முடைநாற்றம் வீசக்கூடிய ஒரு குப்பைத் தொட்டியாய் தன் மனம் மாறிவிட்டது என்று அவன் மிகவும் வருந்தினான். தொடக்க வரி எழுதுவதற்கே இவ்வளவு யோசிப்புக் குப்பைகள் சேரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இன்று, நாளை, நாளை மறுநாள் என்று மூன்றாண்டு குப்பைகள் சேர்ந்துவிட்டதே எனப் புலம்பலாய் யோசித்தான். பயன்படுத்தாத வரிகள் எது என்று முன்பே தெரியாதபட்சத்தில் பூக்களை, பூச்சிகளை, பறவைகளை, செடி கொடிகளை வைத்து எழுதுவது தவறு என்கிற முடிவும் எடுத்தான். அவை எளிதில் அழுகி நாற்றம் கொடுக்கின்றன என்பது அவன் எண்ணம்.
பொருத்தமான வரி கிடைக்கிற வரை யோசித்த மற்ற வரிகளை அப்படியே வைத்திருக்கிற பழக்கத்தை விட்டுத் தொலைக்க முடியாததற்காகத் தன் மீதே அவனுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டது. ஆபாசமாகக் கடிந்துகொண்டான். சேர்ந்திருக்கிற அழுகின குப்பை, மனம் முழுவதும் நிறைந்து நாறுவதையே தாங்க முடியவில்லை. உடல்முழுவதும் நிறைந்து விட்டால், என்ன செய்வதென யோசிக்கிறபோதே குமட்டியது. மூக்கைப் பொத்தினால் போகிற நாற்றம் இது இல்லையென அவனுக்குத் தெரியும். வேறு வழிகள் யோசித்தான்.
தோட்டத்தில் உலவினான். மல்லிகையை எடுத்து முகர்ந்தான். வாசனைத் திரவியங்கள் கலந்து குளித்தான். ஏலக்காய் மென்று விழுங்கினான். வாசனைப் புகையிலையோடு வெற்றிலைப் போட்டான். நாற்றம் குறையவே இல்லை. கொஞ்சம் அறிவுப்பூர்வமாய் யோசித்துப் புத்தகங்களில் மூழ்க எண்ணினான். கையில் சிக்கிய புத்தகங்கள் எல்லாம் குப்பைப் புத்தகங்களாகவே இருந்தன. மேலும் குப்பைகள் அதிகரிக்க வேண்டாம் என்று புத்தக யோசனையைக் கைவிட்டான். தியானம் செய்ய கண்களை மூடினான். கண்கள் திறந்திருந்த நேரத்தைவிட இப்போது மன நாற்றம் அதிகமாகவே இருந்தது. விட்டால்போதுமென விழித்தான். கண் சிமிட்டவும் தயங்கினான். அதற்கு மேல் வழி தெரியவில்லை.
