கடைசி வெற்றி

j_g_-ballard-at-home-in-1-002 சிறந்த அறிவியல் சிறுகதை எழுத்தாளராக அறியப்படும் ஜேம்ஸ் க்ரஹாம் பல்லார்ட் (James Graham Ballard) இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அறிவியல் சிறுகதைகளின் ‘புதிய அலை’ எழுத்தாளர்களில் ஒருவர்.  தன்னுடைய பதினாறாம் வயது வரை சீனாவில் ஷாங்காய் பகுதிகளில் ஜப்பானின் தாக்குதல்களுக்கு நடுவே பல்வேறு அகதி முகாம்களில் வளர்ந்தவர். இக்காலகட்டத்தின் நினைவுகளை வைத்து இவரெழுதிய ‘The Empire of the Sun’ நாவல் மிகவும் பிரபலமானது. 1987-இல் இந்த நாவல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்கால் திரைப்படமாக்கப்பட்டுப் பல விருதுகளை வென்றது. பல்லார்டின் இன்னொரு நாவலான ‘Crash’-ம் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. இவருடைய நாவல்களின் தாக்கத்தால் ‘Ballardian’ என்றொரு ஆங்கில வார்த்தையே அகராதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டது. (இந்த வார்த்தை பல்லார்டின் படைப்புகளின் சூழலான ‘இழிவான நவீனம்,  மனிதர்களால் உருவாக்கப்பட்ட அசிங்கமான நிலக்காட்சிகள், மாறிவரும் நாகரிக முன்னேற்றங்கள் ஏற்படுத்தும் உளவியல் பாதிப்புகள்’ போன்றவற்றை தன்னியல்பாகக் கொண்ட சூழலைக் குறிக்கும்). J.G.பல்லார்ட் தன்னுடைய 78-ஆவது வயதில் கடந்த ஏப்ரல் மாதம் மறைந்தார். இவருடைய கடைசி சிறுகதையான ‘The Dying Fall’  என்ற சிறுகதையை விஸ்வநாத் சங்கர் மொழிபெயர்ப்பில் கீழே படிக்கலாம்.

மொழிபெயர்ப்பு: விஸ்வநாத் சங்கர்

பிசா கோபுரம் (Pisa tower) உடைந்து விழுந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அந்த அபூர்வமான உலக அதிசயத்தின் அழிவில் நான் ஏற்ற முக்கியமான பங்கை ஒத்துக்கொள்வதற்கான தைரியம் எனக்கு இப்போது தான் வந்திருக்கிறது! ஆயிரக்கணக்கான டன்கள் எடையுள்ள பளிங்குக்கற்கள் தங்கள் பிடியை காற்றில் தவற விட்டு தரையில் விழுந்து நொறுங்கியதில் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் இறந்தனர். அவர்களுள் என் மனைவி எலைனும் ஒருத்தி.  கோபுரத்தின் உச்சிக்கு ஏறி, அங்கிருந்து அவள் கீழே நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்த வேளையில்தான் அதன்  அடிப்புறத்தில் கண்ணுக்குத் தெரியும்படியான முதல் பிளவு தோன்றியது. விபத்துக்கும், வெற்றிக்கும் இடையே உள்ள உறவின் ஆழம் குறைவு என்றே எண்ணியிருந்தேன். ஆனால் இந்த விபத்து சொன்ன செய்தியோ வேறு.  பல நூறு ஆண்டுகள் இந்த தள்ளாடும் கட்டட சுமையைத் தாங்கிப் பிடித்திருக்கும் கண்ணுக்கு தெரியாத சக்திகள், அந்த தேய்ந்த, வழுக்கலான படிகளைத் துணிச்சலுடன் கடந்த எலைனின் வெற்றியை, வெற்றியின் அகம்பாவத்தைத் தண்டிப்பது போலவே இது தெரிந்தது.

