நிறம்

33z6aaaஅப்பாவைப் பெற்ற தாத்தா நல்ல பொன் நிறம்.ஆச்சி கருப்பு. அதனால் குடும்பத்தில் பாதி பேர் நல்ல நிறமாகவும்,மீதி பேர் சுத்த கருப்பாகவும் அமைந்தனர். நாங்கள் ஆச்சியின் வழி. ஐம்பதுகளில் நெல்லை பிரதர்ஸ் என்ற பெயரில் கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்து வந்த பெரியப்பாக்களில் ஒருவர் கருப்பு.மற்றவர் சிவப்பு. இந்த கலவையை எங்கள் தலைமுறையிலும் காணலாம். தற்போது இசை ஆசிரியனாக இருக்கும் எனது ஒன்று விட்ட தம்பி கோமதிநாயகத்துக்கு தெரிந்த ஒரு பெரிய மனிதரை சமீபத்தில் சந்தித்தேன். பேச்சுவாக்கில் அவனுடைய அண்ணன் நான் என்று சொன்னதை அவர் நம்பவுமில்லை. மேற்கொண்டு என்னிடம் பேசுவதை விரும்பவுமில்லை. உலகநாயகன் கலரில் இருக்கும் அவன் எங்கே, தேமுதிக தலைவர் கலரில் இருக்கும் நான் எங்கே. என்னைப் போல ஓர் அண்டப் புளுகன் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது என்பதை அவர் வாயைத் திறந்து சொல்லவில்லையென்றாலும் அவர் என்னை பார்த்த ஓர் அற்பப்பார்வையே எனக்கு உணர்த்தியது.

பொதுவாகவே மனிதர்களின் நிறம் அவர்களின் திருமணத்தின் போதுதான் அலசப்படும். மாப்பிள்ளையோ,பெண்ணோ என்ன நிறம் என்று கேட்காதவர்களே இல்லை எனலாம். அவற்றை பொருட்படுத்தாதவர்கள் கூட இந்த கேள்வியை கேட்கத் தவறுவதில்லை. நண்பன் ஒருவனின் மனைவி கருப்பு.திருமணத்தன்றே அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சியை காணமுடியவில்லை. தன் கணவனின் நிறத்துக்கு முன் தான் ரொம்பவும் கருப்பாக இருக்கிறோமே, நம்மை அவனுக்கு பிடிக்குமா என்ற கவலை அவளுக்கு. இதைப் புரிந்து கொண்ட நண்பன் முதலிரவிலேயே அவளின் சந்தேகத்தை களைந்திருக்கிறான். எனக்கு நீதான் முக்கியம். உன் நிறம் முக்கியமில்லை என்று. பத்தாண்டுகள் கழித்து அந்த நண்பனைப் பார்க்க சில மாதங்களுக்கு முன்பு அவன் வீட்டுக்கு போனேன். அவன் மனைவியின் நடை உடை பாவனையில் தன்னம்பிக்கையுடன் கூடிய கம்பீரம் தெரிந்தது. நண்பனின் நிலைமை எல்லா கணவன்மார்களின் நிலைமை போலத்தான் இருந்தது.சாப்பிட தனித்தட்டு ஒதுக்கி வாசலில் கட்டிப் போட்டிருந்தாள்.

மீனாட்சிசுந்தரத்துக்கும் எனக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம் என்றாலும் நான் அவனுக்கு சித்தப்பா முறை.மீனாட்சியும் என்னைப் போலவே நல்ல நிறம் (கருப்பும் நிறம்தானே!). யாராவது எங்களை கருப்பு என்று சொன்னால் மீனாட்சி கோபப்படுவான். ‘சித்தப்பா,நாம் கருப்பு என்று யார் சொன்னது. நாமெல்லாம் க்ரே’ என்பான். யாரையாவது அடையாளம் சொல்லும்போதும் ‘அவாளும் நம்மள மாதிரி கிரேக்கர்தான்’ என்று சொல்வான். ஒரு தீபாவளிக்கு வெடி வெடித்து மீனாட்சியின் முகமெல்லாம் காயப்பட்டுவிட்டது. அதனால் மேலும் கருப்பானான். அதையே ஒரு மாபெரும் காரணமாக பிடித்துக் கொண்டு அந்த விபத்தினால்தான் தன் முகம் கருப்பாகிவிட்டது என்றும் அதற்கு முன்னால் தான் அசப்பில் அரவிந்தசாமி போலவே இருந்ததாகவும் நான் இல்லாத சமயம் பார்த்து மற்றவரிடம் சொல்வான்.

