ஹாரிசன் பெர்ஜரான்

vonnegut
கர்ட் வானகட்

மெரிக்காவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கர்ட் வானகட் (Kurt Vonnegut) (1922-2007) எழுதிய சிறந்த சிறுகதைகளில் ஒன்று ஹாரிசன் பெர்ஜரான் (Harrison Bergeron). உலக மக்கள் அனைவரும் எல்லா விதங்களிலும் ஒரே அச்சில் வார்த்தவர்களாக இருக்க வேண்டுமென்ற கருத்தின் அபத்தத்தைத் தனக்கேயுரிய குரூர நகைச்சுவை கலந்து இக்கதையில் சொல்லியிருக்கிறார் வானகட். உலகெங்கும் மிகவும் பிரபலமாக விளங்கும் இந்த சிறுகதை பல அமெரிக்கப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களால் நாடகமாக வழங்கப்படுகிறது. இது ஒரு தொலைக்காட்சிப் படமாகவும் வெளியாகி பெரு வெற்றி பெற்றது. இந்த சிறுகதை ‘2081’ என்ற ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளிவந்து சியாட்டில் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. திரு.விஷ்வநாத் சங்கரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் இக்கதையின் ஆங்கில மூலத்தை இங்கே படிக்கலாம்.

ஆங்கில மூலம்: கர்ட் வானகட்

மொழிபெயர்ப்பு: விஷ்வநாத் சங்கர்

2081-ஆம் ஆண்டு. எல்லோரும் ஒருவழியாக முழுமுற்றான சமத்துவத்தை அடைந்து இருந்தனர். கடவுளின் முன்போ, சட்டத்தின் முன்போ மட்டுமே கட்டுப்பட்ட சமத்துவம் இல்லை அது. எல்லா நிலைகளிலும் அனைவரையும் முழுமையாக ஒருமைப்படுத்திய அதிசயம் அது. யாரும் யாரை விடவும் புத்திசாலியாக இல்லை, அழகாகவும் இல்லை. அவ்வளவு ஏன், எந்த ஒருவரும் மற்றவரை விட அதிக வலிமையும், சுறுசுறுப்பும் கூட கொண்டு இருக்கவில்லை. 211, 212, மற்றும் 213-ஆம் அரசியல் சட்ட மாற்றங்களும், அமெரிக்க சமத்துவத்துறை முகவர்களின் தொய்வில்லாத கண்காணிப்புமே இந்த பாரபட்சமற்ற நிலைக்குக் காரணங்கள் ஆகும்.

ஆனாலும் வாழ்க்கையின் சில விஷயங்கள் சரியாக இல்லாமல் இருந்தன… உதாரணமாக, வசந்தத்தை இன்னமும் தொடங்காமல் மக்களைக் குழப்பும் ஏப்ரல் மாதத்தைப் போல! அந்த வாட்டியெடுக்கும் குளிரான ஏப்ரல் மாதத்தில்தான் சமத்துவத்துறையின் ஆட்கள் ஹாரிசனைக் கொண்டு சென்றனர். ஹாரிசன் பெர்ஜரான் – ஜோர்ஜ் மற்றும் ஹேசல் பெர்ஜரானின் பதினான்கு வயது மகன்.

Harrison Bergeron ball chainஅது ஒரு துயரச் சம்பவம்தான். இருப்பினும் ஜோர்ஜ் மற்றும் ஹேசலால் அதைப் பற்றி அதிகமாக சிந்திக்க முடியவில்லை…கவலைப்பட முடியவில்லை. ஹேசல் சராசரியான மதிநுட்பம் கொண்டவள். அதனால் அவளால் எதைக் குறித்தும் ஆழமாகச் சிந்திக்க முடியாது. சிந்தித்தாலும் கனப் பொழுதில் மறந்து விடுவாள். ஜோர்ஜ் சராசரியை விட அறிவாளியாக இருந்த போதிலும், அவன் காதுகளில் மன ஊனத்திற்கான ஒரு சிறிய வானொலி பொறுத்தப் பட்டிருந்தது. சட்டப்படி அதை அவன் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். அந்த வானொலி அரசாங்க டிரான்ஸ்மிட்டருடன் இணைக்கப்பட்டிருந்தது. ஜோர்ஜைப் போன்ற புத்திசாலிகள் தங்கள் மூளையை நியாயமற்ற முறையில் உபயோகிக்க அனுமதிக்காத வண்ணம் அந்த டிரான்ஸ்மிட்டர் இருபது நொடிகளுக்கு ஒரு முறை சில கூர்மையான சத்தங்களை அனுப்பிக் கொண்டிருந்தது.