அன்று நடந்த விபத்தில் கேலியும் கலந்திருந்தது இப்போது புரிகிறது. தேவாலயத்தின் படிகளில் நடந்து கொண்டிருந்த பயணி ஒருவர் தற்செயலாக கோபுரத்தைப் படம் எடுத்த போது, அதன் பிளவு மூன்றாவது தளத்தைத் தொட்டு விட்டது. மேலும் அப்போது, நீளமான ஒரு கம்பி உடைந்து விழத் தயாராக இருந்தது. உலகம் முழுவதும் எண்ணற்ற முறை வெளியிடப் பட்ட அந்த புகைப்படத்தில், கோபுரத்தின் உச்சியில் பயத்தோடு நிற்கும் நான்கு பயணிகளும் தெளிவாகத் தெரிந்தனர். அதில் மூவர், தங்கள் பின்னால் சாய்ந்து, வானத்தை இறுகப் பிடிக்கும்படியாக கைகளை உயர்த்தி நின்றனர். தங்கள் பாதத்திற்குக் கீழ் இருக்கும் புராதன கட்டடம் நகர்ந்து செல்வதை அவர்கள் உணர்ந்தே இருந்தனர்.

எலைன் மட்டும் தடுப்புக்கம்பியை பிடித்துக்கொண்டு, இருநூறு அடி கீழே தரையில் தனக்காகக் காத்திருக்கும் புற்களைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள். அந்த புகைப்படத்தை ஒரு பூதக்கண்ணாடி கொண்டு உற்றுப் பார்த்தால் தெரியும். எலைன் முகத்தில் அதிர்ச்சிக்கான எந்த ஒரு அறிகுறியும் இருக்காது. அவள் அப்படித்தான். திமிர் பிடித்தவள். கிண்டலும் அதிகம் உண்டு. அவள் விழிகள் விழுகின்ற கம்பியைக் கவனித்திருந்தன. பயணிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்திய பிசா நகராட்சியின் மீது வழக்கு தொடர அவள் முன்னமே திட்டமிட்டுருக்க வேண்டும். தன் வழக்கறிஞர்களுக்கு கொடுக்க வேண்டிய சாட்சியங்களை அவள் அந்த கணத்தில் சேகரித்துக் கொண்டிருந்தாள் என்றே எனக்கு தோன்றுகிறது.

கண்ணுக்கு எட்டிய வரையில், கீழ் தளத்தில் ஒரு பத்து, பன்னிரண்டு பயணிகள் தங்கள் மேல் உள்ள சாய்வான மாடிகளுக்குச் செல்ல ஆசையாய் காத்திருந்தனர். ஒல்லியான தூண்களைப் பிடித்து, மாடிக்கு அழைத்து செல்லும் அந்த முன்னூறு படிகளையும் ஒவ்வொன்றாக ஏறிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுமியும், அவள் தந்தையும், கீழே உள்ளவர்களுக்குக் கையசைக்க; சீருடையில் இருந்த இரண்டு இத்தாலிய மாலுமிகள் மயங்கி விழுவதைப் போல பாசாங்கு செய்து தங்கள் தோழிகளை ஏமாற்றி விளையாட; ஒரு வயதான தம்பதி எப்படியும் முழுவதும் ஏறிவிடும் முடிவோடு, முதல் மாடியை தாண்டிய பின் சற்று ஒய்வு எடுக்க… பல வகையில் ஆனந்தமாக இருந்தனர். ஆனால் ஒருவரும் உடைந்து விழும் கம்பியையோ, அருவியாய் கொட்டும் சுண்ணாம்புக் காரையையோ கவனிக்கவில்லை!

leaning20tower20of20pisa20italyஅடுத்த கணம் நடக்கவிருக்கும் அபாயத்தை அறிந்த ஒரே நபர் கோபுரத்தின் அடிவாரத்தில் நின்றிருந்தான். அந்த மனிதன் வெள்ளை நிற மேல் சட்டையையும், பனாமா தொப்பியையும் அணிந்து கொண்டு, தன் இரு கைகளாலும் விழும் பளிங்குக்கல்லின் ஒரு பகுதியை உயர்த்திப் பிடித்திருந்தான். அவன் முகம் மறைந்திருந்தது. ஆனால் அவன் கரங்களோ அசையும் கல்லை அணைத்துக் கொண்டிருக்க, முதுகு நோவுகிற கால்கள் மீது கொக்கி போல வளைந்திருந்தது. தன்னை உருத்தெரியாமல் அழிப்பதற்காக விழுந்து கொண்டிருக்கும் கோபுரத்தை, பெரும் முயற்சியுடன் மூர்க்கத்தனமாக அவன் தாங்கி பிடித்திருந்ததை நம்மால் நிச்சயமாக பார்க்க முடியும்.

