பின்தொடருதல் – 1

abstract1

இரவுடை தரித்த குண்டு பெண்ணொருத்தி
குப்பையைக் கொட்ட தெருவிற்குள் இறங்கினாள்
வலது காது, முதுகு கால்கள் வால் என கருமை
அடர்ந்த வெள்ளைக் கொழுகொழு நாயொன்று
பின்னாலேயே குடுகுடுவென நிற்காமல் ஓடி வந்தது
ஒரு கணம் பயந்து போனவள் சாலையைக் கடந்து
குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்டினாள்
தாமதிக்காமல் நின்றிருக்கும் கார்களுக்கிடையில்
விடுவிடு என்று புகுந்து நாட்டார் கடைக்கெதிரில் வந்தாள்
விருட்டென்று கார்களுக்கடியில் புகுந்து நாயும் நாட்டார்
கடைக்கு எதிரில் வந்து நின்றது அவள் காலை முகர்ந்துகொண்டே
உதவுவது போல நாட்டார் ஒரு கழியால் நாயை
விரட்டிட நாயும் பின்வாங்கியது பயப்படுவது போல
சுதாரித்துக்கொண்டு மறுபடியும் சாலையைக் கடந்து
தொலைவில் கொத்தமல்லி கருவேப்பிலை விற்கும் வண்டிக்காரப்
பெண்மணியிடம் ஓடிப் போனாள். உட்கார்ந்திருந்த நாய்
படக்கென்று எழுந்து கடகடவென சாலையைக் கடந்து ஓடி
அவள் பின்னால் போய் நின்றது. அவள் திரும்பி வந்து
தன் வீடிருக்கும் சந்தில் திரும்புமுன் கைகளை உயர்த்தி
விரல்களை அசைத்து அதை ஏதோ சொல்லிவிட்டுச் சென்றாள்
நாயும் தெருவில் இறங்கி ஓடி வந்தது
இப்போது யாரைப் பின்தொடரலாம் என.

ஆசிரியர் குறிப்பு:
எழுபதுகளில் முக்கியமாக இருந்த கவிதை இதழ் ‘ழ’. இதன் ஆசிரியராக ஆத்மாநாம் இருந்தார். துணை ஆசிரியர் ஆர். ராஜகோபாலன் என்ற ழ ராஜகோபாலன். ழ இதழில் மொத்த வேலையையும் இவரே பார்த்துக்கொண்டார் என்றால் மிகையில்லை. மாநிலக் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற இவர், அன்பெனும் மழை என்ற கவிதைத் தொகுதி வெளியிட்டிருக்கிறார். ’எந்திர மாலை’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். எந்திர மாலை, அன்பெனும் மழை இரண்டு நூல்களையும் வெளியிட்டது மதி நிலையம் பதிப்பகம். உரத்துப் பேசாமல் சாதாரண வாழ்வின் காட்சிகளை, அனுபவங்களைக் கவிதைகளாக எழுதியவர் ராஜகோபாலன். அதேபோல் ஞானக்கூத்தன் ஆசிரியராக இருந்த கவனம் என்ற இதழில் இவர் கதைகள் எழுதியிருக்கிறார். மேலும், சென்ற நூற்றாண்டில் ஆரம்பத்தில் வெளியான சகுணா, கமலா என்ற இரண்டு நாவல்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்தவர் இவர். ஓரியன்ட் லாங்மன் பதிப்பகத்தில் குழந்தைகளுக்காக ‘பாப்பா பாட்டு’ என்ற ஐந்து தொகுதிகள் கொண்ட ஒரு குழந்தைக் கவிதைகள் வரிசையையும் இவர் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டார். எளிய ஆங்கில இலக்கணம் என்ற இவரது நூலை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. எல்லா இலக்கியத் துறைகளிலும் இவர் கால் பதித்தாலும் இவரை எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்வது இவரது கவிதைகளுக்காகத்தான். விரல் நுனியில் வழிந்துபோகாமல், மனத்தில் அனுபவனங்களை கட்டியெழுப்பும் வித்தை இவரது கவிதைகளுக்கு உண்டு.
— ‘நேசமுடன்’ வெங்கடேஷ்
Image Coutesy: Dan Heller