நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள்

புவியியல்படி நியூசிலாந்து பழமையான நாடு. ஆனால், வரலாற்றின்படி பார்த்தால், உலகில் உள்ள பிறநாடுகளைவிட இதுமிகவும் இளமையான நாடு. 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மனிதர்கள் வாழ்ந்திருந்ததற்கு உரிய அடையாளம் எதுவுமே இல்லை எனப்படுகின்றது. உலகத்தின் பிற பாகங்களில் நாகரிகம் வளர்ந்தும் அழிந்தும் மாற்றங்கள் அடைந்தும் வரலாறு படைத்துக் கொண்டிருக்கும்போது , இந்த நாட்டில் மன்பதை தோன்றவே இல்லை. இந்த நாட்டைப் பற்றி மக்கள் அறிந்திருக்கவும் இல்லை.

கிரிக்கெட்டின் தயவால் இன்று நியூசிலாந்து என்னும் நாட்டைப் பற்றிப் பலரும் கேள்விப்பட்டுள்ளோம். நியூசிலாந்து , உலகத்தின் தெற்குப் பாகத்தில், ஆஸ்திரேலியாவுக்குத் தெற்கே ஏறக்குறைய 1200 மைல் தூரத்தில் உள்ளது. இது இரண்டு பெரிய தீவுகளும் ஒரு மிகச் சிறியதீவும் அடங்கிய நாடு. ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் உள்ள கடற்பகுதி ‘டாஸ்மன் கடல்’ என்று அழைக்கப்படுகிறது.ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் வடக்கிலும் மேற்கிலும் நீண்டதொலைவில் இந்த தீவுக்கண்டத்துக்கும் நியூசிலாந்துக்கும் இறங்கி வரும் படிக்கட்டுக்களைப்போல் ஆசியாவிம் மலேசியத் தீபகற்பமும் ஜாவா சுமத்திரா முதலிய தீவுகளும் தோற்றம் அளிப்பதைப் பூகோளப்படங்களில் காணலாம். கிழக்குத்திசையில் பசிபிக் மகாசமுத்திரம் தென்அமெரிக்கக் கரைகளைத் தழுவிக்கொண்டு பரந்துள்லது. வடகிழ்க்குத் திசையில் பசிபிக் சமுத்திரத்தில் பூகோளப்படத்தில் இடம்பெற முடியாத அலவுக்குச் சிறுபுள்ளிகளைப் போலச் சிறுசிறு தீவுக்கூட்டங்கல் உள்ளன. சமோவா, ஃபிஜி, தோங்கா என்பனபோல ஒருசிலவே பெயரிட்டுக் கூறத்தக்க தீவுகள்.இந்தத் தீவுக்கூட்டங்கள் அனைத்தும் பாலினீஷியத் தீவுகள் என்ற பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. நியூசிலாந்துக்குத் தெற்கே 1600 மைல்களுக்கு அப்பால் பனி உறைந்துள்ள அண்டார்டிக் கடற்பகுதியாகிய தென்கோடி உள்ளது.

விரிந்து பரந்துள்ள கடலுக்கு நடுவே நியூசிலாந்து மிகச்சிறிய தீவுகளைப் போலத் தோன்றும். இந்நாடு நிலப்பரப்பில் நம் இந்திய மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறியது. நியுசிலாந்து 270,534 சதுர கிலோமீட்டர் பரப்புள்ளது. வடதீவின் தென்கோடியில் உள்ள வெலிங்டன் இந்நாட்டின் தலைநகர். வடதீவின் நடுவில் இருக்கும் ஆக்லந்து வணிகநகரம். சர்வதேச விமான நிலையம் இங்குதான் உள்ளது.

pic1

1350ல் பாலினீஷியத் தீவுகளிலிருந்து ‘மவுரி’ என்னும் இனத்தவர் இங்கு வந்து குடியேறியதாக மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. வாய்மொழியே வழங்கும் அவர்களுடைய பாடல்களும் கதைகளும் இக்குடியேற்றத்தைப் பற்றிப் பேசுகின்றன.

அவர்களுடைய மூதாதையர்களின் நாடு, பசிபிக்கடலில் உள்ள ‘ஹவாய்க்கி’(Hawaiki)த் தீவு. அங்கு அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் போர்களால் மக்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. எனவே, ‘நகாயுவே’ என்னும் தலைவன் அவ்னுடைய பகைவர்களிடமிருந்து உயிர் பிழைக்க நாட்டை விட்டு வெளியேறத் துணிந்தான். (இவன் பெயர் கூப்பே என்றும் சில கதைகள் கூறுகின்றன). தோணியில் தன் துணைவர்களுடன் புகலிடம் தேடிப் புறப்பட்டான். மாதங்கள் பல கழிந்தன. மக்களுக்கு நகாயுவே பற்றிய நினைவுகள் மறையத் தொடங்கின.

நீண்ட இடைவெளிக்குப்பின் ஒருநாள், யாரும் சற்றும் எதிர்பாராதபோது, அவன் அங்குத் தோன்றிச் சுற்றத்தாருக்கு அதிர்ச்சி அளித்தான். நெடுந்தொலைவில், தான் கண்டு வந்த, – மக்களே இல்லாத தீவுகளையும் உறைபனி மூடிய மலைகளையும் இனிய நீரோடைகள், ஆறுகளைப் பற்றியும் அடர்ந்த காடுகள், சோலைகள், விலங்குகள், பறக்கவியலாத பெரிய பறவைகள் முதலியன பற்றியும் கதைகதையாகக் கூறினான். தான் கூறும் செய்திகள் உண்மையானவையே என்று மெய்ப்பிக்க அவன், தான் கொண்டுவந்த ஒளிமிக்க பச்சைக்கற்களையும்(Green Jade), ‘மோவா’ப்(Moa) பறவைகளின் இறகுகள், எலும்புக் கூடுகள் முதலியவற்றையும் காட்டினான்.

