‘ஒரு நல்ல உருவப் புகைப்படத்தை (portrait photo) எடுப்பது நம்பமுடியாத அளவுக்குக் கடினமான விஷயம். நாம் யாரைப் படமெடுக்கிறோமோ அவர்களை உண்மையாகப் பிரதிபலிப்பதைக் காட்டிலும், அவர்கள் விருப்பப்படி படமெடுக்க வேண்டும் என்ற உந்துதல் நம்மைப் பெரிதாக ஆட்கொண்டு விடும்” என்கிறார் பிரபல உருவப்பட நிபுணர் பிலிப் ஹால்ஸ்மான் (Philippe Halsman). ‘உருவப்படங்கள் மனித ஆன்மாக்களின் நுழைவாயில்’ என்று சொல்கிறது இன்னொரு ஆளறியா மேற்கோள்.
பல தேர்ந்த புகைப்பட விமர்சகர்கள், ஒரு புகைப்படக் கலைஞரை மதிப்பீடு செய்வதில் அவரெடுத்த உருவப் படங்களுக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இயற்கைக் காட்சிகள், அரூபப் (Abstract) படைப்புகள் போன்றவை கூட உருவப் படத்துக்குப் பின்னர்தான். ஒரு நூற்றாண்டைக் கடந்து விட்ட புகைப்படக்கலையின் வரலாற்றில் பல உருவப்படங்கள் வெகு பிரபலமாக விளங்குபவை. யூசுஃப் கார்ஷ் எடுத்த இடுப்பில் கைவைத்தபடி முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் வின்ஸ்டன் சர்ச்சில் புகைப்படம், ஆல்பெர்ட்டோ கொர்டா எடுத்த சே குவாராவின் புகைப்படம், ரகுராய் எடுத்த கையில் சுருட்டோடு அமர்ந்திருக்கும் பால் தாக்கரேயின் புகைப்படம் போன்றவை வெகு பிரபலமான உருவப்படங்கள்.
நான் குறிப்பிட்ட இந்த உருவப்படங்களின் இலக்குகள் மூவருமே (சே குவேரா, சர்ச்சில், பால் தாக்கரே) பிரபலமான ஆட்கள். ஆனால் ஊர், பெயர் தெரியாத ஒரு பெண்ணின் புகைப்படம் இன்று உருவப்படக்கலை வரலாற்றிலேயே மிகவும் பிரபலமான புகைப்படமாக விளங்குகிறது. இப்புகைப்படம் பிரபலமாகிப் பதினேழு வருடங்களுக்குப் பிறகு கடுமையான தேடலுக்குப் பின்புதான் இப்பெண் யாரென்பதையும், இவர் பெயர் ஷர்பத் குலா என்பதையும் கண்டுபிடித்தார்கள்.
நான் இங்கே குறிப்பிடுவது 1985-ஆம் ஆண்டு நேஷனல் ஜ்யொக்ராஃபிக் (National Geographic) என்ற பிரபல அமெரிக்கப் பத்திரிகையின் அட்டைப்படமாக வெளிவந்து பலர் கவனத்தையும் கவர்ந்த , ஆஃப்கன் பெண் (Afghan Girl) என்றறியப்பட்ட அப்புகைப்படத்தைக் கீழே காணலாம்.
இப்புகைப்படத்தை எடுத்தவர் ஸ்டீவ் மக்கரி (Steve McCurry) என்ற திறமை வாய்ந்த புகைப்படக் கலைஞர். உருவப்படங்கள், பயணப்படங்கள் (Travel Photography), முக்கியமான அரசியல் நிகழ்வுகளைப் படமெடுத்தல் இவை ஸ்டீவ் மக்கரிக்கு மிகவும் பிடித்த விஷயங்கள். இந்தியா, இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகத் தொடர்ந்து புகைப்படமெடுத்து இவர் உருவாக்கிய மழைக்காலம் (Monsoon) என்ற புகைப்படப் புத்தகம் வெகு சிறப்பான ஒன்று.
