மனிதன் 2.0 எப்படி இருப்பான்?

ஜேம்ஸ் ஹ்யூக்ஸ்

ஜேம்ஸ் ஹ்யூஸ்

நம்முடைய உணர்ந்தறியும் திறனை அதிகரிப்பதற்கு மூளைக்குள் சிலிக்கன் சில்லு பதித்து, அதை வருடா வருடம் ‘அப்கிரேடு’ செய்ய ஆஸ்பத்திரிக்குப் போய்வரப் போகிறோம் என்று பார்த்தோம். ஆனால் இதற்கு முதல் படியாக ‘எக்ஸோ கார்ட்டிகல்’ தொழில் நுட்பம் இப்போதே வந்துவிட்டது என்று பேசுகிறார் ஜேம்ஸ் ஹியூஸ்.   [ஜேம்ஸ், ட்ரினிடி கல்லூரியில் பயோ-எதிசிஸ்டாக (உயிர் அறவியலாளராக) இருக்கிறார். பயோ எதிக்ஸ் போன்ற நூற்றாண்டின் புதிய சமூக-அறிவியல்துறைகள், காட்டாங்-குளத்தூர் பக்கம் சுய நிதிக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் நாளும் வரும்.]

எக்ஸோ கார்ட்டிகல் என்பது வேறொன்றுமில்லை; மூளைக்கு வெளியே டேபிளின் மீது வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் போன்ற தகவல் சாதனங்கள்தான். நம் உணர்வு மனத்தின் வேலைகளை இவை சுலபமாக்குகின்றன. இன்னும் கீ போர்டு, மவுஸ் வழியேதான் இவற்றுடன் மல்லாட வேண்டியிருந்தாலும் இந்த சாதனங்கள் நம் மூளையின் வல்லமையை அதிகரிக்கின்றன. மனிதன்+கம்ப்யூட்டர் என்ற ஹைப்ரிட் மனிதன், பரிணாமப் பாதையில் ஒரு மில்லி மீட்டர் முன்னேறிவிட்டான் என்று பெருமை அடித்துக்கொள்ளலாம். (கல் தோன்றி மண்தோன்றாத நம் லெமூரியா பெருமைகளைவிட இது எவ்வளவோ பரவாயில்லை.)

விஞ்ஞானிகளுக்கு கம்ப்யூட்டர் ஞானக் கண் தருகிறது. 11 பரிமாண உலகங்களில் புகுந்து புறப்பட வேண்டுமா ? அணுவுக்குள்ளே நடப்பதையும் அண்ட வெளியில் நடப்பதையும் கண் முன்னே காண வேண்டுமா ? ‘சிமுலேஷன்’ எனப்படும் கற்பனை ராஜ்ஜியங்களை அமைக்கும் மென்பொருள்கள் உண்டு. கண்ணிமைப்பதற்குள் டெரா பைட்களை மென்று ஜீரணித்து, சக்தி வாய்ந்த மாயத் தோற்றங்களை உருவாக்கித் தரும் ‘மாடலிங்’ மென்பொருள்கள் இருக்கின்றன. இவையெல்லாம் நமக்குத் தருவது, தகவல் துணுக்குகளில் மறைந்து கிடக்கும் போக்குகளை (patterns) உணரும் சக்தி.

நிமிஷத்துக்கு நிமிஷம் செயற்கைக் கோள் படங்கள் வருகின்றன. வானிலை பற்றிய உலகம் அளாவிய தகவல் தளங்கள் உள்ளன. இவற்றை வைத்துக்கொண்டு நீண்ட கால வானிலை மாடல்களை அமைக்க முடிகிறது. இது, எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் !

இன்று ஜி.டி. பிடித்து நாளை டெல்லி, அங்கே ஒரு மீட்டிங், இரவிலேயே ஹாங்காங்குக்கு விமானம், அங்கே சொல்ல மாட்டாத சில செயல்கள், மறுநாள் காலை சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் மாநாடு என்று நீண்ட பயணத் திட்டத்தை முழுவதும் கம்ப்யூட்டரில் வகுத்துக் கொள்ள முடிகிறது. ஒவ்வொரு ஊரிலும் தங்குமிடம், அந்நியச் செலாவணி, கனெக்டிங் விமான நேரங்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டரே முத்து மாலை மாதிரி கோர்த்துக் கொடுத்துவிடுகிறது.

