட்டிக்குள் பல்ஸாக், துய்மா, ரொமென் ரொலான்… புரட்சியாளர்களால் மக்களுக்கு ஆபத்தானவையென சித்திரிக்கப்பட்ட புத்தகங்கள், கதை சொல்லிக்கும், லுவோ என்பவனுக்கும் வேறுவகை அனுபவங்களைத் தருகின்றன, நெஞ்சங்கள் விடுதலை பெற்றதுபோலதொரு உணர்வு. லுவோ தையற்காரியிடம் விதிகளை மறந்து காதல் கொண்டதற்கும் ஏதோ ஒருவகையில் பல்ஸாக்கும், பிற எழுத்தாளர்களும் காரணமாகின்றனர். முதன் முறையாக மனிதர் இருப்பும் அவன் உணர்வுகளும் எல்லைகளைக் கடந்தவை, உலக சமுதாயத்துடன் இணக்கம் கொள்பவை என்பதைப் பையன்கள் அறியவருகிறார்கள். இலக்கிய வாசிப்பு மனதிற்கான சுதந்திரத்தைக் கட்டவிழ்ப்பதோடு, தனியொருவன் விதியைத் தீர்மானிப்பது அவனாக இருக்கவேண்டுமேயன்றி, அப்பொறுப்பை அரசாங்கம் தனதாக்கிக்கொள்வது முறையல்ல என்பதுணர்த்தப்படுவது நாவலில் வரும் பையன்களுக்கும் நமக்கும் சேர்த்து.

கன்பூஷியஸின் வான வேடிக்கைகள்‘ நூலில் வரும் மன்னன், அதிகாரத்தின் மையம். எளிதில்  பிறரால் நெருங்கப்பட முடியாத மானுடப்பிறவி. அதுவே பிறரிடமிருந்து அவனை அன்னியபடுத்தவும் காரணமாகிறது, பரிதாபத்திற்குரிய வகையில் தனிமைப் படுத்தப்படுகிறான். ‘பல்ஸாக்கும் சீனத் தையற்காரிச் சிறுபெண்ணும்‘ கதை மாந்தர்களுக்கு நேர்ந்த கதியும் அவ்வாறானதுதான். புனர்வாழ்வுக்கான தண்டனை என்ற பெயரில் சொந்த மண்ணிலிருந்து அவர்களைப் பிரித்து, வெகுதூரத்திலிருக்கும் மலைப் பிரதேசத்திற்கு அரசாங்கம் அவர்களை அனுப்பி வைக்கிறது. ‘நிலவு தோன்றாத இரவன்று‘ நாவலில் வருகின்ற கதை நாயகனும் நாயகியும் தங்களைத் தாமே நன்கு அறிவதற்காகச் சொந்த நாட்டைத் துறக்கிறார்கள். இக்கதை மாந்தர்கள் அனைவருமே தாய்-சீஜியின் வெவ்வேறான படிவங்கள் போல வாசிக்கிறவர்களுக்குத் தோற்றம் தருகிறார்கள். தாய்-சீஜியின் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு இக்கதைகள் அவரது சொந்தவாழ்க்கையன்றி வேறல்ல என்றே நினைக்கத் தோன்றும்.