காகிதங்களில் எழுதுகிற பழக்கம் தனக்கு விட்டுப்போனதற்காகக் கொஞ்சம் ஆறுதல்பட்டுக் கொண்டான். ஒருவேளை தொடர்ந்திருந்தால் உலகின் மிகப்பெரிய குப்பைத் தொட்டியாகத் தன் வீடு மாறியிருக்கும் என நினைத்து வெறுப்புடன் இறுக்கமாகச் சிரிக்கத் தொடங்கினான். உடனே அவசர அவசரமாகச் சிரிப்பதை நிறுத்தினான். அந்தச் சிரிப்பின் வழியேயும் தன் சுவாசக் காற்றின் வழியேயும் நாற்றம் வெளியேறி விடுமோ என்கிற சந்தேகம் வந்தது. அப்படி வெளியேறினால், உலகில் உள்ள கெட்ட நாற்றங்களை எல்லாம்விட கேடுகெட்ட நாற்றமாக இது முகரப்படுமோ? விஷவாயு தாக்கப்பட்டதுபோல யாரேனும் இறந்துபோக நேரிடுமோ? நாற்றத்தால் கொலை செய்தவன் எனக் கைது செய்யப்படுவோமோ? என்று மிரட்சியுடன் நினைத்துப் பார்த்தான். சிறிது நேர நிதானத்துக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தான். இனிமேல் இந்த அழுகின குப்பைகளை விட்டுவைக்கக் கூடாது. துப்புரவு செய்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டினான். வேறொரு தொடக்க வரிக்காக அவன் மூலையிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கட்டும்… அவனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
முற்றுநட்சத்திரம் என்று ஒன்று காணமுடியாமல் நீண்டுகொண்டே போகிற வான் பக்கம்போல அவன் எழுத்தின் பெருமையையும் அவற்றால் அவன் அடைந்த புகழ்ச்சியையும் இடைவிடாமல் எழுதிக்கொண்டே போகலாம். (முற்றுநட்சத்திரம் – அவனிடமிருந்து திருடிய வார்த்தை) சோர்வைக் கொடுத்துவிடும் என்பதால் உங்களுக்குத் தெரிந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் இருக்கும் சிறப்புகளையெல்லாம் தவிர்த்துவிட்டு மிகச் சிலவற்றை மட்டும் இங்கே சொல்கிறேன். ஆனால் அவன் பெயர் மட்டும் வேண்டாம். சிறுமைப்பட்டு விடக்கூடாது என்பதற்குத்தானே அவனே வேறொரு தொடக்கவரியைத் தேடுகிறான்.
எந்த இலக்கிய விமர்சகர்களும், சக எழுத்தாளர்களும்கூட அவன் எழுத்தின் பலவீனங்களை வரையறுத்துச் சொல்லியதில்லை. விமர்சிக்கப்பட முடியாத நிலை என்பதைவிட அவன் எழுத்தின் தாக்கம் எல்லோர் படைப்புகளிலும் ஏதோ ஒருவகையில் இருப்பதால் இருக்கலாம். ஆனால், விமர்சனமாக அல்லாமல் எல்லோரும் ஒன்று மட்டும் சொல்வார்கள். கவிதையில் மட்டும் அதிக ஆளுமை செலுத்துகிறான் என்பார்கள். புகழ்பெற்ற அவனுடைய நாவல்கள் திரைப்படங்களானபோது வெறிபிடித்த அவன் ஆர்வலர் கூட்டத்தால் வரலாறு காணாத வெற்றிபெற்றிருக்கிறது. கதாநாயகர்களுக்கு நிகராக அவனும் திரையரங்கு வாயிலில் நிமிர்ந்து நின்ற மரப்பலகையில் குனிந்து நின்று சிரித்திருக்கிறான். மறக்காமல் கையில் புத்தகம் எடுத்துப் போயிருந்தான். அவனுடைய எழுத்துப்பிச்சையில் எழுத வந்ததாகச் சொல்லிக்கொண்ட ஐந்து எழுத்தாளர்கள் மரப்பலகையில் அவன் சிரித்து நின்ற இடத்தில் பொதுமக்களைத் திரட்டி அவர்கள் எழுதிய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் மத்தியில் அவனுக்கு எப்போதுமே ராஜமரியாதைதான். ஆர்வலர் கூட்டம் அவனுக்குத் தினமும் அதிகரித்து வருவதைக் கண்டு இடைவிடாத பயத்துடனே அவனை அவர்கள் அணுகினார்கள். புதிதாக ஏதாவது சட்டம் கொண்டு வருவதாக இருந்தாலும், நிதி நிலைஅறிக்கை தாக்கல் செய்வதாக இருந்தாலும் ஆளுங்கட்சியினர் முதலில் அவனைத்தான் சந்தித்தனர். ஆளுங்கட்சியை எதிர்த்து எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்துவதாக இருந்தாலும் முதலில் அவனைத்தான் சந்தித்தனர். ‘கருத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருங்கள் அதுபோதும்’ என்பதுதான் அவர்களுடைய சந்திப்பின்போது அவனிடம் வைக்கப்படும் முக்கியமான கோரிக்கை. மாறான கருத்துச் சொல்லி அவனது ஆர்வலர்களால் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்பது அவர்கள் பயம். அரசியல் விவகாரங்களில் அவனும் தெளிவான கருத்து இதுவரை சொன்னதாகத் தெரியவில்லை. அப்படிக் கருத்துச் சொல்லாத அளவிற்கு அவனை ஊமையாக்கியது அரசியல்வாதிகளோடு வரும் பெட்டிகள் என்பார்கள் எதையும் ஊடுருவிப் பார்த்துச் சொல்லும் சில பொதுநல விரும்பிகள். அதையும் உறுதியாய் சொல்ல மாட்டார்கள். சொல்லக் கேள்வி என்பார்கள்.