ஜோர்ஜும், ஹேசலும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த வேளை. ஹேசலின் கன்னங்களில் கண்ணீர்த் துளிகள். அதன் காரணத்தை அவள் மறந்திருந்த தருணத்தில்…திரையில் சில பெண்கள் பாலே நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

ஜோர்ஜின் தலையில் ஒரு ஓசை கேட்க, அபாய ஒலியைக் கேட்ட திருடனைப் போல அவன் எண்ணங்கள் சிதறிக் கொண்டு ஓடின.

“ரொம்ப நன்றாக இருக்கிறது இல்லையா இவர்கள் நடனம்?” என்றாள் ஹேசல்.

“என்ன?”

“இந்த பாலே ஆட்டம். அழகாக ஆடுகிறார்கள்”

“ஆமாம்” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான் ஜோர்ஜ். அவன் அந்த பாலே பெண்களை பற்றி சிந்திக்க தொடங்கினான். அவர்கள் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லையே? சுமார்தான். இது மாதிரி யாராலும் ஆடிவிட முடியும். அவர்கள் முதுகிலும், கழுத்திலும் சுமைகள் கட்டப்பட்டிருந்தன. முகங்கள் முகமூடிகளால் மறைக்கப்பட்டிருந்தன. அப்பப்பா! இப்படி அழகான முகங்களையும், இயல்பான அசைவுகளையும் மூட்டை கட்டி, பின் அபிநயம் பிடிக்கிறேன் என்றால் யாரால் ரசிக்க முடியும்? ஒருவேளை நடனப் பெண்கள் ஊனமாக்கப்பட்டிருக்கக் கூடாதோ என்று வினோதமாக யோசிக்க ஆரம்பித்தான். நீண்ட நேரமில்லை. அதற்குள் அடுத்த சத்தம் வந்து அவன் எண்ணங்களை அழித்து விட்டுப் போனது.

ஜோர்ஜ் நடுங்கினான். பாலே ஆடிய எட்டு பெண்களில் இருவர் நடுங்கினர். அவன் நடுக்கத்தைப் பார்த்த ஹேசல், “இப்போது என்ன சத்தம்?” என்றாள். அவளுக்கு இது போன்ற ஓசைகள் கேட்காது.

“யாரோ சுத்தியலால் கண்ணாடிப் பால் புட்டியை உடைப்பது மாதிரி ஒரு சத்தம்.”

“இது மாதிரி வித விதமான சத்தங்களைக் கேட்பது வேடிக்கையாக இருக்குமில்லையா? ” என்றாள். அவளுக்குக் கொஞ்சம் பொறாமை தான். “எப்படி எல்லாம் யோசித்து சத்தங்களை உருவாக்குகிறார்கள்?” -ஆச்சரியப்பட்டாள்.

“ம்ம்…”

2081 திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி
2081 திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி

“நான் மட்டும் சமத்துவத்துறை தலைமை அதிகாரியாக இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா?” என்று மீண்டும் தொடங்கினாள். சொல்லப் போனால், ஹேசல் தோற்றத்தில் சமத்துவத்துறை தலைமை அதிகாரி டயானா மூன் கலம்பெர்ஸின் அச்சு அசலாகவே இருப்பாள்.

“நான் மட்டும் டயானா மூன் கலம்பெர்ஸாக இருந்தால் ஒவ்வொரு ஞாயிறும் மணியோசையை வைப்பேன். நம் மதத்தை கௌரவித்த மாதிரி இருக்கும் அல்லவா?” என்று தொடர்ந்தாள்.

