இசையும், கணிதமும் இணையும் புள்ளி – அக்‌ஷரம்

புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான செம்பை வைத்தியநாத பாகவதர் சிறுவயதில் தன் சகோதரருடன் இணைந்துதான் கச்சேரிகள் செய்தார். அந்த இரட்டையர்கள் ‘செம்பை பிரதர்ஸ்’ என்றே அறியப்பட்டார்கள். வேகமாகப் புகழடைந்து வந்த அவர்களில் இளையவர் செம்பைக்கே திரும்பிச் சென்றுவிட செம்பை பிரதர்ஸ்லிருந்து ஒரு ‘செம்பை வைத்தியநாத பாகவதர்’ உருவாக சில காலம் பிடித்தது. வெகு பிரபலமான ‘ஆலத்தூர் பிரதர்ஸ்’ உண்மையில் சகோதரர்களே கிடையாது. ஒருவர் தெலுங்கர்; இன்னொருவர் தமிழர். ஆனால் ஒன்றாகத் தொடர்ந்து கச்சேரிகள் செய்து பிரதர்ஸ் என்ற அடைமொழியோடு சேர்த்து சகோதரர்களாகவே அறியப்பட்டவர்கள்.

இப்படி கர்நாடக இசையில் பல இரட்டையர்கள் கடந்த நூறு வருடங்களில் வந்து போயிருக்கிறார்கள். இவர்களில் பலரும் இரட்டையர்கள் அடையாளம் மட்டுமே கொண்டவர்கள். சூலமங்கலம் சகோதரிகள், பம்பாய் சகோதரிகள், MPN சகோதரர்கள் இப்படி. கணேஷ் என்றோ, குமரேஷ் என்றோ தனித்துச் சொல்லும்போது யாரென்று விளங்காமல் போகும். ஆனால் கணேஷ்-குமரேஷ் என்ற வயலின் இரட்டையர்களைக் கிட்டத்தட்ட அனைத்துக் கர்நாட இசை ஆர்வலர்களுமே அறிந்திருப்பார்கள். பாரம்பரியமாக இசை கற்று வந்த குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ்-குமரேஷ் சகோதரர்கள், மிகச்சிறு வயதிலிருந்தே தம் தந்தை இராஜகோபாலனிடம் இசை கற்க ஆரம்பித்தார்கள். மூத்தவர் கணேஷ் ஏழு வயதாகவும், குமரேஷ் ஐந்து வயதாகவும் இருந்தபோதிலிருந்தே இந்த இரட்டையர்கள் கச்சேரி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பத்து வயது முடிவதற்குள்ளாகவே கிட்டத்தட்ட நூறு கச்சேரிகளை முடித்திருந்தார்கள்.

ganeshkumaresh

கடந்த முப்பது வருடங்களாகக் கர்நாடக இசை உலகில் பிரபலமாக விளங்கும் இவர்கள், சிறப்பான மேடைக்கச்சேரிகள் தவிர, பல கர்நாடக இசை ஆல்பங்களையும், இணைவு (Fusion) இசை ஆல்பங்களையும் செய்திருக்கிறார்கள். இவர்களுடைய பல ஆல்பங்கள் ஏதாவது ஒரு மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. கடந்த பத்து வருடங்களில் பல ஆரோக்கியமான இசைப் பரிசோதனைகள் நம் கர்நாடக இசைச் சூழலில் நடந்திருக்கின்றன. கிடார் பிரசன்னா, மேண்டலின் ஸ்ரீனிவாஸ், கணேஷ்-குமரேஷ், செளம்யா, சித்ரவீணை ரவிகிரண், சிக்கில் குருசரண் போன்ற இளைஞர்களும், வி.எஸ்.நரசிம்மன், காரைக்குடி மணி, உமையாள்புரம் சுவாமிநாதன், எல்.சுப்ரமணியம் போன்ற மூத்த இசைக்கலைஞர்களும் இந்த இசை முயற்சிகளில் திறந்த மனநிலையுடன் கூடிய ஆர்வமோடு ஈடுபடுபவர்கள்.

கணேஷ்-குமரேஷின் கர்நாடிக் சில்ஸ் (Carnatic Chills), கலர்ஸ் ஆஃப் இந்தியா (Colors of India), ஸ்பார்க் (Spark) போன்றவை குறிப்பிடத்தகுந்த இணைவிசை முயற்சிகள். “நாங்கள் ஏழு வயதிலிருந்து வயலின் இசைத்துக் கொண்டிருக்கிறோம். இருபது வயதானபோது திரும்பத் திரும்ப ஏற்கனவே வாசித்ததையே வாசித்துக்கொண்டிராமல் புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது. 1990களின் ஆரம்பத்தில் வெவ்வேறு இசை வகையைச் சேர்ந்த உலகின் பல சிறந்த கலைஞர்களோடு சேர்ந்து வாசிக்க ஆரம்பித்தோம்” என்று ஒரு உரையாடலில் குறிப்பிடுகிறார் கணேஷ்.

கர்நாடக இசையிலும் வர்ணம்/ராகம்-தானம்-கீர்த்தனை/மங்களம் வடிவத்திலிருந்து மாற்றாக ஏதேனும் மையக்கருத்தைக் கொண்ட சில ஆல்பங்களையும் தந்திருக்கிறார்கள். ‘ஷட்ஜம்’ என்ற ஆல்பம் ‘க்ருஹ பேதம்’ என்ற கர்நாடக சங்கீதக் கூறை அடிப்படையாகக் கொண்ட கர்நாடக சங்கீத ஆல்பம். ‘ராகப்ரவாஹம்’ என்ற ஆல்பம் ராகங்களின் விரிவான அலசல்களை சம்பிரதாயமான முறையிலும், இரட்டை வயலின்களின் counter point முறையிலும் தந்தது. இவை தவிர ‘அக்‌ஷரம்’ என்ற இன்னொரு முற்றிலும் கர்நாடக இசை சார்ந்த நவீன ஆல்பத்தை கணேஷ்-குமரேஷ் சகோதரர்கள் சென்ற மாதம் வெளியிட்டிருக்கிறார்கள்.

கர்நாடக இசையில் ராகம், தாளம் இரண்டிலுமே கணக்கு வழக்குகள் உண்டு. ஒரு ராகத்தில் பன்னிரண்டு ஸ்வரங்களின் ஏதாவது ஒரு வடிவுமுறை (pattern) இருக்கும். [ஏழு ஸ்வரங்கள் என்று பிரபலமாக அறியப்பட்டாலும் ரி, க, ம, த, நி இவையெல்லாம் இரண்டிரண்டாக இருக்கும். ஆக ச, ரி1, ரி2, க1, க2, ம1, ம2, ப, த1, த2, நி1, நி2 என்று மொத்தம் 12 ஸ்வரங்கள்].

அதைப் போலவே நம் கர்நாடக இசையின் தாளமுறைகளிலும் ஏராளமான கணக்கு வழக்குகள் உண்டு. கர்நாடக இசையில் மொத்தம் ஏழு வகையான தாளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தாளத்திலும் ஒரு வடிவுமுறை இருக்கும். இந்த வடிவுமுறை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்தக் கால இடைவெளியில் வரும் வடிவுமுறையை ஆவர்த்தனம் என்று சொல்வார்கள். ஒரு ஆவர்த்தனத்தில் இடம்பெறும் தட்டுகளின் (beat) எண்ணிக்கைப்படி தாளத்தை 5,6,7 எனத் தட்டுகளின் அடிப்படை எண்ணிக்கையில் வகைப்படுத்தலாம்.

அக்‌ஷரம் ஆல்பத்தில் ராகத்தில் இடம்பெறும் ஸ்வரங்களின் எண்ணிக்கைக்கும், தாளத்தில் இடம்பெறும் தட்டுகளின் எண்ணிக்கைக்கும் உள்ள ஒற்றுமையை வெகு திறமையாகப் பயன்படுத்தி ஒரு மையக் கருத்தை உருவாக்கியிருக்கிறார்கள். உதாரணமாக ஐந்து ஸ்வரங்களைக் கொண்ட ராகத்தை, ஐந்து தட்டுகளைக் கொண்ட தாளத்தில் வாசித்திருக்கிறார்கள். இப்படியாக ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என ஸ்வர-தட்டு எண்ணிக்கைத் தொடர்புடைய ஐந்து இசைக் கோர்வைகளைத் தந்திருக்கிறார்கள். இந்த எண் விளையாட்டு இதோடு நின்றுவிடவில்லை. ஒவ்வொரு இசைக்கோர்வையிலும் ஒரு கீர்த்தனை (அல்லது பாடல்) இசைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தெரிவு செய்திருக்கும் கீர்த்தனை ஏதாவது இறைவன் மேலிருக்கும். அந்த இறைவனின் மூலமந்திரத்தின் அக்‌ஷரம் (ஒலி/எழுத்து) இந்த ஸ்வரங்களின் எண்ணிக்கையோடு ஒத்துப் போகுமாறு தெரிவு செய்திருக்கிறார்கள்.

உதாரணமாக இரண்டாம் இசைக்கோர்வையான ‘ஷடாக்‌ஷரி’யின் ஆதார எண் 6. அதனால் ‘சரவணபவ’ என்ற ஆறெழுத்து மூலமந்திரத்தைக் கொண்ட முருகனின் திருப்புகழை ஆறு ஸ்வரங்களைக் கொண்ட மந்தாரி ராகத்தில் வாசித்திருக்கிறார்கள். இந்த இசைக்கோர்வையின் தாளம் ஆறு தட்டுகளைக் கொண்ட ரூபக தாளம்.

ராகத்தின் அக்‌ஷரம் ஸ்வரம். தாளத்தின் அக்‌ஷரம் தட்டு. மந்திரத்தின் அக்‌ஷரம் (ஒலி) எழுத்து. இந்த மூன்று அக்‌ஷரங்களும் ஒன்றாகப் பொருந்தி வருமாறு பார்த்துக்கொண்டதுதான் இந்த ஆல்பத்தின் மைய இழை.

இனி இந்த ஆல்பத்திலுள்ள இசைக்கோர்வைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

noteபஞ்சாக்‌ஷரி: இந்த இசைக்கோர்வையின் ஆதார எண் ஐந்து. ஐந்து ஸ்வரங்களை மட்டும் கொண்ட ஐந்து ராகங்களை எடுத்துக்கொண்டு ராகமாலிகையாக வாசித்திருக்கிறார்கள். எடுத்துக்கொண்ட ராகங்கள் ரேவதி, சிவரஞ்சனி, கம்பீர நாட்டை, வாசந்தி, குந்தளவராளி. இந்த இசைக்கோர்வை ஐந்து தட்டுகளைக் கொண்ட கண்டசாபு தாளத்தில் அமைந்திருக்கிறது. ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மூலமந்திரத்தைக் கொண்ட சிவன் மீது பதஞ்சலி முனிவர் இயற்றிய ‘சம்பு நடனம்’ ஸ்லோகத்தைக் கீர்த்தனையாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கமான ராகமாலிகையைப் போலில்லாமல் இதில் மிகவும் சுவாரசியமாக முதலில் ஒரு வயலினில் ஒருவர் ஒரு ராகத்தை வாசிக்க, அதன் உச்சஸ்தாயியில் அடுத்தவர் அடுத்த ராகத்தை வாசிக்க ஆரம்பிக்கிறார். ஒரு சுவாரசியமான தொடர் ஓட்டம்போல இந்த ராகமாலிகை இருக்கிறது.

noteஷடாக்ஷரி: ஆதார எண் ஆறு. கடினமான தாளக்கட்டில் அமைந்த அருணகிரிநாதரின் திருப்புகழை ஆறு ஸ்வரங்கள் கொண்ட மந்தாரி ராகத்தில் கணேஷ் பாட, அவரைப் பின் தொடர்ந்த படியே வயலின் இசைக்கிறார் குமரேஷ். ஆறு தட்டுகளைக் கொண்ட ரூபக தாளம் இப்பாடலின் தாளம். முருகனின் மூலமந்திரம் ஆறு அக்‌ஷரங்களைக் கொண்ட ‘சரவணபவ’.

noteசப்தாக்‌ஷரி: ஆதார எண் ஏழு. ‘ராம் ராமாய நம்’ என்ற ஏழு அக்‌ஷரங்களைக் கொண்ட ராமன் இந்த இசைக்கோர்வையின் நாயகன். ‘பக்கலநிலபடி’ என்ற ராமன் மீது தியாகராஜர் இயற்றிய, ஏழு ஸ்வரங்களைக் கொண்ட மேளகர்த்தா ராகமான ‘கரஹரப்ரியா’வில் அதிகம் பரிசோதனைகளெல்லாம் செய்யாமல் சம்பிரதாயமான முறையில் அருமையாக வாசித்திருக்கிறார்கள். ஏழு தட்டுகளைக் கொண்ட மிஸ்ரசாபு தாளத்தில் அமைந்திருக்கிறது.

noteஅஷ்டாக்‌ஷரி: ஆதார எண் எட்டு. பாஷாங்க ராகமான எட்டு ஸ்வரங்களைக் கொண்ட பேகடா ராகத்தில் இந்த இசைக் கோர்வை அமைக்கப்பட்டிருக்கிறது. ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டு அக்‌ஷரங்களைக் கொண்ட (ஓம் என்பது ஒரே அக்‌ஷரமாகக் கருதப்படும்) மூலமந்திர நாயகன் நாராயணன் மேல் ’ஹரி நாராயண’ என்ற புரந்தர தாஸர் கீர்த்தனையை பஜனை முறையில் வாசித்திருக்கிறார்கள். (கணேஷ் பாட, குமரேஷ் வயலின் இசைத்திருக்கிறார்). எட்டு தட்டுகளைக் கொண்ட ஆதி தாளத்தில் அமைந்திருக்கிறது.

noteநவாக்‌ஷரி: இந்த ஆல்பத்தின் முக்கியமான இசைக்கோர்வை இதுதான். ராகம்-தானம்-பல்லவி அமைப்பில் அமைந்திருக்கிறது இந்த இசைக்கோர்வை. ஆதார எண் ஒன்பது. ஒன்பது ஸ்வரங்களைக் கொண்ட நவரத்ன பேஹாக் ராகத்தை விரிவாகவும், வெகு அருமையாகவும் அலசியிருக்கிறார்கள் சகோதரர்கள். கணேஷ்-குமரேஷின் ‘ராகப்ரவாஹம்’ படைப்புகளைக் கேட்டவர்களுக்கு இந்த இசைக்கோர்வையையும் அதே வடிவமைப்பில் இவர்கள் வழங்கியிருப்பது புரியும். மேல்ஸ்தாயிப் பிரயோகங்களின் போது இரண்டு வயலின்களும் வெகு அழகான ஹார்மோனியில் இருப்பது ஒரு வயலின் டூயட் தரக்கூடிய பேரானந்தத்தைத் தருகிறது. மிகவும் கடினமான ஒன்பது தட்டுகளைக் கொண்ட ‘கண்ட ஜாதி த்ரிபுட தாளத்தில்’ அமைந்திருக்கிறது இந்த இசைக்கோர்வை. மிருதங்கம் N.ராமகிருஷ்ணன், கடம் S.V.ரமணி இருவரும் வெகு சிறப்பாக வாசித்திருக்கிறார்கள்.

ஒன்பது அக்‌ஷரங்களைக் கொண்ட மூலமந்திரத்தைக் கொண்ட சண்டி தேவியின் ‘மஹிஷாஸுர மர்தினி மாம் பாஹி சண்டிகே’ என்ற சுலோகத்தைப் பல்லவியாக வாசித்திருக்கிறார்கள். பல்லவியின் ஸ்வரப்ரஸ்தானங்கள் சதுஸ்ரம், கண்டம், திஸ்ரம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து நடைகளிலும் வாசிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆல்பத்தைக் குறித்து கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ரசனையுடைய என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ‘இதில் என்னப் புதுமை இருக்கிறது? இதை விடக் கடினமான விஷயங்களை ஏற்கனவே செய்திருக்கிறார்கள்’ என்றார்.

இன்றைய கர்நாடக சங்கீதம் கச்சேரிகளால் உருவகப்படுத்தப்படுவது. 1900-களுக்கு முன் வரை பல கச்சேரிகள் ராகம்-தானம்-பல்லவியில் ஆரம்பித்திருக்கின்றன. அதை மாற்றி கர்நாடக சங்கீதத்தின் பல பரிமாணங்களும் வெளிப்படும் இன்றைய கச்சேரி வடிவத்தை அமைத்தவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். அதுவே மேடைக் கச்சேரிகளுக்கான ஒரு சிறந்த ஃபார்முலாவாக இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட ஆல்பங்கள் வெளியாகும்போது அதில் பல பரிசோதனைகளும் நடைபெறுவதே நவீன ஊடகத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய பெரிய லாபமாக இருக்க முடியும்.

இப்படிப்பட்ட மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஆல்பங்கள் கர்நாடக சங்கீதத்தின் பல பரிமாணங்களையும் வெளிக்கொண்டுவரும். தாளக்கணக்குகளில் அறிமுகமில்லாத ஒரு ஆரம்ப நிலை ரசிகருக்கு ஆறு வெவ்வேறு தாளங்களைக் குறித்த சிறப்பான புரிதலை அக்‌ஷரம் தரும். நம் இந்திய மரபிசையின் தாளங்கள் பல நுட்பங்களை உள்ளடக்கியது. இந்திய இசையை முதன் முதலில் கேட்க நேரிடும் எந்த ரசிகரையும் ஒரு கணம் திகைக்க வைக்கும் தன்மையுடயவை இவை. கடினமான கணித நுட்பங்களின் ஆச்சரியங்களை உள்ளடக்கிய தாளக்கணக்குகளை நாம் வெகு எளிதாகக் கடந்து வந்திருக்கிறோம். ஐந்து வெவ்வேறு தாள நடைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கூர்ந்து கவனிக்கும் எவரையும் அது நம் மரபிசை சேகரித்து வைத்திருக்கும் பல நூற்றாண்டு கால இசை அறிவைக் குறித்ததொரு மன எழுச்சிக்கு ஆட்படுத்தி விடும்.

தன்னுடைய ராகப்ரவாஹம் குறித்துக் கூறும்போது ‘இது ஒரு சமகாலத்திய கர்நாடக சங்கீத (Contemporary Carnatic) முயற்சி. வாத்தியக் கச்சேரிகள் மேலும் சிறப்பாகவும், உத்வேகத்துடனும் அமைவதற்கான புதிய உத்திகளை நாங்கள் கையாண்டிருக்கிறோம். அவ்வளவே! நம் மரபிசைக் கட்டமைப்புக்குள் புதிய வெளிப்பாட்டுக்கான ஏராளமான சாத்தியங்கள் இருக்கின்றன. கொஞ்சம் உள்ளார்ந்து நோக்கினால் அப்படிப்பட்ட பொக்கிஷங்கள் நமக்குக் கிட்டும்’ என்று கூறுகிறார் கணேஷ். அப்படி பொக்கிஷம் தேடும் முயற்சியில் அக்‌ஷரமும் ஒன்று.

Times Music வெளியீடாக வந்திருக்கும் அக்‌ஷரம் ஆல்பம் இந்தியாவின் அனைத்து முன்னணி இசைக்கூடங்களிலும் கிடைக்கிறது.


One Reply to “இசையும், கணிதமும் இணையும் புள்ளி – அக்‌ஷரம்”

Comments are closed.