உறவினர்களும் தோழர்களும் அவன் நிகழ்த்திய சாகசங்களை ஆர்வமுடன் கேட்டனர். தம் நாட்டில் நிலவிய துன்பமயமான உள்நாட்டுக் கலவரங்களிலிருந்து தப்பிக்க விரும்பிய அவர்கள் , நகாயுவே கூறிய நெடுந்தொலைவிலுள்ள,- மக்கள் வாழாத அத்தீவுகளுக்குச் சென்று குடியேற முடிவு செய்தனர். அங்கு இயற்கையில் கிடைக்கும் உணவுகள், மதிப்புயர்ந்த பச்சைக் கற்கள், பிறசெல்வங்கள் முதலியன பற்றி நகாயுவேயிடமிருந்து அறிந்த செய்திகள் அவர்கள் எண்ணத்திற்கு ஊக்கமூட்டி விரையச் செய்தன. ஆண்பெண் குழந்தைகள் என எண்ணூறுபேர் ஒளிமிக்க வளமான வாழ்க்கையை நாடிப் புறப்படத் தயாராயினர்.

இரண்டு அணியாக நூறுபேர் வரிசையாக அமர்ந்து இயக்கும்படியான நீண்ட தோணிகளை(Canoes) அமைத்துக் கொண்டனர். உணவுக்கும் விதைக்கும் என உருளைக்கிழங்கு, சர்க்கரைவல்லிக் கிழங்கு முதலியவற்றைச் சேகரித்து எடுத்துக் கொண்டனர். மரம் அறுக்க, வெட்ட, தோண்டப் பயன்படும் கருவிகளை நகாயுவே கொண்டு வந்த உறுதியான பச்சைக் கற்களிலிருந்து சமைத்துக் கொண்டனர்.மவுரிகள் கற்கால நாகரித்தவர். இரும்பின் பயனை இவர்கள் அறிந்திருக்கவில்லை.

சுமார் 100 அடி நீளம் உள்ள எட்டுத் தோணிகளில் இவர்கள் புறப்பட்டனர். இந்த எட்டுத் தோணிகளுக்கும் பெயர் கூறப்படுகின்றது. இந்தத் தோணிகளின் பெயர்களே அவற்றில் பயணித்து வந்த மவுரிகளின் சந்ததியினருக்குப் பெயராக மரபுவழி வழங்கப்பட்டு வருகின்றது.

‘தனரோவா’(‘Tanaroa’is the God of Ocean) எனும் கடல் தெய்வத்தின் துணையுடன் அவர்கள் தாம் கருதிப் புறப்பட்ட தீவுகளைக் கண்டனர். நீண்டு நெடிய மேகக் கூட்டத்தால் மூடப்பட்டிருந்த அத்தீவுகளுக்கு ‘ஒடியரோவா’(Aotearoa –The long white cloud or the long light) என்று பெயரிட்டு அழைத்தனர். இதற்கு நீண்ட மேகம் அல்லது ஒளிக்கற்றை என்று பெயர்.

திடீரென்று தோன்றிய புயலால் எட்டுத்தோணிகளும் திசை திருப்பப்பட்டு, முன்பே தமக்குள் பேசி வைத்துக் கொண்டாற்போல, தீவுகளின் எட்டு இடங்களில் கரை சேர்ந்தன. அவர்கள் ஏறி வந்த எட்டுத் தோணிகளின் பெயர்களே, தனித்தனி அவற்றில் பயணித்தவர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் அவர்கள் குடியேறிய இடத்திற்கும் பெயராயின. இக்கூட்டத்தினர் கரை சேர்ந்த இடமே இவர்களின் பூர்வீகபூமி என வழங்கப்படலாயிற்று.

‘டாஸ்மன்’ (Tasman) என்னும் டச்சுக்காரர்தான் ஒடியோராவை முதன்முதலிற் கண்ட ஐரோப்பியர். டாஸ்மன் இத்தீவுகலைக் கண்டாரே ஒழிய இங்குக் கால் பதிக்கவில்லை. இத்தீவுகளை , இவர் , புதுநிலம் என்னும் பொருளில் ,’நொவோ ஜிலேண்டிய’ (Novozelandia) என்றழைத்தார். இதன் ஆங்கில வடிவம்தான் ‘நியூசிலாந்து’ என்பது.

நியூசிலாந்தில் முதன்முதல் கால்வைத்த ஆங்கிலேயர் ‘கேப்டன் குக் ‘ என்பவர். இவர் தம்முடைய ‘எண்டோவர்’ (Endeavour) என்னும் கப்பலில் ‘தஹிதி’ தீவுகளை நோக்கிச் செல்லும் வழியில் 1769 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6ஆம் தேதி இங்கு இறங்கினார். கேப்டன் குக் மூன்றுமுறை நியூசிலாந்து வந்து சென்றதாக வரலாறு கூறுகின்றது.

குக்கின் வருகையின்போது மவுரிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 150,000 இருக்கும் என அவருடைய அறிக்கை கூறுகின்றது. மவுரிகள் வீரர்களுக்குரிய வலுவான உடல் உரியவர்கள் என்றும், பழுப்பு நிறம் வாய்ந்தவர்கள் என்றும் குக் கூறுகின்றார். உணவுக்காக மவுரிகள் உருளைக்கிழங்கு , வல்லிக்கிழங்கு ஆகியவற்றைப் பயிரிட்டனரென்றும் மீன் எலி பறவைகள் புழுக்கள் முதலியவற்றைப் பிடித்து உணவாகக் கொண்டனர் என்றும் தங்கள் முன்னோர் கொண்டு வந்த நாய்களின் சந்ததிகளையும் இறைச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் குக் கூறுகின்றார்.