“வெறும் மணியோசை மட்டும் என்றால் என்னால் யோசிக்க முடியும்” என்றான்.

“நான் அதை ரொம்ப சத்தமாக வைப்பேன். என்னால் ஒரு நல்ல சமத்துவத்துறை தலைவியாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது”

“யாரால் தான் அப்படி இருக்க முடியாது?”

“சாதாரணத்தைப் பற்றி என்னை விட யாருக்கு அதிகம் தெரிந்திருக்க முடியும்?” என்றாள்.

“அது சரி” என்றான் ஜோர்ஜ். அவன் சிறையில் இருக்கும் தன் மகன் ஹாரிசனை பற்றி மெல்ல நினைக்கத் தொடங்கிய பொழுது, இருபத்தியொரு முறை துப்பாக்கி அவன் தலையில் சுட்டு அதை நிறுத்தியது.

“ஐயோ! அது ரொம்ப பயங்கரமாக இருந்ததா?” என்று அலறினாள் ஹேசல்.

ஆமாம். அது பயங்கரமான சத்தம் தான். ஜோர்ஜ் வெளிறிப் போய் நடுங்க, அவன் கண்களில் நீர் தளும்பிக் கொண்டிருந்தது. அந்த இரண்டு பாலே பெண்களும் தலையை பிடித்துக் கொண்டு மேடையில் சுருண்டு விழுந்தனர்.

“திடீரென்று நீ மிகவும் சோர்வாகத் தெரிகிறாய். நீ ஏன் கொஞ்ச நேரம் சோபாவில் சாய்ந்து கொண்டு, உன் ஊனப் பைகளைத் தலையணை மேல் வைத்து ஒய்வு எடுக்கக் கூடாது?” என்றாள் ஹேசல். ஜோர்ஜின் கழுத்தில் பூட்டப்பட்ட துணிப்பையை அவள் குறிப்பிட்டாள். அதில் நாற்பத்தியேழு பவுண்ட் எடையுள்ள ஈயப் பந்துகள் அடைக்கப்பட்டிருந்தன. “போய் ஓய்வெடு. கொஞ்ச நேரம் நீ எனக்கு சமமாக இல்லை என்றால் நான் வருத்தப்பட மாட்டேன்”.

“பரவாயில்லை…” ஜோர்ஜ் பையை தூக்கிய படியே சொன்னான். “இதை நான் இப்போதெல்லாம் கவனிப்பதேயில்லை. கிட்டத்தட்ட இது என் உடலின் ஒரு அங்கமாகி விட்டது”.

“நீ சில நாட்களாகவே ஓய்ந்து போய் களைப்பாக இருக்கிறாய்” என்றாள். “இந்த பையின் அடியில் சின்னதாய் ஒரு ஓட்டை போட்டு சில பந்துகளை எடுக்க எதாவது ஒரு வழி இருக்குமானால்…”

“என்ன விளையாடுகிறாயா? ஒவ்வொரு பந்துக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றும் இரண்டாயிரம் வெள்ளி அபராதம். அது புத்திசாலித்தனம் இல்லை.” என்று மறுத்தான் ஜோர்ஜ்.

“நீ வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பும்போது மட்டும் சிலவற்றை எடுத்தால் போதும். நீ இங்கே யாரோடும் போட்டியிடவில்லையே? தனியாக தானே இருக்கிறாய்”.

“நான் எடுக்க ஆரம்பித்தால், பின் அனைவரும் எடுத்து விடுவார்கள். பிறகு நாம் எல்லோரும் பழைய நாட்களுக்குப் போக வேண்டியது தான். எல்லோரும் எல்லோருடனும் போட்டி போட்டுக்கொண்டு, பொறாமைப் பட்டுக்கொண்டு… உனக்கு அதில் விருப்பமா?”

“இல்லவே இல்லை. அதை நான் வெறுக்கிறேன்”.

“அப்படி வா. சட்டத்தை மக்கள் ஏமாற்றத் தொடங்கும் போது சமுதாயம் என்ன ஆகும் என்று நினைக்கிறாய்?” என்று கேட்டான் ஜோர்ஜ்.