அல்லது அப்படித்தான் எல்லோரும் எண்ணினர். செய்தித்தாளில் தலைப்புச் செய்திகளை எழுதுபவர், தொலைக்காட்சியில் உண்மை சம்பவங்களை வர்ணிப்பவர், எல்லோரும் முகம் தெரியாத அந்த ஒற்றை ஆளின் வீர தீர செயலை பாராட்டி தள்ளினர். ஆச்சரியம் என்னவென்றால், அவனை யாரும் அடையாளம் காணவில்லை. சில நாட்களுக்கு பின், அந்த துக்ககரமான இடம் சுத்தம் செய்யப்பட்ட நேரத்தில், அந்த இடிபாடுகளுக்கு இடையே இருந்த கற்குவியலில் தேடிய போது கூட அவனுடைய  தொப்பியோ, வெள்ளை மேல்சட்டையோ கிடைக்கவில்லை.

உண்மையிலே அவன் சாய்கின்ற கோபுரத்தை தாங்கி நிற்கவா முயற்சித்தான்? இல்லை அதை அவனே இன்னமும் தள்ளிவிட்டானா? என்னால் இதற்கு பதில் சொல்ல முடியும். என்னால் மட்டுமே முடியும். ஏனென்றால், நான்தான் பனாமா தொப்பி அணிந்த அந்த மனிதன்! நான்தான், சாகும் தருவாயில் வெற்றியுடன் எலைன் பார்த்த அவளுடைய கணவன்!

நீங்கள் நினைப்பது சரிதான். நான் அப்போது ஒரு பாதுகாப்பான இடத்தை தேடி பறந்தோடிவிட்டேன் என்று தனியாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. நிலம் நடுங்கி, கல்லும் மண்ணும் பெரும் நீர்வீழ்ச்சியாய் கொட்ட ஆரம்பித்த போது, நான் அலறுகிற பயணிகளுக்கும், அடர்த்தியான புழுதி மண்டலத்துக்கும் இடையே ஊடுருவி ஓடிக் கொண்டிருந்தேன். பொடியாகிப் போன பளிங்குக் கற்கள் பெரும் படலமாய் நிலத்தை மறைத்து இருந்தன. பீதியில் நின்ற ஹோட்டல் சிப்பந்திகளும், காரோட்டிகளும், வாயைப் பிளந்து கொண்டு அந்த அழிவை வேடிக்கை பார்த்திருந்த சமயத்தில், நான் அவர்களை எல்லாம் தாண்டி தட்டுத்தடுமாறி ஓடிக்கொண்டிருந்தேன். அங்கு மறைந்தது வெறும் கல், மண்ணால் கட்டப்பட்ட கோபுரம் மட்டுமல்ல. அது தன்னோடு சேர்த்துப் பல உயிர்களையும் கொண்டு சென்றது. இதற்கு எல்லாம்  நான்தான் காரணம் என்று அவர்களுக்கு தெரிந்திருந்தால், அந்த இடத்திலேயே என்னைக் கொன்றிருப்பார்கள். அந்த பயம்தான் என்னை இத்தனை நாட்களாக ஊமையாக்கி விட்டது . அதே பயம்தான், பல உயிர்களை எடுத்த குற்ற உணர்வையும் அடக்கி வாசிக்கச் செய்தது. எத்தனை உயிர்கள்! அத்தனையும் களங்கமில்லா நெஞ்சங்கள்… ஒன்றைத் தவிர!

ஒரு வகையில் யோசித்தால், இந்த கோபுரத்தின் அழிவு, நாங்கள் டஸ்கனிக்கு எங்கள் உற்சாகமற்ற பயணத்தைத் தொடங்கிய போதே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. சிக்கலுடன் தொடங்கிய எங்கள் திருமண வாழ்க்கை, சென்ற ஆண்டு இருவருக்கும் பெரும் பளுவாகவே ஆகி விட்டது. எலைன் தன்னை ஏமாற்றிவிட்ட காதலனைப் பழி தீர்ப்பதற்காகவே என்னை மணந்தாள். ஆனால், பிறகு தான் அவளுக்கு புரிந்தது, ஒரு சொத்தையான பல்கலைக்கழகத்தில் இலக்கிய விரிவுரையாளராக இருக்கும் தன் கணவன், எல்லாவற்றிலும் சொத்தை என்று! பாடத் திட்டத்தில் உருவான மாற்றங்களால் நான் என் மாணவர்களை இழந்து கொண்டிருந்தேன். லத்தீனும், கிரேக்கமும் கற்பிக்கப்பட்ட வகுப்புகளில், பண்பாடும், தொலைத்தொடர்புப் பாடங்களும் புகுந்து கொண்டன. நான் பல்கலைக்கழகத்தின் மீது வழக்குத் தொடர மறுத்த போது, எலைன் என்னை இயல்பாகவே பலகீனமானவன் என்று முடிவு செய்தாள். என் நோஞ்சான் நிலை எங்கள் திருமண படுக்கை வரை நீண்டது.