ரயில்-விமான டிக்கெட் வாங்குவது அவ்வளவு பெரிய விஷயமா என்று உங்களுக்குத் தோன்றினால், கங்கிராட்ஸ்! இருபது வருடம் முன்னால் இதே வேலையை ஒரு டிராவல் ஏஜென்ஸியின் ஒடிசலான பெண்மணி, பென்சிலில் குறித்துக் குறித்து டெலிபோனில் கேட்டு ஃபாக்ஸ் அனுப்பி, பதிலுக்குக் காத்திருந்து, திட்டம் தீட்டுவதற்கு நாள் கணக்கில் ஆகியிருக்கும். இன்றைக்கு அந்தப் பெண்ணுக்கு வேலை போய்விட்டது, பாவம்.

பரிதாபம் அந்தப் பெண் மட்டுமல்ல. சில காலம் முன்பு வரை முதல் தரமான நிபுணர்களால் மட்டுமே செய்ய முடிந்த பல செயல்களை, இன்று எங்கள் அலுவலக அட்டெண்டர் அநாயாசமாகச் செய்கிறார். வெவ்வேறு தகவல்களைப் பெற்று, பொருத்திப் பார்த்து அதில் ஒரு ஒத்திசைவை, போக்குகளைக் கண்டுபிடிக்கும் திறன் இன்று எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பத்திரிகை அலுவலகத்தில் புரூஃப் ரீடர் கணேசன் என்றால் எடிட்டரே கொஞ்சம் பயப்படுவாராம். அவ்வளவு பெரிய எக்ஸ்பர்ட். அவ்வளவு மரியாதை. இன்று அவர் வாழ்நாள் சாதனையை ஒரு எட்டணா கம்ப்யூட்டர், சிவப்பில் அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், தானே திருத்தியும் கொடுக்கிறது என்பது தெரிந்தால் கணேசன் மனம் உடைந்து போயிருப்பார்.

brainupgradeநம்முடைய டிஜிட்டல் சாதனங்களும் நம்முடன் சேர்ந்தே பரிணாம வளர்ச்சி பெறுகின்றன. எங்கள் வீட்டுப் பக்கத்து பிரௌசிங் சென்டரில் ஒரு சண்டிக் கம்ப்யூட்டர் இருக்கிறது. கீ போர்டில் கொஞ்சம் பலமாகத் தட்டினால் ப்ளாஸ்டிக் எழுத்துக்கள் ‘பாப்’ என்று குதித்து வெளியே வந்துவிடும். மௌஸின் இடது பட்டன் வேலை செய்யாது; வலது பட்டனை அதன் வேலைக்கு மாற்றி அமைத்துக் கொண்டுதான் உபயோகிக்க வேண்டும். இப்படி இயந்திரங்களுடன் கலந்து பழகி அவற்றின் ‘மூடு’க்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டு உயிர் வாழ நாம் கற்றுவிட்டோம். அவைகளும் நம் எதிர்பார்ப்புகளுக்கும் செலவழிக்கும் சக்திக்கும் ஏற்ப, கொஞ்சம் மெதுவாகவேனும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. சீக்கிரமே அவற்றுடன் வாய் மொழியாக உரையாடவும், எதிர்காலத்தில் எண்ணங்களாலேயே இயக்கவும் சாத்தியம் உண்டு. இப்படி, இயந்திரங்களும் நாமும் சேர்ந்தே பரிணாமம் அடைவதாகச் சொல்லலாம். எக்ஸோ கார்ட்டிகல் !

