வாசகர் எதிர்வினை

jane_trees_in_a_row

iconதமிழ்நதி

சொல்வனம் ஆசிரியருக்கு,

தங்கள் வலைப்பக்கத்தில் ‘முகம் சொல்லும் கதை’என்ற கட்டுரை படித்தேன். அந்தப் புகைப்படம் உலகத்திலுள்ள ஒட்டுமொத்தப் பெண்களின் சோகவெளிப்பாடாகவே பார்க்குந்தோறும் எனக்குத் தோன்றியிருக்கிறது. அதைப் பற்றி மேலதிக தகவல்களை உங்கள் கட்டுரை வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது. ஜெயமோகனின் வலைத்தளம் வழியாக சொல்வனத்தை வந்தடைந்தேன். தரமான கட்டுரைகள் பல அங்கிருக்கின்றன. நல்ல வாசிப்புக்குரிய களம். நன்றி.

iconஜெகதீஷ்

ஜெயமோகன்.காம் வழி தங்கள் இணையதள அறிமுகம் கிடைத்தது. முகம் சொன்னது ஒரு கதையல்ல ஓராயிரம் கதைகள். கட்டுரை புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. உடனடியாக நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பிவி்ட்டேன். நன்றி.

iconஜெயக்குமார்

கார்கில் வீரர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்திற்கு ராணுவத்தலைமை இல்லை என்பது சாதாரணமாக நடந்திருக்க வாய்ப்பில்லை. இஸ்லாமிய தேசத்திற்கு எதிரான போரில் இந்தியா பெற்ற வெற்றியாதலால் அதைக் கொண்டாட வேண்டாம் என வாய்மொழி உத்தரவோ அல்லது அழுத்தமோ வந்திருக்கக்கூடும். இஸ்லாமியர்களின் ஓட்டைக் குறிவைத்து…. அவர்களை கிட்டத்தட்ட தேசவிரோதிகள் போல சித்தரித்து வரும் காங்கிரஸ் அரசு செய்யக்கூடிய காரியம்தான் இது. இஸ்லாமியர்களை குற்றப்பரம்பரையினர் போலவும், அவர்களை காங்கிரஸ் மட்டுமே பாதுகாக்கிறது என்பதுபோலவும் ஒரு நிலையை உண்டாக்கி அதில் குளிர்காய்ந்து வருகிறது காங்கிரஸ்.

திரு.மானேக்‌ஷாவின் இறப்பிற்கு முப்படைத்தளபதிகளையே அனுப்பாத நாடு இது. அவரது மறைவு அதிகம் கண்டுகொள்ளப்படாமலேயே போனது.

பாகிஸ்தானைப்போல நமது ராணுவம் இருந்திருந்தால் நாம் நினைப்பதுபோல ராணுவம் மட்டும் செயல்பட்டிருக்கும். ஆனால் நாடு என்ற ஒன்றில்லாமல் பாகிஸ்தானைப்போல தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலையே உருவாகி இருக்கும்.

அமர்நாத் கோவிந்தராஜின் கட்டுரை இந்திய ராணுவம் மீதுகுறைகாணுவதுபோல இருப்பினும், என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய தனது கருத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இதர ராணுவங்கள் உணவு உள்ளவரையே போராடும்.. இந்திய ராணுவம் மட்டுமே உயிர் உள்ளவரை போராடும்.. அவர்களின் பாதுகாப்பில் நாமிருக்கிறோம் என்பதை நினைத்து உள்ளம் மகிழ்கிறது. என்ன செய்யவேண்டும் என்பதனைக் காலத்தில் தீர்மானித்து நாட்டின் பாதுகாப்பை நமது வீரர்கள் உறுதி செய்வார்கள் என நம்பலாம்.