நியூசிலாந்துக்கு உரியதெனச் சிறப்பாகக் கூறத் தக்க விலங்கு ஒன்றும் இல்லை. ‘மோவா’ என்னும் ஒருவகைப் பறவையும் ‘கிவி’ எனும் ஒருவகைப் பறவையும் நியூசிலாந்துக்கு உரியன. மோவா இனம் இப்பொழுது அழிந்துவிட்டது. மோவாவின் பரிணாமமே இப்பொழுது ஆஸ்திரேலியாவில் தீக்கோழியாகவும் (Ostritch) நியூசிலாந்தில் கிவியாகவும் வளர்ச்சிமாற்றம் அடைந்துள்ளன. மவுரிகள் அருவி, ஓடைகளின் தாகம் தணிக்கும் குளிர்நீர் சுவை அறிந்திருந்தார்களே யன்றி போதை அளிக்கும் வேறு ‘குடி’ சுவை அறியார், என்கிறார், குக்.

கேப்டன் குக் நியூசிலாந்திற்கு வழி கண்டபின் இங்கு ஐரோப்பியர்களின் குடியேற்றம் நிகழத் தொடங்கியது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காத்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் முதலில் இங்குக் குடியேறத் தொடங்கினார்கள். மீன்பிடிக் கப்பல்கள் (Sealers and Whalers) மரவியாபாரிகள் (Timbers) மூலம் இக்குடியேற்றம் நடைபெற்றது. கத்தோலிக்கருக்கு அஞ்சிய புரொட்ஸ்டண்டு கிறித்துவர்களும் இவர்களில் அடக்கம். இன்றும் இங்கு ப்ரொடஸ்டண்டுகளே அதிகம். இங்கு ஐரோப்பியர்களின் பண்டைக்குடியேற்றம் பற்றி இத்தாலிய கத்தோலிக்கப் பாதிரியார் எழுதிய புத்தகம் ஒன்று படித்தேன். அதில் ப்ரொடஸ்டண்டு சமயத் தலைவர்கள் மவுரிகளை எப்படி ஏமாற்றிச் சுரண்டி சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள் எனப் புள்ளி விவரங்களுடன் விளக்கியிருந்தார். படிக்கச் சுவையாக இருந்தாலும் நமக்கு அந்நியமான விஷயம் என்று அதைக் கவனத்தில் கொள்லாமல் இருந்து விட்டேன்.

1800களில் இங்குக் குடியேறியவர்கள் , தாம் குடியேறிய இந்த நாட்டையே தம்முடைய தாய் நாடாகப் பாவிக்கத் தொடங்கினர். இவர்கள் இந்த நாட்டின் வளத்தைச் சுரண்டிப் பணக்காரராகித் தம் சொந்த நாட்டிற்குத் திரும்பி வளமாக வாழ எண்ணியவர்கள் அல்லர். தொழிற்புரட்சியின் காரணமாகப் பண்பட்ட தங்கள் தாய் நாட்டின் சூழ்நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட நிலைமையை இங்குக் குடியேறியவர்கள் சந்திக்க வேண்டியதாயிற்று. இங்கு வாழ்க்கை என்பது, அவர்களுக்குப் புதிய நிலத்தைத் தங்கள் வாழ்வுக்கு ஏற்றதாக மாற்றியமைக்க நடத்தும் போராட்டமாகவே இருந்தது.

மைக்கேல் கிங் என்னும் நியூசிலாந்து வரலாற்று ஆசிரியர் கூறியுள்ள செய்தி ஒன்றை இங்கு எடுத்துக் காட்டவிரும்புகின்றேன். தமக்குத் தம்முடைய தந்தைவழி தாய்வழிப் பாட்டிமார் இருவரும் கூறியதாக அவர் கூறும் அச்செய்தியது.. அச்செய்தி, அக்காலத்தில் தங்களுடைய சொந்த நாட்டை விட்டுப் பல்லாயிரம் மைல் கடந்து பலதுன்பங்களுக்கு இடையில் இத்தீவுகளில் குடியேறியவர்களின் மனநிலையை விளக்குவதாக உள்ளது.

“சமவாய்ப்பு உள்ள பிரதேசத்தில் உழைப்பால் நல்லவளமான சிறந்த குடும்பங்களை உருவாக்கவும், பிறந்த குடியின் செல்வாக்காலன்றிக் கடின உழைப்பால் எங்கள் திறமையால் தகுதியால் எங்களுக்கு ஒரு அடையாளத்தை அடையவுமே நாங்கள் இங்கிலாந்தை விட்டு இங்கு வந்தோம்” ( I was reminded frequently by both grandmothers why thehad abandoned United Kingdom :to raise healthy families in a land of open option.; and to achieve identy and status on the basis of what they did rather than on the circumstances of their birth) இத்தகைய கருத்தே இன்றும் நியூசிலாந்தின் குடியேற்றக் கொள்கைக்கு (Immigration Policy) அடித்தளமாக உள்ளது.

ஆங்கிலேயரைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாட்டவரும் இங்குக் குடியேறத் தொடங்கினர்.

இங்கு வாழ்கின்ற ஐரோப்பியர்கள் அனைவரும் தம்மைக் குடியேறிகள் அல்லது குடியேறியவர்களின் சந்ததியினர் என்று கூறிக் கொள்ளத் தயங்குவதில்லை. ஆனால், தங்களை நியூசிலாந்தினர் என்ற தனி அடையாளம் காட்டுக் கொள்ளவே விரும்புகின்றனர்.; ஆங்கிலேயர் என்றோ ஐரிஷ்காரர் என்றோ கூறிக் கொள்ள விரும்புவதில்லை. அனைத்து இனத்தினரும் கூடியதால் உருவான Aotearoa/ Newzealand culture தங்கள் மூதாதையரின் நாட்டுக் கலாச்சாரத்தினின்றும் வேறுபட்டது எனக் கூறித் தங்களை நியூசிலாந்துடன் அடையாளம் காட்டுகின்றனர்.

வாழும் உரிமையில், முன்னர்க் குடியேறியவருக்கும் அண்மையில் குடியேறியவருக்கும் இடையே எத்தகைய வேறுபாட்டையும் காட்டுவதைப் பொதுவாக இவர்கள் விரும்புவதில்லை.

குடியுரிமை பெற்று இங்கு வாழும் ஐரோப்பியர்களை மவுரிகள் ‘பாஹியா’ (Pakeha) என்று அழைக்கின்றனர். பாஹியா , மவுரி இருவரும் நியூசிலாந்தினர் என்பதில் இவருக்குள் கருத்து வேற்றுமை இல்லை.

பாஹியா என்பது மவுரி மொழியில் வெள்ளைப் பன்றியைக் குறிக்கும் என்றும் தங்களை இழித்துக் கூறும் இப்பெயரைச் சட்ட பூர்வமாகச்த் தடை செய்ய வேண்டும் என்றும் சில ஆண்டுக்ளுக்கு முன்னர் ஐரோப்பியர் சிலர் விரும்பினர். ஆனால், நியூசிலாந்து அறிஞர்கள் pakeha என்பது பிற ஐரோப்பியர்களிடமிருந்து வேறுபடுத்தித் தம்மைச் சரியாக அடையாளம் காட்டும் மரியாதை மிக்க சொல்லே என்று கருதுகின்றனர். குடியேற்றங்கள் நிகழ்ந்த காலத்தில் , ஏற்கென்னவே குடியேறிய ஒருவன், புதிதாகக் குடியேறியவனை முதலில் சந்தித்தபொழுது, ‘நீ நம்மாள் தானே’? எனக் கொச்சைமொழியில் கேட்டு நட்புக் கொள்கின்ற முறையில், ‘Bugger,Yea’ எனக் கேட்டான். அது மவுரி காதில் விழுந்தது. தன் காதில் விழுந்த அந்தச் சொல் ஐரோப்பியர் இனத்தைக் குறிக்கும் என நினைத்தான். ‘Bugger, yea’ மவுரியின் உச்சரிப்பில், ‘Pakeha’ என ஆயிற்று. இவ்வாறு இச்சொல்லின் தோற்றத்திற்குச் சமாதானமும் கூறினர். எவ்வாறாயினும் பாஹியா, மவுரி இருவருக்கும் இன்று நியூசிலாந்தைத் தவிர வேறு சொந்த நாடு இல்லை.

இந்த இரு இனத்தவரில் மவுரி முந்தி வந்தவர் என்ற காரணத்தால், அவர்களுக்கு உரிய சில சிறப்பு உரிமைகளை இவ்விரு இனத் தலைவர்களும் கூடி ‘வைத்தாங்கி’ (Waitangki) என்னு இடத்தில் 1840ல் செய்து கொண்ட உடன்படிக்கை (Treaty of Waitangki) தெளிவாக்குகின்றது. இந்த உடன்படிக்கை ஏற்பட்ட நாளை தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாடுகின்றனர்.

ஐரோப்பியர் குடியேற்றத்தினாலும் அதனைத் தொடர்ந்த போர்களினாலும் மவுரிக்கு நிலவுடைமை இழப்பு ஏற்பட்டது. இழப்புக்கு ஈடு செய்யவும். மவுரியின் மொழி, பண்பாடு மற்றும் பிறவுரிமைகளுக்கும் வைத்தாங்கி உடன்பாடு வழிவகை செய்கின்றது. இன்று மவுரி மொழி நியூசிலாந்தின் தேசிய மொழியாக, ஆங்கிலத்துடன் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது. வரிவடிவம் இல்லாத இம்மொழி ஆங்கில எழுத்துக்களால் எழுதப்படுகின்றது. ஊர்ப்பெயர்கள் மவுரிகள் வழங்கியவாறே வழங்கப்படுகின்றன. பிற்காலத்தில் ஆங்கிலப்பெயர்களாக மாற்றப்பட்டனவும் கூட வரலாற்று முக்கியத்துவம் பெறாதன மீண்டும் சட்டப்படி மவுரி வழங்கியவாறே பெயர் மாற்றம் பெற்றன. மக்களவை, ஊராட்சி மன்றங்கள் முதலிய அமைப்புக்களில் மவுரிக்கு உரிய சிறப்பு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டுள்ளது. அரசு சுற்றறிக்கைகள் இருமொழிகளிலும் வெளியிடப்படுகின்றன. மவுரியின் நலன்களைக் கவனித்துக் கொள்ள Maori Affairs எனத் தனிஅமைச்சகம் உள்ளது. குழந்தைகள் காப்பகமும் மழலையர் பள்ளிகளும் டூரிசமும்(Tourism) பெரும்பாலும் மவுரிகள் வசமே உள்ளன

200 ஆண்டுகளுக்கு முன்னர் நரமாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகளாக இருந்த சமுதாயம் இன்று அடைந்துள்ள நாகரிகத்தைப் பார்க்கும்போது , பாஹியா சமுதாயம் எத்துணைப் பெருந்தன்மையுடனும் கடமை உணர்வுடனும் நடந்து கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

இன்று நூற்றுக்கு நூறு சுத்தமான மவுரி இல்லை. கலப்பினம்தான் உள்ளது. தாய் அல்லது தந்தை வழியில் ஐரோப்பியர்களின் கலப்பு இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. பழைமையான மவுரி சமயமும் சமயச் சடங்குகளும் ஒழிந்துவிட்டன. மவுரிகள் அனைவருமே இன்று கிறித்தவர்கள். ஆயினும், இவர்களுக்கு எனத் தனிக் கிறித்துவக் கோட்பாடுகளும் சர்ச்சுகளும் உண்டு.; சமயபோதகர்களும் உண்டு. மவுரிகள் ஆங்கிலத்தைத் தாய்மொழிபோலப் பேசுகின்றனர்.

கடந்த நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுகளில் நியூசிலாந்தில் ஐரோப்பியர்களேயன்றி, உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் குடியேறியுள்ளனர். மலேயாத் தீபகற்பம், சமோவா, தோங்கா, தஹிதி முதலிய பசிபிக் தீவுகளிலிருந்தும், சீனா இந்தியா பாகிஸ்தான் முதலிய ஆசிய நாடுகளிலிருந்தும் மக்கள் பெரிய அலவில் இங்குக் குடியேறியுள்ளனர். இப்படிக் குடியேறியவர்களுக்கு வேடிக்கைப் பெயர்களும் உண்டு. பசிபிக் தீவுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் தேங்காய் மிகுதியாக உண்பார்கள். அதனால் அவர்களுக்குத் ‘தேங்காய்கள்’ என்று பெயர். ஆசியர்கள், குறிப்பாக இந்தியர்களின் உணவில் உறைப்பான மசாலா இருப்பதல், அவர்களுக்கு ‘மசாலா மன்சீஸ்’ (Masala munchis) என்று பெயர். சீனர்களுக்குச் ‘சிங்கீஸ்’ (chingis)என்று பெயர். இப்பெயருக்குக் காரணம் தெரியவில்லை.

கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் நியூசிலாந்தில் முதலீடு செய்தும் தொழில் நுட்பம் உதவியும் நாட்டை வளப்படுத்தும் திறம்கொண்டோரை இந்நாடு வரவேற்றது. இதனால், இந்தியர்கள் 1947 தொடங்கியே இந்தியாவிலிருந்தும் ஃபிஜி தீவுகளிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் இங்குக் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இத்தகையோரில் குஜராத்தியினர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இலங்கையிலிருந்து ஐ.நா.வின் உதவியோடு தமிழர்கள் அகதிகளாக இங்கு வந்துக் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில், இவ்வாறு குடியேறியவர்களால் தங்கள் வாழ்க்கையும் வாழ்வுரிமைகளும் பாதிக்கப் படுவதாகச் சில பாஹியாக்களும் மவுரிகளும் கருதி, குடியேற்றத்தை அனுமதிக்கும் அரசின் போக்கைக் கண்டித்து வருகின்றனர். முக்கிய எதிர்க்கட்சியாகிய Newzealand First என்னும் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் வின்ஸ்டன் பீட்டர் என்பவர். இவர் நியூசிலந்தின் பாராளுமன்ற உறுப்பினருமாவார். இவரொரு கலப்பின மவுரி. அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையால், அரசு ஒதுக்கும் வீடுகளும் மருத்துவ உதவிகளும் இவைபோன்ற பிற சலுகைகளும் வந்தேறிகளே எளிதில் பெற்றுவிடுகின்றனர்; சொந்தநாட்டு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது; தங்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கும் இக்குடியேற்றச் சட்டத்தை மாற்ற வேண்டும் என இவர் கடுமையாக வாதாடி வருகின்றார். மேலும், இந்தியா – பாகிஸ்தான், சிங்களர் – தமிழர் போன்று பகை உணர்சி உடையவர்களை ஒருசேர இங்குக் குடியேற அனுமதிப்பதால் உலகில் எங்கெங்கோ நடக்கும் சண்டைகள் இங்கும் நிகழ அரசு வாய்ப்பளிக்கின்றது என்றும் வின்ஸ்டன் பீட்டர் சாடுகின்றார். இவருடைய தாக்குதல் கணைகளுக்குக் குறி இந்தியர்களும் சீனர்களுமே. வின்ஸ்டன் பீட்டரின் கருத்துக்குக் கணிசமான ஆதரவு உள்ளது.

புதிதாகக் குடியேறுபவர்களால் இங்கு ஏற்கெனவே வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கைத் தரம், பணிநிலை, உழைப்புச் சந்தை ஆகியன பாதிக்கப் படுகின்றன; பணிக்கு அமர்த்துபவர்கள் , நியூசிலாந்தினருக்குப் பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்துவதற்குப் பதிலாக ஏற்கெனவே அத்துறையில் பயிற்சி பெற்றுள்ள குடியேறிகளை அப்பணியில் நியமிக்கிறார்கள். புதியதாகக் குடியேறியவர்கள் குறைந்த ஊதியத்திற்குப் பணி செய்ய ஒத்துக் கொள்கிறார்கள். இத்தகைய போக்கினால், ‘கிவிக்கள்’ பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று கருதப்படுகின்றது. ஆங்கிலத்தைத் தாய்மொழி போலப் பேசுவோரையும், ‘கிறித்துவ அறத்தில்’ (Christian Ethics) ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களையும் மட்டுமே குடியேற அனுமதிக்கலாம், அவர்களே நியூசிலாந்தின் நீரோட்டத்தில் எளிதில் கலந்து கரைந்து விடுவர் என்ற கருத்தும் நிலவுகின்றது. இது, பிற மதத்தவர்களின் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று சொல்லாமற் சொல்லுவதாகும்.

சீனர்களும் ஜப்பானியர்களும் இங்குப் பெரிய அளவில் பொருள் முதலீடு செய்கின்றனர். ஜப்பனியர்கள் உல்லாசப் பயணிகளாக அதிக அளவில் இங்கு வருகின்றனர். இங்குப் பொருள் செலவிடுகின்றனர். நியூசிலாந்தின் பொருளாதாரத்திற்கு இவ்விருநாடுகளின் உறவு மிக இன்றியமையாதது. எனவே, இவர்களை அரசு கட்டுப்படுத்த விரும்புவதில்லை. இந்தியர்கள் பணி தேடியே இங்குக் குடியேறுகின்றனர்.; வளமான வாழ்வினை நாடியே இவர்கள் இங்கு வருகின்றனர். இவர்கள் இங்குத் தங்கள் தொழில் திறமையைப் பணமாக்கிக் கொள்கிறார்களே யன்றிப் பொருள் முதலீடு செய்வதில்லை என்ற கருத்து நிலவுகின்றது. அதனால், அரசு குடியேற்றச் சட்டத்தில் கொண்டு வரும் மாற்றங்கள் இந்தியர்களையே பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகின்றது.

நியுசிலாந்துக்கு மீன் பிடிப்பவர்களாகவும் மரவணிகர்களாகவும் எப்போது வெள்ளையர் வரத் தொடங்கினரோ அன்றுதொட்டே மவுரிக்கலப்பினம் தோன்றி விட்டது. இன்று மவுரிகளில் 60 சதவிகிதம் ஆங்கிலேயரின் கலப்பும் ஏனைய நாற்பது சதவவிகிதம் ஏனைய ஐரிஷ் , ஸ்காட்டிஷ், ஐரோப்பியக் கலப்பும் உள்ளது எனக் கூறப்படுகின்றது.

கப்பல் கரைக்கு வந்தவுடன் சிலமாலுமிகள் மீண்டும் புறப்படும் வரை அருகில் உள்ள காடுகளில் மறைந்திருந்தனர். கப்பல் மீண்டும் கிளம்பிப் போய்விட்டதென உறுதியாகத் தெரிந்த பின்னர் வெளிப்பட்டு நியூசிலாந்தின் நிரந்தரக் குடிகள் ஆயினர். மவுரிப் பெண்களை அவர்கள் மனந்து கொண்டனர். திருமணத்தைப் பொறுத்த வரையில் மவுரிப் பெண்கள் பூரண சுதந்திரம் உடையவர்கள்.

சிலசமயங்களில், கப்பல்கரையில் நின்றுகொண்டிருக்கும்போது, காட்டிலும் கரையிலும் வேட்டையாடிக் கொண்டிருந்த மாலும்கள் மவுரிப் பெண்களோடு தற்காலிகக் குடும்பம் நடத்துவதும் உண்டு. இத்தகைய உறவுகளால் கலப்பினக் குழந்தைகள் பிறந்தன. கப்பல் கரைகளை விட்டுத் தத்தம் நாட்டுக்குத் திரும்பியபோது, குழந்தைகளின் தந்தையரும் போய்விட்டனர். குழந்தைகள் மவுரித் தாய்மார்களிடம் மவுரிகளாகவே வளர்ந்தனர். மவுரிகளின் சமூக அமைப்பும் (Tribal Organaisation) மவுரிப் பெண்ணுக்கு இருந்த சில உரிமைகளும் கலப்பினக் குழந்தைகள் தந்தையின்றியும் வாழ வசதி அளித்தன.

ஜே.எஃப்.எச். ஊஃலர் (J,F.H.Whooler) என்னும் ஜெர்மானிய மிஷனரி ஒருவர், 1844ல், தெற்குத்தீவின் தெற்கிலுள்ள ஃபோவியாக்ஸ் ஜலசந்தியில் (Foveaux) உள்ள ருவாபுகே (Ruapuke) என்னும் சிறிய தீவில் தங்கியபோது மவுரிப்பெண்களுக்கும் வெள்ளையருக்கும் பிறந்த அழகிய கலப்பினக் குழந்தைகளைக் கண்டதாகவும், அந்தக் குழந்தைகளின் பெற்றோர் இன்னார் என அறியத்தக்க அடையாளம் இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். ஒருசமயம் ஒரு மவுரிப்பெண்ணிடம் அவளுடைய குழந்தையின் தந்தையை அடையாளம் காட்டச் சொன்னபோது, அவள் மீன்பிடிக் கப்பலைச் சுட்டிக் காட்டிக் கேப்டன் முதல் சமையற்காரர் வரை அனைவரையும் திகைக்க வைத்தாளம். ஊஃலரால் வளர்க்கப்பட்ட இக்குழந்தைகள் மவுரி மொழியை ஜெர்மன் மொழி ஒலியழுத்தத்துடன் பேசினவாம்.

பாஹியா – மவுரி திருமண உறவில் , மவுரி மனைவியர் வெள்ளைக்காரக் கணவருக்குப் பாதுகாப்பாக இருந்தனர். நியூசிலாந்தில் கணவனுக்குக் குடியுரிமையும் நிலவுரிமையும் பெற்றுத் தந்தனர். சில கலப்பினச் சந்ததியினருக்குப் பிரிட்டீஷ் அரசமரபினருடன் சம்பந்தம் உண்டெனக் கூறப்படுகின்றது.

பாஹியாவுக்கும் மவுரிக்கும் இடையே இவ்வளவு நெருக்கம் இருக்கும்போது காதல் கதைகளுக்கா பஞ்சம்? இதோ கதையான உண்மைச் சம்பவம்.

வடக்குத் தீவில் ‘தீவுகள் விரிகுடா’ (Bay of Islands) என்றொரு நிலப்பகுதி உள்ளது. அதன் மவுரித் தலைவனுக்கு ‘ஹூயா’ (Huia) எனப் பெயருடைய அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். (ஹூயா – நியூசிலாந்தில் உள்ள அழகிய பறவையின் பெயர். நம் கிளி போல) அவள் பேரழகி; நல்ல உயரம்;மெல்லியள்; கம்பீரமான தோற்றம் உடையவள். மவுரி இளைஞர் பலர் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தனர். எவ்வளவு உயர்குடி மகனாக இருந்தாலும் அவள் மறுத்து வந்தாள்.

pic3சிலநாட்களில் பிரிட்டீஷ் படையிலுயர்பதவி வகிக்கும் இளைஞன் ஒருவன் தீவுகள் விரிகுடாவுக்கு வந்தான். ஹூயாவின் பேரழகைக் கண்டு மயங்கினான். அவளும் அவனை விரும்பினாள். அவளுடைய தந்தையும் உயர்குடி வெள்ளையனான (Rangatira Pakeha) அவ்விளைஞனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தான். அவளும் அவனுக்கூண்மை அன்புடை மனைவியாக இருந்தாள். இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

அப்பொழுது வடதீவின் தென்பகுதியில் உள்ள ‘வங்கனூயி’ (Wangnui) என்னும் இடத்தில் ஏற்பட்ட கலகத்தை அடக்க அவ்விளைஞன் தன்படையுடன் செல்லும்படி உத்தரவு வந்தது. போர் நடக்கும் இடத்திற்குப் பெண்களை அழைத்துச் செல்ல இராணுவ விதி அனுமதிக்காது. எனவே, அவன் ஹூயியைச் சமாதானப்படுத்தி அங்கேயே இருக்கச் செய்து போருக்குப் போனான். ஹூயா டனித்துப் புலம்பிக் கொண்டிருந்தாள்.

அந்தக் காலத்தில் அஞ்சல் வசதிகளோ, தொலைபேசியோ கிடையாது. தீவுகள் விரிகுடாவுக்கும் வங்கனூயிக்கும் நெடுந்தூரம். வங்கனூயியில் இருந்து எப்பொழுதாவது செய்தி வரும். அச்செய்திகளில் எல்லாம் பாஹியாப்படை (வெள்ளையர்களின்படை) மவுரிகளிடம் செமத்தையாக உதைபடுவது தெரிய வந்தது. மவுரிகளின் தாக்குதலுக்கு வெள்ளையரின் படை பெரிதும் பலியாகிவிட்ட செய்தியும் தெரிய வந்தது.

தன்னுடைய மவுரி இனம் வெற்றி பெறுவது குறித்த மகிழ்ச்சி, தன் கணவன் தலைமை தாங்கிச் சென்ற படையின் அழிவு குறித்த சோகம் என்ற இரண்டு மாறுபட்ட உணர்ச்சிகளில் சிக்கி ஹூயா தவித்தாள். இனித் தன்னால் தனியாக இருக்க முடியாது என உணர்ந்தாள்.

இவள் இருப்பதோ தீவு வளைகுடாவில்; கணவன் இருப்பதோ வங்கனூயியில். இரண்டு இடங்களுக்கும் இடையில் கிட்டத்தட்ட 500மைல் தூரமாவது இருக்கும். அந்தக் காலத்தில் இவ்விரு இடங்களுக்கும் இடைப்பட்ட அப்பகுதி இருண்ட அடர்ந்த காடுகளும் காட்டாறுகளும் சதுப்பு நிலங்களும் கொண்டதாக இருந்தது. சரியான பாதையும் கிடையாது. நதிகளைக் கடக்கப் பாலங்களும் இல்லை. வழித்துன்ப மிக்க அப்பகுதியைத் தான் தன்னந்தனியளாகக் கடந்து சென்று கணவனை அடைவது என அவள் தீர்மானித்துக் கொண்டாள். துன்பமிக்க அப்பயணத்தை ஹூயா மேற்கொண்டாள்.

வைரோவா ஆறு
வைரோவா ஆறு

வைரோவா (wairoa) ஆற்றைக் கடந்து ஹூயா கைபாரா (kaipara)என்னும் இடத்தை அடைந்தாள். அங்கிருந்து வைக்காடொ (Waikato) ஆற்றைத் தொடர்ந்து தெளபோ (Taupo) ஏரியை அடைந்தாள். அவள் சென்ற வழி ஆபத்துக்களும் வருத்தமும் நிறைந்தது. என்றாலும் வழியில் அவள் சந்தித்த மவுரிகள், பரம்பரையாக அவளுடைய இனத்தாரோடு பகைமை கொண்டவர்களே என்றாலும், அவளை அன்புடன் உபசரித்துப் பாசத்தைச் சொரிந்தனர். பெண்ணொருத்தி, தன்னந்தனியே, கடியவழியில் , தன் கணவனைத் தேடிச் செல்கின்றாள் என்ற பரிதாபத்தோடு அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். மவுரித் தலைவனின் அன்புமகள் காதலுக்காக இப்படிப்பட்ட துன்பத்தை அனுபவிக்க நேர்ந்ததே என்று மரியாதையுடன் அவளுக்குப் பணிவிடை செய்தனர். சிலர் வழித்துணையாக அவளுடன் வந்து வழிகாட்டி உதவினர். இப்படி 60 பேர் வழிகாட்ட ஹூயி ஒருவழியாக வங்கனூயி வந்து சேர்ந்து கணவனை அடைந்தாள்.

வங்கனூயியில் இரண்டாண்டுகள் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தாள். அவளுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்த நிலையில் அவள் கணவனுக்கு இங்கிலாந்திலிருந்து ஒரு செய்தி வந்தது. அவனுடைய தந்தை இறந்து விட்டதாகவும் , அவர் விட்டுச் சென்ற எஸ்டேட் முதலிய பெருஞ்சொத்துக்களுக்கு வாரிசான அவன் உடனே இங்கிலாந்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்றும் அத்தகவல் அவனுக்குத் தெரிவித்தது.

அவன் இங்கிலாந்துக்குச் செல்ல நீண்ட விடுப்புக்கு விண்ணப்பித்தான். விடுப்பு அனுமதி கிடைத்தவுடன், ஹூயாவைத் தனியே தவிக்கவிட்டுவிட்டு இங்கிலாந்து போய்ச் சேர்ந்தான். இங்கிலாந்து சென்று சொத்துக்களைத் தன் வசமாக்கிக் கொண்டபின் அவளையும் மகளையும் அழைத்துக் கொள்வதாக உறுதிகூறிச்சென்ற அவனை நினைத்து நினைத்து ஏங்கி ஹூயா காத்திருந்தாள். காத்திருப்பதே கடமையாயிற்று. இனி அவன் வரமாட்டான் என்பது உறுதியாயிற்று.

ஹூயா பிறந்த குடி வீரமிக்க ஆண்களையும் அன்புமிக்க பெண்களையும் உடையது. அந்தக் குடிப்பண்புக்கு ஏற்ப , அவள் தன்னுடைய பெண்குழந்தையையும் எடுத்துக் கொண்டு மீண்டும் தீவுவிரிகுடா வந்து தன் தந்தையை அடைந்தாள். தந்தையின் பராமரிப்பில் தன்னுடைய எஞ்சிய காலத்தைக் கணவனைக் குறித்த வருத்தத்திலேயே கழித்தாள். அழகும் இளமையும் உடையவளாக இருந்தும், மவுரி சமுதாய ஒழுக்கம் அனுமதித்தும், அவள் மறுமணம் செய்து கொள்ளவில்லை. கணவன் நினைவிலேயே சில ஆண்டுகளில் உயிரைவிட்டு, அவளுடைய மூதாதையர்கள் சென்ற இடத்துக்கு அவளும் போய்ச் சேர்ந்தாள்.

ஹூயாவின் மகள், ‘நொடா’(Nota) என்பது அவள் பெயர், ஆங்கில மவுரிக் கலப்பினத்துக்கு ஒத்த மிகச் சிறந்த அழகுள்ளவளாக வளர்ந்து, தன்னுடைய தாய்வழிப் பாட்டன் சொத்துக்கு வாரிசானாள்.

இப்படியாகச் சென்றது ஹூயாவின் காதல்கதை.

மீன் பிடிக்கவும் மரம் வெட்டவும் கப்பலில் வந்த மாலுமிகளால் மவுரி சமுதாயம் முழுவதையுமே கலப்பினமாக மாற்ற முடிந்ததென்றால் அதற்கு மவுரிகளின் திருமணஅமைப்பும் ஒரு காரணமாகும்.

மவுரி சமூக அமைப்பில் பிறப்பு முதல் இறப்பு முடிய எல்லாப் பருவ நிகழ்ச்சிகளுக்கும் சடங்குகள், சமுதாய நிகழ்ச்சிகள் உண்டு.ஆனால், திருமணத்திற்கு மட்டும் எந்தவொரு சடங்கும் இல்லை. இது ஒருவனும் ஒருத்தியும் மட்டும் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சி. ஒருவன் ஒருத்தியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து அவளும் அவனுடைய விருப்பத்தை ஏற்று உடன்பட்டால் போதும். அவனும் அவளும் கணவன் மனைவியாகி விடுவர். அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தால் சமுதாயமும் அவர்களுக்குக் கணவன் மனைவியென்னும் தகுதியைஅளித்துவிடும். பெண் ஆணின் வீட்டுக்குப் போய் ஓரிரவு தங்குவதுதான் திருமணச் சடங்கு. அது நடந்துவிட்டால் அவர்கள் கணவனும் மனைவியுமாவர்.

பெண், தனக்கு விருப்பமானவனை வரித்துக் கொள்வது பாரதப் பண்பாட்டுக்கு முரணானதன்று. யாழோர் கூட்டம் (கந்தருவத் திருமணம்), களவுத் திருமணம் என்று தமிழ் இலக்கியங்கள் இதனைக் கூறும். களவு கற்பில்தான் முடியவேண்டும். கற்பு என்பதற்குப் பிற்காலத்தில் பலவிதமாகப் பொருள் கூறப்பட்டாலும் தொல்காப்பியம் கூறுவதே உண்மைப் பொருள். பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் ‘கொடைக்குரி மரபினோர்’ பெண்ணைக் கொள்ளுவதற்குரியவனுக்குச் சடங்கு(கரணம்)களின் வழியே கொடுப்பக் கொள்ளுவது கற்பு. கரணம் இன்றிக் கற்பு இல்லை.

கரணங்களாகிய சடங்குகள் ஏன் விதிக்கப்பட்டன? தொல்காப்பியம் காரணம் கூறுகின்றது.

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

ஒருவன் ஒருத்தியுடன் உறவு கொண்டாடிவிட்டுச் சில காலத்திற்குப் பின் இவளை அறியேன் என்று உதறிவிட்டுச் செல்லும் பொய்யும் வழுவும் பரவலாகத் தோன்றிய பொழுது ஊரறிய உலகறியச் செய்யும் திருமணச் சடங்கின்வழி பெண்ணுக்குச் சமூகப் பாதுகாப்புக் கொடுப்பதற்காகப் பெரியோர்களால் உருவாக்கப்பட்டன இக் கரணங்கள். அது, திருமணப்பதிவாளரிடம் பதிவு செய்வதாகவும் இருக்கலாம், அக்கினி சாட்சியாகச் செய்யப்படுவதாகவும் இருக்கலாம். இத்தகைய சடங்குகளின்றிச் செய்யப்படும் திருமணங்களில் பெண்ணுக்கும் அவள் வழி அவளுடைய குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நேரிடக் கூடிய அவமான அழிவுகளின் சாத்தியக் கூறுகளைக் கருதியே ‘கரணம் தப்பினால் மரணம்’ என்னும் பழமொழியும் தோன்றியது போலும்!

இத்தனையும் மவுரி கலப்பினம் ஆனதை நோக்கி எழுந்த எண்ணங்கள்.

மவுரியின் கலியாணத்துக்குத்தான் சடங்கு இல்லையே ஒழிய, குழந்தை பிறந்தால், ஆணோ பெண்ணோ வயதுக்கு வந்தால், இறப்பு ஏற்பட்டால், மரம் வெட்டினால், விதைத்தால், அறுவடை செய்தால், புதிய தோணியை மிதக்கவிட்டால், வேட்டைக்குப் போனால், சண்டைக்குப் போனால், விருந்து வந்தால் என வாழ்க்கை முழுவதும் சடங்குகள் நிறைந்துள்ளன என்பதுதான் வேடிக்கை.

இன்று நியூசிலாந்தில் திருமணப்பந்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் ‘பார்ட்னர்’ உடன் வாழும் போக்கு அதிகரித்து வருகின்றது. ‘மணமக்கள் தேவை’ விளம்பரங்கள் போல ‘Wanted male partner’, Wanted fmale partner’ விளம்பரங்கள் அதிக அளவில் வெளிவருகின்றன. ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உடையோர் ‘Gay partner’ எனப்படுகின்றனர். நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அமைச்சர்களும் உறுப்பினர்களுமாகப் பன்னிருவருக்குக் குறையாமல் ‘Gay Partner’ உள்ளனராம்.