ஹேசல் பதிலை யோசிக்கையில், அவன் தலையில் சைரன் சத்தம் ஓடிக்கொண்டிருந்தது.

“சிதறிச் சின்னாபின்னமாகும்”

“எது?” – ஜார்ஜ் குழப்பத்துடன் கேட்டான்.

“சமுதாயம்”- ஹேசல் சந்தேகத்துடன் சொன்னாள். “அதைப் பற்றிதானே கேட்டாய்?”

“இருக்கலாம். யாருக்குத் தெரியும்?”

தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்தி அறிவிப்புக்காக திடீரென்று நிறுத்தப்பட்டது. எதற்காக இந்த செய்தி அறிக்கை என்று முதலில் புரியவில்லை. செய்தி வாசிப்பவனும், மற்றெல்லா செய்தி வாசிப்பாளர்களைப் போல திக்கித்தான் பேசினான். அரை நிமிட கடும் முயற்சிக்கு பின் ஆரம்பித்தான் – “வணக்கம்…”

தொடர இயலாமல், அருகில் இருந்த நடனப் பெண்ணிடம் அறிக்கையைப் படிக்கத் தந்தான்.

“பரவாயில்லை. அவன் முயற்சி செய்தான். அதுவே பெரிய விஷயம். கடவுள் அவனுக்கு தந்திருப்பதை வைத்து அவனால் முடிந்த அளவுக்கு முயன்றான். இதற்கே அவனுக்கு சம்பள உயர்வு கிடைக்க வேண்டும்” என்றாள் ஹேசல்.

“வணக்கம்” என்று செய்தியை வாசிக்க தொடங்கினாள் நடனப் பெண். அவள் பேரழகியாக இருக்க வேண்டும். அவளுடைய முகமூடி மிகவும் அகோரமாய் இருந்தது. இருநூறு பவுண்ட் எடையுள்ள ஆண்கள் அணியும் ஊனப் பைகளை அவள் அணிந்திருந்ததை வைத்தே, அந்த பாலே பெண்களில் அவள்தான் அதிக வலிமையும், நளினமும் கொண்டவள் என்பதைச் சொல்லிவிட முடிந்தது.

ஒரு பெண்ணுக்கான மோசமான குரலைப் போலில்லாமல் நல்ல குரலில் பேசத் தொடங்கியதற்காக அவள் உடனே மன்னிப்புக் கேட்க வேண்டியிருந்தது. அவள் குரல் இதமாக, இனிமையாக, ஒரு மெல்லிய சங்கீதத்தை போன்று இருந்தது. “மன்னிக்கவும்”- தன் குரலை மிகச் சாதாரணமானதாய், விசேஷமோ, பொறாமையோ ஏற்படுத்தாத குரலாக மாற்றிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“ஹாரிசன் பெர்ஜரான். வயது பதினான்கு.” என்று அவள் படிக்கும் போது, அவள் குரல் காக்கை கரைவது போல இருந்தது. “இவன் சற்று முன் சிறையிலிருந்து தப்பி விட்டான். அரசாங்கத்தை வீழ்த்த சதி செய்தான் என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவன். இவன் ஒரு மேதாவி, வீரன், மற்றும் ஊனமற்றவன். மேலும் இவன் ஒரு பயங்கரவாதி என்று கருதப்படுகிறது.”

காவல்துறையிடமிருந்த ஹாரிசனின் புகைப்படம் ஒன்று திரையில் காட்டப்பட்டது… நேராக, தலைகீழாக, பக்கவாட்டில், மீண்டும் தலைகீழாக, மீண்டும் நேராக என்று மாறி மாறி காட்டப்பட்டது. அந்த முழு நீளப் படத்தில் ஹாரிசன் ஒரு அளவுகோலின் முன் நின்றிருந்தான். சரியாக ஏழடி உயரம் இருந்தான்.