சொல்லக் கேட்ட இடத்திலேயே இதற்கு எதிர்மறையான விளக்கப் பதிலும் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். அதை மட்டும் வெளியில் சொல்லமாட்டார்கள். அவன் படைப்புகளில் அதிகம் வாசிக்கப்படாத நாவல் ஒன்றுக்கு மிகப்பெரிய விருது கிடைத்தது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த விருது பெற சர்வதேச அளவில் பல எழுத்தாளர்கள் முதுகுசொறிந்து பார்த்திருக்கிறார்கள். ஏக்க எச்சில் ஒழுகி அதில் நனைந்துபோகத்தான் அவர்களால் முடிந்தது. ஆனால் அதே விருது அவனுக்குக் கொடுக்கப்பட்டபோது வாங்க மறுத்துவிட்டான். கவிதைத் தொகுப்புக்குக் கொடுக்காமல் நாவலுக்குக் கொடுத்ததால்தான் அவன் வாங்கவில்லை என்றே முதலில் எல்லோரும் யூகம் தெரிவித்தார்கள்.
“வருடத்தின் புள்ளியிட்ட இடங்களை நிரப்புவது போன்றதாகிவிட்டன கொடுக்கப்படும் விருதுகள். வருடத்தின் கருணையை நான் எதிர்பார்க்கவில்லை” – என்று வாங்காததற்கான காரணத்தைச் சொல்லி விளக்க அறிக்கை வாசித்தான். “மேடையில் பேசுகிறவனின் பேச்சை நிறுத்துவதற்குக் கைதட்ட தொடங்கிவிடுகிற கூட்டத்தைப்போல ஒருவனின் எழுத்தை முடக்கவேண்டும் என்று நினைத்தால் உடனே அவனுக்கு விருது கொடுத்துவிடுகிறார்கள். விருதுக்காகவே இத்தனை காலமும் எழுதி வந்ததுபோல எழுத்தாளர்களும் எழுதுவதை விட்டுவிடுகிறார்கள்” என்று நெருங்கிய நண்பர்களிடம் வேறொரு விளக்கும் சொல்லிச் சிரித்தான். பலகோடி ரூபாய் விருதையே வாங்க மறுத்ததையெல்லாம் வைத்து பார்க்கும்போது பெட்டிகளுக்காக அரசியல்வாதிகளுக்குப் பெட்டிப்பாம்பாய் அவன் இருக்க வாய்ப்பே இல்லை என்றே தோன்றுகிறது. இப்போது அவசியமில்லாத இந்த ஆராய்ச்சியை விட்டுவிடுவோம். அவனின் அதிஅற்புதமான இரண்டு தனித்திறன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒன்று: புத்தகம் படிக்கிறபோது ஒவ்வொரு பக்கமாகக் கிழித்துப் போட்டுக்கொண்டே வருவான். புதிதாகப் பார்ப்பவர்கள் அவனுக்கு மனச்சிதைவு நோய் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படியில்லை. கிழித்துப் போட்ட பக்கங்கள் எல்லாம் அவன் மனதில் அச்சாகிவிட்டது என்று அர்த்தம். எத்தனை வருடங்களுக்குப் பிறகு கேட்டாலும் ஒரு வரி தவறாமல் சொல்வான். அதற்காகப் புத்தகத்தைக் கிழித்துப் போட வேண்டுமா? என்று யாரும் அவனை இதுவரை கேட்டதில்லை.