எங்கள் திருமணத்தில் உடலுறவு சார்ந்த முழுமை காணாத எலைன், என்னை விவாகரத்து செய்யும் நோக்கத்துடன் ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொண்டாள். நானோ என்னால் முடிந்த வரை இந்த உறவை காப்பாற்ற முயற்சி செய்து வந்தேன். விரைவில், எங்கள் மண வாழ்க்கையில் பல ஒப்பந்தங்களும், பேச்சு வார்த்தைகளும் ஏற்படத் தொடங்கின. அவை எல்லாவற்றிலும் நானே விட்டுக்கொடுப்பேன். அடங்கிப்போவேன். எப்படியும் இதை காப்பாற்றும் பொருட்டு, புது மணத் தம்பதியராய் நாங்கள் அனுபவித்த சந்தோஷங்களை மீண்டும் உருவாக்க விருப்பப்பட்டு, இந்த ‘இத்தாலி விடுமுறை’ என்ற யோசனையை முன் வைத்தேன். நான் ப்ளோரன்ஸில் உள்ள பல்கலைக்கழகத்தில் மூன்று சொற்பொழிவுகள் கொடுக்க ஒத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் எங்கள் விமான செலவுக்கு பணம் தருவதாக ஏற்பாடு. ஆகையால், இலவசமாக டஸ்கன் கிராமப்புறத்தை நாங்கள் சுற்றிப்பார்க்கலாம்.

எலைனும் சம்மதித்தாள்… அரைமனதோடு! அவள் முதல் கணவன் ஒரு நவீன கட்டட நிர்மானர். மேலும் அவள், நான் மிகவும் ரசிக்கும் பழமையை வெறுப்பதாகக் கூறினாள். அதனால் அவள் கலிபோர்னியாவோ, இல்லை டேக்சாசோ செல்ல விரும்புவதாக சொல்லிக் கொண்டாள். ஆனால் நாங்கள் பிசா விமான நிலையத்தில் இறங்கி, ப்ளோரன்சுக்கு செல்ல ரயிலில் ஏறியவுடன், இத்தாலிய மறுமலர்ச்சியின் மீது அவள் காட்டிய ஆர்வம் இருக்கிறதே! அடேயப்பா…நான் வாயடைத்துப் போனேன்! என் சொற்பொழிவுகள் எல்லாம் முடிந்த பிறகு, என்னை ஒரு சூறாவளி சுற்றுப் பயணத்தில் இழுத்துச் சென்றாள். ஒன்றுவிடாமல் எல்லா தேவாலயத்திற்கும், அருங்காட்சியகத்திற்கும் என்னை இழுத்து சென்றாள். வரலாற்றின் மீது அவளுக்கு உருவான இந்த திடீர் ஆர்வத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே நேரம், இந்த சரித்திர இடங்களுக்கு நாங்கள் மேற்கொண்ட பயணம் என்னுடைய இன்னுமொரு குறையை உரித்துக் காட்டியது!

கீச்சுகின்ற இயந்திர தூக்கியில் ப்ளோரன்ஸ் தேவாலயத்தின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போதுதான் எலைன் நான் உயரத்தைக் கண்டு பயப்படுவதை கவனித்தாள். நானே அதுவரை கவனித்ததில்லை. அவளோ உடனே அதை ஊதிப் பெரிதாக்கி விட்டாள். வட்டமான அந்த விதானத்துக்குக் கீழே இருக்கும் இடம் யாவும் உயரமாக இருப்பதைப் போன்ற மாயை ஏற்பட்டது. அந்த காட்சிப்பிழை காரணமாக மின்தூக்கியின் வெளியே காலெடுத்து வைக்கவே தயங்கினேன். என் கண்கள் வளைந்த சுவர்களை பார்க்க முடியாமல் அலைபாய்ந்தன. இதயம் துடித்த வேகத்தைப் பார்த்தால் அது வெளியே வந்து விழுந்துவிடும் போல இருந்தது. எல்லாமும் சேர்ந்து என்னை ஒரு மயக்க நிலைக்குத் தள்ளின.