மற்றபடி அவனுடைய தோற்றம் அகோரமாகவும், ஒரு உலோகக் கடையைப் போலவும் இருந்தது. யாரும் இந்த அளவிற்கு கனமான ஊனக் கருவிகளை அணிந்ததில்லை. சமத்துவத்துறை அதிகாரிகள் எண்ணியதை விட படு வேகமாக அவன் தடைகளைத் தளர்த்திவிட்டான். அவன் அணிந்திருந்த மன ஊன வானொலி மற்றவர்களுடையதைப் போல சிறியதாய் இல்லை. பூதாகாரமாக இருந்தது. அவனுடைய மூக்குக் கண்ணாடியோ ஒரு சோடா புட்டியளவுக்கு தடித்திருந்தது. அந்த தடித்த வில்லைகள் அவனை அரைக் குருடாக ஆக்குவது மட்டுமில்லாமல், அவனுக்கு மண்டையைப் பிளக்கும் தலைவலியை தருவதற்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

அவன் உடம்பெல்லாம் உலோகம். வழக்கமாக பலசாலிகளுக்கு அளிக்கப்படும் ஊனக்கருவிகளில் ஒரு ஒழுக்கமும், இணக்கமும் இருக்கும். ஆனால் இவனோ ஒரு நடமாடும் காயலான் கடையாக இருந்தான்! கிட்டத்தட்ட, ஹாரிசன் எப்போதும் ஒரு முன்னூறு பவுண்ட்களை சுமந்திருந்தான்.

மேலும் அவனை அசிங்கமாக்க, சமத்துவத்துறை அதிகாரிகள் அவன் மூக்கில் எப்போதும் ஒரு சிவப்பு ரப்பர் பந்தைச் செருகி வைத்திருந்தனர். அவன் புருவங்கள் மழிக்கப்பட்டிருந்தன. அவன் வெண்ணிற பற்களுக்குக் கூட கருப்புத்தொப்பி மாட்டி வைத்திருந்தனர்… தாறுமாறாக!

“இவனைச் சந்திப்பவர்கள் இவனுடன் உரையாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பப்டுகிறார்கள்.” என்று இருமுறை அறிவித்தாள்.

ஒரு கதவு அதன் நிலைப்படியிலிருந்து கிழித்து எடுக்கப்படும் நாராசமான சத்தம் கேட்க, தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து அலறல்களும், அழுகைகளும், குழப்பமான குரல்களும் பீறிட்டுக் கொண்டு வந்தன. ஹாரிசனின் புகைப்படம் பூகம்பத்தில் ஆடுவதைப் போல திரையில் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருந்தது.

ஜோர்ஜ் அது நிலநடுக்கம் என்று சுலபமாக அறிந்து கொண்டான்.சரிதான். அவன் வீடு இது போன்ற இரைச்சலான சத்தத்துடன் பல முறை ஆடியிருக்கிறதே! “கடவுளே! அது ஹாரிசன் தான்” என்றான் ஜார்ஜ்.

அந்தத் தெளிவு பிறந்த நொடியிலேயே ஒரு வாகனம் மோதி உடையும் சத்தம் அவன் தலையில் வந்து அதை அள்ளிக் கொண்டு சென்றது.

கண்களைத் திறந்து பார்த்த போது ஜோர்ஜின் முன் ஹாரிசனின் புகைப்படம் இல்லை. மாறாக உயிருள்ள உருவமாக ஹாரிசன் திரையில் தோன்றினான்.

ஆரவாரமான சத்தத்துடன், ஆஜானுபாகுவான கோமாளியைப் போன்று அரங்கத்தின் நடுவே ஹாரிசன் நின்றிருந்தான். உடைக்கப்பட்ட அரங்கக் கதவின் குமிழ் அவன் கையில் இருந்தது. நடனப் பெண்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், அறிவிப்பாளர்கள் எல்லாம் மரண பயத்துடன் அவன் முன்னே மண்டியிட்டுருந்தனர்.