——————-

முகம் சொல்லும் கதை’ படித்தேன்..  இருநூறு பக்கங்களில் விளக்கவேண்டியதை ஒரே ஒரு படம் சொல்லி விடும் என்பது எவ்வளவு உண்மை. எனக்கு சூனியக்காரியின் கண்கள் போல முதலில் தெரிந்த படம் அதன் பின் கதையைப் படித்த உடன் எவ்வளவு அதிர்ச்சியைக் கண்டிருந்தால் இப்படி ஒரு வெற்றுப்பார்வை ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்தேன். சூனியக்காரியின் கண்கள் போல என்ற வார்த்தையைச் சொன்னவுடன் எனது நண்பர்,  ”ஒரு மனுஷிக்கு ஏன் பேய் பிடித்த விரக்தி ஏற்படுகிறது என்று கொஞ்சம் யோசித்தால், அதில் ஏன் அச்சம் தெரிகிறது என்ற விஷயம் புரியும்” என்று சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது.

——————–

உயிரிழை’ கதை படிக்க நன்றாய் இருந்தாலும் அதில் ஏன் பூதம் வருகிறது எனத்தெரியவில்லை. பூதத்தை விலக்கிய இந்தக்கதை இன்னும் நன்றாய் இருக்கும் எனத்தோன்றியது.

——————–

ரா.கிரிதரன் எழுதிய ’எல்லைமீறும் கம்பிகள்’ என்ற கட்டுரை மிக அருமை. அதிலும் இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு இசைக்கோவையும் மிக நன்றாயும் படிப்பதற்குத் தொந்தரவின்றி பின்ன்ணியில் ஓடியதும் நன்றாய் இருந்தது. திரு நரசிம்மனின் வயலின் புலமை வியக்க வைக்கிறது.

——————–

மனிதன் 2.0’ என்ற ராமன் ராஜாவின் கட்டுரை படிக்கப் படிக்க ஆச்சரியம் நிரம்பியதாயும், ஒரு மெல்லிய நகைச்சுவை இழையுடன் அவர் அந்தக் கட்டுரையை தந்திருந்தது படிக்க மகிழ்வாயும் இருந்தது. அதிலும் ரயில் விமானப் பயணச்சீட்டுகளை புக்கிங் செய்வது எவ்வளவு எளிதாக்கப்ட்டுள்ளது என்பதும், புரூஃப் ரீடிங் என்ற கலை இன்று எப்படி எட்டணா கம்ப்யூட்டர் செய்கிறது என்பதும் நாம் எவ்வளவு தூரம் அறிவியலில் முன்னேறி இருக்கிறோம் , அதுவும் மிக மிகப் பெரிய தாவல்களில்…

——————–

கோலுக்குக் கை கொடுப்போம்’ அருமையான கட்டுரை. கோலாட்டம் என்ற கலையை அல்லது கிராமப்புரறப் பொழுதுபோக்கை நாம் கிட்டத்தட்ட இழந்துவிட்டோம்.

நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் ஆண்டுவிழாவின்போது கோலாட்டமும் மிக முக்கியமான நிகழ்ச்சி. செந்தமிழ் நாடெனும்போதினிலே என்ற பாரதியார் பாடல்தான் எப்போதும் இருக்கும். எங்கள் ஊர் கோல் நடுவிலிருந்து இருபக்கமும் மெலிந்து செல்லும். இருபக்கமும் குண்டு போல ஒன்று இருக்கும். கோலின் நடுவிலிருந்து இருபக்கமும் பக்கத்திற்கு ஒரு வர்ணம் வர்ணம் தீட்டப்பட்டு அழகாய் இருக்கும்.  இருபக்கமும் இருக்கும் குண்டுக்கும் ஒரு வர்ணம். இப்போது எந்த நிகழ்ச்சிக்காகவும், விழாவிற்காகக்வும் கோலாட்டம் ஆடுவது இல்லை. சித்திரைத்திருவிழாவின்போது மதுரை மீணாட்சியம்மன் கோவிலில் ஆடுவார்கள். அதுவும் இப்போது இருக்கிறதா எனத்தெரியவில்லை.இப்படி பதிந்து வைக்கவில்லயெனில் நாமே மறந்துவிடுவோம் என நினைக்கிறேன். நல்ல புகைப்படங்களுடன் அருமையான கட்டுரையை அளித்திருக்கிறார் கட்டுரையாசிரியர். எனது பழைய ஞாபகங்களை மீட்டியது இக்கட்டுரை.