இரண்டு: அதிகாலையில் நீண்ட வராந்தாவில் நடைப் பயிற்சி செய்வான். அந்த நேரத்தில்தான் நாவல் எழுதவும் செய்வான். இரண்டும் ஒரே நேரத்தில் எப்படிச் செய்யமுடியும் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். வராந்தா மையத்தில் ஓர் ஒலிப்பதிவு கருவி இருக்கும். மற்றோர் ஒலிப்பதிவு கருவியாய் அவன் நடந்துகொண்டே நாவலைச் சொல்வான். நூற்றி அறுபது பக்க நாவலாக இருந்தால் ஒரே முயற்சியாக மூன்று மணிநேரத்தில் சொல்லி முடித்துவிடுவான். மிக அதிகமான பக்கங்களாக இருந்தால், களைப்பாகிறவரை சொல்லிக்கொண்டே இருப்பான். முடியாதபட்சத்தில் அடுத்தடுத்த நாள்கள் என்று தொடர்வான். அப்படி எழுதி புகழ்பெற்றவைதான் அவனின் எல்லாப் படைப்புகளும். ஏழாயிரம் பக்கங்கள் கொண்ட நாவலை அவன் எழுதினபோதும் இதே முறையைத்தான் கடைபிடித்தான். அப்போது அவன் சந்தித்த ஒரே பிரச்சினை, ஒலிப்பதிவு கருவியிலிருந்து பிரதியெடுக்கத் திணறி வேலையை விட்டு அவனின் மூன்று உதவியாளர்கள் ஓடிவிட்டார்கள் என்பதுதான்.
நடந்துகொண்டே நாவலைச் சொல்கிறவன் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் வேறொரு தொடக்க வரி எழுதமுடியாமல் தவிப்பதும் உங்களுக்கு வியப்பாகவே இருக்கும். முடைநாற்றம் தாங்க முடியாமலும் தொடக்க வரியைத் தேடுகிற எண்ணத்துடனும், பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணிகள்போல தலையணையால் முகத்தை மூடிக்கொண்டு படுக்கையில் இங்கும்அங்குமாக உருள்கிற அவனிடம் இப்போது கேட்டாலும் ஒரே நேரத்தில் பத்து நாவல்களுக்கானத் தொடக்க வரியைச் சொல்வான். அதுவும் சுத்தியல் எடுத்து திடீரென தலையில் அடித்ததுபோன்று எப்போதும் எழுதுவானே அதைப்போலவே சொல்வான். ஆனால் தன் சுயசரிதைக்கான வேறொரு தொடக்க வரியைத் தேடுவதில்தான் அவனுக்குக் குப்பையைச் சேர்க்கிற சங்கடமிருக்கிறது.
சுயசரிதை எழுதவேண்டும் என்று திட்டமிட்ட உடனே நூற்றுக்கு மேற்பட்டோரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களைப் புரட்டினான். ஒரு சிலவற்றைத் தவிர எல்லாப் புத்தகங்களிலும் பொய்மை அதிகம் கலந்திருப்பதாக அவனுக்குச் சந்தேகம் வந்தது. குறிப்பாக வளர் பருவத்தை விவரிக்கிறபோது அதிகப் பொய்மை கலக்கிறார்கள் என்று எண்ணினான். ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்கிற பழமொழியைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதித்துவிடவேண்டும் என்கிற அளவுக்குக் கோபப்பட்டான். அறிவுச் சீலர், அன்புச் சீலர், தைரியச் சீலர் என்று சாதனையாளர்கள் பிறந்ததிலிருந்தே அவர்கள் பக்கத்திலிருந்து பார்த்ததுபோலவே எழுதுகிறார்களே கயவர்கள் என்றான். பிறகு ஏகப்பட்டோரின் சுயசரிதைகளையும் வாங்கிப் பார்த்தான். வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களுக்கு நிகராகத் தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்கிற அளவுக்குத் தைரியம் இல்லாவிட்டாலும் பிறந்த குழந்தை அறியாமலேயே அவ்வப்போது சிரித்துக்கொள்வதுபோல பக்கத்துக்குப் பக்கம் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதாக நினைத்தான். இதைப்போல் அல்லாமல் உண்மையான நிகழ்வுகளைக் கொண்டதாகவே தன் சுயசரிதை இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்தான். அப்படி அவன் உறுதி எடுத்ததற்கு இன்னொரு மிக முக்கியமானக் காரணமும் இருக்கிறது.
வார்த்தை ஒவ்வாமை நோய் என்று அவனுக்கு ஒரு நோய் இருக்கிறது. ஆரம்பத்தில் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவனுக்கு இந்த வார்த்தை ஒவ்வாமை நோய் தொற்றியது. ‘ஆகவே; ஏனென்றால்’ போன்ற பெரும்பாலான இணைப்புச் சொற்களைச் சேர்க்காமல் எழுதவேண்டும் என்று வரையறுத்து, பெரும்பாலும் அவை வராமல்தான் எழுதி வருகிறான். இதில் – ‘ஆனால்’ என்கிற வார்த்தையைக் கவிதையில் மட்டுமே வராமல் விரட்ட முடிந்தது. கட்டுரைகள், கதைகள் எழுதுகிறபோது அவனை அது பழிவாங்கியது. எப்படியாவது அவனை ஏமாற்றிவிட்டு சரியான வரிசையில் வந்து நின்றது. வரிசையிலிருந்து அதை இழுத்துஇழுத்துப் பார்ப்பான். ‘ஆனால்’, அதை அசைக்கவே முடியாது. ‘போல’ என்கிற வார்த்தையையும் தூர எறிந்துவிடவேண்டும் என்றுதான் முதலில் தீர்மானித்திருந்தான். ஆனால் அந்த வார்த்தை மீதுதான் அவனுக்குப் போகப்போக அதிகக் காதல் ஏற்பட்டது. ‘போல’- என்கிற வார்த்தைக்கு முன்னால் பொருந்தாத உவமையைச் சேர்த்துச் சொன்னாலும் படிக்கிறவன் தடுக்கி விழுந்துவிடுகிறான் என்பது அவனுக்குச் சந்தோஷமாகவே இருந்தது. சூரியனிலிருந்து நெருப்பை அளவுக்கு அதிகமாகவே காமத்திற்கு எடுத்திருக்கிறான். நிலவிலிருந்து குளிர்ச்சியை வண்டிவண்டியாய் பெண்கள் முகத்திற்கு கடத்தியிருக்கிறான். விண்மீன்களைப் பறித்து இஷ்டப்பட்டவர்களுக்கு எல்லாம் பரிசாகக் கொடுத்திருக்கிறான். ஏதோ வானம் அவனுக்கு மட்டுமே சொந்தம் என்கிற நினைப்பிலேயே கீரையை உருவுவதுபோல உவமையை உருவிக்கொண்டிருந்தான். கடிதம் எழுதுகிறவன்கூட வானத்திலிருந்து உவமையைக் களவாடுகிறான் எனத் தெளிந்துகொண்ட பிறகு அதன் மீதும் அவனுக்கு வந்துவிட்டது ஒவ்வாமை. ‘திறந்து கிடக்கிற விபச்சாரி’ – என்று கோபத்தில் வானத்தைத் திட்டினான். உவமையோடு ‘போல’-வுக்கும் சேர்த்து தடைவிதித்துவிட்டான்.இப்போது அவன் கண்ணை அதிகம் உறுத்துவது “யை’, “க்கு’ – போன்ற இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை உருபுகள். கவிதைகளில் கட்டாயம் அவற்றைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுகிறான்.
வார்த்தை ஒவ்வாமை நோய் முற்றியிருந்த நிலையில் பொய்மை தோற்றம் கொடுத்த சுயசரிதைகள் வேறு அவனுக்கு நோயை அதிகப்படுத்தியது. அது படைப்பு ஒவ்வாமை நோயாக மாறியது. தன் படைப்புகள் அனைத்தையும் மறுபார்வைப் பார்த்தான். புகழ்பெற்ற அவன் படைப்புகளிலெல்லாம் கூட ஏமாற்று வேலைப்பாடுகள் செய்திருப்பதாக உணர்ந்தான். வழவழவென்று ஒன்றின் மீது ஒன்றாக உருள்கிற பாம்புக் குட்டிகள்போல உண்மையான ஒரு படைப்பின் மீது மிகைப்படுத்தல் எனும் பாம்புகள் உருண்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஒரு கதையின் காட்சியை, இன்னொரு கதையின் காட்சி பலாத்காரம் செய்திருப்பதாகத் தோன்றியது. கொடுத்த அதிர்ச்சி முடிவுகள் வயதான கிழவரின் செயற்கைப் பற்களின் சிரிப்பாகச் சிரித்தன.
‘உலக நோபல் எழுத்தாளர்கள் எல்லாம் ஒன்று திரண்டு வந்து ‘நீங்கள் எழுதுகிற காலம்வரை நாங்கள் எழுதமாட்டோம். உலகத்தின் ஒரே எழுத்தாளர் நீங்கள்தான்’ – என்று சொன்னாலும் ‘என் சுயசரிதையில் ஒரு பாம்பும் உருளாது. ஒரு பலாத்காரமும் நடக்காது. ஒரு செயற்கைப் பல்லும் சிரிக்காது’ என்று ‘உண்மை… உண்மை… உண்மை…’ என்றே யோசித்தான். அப்போது அவனுக்குச் சரியாய் பொருந்துகிற வகையில் கிடைத்த வரி… ‘கழிப்பறையில் இருந்து விழுந்தவன் நான்.’ இந்த வரியிலிருந்து அப்படியே சுயசரிதையைத் தொடர முடியுமா?
வெறுக்கத்தக்க வகையில் ஆரம்பத்திலிருந்தவை எல்லாமே பிறகு விருப்பத்திற்குட்பட்டவையாய் மாறிப் போனதை அவன் வாழ்வில் நிறையப் பார்த்திருக்கிறான். அதில் ஒன்று கழிப்பறை. சோற்றுக்கு வழியில்லாமல் கிராமத்திலிருந்து நகரத்துக்கு ஓடிவந்து பரதேசியாய் அலைந்து கொண்டிருந்தபோது மாநகராட்சி கழிப்பறைகளுக்குள் நுழைவதற்கே அருவருப்பு அடைந்திருக்கிறான். சவப்பெட்டியில் படுக்க வைத்து எழுப்புவதுபோல உள்ளே போய் வருவதற்கு பயமாகயிருந்திருக்கிறது. உட்காருகையில் திடீரென கழிவு நீருக்கடியிலிருந்து பாம்பு வந்து குத்துமோவென வியர்த்திருக்கிறது. உள்ளே போய்விட்டு வெளியில் வருகையில் யாராவது பார்த்துவிடுவார்களோ என வெட்கப்பட்டு ஏதோ குற்றகரமான காரியத்தைச் செய்துவிட்டு வருவதுபோல விறுவிறுவென ஓடிவிடுவான்.
பிடிக்காமல் போனால் விட்டு விலகிப் போக முடிகிற காரியமா இது? நாட்கள் நகர நகர எவ்வளவு பெரிய கவலையும் கரைந்து காணாமல் போவதுபோல கழிப்பறை மீதான பதற்றமும் அருவருப்பும் இல்லாமல் போனது. கழிப்பறையிலேயே பள்ளிகொள்ளத் தொடங்கினான். யாருமறியாத இன்னோர் உலகத்தை கழிப்பறையில் கண்டெடுத்தான். கழிப்பறையில் இருந்தபடியே நதிக்கரையில் நடந்து சென்று தொட்டால்சிணுங்கி செடி பறித்தான். தென்னந்தோப்புகளில் கள் இறக்கினான். மலையில் சூரிய உதயம் பார்த்தான். கடற்கரையில் நண்டின் வரிகளைப் படித்தான். ஆப்பிரிக்கக் காடுகளில் யானைகளை விரட்டி விளையாடினான்…
கழிப்பறை எப்படிப் பிடிக்காமல் இருந்து பிடித்தமாகிப் போனதோ அப்படித்தான் அவனுக்குக் கழிப்பறைக் குறிப்புகளும். கரியால் எழுதப்பட்டிருந்த ஆபாசக் குறிப்புகளைப் பதற்றத்தோடு படித்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் நடுக்கத்தோடு கரியைக் கையில் எடுக்கத் தொடங்கினான். துகள்துகளான கரித்துண்டுகளைப் பையில் போட்டுச் சென்று முன்னோடிகளின் குறிப்புகளை அங்கங்கே கழிப்பறையில் படியெடுத்தான். விதவிதக் குறிகளை வெவ்வேறு ஊருக்குப் பேருந்து பிடித்துச் சென்று வரைந்து வந்தான். திருட்டுத்தனமாய் பெண்கள் கழிப்பறைகளுக்குள் நுழைந்து அங்கும் படியெடுத்தான். கற்பனையில் காதலித்த வெளிநாட்டு, உள்நாட்டு உள்ளூர் அழகிகளை கதவு தட்டப்படுகிற வரை கரித்துண்டுகளால் சல்லாபித்தான்.
வக்கிரத்தின் மீதான வெறி அதிகரிக்க அதிகரிக்க முன்னோடிகளின் குறிப்புகளைப் படியெடுக்காமல் சொந்தக் கற்பனை நாயை ஓட்டத் தொடங்கினான். இந்தக் கட்டத்தில் அவனுக்கு சிறுமாறுதல் ஏற்பட்டது. சொந்தமாய் எழுதியவற்றுக்கு வரவேற்பு எதிர்பார்த்தான்.
கழிப்பறையிலிருந்து சற்று தூரத்தில் நின்று கொண்டான். கீழே கிடக்கிற காகிதங்களை எடுத்துப் படிப்பது போல நடித்துக் கொண்டே வெளியில் வருகிறவர்களின் முகப்பாவங்களைப் படிக்கத் தொடங்கினான். பாராட்டுகிற முகங்களின் பாவனைகளை அவனால் மட்டுமே படிக்க முடிந்தது. ‘சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இங்கு வருகிறவர்களுக்கு…,…,…, சகலமும் செய்வேன்’ என்று ஒருமுறை எழுதி வைத்திருந்தான். சனிக்கிழமைதோறும் அமோக வரவேற்புக் கிடைத்தது. ஏமாந்து போகிற முகங்களைப் பார்த்து வயிறு முட்டச் சிரித்தான். வரவேற்பு அதிகரிக்க அதிகரிக்க நிறைய நேரம் கற்பனை நாயை ஓட்டத் தொடங்கினான். புதுப்புது வாசகங்களால் புதுப்புது முகங்களை அலைக்கழித்தான். வரவேற்பு கிடைக்காத நாள்களில் அம்மணமாய் நிற்பதுபோல அவதிப்பட்டான். கழிப்பறைக்கு யாரும் வராத நேரத்தில் நடிப்பதற்காக எடுத்தக் காகிதத்தில் தொய்ந்து போனான். ஒருநாள் அவன் படித்த காகிதத்திலிருந்த சிறு படைப்பு அவனை அடியோடு மாற்றி அமைத்தது. அப்பட்டமாய் அவன் எழுதியிருந்ததையெல்லாம் எவனோ பூசி மெழுகி எழுதியிருந்தான். ‘அட… இவ்வளவுதானா… இவ்வளவுதானா…’ நாகரிக வரவேற்பை எதிர்பார்த்து கரித்துண்டு சுவற்றிலிருந்து காகிதத்தில் ஒவ்வோர் எழுத்தாக அடி எடுத்து வைத்தது.