1984-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது நடத்திய தாக்குதலில் பல்லாயிரக் கணக்கான ஆப்கானியர்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருந்தார்கள். சோவியத் யூனியனின் தாக்குதலில் தன் பெற்றோரைப் பலி கொடுத்த ஷர்பத் குலா, தன் சகோதரர்களுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி பாகிஸ்தானிலிருந்த நாஸிர் பாக் அகதி முகாமில் தஞ்சமடைந்தார். சோவியத் யூனியன் – ஆப்கானிஸ்தான் மோதலைப் புகைப்படங்களில் பதிவு செய்வதற்காக ஸ்டீவ் மக்கரி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் சுற்றியலைந்து கொண்டிருந்தார். அப்போது நாஸிர் பாக் அகதி முகாமில் ஷர்பத் குலாவைப் புகைப்படமெடுத்துப் பதிவு செய்தார். ஆனால் அப்போது அவர் அந்தப் புகைப்படத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் அறிந்திருக்கவில்லை. அப்பெண்ணின் பெயரையும் குறித்து வைத்துக் கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தான் பகுதிகளில் அலைந்து திரிந்து அவர் பதிவு செய்த பல முகங்களில் அதுவும் ஒன்று அவ்வளவே! ஆனால் அப்புகைப்படம் சில மாதங்களில் நேஷனல் ஜ்யொக்ராஃபிக் பத்திரிகையின் அட்டைப்படமாக ’ஆஃப்கனியப் பெண்’ (Afghan Girl) என்ற தலைப்பில் வெளிவந்தபோது, அது பெரிய வரவேற்பையும், கவனிப்பையும் பெற்றது.
ஸ்டீவ் மக்கரி இப்புகைப்படத்தை ஸ்லைடுகளைப் பயன்படுத்தும் (Slide processing) தொழில்நுட்பத்தால், கோடாக்ரோம் படச் சுருளில் பதிவு செய்திருந்தார். ஸ்லைட் படச்சுருள் பொதுவாகவே மிக அருமையான வண்ணச்சேர்க்கைகளைத் தரும். இந்தப் புகைப்படத்தை எடுத்தபோது ஷர்பத் குலா சிவப்புநிற முக்காடை அணிந்திருந்தார். குலாவின் கண்கள் பச்சை நிறம். குலாவின் பின்னணியில் இருந்த துணியும் பச்சை நிறமாக இருந்தது. ஸ்லைட் தொழில்நுட்பத்தில் இவற்றின் ஒத்திசைவும் பச்சை வண்ணமும் வெகு அற்புதமாக வெளிப்பட்டன. அதிலும் சிவப்புடன் பச்சை ஒரு அருமையான வண்ண வேறுபாட்டைத் (contrast) தரும். அதனால் குலாவின் பச்சைநிறக் கண்கள் அருமையாகத் தெறித்து வந்து நம்மைத் தாக்கி, படத்தின் உயிர்த்துடிப்பாகத் தெரிந்தன. சாதாரணமாக நாம் காண முடியாத ஒரு உற்றுப் பார்வையுடன் இருந்த அந்தக் கண்கள் வாழ்வில் இழப்புகளால் கருக்கப் பட்ட இளமையின் ஆழ்ந்த சோகத்தை நம்முள் நேரடியாகவே தெளிக்கின்றன. அந்தக் கண்கள் வழியே வெளிப்படும் விரக்தியுடன், பரந்த உலகின் மீது ஒரு அச்சம், அதே நேரம் இழப்புகள் நடுவிலும் முயற்சியைத் தொலைக்காது வாழ்வின் மீது உள்ள பிடிவாதமான கவனிப்பு போன்றவையும் வெளிப்படுகின்றன. அன்றைய உலகில் பல நிலப்பகுதிகளில் பல்வகைப் போர்களில் சிக்கிச் சீரழிந்து அல்லல்பட்டு அலைக்கழிக்கப்பட்ட அப்பாவி மக்களின் பேரவல வாழ்வுக்கே அப்பெண்ணின் படம் உருவகமாகிப் போனது.
‘ஆஃப்கானியப் பெண்’ குறித்த கேள்விகள் வரும்போதெல்லாம் ஸ்டீவ் மக்கரியால் பெரிய விளக்கமெதுவும் தரமுடியவில்லை. இறுதியாக 2002-ஆம் வருடம் ஸ்டீவ் மக்கரி நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிகையின் ஒரு குழுவோடு சேர்ந்து ஆஃப்கானியப் பெண்ணைத் தேடி அவரைச் சந்தித்த நாஸிர் பாக் முகாமுக்குச் சென்றார். அங்கே கிளம்பிய தேடல் ஒரு சங்கிலித் தொடராகப் பாகிஸ்தானுக்குள் போய், அங்கிருந்த பல ஆப்கானிய அகதிகளின் கிராமங்களுக்குச் சென்றது. இடையே பலரும் அப்பெண் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பொய்யாகச் சொல்லி நேஷனல் ஜியாக்ரஃபிக் குழுவைச் சோர்வடையச் செய்தார்கள். கிட்டத்தட்டத் தேடலைக் கைவிட்டுத் திரும்ப முடிவு செய்த வேளையில் ஒருவர் அப்பெண்ணின் சகோதரரைத் தனக்குத் தெரியும் என்று சொன்னார். தொடர்ந்த தேடல் ஆப்கானிஸ்தானின் ஒரு மூலையிலிருந்த பஷ்தூன் பகுதிக்கு அழைத்துச் சென்றது.