——————-

ஹாரிசன் பெர்ஜரான் என்ற கர்ட் வானக்ட் எழுதிய சிறுகதையின் மொழிபெயர்ப்பும் , கதையும் மிக நன்றாய் இருந்தது.

சொல்வனம் இன்னும் மெருகேற வேண்டும்.

வாழ்த்துக்கள்.

iconமுத்துக்குமார்

அன்புள்ள சொல்வனம் ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

நான் சொல்வனத்தைத் தொடர்ந்து விரும்பிப் படித்து வருகிறேன். சொல்வனம் வார இதழாக வந்தால் நல்லது என்று திரு.ஜெயமோகனுக்குக் கூட ஒரு கடிதம் எழுதினேன். ஆனால் இணைய இதழைப் போல் இல்லாமல் ஒரு வார இதழ் நிறைய செலவு பிடிக்கக் கூடிய காரியம் என்று அறிந்தேன்.

சாம்.ஜி.நேதனின் கட்டுரைகளை நான் விரும்பிப் படிக்கிறேன். சென்ற இதழில் அவர் கட்டுரை இடம் பெறாமல் போனது ஏமாற்றமளித்தது. தொடர்ந்து நல்ல படைப்புகளை, முக்கியமாக அறிவியல், இசை குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வாருங்கள்.

iconவிஸ்வநாத் சங்கர்

சொல்வனம் இதழுக்கு இதழ் மென்மேலும் பொலிவுற்று வருகின்றது. அதில் இடம்பெறும் படைப்புகள் யாவையும் சிறப்பாக உள்ளன. சேதுபதியின் “முகம் சொல்லும் கதை” மிகவும் அருமை. அது வெறும் புகைப்பட கட்டுரை இல்லை. ஒரு நெகிழ்ச்சியான வாழ்க்கைக் குறிப்பு. ஒரு சித்திரம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்று சொல்வதுண்டு. ஷர்பத் குலாவின் 1985-ஆம் ஆண்டு புகைப்படம் போரில் சிக்கிக்கொண்ட ஒரு தேசத்தின் அவலத்தை சொல்கிறது என்றால், அவரின் 2002-ஆம் ஆண்டு புகைப்படம் அந்த நாட்டில் சிக்கிக்கொண்ட பெண்களின் அவலத்தை சொல்கிறது. ரோஜாவின் சாறு என்ற பொருள் தரும் அழகான பெயரையும், உலகத்தையே இழுத்து நிறுத்தி வைத்த அந்த பச்சை கண்களையும் கொண்ட அவர், தான் பிரபலமானதை அறியாமல் ஆப்கானிஸ்தானில் எங்கோ வாழ்ந்திருக்கிறார். இன்றளவும் அப்படித்தான் இருக்கிறார். அவருக்கு தெரியுமா இந்த உலகில் தமிழ் என்றொரு மொழி உண்டு; அதிலும் தன்னை பற்றி எழுதுகிறார்கள் என்று? இப்படித்தானே பல முகங்கள் நம்மை சுற்றி இருக்கின்றன?

வ. ஸ்ரீநிவாசன் எழுதிய “உயிரிழை” சிறுகதை நன்றாக இருந்தது. கதை ஓட்டமும், அமைப்பும் மிக நேர்த்தியாக உள்ளன. ஆனால் கதையின் தொடக்கத்தில் வரும் பூதம் எதனைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கிறது. ஸ்ரீநிவாசன் அதை இன்னும் கொஞ்சம் தெளிவு பட எழுதியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

யூமா வாசுகியின் மொழிபெயர்ப்புக் கதையும் அருமை. எளிமையான நடையில், அழகாக கருத்தை சொல்லிவிடுகிறார். அதுவே அவரின் பலம். இப்படி சிறந்த படைப்புகளை தொடர்ந்து வெளியிடுவதால் சொல்வனத்தின் மீது நான் கொண்டுள்ள எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது.