அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – பகுதி 2

இக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

ayn-rand-young-smilingபுறவயவாதம் அறிவையே உலகம் உய்தலுக்கான அல்லது உலகம் தொடர்ந்து தடையற்று இயங்குதலுக்கான மார்க்கமாகக் காட்டுகிறது. இந்த உலகத்தில் மனித வாழ்விற்குத் தேவையானவை என்று மூன்று விஷயங்களை புறவயவாதம் முன் வைக்கிறது – அறிவு, நோக்கம், சுய கௌரவம். இங்கே முன் வைக்கப்படும் அறிவு எந்த விதமான அமைப்பு சார்ந்த அறிவன்று – ஏதோ ஒரு ஞானியையோ, துறவியையோ, தத்துவ ஆசிரியரையோ, மதத்தையோ பின்பற்றுவதனால் பெறும் அறிவு அன்று. ஒரு மனிதன் தன் அனுபவத்தின் மூலம் தன் ஆராய்ச்சியின் மூலம் தன்னைச் சார்ந்த உலகத்தை, அதன் இயக்கத்தைத் தொடர்ந்து கேள்வி கேட்பதன் மூலம் அடையும் உண்மையின் தரிசனத்தின் அடிப்படையிலான அறிவே அது. ஒவ்வொரு மனிதனின் வாழ்வின் நோக்கமும் பயனும் அவ்வகையிலான அறிவின்படி அமைதலே வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது.

இந்த உலகத்தில் தோன்றியிருக்கும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் கலகம்தான் ஆதாரமாக இருக்கின்றது. சில கலகங்கள் மனித மனதிற்கு உள்ளே நிகழ்கின்றன. சில சமுகத்தில், சில கலகங்கள் தேசம் என்ற விஸ்தீரமான எல்லைக்குள் நிகழ்கின்றன. புறவயவாதத்தில் தோன்றும் கலகங்கள் இரண்டாம் தர உலகத்துடன் இணைந்து இயங்க மறுப்பதாலும், அந்த இரண்டாம் தர உலகம் தரும் உதவியைப் புறம் தள்ளுதலாலும் தோன்றுபவை. இந்த வகையிலான கலகங்களுக்குக் காரணமாக இருப்பவை வலுவான தர்க்கமும் அது முன்னிறுத்தும் காரணங்களும். இந்த வகையிலான காரணங்கள் உணர்வு சார்ந்து கண்டடையப்படுவதில்லை, அறிவு சார்ந்து கண்டடையப்படுகின்றன. இந்த வகையிலான கலகங்களை நிகழ்த்துவது அவ்வளவு சுலபமான வேலையில்லை. தொடர்ந்து சிந்தித்தலும் தனக்குள்ளேயே பல விதமான வாதப் பிரதிவாதங்களை நிகழ்த்துதலும், தன் முன் வைக்கப்படும் எந்தப் பழம் அறிவையும் அதன் வேர் வரை சென்று கேள்வி கேட்டலும், அதனால் அறியப்படும் காரணத்தின் பொருட்டு ஏற்றுக் கொள்வதும்/ நிராகரித்தலும் மிகவும் கடினமானவை.

புறவயவாதம் அறிவை ஆதாரமாகக் கொண்டு உலகின் மாற்றத்திற்கு காரணமான மனிதனை ஒரு நாயகனாகக் கொண்டாடுகிறது. சமகால சிந்தனைகளை கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தி உண்மைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் படைப்பாற்றலை தோற்றுவிக்கும் மனிதர்களே முதன்மைப் படுத்தப்படுகிறார்கள். அந்த படைப்பிற்காக அவர்கள் எதிர் கொள்ளும் வேதனைகளும் உடல்/ மன வருத்தங்களும் முதன்மை படுத்தப்படுவதில்லை. அவ்வகையான வருத்தங்கள் படைப்பளிகளுக்கு மகிழ்ச்சியையே அளிக்கின்றன.

அப்படியெனில் புறவயவாதத்தின் படைப்பாற்றல் உலகத்தில் தோன்றிய பழைய அறிவு அனைத்தையும் எதிர்க்கிறதா ? இல்லை. சுவீகரிக்கவும் செய்கிறது. ஆனால் அந்த அறிவை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதை தன் படைப்பூக்கத்தால் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. அப்படி அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லுதலுக்கு திரள்வாதத்தில் (collectivism) முட்டுக்கட்டைகள், சமரச நிலைகள் தோற்றுவிக்கப்படுமென்பதால் திரள்வாதத்தை புறவயவாதம் ஆதரிப்பதில்லை.

“I don’t work with collectives. I don’t consult, I don’t cooperate, I don’t collaborate”

— Howard Roark in Fountain Head

கலிலியோ என்ற ஒரு மனிதன் பூமி சூரியனை சுற்றுகிறது என்ற கொள்கையை ஆதரித்த போது மதவாதிகளால் எந்த வகையிலான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்திருக்கும்? ஆனால் அவ்வகையான கலகத்தை கலிலியோ நிகழ்த்தாமல் இருந்திருந்தால் நாம் இன்றைக்கு வான சாஸ்திரத்தில் அடைந்திருக்கும் முன்னேற்றம் சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? டார்வின், மனிதர்கள் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என்ற சித்தாந்தத்தை பிரகடனப்படுத்திய போது ?

மனித இனத்தின் வளர்ச்சிக்கும் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் மேலே சொன்னவர்கள் போல வரலாற்றில் பெயர் பதிக்கப்படாத பலர் மௌனமாக நடத்திய கலகங்களே காரணம். இவ்வகையிலான படைப்பாற்றலின் ஊற்று எது? பணமாகவோ, புகழாகவோ இருக்க சாத்தியமே இல்லை. அதையும் தாண்டிய தன்னுடைய மனதின் கேள்விகளுக்கு பதில் காணும் வகையிலான தன்னில் நிறையும் முயற்சி அது. இந்த உலகத்தில் தன்னுடைய இருப்பின் அர்த்தமே இவ்வகையான சாதனையை மேற்கொள்ளுதலே என்றும் அந்த சாதனையை முழுமையடையச் செய்தல் என்பதுமே ஆகும்.

மிகக்கடுமையான சவால்களை எதிர் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தும் அறிவியல் ஆராய்ச்சிகளும், புதிய கண்டுபிடுப்புகளும், கலை ரீதியான படைப்புகளும், சிந்தனைகளும், எதிர்காலத்தில் கிடைக்கும் பயன் மட்டுமே கருதி மேற்கொள்ளப்பட்டால் சவால்கள் ஆசைகளை வென்று முயற்சிகளைத் தோற்கடித்து விடும். மனிதனின் மனவேட்கையை வெல்ல எந்த சவாலும் இந்த உலகத்தில் தோன்ற வாய்ப்பில்லை. இந்த உலகத்தில் நிகழ்த்தப்படும் எந்த அற்புதத்திற்குப் பின்னாலும் ஆழமான மனவேட்கை இருந்து கொண்டே இருக்கிறது.

அந்த அறிவுப்பசியே மனிதனுக்கு எந்த வகையிலான தடையையும் ram3தகர்த்தெறிவதற்கான உந்துதலைத் தர முடியும். இல்லையென்றால் கும்பகோணத்தில் ஏதோ ஒரு மூலையிலிருந்த ராமானுஜன் ஹார்டிக்குக் கடிதம் எழுதியிருக்க முடியாது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும் இளைஞன் உடலை வாட்டும் குளிரைப் பொறுத்து உடல் நிலை தேயும் காலத்திலும் கணிதத்தைப் பற்றியே சிந்தித்தது எதிர்காலத்தில் பெரும் பணமோ புகழோ பெறப்போகிறோம் என்று நினைத்தல்ல. யாராலும் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட நிலையில் அறப்போரை மோகன்தாஸ் மேற்கொண்ட போது எதிர்காலத்தில் தான் தேசத் தந்தை என்று இறவாப் புகழெய்த வேண்டும் என்ற இலக்கு மனதிலிருந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வகையிலான முற்றிலும் தன்னலமான தேடல் எடிசனுக்கு இல்லாதிருந்தால் நாம் இன்றும் எண்ணெய் விளக்கொளியில் தான் படித்துக் கொண்டிருப்போம். தன்னலம் என்ற வார்த்தை இப்போது பயன்படுத்தப்படும் அர்த்தத்தில் புறவயவாதத்தில் அய்ன் ராண்ட் பயன்படுத்தவில்லை. ஒருவன் படைப்பூக்கத்தின் உச்சத்தை அடைவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளின் அடிப்படையாக தன்னலம் இருக்கின்றது என்கிறார் அய்ன் ராண்ட்.

புறவயவாதம் மனிதனின் மனதையும் உள்ளத்தின் எழுச்சியையுமே உலகத்திலேயே மிகப்பெரிய சக்தி என்று கருதுகிறது. இந்த இடத்தில் மிக முக்கியமான கேள்வி. மனிதனின் மன எழுச்சி மட்டுமே முக்கியமென்றால், ஹிட்லரையும் காந்தியையும் ஒரே தட்டில் வைக்கிறதா புறவயவாதம்? அவர்கள் வாழ்ந்த காலத்தில் அதிக பட்சமான எழுச்சியுடன் செயலாற்றியவர்கள் அவர்கள். காந்தியின் மன ஆற்றல் எந்தளவுக்குப் போற்றத்தகுந்ததோ அந்த அளவிற்கு ஹிட்லரின் மன ஆற்றலும் போற்றத்தகுந்ததே. ஆனால் புறவயவாதம் முன்னிறுத்தும் மிக முக்கியமான அம்சங்களுள் ஒன்றான மன எழுச்சி நன்னெறி சார்ந்தது. புறவயவாதம் நம்பும் நன்னெறி அறிவாய்வியல்-ஐ (Epistemology) ஆதாரமாகக் கொண்டது. சுருங்கச் சொல்வதென்றால், அறிவாய்வியலின் மூலம் அறியப்படும் உண்மையை ஆதாரமாகக் கொண்டு கட்டற்ற மன எழுச்சியுடன் செயலாற்றுவதன் மூலம் அடையும் ஆக்கப்பூர்வமான உச்சநிலையில் மகிழ்வோடு இருத்தலே மனிதனின் இருப்பின் காரணமாக புறவயவாதம் முன்னிறுத்துகிறது. இந்த செயல் நிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் சமுக மதிப்பீடுகளை அறிவாய்வியலின் அடிப்படையில் கேள்வி கேட்டலும் புதிய மதிப்பீடுகளை நிறுவுவதும், சில பல மதிப்பீடுகளை புறம் தள்ளுவதும் தவிர்க்க முடியாத வினைகளாக மாறிவிடுகின்றன.

உண்மையான புறவயவாதி பிற மனிதர்களைத் தன் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. பிறரின் தேவைக்காகத் தான் பயன்படுத்தப்படவும் அனுமதிப்பதில்லை. புறவயவாதியின் முன் இருக்கும் கேள்வி பிற மனிதன் மேல் ஆதிக்கம் செலுத்துவதா அல்லது அடிமைப்படுவதா என்பதில்லை. கேள்வி சுதந்திரமா அல்லது சார்ந்திருத்தலா என்பதே. உண்மையான புறவயவாதி யாரையுமே சார்ந்திருப்பதேயில்லை – தான் கண்டடைந்த உண்மையை மட்டுமே சார்ந்திருக்கிறான். யாரையும் அடிமைப்படுத்துவதுமில்லை அடிமையாவதுமில்லை. இந்த இடத்தில் தான் காந்தி ஹிட்லரிடமிருந்து வேறுபடுகிறார். அவர் யாரையும் அடிமைப்படுத்த விரும்பவில்லை. எந்த இனத்தின் மேலும் ஆதிக்கம் செலுத்த முனையவில்லை. தனக்கான சுதந்திரத்தை நிலை நாட்டினார் – இந்தியாவை இந்தியர்களைக் கொண்டே அடிமைப் படுத்த முனைந்த சக்தியுடன் அடிமைத்தனத்துக்கு ஒத்துழைக்க மறுத்ததின் மூலம்.

புறவயவாதிகள் சித்தாந்தங்களை மட்டுமே எதிர்கிறார்கள். அந்த சித்தாந்தங்களைச் சார்ந்த மனிதர்களை அல்ல. விடுதலைப் போரில் காந்தியின் நிலையும் இதுவே – அதனாலேயே அறப்போரில் ஈடுபட்டவர்கள் வெள்ளையர்களை கொல்லும் வன்முறை செயலில் ஈடுபடுதலை குறிக்கோளாக கொள்ளவில்லை. வன்முறையாளர்களைப் போல உயிர்தியாகம் செய்வதென்பது அறப்போரின் லட்சியமாகவில்லை. அடக்குமுறைகளுக்குப் பணியாமல் எதிர்த்தலும், எத்தகைய சித்ரவதைக்கு ஆளாயினும் வேகம் குறையாமல் தன் உரிமையை நிலை நாட்டுதலுமே சத்தியாகிரஹத்தின் தலையாய விஷயங்களாக இருந்தன. காந்தியால் தனி மனிதனாக ஒரு அறப்போரைத் துவங்க முடியும் – ஹிட்லரால் முடியாது – வன்முறையை கையிலெடுக்கும் யாராலுமே முடியாது. தன் இருப்பிற்காக பிற மனிதனை சார்ந்திருக்கும் நிலை (பிற மனிதனை பலியிடும் நிலை) வன்முறைக்கு எப்போதுமே உண்டு. அஹிம்சை என்ற அயுதத்திற்கு அந்த சார்புநிலை தேவையில்லை. சரி, ஆயுதம் என்பது என்ன ? மனித மனதின் கண்டுபிடிப்பு தானே.

இவ்வகையிலான அறிவின் அடிப்படையில் தோன்றிய படைப்புகளை இலவசப் பொருளாகக் கொடுக்காமல் லாபம் தரும் சந்தைப் பொருளாக மாற்றுவது அந்த படைப்பாளியின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக புறவயவாதம் கருதுகிறது. அந்தப் பொருளை யாருக்கு எங்கே விற்பது யாருக்கு விற்காமல் இருப்பது என்று முடிவு செய்ய படைப்பாளிக்கு முழு சுதந்திரம் உண்டு. அந்த நிலையில் தான் புறவயவாதிகளின் முதலாளித்துவ சிந்தனை பிறக்கிறது.

The concept of a “right” pertains only to action— specifically, to freedom of action. It means freedom from physical compulsion, coercion or interference by other men. Thus, for every individual, a right is the moral sanction of a positive—of his freedom to act on his own judgment, for his own goals, by his own voluntary, uncoerced choice. As to his neighbors, his rights impose no obligations on them except of a negative kind: to abstain from violating his rights.

— Excerpt from the essay “Man’s Rights”

மேலே குறிப்பிட்டுள்ள அய்ன் ராண்ட்-இன் “Man’s Rights” கட்டுரை, “ஏன் முதலாளித்துவமே சிறந்தது?” என்று விவாதிக்க அய்ன் ராண்ட் முன் வைக்கும் வாதங்களின் அடிப்படை என்று கருதலாம். வாய்ப்பு கிடைத்தால் படிக்கவும். மனித உரிமை குறித்த சில அடிப்படைக் கேள்விகளை முன் வைக்கும் கட்டுரை. இறுதியாக, அதே கட்டுரையிலிருந்து மனித உரிமை குறித்த சிந்தனை.

Any alleged “right” of one man, which necessitates the violation of the rights of another, is not and cannot be a right. No man can have a right to impose an unchosen obligation, an unrewarded duty or an involuntary servitude on another man. There can be no such thing as “the right to enslave.”
— Excerpt from the essay “Man’s Rights”

தொடர்ந்து பேசலாம்.