என்னால் அந்த குறுகிய பாதையில் அவளைத் தொடர இயலாது என்று எலைனிடம் கூறினேன். இல்லை சைகை மட்டுமே செய்ய முடிந்தது. மூச்சுவிடத் திணறியபடியே, அவள் அந்த விதானத்தைப் பெருமையுடன் வட்டமடிப்பதை பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளோ எல்லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் என்னைக் கூப்பிட்டு பிற பயணிகளுக்கு முன் அசிங்கப்படுத்தினாள். அதில் வியப்படைய ஒன்றுமில்லை. எனக்குப் பழகிவிட்டது. ஆனால் அதற்குப் பின் நடந்ததுதான் ஆச்சரியம். தேவாலயத்தை விட்டு வெளியே வந்தவுடன் எலைன் மிகுந்த அக்கறையுடன் என் கரங்களைப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய பிடி நம்பிக்கை தருவதாக இருந்தது. நிஜமாகவே அதில் ஏளனம் இல்லை. அவள் முகத்தில் என் பீதியைக் கண்ட ஒரு உண்மையான கவலை தெரிந்தது!

இப்படி அன்பு பொங்கிப் பெருகி ஓடிக்கொண்டிருந்த பொழுதிலும், எங்கள் சுற்றுப்பயணம் அதற்குப் பிறகு ஏறுமுகமாகவே இருந்தது. நாங்கள் அளக்காத தடுப்புச் சுவர்களுமில்லை. ஏறாத படிக்கட்டுகளும் இல்லை. கண்ணைக் கவரும் ஊரின் அழகை காட்டுகிறேன் பார் என்ற பேரில் பலாத்சோ வெக்கியோவின் மாடிக்கு என்னை நடக்க வைத்த எலைன், அங்கிருந்த ஒவ்வொரு சன்னலிலும் என்னை சாயச் செய்தாள். அந்த சன்னல்களில் தான் லாரன்ஸோ டி மெடிகி தன் ஆட்சியை எதிர்த்த சதிகாரர்களை எல்லாம் தொங்கவிட்டிருந்தானாம்! அங்கிருந்து சியேன்னா தேவாலயத்தைப் பார்த்த பொது, அந்த கட்டுப்பெட்டி மணிக்கூண்டியில் என் இறுதி மூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். இதெல்லாம் நடந்த வேளையில், எலைன் ஒரு மாறாத அன்புப் புன்னகையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாள். அந்த நகைப்பு ஒரு பாசமுள்ள அக்கா பயந்த சுபாவமுள்ள தன் தம்பியை கவனிப்பது போல இருக்கும். ஒரு சமயம், உயரத்தின் மீது நான் கொண்டுள்ள பயத்தைக் குணமாக்க அவள் முயன்றாளோ? இல்லை, என் குறையை அழிக்க முயர்ச்சித்தாளோ? தெரியாது!

இதற்கெல்லாம் மகுடம் வைப்பதாய் இருந்தது  எங்கள் சான் கிமிக்னானோ விஜயம்! சான் கிமிக்னானோ – பதினான்காம் நூற்றாண்டில் இரண்டு பகை குடும்பங்களால் எழுப்பப்பட்ட ஒரு தன்னிச்சையான நகரம். திரும்பிய திசைகளில் எல்லாம் கோபுரங்களை ஏந்திக் கொண்டிருக்கும் ஒரு ‘சர்ரியல்’ நகரம். எலைன் ஓயாமல் ஒரு கோபுரத்திலிருந்து மற்றொன்றுக்கு தாவிக் கொண்டிருந்தாள். நானோ தேவாலயத்தின் அருகில் இருக்கும் காப்பி ஹோட்டலில் ஓய்ந்து போய் உட்கார்ந்து கொண்டேன். ஹோட்டல் சுவர்களிலெல்லாம் அச்சமூட்டும் சித்திரங்கள் மாட்டப்பட்டிருந்தன. மதியம் முழுவதும் எலைன் கோபுரங்களின் அழகை ரசித்தபடி இருந்தாள். அதில் உள்ள சிலைகளிலும், ஓவியங்களிலும் காணப்பட்ட ஆண்மையை, தன் கணவனிடம் காணக்கிடைக்காத ஆண்மையை, வியந்து, புகழ்ந்து கொண்டாடினாள். பின் வாயெல்லாம் பல்லாக என்னோடு பேருந்தில் ப்ளோரன்சுக்கு புறப்பட்டாள்.