ஆன்லைன் வாசகர்கள் ட்விட்டர் பற்றி அறியாமல் இருக்க முடியாது. ‘என்னுடைய பூனை பிங்க்கி காலையிலிருந்து பர்ர்..ர் என்று சப்தம் எழுப்புகிறது’ என்பது போன்ற மானாவாரியான செய்திகளுக்கிடையே சில சமயம் முத்து ரத்தினங்களும் சிக்குவதுண்டு. திடீரென்று ட்விட்டருக்கு ஞானம் பிறந்து, நீங்கள் என்ன மாதிரியான செய்திகளைப் படிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு, மலச்சிக்கல் பூனைகளையெல்லாம் வடிகட்டிவிட்டுக் கொடுத்தால்? அப்போது தகவல் ஓவர்லோடினால் வரும் நிரந்தரமான அரைப் பிரஞ்ஞை நிலையிலிருந்து மீண்டு, கௌதம புத்தர் போன்று எல்லாம் அறிந்த ஓர் உணர்வு நிலையை எட்டுவோம்.

கம்ப்யூட்டர் சில்லுகள் திறன் அதிகரித்து விலை குறையும்போது ட்விட்டர் போன்ற தகவல் மழைத் துளிகளுக்குத் திடீரென்று பயன் ஏற்பட்டுவிடும். எப்படிக் கேள்வி கேட்டால் இதிலிருந்து உருப்படியான விடை கிடைக்கும் என்ற சூட்சுமத்தைக் கற்றுக் கொண்டுவிடுவோம். ‘இப்படிச் செய்தால் எப்படி ஆகும்’ என்ற what-if விளையாட்டுக்கள் விளையாட முடியும். எங்கு வசிப்பது, என்ன படிப்பது என்பதில் ஆரம்பித்து, நல்ல ஆனியன் ரவாவுக்கு எங்கே போவது என்பது போன்ற திட்டமிடல்கள் அனைத்தும் சுலபமாகும். நாளாவட்டத்தில் நம் மொபைல் சாதனங்கள் காமிரா, மைக்குடன், இதயத் துடிப்பு, வியர்ப்பு எல்லாவற்றையும் கவனித்து நம் சூழ்நிலையைக் கிரகித்துக் கொண்டு, நாம் கேட்காமலேயே விடைகளை எடுத்துக் கொடுக்கும். (“ஏங்க இன்னிக்கு லேட்டு ?”)

நம் தகவல்களைக் கையாளும் திறனுக்கு ஒரு சமூகவியல் கோணமும் உண்டு. Crowd sourcing என்று கேள்விப்பட்டிருக்கலாம். விக்கிபீடியா போல மக்கள் கூடி ஒத்துழைத்துத் தகவல் பெட்டகங்களை உருவாக்குவது. கூகிள் தேடலே இந்தமாதிரி பல வலைத் தளங்களின் ஒத்துழைப்பை, கூட்டு மதிப்பீட்டை நம்பித்தான் இயங்குகிறது. எதிர்காலத்தில் இந்த ஒத்துழைப்பை அதிகரித்து இன்னும் பெரிய தகவல் தளங்களை நிர்மாணிக்கவும், தேடலில் துல்லியத்தை அதிகரிக்கவும் முடியப் போகிறது. எல்லோரும் எல்லோருடைய அறிவுத் திறனையும் ஆதரவு கொடுத்துக் கைதூக்கிவிட்டு, மொத்த சமூகமே ஒரு ஒன்றிணைந்த உள்ளுணர்வு நிலையை அடைய முடியலாம். Collaborative intuition!

1970-களில் மொடாஃபினில் என்று ஒரு மருந்து தயாரித்தார்கள். நீண்ட தூரம் செல்லும் விமான பைலட்கள் நடு வானத்தில் தூங்கிவிடாமல், 32 மணி நேரம் வரை கொட்ட விழித்திருப்பதற்காக ஏற்பட்ட மருந்து. இதற்குச் சில நல்ல பக்க விளைவுகளும் உண்டாம். 200 மில்லி கிராம் போட்டால் புலன்கள் கூர் தீட்டப்பட்டு சிந்தனைத் தெளிவு ஏற்பட்டு, போக்குணரும் திறன் – pattern recognition – அதிகரிக்கிறதாம். (இதெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கும்!)

