மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம்

சில ஆண்டுகளுக்கு முன்னால் அவுட்லுக் பத்திரிகை இந்தியாவில் ஏன் அறிவியல் வளர்ச்சி அடையவில்லை என ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது, அதில் இந்தியாவில் ஏன் அறிவியல் தேக்க நிலையில் உள்ளது என்பது ஆராயப்பட்டிருந்தது. கட்டுரையாளர் எழுதியிருந்தார்:

“கிறிஸ்தவ மேற்கத்திய நாடுகளின் அறிவியலின் முழுமையை நாம் பார்க்கும் போது அது இயற்கை உலகைக் குறித்த கருத்தூகங்களிலிருந்து எழுந்தது. ஆனால் ‘ஹிந்து’ இந்தியாவில் …வெற்றி பெற்றது என்னவென்றால் சங்கரரின் அத்வைத வேதாந்தமாகும். அது முழுக்க முழுக்க உபநிடதங்களின் தத்துவார்த்த கருத்தூகங்களிலிருந்து உருவாக்கப்பட்டிருந்தது.” (எஸ்.ஆனந்த், Shoonya Sum Game, அவுட்லுக், ஜூலை 14 2003)

அதாவது இந்தியாவின் தேக்க நிலைக்கு இந்தியத் தத்துவம் குறிப்பாக வேதாந்தத்தின் உலக மறுப்பே காரணம் என்பது கட்டுரையாளரின் கருத்து. இது மேற்கத்திய அறிதல் முறை காலனிய அமைப்புகளின் மூலம் இந்திய தத்துவ மற்றும் சமூகப் புலங்களுடன் ஊடாடும் காலம் முழுவதுமாக தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் விஷயமாகும். காலனிய காலங்களுக்கு அப்பாலும் இது ஊடகங்களிலும் பொது பிரக்ஞையிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் பார்வையின் உண்மை என்ன? அறிவியல் அணுகுமுறைக்கு, புற உலகின் யதார்த்தத்தைப் புரிந்து அதனை மானுட நன்மைக்குப் பயன்படுத்த இந்திய ஞான மரபு இடையூறாக இருக்கிறதா? புகழ்பெற்ற அறிவியலாளர்கள் இருவரின் கண்டடைதல்கள் மூலமாக நாம் அதனை இங்கு காணலாம்.

ரூபர்ட் ஷெல்ட்ரேக் கண்ட இந்தியத் தத்துவ குறைபாடுகள்:

ரூபர்ட் ஷெல்ட்ரேக்
ரூபர்ட் ஷெல்ட்ரேக்

ரூபர்ட் ஷெல்ட்ரேக் உயிரியலாளர். இரண்டு முக்கியமான தமிழ் இலக்கியவாதிகளால் புகழப்பட்ட உயிரியலாளர். புகழ்ந்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. மிகப்பரவலாக பொதுப்பிரக்ஞையில் அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் ஆளுமையாக வலம் வருபவர் ஷெல்ட்ரேக். இவர் அடைந்திருக்கும் புகழ் அபரிமிதமானது. தமிழ் இலக்கிய உலகின் அறிவுஜீவிகளே மேற்கோள் காட்டவும் அவர் பெயரை உச்சரிக்கவும் வேண்டிய நிர்ப்பந்தத்தில் வைக்கக்கூடிய புகழ். தத்துவத்தில் ஈடுபாடு கொண்ட உயிரியல் மாணவரான ஷெல்ட்ரேக் ஒரு நாத்திகர். மாணவர் பருவத்தில் அவருக்கு ஆசிய மெய்யியல் மரபுகளிலும் ஈடுபாடு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள வறட்சிப் பகுதி பயிர்களுக்கான சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில்(ICRISAT) அறிவியலாளராக பணியாற்றினார். அவரது தொடக்ககால இந்து மத ஈர்ப்பு கிறிஸ்தவத்தின் மீதான நம்பிக்கையாக மாற ஆரம்பித்தது. இதற்காக இரு வெவ்வேறு காரணங்களை அவர் கூறுகிறார்:

படித்த மேல்தட்டு இந்துக்கள் ஒதுக்கிய ஒரு விஷயமே என்னை ஈர்த்தது. இந்தியாவில் இயற்கை புனிதப்படுத்தப்பட்டு வழிபடப் படுகிறது. இது முதலில் எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாக இருந்தது. பரந்துபட்ட விதத்தில் பல விஷயங்களை அறிந்து கொள்ள இது எனக்கு உதவியது. நான் இந்தியன் அல்ல என்பதால் இந்துவாக முடியாது என்பதை நான் உணர்ந்தேன். இங்கிலாந்துக்கு இந்திய உடைகள் அணிந்து திரும்பச்சென்று இந்தியன் போல வேஷம் போடுவது அபத்தமான விஷயம். நான் சில குருக்களை சந்தித்தேன். எனது ஆன்மிகத்தேடலுக்கு அவர்களது வழிகாட்டுதலைக் கோரினேன். நான் அவர்களிடமிருந்து கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஒரு விஷயத்தை அவர்களில் சிலர் கூறினார்கள்:  ‘நீ ஒரு கிறிஸ்தவ பின்னணியிலிருந்து வருகிறாய் . எனவே நீ ஒரு கிறிஸ்தவ பாதையைத்தான் உன் ஆன்மிகத்தேடலுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லா பாதைகளும் சத்தியத்தை நோக்கியே செல்கின்றன. உன் முன்னோர்களின் பாதையே உனது பாதை.’ இந்த அறிவுரை எனக்கு மிகவும் பொருள் பொதிந்ததாகத் தோன்றியது…“(ரூபர்ட் ஷெல்ட்ரேக், Maybe Angels, An interview with Rupert Sheldrake by Hal Blacker, What is enlightenment, Spring-Summer 1997)

ஆனால் மற்றொரு தருணத்தில் தான் இந்து தத்துவங்களில் ஈர்ப்பிலிருந்து விலகி கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டமைக்கு அவர் கூறும் காரணம் சுவாரசியமானது:

மேலும் இந்தியாவில் சிலகாலம் வாழ்ந்த பிறகு, எனது குறுகிய முதல் இந்திய பயணத்தின் போது கவனித்திராத, இருண்ட பகுதிகளை இந்து மரபில் கண்டேன். இந்துக்களிடம் விதி மீதான நம்பிக்கையினால் பிற மனிதர்களிடம் அக்கறையின்மை உள்ளது. இது எனக்கு அயலான ஒரு விஷயம். நம்பிக்கை தரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் கிறிஸ்தவ பண்பாட்டுக்கு இது முரணானது.  நம்மால் பிறருக்கு உதவமுடியும், பிறருக்கு உதவ வேண்டும், இந்த பூமியை சிறப்பானதாக மாற்ற வேண்டும், சமுதாயம் முழுவதற்கும் நன்மை செய்ய வேண்டும் என்பது போன்ற என் எண்ணங்கள் முழுக்க முழுக்க கிறிஸ்தவ மரபிலிருந்து எனக்கு ஏற்பட்டன என்பதை நேருக்கு நேராக நான் இந்தியாவில்தான் உணர்ந்தேன். அது இந்து தத்துவத்திலிருந்தோ அல்லது என் நாத்திகத்திலிருந்தோ எனக்கு ஏற்படவில்லை. என் கிறிஸ்தவத்திலிருந்தே எனக்கு ஏற்பட்டன. ” (ரூபர்ட் ஷெல்ட்ரேக், Prayer: A Challenge for Science, Noetic Sciences Review, Vol. 30, Summer 1994 பக். 4-9)

ஷெல்ட்ரேக்கின்  “அறிவியல்”

பின்னர் ஷெல்ட்ரேக் மார்ஃபிக் ரிஸொனன்ஸ் (Morphic resonance) என்கிற கருதுகோளை முன்வைத்தார். லமார்க்கிய கோட்பாடும் உயிர்சக்தி கோட்பாடு (vitalism) குறித்த பார்வையும் கொண்ட அந்த கருதுகோள் A New Science of Life: The Hypothesis of Morphic Resonance எனும் அவரது நூலில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

புகழ்பெற்ற “நேச்சர்” அறிவியல் ஆய்விதழ்களின் ஆசிரியர் ஜான் மாடாக்ஸ் (John Maddox) அந்த நூலை எரிக்கத் தகுதியான நூல் என விமர்சித்து அவரே விமர்சனங்களுக்கு உள்ளானார். கடுமையான விமர்சனங்களுக்கு அப்பால் ஷெல்ட்ரேக்கின் கருதுகோள்கள் ஆதாரப் பிழையுள்ளவையாகவே அறிவியலாளர்களால் கருதப்பட்டன. ஆனால் ஷெல்ட்ரேக்குக் கிடைத்த பொதுஜன வரவேற்பு மகத்தானதாக இருந்தது. உயிரின் உருவாக்கத்தில் விதிகளைக் காட்டிலும் அதீதப்புலங்கள் (fields) செயல்படுவதாக ஷெல்ட்ரேக் கருதுகிறார். இப்புலங்கள் ஒருவித நினைவுப்புலங்கள் போல்வன. கார்ல் யுங்கின் கூட்டுநனவிலியை ஒத்த இந்த கருத்தாக்கத்தை படிகங்கள் முதல் கருவில் செல்கள் உரு பெறுவது வரை நீட்டுவிக்கிறார் ஷெல்ட்ரேக். ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒருவித நினைவுப்புலம் அதனை கட்டமைப்பதாக அவர் கருதுகிறார்.

ஆக, காலப்பெருவெளியிலிருந்து நினைவுகளைக் கொண்டு ஒவ்வொரு உயிரினத்தையும் கட்டமைக்கும் பிரபஞ்ச மனமொன்றின் பின்னால் ஒருபெரும் அறிவுசக்தி செயல்படுவதற்கு செல்வது அப்படி ஒன்றும் கடினமான செயலில்லை. இதுவே ஷெல்ட்ரேக்கை மேற்கத்திய அறிவுலக வட்டாரங்களில் முக்கியமான அறிவியல் சிந்தனையாளராக பிரபலப்படுத்தியது. ஆனால் உயிரியலாளர்களும் பரிணாம அறிவியலாளர்களும் இக்கருதுகோள் ஏற்கனவே தவறென நிரூபிக்கப்பட்ட சில பழைய நம்பிக்கைகளின் மீள்-சுழற்சியையே ஷெல்ட்ரேக் நவீன அறிவியலின் பரிபாஷையை பயன்படுத்தி செய்கிறார் என அறிவார்கள். ஷெல்ட்ரேக்கின் ஆராய்ச்சி பல தளங்களில் விரிந்தது. பௌதீக இருப்புக்கு அப்பாலான ஒரு சூட்சும உயிர்த்துவ இருப்பை நிரூபிக்க அவர் பரிசோதனைகளை வடிவமைத்தார்.

அத்தகைய பௌதீக-உயிர்த்துவ இருமை (dualism) கிறிஸ்தவ இறையியலுக்கு அடிப்படையான ஒன்று. ஆனால் புதிய இயற்பியலும் பிரக்ஞை குறித்த ஆராய்ச்சிகளும் காட்டும் பார்வை இருமையற்ற ஒன்றாகும். ஷெல்ட்ரேக் இதனை அறிவார். எனவே நவீன அறிவியலின் தத்துவார்த்த சூழலில் இருமைக் கோட்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படும். ஆனால் கிறிஸ்தவ இறையியலை மறுக்காமல் தமது கோட்பாட்டை முன்வைக்க ஷெல்ட்ரேக் சில அடிப்படைக் கேள்விகளை அப்படியே விட்டுவிட வேண்டும்.

இயற்பியலாளரும் தத்துவ சிந்தனையாளருமான அமித் கோஸ்வாமி இதனை விளக்குகிறார்:

ஷெல்ட்ரேக்கின் மார்ஃபிக் புலங்கள் (Morphic fields) உள்ளார்ந்த இருமைத்துவம் கொண்ட கருதுகோளாகும். அவை பௌதீக பொருண்மைக்கு அப்பால் உள்ளன. ஆனால் பௌதீக பொருண்மையை பாதிக்கின்றன. ஆனால் இந்த மார்ஃபிக் புலங்களின் தோற்றுவாய் எது? ரேடியோ அலைகளை எடுத்துக்கொண்டால் ஒரு தோற்றுவாயும் ஒரு கடத்தப்படும் பொருளும் அதனை உள்வாங்கும் பொருளும் உள்ளன. ஷெல்ட்ரேக்கின் சிந்தனையிலும் ஒரு உள்வாங்கும் பொருளாக பொருண்மை உள்ளது கடத்தப்படும் பொருளாக மார்ஃபிக் புலங்கள் உள்ளன. ஆனால் அவறின் தோற்றுவாய் எது என்பதை அவர் விளக்கவில்லை. ஏனெனில் அப்படி அவர் ஒரு தோற்றுவாயைக் குறித்து கூறுவாரென்றால் அது இருமைத்துவம் என தாக்கப்படும் என்பதை அவர் அறிவார். ” (அமித் கோஸ்வாமி , The Physicists’ View of Nature: The quantum revolution, Springer, 2002, பக்.281)

ஷெல்ட்ரேக் மார்ஃபிக் புலங்களின் தோற்றுவாயை குறித்து மிகவும் மருண்மையான பதங்களில் சொல்லத்தான் செய்கிறார்: “உள்ளார்ந்த சிருஷ்டித்தன்மை கொண்ட நுண்ணறிவு” (inherent creative intelligence) அறிவியல் கல்வி இன்று எதிர்கொள்ளும் கருத்தியல் போர்களில் ஷெல்ட்ரேக் எங்கே நிற்கிறார் என்பது தெளிவு.

இருமைத்துவமும் மாய உறுப்புக்களும் (Phantom limbs)

பௌதீக இருப்புக்கு அப்பாலான ஒரு சூட்சும உயிர்த்துவ இருப்பை நிரூபிக்க அவர் வடிவமைத்த பரிசோதனைகளில் ஒன்று சூட்சும அங்கங்கள் (phantom limbs) குறித்ததாகும். விபத்துக்களில் கைகளை கால்களை இழப்பவர்கள் அந்த இழப்புக்கு பிறகும் அந்த அவயங்களின் இருப்பை உணர்தலே சூட்சும அல்லது மாய அங்கங்கள் என அழைக்கப்படுகிறது. இது ஒரு அகவய உணர்தல்ல அத்தகைய அங்கங்களுக்கு ஸ்தூல அங்கங்கள் போன்று புறவய இருப்பு உண்டு என்று நிரூபிப்பதே ஷெல்ட்ரேக்கின் பரிசோதனையின் குறிக்கோள். தமக்கு மாய உறுப்பு (இழந்த கை அல்லது கால்) இருப்பதாகக் கருதும் நபர் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதனைக் கொண்டு செல்வார். அது தனியாக பதிவு செய்யப்படும். அந்த குறிப்பிட்ட இடத்துக்குள் சூட்சும சரீரங்களை உணரும் தன்மை கொண்ட ஒரு நபர் தமது கரத்தை வைத்திருப்பார். அவர் தாம் இந்த சூட்சும உறுப்பின் இருப்பை அங்கு உணர்ந்ததை உணர்ந்த நேரத்துடன் பதிவு செய்வார். இதில் ஈடுபடும் நபர்கள் இருவருக்கும் ஒருவரது செயல் அடுத்தவருக்கு தெரியாது. 200 முறை செய்யப்பட்ட இந்த பரிசோதனை முடிவுகளை ஷெல்ட்ரேக் சூட்சும உறுப்பின் புறவய இருப்பின் ஆதாரமாக முன்வைத்தார், ஆனால் இந்த முடிவுகள் தலைச்சிறந்த கணிதவியலாளர்களால் நிகழ்தகவு ஊகங்களின் மூலம் ஏற்படும் முடிவுகளே அல்லாமல் பிறிதல்ல என நிராகரித்துவிட்டனர். [P.Bruger and K.L.Taylor, ESP, in ‘PSI Wars: Getting to Grips with the Paranormal’ , (Ed. James E. Alcock , Jean Burns, Anthony Freeman), Imprint Academic :2003, பக்.231]

ஆனால் இந்த மாய அங்கங்கள் அது இருப்பவர்களுக்கு பெரும் பிரச்சனையான விஷயமாகும். அதில் சில நேரங்களில் வலி ஏற்படும். அல்லது மாய அங்கங்கள் செயலிழக்கும் அல்லது மோசமான நிலையில் பிறண்டு சிக்கிக்கொண்டு விடும். ஆனால் பிறர் இதை பார்க்க முடியாது. இது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இப்போது ஷெல்ட்ரேக்கின் அணுகுமுறை இதற்கு எத்தகைய தீர்வினை தருகிறது எனப் பாருங்கள். உண்மையில் அது எந்த தீர்வையும் தர இயலாது. இத்தகைய மாய உறுப்புக்கள் உள்ளவர்கள் இந்த வேதனையை விதியே எனத் தாங்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஷெல்ட்ரேக்கைப் பொறுத்தவரையில் அவருக்கு இந்த மாய உறுப்பு எனும் விஷயம் அறிவியலால் நிராகரிக்கப்பட்ட ஒரு கருத்தியலை மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு அவ்வளவுதான்.

“மாயை என்பது யாதெனக் கேட்கின்…”

டிம் பான்ஸ் (Tim Pons) எனும் நரம்பியலாளர் ஒரு சுவாரசியமான பரிசோதனையைச் செய்திருந்தார். நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களிலிருந்தும் கிடைக்கும் புலன் தூண்டுதல்கள் மூளையில் குறிப்பிட்ட பகுதிகளில் மின்னியக்கத்தை உருவாக்குகின்றன. ஒரு குரங்கின் கையிலிருந்து செல்லும் நரம்புகள் அனைத்தையும் துண்டித்துவிட்டு பின்னர் சில காலத்துக்குப் பிறகு அந்த குரங்கின் செயலிழந்த கைகளைத் தொடும் போது அதன் மூளையில் பொதுவாக கரத்துக்குரிய மூளைப்பகுதியில் ஏதாவது மின் இயக்கம் உருவாகிறதா என அவர் கண்காணித்தார். இது எதிர்பார்த்ததுதான்.

வி.எஸ்.ராமச்சந்திரன்
வி.எஸ்.ராமச்சந்திரன்

அந்தக் குரங்கின் நாடியைத் தொட்டபோது அந்த குரங்கின் கைகளுடன் தொடர்புடைய மூளைப்பகுதியில் மின் இயக்கம் ஏற்படுவதைக் கவனித்தார். இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை 1991 இல் டிம் பான்ஸ் வெளியிட்டார். மாய-அங்கங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நரம்பியலாளரான வி.எஸ்.ராமச்சந்திரனுக்கு இது ஒரு புதிய கண்டடைவை அளித்தது. மூளையின் பகுதிகளுக்கும் உடல் உறுப்புகளுக்குமான தொடர்பு 1940களிலும் 1950களிலும் பென்பீல்ட் எனும் மூளையியலாளரால் மிகக்கவனமாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டு உருவாக்கப்பட்டதுதான் பென்ஃபீல்ட் ஹோமன்குலஸ் என்பது அதாவது எந்த உடல் உறுப்பின் புலனறிவு மூளையின் பரப்பில் எந்த அளவுக்கு மின்னியக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது. இந்த உறுப்புகளின் புலனறிதலுக்கும் மூளையின் குறிப்பிட்ட பரப்புக்குமான இணைப்பு அல்லது mapping மாறிக்கொண்டிருக்கும் ஒன்றா அல்லது நிலையான ஒன்றா என்பதைத்தான் டிம்பான்ஸின் குரங்கு கேள்விக்குறியாக்கியிருந்தது.

“நான் பான்ஸின் ஆராய்ச்சிக்கட்டுரையை படித்தவுடன் ‘இது மாய Phantoms in the brainஉறுப்புக்களுக்கான விளக்கமாக இருக்கலாமோ!’ என்று எண்ணினேன். குரங்கு அதன் முகம் தடவிக்கொடுக்கப்படும்போது என்ன உணர்ந்தது? அதனுடைய கைக்கான மூளை பரப்பும் மின் கிளர்ச்சி அடைந்த காரணத்தால் அது அடைந்த உணர்ச்சிகள் தனது கைகளிலிருந்தும் முகத்திலிருந்தும் வருவதாக உணர்ந்ததா? அல்லது மூளையின் உயர் கேந்திரங்கள் அந்த உணர்ச்சிகள் மூளையிலிருந்து மட்டுமே வருவதாக அறிதலை மறு உருவாக்கம் செய்தனவா? இந்தக் கேள்விகளுக்கு குரங்கு மௌனத்தையே பதிலாக அளித்தது.” (வி.எஸ்.ராமச்சந்திரன், Phantoms in the brain, Harper Perennial 2005, பக். 28)

இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன், தன் கையை இழந்து மாயக்கை உணர்வுடன் இருந்த டாம் எனும் நபரினை ஆராய்ச்சி செய்தார். அவன் கண்கள் கட்டப்பட்டு அவனது அங்கங்கள் ஒவ்வொன்றாக ஸ்பரிசிக்கப்பட்டன. அவன் எங்கே தொடுதலை உணர்கிறான் என்பதைச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

“நீங்கள் என் கன்னத்தை தொடுகிறீர்கள்”

“வேறு எங்காவது தொடும் உணர்ச்சி இருக்கிறதா?”

“டாக்டர் வேடிக்கையாக இருக்கிறது. என் மாயக்கையின் பெருவிரலை தொடுகிறீர்கள்”

இப்போது தொடுதல் அவனது மேலுதட்டுக்கு செல்கிறது

“ஹேய் என் ஆள்காட்டி விரலையும் மேலுதட்டையும் தொடுகிறீர்கள்”

“நிச்சயமாகவா சொல்கிறாய்?”

“ஆமாம் இரண்டு இடங்களையும் தொடுகிறீர்கள்”

விரைவில் டாமின் மாயக்கரமும் அவனது முகமும் தொடர்புடனிருப்பதைக் கண்டார். பொதுவாக இந்த மாயக்கரங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு கஷ்டமான இசகுபிசகான நிலையில் அசைக்கமுடியாமல் மாட்டிக்கொண்டிருப்பது போல இந்த உணர்வுடையவர்களில் மிகுதியானவர்கள் கஷ்டப்படுவர். இது பெரிய வேதனையை இந்த நோயாளிகளுக்கு அளித்து வந்தது. இதற்கான காரணமாக ராமச்சந்திரன் கண்டடைந்தது இதுதான். மாயக் கரத்தை அசைக்க மூளை முயற்சிக்கிறது. ஆனால் கண் அந்த இயக்கத்தை பார்க்க முடியவில்லை என்பதை தெரிவிக்கிறது. இந்த முரணை களைய மூளை அந்த மாயக்கரத்தை இசகுபிசகாக சிக்கிக்கொண்டு அசையமுடியாது இருப்பது போன்ற உணர்வை கட்டமைக்கிறது. அதனுடன் வேதனையையும் கட்டமைக்கிறது.

இதனை நிவர்த்தி செய்ய மேலே சொன்ன பரிசோதனைகள் மூலம் ராமச்சந்திரன் முயன்றார். ஒரு கண்ணாடி கொண்ட பெட்டிக்குள் இருக்கும் கையையும் இல்லாத கையையும் நோயாளிகள் விட வேண்டும். பின்னர் ஒத்த அசைவுகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இழந்த கையும் அசைவதாக நோயாளிகளுக்குத் தெரியும். இந்த அசைவுகளை கண் காணும் போது இயக்கவழுவமைதியை மூளை பெறுகிறது.

mirror

இதனை ராமச்சந்திரன்-ரோஜர்ஸ் ராமசந்திரன் visual-kinesthetic synesthesia (ராமச்சந்திரன்-ரோஜர்ஸ் ராமசந்திரன், 1996) என்கின்றனர். இந்த சிகிச்சை முறை இந்நோயாளிகளுக்கு வேதனையை போக்குகின்றது. “ஒரு மாயத்தோற்றத்தின் மூலம் மற்றொரு மாய உணர்வை அகற்றுவது” எனக்குறிப்பிடுகிறார் ராமச்சந்திரன். இந்த சிகிச்சையின் அடிப்படையிலும் மேலும் சில உளவியல் பரிசோதனைகளின் அடிப்படையிலும் இருக்கும்/கிடைக்கும் அறிதலை அவர் விளக்குகிறார் (இந்த பகுதியின் தொடக்கத்தில் அவர் சங்கரரின் விவேக சூடாமணியிலிருந்து மேற்கோளுடன் ஆரம்பிக்கிறார்.)(வி.எஸ்.ராமச்சந்திரன், 2005, பக்.61-2) :

“இப்போது இதற்கெல்லாம் என்ன பொருள் என்பதை பாருங்கள். உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் உங்கள் சுயத்தை ஒரு குறிப்பிட்ட உறுதியான சாசுவதமான சாகும் வரை மாறாததாக உணரக்கூடிய உடலுணர்வுடன் இணைத்தபடி வாழ்கிறீர்கள். உங்கள் சுயத்துக்கும் உங்கள் உடலுக்குமான இந்த இணைப்பு மிகவும் அடிப்படையான உண்மையாகிவிடுகிறது. அதனைக் குறித்து நீங்கள் கேள்விக் கேட்பது இருக்கட்டும் நினைத்துக்கூட பார்க்கப் போவதில்லை. ஆனால் நாம் இதுவரை பார்த்தவையெல்லாம் இந்த உடல் குறித்த சித்திரமானது அதன் ஸ்திரமான தோற்றத்துக்கு அப்பால் கேள்விக்குரியது என்றும் அகத்தால் கட்டமைக்கப்பட்டதென்றும் அந்த கட்டமைப்பை ஒரு சில சோதனைகள் மூலம் வெகுவாக மாற்றியமைத்துவிட முடியும் என்றும் காட்டுகிறது. இந்த உடல் தற்காலிகமாக நீங்கள் கட்டமைத்த ஒரு கூடுதான் – உங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்காக”.

ஆக, எதனை இந்த உலகத்தின் துயர் துடைக்காத தத்துவம் என்கிற மாதிரியாக ரூபர்ட் ஷெல்ட்ரேக்கும் எந்த தத்துவ சிந்தனையின் வெற்றியால் இந்தியாவில் அறிவியல் தேக்கநிலையை அடைந்தது என அவுட்லுக் கட்டுரையாளரும் கருதினார்களோ அதே தத்துவசிந்தனை துயர் துடைக்கும் செயல்முறையை உருவாக்கியதை நாம் காண்கிறோம். இந்திய தத்துவத்தின் ஒரு பெரிய கண்டடைதலே மாயை என்பது. இது உலகமே பொய் என்பதாகக் கடந்த இருநூறு ஆண்டுகளின் பொதுபுத்தியில் பதியவைக்கப்பட்டது. ஆனால் மாயை என்பது எப்படி நாம் புலன்களால் அடையும் ஒவ்வொன்றும் கட்டமைக்கப்படுகிறது என்பதை சுட்டுவது. அதனை தத்துவத்திலும் வாழ்க்கை முறையிலும் ஒரு கூறாக மாற்றியதன் மூலம் இந்திய ஞான மரபு ஒரு வலிமையான பண்பாட்டை உருவாக்கியது. மானுட சோகங்களையும் இயற்கை இடர்களையும் தாங்கிக்கொள்ளவும் மாற்றியமைக்கவும் முடிந்த வலு அதிலிருந்து உருவானது. அது நேற்றைய காலனியவாதிகளும் இன்றைய ஊடக அரைகுறை அறிவுஜீவிகளும் சொல்வது போல வாழ்வையையும் யதார்த்தத்தையும் துறக்கும் தப்பும் பார்வையல்ல.

ஆனால் இந்திய ஞான மரபின் தத்துவக் கோட்பாடுகளை பண்பாட்டு ஊனம் விளைவிப்பதாகக் கூறுவதில் ஒரு அடிப்படை அரசியலும் உள்ளது. 1921 இல் ஒரு ஐரோப்பிய பத்திரிகை மாயை என்கிற “சாபக்கேடான” “அழிவைத்தரக்கூடிய” கோட்பாடு குறித்து எழுதியது, “இந்த மாயை கோட்பாடுதான் இந்தியர்களில் இன்றைக்கு ஒத்துழையாமை இயக்கத்தை உருவாக்கிவிட்டது” (Indo-Portugese Review சர் ஜான் வுட்ரூப்பால் மேற்கோள் காட்டப்பட்டது, Is India Civilized Essays on Indian Culture, Preface,1922, பக். xxix,)