வெண்ணீறு துலக்கமாக தெரிவதற்கென்றே படைக்கப்பட்ட மேனி என்று என் எழில்மிகு மேனியைப் பற்றி புகழ்ந்து எழுதிய ஜெயமோகன், தன் நண்பர் சண்முகசுந்தரத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். சண்முகசுந்தரம் வாயைத் திறந்து என்னிடம் பேசிய முதல் வரி. ‘நீங்க இவ்வளவு கருப்பாக இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல’. குரலில் ஒரு அடக்க முடியாத மகிழ்ச்சி தெரிந்தது. காரணம் அவரும் ஒரு கிரேக்கர். முதல் சந்திப்பு என்பதால் நானும் என் வேலையைக் காட்டாமல் அடக்கமாகச் சிரித்துக் கொண்டே ‘ஆமா தொடர்ந்து வெயிலில் அலைந்தேன்’ என்றேன்.

எங்கள் குடும்பங்களில் திருமணத்துக்கு முன் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் வழக்கம் இல்லை. என் மனைவியைப் பார்க்க (எனது தாயார் காலமாகிவிட்டதால்) என் சித்தியும் சித்தப்பாவும் போனார்கள். பெண்ணின் நிறத்தை பார்த்து சித்தி கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறாள். அந்த சமயம் பார்த்து என் மாமியார் அவளிடம் ‘பையன் என்ன நிறம்’ என்று கேட்க, தட்டுத் தடுமாறி ‘புது நிறம்’ என்று சொல்லி சமாளித்து அந்தப் பழமொழியை நிரூபித்திருக்கிறாள். இன்றைக்கும் என் மனைவி எங்கள் மகனிடம் இதை சொல்லிச் சிரிப்பாள்.

மலம்புழா ஜவஹர் நவோதயா வித்யாலயாவின் ப்ரின்ஸிபாலாக என் மாமனார் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் என் மனைவியின் பிரசவ நேரம். பாலக்காட்டில் ஒரு மருத்துவமனையில் என் மகன் பிறந்தான். நான் அங்கிருந்து எல்லா உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தொலைபேசி மூலம் குழந்தை பிறந்த விஷயத்தைச் சொன்னேன். யாருமே என்னிடம் என்ன குழந்தை என்று கேட்பதில் ஆர்வம் காட்டவில்லை. சொல்லிவைத்த மாதிரி எல்லோரும் குழந்தை என்ன நிறம் என்றே கேட்டனர். என் உயிர்த் தோழன் குஞ்சு ராஸ்கலும் இதற்கு விதிவிலக்கல்ல. என் வாழ்க்கையிலேயே நான் கருப்பாக இருப்பதை உணர்ந்தது அன்றுதான். அந்தக் கோபத்தில் என் மகனுக்கு நான் வைத்த பெயர் ‘நிறன்’.

home-design-ideas-paint-splash கவிஞரும், ‘ரசனை’ பத்திரிகை ஆசிரியருமான மரபின் மைந்தன் முத்தையா, என்னை இன்றைக்குப் பார்த்தாலும் வாங்க புது நிறக்காரரே என்று கேலி செய்வார். ‘வார்த்தை’ பத்திரிக்கையின் இணையாசிரியர் பி.கே.சிவகுமாரின் கல்லூரித் தோழரான முத்தையாவுக்கும் எனக்கும் ஒரே வயதுதான் என்றாலும் நான் அவரை அண்ணன் என்றே அழைப்பேன். நான் அவரை அண்ணன் என்று அழைப்பதற்கும் என் மனைவி அவரை தன் ஜென்ம விரோதியாகக் கருதுவதற்கும் ஒரு பொதுக் காரணம் உள்ளது. அவர்தான் என் திருமணத்தை நடத்தி வைத்தவர்.