மூன்று நாட்களுக்குப் பின் பிசா நகரத்துக்கு  வந்தோம். அங்கிருந்துதான் லண்டனுக்கு விமானம் ஏற வேண்டும். அதன்பின் எல்லாம் எலைனின் திட்டப்படி நடக்கும்.  நாங்கள் இங்கிலாந்து செல்வோம். நான் என் பல்கலைக்கழக அலுவலத்திற்கும், அவள் தன் வழக்கறிஞர் அலுவலகத்திற்கும்! அமைதியாக மூட்டைக் கட்டிக்கொண்டு, பிசா விமான நிலையத்திற்கு வந்தபோதுதான் தெரிந்தது, விமானம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது என்று. வேறு வழியின்றி ஒரு டாக்ஸி பிடித்து நகரத்திற்குள் சென்றோம். வழியெல்லாம் தன் சுற்றுலா வழிகாட்டியை வைத்துக்கொண்டு, அதில் குறிப்பிட்டுள்ள தேவாலயங்கள் குறித்தும், மற்ற சில கட்டிடங்கள் பற்றியும் எலைன் அளந்து கொண்டே வந்தாள். ஆனால் எனக்குத் தெரியும் எங்களுடைய இந்தப் பயணம் அருகிலுள்ள கோபுரத்துக்குத்தான் என்று. சான் கிமிக்னானோவின் கோபுரங்களை விட இந்தப் பளிங்கு லிங்கம் அவளை அதிகமாகக் கிளறியிருக்க வேண்டும்!

டாக்ஸியிலுருந்து இறங்கியவுடன் அந்த கோணலான அடுக்கு கோபுரத்தையே முறைத்துப் பார்த்துகொண்டிருந்தேன். பார்த்தாலே தலையை சுற்றும் போல இருந்தது. ஒரு வார்த்தை கூட சொல்லாமல், எலைன் கோபுரத்தை நோக்கி துள்ளி ஓடிக்கொண்டிருந்தாள். தன் நுழைவுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு மாடிப்படிகளில் ஏறினாள். அவளுக்கு முன்னே இரண்டு மாலுமிகளும், ஒரு தகப்பனும், அவனுடைய பெண் குழந்தையும் இருந்தனர். ஒவ்வொரு தளத்தை அடைந்த பின் அவள் என்னைப் பார்ப்பாள். அவள் முகத்தில் என்னைப் புண்படுத்தும் அதே அன்புப் புன்னகை! அந்த இளக்கார சிரிப்பின் அகலம் மாடிக்கு மாடி நீண்டுகொண்டே போனது.

கோபுரத்தின் நம்பமுடியாத சாய்வை தேவாலயத்தின் படிகளில் நின்றபடி வியந்து  கொண்டிருந்தேன். செங்குத்தான நேர்கோட்டிலிருந்து ஏறத்தாழ பதினேழு அடிகள் வெளியே துருத்திக் கொண்டு நின்றது! அதே நேரத்தில், ஆண்டுதோறும் சில மில்லிமீட்டர்கள் வளைந்து கொண்டு போகும் இந்த கட்டடம் இந்த நொடியில் விழுந்து நொறுங்கக் கூடாதோ என்று குரூரமாக ஆசைப்பட்டேன்.

எலைன் கிட்டத்தட்ட உச்சியை நெருங்கிவிட்டாள். எனக்கோ கோபுரத்தை தொட வேண்டும் போல இருந்தது. சொரசொரப்பான அந்த கற்களை என் சருமத்தால் தொடும் உணர்வை அனுபவிக்க வேண்டும் போல இருந்தது. தேவாலயத்தை விட்டு நடக்கத் தொடங்கினேன். எதிரே இருக்கும் புல்வெளியில் நடந்தேன். அதில் அமர்ந்து கொண்டு, தங்களுக்கு மேல் இருக்கும் தங்கள் நண்பர்களுக்கு கையசைத்தபடி இருந்த பயணிகளைக் கடந்து நடந்தேன். நுழைவுச் சீட்டு அலுவலகத்தை மதிக்காமல் நடந்தேன். கோபுரத்தைச் சுற்றியிருக்கும் கிணற்றைத் தாண்டியும் நடந்தேன். கடைசியாக என் கைகளை அந்தப் பழைய கட்டடத்தின் மீது வைத்தேன். பல நூறு வருடங்களுக்கு முன் பொறிக்கப்பட்ட  எழுத்துக்களைக் கொண்ட அந்த கற்கள் சொரசொரப்பாக இல்லை. மிருதுவாக இருந்தன. காலத்தைக் கடந்த மென்மை அவற்றில் இருந்தது. எத்தனை பழமையான கட்டடம்! எத்தனை கம்பீரமான கட்டடம்! என் முன் இருந்த கற்பலகையை அதன் திசையிலேயே உந்தும் முயற்சியாய் அதை அழுத்தினேன்.