ஒரு சிறு கிராமத்திலிருந்த அப்பெண்ணுக்குத் திருமணமாகி விட்டிருந்தது. அப்பகுதியில் மதம் சார்ந்த பழமைவாதம் மிகவும் அதிகம். ஸ்டீவ் ம்க்கரி அப்பெண்ணைச் சந்திக்க அவருடைய கணவர் அனுமதி மறுத்துவிட்டார். அதனால் நேஷனல் ஜியாக்ரஃபி குழுவிலிருந்த ஒரு பெண் நிருபர் அப்பெண்ணைச் சந்தித்துப் புகைப்படமெடுத்தார். புகைப்படத்தைப் பார்த்தவுடனேயே மக்கரிக்குச் சந்தேகமே இல்லாமல் தான் முன்பு படமெடுத்தப் பெண்தான் என்று தெரிந்துவிட்டது. இருந்தாலும் நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியால் கண்பாவைகளின் ஆரக்கால்களை ஒப்பிட்டு அது அவர்கள் தேடிக்கொண்டிருந்த ‘ஆப்கானியப் பெண்’தான் என்று உறுதிசெய்தார்கள்.
அதற்குப் பின் அப்பெண்ணின் கணவருடன் பேசி அவரை சம்மதிக்க வைத்து தனக்குப் பெரும்புகழ் தேடித்தந்த, ஆப்கானியத் துயரங்களின் உருவகமாக விளங்கும் முகத்தைச் சந்தித்தார் ஸ்டீவ் மக்கரி. அப்பெண்ணும் அவரைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டார். ஏனென்றால் அப்பெண் தன் வாழ்வில் ஒரே ஒரு முறைதான் புகைப்படம் பிடிக்கப்பட்டிருக்கிறார். அப்பெண்ணுக்கு இப்போது முப்பது வயதாகியிருந்தது. மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயாகியுமிருந்தார். தன்னுடைய முகம் அவ்வளவு பிரபலமானதென்று அவர் அறிந்திருக்கக்கூட இல்லை. அதை அறிந்து கொள்வதில் அவர் ஆர்வமும் காட்டவில்லை என்கிறார் மக்கரி. அதுவே அவர் கொடுக்கும் கடைசி பேட்டி என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டார். தனிமையைப் பேணும் பொருட்டு அப்பெண்ணின் குடும்பம் வேறொரு கிராமத்துக்குக் குடிபெயர்ந்து விட்டது எனவும், அதன் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் நேஷனல் ஜியாக்ரஃபி க் பத்திரிகை தெரிவிக்கிறது. ‘ஆப்கானியப் பெண்’ புகைப்படம் நேஜனல் ஜியாக்ரஃபிக்கின் சிறந்த நூறு புகைப்படங்கள் தொகுப்பின் அட்டையில் இடம்பெற்றது.
பதிமூன்று வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், முப்பது வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டால் குலாவின் முகத்தில்தான் எத்தனை மாற்றம்! வெறும் முப்பதே வயதில் மிகவும் சோர்ந்த, தளர்ந்ததொரு பெண்ணாகக் காட்சி தருகிறார் குலா. ஷர்பத் குலா ஸ்டீவ் மக்கரியைச் சந்தித்தபோது அவர் தன்னுடைய விருப்பமாகச் சொன்ன ஒரே ஒரு விஷயம், தனக்குக் கிடைக்காமல் போன கல்வி தன் மூன்று பெண் குழந்தைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்பதுதான். சோவியத் யூனியனின் தாக்குதல்களில் தன் குடும்பத்தை இழந்த குலா, இப்போது பெண்களின் சுதந்திரத்தையும், தேவைகளையும் காலடியில் நசுக்கி வரும் தாலிபான் ஆட்சியில் பழமைவாதிகளின் மத்தியில் வாழ்ந்து வருகிறார். உலகெங்கும் அறியப்படும் இந்தப் பிரபலமான முகம் இப்போது ஆப்கானிஸ்தானின் ஏதோ ஒரு மூலையில் பர்தாவுக்குப் பின் மறைந்திருக்கிறது.
3 Replies to “முகம் சொல்லும் கதை”
Comments are closed.