முதல் படத்தின் முடிவில் சீன அரசாங்கத்துக்கு அவர் வேண்டாத குடிமகன் ஆனார். சீனாவிற்குள் நுழைவதற்கு அவ்வரசாங்கம் தடை விதித்ததும், பிரான்சில் அனுமதி உரிமமின்றி இருக்க வேண்டியிருந்தது. எனினும் பிரெஞ்சு அரசாங்கத்திடம் அகதித் தகுதிக்காக அவர் விண்ணப்பித்ததில்லை, பிரெஞ்சு கடவுச் சீட்டுக்காக மன்றாடியவரும் அல்ல. அந்நிலையில் பிரான்சு நாட்டின் அப்போதைய கலை மற்றும் பண்பாட்டுதுறை அமைச்சர் ஜாக் லாங் என்பவர், பிரான்சு நாட்டின் உரிய வாழ்விட அனுமதி சீட்டின்றி இருக்கும் தாய்-சீஜி பிரெஞ்சு காவல்துறையினரால் கைதுசெய்யப்படமாட்டாரென்றும் அவர் பிரான்சில் தங்க விரும்பினால் அரசு அதற்கு ஆவன செய்யுமெனவும் கடிதமெழுதியிருந்தார். சீன அரசாங்கம் தடை விதித்திருந்தபோதும் தமக்கு சொந்த நாட்டின் மீது கோபமில்லை என்று அறிவித்திருந்தார். ‘பல்ஸாக்கும் சீனத் தையற்காரிச் சிறுபெண்ணும்‘ நாவலின் வெற்றிக்குப் பிறகு முழுத் திரைப்படம் அங்குதான் உருவாக்கப்பட்டது. எனினும் ஒருவருடத்திற்கு மேலாகச் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபிறகும், இன்றுவரை சீனாவில் அப்படத்தை திரையிட அனுமதி கிடைக்கவில்லை.

ஆனால் படத்தைப் பார்க்காமலேயே சீனப் பத்திரிகையாளர்கள் எழுதியிருந்த திரைவிமர்சனத்தில் திரைப்படமும், தாய்-சீஜியும் மிக மோசமாகக் கண்டிக்கப்பட்டிருந்தனர். எழுத்தாளரும்- திரைப்படத்தயாரிப்பாளருமான தாய்-சீஜிக்கு வியப்பு. “இதிலெங்கே அரசியல் இருக்கிறது, இத்திரைப்படம் மூன்று இளஞர்களின் தாய்மொழிமீதான ஆர்வம், எதையும் கற்க வேண்டுமென்கிற துடிப்பென்று பேசுகிற திரைக்கதையில் எங்கே பிழை கண்டார்கள்?” எனக் கேட்கிறார். தனது நூலொன்றுக்கும் இப்படியான கசப்பான அனுபவம் சொந்த நாட்டில் அவருக்கு நேர்ந்தது.

தி’ க்குள்ள பிரச்சினை‘ நாவல் பிரான்சு நாட்டின் ஃபெமினா -2003க்கான பரிசைப் பெற்றிருந்தது. சீனர் ஒருவர் பிரெஞ்சில் எழுதி பிரான்சு நாட்டில் அங்கீகாரம் பெறுவதென்பது ஓர் அன்றாட நிகழ்வல்ல. சீனர்கள் பெருமைப்படக் காரணங்கள் இருந்தன. ஆசிரியருக்குத் தனது சொந்தநாட்டில் நூல்வெளிவரவேண்டுமென்ற ஆசை, இயல்பானதுதான். பிரெஞ்சு மொழி பதிப்பாளரிடம் மொழி பெயர்ப்புக்கான உரிமையை வாங்கினார், உள்ளூரில் மொழிபெயர்ப்பாளரொருவரை ஏற்பாடு செய்து ஊதியமும் கொடுத்தார். உரிய காலத்தில் மொழிபெயர்த்தும் ஆயிற்று, பதிப்பிக்கிற நேரத்தில் அரசு ஆட்சேபித்தது. தணிக்கைத் துறையினர் கருத்தின்படி அரசுக்கு எதிரானவை என்று சொல்லப்பட்ட அல்லது சந்தேகிக்கபட்ட பல பகுதிகள் நீக்கப்பட்டன, பக்கங்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாக வந்தது என்கிறார்கள். இவ்வளவு நடந்தும் பிறகும் புத்தகம் சீன மொழியில் பதிப்பிக்கப்படவில்லை. கறுப்புச் சந்தைக்குப் புகழ்பெற்ற சீன நாட்டில் களவாய்த் தயாரிக்கவும் எவரும் முவரவில்லை, ஏனெனில் களவுத் தயாரிப்புகளுக்கும் அரசாங்கத்தின் ஆசிவேண்டும், என்கிறார் தாய்-சீஜி. உலகில் 35 மொழிகளில் வெளிவந்திருந்த அவரது நாவல் தமது சொந்த நாட்டில், தாய்மொழியில் வெளியிடுவதற்கான வாய்ப்பு அமையவில்லையென்ற வருத்தம் அவருக்கு ஏராளமாய் இருக்கிறது. இன்றும் தான் மனம் தளரவில்லையென்றும் தமது படைப்புகளை சொந்த நாட்டில் பதிப்பிக்கக்கூடிய சாத்தியங்கள் அமையக்கூடுமென நம்புகிறார்.