எனக்கு எட்டு மாடிகளுக்கு மேல்… எலைன் உச்சியை அடைந்து விட்டாள். மூச்சு வாங்கிக் கொண்டிருந்த மாலுமிகளுக்கு பின் நின்றாள். அவளும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, இரும்புக் கம்பியை பிடித்த படி என்னைப் பார்த்து சிரித்தாள். அதே தான்! அதே அனுதாபமில்லாத ஆணவச்சிரிப்பு தான்! கூடவே என் குறையைக் கேள்வி கேட்கும் விதத்தில் தலையை அசைத்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய இந்த அவமதிப்பால் கோவப்பட்டு, வேகமாக சுவற்றைத் தள்ளினேன். அதுவோ லேசில் பிடி கொடுக்கவில்லை. ஆனால் கைகளை விலக்கிய பின்னரே கவனித்தேன். சுவற்றின் மேல்பரப்பில் உதிர்ந்த சுண்ணாம்புத் துகள்களுக்கு மத்தியில் மெலிதான ஒரு விரிசல்! ஆர்வமாக மீண்டும் தள்ளினேன். விரிசல் பிளவாக அகண்டது. நத்தை வேகத்தில் நகரத் தொடங்கிய பிளவு, பின் புலி போல மேல் நோக்கி பாய்ந்தது. மூன்று அடிகள் நீண்டு, அலங்காரப் பூச்சுகளை எல்லாம் தாண்டி, முதல் மாடியில் உள்ள தடுப்புக் கம்பியை நெருங்கியது.

சிரித்துக் கொண்டே மறுபடியும் தள்ளினேன். பிளவு பெரும் கர்ஜனையுடன் பெருத்துப்போனது. அந்த சத்தம் கோபுரத்திற்குள் அடைந்திருந்த ஒரு மிருகம் முனகிக்கொண்டே விழிப்பது போல இருந்தது. பிளவு இப்போது பெரிய பள்ளமாகவே ஆகி விட்டது. அதன் வழியாக என்னால் ஒருவருடைய காலணிகளைப் பார்க்க முடிந்தது. அவை ஒரு முதியவரின் காலணிகள். அவரும், அவர் மனைவியும் இரண்டாம் மாடியை ஏறிய பின் சிறிது ஒய்வு எடுக்க அமர்ந்திருந்தனர். தூசியும், சுண்ணாம்பும் மழை போல  என் முகத்தில் விழுந்தன. உலகமே வியக்கும் இந்த அதிசய கட்டடம் இப்போது என் கைகளில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. தடுப்புக் கம்பியின் துண்டு ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. என் முட்டியை விடவும் பெரிதான கற்துகள்கள் அதை தொடர்கின்றன.

இதோ! பிசாவின் கோபுரம் விழப்போகிறது! இறுதி முறை… இரு கரங்களாலும் ஒரு வேகமான தள்ளல்! அவ்வளவுதான்… முடிந்து விட்டது! இந்த பிரம்மாண்ட கட்டடத்தின் முதுகுத்தண்டையே முறித்து விட்டேன். உடனே, இந்த கற்சுமை என் மீது விழும் என்ற சுயப்பிரக்ஞை தோன்றியவனாய் பின்னால் வந்தேன். மேலே எலைன் கம்பியில் இன்னமும் ஒட்டிக் கொண்டுதான் இருந்தாள்.