பிரச்னை என்னவென்றால், சில தைரியசாலிகள் மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டு மூளைத் திறனில் முன்னேறுவார்கள். முகர்ந்து பார்த்துப் பயந்து விட்டுவிட்டவர்கள் பின் தங்கி நிற்பார்கள். ஒலிம்பிக்ஸ் போட்டியில் மருந்து சாப்பிட்டு  வெற்றி பெறுவது, அநியாயமான ஆட்டச் சலுகை இல்லையா? அப்படிப் பார்த்தால் சிலரிடம் நல்ல கம்ப்யூட்டர் வாங்க வசதி இருக்கிறது; சிலருக்கு மட்டும் ஐ.ஐ.டி.யில் படிக்க அட்மிஷன் கிடைக்கிறது. அது அநியாயச் சலுகையா? அது போலத்தான் இதுவும் என்கிறார்கள் மருந்து ஆர்வலர்கள். எப்படியோ, கூடிய விரைவில் இந்த மருந்துகள் சூப்பர் மார்க்கெட்டில் போர்ன்விடா, ப்ரெய்ன்விடா டப்பாக்களுக்கு நடுவே இடம்பெறப் போகின்றன. Cognitive modification என்கிறார்கள். அறிவைப் புகை போட்டுப் பழுக்க வைத்து ஞாபக சக்தி, கண்ணோட்டம், அன்பு, காதல் எல்லாவற்றையும் தூண்டுவதற்கு மருந்துகள் வரலாம். இப்போதே ஆக்ஸிடோசின் ஊசி குத்தினால் பசுமாடு மடி சுரக்கிறது.

விஞ்ஞானக் கதைகளில் இந்த மருந்துகள், பிரஜைகளை அடிமை செய்து பாங் அடித்த போதையிலேயே வைத்திருக்க உதவும். ஆனால் நிஜத்தில் இவையெல்லாம் மனிதர்களை மேலும் மேலும் ஓட்டம் ஓட, போட்டி போடவே தூண்டலாம். மனம் வளர் மருந்துகளைக் கட்டுப்படுத்த சட்டம், வழக்கு வாய்தா, கள்ள மார்க்கெட் எல்லாம் வரும். இருந்தாலும் இந்த மாதிரி சரக்குகளையெல்லாம் முற்றிலும் ஒழிக்க முடியாது. மனிதன் 2.0 மறுபடி 1.0 ஆகச் சம்மதிக்க மாட்டான் என்பதே காரணம்.

மூளைப் போட்டியில் ஏற்கெனவே ஜெயித்தவர்கள்தான் தொடர்ந்து ஜெயிப்பார்கள் – அறிவுத் திறன் மருந்துகளில் ஆர் அண்ட் டி செய்துகொண்டே இருப்பவர்கள் அவர்கள்தானே! கடைசியில் சாதி இரண்டொழிய வேறில்லாது போய்விடும்.

ஆனால் எதிர்காலத்தின் மூளை டெக்னாலஜி என்றால் அது செயற்கைaton805l மூளைதான். இதைப் பற்றி எதுவும் சொல்ல பயமாக இருக்கிறது. சொன்னவர்கள் பலரும் மண்ணைத்தான் கவ்வியிருக்கிறார்கள். ஆனால் இன்னும் 50 வருடத்தில் ஒரு வித செயற்கை அறிவு வரவே வராது என்று சொல்ல முடியுமா? 500 வருடத்தில்? அன்றைய மனிதர்களுக்கு அது மாபெரும் டெக்னாலஜி பாய்ச்சலாகவே தோன்றாது. தொடர்ந்து நடந்த முன்னேற்றப் பாதையில் மற்றொரு சின்ன மைல் கல். அவ்வளவுதான்.

எது எப்படியோ, செயற்கை அறிவை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் அதுதான் மனிதன் 1.0-வின் கடைசிப் படைப்பாக இருக்கும்!