தாய்-சீஜி திரைப்படங்களைக் காட்டிலும் புத்தகங்களுக்கு கூடுதலாக சக்தியுண்டு என்றும் சொல்கிறார்: “திரைப்படங்கள் வரும் போகும், ஆனால் நீண்டகால அடிப்படையில் ஒரு வாசகனை எப்போதுவேண்டுமானாலும் எட்டுகிற யோகம் புத்தகத்திற்கு மட்டுமே உண்டு” என்பது அவர் வாதம்.

தாய்-சீஜியின் பிரதான கதை-மாந்தர்கள் எவரும் சமகால சீனமண்ணுக்கு உரியவர்களல்ல. அவரது சொந்த வாழ்க்கையிலேயே பிறந்த மண்ணின் வாழ்க்கை அனுபவங்களென எழுத நிறைய இருக்கின்றன. அவரது குடும்பவரலாற்றையே நாவலில் கொண்டுவந்திருக்கலாம் என்கிறார்கள். இவரை வளர்த்த பாட்டன் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த கிறித்துவப் பாதிரியார். சீனர்களில் கிறித்துவப் பாதிரியார் என்பவர் ஓர் அபூர்வப் பிறவி கோடியில் ஒருவர் அல்லது இருவர். அப்பணிகாரணமாக மேற்கத்திய மொழிகளோடு அவருக்குத் தொடர்பு வாய்க்கிறது. அதுவே அவருக்குத் தீங்காகவும் முடிகிறது ஏகாதிபத்தியத்தின் அடிமை எனச் சித்திரிக்கப்பட்டு அவர் கைது செய்யப்படுகிறார். சிறையில் துன்புறுத்தப் படுகிறார். கிறித்துவப் பாதிரியாரின் பத்து பிள்ளைகளில் ஒருவர் தாய்-சீஜியின் தந்தை. உள்நாட்டு வைத்திய முறையில் ஆர்வம் காட்டாமல் தந்தைக்கு நேர்ந்ததை மறந்து மேலை நாட்டுக் கல்விமுறையில் மருத்துவரானார். அப்போதைய அரசியல் சூழ்நிலையில், அவரும் கூட தனது தந்தையைப் போலவே மேற்கத்தியரின் கைக்கூலியென குற்றம்சாட்டப்பட்டு சிறையில் துன்புறுத்தப்பட்டவர். இவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொண்டு ஒரு நல்ல நூலை எழுதியிருக்கலாம். ‘இருபது முப்பது பக்கங்களுக்குமேல் எனது சொந்த வரலாற்றை அல்லது அதை மையமாகக்கொண்டு என்னால் எழுதமுடியவில்லை”, என்கிறார். “பிரெஞ்சில் எழுதும் சுதந்திரம் எனக்கு சீனமொழியிலில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன்”, என அவர் கூறுவதிலுள்ள உண்மையையும் மறுக்க இயலாது.

———————————————————
1.-Balzac and the Little Chinese Seamstress – Dai Sijie; Translator-Ina Rilke Publisher: Anchor Books. Publication (2000).