இந்தக் கழிப்பறைக் குறிப்புகளின் கதையை அப்படியே சுயசரிதையில் சொல்ல விரும்புகிறான். சமூகத்தின் பார்வை மீது அவனுக்குப் பயம் வந்தது. ஒருவேளை கழிப்பறைக் குறிப்புகளின் கதையை எழுதினால் தன்னுடைய எல்லாப் படைப்புகளுமே வக்கிரப் படைப்புகளாகவே மறுபார்வை பார்க்கப்படுமோ என்று நினைத்தான். எந்தக் கழிப்பறையில் என்ன குறிப்புகளிருந்தாலும் அவை தனதாகவே நினைக்கப்படுமோ என்று வெட்கப்பட்டான். பாராட்டு மழை பொழிந்தவர்கள் பரிகாசம் கலந்த எச்சில் மழை பொழிவார்களோ என்று தோன்றியது. யாரும் பொழியாமலேயே முகத்தைத் துடைத்துக்கொண்டான்.
வெவ்வேறு இடங்களுக்குச் சென்று கழிப்பறைகளில் எழுதுகிற பழக்கத்தை விட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், பல படைப்புகளுக்கான கற்பனையை அவன் கழிப்பறையிலிருந்தே பெற்று வந்திருக்கிறான். பல கோடி ரூபாய் விருது பெற மறுத்தானே அந்த நாவலுக்கான கருவே அவன் அங்கிருந்து பெற்றதுதான். எழுத சிரமமான படைப்பாக இருந்தால் கழிப்பறையிலேயே ஒருமுறை எழுதிப் பார்ப்பான். ஆனால் கரித்துண்டுகளால் இல்லை. கண்களால் எழுதுவான். வழவழப்பான அந்தச் சுவற்றில் எழுதுவதை அவனாலேயே படிக்க முடியும். மற்றவர் கண்களுக்குத் அந்த எழுத்துகள் தெரியாது. வழவழக் கற்கள் பதித்த கழிப்பறை எனத் தெரியாமலேயே நுழைந்துவிட்டு எழுதமுடியாமல் போகிற ஏமாற்றத்தைப் போக்கிக்கொள்கிற வகையில் அப்போதே பழகிக்கொண்ட கலை இது.
சுயசரிதை எழுதுவதற்குச் சிரமம் வந்தபோதுகூட கழிப்பறையிடம் போய் யோசனை கேட்டான். அடிக்காதக் குறையாக அவனை அது விரட்டியது. ”எத்தனை யோசனைகள்; எத்தனை கற்பனைகள்; எத்தனை சந்தோஷங்கள் தந்திருப்பேன். எத்தனை சந்தேகங்கள் தீர்த்திருப்பேன். துரோகி… என்னைப் பற்றி எழுதத் தயங்குகிறாயே… வெளியில் போ…” என்றது. அவமானத்தோடு வெளியேறினான். தன் புகழைத் தானே குழி தோண்டி புதைத்துக்கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தான். வேறொரு கதையைப் புனைந்து எழுத நினைத்தான்.
வரிந்து கட்டிக்கொண்டு உடனே அவனிடம் சண்டைக்கு வந்தது படைப்பு ஒவ்வாமை. அவன் படைப்புகளில் உள்ள ஏமாற்று வேலைப்பாடுகளின் பட்டியலைச் சத்தம்போட்டு படித்து அவன் தலையைப் பிடித்து அடித்தது. ஓடஓட உதைத்தது. அடி தாங்க முடியாமல் ஓடி கழிப்பறையிலேயே போய் விழுந்தான். கழிப்பறையின் கால்களைப் பிடித்துக் கெஞ்சலாய் அழுதான். தாய்மையில் கழிப்பறையின் முகம் பூரித்தது. கருணை பொழிய அவனைப் பார்த்தாள். அதேசமயம் தன் அடையாளத்தையும் அழித்துக்கொள்ள விரும்பாமல் தன் கற்பனைக் கதவுகளைச் சாத்திக் கொண்டு வெறும் யோசனை மட்டும் அவனுக்குச் சொன்னாள். “வேறு கதை புனை. ஆனால், ‘கழிப்பறையில் இருந்து விழுந்தவன் நான்’ என்பதற்கு நிகரானத் தொடக்க வரியாக நீ உணர வேண்டும்” என்றாள்.
அழுகின குப்பைகள் உடல் முழுவதும் நிறையத் தொடங்கின.