கோபுரம் வளைந்தது. மடிந்தது. மறைந்தது. பௌலிங் பந்தால் சிதறடிக்கப்பட்ட குழவிகளைப் போல அதன் தூண்கள் எல்லாம் தூக்கியெறியப் பட்டன. அந்த இறுதி தருணங்களில் எலைன் கம்பியோடு சேர்ந்து என்னை நோக்கி வந்தாள். அவள் முகத்தில் இருந்த கோபம் ஏனோ என்னைப் பார்த்த நொடியில் ஒரு வெற்றியின் பெருமிதமாக மாறியது.

அந்த துக்ககரமான சம்பவத்துக்கு பின் உலகம் முழுவதும் உருவான அனுதாப அலையும், அதன் விளைவாக பிறந்த நன்கொடைகளும், கோபுரம் உடைந்த அதே இடத்தில் நகலான இன்னொரு கோபுரத்தை எழுப்ப உதவியாய் இருந்தன. இப்போது அந்த இரண்டாம் கோபுரத்தை உருவாக்கி வருகிறார்கள். அசைக்கமுடியாத ஸ்திரமான அடித்தளத்தின் மேல் நிர்மாணிக்கப்படும் இந்த புதுக் கட்டடம், மூன்றாவது மாடி வரை வளர்ந்துவிட்டது. அளவான சாய்வோடு அழகாக நிற்கிறது. உறுதியான உருக்குக் கம்பிகளால் தாங்கப்படும் இந்த கோபுரம் ஒருபோதும் விழாது என்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் இதைக் காண வரும் பயணிகள் யாவரும் இது ஒரு பிரதி என்பதையே மறந்து விடுவார்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

எனக்கோ, அந்த அசல் கோபுரம்தான் என்றென்றும் என் நினைவில் நிற்கிறது. டன் கணக்கில் பளிங்குப் பாறைகள் என்னைத் தாக்க வருவது போன்ற பயங்கரமான சொப்பனத்துடன் அடிக்கடி நான் விழிக்கிறேன். அது போன்ற இரவுகளில், ‘அன்று இறந்தது நானில்லை, எலைன்’ என்று எனக்கே சமாதானம் சொல்லுவேன். அவளுடைய அந்த நிமிட முகம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவள் கண்களில் இருந்த அந்த கொடூரமான அகங்காரத்தை என்னால் மறக்க முடியாது.

கொட்டும் கல் அருவியில் நான் நசுங்கி சாவதைக் கண்டு அவள் மகிழ்ந்தாளா? இல்லை, என்னைக் கடைசியாக ஒருமுறை ஜெயித்துவிட்டதாக உணர்ந்தாளா? சிதறும் கோபுரத்திலிருந்து விலகி வர நான் போராடிக்கொண்டிருந்த வேளையில் என் தோள்பட்டையின் மீது கற்கள் பட்டு தெறித்தது ஞாபகம் இருக்கிறது. ஒரு கத்துக்குட்டியின் வீடியோ படம் சொல்வதைப் போல, அந்த இறுதி கணத்தில் கோபுரம் மடங்கி, நெளிந்து, தன்னைத் தானே நேராக்கிக் கொள்ள பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தது. என்னிடமிருந்து விலகிய கட்டடம், எலைனை வாரிக் கொண்டு மண்ணோடு மண்ணாக கலந்தது.

நான் தப்பித்தேன். ஆனால் எலைனின் முகத்தில் தோன்றிய அந்த வெற்றிச் சிரிப்பு? அது இன்றும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. நான் கோபுரத்தை தள்ளுவதை அவள் பார்த்திருப்பாளா? பார்த்துவிட்டு அதன் வீழ்ச்சிக்கு நானே காரணம் என்று புரிந்திருப்பாளா? இல்லை, தன் கணவன் தன் மீது கொண்ட இத்தனை வெறுப்பால், வெறுப்பின் உந்துதலால், அவனுடைய இயலாமைகளை எல்லாம் மீறிக்கொண்டு இப்படியொரு விதமாக பழி தீர்த்துவிட்டானே என்று பெருமை பட்டுக்கொண்டாளா? ஒருவேளை அப்படி இருக்குமாயின், என்னால் ஒன்றை ஆணித்தரமாக கூற முடியும். அவள் சாவில்தான் நாங்கள் அருகில் நெருங்கி வந்தோம்! அதே போல, பல நூறு ஆண்டுகளாக இந்த பூமியில் ஒரு அதிசயமாக நின்றிருந்த பிசாவின் கோபுரம் அன்றுதான் தன் பல நாள் கடமையை நிறைவேற்றியது!