“நான் மன்னாதி மன்னன்! சக்கரவர்த்தி!” – கூவினான் ஹாரிசன். “கேட்கிறதா? நான் ஒரு சக்கரவர்த்தி! நீங்கள் எல்லோரும் என் ஆணைக்கு உடனே அடிபணிய வேண்டும்!” அவன் தரையை உதைத்த போது அரங்கமே அதிர்ந்தது.

“ஒரு நொண்டியாக, ஊனமாக, நோயாளியாக நான் இங்கே நின்றாலும், நானே ராஜா! இந்த உலகத்தில் இதுவரை இருந்த மன்னர்களை விட நானே சிறந்த அரசன்! நான் யார் என்று காட்டுகிறேன் பாருங்கள்!” என்று உரக்கக் கத்தினான்.

தன் ஊனக் கருவிகளை தாங்கிக் கொண்டிருந்த பட்டைகளை நனைந்த காகிதத்தை கிழிப்பதை போல கிழித்து எறிந்தான் ஹாரிசன். ஒவ்வொரு பட்டையும் ஐயாயிரம் பவுண்ட் எடையை தாங்கும் வலிமை உடையது.

அவனுடைய இரும்பு ஊனக் கருவிகள் தரையில் விழுந்து உடைந்தன.

தன் தலைப்பட்டையை அழுத்திப் பூட்டியிருந்த பூட்டை, ஹாரிசன் தன் கட்டை விரலால் அழுத்தி, கொத்தமல்லியை கிள்ளுவதைப் போல கிள்ளி எறிந்தான். தன் வானொலியையும், கண்ணாடியையும் சுவற்றில் முட்டி உடைத்தான்.

மூக்கின் மேலே இருந்த சிவப்பு ரப்பர் பந்தைக் கழற்றி வீசி எறிந்த போது, இடிகளின் கடவுளே பயந்து போகும் படியான ஒரு மாவீரனாக அவன் மாறி இருந்தான்.

கீழே மண்டியிட்ட மக்களைப் பார்த்து சொன்னான் – “நான் இப்போது என் அரசியைத் தேர்ந்தெடுக்க போகிறேன்! எந்த பெண்ணுக்கு முதலில் எழ துணிவு இருக்கிறதோ அவளே என் மனைவி! இந்த நாட்டின் அரசி!”

ஒரு நொடிக்குப் பின் காற்றில் ஆடும் மூங்கிலைப் போல ஒரு பாலே நடன பெண் எழுந்து நின்றாள்.

ஹாரிசன் அவள் காதிலும், உடலிலும் பூட்டப் பட்டிருந்த மன, உடல் ஊனக் கருவிகளை சட்டென அகற்றினான். இறுதியாக, அவளுடைய முகத்திரையைக் கிழித்தான்.

அவளோ கண்களை பறிக்கும் கொள்ளை அழகு!

அவள் கைகளை பிடித்து கொண்டு ஹாரிசன், “இப்போது நாம் மக்களுக்கு நடனம் என்றால் என்னவென்று காட்டுவோம்! எங்கே இசை?” என்று கட்டளை இட்டான்.

இசைக்கலைஞர்கள் தங்கள் இருக்கைகளுக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினர். ஹாரிசன் அவர்களுடைய ஊனக் கருவிகளையும் அகற்றினான். “ம்ம்…சிறப்பாக வாசியுங்கள். நான் உங்களைக் கோமானாகவும், சீமானாகவும், மந்திரியாகவும் ஆக்குகிறேன்!” என்றான்.

இசை தொடங்கியது. மிகச் சாதரணமான இசை…அற்பமாக, கீழ்த்தரமாக, போலியாக இருந்தது. ஹாரிசன் இரண்டு இசைக்கலைஞர்களை பிடித்து இழுத்து அடித்துக் கொண்டே பாடினான். பிறகு அவர்களை நாற்காலியில் தள்ளி விட்டான்.

மீண்டும் இசை ஆரம்பமானது. இப்போது அது மேம்பட்டு இருந்தது.

ஹாரிசனும் அவன் அரசியும் அமைதியாக கேட்டனர்… மிக அமைதியாக. தங்கள் இதயத்துடிப்பை இசையின் தாளத்தோடு ஒருங்கிணைக்கும் அமைதி அது!

இப்போது அவர்களின் கணம் முழுவதும் கால் விரல்களில் இருந்தது.

ஹாரிசன் தன் பெரிய கைகளை அந்த பெண்ணின் சிற்றிடையில் வைத்த போது, அவள் மிதப்பதாக உணர்ந்தாள்.

நொடிப் பொழுதில் உற்சாகமும், நளினமும் வெடித்துக் கிளம்ப, அவர்கள் காற்றில் தாவினர்.

அங்கு நாட்டின் சட்டம் மட்டுமல்ல, புவியீர்ப்பு விசையின் விதிகளும் தகர்க்கப்பட்டன.

அவர்கள் சுற்றினர், சுழன்றனர், துள்ளினர், தாவினர், குதித்தனர், மிதந்தனர்.

நிலவின் புள்ளிமானைப் போல துள்ளித் துள்ளி ஆடினர்.

முப்பதடி உயரமுள்ள அரங்கத்தின் கூரையைத் தாவித் தாவித் தொடத் துடித்தனர். அதை முத்தமிட முயன்றனர்.

முத்தமிட்டனர்!

புவியீர்ப்பு விசையைத் தங்கள் காதலாலும், மன உறுதியாலும் ஈடு செய்து காற்றில் மிதந்தபடியே இருவரும் நீண்ட நேரம், மிக நீண்ட நேரம் முத்தமிட்டுக் களித்தனர்.

அப்போது சமத்துவத்துறைத் தலைவி டயானா மூன் க்லம்பெர்ஸ் ஒரு பெரிய இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் அங்கே வந்தாள். இருமுறை சுட்டாள். மன்னனும், மகாராணியும் தரையைத் தொடுவதற்கு முன்பே இறந்துவிட்டனர்.

பின் இசைக்கலைஞர்களை நோக்கிக் குறி பார்த்தாள். பத்து வினாடிகளுக்குள் அவர்கள் தங்கள் ஊனக் கருவிகளை மீண்டும் மாட்டிக்கொள்ளும்படி உத்தரவிட்டாள்.

அந்த சமயத்தில் தான் ஜோர்ஜின் தொலைக்காட்சிப் பெட்டி எரிந்து போனது.

ஹேசல் இந்த இருட்டடிப்பை பற்றி ஜோர்ஜிடம் சொல்வதற்காகத் திரும்ப, அங்கு அவன் இல்லை. ஜோர்ஜ் பியர் பாட்டிலை எடுக்க சமையல் அறைக்குச் சென்றிருந்தான்.

பியருடன் திரும்பி வந்த ஜோர்ஜ், தலைக்குள் வந்த சத்தத்தால் ஒரு நொடி தயங்கி நின்றான். பின் உட்கார்ந்த படியே, ஹேசலை பார்த்து, “அழுதாயா?” என்றான்.

“ஆமாம்”

“எதற்காக?”

“ஞாபகமில்லை. தொலைக்காட்சியில் மிகவும் சோகமாக ஏதோ ஒன்று…”

“என்ன விஷயம்?”

“தெரியவில்லை. எல்லாம் குழப்பமாக இருக்கிறது.”

“துக்கம் தருவதை எல்லாம் மறந்து விடு”

“ஆமாம். நான் எப்போதும் துக்கமான எதையும் மறந்து விடுவேன்”

“சமர்த்து!” என்றான் ஜோர்ஜ்.

மறுபடியும் துப்பாக்கியின் சத்தம் அவன் தலையில் இறங்க அவன் நடுங்கினான்.

“ஐயோ! எனக்குத் தெரியும்…அது ரொம்ப பயங்கரமான சத்தம்தானே?” என்றாள் ஹேசல்.

“எங்கே? இன்னொருமுறை சொல்…” என்றான் ஜோர்ஜ்.

“ஐயோ! எனக்குத் தெரியும்…அது ரொம்ப பயங்கரமான சத்தம்தானே?” என்றாள் மீண்டும்.

vonnegutideas

One Reply to “ஹாரிசன் பெர்ஜரான்”

Comments are closed.